உலகத்தைக் கவனித்தல்
சமாதான நடவடிக்கைகளில் ஈடுபாடு
ஐ.நா.வின் சமாதான ஆண்டையொட்டி (1986) அக்டோபர் 22-ம் தேதி நியு யார்க் நகரிலுள்ள செயின்ட் ஜான் தி டிவைனின் எபிஸ்கோப்பல் கத்தீட்ரலில் “மாபெரும் ஒரு சர்வதேசீய கொண்டாட்டம்” திட்டமிடப்பட்டது. “பத்து இலட்ச நிமிட சமாதானம்” என்ற தலைப்பைக் கொண்ட சிற்றேட்டின் பிரகாரம், இதற்கு முந்தின மாதம் முழுவதிலும் 42 தேசங்களில் நடைபெற இருந்த “ஈடிணையற்ற உலகளாவிய மக்களின் நிகழ்ச்சிகளுக்கு” இது உச்சக்கட்டமாக அமைந்தது. பிரம்மா குமாரீஸ் உலக ஆன்மீக அமைப்பு உட்பட, இதை நடத்துபவர்கள், “சமாதானத்தை ஆதரித்து அதை வளர்ப்பதற்காக, நிகழ்ச்சியில் பல்வேறு இன, அரசியல் மற்றும் மத பின்னணியிலுள்ள அனைவரையும் ஒன்றாக கூடிவரச் செய்வதையே ஒரே நோக்கமாகக் கொண்ட அனைவரையும் உட்படுத்தும் நல்லதொரு துவக்கம்” என்பதாக விவரித்திருந்தார்கள். தலைமைக்குரு கியோவன்னி செல்லி, (ஐ.நா.வின் கூட்ட காண்பாளரான போப்பின் பிரதிநிதி) “எங்களுடைய உடனுழைப்பையும் சமாதானத்துக்காக எங்களுடைய ஜெபங்களையும்” இதை ஏற்பாடு செய்கிறவர்களுக்கு உறுதியளித்திருந்தார். அன்னை தெரஸா, “இந்நிகழ்ச்சியின் வெற்றிக்காக நான் அதிகமாக ஜெபிப்பேன்” என்று அறிவித்திருந்தார்கள். இந்தக் கொண்டாட்டத்தைத் “தொடர்ந்து ஐக்கிய நாடுகள் தினமாகிய அக்டோபர் 24, 1986ன் போது, ஐ.நா.வின் செயலாளர்—தலைவருக்கு முன்னால் பல இலட்ச சமாதான நிமிடங்களைப் பற்றிய சர்வதேசீய இசை நிகழ்ச்சி ஒன்று நடைபெற” இருந்தது.
“கடைசி நாள்” வருகிறதா?
அண்மையில், நைஜீரியாவைச் சேர்ந்த இரண்டு பண்டிதர்கள், தற்போதைய உலக சம்பவங்களை உலகத்தின் முடிவோடு சம்பந்தப்படுத்திப் பார்க்க முயற்சி செய்திருக்கிறார்கள். நேஷனல் கன்கார்டில் “முகமதிய” பத்தியில் எழுதுகையில் பெம்பி அப்பாஸ், “நாம் அனைவரும் பைபிளில் படித்திருக்கும் அர்மெகதோன் ஒருவேளை நம்முடைய காலத்தில் சம்பவிக்கலாம்” என்பதாக 1983ல் அமெரிக்க நாட்டு ஜனாதிபதி ரோனால்ட் ரீகன், சொன்னதை மேற்கோள் காண்பித்திருந்தார். முகமது முன்னறிவித்ததாக அப்பாஸ் சொல்லும் “கடைசி நாளின் முன்னறிகுறிகளின் ஒரு பகுதியளவான நிறைவேற்றமாகவே” ரீகனின் கூற்று உள்ளது என்பதாக அவர் எழுதினார். லாகோஸ் பல்கலைக்கழகத்தில் சர்வ தேசீய சட்ட பேராசிரியரான M.A. ஆஜ்மோ என்ற மற்றொரு பண்டிதர் “சர்வ தேசீய சமாதானமும் பாதுகாப்பும்” என்ற தம்முடைய விரிவுரையில் அண்மைக்கால பூமியதிர்ச்சிகளும் போர்களும் ஏய்ட்ஸ் போன்ற நோய்களும், “முடிவின் அடையாளமாக” இருப்பதாக குறிப்பிட்டிருந்ததாக நியு நைஜீரியன் அறிவிக்கிறது.
சீனாவின் குழந்தை கொள்கை
வேகமாக வளர்ந்து வரும் மக்கள் தொகையை கட்டுப்படுத்தும் முயற்சியில், சீனா ஒரே குழந்தை கொள்கையை 1979-ல் ஆரம்பித்து வைத்தது. ஒவ்வொரு சமுதாயமும் எத்தனை பிள்ளைகளைக் கொண்டிருக்கலாம் என்பதும் கூட வரையறுக்கப்பட்டது. அரசு குடும்ப கட்டுப்பாட்டு பணியின் நிர்வாகி, குயன் சின்ஸாங்கின் பிரகாரம் மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் இப்பொழுது 21 வயதுக்குட்பட்டவர்களாக இருக்கிறார்கள். ஒரே குழந்தையை மாத்திரமே கொண்டிருப்பதன் மூலம் இத்திட்டத்தை ஆதரிப்பவர்கள், வாழ்வதற்குக் கூடுதலான இடத்தையும், உயர் ஓய்வு ஊதியத்தையும், இலவச மருத்துவ உதவியையும், பள்ளிகளிலும் வேலை வாய்ப்புகளிலும் முதல் உரிமையையும் பெற்றுக்கொள்கிறார்கள். என்றபோதிலும் இந்தக் கொள்கை சில பிரச்னைகள் உருவாவதற்குக் காரணமாக இருந்திருக்கிறது. ஒரே பிள்ளைக்கே எல்லா கவனமும் கொடுக்கப்படுவதன் காரணமாக, இந்த ஏற்பாடு, “கட்டுப்பாடற்ற, சுயநலமான, தன்னலமான, பிறர்பேரில் அக்கறையற்ற, தங்களையே கவனித்துக்கொள்ள இயலாத” பிள்ளைகளை உருவாக்கியுள்ளது என்பதாக பீஜிங் குழந்தை மருத்துவமனையின் மருத்துவர் யேன் சுன் குறிப்பிடுகிறார். அநேக பிள்ளைகள் அளவுக்கு மீறி பருமனாகவும் இருக்கிறார்கள்.
டி.வி. வன்முறை
இரண்டு முக்கிய ஜெர்மன் டி.வி. நிலையங்களின் முழு நிகழ்ச்சி நிரலையும் ஒரு வாரத்துக்கு அலசி ஆராய்ந்தபோது, பவேரியன் கல்வி அமைச்சரவை, “கவலைக்கிடமான போக்குகளை” கவனித்தது. சராசரியாக எட்டு நிமிடங்களுக்கு ஒரு முறை வன்முறை காட்சிகள் இடம் பெறுகின்றன. பிள்ளைகள் அதிகமாக டெலிவிஷன் பார்க்கும் சமயமாகிய மாலை 5 முதல் 8 வரை—மிக அதிகமான சண்டை காட்சிகள் திரையில் இடம் பெறுவதாக ஜெர்மன் ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள். பவேரியன் அரசாங்கம் ஃப்ராங்கன் போஸ்ட் செய்தித் தாளில், இவ்விதமாக எச்சரித்திருந்தது: “பெற்றோர்களும் பொறுப்பிலுள்ள மற்றவர்களும் அளவுக்கு மீறி டி.வி பார்ப்பதிலிருந்தும் திரையில் தோன்றும் வன்முறை காட்சிகளிலிருந்தும் தங்கள் பிள்ளைகளைப் பாதுகாத்துக் கொள்ளும்படியாக கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். முன்கூட்டியே கவனமாக நிகழ்ச்சிகளைத் தெரிந்தெடுப்பதன் மூலமும் பிற்பகல் மற்றும் மாலை பொழுதுகளில் காண்பிக்கப்படும் டி.வி திரைப்படங்களைக் கண்காணிப்பதன் மூலமும் இதைச் செய்வது கூடியகாரியமாகும்.”
ஒரே பெற்றோரையுடைய குடும்பங்கள்
லெ மான்ட் என்ற பாரிஸ் தினசரியில் வெளியாகியிருந்த ஒரு சுற்றாய்வின்படி, பிரான்ஸில் ஒரே பெற்றோரையுடைய 80 சதவிகித குடும்பங்களில் பெண்களே குடும்பத்தின் தலைவர்களாக இருக்கிறார்கள். (பிரான்ஸ் தேசத்தில் ஒரே பெற்றோரையுடைய குடும்பங்கள் 6 சதவிகிதத்துக்கும் சற்று மேலாக உள்ளது) ‘விடுதலை என்ற பெயரில் சில பெண்கள் விவாகரத்து செய்து கொண்டிருப்பதையும், ஆனால் இந்த முறையோ பொருளாதார ரீதியிலும், உணர்ச்சிப் பூர்வமாகவும் தங்களுடைய பிள்ளைகளின் மீது அதிகமாகச் சார்ந்திருக்க வேண்டிய நிலைக்குள் அவர்கள் வீழ்ந்து போவதற்குமே இது வழிநடத்தியிருப்பதையும்” ஒரே பெற்றோரையுடைய குடும்பங்களின் சுற்றாய்வு காண்பித்தது.
மிக அதிகமாக துர்பிரயோகம் செய்யப்படும் போதை மருந்துகள்
ஆஸ்திரேலிய சுகாதார நிபுணர்கள், சாராயத்தையும் புகையிலையையும் மிகவும் பரவலாக துர்பிரயோகம் செய்யப்படும் போதை மருந்துகள் என்பதாக பெயர் குறிப்பிடுகிறார்கள். இவை இரண்டையும் சட்டப்படியே வாங்க முடிவதன் காரணமாக இவை “சட்ட விரோதமில்லாத” போதை பொருட்கள் என்று அழைக்கப்படுகிறது. ஹெராயின் முதல் எல்.எஸ்.டி வரையாயுள்ள பல்வேறு சட்ட விரோதமான போதை மருந்துகளிலிருந்து இது வித்தியாசமாக உள்ளது. இந்தச் “சட்ட விரோதமில்லாத” போதை பொருட்களை, இரகசிய கொலையாளிகள் என்பதாக தி ஆஸ்டிரேலியன் அறிவிக்கிறது. வருடந்தோறும் ஆஸ்திரேலியாவில் மற்ற எல்லா போதை பொருட்களினாலும் சேர்ந்து ஏற்படும் மரணங்களைக் காட்டிலும் இவையே 30 மடங்கு அதிகமான மரணத்துக்குக் காரணமாக இருக்கிறது. “போதை மருந்து பழக்கத்துக்கு அடிமையாவதால் நாம் அனுபவிக்கும் மாபெரும் பிரச்னைகளோடு ஒப்பிடுகையில், “சட்ட விரோதமான” போதை பொருட்களால் வரும் பிரச்னைகள் மிகக் குறைவாகவே உள்ளது” என்பதாக விக்டோரியன் அல்கோஹால் மற்றும் ட்ரக் ஸ்தபனத்தின் மேலாளர் ஒப்புக் கொள்கிறார்.
துப்பாக்கி—வீட்டிலிருப்பது ஆபத்து
“வீட்டில் துப்பாக்கியை வைத்திருப்பதன் மூலம் ஜனங்கள் வன்முறையான மரணத்தின் அபாய நேர்வை குறைப்பவர்களாக இல்லாமல் அதை உண்மையில் அதிகரிப்பவர்களாகவே இருக்கிறார்கள்” என்பதாக தி நியு இங்லாண்ட் ஜர்னல் ஆப் மெடிஸனில் வெளியான ஒரு அறிக்கையில் டாக்டர் ஆர்தர் கெல்லர்மேன் குறிப்பிடுகிறார். துப்பாக்கியை சொந்தமாக வைத்திருக்கும் ஒரு வீட்டில் தற்காப்புக்காக சுடப்பட்ட ஒவ்வொரு துப்பாக்கி குண்டுக்கும், 43 தற்கொலைகளும், கொலைகளும் அல்லது வெடிக்கும் கருவிகளினால் விபத்து மரணங்களும் ஏற்பட்டதாக ஆராய்ச்சி காண்பித்தது. அந்நியர்களை விட அநேகமாக இதற்குப் பலியாகும் நண்பர்கள் அல்லது பழகினவர்கள் 12 மடங்கு அதிகமாக இருக்கிறார்கள். புள்ளி விவரங்களில் தற்கொலைகளைச் சேர்க்காவிட்டாலும்கூட, வீட்டில் துப்பாக்கி வைத்திருப்பதால், அந்நியர்களைவிட வீட்டிலிருப்பவர்களே இதற்குப் பலியாவது 18 மடங்கு அதிகமாக இருக்கிறது. இந்தக் கண்டுபிடிப்புகளை முன்னிட்டு, டாக்டர் கெல்லர்மேன் பின்வருமாறு எச்சரிக்கிறார்: “வெடிக்கும் கருவிகளை வீட்டில் தற்காப்புக்காக வைப்பதைப் பரிந்துரைப்பது கேள்விக்குரியதாக உள்ளது.”
கறுப்பு காண்டா மிருகங்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது
ஒரு சமயம் நில நடுக்கோட்டுக்கு அருகேயுள்ள ஆப்பிரிக்காவில் அதிகமான எண்ணிக்கையில் காணப்பட்ட கறுப்பு காண்டா மிருகங்கள் வேகமாக மறைந்து வருகின்றன. 1969-ல் விலங்கியல் ஆய்வாளர் A.K.K. ஹில்மேன், கென்யாவில் மாத்திரமே 15,000 கறுப்பு காண்டா மிருகங்கள் இருப்பதாக தெரிவித்தார். இன்று ஆப்பிரிக்கா முழுவதிலுமே 9000 மட்டுமே மீதமிருக்கிறது. இதை அழிப்பதை தூண்டுவது என்ன? போலித் தன்மையும் பொய்யான நம்பிக்கைகளுமே. “50 சதவிகிதத்துக்கு மேற்பட்ட காண்டா மிருக கொம்பு, பட்டாக்கத்தி கைப்பிடி செய்வதற்காக வடக்கு ஈமனுக்கு அனுப்பப்படுகிறது” என்பதாக எர்த் ஸ்கன் புல்லட்டினில் லூஸி விக்னி எழுதுகிறார். காண்டா மிருக கைப்பிடியுள்ள ஒரு பட்டாக்கத்திக்கு ஈமனிலுள்ள ஆட்கள் ரூ.78,000 தர தயாராக இருக்கிறார்கள். மீந்திருப்பவை மருந்துகளில் பயன்படுத்தப்படுவதற்காக கிழக்கத்திய ஆசியாவுக்கு அனுப்பப்படுகிறது.” தூளாக்கப்பட்ட காண்டா மிருகக் கொம்பு, சிற்றின்ப நுகர்ச்சியைத் தூண்டும் பொருளாக கருதப்படுகிறது. இது ஒரு அவுன்ஸ் 5850 ரூபாய் விலை போகும்.
சமாதானத்துக்காக ஏங்குதல்
1986-ல் பொதுவாக மனிதவர்க்கத்துக்கு ஸ்விட்சர்லாந்து மக்கள் எதை விரும்புவார்கள்? டிமாஸ்கோப் என்ற ஸ்விட்சர்லாந்து நாட்டு வாக்காளர் நிறுவனம் ஒன்று பல்வேறு தொகுதிகளைப் பிரதிநிதித்துவம் செய்யும் 517 குடிமக்களைப் பேட்டி கண்டது. இதில் 49 சதவிகிதத்தினர் உலகம் முழுவதிலும் சமாதானத்தைக் காணவும் போர்களும் கலவரம் நடைபெறும் இடங்களும் மறைந்து போவதைக் காணவும் விரும்புவதை தெரிவித்ததாக பேஸ்லர் சீட்ஸிங் என்ற ஸ்விட்சர்லாந்து செய்தித்தாள் குறிப்பிட்டது. அவர்களைப் பொறுத்த வரையில், 37 சதவிகிதத்தினருக்கு மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கையே மிக முக்கியமான விருப்பமாக இருப்பதாக அவர்கள் தெரிவித்தார்கள். இரண்டாவதாக அவர்கள் அக்கம் பக்கத்திலுள்ளவர்களோடும் சுற்றுப்புறச் சூழலோடும் சமாதானமாக வாழ விரும்பினார்கள். ஆனால் இளைஞர்களோ, ஒரு வாழ்க்கைப் பணியும் வெற்றியுமே அதிமுக்கியமானதாக கருதியதாக குறிப்பிட்டிருந்தனர்.
உடற்பயிற்சியும் வயோதிபமும்
பெரும்பாலான வயதானவர்கள், இளைஞர்களை விட தாமதமான பிரதிபலிப்பு காலத்தைக் கொண்டிருப்பதற்குக் காரணம் என்ன? ஆஸ்டினிலுள்ள டெக்ஸாஸ் பல்கலைக்கழகத்தின் ஒரு ஆய்வு குழு, மூளை வேதியலில், வயது உண்டு பண்ணும் மாற்றங்களே இதற்குக் காரணமாக இருப்பதாக நம்புகிறது. எலி ஆராய்ச்சியில், தினந்தோறும் உடற்பயிற்சி செய்த எலிகள், அவ்விதமாக செய்யாத எலிகளை விட அவைகளுக்கு வயதாகும்போது விரைவான பிரதிபலிப்பு காலத்தை காத்துக்கொள்வதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தார்கள். “உடற்பயிற்சி வயதாக மனிதனை இளைஞனாக்கி விடுவதில்லை” என்பதாக டாக்டர் ரிச்சர்ட் E. வில்காக்ஸ் சொல்கிறார். “ஆனால் மூளை வேதியலில் அதனுடைய பாதிப்பின் காரணமாக நாம் முன்னர் நினைத்ததை விட உடற்பயிற்சி, பிரதிபலிப்பு காலத்தின் மீது அதிக வலிமையாக சாதகமான செல்வாக்கை செலுத்திட முடியும்.
போதை பொருட்களும் குற்றச் செயலும்
“போதை பொருட்களே குற்றச் செயல்களுக்கு தனி ஒரு முதன்மையான காரணம்” என்பதற்கு காவல் துறை அதிகாரிகளுக்கு இப்பொழுது “உறுதியான அத்தாட்சி” இருக்கிறது என்கிறது யு.எஸ்.நியுல் அண்டு உவர்ல்ட் ரிப்போர்ட். நீதித் துறையின் அண்மைக் கால ஆராய்சியில், நியு யார்க் நகரிலும் வாஷிங்டன் டி.சி.,-யிலும் கொலைக் குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டவர்களில் மூன்றில் இரண்டு பங்கு ஆட்களின் உடல் அமைப்பில் சட்ட விரோதமான போதை பொருட்களின் தடங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. நிபுணர்கள் எதிர்பார்த்ததைவிட இது இரண்டு மடங்கு அதிகமாக உள்ளது. அறிக்கையின் பிரகாரம், போதை பொருட்களை உபயோகிக்கும் பெரும்பாலானோர் விரும்புவது கொக்கேய்ன் ஆகும்.
இந்திய தற்கொலைகள்
தி டெரான்டோ ஸ்டரின் பிரகாரம், கனாடாவில் வாழும் இந்தியர்கள், மத்தியில் தற்கொலை வீதம், உலகிலுள்ள மற்ற எல்லா குல மற்றும் இன தொகுதிகளையும் மிஞ்சி விடுவதை கூட்டரசு புள்ளிவிவரம் காண்பிக்கிறது. 1978-1982 வரை அல்பர்டாவில் 146 இந்தியர்கள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள்—இது 1,00,000 இந்தியர்களுக்கு 61 பேர் என்ற வீதமாக அல்லது முழு மாகாணத்தை எடுத்துக் கொண்டால் ஏறக்குறைய 4 மடங்காக இது இருக்கிறது. லெத்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த மென்னோ போல்ட் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்: “இந்தியர்கள் மத்தியில் காணப்படுவது போல, [தற்கொலை வீதத்தில்] அதற்கு அருகாமையில் வரும் வேறு எந்த இனத் தொகுதியையும் நான் இன்னும் பார்க்கவில்லை.
வனங்களைக் காப்பாற்றுங்கள்
சர்வ தேசீய வன ஆண்டு டிசம்பரில் (1985) முடிவுக்கு வந்தபோது ஐ.நா. செய்திப்பட்டியல் பின்வருமாறு அறிவித்தது: “ஆண்டுதோறும் 27 மில்லியன் ஏக்கர்களுக்கும் அதிகமான பரப்புள்ள (11 மில்லியன் ஹெக்டர்கள்) வெப்ப மண்டல வனங்கள் அதாவது ஆஸ்டிரியாவைவிட பெரிய நிலப்பரப்புள்ள வனங்கள் மறைந்து கொண்டிருக்கின்றன. “இந்த வேகத்தில் காடுகள் தொடர்ந்து அழிக்கப்படுமேயானால் உலகின் பெரும்பகுதியான வெப்ப மண்டல வனங்கள் அழிக்கப்பட்டு விடும்” என்பதாக ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு எச்சரிக்கிறது. இந்தப் போக்கு தொடருமேயானால், பூமியிலுள்ள 10-20 சதவிகித தாவர மற்றும் மிருக உயிர்கள் 2000 ஆண்டுக்குள் துடைத்தழிக்கப்பட்டுவிடும். வனங்களை அழிப்பதை தடை செய்து அதற்கு எதிர்மாறான நடவடிக்கைகளை எடுத்தாலொழிய இது இவ்விதமாகவே சம்பவிக்கும்.
‘தங்கள் கடைசி நம்பிக்கையை எரித்துக் கொண்டிருக்கிறார்கள்’
விறகு செலவழிந்து போனதால் வளர்ச்சியடையாத தேசங்களிலுள்ள இலட்சக்கணக்கான ஆட்கள் இப்பொழுது வைக்கோலையும், பயிர்களின் சக்கையையும் சாணத்தையும் எரிபொருளாகப் பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால் அவ்விதமாகச் செய்வதன் மூலம் சிலர் ‘கீழ் நோக்கிச் செல்லும் சுற்றுப்புறச் சூழலின் சுற்றில் கடைசி வளைவில் தங்களைக் காணக்’ கூடும் என்பதாக எர்த் ஸ்கன் குறிப்பிடுகிறது. இது இலண்டனில் அமையப் பெற்றுள்ள வளர்ச்சி மற்றும் சுற்றுப்புறச் சூழல் பற்றிய செய்திகள் மற்றும் தகவல் பணித்துறையாகும். ஏன்? உரங்களை வாங்குவற்கு வசதியில்லாத ஏழை குடியானவர்கள் இப்பொழுது அவர்களுக்கு இலவசமாக கிடைக்கும் ஒரே உரமாகிய வைக்கோலை எரித்துக் கொண்டிருக்கிறார்கள். இதனால் நல்ல விளைச்சல் இருப்பதில்லை. வனங்கள் ஏற்கெனவே அழிக்கப்பட்டு வரும் இடங்களில் வைக்கோலை பயன்படுத்துவது அரித்தழிப்பு பிரச்னையை தீவிரமாக்குகிறது. எர்த் ஸ்கன் குறிப்பிடுகிறது: “ஏழை குடியானவர்கள் தங்கள் கடைசி நம்பிக்கையை எரித்துக் கொண்டிருக்கிறார்கள்.”
சாவுக்கேதுவான பிரச்னைகள்
மியுனிச்சில் அண்மையில் நடைபெற்ற தற்கொலை நடத்தைப் பற்றிய முதல் ஐரோப்பிய கருத்தரங்கு, ஆண்டுதோறும் ஜெர்மன் குடியரசில் பதிவு செய்யப்படும் 13,000 தற்கொலைகளில் பெரும்பாலானோர் 70 வயதுக்கும் மேற்பட்டவர்களே என்பதை வெளிப்படுத்தியது. ஜெர்மன் செய்தித்தாள் சுட்டோய்ச் ஜெய்டங் (Sūddeutsche Zeitung)-ன் பிரகாரம், அறிவிக்கப்படும் எண்ணிக்கையை விட தற்கொலை முயற்சிகள் 10-20 மடங்குகள் அதிகமாக இருப்பதாக பேராசிரியர் H.J. மோலர் மதிப்பிடுகிறார். சமுதாயத்தில் தனிமையும், பிரச்னைகளைத் தீர்க்க இயலாமையும் பெரும்பாலான தற்கொலைகளுக்குக் காரணமாக இருக்கிறது. தற்கொலை செய்து கொள்வதற்கு தனிநபரின் உரிமையை ஏற்றுக் கொள்ளும் நவீன போக்கு மனோ தத்துவ ஞானிகளைத் திடுக்குறச் செய்கிறது.