சிருஷ்டிப்பின் காணக்கூடாத “கடிகாரங்கள்”
“ஒரு கடிகாரத்திற்கு அடிமைப்பட்டிருப்பதை நான் வெறுக்கிறேன்!” சில சமயங்களில் நீங்கள் இப்படியாக உணருகிறீர்களா? அப்படியென்றால் உங்கள் மனதில் பின்வரும் எண்ணம் ஏற்பட்டிருக்கக்கூடும். ‘கடிகாரங்களின் இடையறாத டிக் டிக் ஒலியாலும் அலாரத்தாலும் தொல்லைப்படுத்தப்படாதபடிக்கு அவற்றை ஒழித்துவிட்டு வாழ்வது எவ்வளவு நன்றாக இருக்கும்!’
என்றபோதிலும், இந்தக் கோளில் நீங்கள் எங்கு சென்றாலும், தப்பித்துச்செல்ல முடியாத சில கடிகாரங்கள் இருக்கின்றன. நீங்கள் தாயின் கருவில் ஒரு சிறிய உயிராக உருவான சமயத்திலிருந்து அவை ஓலிக்க ஆரம்பித்திருக்கின்றன. உங்களுடைய கடைசி மூச்சு பிரியும் போதுதான் அவை தங்கள் துடிப்பை நிறுத்துகின்றன.
விஞ்ஞானிகள் இவற்றை நமது உயிரியல் கடிகாரங்கள் என்று அழைக்கின்றனர். நம்முடைய இந்தக் கடிகாரங்களின் அட்டவணையைப் பின்பற்றாமலிருப்பது நமக்குப் பிரச்னையைக் கொண்டு வரும்.
உயிரியல் கடிகாரங்கள்
உடல் சம்பந்தப்பட்ட சில இயக்கங்களைக் கட்டுப்படுத்தும் கடிகாரங்களைச் சிருஷ்டிகர் நமக்குள் அமைத்திருக்கிறார். இரவுநேரம் வந்தால் உங்களுக்குத் தூக்கம் வருகிறதா? இதற்கு ஒரு காரணம், ஒரு குறிப்பிட்ட முறைப்படி உங்கள் உடலின் உஷ்ண நிலை ஏறுவதும் இறங்குவதுமாக இருக்கிறது. இரவு வேளைகளில் உங்கள் உடலின் சூடு குறைய ஆரம்பிக்கிறது. ஆனால் காலை நெருங்குகையில் அது மறுபடியுமாக ஏறுகிறது, நீங்கள் விழித்துக் கொள்கிறீர்கள். சாப்பாட்டு வேளை வரும்போது பசி எடுக்கிறதா? உங்கள் நாடித் துடிப்பு, இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவுகள் ஒரு குறிப்பிட்ட உயிரியல் நேர அளவு முறைப்படி இயக்கப்படுகிறது.
உண்மை என்னவெனில், காணக்கூடாத கடிகாரங்கள் நம்முடைய உடலின் நூற்றுக்கணக்கான வித்தியாசமான சூழற்சி முறைகளைக் கட்டுப்படுத்துகின்றன என்று மருத்துவ விஞ்ஞானம் கண்டுபிடித்துள்ளது. அக்கறைக்குரிய அம்சமாவது, இந்தக் கடிகாரங்களில் பல மற்றொரு உயர்ந்த வகை காலக் கணிப்பு முறையுடன்—இந்தப் பூமிக்கோளத்தின் சுற்றுமுறையுடன்—இணைந்து செயல்படுகின்றன: நமது கோள் அதன் அச்சில் சுற்றுகையில், அதன் மீதுள்ள ஒவ்வொரு உயிருள்ள காரியத்தையும், வெப்பம் மற்றும் வெளிச்சத்தின் மாற்றமாகிய ஒரு ஒழுங்கான மாற்ற முறைக்குக் கட்டுப்படுத்துகிறது. எனவே ஒரு எழுத்தாளர் பின்வருமாறு குறிப்பிட்டார்: “பெரும்பான்மையான உயிர்பொருட்களின் செயல் மற்றும் நடத்தை முறை, ஒரு 24 மணிநேர அட்டவணையைப் பின்பற்றுகிறது என்பதைக் காண்பது . . . ஆச்சரியத்திற்குரியதன்று.”
என்றபோதிலும் ஆராய்ச்சியாளர்கள் வெப்பம், வெளிச்சம், உணவு மற்றும் ஒலி ஆகியவை ஒரே நிலையில் அமைக்கப்பெற்ற ஆய்வுக்கூடங்களில் உயிர்வகைகளை வைத்து பரிசோதனை செய்து பார்ப்பதன் மூலம் உள்ளமைந்த இந்தக் கடிகாரங்களை முட்டாளாக்க முயற்சித்திருக்கின்றனர். அப்படிச் செய்தும் அந்த 24 மணிநேர இயங்குமுறை தொடர்ந்து இயங்கிக்கொண்டிருந்தது! எனவே சில வெளிப்புற நிலைமையின் செல்வாக்குகள் இவற்றை ஓரளவுக்குப் பாதிக்கக்கூடுமென்றாலும் இந்த உயிரியில் கடிகாரங்கள் உட்புறக் கடிகாரங்களாக இருக்கின்றன என்பதைத் தெளிவுபடுத்துகின்றன.
கடிகாரங்களைப் பாதித்தல்
இந்தச் சமயத்தில்தானே, உங்கள் உடலியல் கடிகாரங்கள் அநேகமாக நீங்கள் வாழ்ந்துவரும் கால மண்டலத்திற்கு ஏற்ப மாற்றி அமைக்கப்பட்டதாயிருக்கின்றன. என்றபோதிலும் கலிபோர்னியாவில் (அ.ஐ.மா.) பிற்பகலாக இருக்க ஐரோப்பாவில் இரவு நேரமாகும். எனவே இந்த இரண்டு முனைக்கும் இடையே ஒரு ஜெட் விமானத்தில் பயணம் செய்தபின்பு உங்களுக்குத் தலைவலியும், சோம்பலும் தூக்கப் பிரச்னையும் இருக்கக்கூடும்—இந்த நிலை பொதுவாக ஜெட் பயணத்தின் செயல் பாதிப்புகள் என்று அறியப்படுகிறது.
ஏற்பட்டது என்ன? உங்களுடைய உடலியல் கடிகாரங்கள் குழம்பிவிட்டன. அது உங்களுடைய வீட்டு அட்டவணைக்குத் தன்னை அமைத்திடுவதற்குக் கடினமாக முயற்சிக்கிறது. (ஷிஃப்ட் வேலை செய்பவர்கள் இப்படிப்பட்ட சரீரத்திற்கு ஒவ்வாத அறிகுறிகளை அனுபவிக்கின்றனர்.) வியாபாரத் திட்டங்கள், மாநாடுகள் அல்லது விடுமுறைப் பயணத் திட்டங்களுங்கூட தலைவலி, தூக்கமின்மை, எரிச்சல், ஜீரணக் கோளாறுகள் மற்றும் உடல் சோர்வு ஆகியவை ஜெட் பயணத்தின் செயல் பாதிப்புகளால் பாதிக்கப்படக்கூடும்.
அக்கறைக்குரிய அம்சம் என்னவெனில், குறைந்த வேகமுடைய போக்குவரத்து சாதனங்கள் இருந்த காலத்தில் இந்தப் பிரச்னைகள் ஏற்படவில்லை. பயணி சேரவேண்டிய இடத்தை அடைவதற்கு முன்பு உங்கள் உடலியல் கடிகாரங்கள் புதிய இடத்தின் கால அமைப்புக்கு ஏற்ப தங்களை மாற்றியமைத்துக் கொள்கின்றன. ஆனால் ஜெட் விமான பயணத்திலோ ஒருவர் ஒருசில மணிநேரங்களில் நான்கு அல்லது ஐந்து கால மண்டலங்களைக் கடப்பவராக இருக்கிறார். இது உங்களுடைய சாப்பாட்டு மற்றும் தூக்க அட்டவணையின் ஒழுங்கை தூக்கி எறிந்துவிடும்! இது மிக முக்கியமாக விமான தொழிலாளருக்குப் பெரும் கஷ்டத்தை ஏற்படுத்துகிறது. சர்வதேச விமானத்துறை விமான ஓட்டி ஒருவர் விழித்தெழு! நிருபரிடம் பின்வருமாறு கூறினார்:
“வித்தியாசமான கால மண்டலங்களைத் திரும்பிவரும் 12 மணிநேர கால அட்டவணைப்படி கடப்பதில் நான் எந்தப் பிரச்னையையும் காணவில்லை, ஏனென்றால் அதே 24 மணிநேரத்தில் நான் வீட்டிற்குத் திரும்பிவிடுவேன். என்றபோதிலும் வான்கூவரிலிருந்து [கனடா] ஆம்ஸ்டர்டாம் அல்லது ரோம் வரையான ஐந்துநாள் இடைநிறுத்த ஓட்டத்தில் என் பிரச்னைகள் ஆரம்பமாயின. என்னுடைய உடலமைப்பு முறை முழுவதுமே பாதிக்கப்பட்டிருப்பதாகத் தோன்றியது. இந்தப் பிரச்னையை மேற்கொள்வதற்கு நான் சரீர களைப்படைந்து அதனால் தூக்கம் வரும் வரை நடப்பது வழக்கம். ஐந்து நாட்களுக்குப் பின்பு என் உடலமைப்பு ஐரோப்பிய நேரத்திற்கு தன்னை அமைத்துக்கொள்ளும், பின்பு மீண்டும் வான்கூவர் நேரத்திற்குத் தன்னை அமைத்துக் கொள்வதற்கு மீண்டும் அதே முறை பின்பற்றப்பட வேண்டியதாயிருக்கும். தூக்க மாத்திரைகள் அதற்கு விடை அல்ல. அது உண்மையிலேயே கஷ்டமாயிருந்தது.”
அனுபவங்கள் காண்பிக்கிறபடி, மேற்கு-கிழக்கு பயணிகள்தான் இந்த மாற்றத்தை உட்படுத்தும் பிரச்னை அதிக கடினமாக இருப்பதாகக் காண்கின்றனர். கிழக்கு-மேற்கு பயணிகள் அவ்வளவு சிரமப்படுவதில்லை. ஏனென்றால், பகல் சற்று நீளமாக இருப்பதால் சரீரம் அதற்கு மிக எளிதாகத் தன்னை அமைத்துக்கொள்கிறது. வான்கூவர்-டோக்கியோ பாதையில் விமானம் ஓட்டும் ஒரு விமானி, எந்தப் பட்டணத்தில் இருந்தாலும் டோக்கியோ நேரத்தையே அவர் பின்பற்றுபவராக இருந்தார். இந்த உடலியல் மாற்றமுறைகள் வடக்கு-தெற்கு பதையில் பயணம் செய்கிறவர்களை அவ்வளவாய்ப் பாதிப்பதில்லை, ஏனென்றால், அந்தப் பாதை அதிகபட்சம் இரண்டு கால மண்டலங்களுக்குள் இருக்கிறது.
மற்ற உயிர் வகைகளில் இந்தக் கடிகாரங்கள்
உள்ளமைக்கப்பட்ட கடிகாரங்களைக் கொண்டிருப்பது மனிதன் மட்டுமல்ல என்பது உண்மைதான். கலிபோர்னியாவிலுள்ள (அ.ஐ.மா.) காப்பிஸ்ட்ரானோவுக்குப் பறவைகள் குறித்த நேரத்திற்குத் திரும்புகின்றன. எந்தக் கடலோரப் பகுதிகளாக இருந்தாலுஞ்சரி, உயர்ந்த அலைகளுக்குத் திறந்து தாழ்ந்த அலைகளுக்கு மூடும் ஈரிதழ்ச்சிப்பிகள் இருக்கின்றன. செடிகளில் பல பகலில் விரிந்து இரவில் மூடிக்கொள்கின்றன.
ஏன், தெற்கு கலிபோர்னியா கடற்கரைகளில் ‘காதல் நடனத்திற்காகத்’ கிரனியன் என்ற மீன் வகை காட்சியளிக்கும் காலம் அவ்வளவு சரியாக இருப்பதால், அவை எப்பொழுது வரும் என்ற சரியான நேரத்தைக்கூட செய்தித்தாள்கள் அறிவிக்கின்றன. ஒருசில மிக நுண்ணிய கடற்பாசிகள் 24 மணிநேர மாற்ற முறையைக் கொண்டிருக்கின்றன; இவை இரவில் 12 மணிநேரத்திற்கு ஒளி வீசுகின்றன.
உயிர் வகைகளின் வியக்கத்தகுந்த இரகசியங்களை நமக்கு வெளிப்படுத்த முயற்சிக்கும் மனிதர்கள் சிருஷ்டிப்பின் பேரில் நம்முடைய போற்றுதலைக் கூட்டியிருக்கின்றனர். என்றபோதிலும் இந்த உயிரியல் கடிகாரங்களை மனிதர் 1940 வரை மதித்துணர ஆரம்பிக்கவில்லை. தாங்கள் கண்டுபிடித்த காரியங்களின் பேரில் கிளர்ச்சியுள்ள விஞ்ஞானிகளில் சிலர் இந்த அற்புதமான காரியங்களைத் திட்டமிட்ட ஒரு திட்ட அமைப்பாளர் இருக்கிறார் என்பதை மறந்துவிட்டனர். இந்த உயிருள்ள கடிகாரங்களின் செயல்முறையை முழுவதுமாக அறிந்திருப்பவர் அவரே. ஆம், அவர் தானே அவற்றை இயங்க வைத்தார்! (g86 6/8)
[பக்கம் 22-ன் பெட்டி]
ஜெட் பயணத்தின் செயல் பாதிப்புகளை மேற்கொள்ளுதல்
செய்ய வேண்டியவை
◻ மேற்காகப் பயணம் செய்தல்: நீங்கள் சாதாரணமாகப் படுக்கைக்குச் செல்லும் சமயத்தில் போய் சேரும்படியாக பகல் கழியும்போது பயணம் செய்ய முயற்சியுங்கள்.
◻ கிழக்காகப் பயணம் செய்தல்: நீங்கள் புறப்படுவதற்கு முன் இரவு சீக்கிரமாக படுக்கைக்குப் போங்கள். மாலை நேரமாகப் போய் சேரும்படியாக பயணம் செய்யுங்கள். இரவு பயணமாக இருக்குமானால், மறுநாள் முழுவதுமாக விழித்திருங்கள், அன்று மாலை சீக்கிரமாகப் படுக்கைக்குப் போங்கள்.
◻ ஆறு கால மண்டலங்களைக் கடந்து செல்ல வேண்டியதாக இருந்தால், நடைமுறைக்கு ஒத்திருந்தால் இடையில் பயணத்தை நிறுத்தி பின்பு தொடருவதற்குத் திட்டமிடுங்கள்.
◻ ஊர் சேர்ந்த பின்பு சாதாரண உடற் பயிற்சிகளையும், நடப்பதையும், ஓடுவதையும், நீச்சலையும் மேற்கொள்ளுங்கள், இதைத் தொடர்ந்து சாதாரண மாலைப் போஜனத்தைச் சாப்பிடுங்கள்.
◻ மருந்து எடுப்பவர்களாயிருந்தால்: நீங்கள் செல்லும் புதிய கால மண்டலத்தில் உங்கள் மருந்தை எப்பொழுது எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதை உங்கள் மருத்துவரிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள். குறிப்பாக இன்சுலின் மருந்தை எடுத்துக்கொள்ளும் நீரிழிவு நோயாளிகள் அதிக கவனமாயிருக்க வேண்டும்.
◻ பயணம் செய்வதற்கு முன்பும் பின்பும் ஒரு சில நாட்களுக்குக் குறைவாக சாப்பிடுங்கள்.
செய்யத் தகாதவை
◻ பயணம் செய்வதற்கு முன்போ அல்லது அந்தச் சமயத்திலோ, அல்லது அதற்குப் பின்போ மதுபானங்கள் அல்லது தூக்க மாத்திரைகளைச் சாப்பிடாதீர்கள்.
◻ பயணம் செய்கையில் அல்லது மற்ற எந்தச் சமயத்திலும் புகைபிடிக்காதீர்கள். அதிக உயரத்தில் பறக்கும்போது உடலுக்குத் தேவையான பிராணவாயுவை அது குறைத்துவிடும்.
◻ கூடியமட்டும், நீங்கள் சேரும் நாளில் வியாபாரம் அல்லது தொழில் பேச்சுவார்த்தைகளைக் கொண்டிருக்க வேண்டாம்.
[பக்கம் 23-ன் பெட்டி/படங்கள்]
விலங்கின கடிகாரங்கள்
◻ தேனீக்கள்: “தங்களுக்கு வேண்டிய தேனை அறுவடை செய்வதற்குச் சரியான இடத்தில் சரியான நேரத்திற்கு இருக்கத் தங்கள் சொந்த உடலியல் கடிகாரங்களைப் பயிற்றுவித்துக் கொள்கின்றன.”
◻ டினமெள: பனாமாவின் “மும் மணிப் பறவை” இரவும் பகலுமாக, மூன்று மணி நேரத்திற்கு ஒரு முறை பாடும். அதன் பாட்டில் உங்கள் கடிகாரத்தைச் சரியாக அமைக்கலாம்.
◻ கனடா மற்றும் ஐக்கிய மாகாணங்களின் ஃப்லிக்கர் மரக்கொத்திப் பறவை: தனது செயல்களை ஒவ்வொரு நாளும் பிற்பகல் சரியாக 3.35-க்கு முடித்துக் கொள்வதாகக் கவனிக்கப்பட்டிருக்கிறது.
◻ வஞ்சிரமீன்: கடலிலிருந்து, தாங்கள் பிறந்த இடமாகிய ஆற்றுக்கு எப்பொழுது திரும்பிச் செல்ல வேண்டும் என்ற நேரத்தை அவற்றின் உடலியல் கடிகாரங்கள் சுட்டிக் காட்டுகின்றன.
◻ பீஜித் தீவுகளின் பாலோலோ புழுக்கள்: அக்டோபர், நவம்பர் மாதங்களில் சந்திரன் முக்கால் அளவில் இருக்கும் இரவு கலையும் சமயத்தில் மேலே வந்து இன உற்பத்திச் செயல்களில் ஈடுபடுகின்றன.
◻ பிட்லர் நண்டுகள்: சரியாக 24 மணிநேர அட்டவணையைக் கொண்டிருக்கிறது. பகல் பொழுதில் வன்மையான வண்ணத்தையும் இரவு பொழுதில் மென்மையான வண்ணமாக மாறுதலும் கொண்டிருக்கிறது. வண்ணம் மாறுவது சூரியனையும் உணவருந்தும் பழக்கம் சந்திரனையும் சார்ந்திருக்கிறது.