ஏன் விவாகம் செய்துகொள்ள வேண்டும்?
விவாகமின்றி சேர்ந்து வாழ்வது இன்று அநேக இடங்களில் முழுவதுமாக ஏற்கப்பட்டிருக்கிறது. ஆனால் இது விவாகத்தில் கிடைக்கும் மகிழ்ச்சியைவிட அதிக மகிழ்ச்சியைத் தருவதில் விளைவடைந்திருக்கிறதா? அந்தக் காரியத்தைக் குறித்து சுவீடனிலுள்ள “விழித்தெழு!” நிருபர் பின்வரும் மூன்று கட்டுரைகளிலும் கலந்தாலோசிக்கிறார்.
“ஜானும் அன்னாளும் ஒரு கிளப்பில் சந்தித்தார்கள். கண்ட மாத்திரத்தில் அவர்கள் ஒருவரையொருவர் விரும்பினார்கள். அன்னாள் அன்மையில்தான் தனது பெற்றோரைவிட்டு தனியாக வாழ பிரிந்து சென்றாள். ஜான் இன்னொரு இளம் மனிதனோடு இருந்து வந்தான். ஜானும் அன்னாளும் சந்தித்தப் பின்பு, ஒருநாள் இரவு அன்னாள் ஜானை அழைத்துக்கொண்டு தன் வீட்டிற்கு வந்தாள். அவன் அந்த இரவு அங்கேயே தங்கினான். அடுத்த நாள் அவன் தன் கிட்டாரையும் பல்துலக்கும் பொருட்களையும் கொண்டுவந்து அந்த இரவும் அங்கேயே தங்கிவிட்டான். பின்பு கொஞ்சம் கொஞ்சமாக தன்னுடைய உடைமைகளை அன்னாள் வீட்டிற்கு மாற்றினான், அவர்கள் ஒன்றாக சேர்ந்து வாழ ஆரம்பித்தார்கள். ஜானும் அன்னாளும் விவாகம் செய்துகொள்ள வேண்டிய அவசியத்தைக் காணவில்லை.
ஜான் மற்றும் அன்னாளைப் போல பல இலட்சக்கணக்கான தம்பதிகள் விவாகமாகாமலேயே நன்றாகச் சேர்ந்து வாழ்கிறார்கள். அவர்கள் பின்வருமாறு விவாதிக்கிறார்கள்: ஏன் விவாகம் செய்துகொள்ள வேண்டும்? சட்டப்பூர்வமாகக் கட்டுப்படுத்தும் ஒரு காதிகம்—ஒரு விவாகச் சான்றிதழ்—இல்லாமலேயே நாங்கள் நல்ல விதத்தில் ஒன்றாக சேர்ந்து வாழமுடியும்.
உண்மை என்னவெனில் விவாகமின்றி ஒன்றாக சேர்ந்து வாழ்வது முழுமையாக ஏற்கப்பட்ட சாதாரண காரியமாக இருந்து வருகிறது. உதாரணமாக சுவீடனில் கடந்த இரண்டு பத்தாண்டுகளில் விவாகங்களின் எண்ணிக்கை 40 சதவிகிதமாகக் குறைந்துவிட்டது. இருபது ஆண்டுகளுக்கு முன்பு, அந்த நாட்டில் பிறந்த எட்டு குழந்தைகளில் ஒன்று விவாகமாகாத தாய்மார்களுக்குப் பிறந்தது. இப்பொழுது அந்த எண்ணிக்கை மூன்றில் ஒன்றாகவும் இரண்டில் ஒன்றாகவும் இருக்கிறது. சுவீடனில் உப்சாலா பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி நிபுனர் J. ட்ராஸ்ட் பின்வருமாறு குறிப்பிடுகிறார்: “எங்களுக்குத் தெரிந்த வரையில் தொழில்மயமாக்கப்பட்ட ஒரு சமுதாயத்தில் விவாகத்திற்குப் புறம்பே பிறந்த பிள்ளைகளின் உச்ச எண்ணிக்கை இதுவே.”
டென்மார்க்கில் விவாகமின்றி சேர்ந்து வாழ்வது இளம் கல்லூரித் தம்பதிகளுக்கு ஒரு குடும்பத் தராதரமாக இருக்கிறது என்று இன்டர்நேஷனல் ஹெரல்டு ட்ரிபியூன் குறிப்பிடுகிறது. இப்படியாக விவாகமாகாமல் ஒன்று சேர்ந்து வாழும் தம்பதிகளுக்குப் பிறக்கும் குழந்தைகளின் விகிதம் மூன்றில் ஒன்றாக இருக்கிறது. “நாங்கள் அறிந்த எவருமே விவாகமானவர்கள் அல்ல,” என்றான் டென்மார்க்கைச் சேர்ந்த 31 வயது மனிதன். “எல்லோருமே பதிவு இல்லாத ஒரு விவாகத்திற்குள் பிரவேசித்திருக்கின்றனர்.”
இப்படிப்பட்ட பதிவு அல்லது சான்றிதழ் இல்லாத விவாகங்கள் அதிகமாகிக்கொண்டிருக்கின்றன. உதாரணமாக, ஐக்கிய மாகாணங்களின் கணக்கெடுப்புப் பிரிவு வெளியிட்ட புள்ளிவிவரங்கள்படி விவாகமாகாமல் ஒன்றுசேர்ந்து வாழும் தம்பதிகளின் எண்ணிக்கை ஏறக்குறைய 20 இலட்சமாகும். இது 1970-லிருந்த எண்ணிக்கையைவிட மூன்று மடங்கு அதிகம்.
ஒரு ஆணும் பெண்ணும் விவாகமின்றி சேர்ந்து வாழ்வதைத் தெரிந்துகொள்வதற்குக் காரணம் என்ன? பதிவு அல்லது சான்றிதழ் இல்லாத ஒரு விவாகம் சட்டப்பூர்வமான விவாகத்தைப் போன்றதா அல்லது அதைவிட மேன்மையானதா? (g86 7/8)