பிரிவுற்ற ஓர் நாடு—இதற்குப் பரிகாரம் என்ன?
1955-ல் அப்பொழுது போர்த்துகீஸில் குடியேற்ற நாடாக இருந்த அங்கோலாவுக்கு வெறுமென வந்த ஒருவர், வெள்ளையராக, தான் திடீரென்று “ஆட்சி வகுப்பினர்” ஆகிவிட்டதை உணர்ந்து ஆச்சரியப்பட்டார்! கடைகளிலும், அலுவலகங்களிலும், மற்ற பொதுவிடங்களிலும், காத்துக்கொண்டிருந்தக் கறுப்பர்களுக்கு முந்தி முன்மதிப்பு வாய்ந்த சலுகை அவருக்கு அளிக்கப்பட்டது.
இது இருபது ஆண்டுகளுக்கு முன்புதானே பல ஆப்பிரிக்க நாடுகளில் சாதாரண அனுபவமாயிருந்தது.
பின்பு 1960-ல், வெள்ளையர் சிறுபான்மையோராயிருந்த, ஒரு நாட்டைப் பின்தொடர்ந்து மற்றொன்றாகக் கறுப்பர்கள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றினர். எனினும், தென் ஆப்பிரிக்காவில், இலட்சக்கணக்கான வெள்ளையர் இருந்தனர், அரசாங்க ஆட்சி அதிகாரத்தின்பேரிலும் பொருளாதாரத்தின்பேரிலும் உறுதியான பிடியைக் கொண்டிருந்தனர், இவர்கள், தாங்கள் ஆளுவதே கடவுளுடைய சித்தமென்று பல பத்தாண்டுகள் நம்பியிருந்தனர். இந்தச் சூழ்நிலை எவ்வாறு எழும்பினது?
1652-ல் முதல் குடியேற்றத்தார், வெள்ளையரான டச்சுக்காரர் தென் ஆப்பிரிக்காவின் முனையில், வந்திறங்கினர். மேய்ப்பரான தென் ஆப்பிரிக்க நாடோடி இனத்தவரையும் குட்டையான வேட்டுவ இனத்தவரையும், அவர்கள் தோல் உடைகளைத் தரித்திருப்பதையும் கண்டபோது, தாங்கள் நாகரிகத்தில் முன்னேற்றமடைந்திருந்ததனால், வெள்ளையர் தங்களை மேம்பட்டவரென உணர்ந்தனர். சீக்கிரத்தில் சச்சரவு ஏற்பட்டது.
வேட்டையாடும் தங்கள் நிலப்பகுதிகளில் பயிரிடும் வெள்ளையர் வந்து குடியேறினபோது, வேட்டுவ இனத்தவர் கோபங்கொண்டு, அதன் பிரதிபலிப்பாக ஆடுமாடுகளைத் திருடத் தொடங்கினர். இந்தக் குட்டையான மனிதர் மிருகங்களைப் போல் வேட்டையாடிக் கொல்லப்பட்டனர். இது 19-ம் நூற்றாண்டில் வெட்கத்துக்கேதுவாக, அவர்கள் ஏறக்குறைய அடியோடு அழிக்கப்பட்டுப் போவதற்கு வழிநடத்தினது. நாடோடி மேய்ப்பர் இனத்தவர் வென்று கீழ்ப்படுத்தப்பட்டார்கள், இவர்களுடைய எண்ணிக்கை வைசூரியினால் தீவிரிமாய்க் குறைக்கப்பட்டது, மீந்திருந்த ஒருசிலர் மற்ற மரபினரோடு கலக்கப்பட்டுப் போனார்கள்.
18-ம் நூற்றாண்டில் வெள்ளையரான குடியானவர்கள் (போயர்ஸ்) தற்செயலாய் எக்ஸோஸா ஜனத்தைச் சந்தித்தனர்—இவர்கள் வடக்கிலிருந்து வந்து குடியேறின கறுப்பரில் ஒரு பகுதி. மறுபடியும் சண்டை உண்டானது. கடுமையான போர்கள் நடந்தன. இதற்கிடையில், பிரிட்டிஷ் மக்கள் தென் ஆப்பிரிக்காவின் நிலை முனையைக் கைப்பற்றிக் கொண்டார்கள். ஆனால் போயர்களில் பலர் பிரிட்டிஷ் ஆட்சியின்கீழ் எரிச்சலடைந்து 1830-ல் குடிபெயர்ந்து வடக்கே பயணப்பட்டுச் சென்றார்கள். பல இன்னல்களுக்கும் போராட்டங்களுக்கும் பின், ஆரஞ்ச் மற்றும் வால் நதிகளுக்கப்பால் புதிய தனியரசு நாட்டை அவர்கள் உண்டுபண்ணினார்கள். பிரிட்டிஷும் போயரும், இருவருமே இனவேறுபாட்டை அனுசரித்தார்கள்.
போயர்கள், டச் ரிஃபார்ம்ட் சர்ச்சின் கால்வினிஸ்ட்டுகள். இவர்கள் அடிக்கடி பைபிளை வாசித்தார்கள். என்றபோதிலும், தாங்கள் கறுப்பர்களைப் பார்க்கிலும் மேம்பட்டவர்கள் என்று நம்பினர்—கறுப்பர்கள் கடவுளுடைய சாபத்தின்கீழ் இருந்தனரென்று பலர் நம்பினர்.
இன ஒதுக்கீட்டுக் கொள்கையைச் சர்ச் ஆதரிக்கிறது
19-ம் நூற்றாண்டின்போது மதமாறிய வெள்ளையரல்லாதவர்களுடைய எண்ணிக்கையின் பெருக்கம் வெள்ளையர் பலர் சங்கட உணர்ச்சியடைய செய்தது. இதன் விளைவாக, சர்ச் குருமார் சபை 1857-ல் சரித்திர முக்கியத்துவம் பெற்ற ஒரு தீர்மானத்தைச் செய்தது, அதாவது: “சிலரின் [வெள்ளையரின்] பலவீனத்தினிமித்தம் . . . புறமதத்தினருக்குள்ளிருந்து வந்த சபை [வெள்ளையரல்லாதவர்கள்] . . . அதன் கிறிஸ்தவ சிலாக்கியங்களைத், தனிக் கட்டடத்தில் அல்லது நிலையத்தில் அனுபவிக்கும்.” இவ்வாறு சர்ச் ஒதுக்கி வைத்தலை ஆதரித்தது.
பிரிவினை நடவடிக்கைத் தொடர்ந்தது. இன்று வெள்ளையருக்கும், கறுப்பருக்கும், வேறு நிறமுள்ளோருக்கும், இந்தியருக்கும் தனித்தனி டச் ரிஃபார்ம்ட் சர்ச்சுகள் இருக்கின்றன.
19-ம் நூற்றாண்டின் பிற்பகுதி மேலுமான பிரிவினைப் போக்கைக் கண்டது. அதற்குள் பல மத மிஷன்கள், முக்கியமாய் பிரிட்டிஷ் தோற்றத்தைக் கொண்டவையும் உறுதியாய் வெள்ளையர் கட்டுப்பாட்டில் இருந்தவையும், ஸ்தாபிக்கப்பட்டிருந்தன. நேட்டால் பல்கலைக் கழகத்தின் சமுதாய மனித இன ஆராய்ச்சி போராசிரியர் ஜேம்ஸ் கியிர்னன் சொன்னபடி, “வெள்ளையர் ஆதிக்கம் செலுத்தின இந்தச் சர்ச்சுகளில், ஆப்பிரிக்கப் பாதிரிமார் இந்த [ஆப்பிரிக்கப் பாதிரிமாரைத் தலைமைத் தாங்குவதிலிருந்து] புறந்தள்ளுதலைப் பாரபட்சமாய் நடத்துவதில் ஆதாரங்கொண்டிருக்கிறதென எடுத்து, தங்கள் சொந்த சர்ச்சுகளை ஏற்படுத்தி வைத்துக் கொள்வதன் மூலம் அதற்கு எதிராகப் பிரதிபலித்தார்கள்.” இத்தகைய முதல் சர்ச் ஜோஹன்னஸ்பர்க்கில் 1892-ல் அமைக்கப்பட்டது. இன்று, ஏறக்குறைய 4,000 மதத் தொகுதிகள் தென் ஆப்பிரிக்காவில் இருக்கின்றன, அவற்றில் பெரும்பான்மை கறுப்பர்களாலாகியவை.
“கிறிஸ்தவ” வெள்ளையராகிய, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதிகளும் போயர் தேசீயவாதிகளும் தனி முதன்மைக்காகப் போரிடுவதோடு 20-ம் நூற்றாண்டு தொடங்கினது. வெறும் எண்ணிக்கையின் மிகுதியினால், பிரிட்டன் போயர் குடியரசைக் கைப்பற்றியது, பின்னால் அவர்கள் ஒன்றாகத் தென் ஆப்பிரிக்கக் கூட்டரசை உண்டுபண்ணினர்.
ஆனால் இப்பொழுது ஆப்பிரிக்கானர் என்றழைக்கப்பட்ட போயர்கள், தேசீயக் கட்சியாக, 1948-ல் தேர்தலில் வெற்றிப்பெற்று, தங்கள் ஒதுக்கீட்டு (தனித்தனியாக விலிகியிருக்கும்) அரசாட்சிக் கலையின்பலத்தில் அதிகாரத்துக்கு வந்தபோது அரசியல் வெற்றியை அடைந்தார்கள். ஆப்பிரிக்கானர் தினசரி செய்தித்தாள், டை டிரான்ஸ்வாலரில் ஒரு குறிப்பு பின்வருமாறு சொன்னது: “கிறிஸ்தவ நியமங்களாகிய நியாயத்தின் பேரிலும் நேர்மையின்பேரிலும் ஆதாரங்கொண்ட . . . ஒதுக்கீட்டு அரசாட்சிக்கலையை நாங்கள் கொண்டிருக்கிறோம்.” இனங்களைத் தனியாக ஒதுக்கி வைப்பதைத் திடப்படுத்துவதற்கு வரிசையாகச் சட்டங்களும் கட்டளைகளும் பின்தொடர்ந்தன.
ஒதுங்கி வாழ்ந்து சமுதாயத் தொடர்பற்றிருந்ததன் விளைவாக, கறுப்பர் நகர வட்டாரங்களில் உண்டாகியிருந்த மிக ஏழ்மையான வாழ்க்கை நிலைமைகளை வெள்ளையர் பலர் அறியாதிருந்தனர், ஒதுக்கீட்டுக் கலை பிறர் தன்மதிப்புக்குச் செய்த ஊறுபாட்டையும் அவர்கள் முழுமையாய் உணரமுடியவில்லை. அநேகமாய் எல்லாக் கறுப்பரும் ஒதுக்கீட்டு அரசாட்சிக் கலையைக் கோபத்தோடு வெறுக்கின்றனர். இத்தகைய மனக்கசப்பு, எரிநெருப்பில் ஊற்றும் எண்ணெய்யைப் போல், கலகத்தை மேலும் தூண்டிவிடுவதற்குப் பயன்படுத்தப்பட்டது.
பரிகாரம் உண்டா?
ஒதுக்கீட்டுக் கொள்கையை ஒழிக்கும்படி தென் ஆப்பிரிக்காவுக்கு உள்ளேயும் புறம்பேயுமிருந்துவரும் வற்புறுத்தல் கடுமையாகிவிட்டிருக்கிறது. சமீபத்தில் அரசாங்கம் பரந்தவண்ணம் பலன்தரும் மாற்றங்களை உண்டுபண்ண தீர்மானித்தது. அது சில சீர்திருத்தங்களைச் செய்தது, ஒதுக்கீட்டுச் சட்டங்கள் சிலவற்றை ரத்துச் செய்தது. ஆனால் எல்லாருக்கும் திருப்தியளிக்கும் முறையில் தென் ஆப்பிரிக்காவின் பிரச்னைகளைத் தீர்ப்பது முடியாதென்பதுபோல் தோன்றுகிறது. கறுப்பரிலும் வெள்ளையரிலும் பலர் சமாதான மாற்றத்தை விரும்புகின்றனர், ஆனால் விட்டுக்கொடுக்க மனமில்லாத வெள்ளையர் சிலர் இதுவரை இருந்த நிலையையே தொடர்ந்து காத்துவரத் தீர்மானித்திருக்கின்றனர். இரு சார்பினரும் தீவிரவாதிகளுக்கும் மிதவாதிகளுக்கும் இடையில் அலைக்கழிக்கப்படுகிறார்கள். மேலும் கறுப்பர்கள் குலமரபு பற்றுறுதியாலும் வினைமையான முறையில் பிரிவுற்றிருக்கின்றனர்.
சர்ச்சுகள் என்ன பரிகாரங்களை அளிக்கின்றன? ஆவிக்குரியவையா? கடவுளுடைய ராஜ்யமா? இல்லை, அவர்கள் அரசியல் கலகத்துக்குள் புகுந்திருக்கின்றனர். சில பாதிரிமார் சட்ட மறுப்பு வரிகொடா இயக்கம் போன்றவற்றையுங்கூட ஆதரித்து வாதாடுகின்றனர். வன்முறைச் செயல்களில் பிரசித்திப்பெற்ற விடுதலை போராட்ட இயக்கங்களின் தலைவர்களோடு கலந்து பேசி முடிவு செய்கிறார்கள். இதன் விளைவாக, சர்ச்சுக்குச் செல்வோர் பலர், தாங்கள் ‘அரசியல் கலையைப் பற்றி மீறிய மிக அதிகமாயும் கடவுளைப் பற்றி குறைவாயும்’ கேட்பதாக முறையிடுகிறார்கள்.
இந்தக் குழப்பத்தோடுகூட சர்ச்சுகளிலும் கருத்து வேறுபாட்டுப் பிளவு ஏற்பட்டிருக்கிறது. டச் ரிஃபார்ம்ட் சர்ச்சில் பல்வேறு கிளைகளுக்குள், இந்த ஒதுக்கீட்டுக் கொள்கையைப் பற்றி மிகுந்தக் குற்றங்குறை கூறி வாதாடுதல் இப்பொழுது நடந்துகொண்டிருக்கிறது. கறுப்பரிலும் வெள்ளையரிலும் பல போதகர்கள் அதைக் கண்டனம் செய்துள்ளனர். இன வேறுபாடு காட்டுவது “பாவம்” எனவும் இதுமுதற்கொண்டு சர்ச் எல்லா ஜாதியாரான ஜனங்களுக்கும் திறக்கப்பட்டதாயிருக்க வேண்டும் என்றும் மேற்கு கேப் குரு மன்றம் கட்டளையிட்டது.
ஆகஸ்ட் 29, 1985-ல், மற்றொரு டச் ரிஃபார்ம்ட் சர்ச்சாகிய பிரஸ்பிட்டரி ஆப் ஸ்டெல்லன்போஸ்ச், இன வேறுபாடு காட்டுவது “தன் அயலானுக்கு அன்பு காட்டுவதற்கும் நீதிக்குமுரிய பைபிளின் நியமங்களுக்கு நேர்மாறாக இருக்கிறது” என்றும், “ஒதுக்கீட்டுக் கொள்கை” “மனிதரைக் கடும் துயர் நிலைக்குள்ளாகும்படி வழிநடத்தி”யிருக்கிறதென்றும் அதிகாரப்பூர்வமாய் ஒப்புக்கொண்டது. இனவேறுபாட்டுக் காரியங்களின் பேரில் கருத்து வேறுபாடு ஆங்கில சர்ச்சுகள் சிலவற்றையும் தொல்லைப்படுத்துகிறது. ஒதுக்கீட்டுக் கொள்கை “கடவுளுடைய சித்தம்” என்ற நம்பிக்கையுடன் வளர்ந்த உண்மை மனமுள்ள ஆட்களுக்கு இது மனத் தடுமாற்றத்தையும் குழப்பத்தையும் உண்டுபண்ணுகிறது.
ஒரே பரிகாரம்
உலகத்தின் கூர்ந்த கவனம் நெடுங்காலமாய்த் தென் ஆப்பிரிக்காவின்மேல் ஊன்றவைக்கப்பட்டிருக்கிறது குற்றங்குறையைச் சுட்டிக் காட்டுவதற்குரிய ஒன்றாய் அது ஆகிவிட்டிருக்கிறது. அவ்வாறு சுட்டிக்காட்டும் நாடுகள் பல, தாங்கள் தாமேயும் அதைப்போல் அல்லது அதைவிட மோசமாயிருக்கின்றன. இது ஆழ்ந்து கவனிக்கத்தக்கப் பின்வரும் உண்மையைக் குறிப்பிட்டுக் காட்டுகிறது: தென் ஆப்பிரிக்காவின் வேதனைப்படுத்தும் பிரச்னைகளுக்கு மட்டுமல்லாமல் உலகத்தின் பிரச்னைகளுக்கும், உண்மையான மற்றும் நிலையான பரிகாரம் மனித வல்லமைக்கும் ஞானத்துக்கும் மிக அப்பாற்பட்டது.
உலக சரித்திரம், பிழைகள், அநீதி, சண்டை, இரத்தஞ் சிந்துதல் ஆகியவற்றின் ஒரே நீண்ட பதிவாயிருக்கிறது. மேலும் இந்த 20ம் நூற்றாண்டில், உலகம் ஒரு நெருக்கடியிலிருந்து மற்றொன்றுக்குத் தடுமாறிக்கொண்டும், அதே சமயத்தில் அணுசக்திப் போரின் பயத்தால் விடாமல் அலைக்கழிக்கப்பட்டுமிருக்கையில் நிலைமை மேலும் மோசமாகிறது.
தேசங்களை அடக்கியாளுவதற்கு உலக முழுவதிலும் அதிகாரம் செலுத்தும் ஓர் உயர்ந்த அதிகாரத்துவத்தின் தேவையை இந்த நூற்றாண்டின் முற்பகுதியில் மனிதவர்க்கம் உணர்ந்தது. எனினும் சர்வ தேச சங்கத்தையும் ஐக்கிய நாட்டுச் சங்கத்தையுங் கொண்டு செய்த முயற்சிகள் தோல்வியடைந்தன. இந்தச் சீர்குலைவை அகற்றி சமாதானத்தையும் ஒற்றுமையையும் நிறுவக்கூடியதும் நிறுவப்போவதுமான ஈடற்ற உயர் ஆட்சி நிறைவேற்றக் குழு ஒன்று இருக்கிறதா? ஆம்—அதுவே கடவுளுடைய ராஜ்யம்.
“அது [மனிதன் உண்டாக்கின] அந்த ராஜ்யங்களையெல்லாம் நொறுக்கி அழித்துவிடும்,” வன்முறைச் செயல்களையும், அநீதியையும், எல்லா வகையான தீங்கையும் இந்தப் பூமியிலிருந்து அகற்றிச் சுத்திகரித்து, கிறிஸ்துவின் ஆயிர ஆண்டு சமாதான ஆட்சியைக் கொண்டுவரும். இனம், நிறம், அல்லது வளர்ப்பு சூழ்நிலை எதையும் பொருட்படுத்தாமல், அது எல்லா ஜனங்களையும் நியாயமாயும் நேர்மையாயும் நடத்தும்.—தானியேல் 2:44; சங்கீதம் 37:10; அப்போஸ்தலர் 10:34, 35.
தென் ஆப்பிரிக்காவில் ஆயிரக்கணக்கானோர் உட்பட, பூமி முழுவதிலும் இலட்சக்கணக்கானோர், கடவுளுடைய அரசாங்கமாகிய இந்த ராஜ்யத்தில் தங்கள் நம்பிக்கையை வைத்திருக்கின்றனர். அது சீக்கிரத்தில் முழு பூமியின் ஆட்சி அதிகாரத்தை ஏற்குமென நிறைவேற்றப்பட்ட பைபிள் தீர்க்கதரிசனத்தின் ஆதாரத்தின்பேரில் அவர்கள் நம்புகின்றனர். எல்லா ஜாதியாரான ஜனங்களையும் அது ஒன்றுமைப்படுத்தும்.—லூக்கா 21:28-31.
டிசம்பர் 1985-ல் தென் ஆப்பிரிக்காவில் நடத்தப்பட்ட இரண்டு விசேஷித்த மாநாடுகளில் இதைப்பற்றிய இருதயத்தைக் கனிவிக்கும் உண்மை, நடைமுறையில் மெய்ப்பித்துக் காட்டப்பட்டது. அடுத்தக் கட்டுரையில் அவற்றைப் பற்றி வாசியுங்கள். (g86 7/22)
[பக்கம் 16-ன் சிறு குறிப்பு]
சிலரின் பலவீனத்தினிமித்தம் இன ஒதுக்கீட்டுக் கொள்கையைச் சர்ச் ஆதரித்தது
[பக்கம் 17-ன் சிறு குறிப்பு]
ஒதுக்கீட்டுக் கொள்கை கடவுளுடைய சித்தமென தோன்ற செய்யப்பட்டது
[பக்கம் 17-ன் சிறு குறிப்பு]
டச் ரிஃபார்ம்ட் சர்ச்சின் போதகர்கள் பலர் இந்த ஒதுக்கீட்டுக் கொள்கையைக் கண்டனம் செய்துள்ளனர்