இளைஞர் கேட்கின்றனர் . . .
பிறரைக் கேலிக்கு உட்படுத்தும் குறும்புச்செயல்கள் தீங்கற்ற தமாஷ் அல்லவா?
அது வெறும் ஒரு தமாஷான செயல்தான். அதற்குக் காரணமாக இருந்த பையன்கள் குலுங்கி குலுங்கி சிரித்தனர். சில எண்ணெய் பீபாய்களை ஒன்றோடொன்று சேர்த்து கட்டி, ஒரு முனையை நீளமாக விட்டு, எல்லாவற்றையும் வெள்ளி பூசி அதன் ஒரு பக்கமாக “C.C.C.P.” என்று எழுதினர். அந்த எழுத்துக்கள் சோவியத் யூனியனைக் குறிப்பிடும் ஸ்லலானிய எழுத்துக்களாகும். பின்பு அதை டெட் என்ற மனிதனுடைய வீட்டிற்கு அருகாமையில் வைத்துவிட்டனர். அடுத்த நாள் காலை, அதைப் பார்த்த டெட் அதிர்ச்சியுற்ற நிலையில், போலீஸை அழைத்து, ஒரு சோவியத் ஏவுகணை தன்னுடைய வீட்டிற்கு அருகே இறங்கியிருப்பதாக புகார் செய்தான். விசாரிக்க வந்த அதிகாரிகளில் ஒருவரிடம் கிளர்ச்சியடைந்த நிலையில் பேசிக்கொண்டிருக்கும்போது தமாஷ் அல்லது விளையாட்டு வினைமையாக, விசனகரமாக மாறிற்று. டெட் உணர்விழந்து சாய்ந்தான், மருத்துவமனையில் மோசமான உடல்நிலையில் சேர்க்கப்பட்டான்.
உண்மைதான், பிறரைக் கேலிக்கு உட்படுத்தும் தமாஷ் செய்வார்கள். ஒவ்வொன்றும் ஒருவரை மருத்துவமனையில் சேர்ப்பதில்லை. உங்களுக்கு சற்று தமாஷாக இருக்க வேண்டுமென்பதற்காக அநேக இளைஞரிடையே இப்படித் தமாஷுக்காக செய்யப்படும் செயல்கள் சர்வசாதாரணமாகி விட்டிருக்கிறது. அவர்கள் தீங்கற்றதாக கருதுவதால் அதை வேடிக்கையாக எடுத்துக்கொள்கின்றனர். ஆனால் இது உண்மையிலேயே அப்படி இருக்கிறதா?
“பைத்தியக்காரன் போல்”
பைபிள் புத்தகமாகிய நீதிமொழிகள் “பேதைகளுக்கு வினாவையும், வாலிபருக்கு அறிவையும் விவேகத்தையும் கொடுப்பதற்காக” எழுதப்பட்டது. (நீதிமொழிகள் 1:1-4) அதன் ஞானமான வார்த்தைகள் இப்படிப்பட்ட தமாஷான குறும்புச் செயல்களைக் குறித்தும் பேசுகின்றன: “கொள்ளிகளையும் அம்புகளையும் சாவுக்கேதுவானவைகளையும் எறிகிற பைத்தியக்காரன் எப்படியிருக்கிறானோ, அப்படியே, தனக்கடுத்தவனை வஞ்சித்து: நான் விளையாட்டுக்கல்லவோ செய்தேன் என்று சொல்லுகிற மனுஷனும் இருக்கிறான்.” (நீதிமொழிகள் 26:18, 19) “பைத்தியக்காரன்” என்ற வார்த்தை புத்தி சுயாதீனமிழந்த ஒருவரை குறிப்பிடுவதாக இருக்கிறது. ஜேம்ஸ் மொஃபா என்பவரால் எழுதப்பட்ட ஒரு புதிய பைபிள் மொழிபெயர்ப்பும் [ஆங்கிலம்] “பைத்தியக்காரன் போன்று” என்று வாசிக்கிறது.
புத்தி சுயாதீனமிழந்த ஒருவர் எய்யும் அம்புகள்—அவற்றில் சில முனையில் நெருப்பை கொண்டிருந்தால்—அவை உயிருக்கும் உடைமைகளுக்கும் ஏற்படுத்தும் சேதத்தைக் கற்பனை செய்து பாருங்கள்! “பைத்தியக்காரன்” எடுக்கும் நடவடிக்கைகளின் விளைவுகளை ஒருவர் உணராமலிருக்கக்கூடும். காரணா காரியங்களைப் பகுத்தறியும் நிலையில் அவன் இல்லை. அதே விதமாக, தமாஷான “குறும்புச் செயல்களைச்” செய்பவர்கள், அவர்களுக்கு உண்மையிலேயே தீங்கு செய்ய வேண்டுமென்று நினைப்பதில்லை. என்றபோதிலும் இந்தக் குறும்புத்தனமான விளையாட்டுகளில் ஈடுபட்டு சரீரத்தில் அல்லது உணர்ச்சியில் புண்பட்டவர்களுக்கு இது சற்றும் ஆறுதலாயிருப்பதில்லை. அப்படியிருக்க சிலர் ஏன் பிறரை கேலிக்கு உட்படுத்தும் தமாஷான செயல்களைச் செய்கிறார்கள்?
தங்கள் செயல்களுக்கு சாக்குபோக்கு சொல்பவர்களாக, “நான் விளையாட்டுக்கல்லவோ செய்தேன்?” என்று கூறுவதாக நீதிமொழி கூறுகிறது. எனவே பொதுவாக அது தமாஷுக்காகவும், சலிப்படையாமலிருக்கவும் அல்லது மற்றவர்களுடைய கவனத்தைப் பெறுவதற்கும் செய்யப்படுகிறது. மேலும் மேரி சுசன் மில்லர் என்பவர் எழுதிய பிள்ளை அழுத்தம் என்ற புத்தகத்தில் பிறரைக் கேலிக்கு உட்படுத்தும் தமாஷான குறும்புச் செயல்கள், அழுத்தத்தை மேற்கொள்ள, “மனக் கோளாறு தற்காப்புச் செயல்களாக” சில பிள்ளைகளாலும் பெரியவர்களாலும் பயன்படுத்தப்படுவதாகப் பட்டியலிடப்படுகிறது. மற்றவர்களுடைய தமாஷான குறும்புத்தன செயல்களுக்கு ஆளானவர்கள் பதில் செய்கிறவர்களாக அதில் ஈடுபடுகிறார்கள். மடத்தனமான போக்கை தொடருவதன் மூலம், ஓர் இளைஞன் வெறுமென அதற்குக் காரணமாக இருப்பவரின் இழிந்த நிலைக்குத் தன்னைத் தாழ்த்துகிறான். பிறரை கேலிக்கு உட்படுத்தும் குறும்புத்தனமான தமாஷ் செயல்களில் ஈடுபடுவதை மறுப்பதுதானே சாமர்த்தியமான நடவடிக்கை.
நிறுத்துவது எப்படி
உங்களையே இப்படியாகக் கேட்டுக்கொள்ளுங்கள்: “ஒருவர் என்னிடம் அதுபோல நடந்துகொள்வதை நான் விரும்புவேனா? இயேசு சொன்னார்: “ஆதலால், மனுஷர் உங்களுக்கு எவைகளைச் செய்ய விரும்புகிறீர்களோ, அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்.” பைபிள் சகோதர சிநேகம் மற்றும் தயை ஆகியவற்றை காண்பிக்கும்படி ஊக்கமளிக்கிறது, தீமைக்குத் தீமை செய்வதை உற்சாகப்படுத்துவதில்லை. (1 பேதுரு 3:8, 9) இரக்கமுள்ள பண்புகளை வளர்த்துக்கொள்வதன் மூலம் பிறரை கேலிக்கு உட்படுத்தும் தமாஷ் செயல்களில் அல்லது சொல்லில் ஈடுபடுவதை தடுப்பது மட்டுமின்றி, மற்றவர்கள் உங்களில் பிரியப்படவும் வழிவகுக்கிறது. தமாஷ் பண்ணுகிறவன் சிரிப்புகளைப் பெறக்கூடும், ஆனால் நீங்களோ நண்பர்களைச் சம்பாதித்துக்கொள்வீர்கள்.
மேலும், நீங்கள் எவ்விதமான ஆட்களோடு கூட்டுறவுகொள்கிறீர்கள் என்பதைக் கவனிக்க வேண்டும். “நான் பரியாசக்காரருடைய கூட்டத்தில் உட்கார்ந்து களிகூர்ந்ததில்லை,” என்று தீர்க்கதரிசியாகிய எரேமியா கூறினான். (எரேமியா 15:17) நம்முடைய தோழர்களின் செல்வாக்கின்கீழ் வருவது மிகவும் சுலபம். பிறரை கேலிக்கு உட்படுத்தும் குறும்புத்தனமான செயல்களுக்குப் பேர்பெற்றவர்களைத் தவிர்த்திடுங்கள்.
“பள்ளிக்கூடத்தில் என் சகாக்களால் ஏற்கப்பட விரும்பினேன், அப்போதுதான் நானும் கொஞ்சம் தமாஷாக இருக்கமுடியும்” என்று இளமைப் பருவத்தை வேதனையில் கழித்த டெபி ஒப்புக்கொள்கிறாள். அவள் ஏன் சில முட்டாள்தனமான காரியங்களைச் செய்தாள் என்று விவரித்தாள்: “காரணம் அது தமாஷாக இருந்தது. எல்லாமே தமாஷாக இருக்க வேண்டியதாயிருந்தது. இது எதிர்காலத்தை எவ்வாறு பாதிக்கும் என்றோ அல்லது காயங்களை ஒரு நாள் பின்னோக்கிப் பார்க்க நேரிடும் என்றோ நான் யோசிக்கவில்லை.” இவ்விதமாக தொடர்ந்து தமாஷாக நடந்துகொள்வது அவளை உண்மையில் சந்தோஷமாக வைக்கவில்லை. நீதிமொழிகள் 14:13 கூறுவதுபோல் அது இருந்தது. “நகைப்பிலும் மனதுக்குத் துக்கமுண்டு.” முடிவில், தன்னுடைய முட்டாள்தனமான வாழ்க்கை முறையை உணர்ந்து, பைபிள் நியமங்களின்படி வாழ தீர்மானித்தாள். இப்போது அவளுக்கு இருக்கும் மெய்யான சந்தோஷம், பிறரை கேலிக்கு உட்படுத்தும் குறும்புத்தனமான தமாஷ் செயல்களிலிருந்து பெறும் நன்மைகளைவிட அதிக மேன்மையானதாக இருக்கிறது.
பிறரை கேலிக்குட்படுத்தும் குறும்புச் செயல்கள் தமாஷான தீங்கற்ற செயல்களா? பைபிளும் இன்னும் மற்ற வருந்தத்தக்க அனுபவங்களும் இல்லையென்று பதிலளிக்கின்றன. மற்றவர்களை “தமாஷ் செய்யும்” இப்படிப்பட்ட வேட்கை வாழ்க்கையில் நல்ல இலக்குகளை நிறைவேற்றுவதிலிருந்து உங்களைத் திசைதிருப்ப வேண்டாம். “முட்டாள்தனம் புத்தியீனனுக்கு தமாஷ், ஆனால் புத்திமானோ தன் நடக்கையில் முன்னே செல்லுகிறான்.”—நீதிமொழிகள் 15:21, W.F. பெக் என்பவரின் இன்றைய மொழியில் பரிசுத்த பைபிள், ஆங்கிலம். (g86 9/22)
[பக்கம் 18-ன் படம்]
தமாஷ் பண்ணுகிறவன் சிரிப்புகளைப் பெறக்கூடும், ஆனால் நீங்களோ நண்பர்களைச் சம்பாதித்துக்கொள்வீர்கள்