காகிதம் செய்வதில் எகிப்தியர்கள் காப்பி அடித்தவர்கள்
பொ.ச.மு. மூன்றாவது ஆயிரமாண்டில் எகிப்தியர்கள் காகிதம் செய்ய ஆரம்பித்ததாகச் சொல்லப்படுகிறது. நாணற்புல் என்றழைக்கப்பட்ட ஒரு நீர் தாவரத்தின் நடுத்தண்டிலிருந்து அதன் பட்டையை அவர்கள் உரித்தெடுத்தார்கள். மிஞ்சியிருந்த மென்மையான தண்டு அகலமான மெல்லிய கீற்றுகளாக வெட்டப்பட்டு, நீளவாக்கில் இலேசாக ஒன்றன்மீது ஒன்று இருக்கும் வகையில் பரப்பி வைக்கப்பட்டது. இதன்மீது இலேசாக பசைப் பூசப்பட்டு, மற்றொரு அடுக்கு நாணல் கீற்று முதல் அடுக்கின் மீது வைக்கப்பட்டது. ஆனால் இதில் கீற்றுகள் குறுக்கு வாக்கில் வைக்கப்பட்டன. இந்த இரண்டு அடுக்குகளும் மரச் சுத்தியால் அடிக்கப்பட்டு ஒன்றாகச் சேர்க்கப்பட்டது. வெயிலில் காய வைத்து கொஞ்சம் மெருகேற்றியப் பின்னர், எழுதுவதற்குத் தாள்கள் தயாராயின. பூர்வ காலத்தில் எழுதுவதற்கு பயன்படுத்தப்பட்ட எல்லா சாதனங்களிலும் நாணல் புல் ஓலையே, தோற்றத்தில் காகிதத்தைப் போல இருந்தது.
என்றபோதிலும் காகிதம் செய்வதில் எகிப்தியர்கள் பிற்காலத்தில்தானே, அநேக ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பின்னால்தானே வந்தவர்கள்! காகிதம் செய்வதில் முன்னணியில் நிற்பது காகித குளவிகளாகும். இவற்றில் மிகப் பெரியவை ஐரோப்பாவில் ஹார்னெட்ஸ் வெஸ்பா கிராப்ரோ (Hornets Vespa Crabro)-வும் அமெரிக்காவில் வெஸ்பா மாக்குலாட்டா (Vespa maculata)-வுமாகும். காகித கூடு சிறியதாக ஆரம்பமாகிறது. ஒரே ஒரு பெண் குளவி செய்யும் வேலையாக இது இருக்கிறது. கட்டி முடிக்கப்படும்போது ஒன்று அல்லது இரண்டு அடி விட்டமுள்ள ஒரு கவர்ச்சியான காகித பந்தாக இது இருக்கிறது. இதில் ஆயிரக்கணக்கான குளவிகள் வசிக்கின்றன. வேலையை இந்த ராணி குளவியே ஆரம்பிக்கிறது. பொதுவாக ஒரு மரத்தில், கட்டுவதற்கு ஒரு இடத்தைத் தெரிந்துகொண்ட பிறகு, அவள் பழைய பட்டுப்போன மரக்கட்டையின் சிறிய துகள்களைச் சுரண்டி எடுத்துத் தன்னுடைய உமிழ்நீரோடு கலந்து களியாக அதைச் செய்துகொள்கிறாள்.
இந்தக் காகித களியை வைத்து அவள் ஒரு மிகச் சிறிய அடையை உண்டுபண்ணி ஒரு கிளையிலோ அல்லது வேறு ஒரு ஆதாரத்திலோ அதை ஒட்ட வைத்து விடுகிறாள். களி விரைவில் கெட்டியாகிவிடுகிறது. பல அடுக்குகள் காகிதங்களையும், அடுக்குகள் இடையே அவற்றைப் பிரிப்பதற்கு வெறும் காற்று இடைவெளிகளையும் கொண்ட பாதுகாப்பான உறையால் அவள் அடையைச் சுற்றி மூடிவிடுகிறாள். இந்த உறை அடையைத் தொடுவதில்லை. ஆனால் அது விழாமல் தடுப்பதற்காக அது அதற்கு மேலுள்ள கிளைகளையும் கம்பிகளையும் சுற்றி இணைந்து பின்னிக் கொண்டிருக்கிறது. இந்தக் குழிவான காகிதப் பந்துக்கு ஒரே வழி அடிப்புறத்தில் இருக்கிறது. இதுவே கூட்டின் வாயிலாக இருக்கிறது. அடையிலுள்ள வெகு சில ஆறுகோண செல்கள் கீழ்நோக்கிய வண்ணம் இருக்க, ஒவ்வொன்றிலும் அவள் ஒரு முட்டையை இடுகிறாள்.
சில நாட்களில் முட்டைகள் குஞ்சு பொரித்துவிடுகின்றன. ராணி, முட்டைப் புழுக்களுக்கு உணவளிக்கிறாள்—செல் சுவரைப் பிறாண்டி ஒலியை உண்டுபண்ணுவதன் மூலம் அவை உணவைக் கேட்கின்றன. மூன்று வாரங்களில் ஒரு பட்டுப் பசையிழையை நூலாக ஓடவிடுவதன் மூலம் தங்களை ஒரு செல்லில் அவை அடைத்து வைத்துக்கொள்கின்றன. இந்த முட்டைப் புழு பருவத்தில் அவை இன்னும் மூன்று வாரங்கள் இருந்து, பின்னர் முழு குளவியாக மெல்லிய தோலைத் துளைத்துக்கொண்டு வெளியே வந்து, வேலைச் செய்யத் தயாராகின்றன. ராணிக் குளவி காகிதம் செய்யும் வேலையிலிருந்து ஓய்வு பெற்று முட்டையிடுவதில் கவனத்தை ஒருமுகப்படுத்துகிறாள்.
அப்படியென்றால் காகித உற்பத்தியின் வேகம் அதிகரிக்க வேண்டும்! முட்டைகளுக்கு இடமளிக்க அதிகமான செல்கள் வேண்டும். முதலில் கட்டிய அடையைச் சுற்றி அதன் ஓரங்களில் அதிகமான செல்கள் இணைக்கப்படும்போது அதன் சுற்றளவு அதிகமாகிறது. புதிய மற்றும் பெரிய அளவு அடையை அதன் கீழ் தொங்கவிடுவதற்காக தூண்போன்ற ஆதரவு கீழே விடப்படுகிறது. எட்டு அல்லது அதற்கும் அதிகமானவை இருக்கும் வரையாக, அதிகமான அடைகளும் பெரிய அடைகளும் சேர்க்கப்படுகின்றன. மனிதர்கள் கீழ் தளத்திலிருந்து மேலாகக் கட்டுகிறார்கள்; குளவிகள் மேல் தளத்திலிருந்து கீழாகக் கட்டுகின்றன. மனிதனின் தளங்கள் அதன் கீழுள்ளவைகளின் மீது அமைக்கப்படுகின்றன. குளவியின் தளங்கள் அதற்கு மேலுள்ள ஒன்றிலிருந்து தொங்குகிறது. உட்புறம் விசாலமாவதற்கு இடமளிப்பதற்காக, வெளிப்புறத்தில் சுவர்கள் சேர்க்கப்படும்போது உட்புறத்திலுள்ள சுவர்கள் தகர்க்கப்படுகின்றன. குடும்பம் பெரிதாகும்போது கூடு ஒரு உப்பிய பலூன் மாதிரி அகலமாகிவிடுகிறது.
சில சமயங்களில் குளவிகள் இந்த வெளிப்புற அடுக்குகளைக் காகிதக்கூட்டில் சேர்த்துக் கொண்டிருப்பதைக் காணமுடிகிறது. நன்றாகச் சவைக்கப்பட்ட சிறிய காகிதக் கூழ் உருண்டைகளை அவை கொண்டுவந்து பின்னோக்கி நடந்து செல்கையில் இந்த உருண்டைகளை நீளமான கீற்றுகளாக விரியச் செய்து, கீற்றுக்குப் பின் கீற்றைச் சேர்த்துக் கொண்டிருக்கின்றன. இணைக்கப்பட்ட இந்தக் கீற்றுகளின் அமைப்பைப் பூர்த்தியான காகிதக் கூட்டில் காணலாம். குளவியின் உமிழ்நீர் பசைப் பொருளாக பயன்படுகிறது.
குளவியினால் அதன் காகிதத்திலுள்ள இழையின் இடத்தை ஒழுங்காக அமையச் செய்ய முடிவது அக்கறையூட்டுவதாகவும் ஆச்சரியம் தருவதாகவும் இருக்கிறது. சுவர் அடுக்குக்காக காகிதம் செய்யப்படும்போது, இழைகள் ஒழுங்கற்ற ஒரு அமைப்பைக் கொண்டதாக கூடுதலாக வலுவைக் கொடுப்பதற்காக ஒன்றோடொன்று குறுக்கு மறுக்காகவும் இருக்கிறது—ஓலை நாணல் கீற்றுகளைக் கொண்டு எகிப்தியர்கள் செய்ததற்கு ஒப்பாக இது இருக்கிறது. ஆனால் முதலில் கட்டிய அடையை ஒரு கிளையிலிருந்து தொங்கவிடுவதற்காக அல்லது கூடுதலான அடைகளை அதற்கு மேலுள்ளவற்றோடு ஒட்ட வைப்பதற்கு தண்டுகளை உண்டுபண்ணுவதற்காக காகிதம் செய்யும்போது, மர இழைகள் அனைத்தும் ஒரே விதமாக நீளவாக்கில் வைக்கப்படுகிறது. கனமான கட்டமைப்புகளைக் கூட்டில் பிடிப்பில் வைத்திருக்க இது வெகுவாக அதிகமான வலிமையைக் கூட்டுகிறது. இதைக் குறித்து அதிகார குழு ஒன்று பின்வருமாறு சொல்லுகிறது: “உடலிலுள்ள இணைப்பு இழைகள் அனைத்தும் ஒன்றுக்கொன்று இணையாக, அழுத்தமிருக்கும் திசையில் வரிசைப்படுத்தப்பட்டிருப்பதால், தசையின் நாண்கள் மிகுதியான உறுதியைப் பெற்றுக்கொள்வது போலவே, எல்லா மர நாரிழைகளையும் நீட்டுப் போக்கில் வரிசைப்படுத்துவதன் மூலம் கணிசமான சுமையைத் தாங்கும் வலிமை பெறப்படுகிறது.”
தற்செயலாக, குளவி செய்யும் தூணும் மனித நாண்களும் இவ்விதமாக தோற்றத்தில் ஒன்றாயிருப்பது, பரிணாம தொடர்பு ஒன்று இருக்க வேண்டும் என்பதை நிரூபிக்கிறதா? பரிணாமத்தை ஆதரிப்பவர்கள் பொதுவாக தோற்றத்தில் ஒற்றுமை, உறவை நிரூபிப்பதாக வாதாடுகிறார்கள். தோற்ற ஒற்றுமை பொருந்தவில்லையென்றால், அவர்கள் விருப்பப்படியும் வசதியாகவும் தற்செயலாக அது கூடிவந்திருப்பதாக அதைத் தள்ளிவிடுகிறார்கள். பல்வேறு மாறுபட்ட கண்டுபிடிப்புகளில் மனிதர்கள் ஒரே மாதிரியான விதிகளைப் பயன்படுத்துவது போலவே, வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தவர் செய்திருக்கிறார். இதை மனிதன் செய்வதற்கு வெகு காலத்துக்கு முன்பாகவே அவர் செய்திருக்கிறார். உண்மையில், கடவுள் கொடுத்திருக்கும் இயல்புணர்ச்சியால் பல்வேறு கட்டிட அமைப்புகளுக்குத் தேவைப்படும் வித்தியாசமான வலிமையின் அளவை எண்ணிப் பார்த்து அதற்கேற்ப களியில் மரநாரிழைகளைக் குளவிகள் சீராக அமைக்கின்றன.
இயல்புணர்ச்சியின் ஞானத்தினால்தானே குளவிகள் அவற்றின் கூட்டில் எப்பொழுதும் 86 டிகிரி பாரென்ஹீட் (30°C) வெப்பத்தையே காத்து வருகின்றன. மாறாக வெப்பத்தைக் காத்துக்கொள்வதற்குக் கூட்டை மூடுவதற்காக பயன்படுத்தப்படும் அநேக அடுக்குகளும் அந்த அடுக்குகளிடையே வெற்று காற்று இடைவெளிகள் இருப்பதும் பெரும் உதவியாக இருக்கிறது. இது மனிதன் உண்டுபண்ணும் வெப்ப ஜன்னல்களுக்கு ஒப்பாக இருக்கிறது. “வெளிப்புறத்திலுள்ள இந்தச் சுவர்” ஒரு 16 அங்குல செங்கல் சுவரைப் போல உஷ்ணத்துக்கும் குளிருக்கும் எதிராக ஒரு திறம்பட்ட மின்தடையாக இருக்கக்கூடும்” என்பதாக அதிகார குழு ஒன்று குறிப்பிட்டது.
அப்படியிருந்தும் இது எப்பொழுதும் போதுமானதாக இருப்பதில்லை. உஷ்ணம் 86 டிகிரி பாரென்ஹீட்டுக்குக் கீழ் போய்விடுமானால், வேலைக்கார குளவிகளின் ஒரு விசேஷித்த தொகுதி இறக்கைகளைச் சேர்க்காமல், பறப்பதற்குப் பயன்படும் தசைநார்களை வேகமாக அசைக்கின்றன. இது மோட்டார் வண்டி இயந்திரத்தில் இயக்கம் ஊட்டப்படாமல் இயங்குவதற்கு ஒப்பாக இருக்கிறது. தசைநார்களின் இந்த இயக்கம் உஷ்ணத்தை உண்டுபண்ணுகிறது. கூடு அதிக உஷ்ணமாகிவிடுமானால் குளவிகள் செல்களை ஈரமாக்க தண்ணீரை உள்ளே கொண்டுவந்து, ஈரம் காய தங்கள் இறகுகளை வைத்து விசிறி கூட்டைக் குளிர்ச்சியாக்குகின்றன. ஒரு மோட்டார் வண்டியின் வெப்பாற்றி, இயந்திரத்தை குளிர்ச்சியாக்குவதற்கு ஒப்பாக இது இருக்கிறது.
இப்பொழுது, தயவுசெய்து, இந்த எல்லா ஞானமும் தற்செயலாக பரிணமித்தது என்பதாக எந்த ஆதாரமுமின்றி எங்களுக்குச் சொல்லாதீர்கள். ஆச்சரியம் தரும் வகையில், காகிதம் செய்யும் இவை ஞானமான அமைப்போடு சிருஷ்டிக்கப்பட்ட, கிட்டத்தட்ட இயந்திர மனிதனைப் போலவே இருக்கின்றன: “பூமியில் சிறியவைகளாயிருந்தும் மகா ஞானமுள்ளவைகள் நான்குண்டு.”—நீதிமொழிகள் 30:24.
காகிதம் செய்வது வரும்போது இவை எகிப்தியர்களுக்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகள் முற்பட்டவையாக இருக்கின்றன. (g86 5/22)