நாட்டுக் குழப்ப நிலைக்கு இடையில் சமாதானமும், ஒற்றுமையும், அன்பும்
ஒதுக்கீட்டுக் கொள்கையின் நாடாகிய தென் ஆப்பிரிக்காவில் கறுப்பர், வெள்ளையர், இந்தியர், வேறு நிறத்தார், மற்ற நாடுகளிலிருந்து வந்தவர்கள் ஆகிய எல்லாரும் ஒன்றாகக் கிறிஸ்தவக் கூட்டுறவை அனுபவித்து மகிழ்கின்றனர்! ஒருசில மணிநேரங்களுக்கா? இல்லை, நான்கு நாட்களுக்கு. எத்தனைபேர்—சில நூற்றுக்கணக்கானோரா? இல்லை, 77,000-த்துக்கும் மேற்பட்ட ஆட்கள்! எங்கே? ஜோஹன்னஸ்பர்க்கிலும் டர்பனிலும், டிசம்பர் 26-29, 1985-ல் நடத்தப்பட்ட இரண்டு விசேஷித்த மாநாடுகளில். இது உள்ளக் கிளர்ச்சியூட்டின, ஒருபோதும் மறக்கமுடியாத அனுபவம்.
இது, “உத்தமத்தைக் காப்பவர்கள்” என்ற பொருளைக் கொண்டு, உலகமெங்கும் ஒன்றன்பின் ஒன்றாகத் தொடர்ந்து நடத்தப்பட்ட, யெகோவாவின் சாட்சிகளின் விசேஷித்த மாநாடுகளின் பாகமாகும். தென் ஆப்பிரிக்காவின் எல்லாப் பகுதிகளிலிருந்தும், லெஸோத்தா, ஸ்வாஸிலாண்ட், நமிபியா, போட்ஸ்வானா, ஸாம்பியா, ஸிம்பாப்வே ஆகியவற்றிலிருந்தும், சண்டை நடந்துகொண்டிருந்த மோஸாம்பிக்கிலிருந்துங்கூட, அவர்கள் பத்தாயிரங் கணக்கில், ரயில், பஸ், மோட்டார் வண்டி, ஆகாய விமானம் ஆகியவற்றில் இந்த இரண்டு மையங்களுக்குத் திரண்டு வந்தனர்.
ஐரோப்பாவிலிருந்தும், ஐக்கிய மாகாணங்கள், ஜப்பான், அட்லாண்டிக்கிலுள்ள சிறிய தீவாகிய சென்ட் ஹெலீனாவிலிருந்தும் நூற்றுக்கணக்கானோர் வந்தனர், ஆக மொத்தம் 24 நாடுகளிலிருந்து வந்தனர். அவர்கள் வந்து சேர்ந்தபோது—கறுப்பரும், வெள்ளையரும், செந்நிறத்தாருமான—உள்ளூர் சாட்சிகள் அவர்களை மிக அன்புடன் வரவேற்று, அவர்கள் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்ட இடங்களுக்கு அழைத்துச் சென்றனர்.
ஜோஹன்னஸ்பர்க்கில் மாநாடு நடத்தின இடம் தேசீய பொருட்காட்சி மையமாகும். இது அந்நகரத்தின் தென் மேற்கிலுள்ளது, நவீன பல்கூட்டு பொருட்காட்சி மன்றங்கள் அடங்கிய பெரிய இடம், மனதுக்கு இன்பமளிக்கும் புல்வெளிகளும், மரங்களும், உலாவுவதற்குரிய இடப்பகுதிகளுமடங்கியது—பல மொழிகள் பேசும் ஜனங்கள் கூடும் பெரிய மாநாட்டுக்கு உகந்த இடம். ஸூலு, ஸோத்தோ, ட்ஸுவானா, ஆங்கிலம், ஆப்பிரிக்கான்ஸ் ஆகிய மொழிகளைப் பேசும் ஒவ்வொரு தொகுதிக்கும் ஒவ்வொரு பெரிய மன்றம் இருந்தது, போர்த்துகீஸியரும் கிரேக்கரும் சிறிய மன்றங்களைப் பயன்படுத்தினர். எல்லாரும் ஒரே நிகழ்ச்சிநிரலை அனுபவித்து மகிழ்ந்தனர். கூட்டங்கள் நடக்கையில் இயல்பாய்ப் பெரும்பான்மையர் அவரவர் சொந்த மொழித் தொகுதியினருடன் கூடியிருந்தனர், ஆனால் நிகழ்ச்சிநிரல் தொடங்குவதற்கு முன்பும், இடை நேரங்களிலும், முடிந்தப் பின்பும் எல்லா இனத்தவரும் தேசத்தாரும் அன்பான கூட்டுறவில் மகிழ்ச்சியடைந்தனர்.
வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள் பலர், வெள்ளையர்களின் இடப்பகுதிகளில் தங்கியிருந்தனர், தங்களுக்கு ஆச்சரியமுண்டாக எந்தக் குழப்பத்தையும் காணவில்லை. மாநாட்டுக்கு ஜெர்மனியிலிருந்து வந்த ஒருவர் சொன்னதாவது: “நாங்கள் எதிர்பார்த்ததற்கு நேர்மாறாக இருந்தது.” மாநாடுகளில் இத்தகைய சமாதானத்தையும் ஒற்றுமையையும் காண்பதில் எல்லாரும் முக்கியமாய் இன்ப மகிழ்ச்சியடைந்தனர். “எல்லா ஜாதியாரும் ஒன்றாய்க் கலந்து குலாவுவதைச் சற்றுப் பாருங்கள்,” என்று ஜோஹன்னஸ்பர்க் மாநாட்டுக்கு வந்திருந்த ஐ.மா. பிரதிநிதி ஒருவர் சொன்னார். “இதைத் திரைப்பட மெடுத்து அமெரிக்க டெலிவிஷனில் காட்டினால் நன்றாயிருக்கும்,” என்று அவர் மேலும் தொடர்ந்து கூறினார்.
மற்ற மாநாடு பிரசித்திப்பெற்றத் துறைமுகமும் கடற்கரை புகலிடமுமான டர்பனில் நடத்தப்பட்டது. பெருந்தொகையாய் ஆங்கிலேயர் இருக்கும் நகரம், இந்தியர் பலருக்கும் அது வீடாயிருக்கிறது. மாநாடு நடந்த இடம் டர்பன் கடலோரத்துக்கருகிலுள்ள கிங்ஸ் பார்க் விளையாட்டுப் போட்டி பல்கூட்டரங்கமாகும். அருகருகே இருந்த விளையாட்டரங்கங்கள் பயன்படுத்தப்பட்டன, ஒன்று ஸூலு மொழி பேசும் சாட்சிகளுக்கும் மற்றொன்று எக்ஸோஸா மொழி பேசுவோருக்கும் (போண்டாஸ் உட்பட) ஆங்கிலம் பேசுவோருக்கும் (நூற்றுக்கணக்கான இந்தியரும் பலநிறத்தாரும் உட்பட) பயன்படுத்தப்பட்டன.
இங்கேயும் சமாதானமும் ஒற்றுமையும் மேலோங்கியிருந்தனவா? 370 மைல்கள் (600 கிலோ மீட்டர்கள்) பயணப்பட்டு மாநாட்டுக்கு வந்திருந்த, சாட்சியல்லாத ஒரு எக்ஸோஸா பெண் பின்வருமாறு கூறினாள்: “இங்கே தென் ஆப்பிரிக்காவில் எல்லா ஜாதியாரான ஜனங்களுக்கும் இவ்வளவு ஒற்றுமையாய் இருக்கக்கூடியது வியப்பூட்டுகிறது. சர்ச்சுகளில், நான் பழக்கப்பட்டதிலிருந்து இது எவ்வளவு வேறுபட்டிருக்கிறது.” “இது மிக நேர்த்தியாயிருக்கிறது,” என்று ஓர் இளம் இந்தியப் பெண் சொன்னாள். “வேறுநிறத்தார், இந்தியர், வெள்ளையர், கறுப்பர் யாவரும் கூடிக்கலந்து ஒன்றாயிருப்பதைக் காண்பது, வாழ்க்கையில் என் முழு மனப்பான்மையையும் மாற்றிவிட்டது.”
பிரச்னைகளை மேற்கொள்ளுதல்
மாநாட்டுக்கு வந்த வெள்ளையருக்கு விடுதிகளிலும் வெள்ளையர் இடப்பகுதிகளிலும் இடவசதி அளிப்பது ஓரளவு எளிதாயிருந்தது. நிலைமை குமுறிய நிலையிலிருந்த ஜோஹன்னஸ்பர்க்கில் மேற்குப் புறத்திலிருந்த கறுப்பருடைய பெரிய இடப்பகுதியான ஸோவெட்டோவில் பல ஆயிரக்கணக்கான கறுப்பருக்கு இடவசதிகளை ஏற்பாடு செய்வது எளிதாயில்லை. ஸோவெட்டோவிலிருந்த சாட்சிகள் தாராள மனப்பான்மையுடன் உதவியளித்தனர். சில வீடுகளில் 20 பேர் அளவாகவும் மாநாட்டுக்கு வந்தவர்கள் தங்கும்படி ஏற்றனர். எனினும், மாநாட்டின் முதல் நாளின் முடிவில், தூர இடங்களிலிருந்து வந்த பஸ் ஓட்டுபவர்கள் தங்கள் பயணிகளை ஸோவேட்டோவுக்குள் கொண்டுசெல்ல மறுத்துவிட்டனர். (கலகச் சமயத்தின்போது பல பஸ்ஸுகள் அங்கே எரிக்கப்பட்டன.) ஆகவே அந்த இரவில் பலர் தங்கள் பஸ்ஸுகளில் தூங்கவேண்டியதாய்விட்டது. இந்நிலைமையை அவர்கள் முணுமுணுக்காமல் ஏற்றனர். அடுத்த இரவுக்குள் மற்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டன, எல்லாரும் தக்கவாறு இடவசதியளிக்கப்பட்டனர்.
மேலும் கேப் டவுனிலிருந்து அத்தனை அநேகம் பேர் வந்ததைக் கண்டும் ஜோஹன்னஸ்பர்க் சாட்சிகள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர். இந்த இரண்டு நகரங்களுக்கிடையில் பஸ்ஸில் சுற்றுவழி பயணத்தூரம் 1,780 மைல்களாகும். (2,864 கிலோ மீட்டர்கள்) கறுப்பரிலும் வேறு நிறத்தாரிலும் சிலர் வெகு குறைவான சம்பாத்தியமுள்ளவர்கள். இத்தகைய பயணச் செலவை அவர்கள் எப்படித் தாங்கமுடியும்? ஒரு கலப்பு-இன பஸ் குழு 26 பஸ்களை வழக்கமான கட்டணத்துக்குப் பாதியளவுக்கும் குறைந்தக் கட்டணத்துக்குச் செல்லும்படி ஏற்பாடு செய்ய முடிந்தது. அப்படியிருந்தும், மாநாட்டுக்கு வரும்படி, குடும்பங்களைக் கொண்ட விதவைகள் போன்ற சிலர் செய்தத் தியாகங்கள் வியப்புறச் செய்தன. ஒற்றுமையைக் குறித்து அந்தக் குழுவின் தலைவர் பின்வருமாறு கூறினார்: “கடந்த ஒருசில வாரங்களில் கேப் தீபகற்பம் கலகத்தால் அலைக்கழிக்கப்பட்டது. ஆனால் எங்களிடம், கறுப்பரும், வேறு நிறத்தாரும், வெள்ளையருமான சாட்சிகள் அதே பஸ்ஸில் முழு ஒத்திசைவுடன் பயணஞ் செய்தார்கள்.”
சமாதானமும் சண்டையுமான இந்த எதிர்மாறு டர்பனிலும் காணப்பட்டது. மாநாடு தொடங்குவதற்கு முந்தின நாள், டர்பன் பகுதியிலிருந்து ஒருசில மைல்களுக்கப்பால்தானே ஸூலுக்களுக்கும் போண்டோக்களுக்குமிடையில் கடுமையான சண்டை நடந்தது. அச்சு அறிவிப்புகள் பின்வருமாறு கூறின: “2,000 ஸூலுக்களுக்கும் 3,000 போண்டோக்களுக்கும் இடையில் நடந்த கிறிஸ்மஸ் நாள் போரில் குறைந்தது 58 ஆட்கள் மாண்டனர்.” மாநாடு நடந்து கொண்டிருக்கையில்தானே அந்த இடத்துக்குச் சற்று தூரத்தில் மற்றொரு சம்பவம் நடந்தது. ஒரு கூட்ட கறுப்பர், தென்னாப்பிரிக்கர் ஆயுதமாகிய குமிழ்ப்பிடியுள்ள குறுத்தடிகளுடன் வந்து, கடலோரத்தில் பொழுதுபோக்கு ஓய்வெடுத்துக் கொண்டிருந்த இந்தியர்களைத் தாக்கித் திகிலூட்டினர்.
மாநாட்டு மகிழ்ச்சிகளும் ஆர்வகிளர்ச்சிகளும்
ஜோஹன்னஸ்பர்க்கில் ஆஜரானவர்களின் எண்ணிக்கை தொடக்கத்திலிருந்தே எதிர்பார்ப்புக்கு மிக அதிகமாய் மிஞ்சிவிட்டது. ஆங்கில மன்றத்தில் 6,000 நாற்காலிகள் ஒழுங்குபடுத்தப்பட்டன, ஆனால் 8,942 ஆட்கள் வந்திருந்தனர். பலர் தங்கள் சொந்த மடக்கும் நாற்காலிகளைக் கொண்டுவந்திருந்தனர். முதலாம் நாளில் இரண்டு மாநாடுகளின் ஒன்றுசேர்ந்த ஆஜர் 59,996; கடைசி நிகழ்ச்சிநிரலின் ஆஜர் வியப்பூட்டின 77,830! உணவு சேவையுங்கூட, முதலில் சமாளிக்க முடியாமல், உணவு பற்றாமற்போயிற்று.
ஆனால் ஆவிக்குரிய உணவுக்கோ எவ்விதக் குறைவுமில்லை. சிறந்த வேதப்பூர்வ பேச்சுகள், இந்தப் பொல்லாதக் காலங்களில் உத்தமத்தைக் காத்துக்கொள்ளும்படி கொடுக்கப்பட்ட முக்கிய கவனத்துக்குரிய மற்றும் இருதயத்தை ஊடுருவி ஆராயும் அறிவுரைகள், இளைஞருக்குக் கொடுத்தத் தனிப்பட்ட அறிவுரைகள், பலர் கண்களில் கண்ணீரைக் கொண்டுவந்த உணர்ச்சிக் கிளர்ச்சியூட்டின நாடகங்கள், ஆகிய எல்லாம் ஆழ்ந்த நன்றியோடு மதித்துணரப்பட்டன.
எல்லா இனத் தொகுதிகளும் ஒன்றாய்க் கூடிவந்து மற்ற நாடுகளிலிருந்து வந்தப் பிரதிநிதிகள் பேசினதைக் கேட்டது உள்ளக்கிளர்ச்சியூட்டினது. தங்கள் நாடுகளிலிருந்து சகோதரர் அனுப்பின அன்புக்கும் ஒன்றுமைக்குமுரிய அவர்கள் செய்திகளுக்கு மிகுந்த ஊக்கத்துடன் ஆரவாரமாய்க் கைத்தட்டினர். இரண்டு மாநாடுகளுக்கும் ஆஜராயிருந்த யெகோவாவின் சாட்சிகளின் நிர்வாகக் குழுவின் உறுப்பினர்கள், ஊக்குவிக்கும் பேச்சுகளைக் கொடுத்தனர், அவை எல்லாருக்கும் மிகுந்த மகிழ்ச்சியளித்தன. பின்னும் புதிய பிரசுரங்கள் வெளியிடப்பட்டன. அது கிளர்ச்சிக்குப் பின் கிளர்ச்சியூட்டிக் கொண்டிருந்தது!
முழுக்காட்டுதல் உண்மையான சிறப்புப் பகுதியாயிருந்தது. ஜோஹன்னஸ்பர்க்கில் முந்தின பலன்களிலிருந்து தீர்மானித்து, ஏறக்குறைய 400 பேர் முழுக்காட்டப்படுவார்களென எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதற்குப் பதிலாக 921 புதிய சாட்சிகள் யெகோவாவுக்குத் தங்கள் ஒப்புக்கொடுத்தலை முழுக்காட்டின் மூலம் அடையாளப்படுத்தினார்கள். அவர்களுக்கும் பல ஜாதியார் முழுக்காட்டப்படும் இதற்குக் கண்கூடான சாட்சிகளாயிருந்த அந்தப் பெருங்கூட்டத்துக்கும், அது ஒருபோதும் மறக்கமுடியாத அனுபவமாயிருந்தது. கறுப்பரான சாட்சிகளைக் கொண்ட ஒரு பெருந்தொகுதி தாங்களாக இசைவாய் ராஜ்ய பாட்டுகளைப் பாடிக்கொண்டிருந்தது இந்தத் தறுவாய்க்கு மேலும் மகிழ்ச்சியூட்டியது. இந்த இரண்டு மாநாடுகளிலும் மொத்தம் முழுக்காட்டப்பட்டவர்கள் 1,363 பேர்.
பாராட்டுதலும் நன்றி தெரிவித்தலும்
இனத்தைப் பற்றிக் கவலையில்லாமல் தாராளமாய்க் கலந்து கூடியிருக்கும் அரிதான வாய்ப்பை இந்த மாநாடுகள் சாட்சிகளுக்கு அளித்தன. உதாரணமாக, ஜோஹன்னஸ்பர்க்கில் இந்த மாபேரளவான கூட்டங்களின் காரணமாக, பிள்ளைகள் சில சமயங்களில் பெற்றோரைவிட்டுப் பிரிக்கப்பட்ட நிலைக்குள்ளாயினர். ஓர் இரவில் கறுப்பர் பிள்ளைகள் ஒருசிலர் பெற்றோரில்லாமல் விடப்பட்டிருந்தனர். இவர்கள் அருகில் ஊர்திமனைகளில் தங்கியிருந்த வெள்ளையரான சாட்சிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். அன்புடன், இந்தப் பிள்ளைகள் குளிப்பாட்டி, உணவூட்டி, தூங்க வைக்கப்பட்டனர். அடுத்தநாள் காலையில் அவர்கள் நன்றியறிதலுள்ள பெற்றோரிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டனர்!
கிழக்கு இலண்டனிலிருக்கும் கறுப்பரின் ஐந்து சபைகளை டர்பனுக்குக் கொண்டுசெல்லவும் திரும்பக் கொண்டுவந்து சேர்க்கவும் ஒரு தனி ரயில் வண்டியை வெள்ளையரான சாட்சிகள் ஏற்பாடு செய்து அவர்களுக்கு உதவினார்கள். இந்த ரயில்வண்டி டர்பனுக்கு வந்து சேர்ந்தபோது, வழியைவிட்டு, மாநாடு நடத்தப்பட்ட இடத்துக்கு அருகிலிருந்த பக்கப் பாதை ஒன்றில் விலகி நிற்கும்படி செய்யப்பட்டது. அது அங்கே இருக்கும்படி அனுமதிக்கப்பட்டது, அதன் பல பகுதிகள் அந்த முழு காலப் பகுதிக்கும் அவர்கள் தங்கும் இருப்பிடங்களாயின—மிகவும் வசதியாயிருந்தது வெகுவாய் நன்றியோடு பாராட்டப்பட்டது!
டர்பன் மாநாடு நடத்தின இடத்தில் அணுகுண்டு போடுவதாக பயமுறுத்தல், அரசாங்க பாதுகாப்பு அதிகாரி சோதனை செய்யும்படி அங்குவரச் செய்தது. அது பொய் பயமுறுத்தல். பின்னால் அவர் வெள்ளையரான ஒரு சாட்சியிடம் பின்வருமாறு சொன்னார்: “நீங்கள் சமாதானத்தை முன்னேற்றுவிக்கும் வழிமுறையில் நான் வெகுவாய் மனங்கவரப்பட்டேன். அங்கேயிருக்கும் கறுப்பு மனிதனைச் ‘சகோதரனே’ என்று நீர் அழைப்பதை நான் கேட்டேன். அதை எப்படிச் செய்கிறதென்று நீங்கள் தெரிந்திருக்கிறீர்கள்.” மாநாடு முடிந்த பின்பு, கிங்ஸ் பார்க்கின் இடத்தைக் கவனிக்கும் மேலாளர், மாநாட்டுக் கண்காணியிடம் பின்வருமாறு சொன்னார்: “முழுமையாய்த் திட்ட நுட்பமாய்ச் செய்து முடிக்கும் உங்கள் அமைப்பின் தன்மை என் மனதைக் கவர்ந்தது. நீங்கள் விட்டுப் போவதுபோல் வேறு எந்த அமைப்பும் அவ்வளவு சுத்தமாய் அரங்கத்தை விட்டுப் போவதில்லை. இதைப் புத்தம் புதியதுபோல் திரும்ப ஒப்புவிப்பீர்கள் என்பதில் நான் ஒருபோதும் சந்தேகப்படவில்லை.”
ஜோஹன்னஸ்பர்க்கில் கறுப்பரான பாதுகாப்பு, காவலாளரும் அந்தச் சமாதான சூழ்நிலையின்பேரில் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர். ஒருவர் பின்வருமாறு கூறினார்: “இத்தகைய மிகப் பெரும் கூட்டத்தின்போது எங்களுக்கு ஒருபோதும் இவ்வளவு சுலபமான வேலை இருக்கவில்லை.”
ஜோஹன்னஸ்பர்க் மாநாட்டுக்கு வந்தக் கறுப்பரில் பலருக்கு அதுவே வெள்ளையரான சாட்சிகளுடன் கூட்டுறவு கொள்வதன் முதல் தடவையாக இருந்தது. கறுப்பரான மூப்பர் ஒருவர் இவ்வாறு குறிப்பிட்டார்: “அது வரம்பற்ற உள்ளக் கிளர்ச்சியாயிருந்தது.” கறுப்பரான ஸாம்பியாவிலிருந்து வந்த ஒரு சாட்சி குறிப்பிட்டதாவது: “நான் மிக மிக மகிழ்ச்சியாயிருக்கிறேன். என் வாழ்க்கையில் இத்தகைய ஒரு மாநாட்டுக்கு நான் ஒருபோதும் ஆஜரானதில்லை.” “நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள்,” என்ற இயேசுவின் வார்த்தைகளுக்கு அது உயிருள்ள முன்மாதிரியாயிருந்தது.—யோவான் 13:35.
உள்நாட்டுக் கலக நிலைக்கு எதிர்மாறாகக் கிறிஸ்தவ சமாதானமும் ஒன்றுமையும் கவனத்தைக் கவர்ந்தது. தங்கள் நன்றி பாராட்டுதலையும் எதிர்காலத்தில் இன்னும் நன்றாய்ச் செய்வதற்கானத் தீர்மானத்தையும் யாவரறிய வெளிப்படுத்துவதற்கு, பின்வரும் அறிக்கை இரு மாநாடுகளிலும் வாசிக்கப்பட்டு ஆர்வ உணர்ச்சிக்கனிவுடன் ஏற்கப்பட்டது.
“தென் ஆப்பிரிக்காவில், ஜோஹன்னஸ்பர்க்கிலும் டர்பனிலும் டிசம்பர் 26-29, 1985-ல் நடத்தப்பட்ட ‘உத்தமத்தைக் காப்பவர்கள்’ மாநாடுகளுக்கு ஆஜராகியுள்ள யெகோவாவின் சாட்சிகளாகிய நாங்கள் அறிவுதெளிவூட்டுதலும், ஊக்கமூட்டுதலும் அடங்கிய இத்தகைய நிறைவான ஆவிக்குரிய விருந்துக்காக எங்கள் பரலோகத் தகப்பனாகிய, யெகோவாவுக்கு எங்கள் ஆழ்ந்த நன்றியறிதலை வெளிப்படுத்திக்கூற விரும்புகிறோம். 24 மற்ற நாடுகளிலிருந்து வந்த, யெகோவாவின் ஜனங்களின் உலகமெங்குமுள்ள சகோதரத்துவத்தின் அன்பையும் ஒற்றுமையையும் கண்கூடாக மெய்ப்பித்துக் காட்டும் பிரதிநிதிகள் இங்கிருப்பதை நாங்கள் அன்புடன் போற்றுகிறோம். மற்ற நாடுகளிலும் இருப்பதுபோல், இந்நாட்டிலும் வினைமையான பிரச்னைகளும் கலகமும் இருந்தபோதிலும் எங்கள் மாநாடுகள் சமாதானமாய் நடந்ததற்காக நாங்கள் நன்றியறிதலுடன் இருக்கிறோம், மேலும் தென் ஆப்பிரிக்காவின் எல்லாப் பெரும் பிரிவான மரபினரிலிருந்தும் மொழித் தொகுதிகளிலிருந்தும் வந்துள்ள எங்கள் சகோதரர் சகோதரிகளோடு கூட்டுறவு கொண்டதில் நாங்கள் இன்பமகிழ்ச்சியடைகிறோம். குலமரபையோ நிறத்தையோ பொருட்படுத்தாமல் அன்பின் கட்டுகளையும் கூட்டுறவையும் பலப்படுத்தவும், குழப்பம் இருந்துவரும் இந்நாட்டில் ராஜ்யத்தின் நற்செய்தியைப் பிரசங்கிப்பதில் அதிகரிக்கப்பட்ட ஆர்வத்துடன் முன்னேறவும், யெகோவாவின் பெயருக்குக் கனமுண்டாக எங்கள் உத்தமத்தைக் காத்துவரவும் நாங்கள் உறுதியாய்த் தீர்மானித்திருக்கிறோம்.”
இன்று மக்கள் பெரும்பான்மையருக்கு எதிர்காலம் கிளர்ச்சியற்றதாயும் நம்பிக்கையற்றதாயும் தோன்றுகிறது. ஆனால் யெகோவாவின் சாட்சிகளுக்கு அப்படியில்லை. பைபிள் தீர்க்கதரிசனங்களின் ஒளி மேலும் மேலுமாகப் பிரகாசமாய் விளங்குவதால், இந்தப் பொல்லாதக் காரிய ஒழுங்குமுறையின் முடிவு விரைவாய் நெருங்கிக் கொண்டிருப்பதை அவர்கள் காணமுடிகிறது. இந்தப் பெரும் மாற்றத்தைத் தப்பிப் பிழைத்து கடவுளுடைய ராஜ்யத்தின் கீழிருக்கப்போகும் புதிய ஒழுங்குமுறைக்குள் பிரவேசிப்பது, ஜலப்பிரளயத்தைத் தப்பிப் பிழைத்த நோவாவுக்கும் அவன் குடும்பத்தாருக்கும் இருந்ததைப் பார்க்கிலும் மேம்பட்ட சிலாக்கியமாயிருக்கும். (செப்பனியா 2:3) அந்தத் தப்பிப் பிழைப்போருக்குள் நீங்களும் இருக்க விரும்புகிறீர்களா? அப்படியானால், இப்பொழுதே, ஒரே உண்மையான கடவுளாகிய யெகோவாவை வணங்குவதில் இந்தச் சந்தோஷமுள்ள சர்வதேச சகோதரத்துவத்தைச் சேர்ந்துகொள்ளுங்கள். (g86 7/22)
“கடைசி நாட்களில் யெகோவாவின் ஆலயமுள்ள பர்வதம் பர்வதங்களின் கொடுமுடியில் ஸ்தாபிக்கப்பட்டு மலைகளுக்கு மேலாய் உயர்த்தப்படும்; எல்லா ஜாதிகளும் அதற்கு ஓடிவருவார்கள். பல ஜாதிகள் புறப்பட்டு வந்து: நாம் யெகோவாவின் பர்வதத்துக்கும் யாக்கோபின் கடவுளுடைய ஆலயத்துக்கும் போவோம் வாருங்கள், அவர் தமது வழிகளை நமக்குப் போதிப்பார், நாம் அவர் பாதைகளில் நடப்போம் என்பார்கள்.”—ஏசாயா 2:2, 3, தி.மொ.
[பக்கம் 20-ன் படம்]
மேலே: இரண்டு முழு-நேர ஊழியர்கள்—கறுப்பான அந்த சாட்சியின் வயது 101
கீழே: ஆப்பிரிக்கப் பிரதிநிதிகள் பலநிற உடையணிந்து
[பக்கம் 21-ன் படம்]
டர்பன் மாநாட்டில் பிரதிநிதிகள் ஒரு நிகழ்ச்சிநிரலை அனுபவித்து மகிழ்தல்
மலே: புதிதாக வந்துசேருபவர்கள், தங்கள் பயணமூட்டைகளை ஆப்பிரிக்க முறையில் சுமந்துகொண்டு
கீழே இடதுபுறம்: தன் குழந்தையை ஆப்பிரிக்க முறையில் சுமந்துகொண்டு
கீழே வலதுபுறம்: ஒருவன் ஆதரவு தருகையில் மற்றவர் தன் பெட்டியைப் பார்வையிடுகிறார்
[பக்கம் 22-ன் படம்]
மொத்தம் முழுக்காட்டப்பட்டவர்கள்: 1,363
[பக்கம் 23-ன் படம்]
மாநாட்டுக்கு வந்த இரண்டு ஜப்பானியர் உடன் சாட்சிகளுடன் சேர்ந்து மகிழ்ச்சியடைகிறார்கள்