இளைஞர் கேட்கின்றனர். . .
என் ஆசிரியரோடு நான் ஒத்துப்போவது எப்படி?
“ஒரு நல்ல ஆசிரியர், உனக்கே தெரியாத உன்னிடமுள்ள தனித்திறமைகளையும் ஆற்றல்களையும் நீ காணும்படி உனக்கு உதவுவதை ஒரு சவாலாக எடுத்துக் கொள்ளக்கூடும். மேலும் அவர் ஒரு வழிகாட்டியாகவும் உன்னை புரிந்துகொள்ளும் ஒரு நண்பராகவும் மேலும் உண்மையிலேயே உன் நலனில் அக்கறையுள்ள ஒருவராகவும் இருக்கக்கூடும்,” என்று சொல்லுகிறார் உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் பார்ப்பரா மேயர் என்பவர்.
மறுபட்சத்தில் ஒரு ஆசிரியர், எழுத்தாளர் தியோடர் க்ளார்க் அழைத்ததைபோன்று “பயத்திற்கும் கவலைக்குமுரிய ஒரு ஆளாகவும்” இருக்கக்கூடும். க்ளார்க் விவரிப்பதாவது: “பள்ளி ஆசிரியர்கள் அதிக வலிமை வாய்ந்தவர்கள், மாணவர்கள் தேர்ச்சி பெற உதவக்கூடும், அவர்களை சங்கடப்படுத்தக்கூடும், அவமானப்படுத்தக்கூடும், மேலும் தங்கள் இஷ்டபடி கவலையை உண்டுபண்ணக்கூடும்.” நல்லவேளை, பெரும்பாலான ஆசிரியர்கள் தங்கள் மாணவர்கள் பேரில் உண்மையான அக்கறையுள்ளவர்களாகவும் நியாயமாகவே நேர்மையுள்ளவர்களாகவும் இருக்கக்கூடும். என்றபோதிலும், சில ஆசிரியர்கள் சில சமயங்களில் குரூரமானவர்களாகவும் அநியாயமானவர்களாகவும், நேர்மையற்றவர்களாகவும் இருக்கக்கூடும். இப்படிப்பட்டவர்கள் உனக்கு வாழ்க்கையைத் துயரமுள்ளதாக ஆக்கக்கூடும்.
ஏற்கனவே வெளிவந்த ஒரு கட்டுரை, ஆசிரியர்கள் ஒரு தனிப்பட்ட வகையான அழுத்தங்களையும் பிரச்னைகளையும் எதிர்படுகிறார்கள் என்று அது சில சமயங்களில் வகுப்பறையில் அவர்கள் நடந்துகொள்ளும் விதத்தை பாதிக்கக்கூடும் என்பதையும் மதித்துணருவதற்கு நமக்கு உதவி செய்தது.a என்றபோதிலும் ஒரு ஆசிரியர் உன்னை மட்டும் தனியே பிரித்தெடுத்து திரும்பத்திரும்ப பரிகசிப்பதை போன்று தோன்றக்கூடும் அல்லது அநியாயமாக குறைந்த மார்க்குகளை வழங்குவதாக நீ உணர்ந்தால் அப்பொழுது என்ன?
பள்ளியில் பொன் மொழி
வளரிளமை பருவத்தின் குடும்ப கைப்புத்தகம் குறிப்பிடுவதாவது: “தங்களுடைய நடத்தையின் மூலம் ஆசிரியரை மட்டுப்படுத்துகிறவர்கள் அதற்கு பிரதிபலனாக மட்டுப்படுத்துப்படுவார்கள் என்பது வழக்கமாக நம்பப்படுகிறது.” ஆம், பகைமையுணர்ச்சியுள்ள ஆசிரியர்கள் பெரும்பாலும் தங்கள் மாணவர்களாலேயே உருவமைக்கப்படுகிறார்கள்!
வகுப்பறையில் கொடூரமான குறும்பு செய்யும் மாணவர்களின் பாதிப்புகளை சற்று கவனியுங்கள். எங்களுக்கு செவி கொடுங்கள்! என்ற புத்தகமானது, மாற்று ஆசிரியராக வரும் ஆசிரியருக்கு மாணவர்கள் சில சமயங்களில் வழங்கும் கொடூரமான மற்றும் அபூர்வமான தண்டனைகளைப்பற்றி சொல்லுகிறது. மாணவர்கள் எந்தளவுக்கு துயரத்தை வருவிப்பவர்களாக இருக்கக்கூடும் என்பதை பற்றிய ஒரு சிறு காட்சியை இது கொடுக்கிறது. “இந்த [மாற்று ஆசிரியர்கள்] என்ன காரியங்களை அனுபவிக்கிறார்கள் என்று உனக்கு தெரியுமா?” என்று 13 வயது வாலரி என்ற பெண் கேட்கிறாள். தனது சொந்த கேள்விக்கு பதிலளிப்பவளாய் அவள், “வாதனைகளையும் சித்திரவதைகளையும்” குறித்து பேசுகிறாள். பிள்ளைகள் இக்காலத்தில் மாற்று ஆசிரியர்களுக்கு இதையே செய்கிறார்கள்.
வாலரி மிகைப்படுத்தி பேசவில்லை என்று ரோலண்ட் பெட்ஸ் சொல்லுகிறான்: “மாற்று ஆசிரியர்கள் எரிச்சலுற்று அதிக கண்டிப்புடன் நடந்துக்கொள்ளும் அளவுக்கு அவர்கள் தங்கள் வகுப்பு மாணவர்களால் இரக்கமற்ற விதத்தில் விறட்டப்படுகின்றனர்.” இந்த செய்கைகளில் தாங்கள் தப்பித்துக் கொள்ளலாம் என்ற நிச்சயத்துடன் விகாரமான சில திடீர்தாக்குதலில் ஆனந்தமடைகின்றனர்—எல்லாரும் ஒரே கூட்டாக சேர்ந்து கொண்டு தங்கள் புத்தகங்களை அல்லது பென்சில்களை தரையில் போடுகின்றனர், அல்லது தங்கள் ஆசிரியரை எரிச்சல்படுத்துவதற்காக ஊமைகளைப்போல் விளையாடுவது அல்லது அவர் சொல்லுவதை புரிந்துகொள்ளாதது போல் நடிப்பது போன்றவற்றை செய்கின்றனர், “நாங்கள் விளையாட்டுக்காக நாசவேலை செய்கிறோம்,” என்று இளம் பாபி விவரிக்கிறான்.
என்றபோதிலும், நீ வகுப்பறையில் கொடூரமாக நடந்துகொள்ளுதல் என்ற விதையை விதைக்கையில், அதற்கேற்ப உன்னிடம் மட்டமாக நடந்துகொள்ளும் பகைமையுள்ள ஆசிரியரை அறுவடை செய்வாயானால் ஆச்சரியப்படாதே. (கலாத்தியர் 6:7-ஐ ஒப்பிட்டு பார்க்கவும்.) வளரிளமை பருவத்தின் குடும்ப கைப்புத்தகம் விவரிப்பதாவது: “மனித இயல்புகளின் முக்கிய அடிப்பட நியதிகளில் ஒன்று தாங்கள் எவ்விதம் நடத்தப்படுவதாக மக்கள் உணருகிறார்களோ அவ்விதமே அவர்கள் மற்றவர்களை நடத்துகிறார்கள்.
அதோடுகூட ஆசிரியர்கள் சரியாகவே உன்னுடைய நன்மைக்காக அதிகாரத்திற்குரிய ஒரு ஸ்தானத்தில் வைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் செலுத்தும் அதிகாரம் எல்லா சமயங்களிலும் ஒருவேளை நியாயமானதாக இல்லாதபோதிலும் நீ அவர்களுக்கு மரியாதை கொடுக்க கடமைப்பட்டிருக்கிறாய். (லூக்கா 6:40-ஐ ஒப்பிட்டுப் பார்க்கவும்) என்றபோதிலும் பின்வருபவற்றை சிந்தித்துப்பார். ஆசிரியரை அவமரியாதைக்குரிய ஒரு முறையில் நடத்துவது அவரிடமிருந்து மோசமான எதிர்ச்செயலைக் கொண்டு வருகிறதென்றால் மரியாதைக்குரிய விதத்தில் நடத்துவது மேம்பட்ட பிரதிபலிப்பை கொண்டுவரக்கூடுமல்லவா?
எனவே பொன் விதியை நினைவுகூருவாயாக: “மனுஷர் உங்களுக்கு எவைகளை செய்ய விரும்புகிறீர்களோ அவைகளை நீங்களும் அவர்களுக்கு செய்யுங்கள்.” (மத்தேயு 7:12) அப்படியானால் வகுப்பறை குறும்புத்தனங்களில் கலந்துகொள்ள மறுத்துவிடு. உன் ஆசிரியர் சொல்லுபவற்றிற்கு கவனமாக செவிகொடு. ஒத்துழைப்புகொடு. காலப்போக்கில் ஒருவேளை—குறைந்தபட்சம் உன்னிடமாவது—அவருடைய பகைமையுணர்வு குறையக்கூடும்.
‘என் ஆசிரியருக்கு என்மேல் விருப்பமில்லை’
விருப்பங்கள் என்ற புத்தகத்தின் ஆசிரியர், “ஆசிரியர்களும்—பெற்றோர்களும்—மனித பிறவிகளே. அவர்களும் தவறிழைக்கக் கூடியவர்களே. எனவே பெரும்பாலும் உணர்ச்சிகள் சம்பந்தமான காரணங்களுக்காகவே அவர்கள் ஒரு மாணவனை வெறுக்கக்கூடும்,” என்று ஒப்புக்கொள்ளுகிறார். சிலவேளைகளில் மனித சுபாவங்களின் உரசலால் பிரச்னைகள் எழும்புகின்றன அல்லது ஏதாவதொரு தவறான கருத்தின் காரணமாக உன் ஆசிரியர் உனக்கு எதிரியாகக்கூடும்; அதாவது காரியங்களை அறிவதற்குரிய மிகுதியான ஆர்வத்தை கலகம் செய்வதாகவும் அல்லது சில விசித்திர செயல்களை முட்டாள்தனமாகவும் அவர் தவறாக புரிந்து கொள்ளக்கூடும்.
வருத்தத்திற்குரிய காரியமென்னவெனில், மக்கள் பண்டைய கொரிந்தியர்களை போன்றே இருக்கின்றனர், அவர்கள் “வெளித்தோற்றத்தின்படி” பார்க்கிறவர்களாக இருந்தார்கள். (2 கொரிந்தியர் 10:7) உன் ஆசிரியர் உன்னை விரும்பாதபோது அவர் ஒருவேளை உன்னை சங்கடப்படுத்தும் அல்லது அவமானப்படுத்தும் மனசாய்வுள்ளவராக இருக்கக்கூடும். இதன் விளைவாக, இருவருக்கிடையில் பகைமையுணர்வு வளரக்கூடும்.
சமாதானத்தை காத்துக்கொள்வது எப்படி
பைபிளின் அறிவுரையானது: “ஒருவருக்கும் தீமைக்குத் தீமை செய்யாதிருங்கள் . . . கூடுமானால் உங்களாலானமட்டும் எல்லா மனுஷரோடும் சமாதானமாயிருங்கள்.” (ரோமர் 12:17, 18) மறுவார்த்தையில் சொல்ல வேண்டுமானால் உன் ஆசிரியருக்கு எரிச்சலை மூட்டாமலிரு. அவரை அநாவசியமாக எதிர்ப்பதை தவிர்த்திடு, ஆசிரியர் குறைகூறுவதற்கு நியாயமான காரணமெதுவும் இராதபடி செய்திடு. மெய்யாகவே சிநேக மனப்பான்மையோடிரு. ‘சிநேகபான்மையா? அவரிடமா?’ என்று நீ கேட்கக்கூடும். ஆம், வகுப்பறைக்கு வரும்போது உன் ஆசிரியருக்கு மரியாதைக்குரிய விதத்தில் வந்தனம் செய்வதன் மூலம் நன்நடத்தையை காண்பித்திடு. நீ தொடர்ந்து காட்டும் அமைதியான மனப்போக்குதானே உன்மீது அவர் கொண்டுள்ள கருத்தை மாற்றக்கூடும்.—ரோமர் 12:20, 21-ஐ ஒப்பிட்டுப் பாருங்கள்.
ஒரு உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் ஜாய்ஸ் வெட்ரல் நினைவுகூறுவதாவது: “ஒருநாள் நான் உண்மையிலே என் மனம் (மூட்) சரியில்லாமலிருந்தேன். சிறு தவறுகளுக்கெல்லாம் நான் எல்லாரிடமும் கடுகடுப்பாயிருந்தேன். இறுதியில் நான் தன் பாடபுத்தகத்தை திறவாமலிருந்த ஒரு மாணவனை பார்த்து கூச்சலிட்டேன். உன் மார்க்குகளை குறைத்துவிடுவேன் என்று பயமுறுத்துவதற்கு வாய் திறந்த நான் திடீரென்று நின்றுவிட்டேன். அந்த மாணவனின் முகத்தில் ஒரு அழகிய புன்முறுவலை கண்டதும் நான் செயலற்றுபோனேன். அவன் என்னை புன்முறுவலோடு பார்த்தான். தொடர்ந்து பார்த்துக் கொண்டிருந்தான், எனது விரைப்பான துயரம் நிறைந்த முகத்தை பார்த்தவனாய் அவன்: ‘நாம் சந்தோஷமாய் இருக்கலாமே,’ என்றான். எனக்கு வேறு வழியில்லை. என்னையே அடக்க முடியாமல் நான் சிரித்து விட்டேன். விரைவில் வகுப்பறை முழுவதும் புன்னகையாலும் சிரிப்பாலும் நிறைந்தது.”
ஒரு சூழ்நிலையை சிரிப்பதன் மூலம் எல்லாருமே சரிசெய்துவிட முடியாது என்பது உண்மையே. ஆனால் பிரசங்கி 10:4 நமக்கு பின்வருமாறு அறிவுரை கொடுக்கிறது. “அதிபதியின் [அல்லது அதிகாரத்திலிருப்பவரின்] கோபம் [உன்னைக் கண்டிப்பதன் மூலம்] உன்மேல் எழும்பினால் உன் ஸ்தானத்தை விட்டு விலகாதே; இணங்குதல் பெரிய குற்றங்களை அமர்த்திப்போடும்.” அதோடுகூட “மெதுவான பிரதியுத்தரம் உக்கிரத்தை மாற்றும்” என்பதையும் நினைவில் வையுங்கள்.—நீதிமொழிகள் 15:1.
‘நான் அதிகமான மார்க்குகள் பெற தகுதியுள்ளவனாயிருந்தேன்’
சூழ்நிலை அபிவிருத்தியடையவில்லை என்பதை கண்டால் உன்னுடைய ஆசிரியரோடு பேசுவதன் மூலம் பிரச்னையை தீர்த்துக்கொள்ள முயற்சி செய். இது ஒருவேளை சுலபமானதாயிராது. தாவீது ராஜாவின் ஒரு வினைமையான குற்றத்தை வெளிப்படுத்தக்கூடிய ஒரு கடினமான வேலையை செய்வதற்கு நாத்தான் எப்படி அணுகினான் என்பதை பைபிள் சொல்லுகிறது. நாத்தான் கூச்சலிட்டு அவனை திட்டிக்கொண்டே விகாரமாக அவனிடம் செல்லவில்லை. அவன் தாவீதை சாதுரியமாக அணுகினான். தாவீது தானாகவே சரியானதோர் முடிவெடுக்கக்கூடிய உதாரணங்களை பயன்படுத்தினான்.—2 சாமுவேல் 12:1-7.
ஏதாவதொரு அநியாயம் ஏற்பட்டுவிட்டது—அதாவது மார்க்குகள் அநியாயமாக குறைக்கப்பட்டிருக்கிறது—என்று நீ உணருவாயானால் அதேபோன்று நீ உன் ஆசிரியரை தாழ்மையுடனும் அமைதலாகவும் அணுகு. முன்னாள் பள்ளி ஆசிரியர் புரூஸ் வெப்பர் நமக்கு நினைப்பூட்டுவதாவது: “மாணவனின் கலக மனப்பான்மை ஆசிரியருக்கு மூர்க்கத்தை உண்டுபண்ணுகிறது. நீ கூச்சலும் குழப்பமும் ஆர்பாட்டமும் செய்து அல்லது படுமோசமான அநியாயங்களை செய்து பழிவாங்க தீர்மானித்தால் நீ எங்குமே இல்லாமற் போய்விடுவாய்.”—பதினேழு என்ற பத்திரிகை.
காரியங்களை முதிர்ச்சியுள்ள விதத்தில் கையாளுவதற்கு முயற்சிசெய். ஒருவேளை நீ உன் ஆசிரியரிடம் அவர் மார்க்கு போடும் முறைகளை புரிந்துகொள்ள உதவும்படி கேட்கலாம். அதன் பின்பு உன் ஆசிரியரிடம் “அவருடைய மதிப்பீடு சரியில்லை என்று சொல்வதற்கு பதிலாக அறியாமல் ஏற்பட்ட பிழைக்கு அல்லது கணக்கிடும்போது ஏற்பட்ட பிழைக்கு நீ பலியாகிவிட்டிருக்கிறாய் என்பதை நிரூபிக்க முயற்சி செய். ஆசிரியர் மார்க் போடும் முறையையே நீயும் கையாண்டு உன்னுடைய மார்க்கில் எங்கே நீ பிழையை காண்கிறாய் என்பதை எடுத்து காண்பி.” குறைந்த பட்சம் கடினமான பிரச்னைகளை தீர்வு காண்பதற்கு நீ கற்றுக்கொள்ளக்கூடும். உன்னுடைய முதிர்ச்சியான தன்மை உன் ஆசிரியருக்கு நல்லெண்ணத்தை ஏற்படுத்தக்கூடும்.
உன் பெற்றோருக்கு தெரியப்படுத்து
சில சமயங்களிலும் வெறும் சம்பாஷணை பயனற்றதாக நிரூபிக்கக்கூடும். சூசன் என்ற சிறுமியின் உதாரணத்தை கவனி. நன்மதிப்புள்ள ஒரு மாணவியாக இருந்த அவள் தன் ஆசிரியர்களில் ஒருவர் தனக்கு தேர்ச்சிக் குறைவான மார்க்குகள் கொடுப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தாள். பிரச்னை என்ன? சூசன் ஒரு யெகோவாவின் சாட்சியாக இருந்தாள். இதன் காரணமாகவே சூசனை தான் வெறுப்பதாக அந்த ஆசிரியை ஒப்புக் கொண்டாள். “அது உண்மையிலேயே மன முறிவை ஏற்படுத்துவதாக இருந்தது. நான் என்ன செய்வதென்று எனக்கு தெரியவில்லை,” என்றாள் சூசன்.
“நீ உன் பெற்றோரிடம் சென்று ஒரு குறிப்பிட்ட ஆசிரியர் உன்னை வெறுக்கிறார் என்றும், நியாயமில்லாமல் உன்னை தண்டிக்கிறார் என்றும் அல்லது உன்னை மட்டும் தனியே பரியாசம் செய்கிறார் அல்லது பழிக்கிறார் என்றும் சொல்லு,” என்று விருப்பங்கள் என்ற புத்தகம் சொல்லுகிறது. இதைதான் சூசன் செய்தாள். “நான் என்னில் தைரியத்தை வரவழைத்துகொண்டு என் தாயிடம் [கணவன் இல்லாதவர்] இந்த ஆசிரியரைப்பற்றி சொன்னேன். முதலில் என்னை என் தாய் புரிந்து கொள்ளுவாள் என்று நான் நினைக்கவில்லை. ஆனால் ‘சரி நான் உன் ஆசிரியரிடம் பேசுகிறேன்,’ என்று அவள் சொன்னாள். பின்பு இடைவெளி நேரத்திலே என் ஆசிரியரை அணுகி பிரச்னை என்ன என்று விசாரித்தாள். என் தாய் உண்மையிலேயே அதிக கோபப்படுவாள் என்று நினைத்தேன். ஆனால் அவள் கோபப்படவில்லை. அவள் ஆசிரியரிடம் அமைதலாக பேசினாள்.” சூசனுக்கு தன் தாயின் ஆதரவு இருந்தது என்பதை ஆசிரியர் உணர்ந்து வேறு ஒரு ஆசிரியரை சூசனுக்கு ஏற்பாடு செய்தார்.
சிக்கலான எல்லா விவகாரங்களும் இப்படியே சுமூகமாக முடிந்துவிடும் என்று சொல்வதற்கில்லை. சில சமயங்களில் நீ வெறுமென இப்படிப்பட்ட கடினமான சூழ்நிலைமைகளை சகிக்க வேண்டியதாக இருக்கும். ஆனால் ஒரு பள்ளி காலப்பகுதி என்றென்றும் நீடித்திருக்க போகும் ஒன்றல்ல. ஆகவே இந்த ஆண்டு உன் ஆசிரியரோடு சமாதானமாக இருக்க முயற்சித்தாயானால், எப்பொழுதுமே அடுத்த ஆண்டு இருப்பதால் அப்பொழுது ஒரு புதிய ஆசிரியரை நீ கொண்டிருப்பாய். ஒருவேளை வேறு சகமாணவர்களை கொண்டிருக்கக்கூடும்—மேலும் ஒருவேளை ஒத்துப்போவதற்கு கற்றுக்கொள்ளக்கூடிய ஒரு புதிய ஆசிரியரை நீ கொண்டிருக்கக்கூடும். (g85 10/22)
[அடிக்குறிப்புகள்]
a “என் ஆசிரியர் ஏன் அவ்வளவு நியாயமற்றவராக இருக்கிறார்?” ஜூன் 8, 1986 விழித்தெழு! பத்திரிகையில் தோன்றிய இந்தக் கட்டுரையைப் பார்க்கவும்.
[பக்கம் 14-ன் சிறு குறிப்பு]
ஆசிரியரை அவமரியாதையுடன் நடத்துவது அவருடைய மோசமான தன்மைகளை வெளிப்படுத்தச் செய்கிறதென்றால், மரியாதையோடு நடத்துவது அவருடைய மிகச் சிறந்த தன்மைகளை வெளிப்படுத்திடும் அல்லவா?
[பக்கம் 10-ன் படம்]
அநியாயம் செய்யப்பட்டதாக நீ உணர்ந்தால், அப்பொழுது தக்க மரியாதையுடன் உன் ஆசிரியரை அணுகிப்பேசு