பைபிள் கற்பிக்கிறது புத்தகத்தை ஏற்றுக்கொள்ளாதவர்களுக்கு உதவி
1. முதல் சந்திப்பிலேயே பைபிள் கற்பிக்கிறது புத்தகத்தை எல்லோரும் ஏற்றுக்கொள்வார்களா? விளக்கவும்.
1 பைபிள் கற்பிக்கிற விஷயங்களை ஒருவர் தெரிந்துகொண்டால்தான் அவர் யெகோவாவின் வணக்கத்தாராக ஆக முடியும். ஆனால், கிறிஸ்தவ பின்னணியைச் சேராத சிலர் பைபிளைக் கடவுளுடைய புத்தகமாக ஏற்றுக்கொள்வதில்லை. சிலர், கடவுளையே நம்புவதில்லை, அதனால் பைபிளை மதிப்பதில்லை. பைபிள் கற்பிக்கிறது புத்தகத்தை ஒருவர் ஏற்றுக்கொள்ள மறுத்தால், என்ன பிரசுரங்களை அளிக்கலாம்? சுமார் 20 நாடுகளிலுள்ள பிரஸ்தாபிகள் அளித்த குறிப்புகளை வைத்து சில ஆலோசனைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
2. கடவுள் நம்பிக்கை இல்லை என்று யாராவது சொன்னால் என்ன செய்ய வேண்டும்? ஏன்?
2 கடவுளை நம்பாதவர்கள்: கடவுள் நம்பிக்கை இல்லை என்று யாராவது சொன்னால், அதற்கான காரணத்தைத் தெரிந்துகொள்வது முக்கியம். அவர் பரிணாமத்தை நம்புகிறாரா? உலகத்தில் நடக்கும் அநியாயத்தைப் பார்த்து, மதத்தின் மாய்மாலத்தைப் பார்த்து கடவுள் நம்பிக்கையை இழந்துவிட்டாரா? கடவுள் நம்பிக்கை இல்லாத சூழலில் வளர்க்கப்பட்டாரா? ஒருவேளை, கடவுள் இருக்கிறார் என்பதை அவர் ஒத்துக்கொண்டாலும், கடவுளை எதற்காக வணங்க வேண்டும் என்று அவர் வாதிடலாம். வீட்டுக்காரரின் மனதிலிருப்பதைத் தெரிந்துகொள்ள நிறைய பிரஸ்தாபிகள், “ஆரம்பத்திலிருந்தே உங்களுக்குக் கடவுள் நம்பிக்கை இல்லையா?” என்று கேட்கிறார்கள். நீங்களும் அதேபோல் கேட்கலாம். அவர் பதில் சொல்லும்போது காதுகொடுத்துக் கேளுங்கள், குறுக்கிடாதீர்கள். அவர் ஏன் கடவுளை நம்பவில்லை என்று தெரிந்தால்தான், எப்படிப் பதில் சொல்வது, எந்தப் பிரசுரத்தை அளிப்பது என்று தீர்மானிக்க முடியும்.—நீதி. 18:13.
3. வீட்டுக்காரருக்கும் அவருடைய நம்பிக்கைகளுக்கும் எப்படி மதிப்பு காட்டலாம்?
3 அவருடைய நம்பிக்கை தவறென சுட்டிக்காட்டுவது போல பதிலளிக்காதீர்கள். இதுகுறித்து ஒரு நாட்டிலிருந்து வந்த ஆலோசனை: “எதை நம்ப வேண்டும் என்பது அவரவர் தீர்மானம், அதை நாம் மதிக்க வேண்டும், இது ரொம்பவும் முக்கியம். வாதாடி ஜெயிக்க வேண்டும் என நினைக்கக் கூடாது; கேள்விகளைக் கேட்டு, யோசிக்க வைத்து, அவராகவே ஒரு முடிவுக்கு வர உதவ வேண்டும்.” ஒரு மாவட்டக் கண்காணி, வீட்டுக்காரர் பதிலளித்த பிறகு பொதுவாக இவ்வாறு பேச்சை ஆரம்பிப்பார்: “ஒருவேளை, இப்படி நீங்க யோசிச்சு பாத்திருக்கீங்களா?”
4. புத்த மதத்தினருக்கு எப்படி உதவலாம்?
4 புத்த மதத்தினருக்குக் கடவுள் என்ற ஒருவர் இருக்கிறார் என்பதே வினோதமான கருத்து. பிரிட்டனில் உள்ள சில பிரஸ்தாபிகள் அவர்களிடம் சிற்றேடுகளை அளிக்கிறார்கள். பிறகு, பைபிள் கற்பிக்கிறது புத்தகத்தைக் கொடுத்து இப்படிச் சொல்கிறார்கள்: “நீங்க கடவுள நம்பலைனாலும், பைபிள படிச்சுப் பாருங்க, அதுல இருக்கிற நடைமுறையான ஆலோசனைகள் உங்களுக்கு ரொம்ப உதவியா இருக்கும்.” அமெரிக்காவில், சீன மொழி பிராந்தியத்தில் ஊழியம் செய்யும் ஒரு பயனியர் சொல்கிறார்: “எங்க பிராந்தியத்துல நிறைய பேருக்கு படிக்கிறதுனா ரொம்ப பிடிக்கும். நாங்க மறுசந்திப்புக்கு போறதுக்குள்ள பிரசுரங்கள முழுசா படிச்சிடுவாங்க. ஆனா, பைபிள் படிப்பை பத்தியெல்லாம் அவங்களுக்குத் தெரியாது. அதனால முதல் சந்திப்பிலேயே நற்செய்தி புரோஷரை கொடுப்பேன். இரண்டு பேரு கலந்து பேசுறதுக்கு ஏத்த மாதிரிதான் அந்த புரோஷர் தயாரிக்கப்பட்டிருக்கு.” அதே நாட்டில் சீன மொழி பிராந்தியத்தில் சேவை செய்யும் வட்டாரக் கண்காணி, முதல் சந்திப்பிலேயே பைபிள் கற்பிக்கிறது புத்தகத்தைக் கொடுக்க முடியும் என்கிறார். ஆனால், கடவுளைப் பற்றி விளக்கும் முதல் பாடத்திலிருந்து படிப்பை ஆரம்பிக்காமல், பைபிளைப் பற்றி விளக்கும் இரண்டாவது பாடத்திலிருந்து ஆரம்பிக்கலாம்.
5. பொறுமை ஏன் முக்கியம்?
5 கடவுள்மேல் ஒருவருக்கு சட்டென நம்பிக்கை வந்துவிடாது, அதனால் பொறுமை அவசியம். முதல் சில சந்திப்புகளிலேயே, கடவுள் இருக்கிறார் என்று வீட்டுக்காரர் ஒத்துக்கொள்ளாமல் போகலாம். ஆனால் நாட்கள் செல்லச் செல்ல, ‘கடவுள் இருக்கலாம்’ என்ற முடிவுக்கு அவர் வரலாம், அல்லது மற்றவர்கள் கடவுளை நம்புவதற்கான காரணத்தைப் புரிந்துகொண்டதாகச் சொல்லலாம்.
6. சிலர் ஏன் பைபிளைப் படிக்க விரும்புவதில்லை?
6 பைபிளை நம்பாதவர்கள் அல்லது அதைப் படிக்க விரும்பாதவர்கள்: சிலர் கடவுளை நம்பினாலும், பைபிளைப் படிக்க விரும்ப மாட்டார்கள். அது கடவுள் தந்த புத்தகம் என்பதில் அவர்களுக்கு நம்பிக்கை இருக்காது. ஒருவேளை கிறிஸ்தவர்கள் அதிகமில்லாத இடத்தில் அவர்கள் வாழலாம்; அதனால் பைபிளை கிறிஸ்தவர்களுக்குரிய புத்தகமாக நினைக்கலாம். அல்லது கிறிஸ்தவர்கள் என்று சொல்லிக்கொண்டு பைபிளின்படி வாழாதவர்கள் மத்தியில் அவர்கள் வசிக்கலாம்; அதனால் பைபிளைப் படிப்பதால் பயனில்லை என நினைக்கலாம். பைபிள்மீது அவர்களுடைய ஆர்வத்தை வளர்க்கவும், பைபிள் கற்பிக்கிறது புத்தகத்திலிருந்து படிப்பை ஆரம்பிக்கவும் நாம் என்ன செய்யலாம்?
7. பைபிள்மீது ஆர்வத்தை வளர்க்க சிறந்த வழி என்ன?
7 கிரீஸ் கிளை அலுவலகம் இப்படி எழுதியது: “பைபிளைப் படிக்க விரும்பாதவர்களிடம் அதைத் திறந்து அதில் என்ன இருக்கிறது என்று காட்டுவதுதான் பைபிளில் ஆர்வத்தை வளர்க்க சிறந்த வழி. நாமே எதையாவது சொல்வதைவிட, பைபிளிலிருந்து வசனங்களைக் காட்டுவது வீட்டுக்காரரின் உள்ளத்தைத் தொடுகிறது என நிறைய பிரஸ்தாபிகள் சொல்கிறார்கள். (எபி. 4:12) கடவுளுடைய பெயரை பைபிளில் பார்த்த நிறைய பேர் பைபிளை ஆழ்ந்து படிக்கத் தூண்டப்பட்டிருக்கிறார்கள்.” இந்தியக் கிளை அலுவலகம் இப்படி எழுதியது: “வாழ்க்கையின் நோக்கம், இறந்தவர்களின் நிலை பற்றிய சத்தியங்கள் நிறைய இந்துக்களைக் கவருகின்றன. ஜாதிபேதம் இல்லாத உலகத்தைப் பற்றிய வாக்குறுதியும் அவர்களைக் கவருகிறது.” உள்ளூர் பிரச்சினைகளைப் பற்றிக் குறிப்பிட்டு நம் பேச்சை ஆரம்பித்தால், கடவுளுடைய அரசாங்கம் அவற்றை எப்படிச் சரிப்படுத்தும் என்று பைபிளைத் திறந்து காட்டி விளக்க முடியும்.
8. கிறிஸ்தவமண்டலத்தைப் பார்த்து பைபிளை வெறுக்கும் ஆட்களிடம் என்ன சொல்லலாம்?
8 கிறிஸ்தவமண்டலத்தைப் பார்த்து பைபிளை வெறுக்கும் ஆட்களிடம் பேசும்போது, பைபிளையும் பைபிள் போதனைகளையும் கிறிஸ்தவமண்டலம் திரித்துக் கூறியிருக்கிறது என்பதை விளக்குங்கள். இந்தியக் கிளை அலுவலகம் எழுதியது: “பைபிள், சர்ச்சுகளுக்கு மட்டுமே சொந்தமானதல்ல என்பதைப் புரிந்துகொள்ள மக்களுக்கு உதவ வேண்டியிருக்கிறது.” வாழ்க்கையின் நோக்கம் என்ன?—அதை நீங்கள் எப்படிக் கண்டுபிடிக்கலாம்? என்ற சிற்றேட்டில் 4-வது பாடத்தைப் படிக்கும் நிறைய இந்துக்கள் மனம் ஈர்க்கப்படுகிறார்கள். கடவுளுடைய வார்த்தையிலேயே கை வைக்கவும், அதை அழிக்கவும் சர்ச்சுகள் என்னவெல்லாம் செய்திருக்கின்றன என்பதை அந்தப் பாடம் விளக்குகிறது. பிரேசிலில் உள்ள ஒரு பயனியர், வீட்டுக்காரர்களிடம் இப்படிச் சொல்கிறார்: “பைபிள்ல என்னதான் இருக்குன்னு நீங்க தெரிஞ்சுக்கலாம் இல்லையா? வேற மதத்தை சேர்ந்த நிறைய பேர் திறந்த மனசோடு பைபிள படிக்கிறாங்க. நீங்களும் படிச்சுப் பாத்தீங்கன்னா ரொம்ப ஆச்சரியப்படுவீங்க.”
9. பைபிள் கற்பிக்கிற விஷயங்களில் சிலர் ஆரம்பத்தில் ஆர்வம் காட்டவில்லை என்றால், நாம் ஏன் சோர்ந்துவிடக் கூடாது?
9 ஒவ்வொருவரின் இருதயத்தையும் யெகோவா பார்க்கிறார். (1 சா. 16:7; நீதி. 21:2) நல்மனமுள்ள ஆட்களை உண்மை வணக்கத்திடம் ஈர்க்கிறார். (யோவா. 6:44) அப்படி ஈர்க்கப்பட்டவர்களில் அநேகர் முன்பு கடவுளை அறியாதவர்கள் அல்லது பைபிளைப் பற்றி சுத்தமாகத் தெரியாதவர்கள். ‘சத்தியத்தைப் பற்றிய திருத்தமான அறிவை அடைந்து, மீட்புப் பெற’ நம்முடைய ஊழியம் அவர்களுக்கு உதவுகிறது. (1 தீ. 2:4) எனவே, பைபிள் கற்பிக்கிற விஷயங்களில் சிலர் ஆரம்பத்தில் ஆர்வம் காட்டவில்லை என்றால், சோர்ந்துவிடாதீர்கள். அவர்களுடைய ஆர்வத்தைத் தூண்ட வேறொரு பிரசுரத்தைப் பயன்படுத்துங்கள். அப்படிச் செய்தால், பைபிள் படிப்புக்கு முக்கியக் கருவியாக உள்ள பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? புத்தகத்திடம் காலப்போக்கில் அவர்களுடைய கவனத்தைத் திருப்பிவிடுவீர்கள்.
[பக்கம் 4-ன் பெட்டி]
கடவுள்மீது நம்பிக்கையில்லை என்று ஒருவர் சொன்னால்...
• ஏன் என்று தெரிந்துகொள்ள, “ஆரம்பத்திலிருந்தே உங்களுக்குக் கடவுள் நம்பிக்கை இல்லையா?” என்று கேளுங்கள்.
• பரிணாமவாதியாக இருந்தால் கீழே உள்ளவற்றைப் பயன்படுத்துங்கள்:
விழித்தெழு!-வில் வரும் “யாருடைய கைவண்ணம்?”
திருப்தியான வாழ்க்கைக்கு வழி, பாகம் 4; உயிரின் தோற்றம் சிந்திக்க ஐந்து கேள்விகள் ஆகிய சிற்றேடுகள்
• அநியாயத்தையும் துன்பத்தையும் பார்த்து கடவுள் நம்பிக்கை இழந்திருந்தால் கீழே உள்ளவற்றைப் பயன்படுத்துங்கள்:
கடவுள் உண்மையில் நம்மைப் பற்றி அக்கறை உள்ளவராக இருக்கிறாரா? சிற்றேட்டில் பகுதி 6; வாழ்க்கையின் நோக்கமென்ன? சிற்றேட்டில் பகுதி 6
• கடவுள் இருக்கலாம் என்று வீட்டுக்காரர் யோசிக்க ஆரம்பித்ததுமே பைபிள் கற்பிக்கிறது புத்தகத்தை அறிமுகப்படுத்துங்கள். 2-வது பாடத்திலிருந்தோ அவருக்கு ஆர்வமுள்ள வேறு ஏதாவது பாடத்திலிருந்தோ படிப்பை ஆரம்பிப்பது நல்லது.
[பக்கம் 5-ன் பெட்டி]
பைபிளை நம்பாதவர்களைச் சந்திக்கும்போது...
• உயிர்—எப்படி தோன்றியது? பரிணாமத்தினாலா படைப்பினாலா? புத்தகத்தில் அதிகாரங்கள் 17, 18-ஐச் சிந்தியுங்கள்.
• பைபிள் அறிவுரைகளைக் கடைப்பிடிப்பதால் வரும் நன்மைகளைச் சொல்லுங்கள். பைபிளின் நடைமுறை பயனைச் சிறப்பித்துக்காட்ட பின்வரும் பிரசுரங்களைப் பயன்படுத்தலாம்:
விழித்தெழு!-வில் “குடும்ப ஸ்பெஷல்”
சிற்றேடுகள்: கடவுள் சொல்லும் நற்செய்தி!, பாடம் 9, 11; எல்லா மக்களுக்கும் ஏற்ற ஒரு புத்தகம், பக்கங்கள் 22-26; திருப்தியான வாழ்க்கைக்கு வழி, பாடம் 2
இஸ்லாமியரிடம், உண்மையான இறை நம்பிக்கை—சந்தோஷமான வாழ்வுக்கு வழி! சிற்றேட்டில் பாகம் 3-ஐக் காட்டுங்கள்.
பைபிளை ஏற்றுக்கொள்ளாத பிராந்தியத்தில் ஊழியம் செய்தால் ஒருசில வாரங்களுக்கு பைபிள் என்ற வார்த்தையைப் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது.
• பைபிள் தீர்க்கதரிசனங்கள் எப்படி நிறைவேறின என்று விளக்குங்கள். இந்தப் பிரசுரங்களைப் பயன்படுத்துங்கள்:
எல்லா மக்களுக்கும் ஏற்ற ஒரு புத்தகம் என்ற சிற்றேட்டில் பக்கங்கள் 27-29
• வீட்டுக்காரர் ஒரு விஷயத்தைக் குறிப்பிட்டு, பைபிள் அதைப் பற்றி என்ன சொல்கிறது என்று கேட்டவுடனே பைபிள் கற்பிக்கிறது புத்தகத்தை அறிமுகப்படுத்துங்கள்.
[பக்கம் 6-ன் பெட்டி]
“கடவுள்மேல் நம்பிக்கை இல்லை” என்று ஒருவர் சொன்னால்...
• “படைப்பாளர்மேல நம்பிக்கை வைக்க எனக்கு எது உதவியதுனு சொல்லட்டுமா?” பிறகு நியாயங்காட்டி புத்தகத்தில் பக்கங்கள் 84-86-லிருந்து குறிப்புகளைச் சிந்தியுங்கள். அல்லது நீங்கள் வாசித்து ரசித்த பிரசுரத்தைக் கொண்டுவருவதாகச் சொல்லுங்கள்.
• “கடவுள்னு ஒருத்தர் இருந்தா, அவர் எப்படிப்பட்டவரா இருக்கணும்னு நீங்க ஆசைப்படுவீங்க?” நிறைய பேர், ‘கடவுள் அன்பானவராக, நியாயமானவராக, இரக்கமுள்ளவராக, பாரபட்சமற்றவராக இருக்க வேண்டும் எனச் சொல்வார்கள். கடவுளுக்கு அந்தக் குணங்கள் இருப்பதை பைபிளிலிருந்து வாசித்துக் காட்டுங்கள். (பைபிள் கற்பிக்கிறது புத்தகத்தில் அதிகாரம் 1 பாரா 6-லிருந்துகூட படிப்பை ஆரம்பிக்கலாம்.)
“பைபிள்ல எனக்கு நம்பிக்கை இல்லை” என்று ஒருவர் சொன்னால்...
• “இந்த மாதிரி நிறைய பேர் சொல்றாங்க. அறிவியலோட பைபிள் முரண்படுது அல்லது பைபிள் நடைமுறைக்கு ஒத்துவராதுனு சிலர் நினைக்கிறாங்க. நீங்க எப்பவாவது பைபிள படிச்சிருக்கீங்களா? [பதில் சொல்ல அனுமதியுங்கள். எல்லா மக்களுக்கும் ஏற்ற புத்தகம் சிற்றேட்டில் பக்கம் 3-லுள்ள முன்னுரையைக் காட்டி, சிற்றேட்டை அளியுங்கள்.] மதம்ங்கிற பேர்ல பைபிள் போதனைகள் திரிக்கப்பட்டிருக்கு, அதனால நிறைய பேரு பைபிள மதிக்கிறதில்லை. இதைப் பற்றி அடுத்தமுறை 4, 5 பக்கங்களிலிருந்து காட்டுறேன்.”
• “நிறைய பேரு உங்கள மாதிரிதான் சொல்றாங்க. பைபிள்ல எனக்குப் பிடிச்ச ஒரு விஷயத்தை உங்களுக்குக் காட்டட்டுமா? [பைபிள் அறிவியல்பூர்வமானது என்பதற்கு யோபு 26:7 அல்லது ஏசாயா 40:22-ஐப் படியுங்கள்.] குடும்ப வாழ்க்கைக்குத் தேவையான ஆலோசனைகள்கூட பைபிள்ல இருக்கு. அடுத்தமுறை அது சம்பந்தமா பைபிள்ல இருந்து சில வசனங்கள காட்டுறேன்.”
• “உங்க மனசுல உள்ளதை சொன்னதுக்கு ரொம்ப நன்றி. மனிதர்களுக்காக கடவுள் ஒரு புத்தகத்தை எழுதியிருந்தா, அதுல என்னெல்லாம் சொல்லியிருப்பாருனு நினைக்கிறீங்க?” அவர் சொல்லும் பதிலுக்கேற்ப ஒரு பைபிள் வசனத்தைக் காட்டுங்கள்.