வங்கிகள் எந்தளவுக்குப் பாதுகாப்பானவை?
“இறுதியில் அனைத்து வங்கிகளும் மூடப்படுமளவுக்கு உலகமுழுவதுமுள்ள வங்கிகளில் சேமிக்கப்பட்டிருக்கும் முழு தொகையும் சேமித்தவர்களால் ஒரே சமயத்தில் திரும்பக்கேட்கப்படும் நிலையை அடைவது என்பது எங்கள் கருத்துபடி வெறுமனே காலத்தை உட்படுத்தும் ஒன்றுதான்—ஒரு குறுகிய காலத்தை உட்படுத்தும் ஒன்றாகவே இருக்கிறது.”—டென்னிஸ் டர்னரின் உங்கள் வங்கி தோல்வியுறும்போது.
“வங்கியில் சேமிக்கும் முறை முற்றிலும் பாதுகாப்பானது. எழும்பக்கூடிய பிரச்னைகள் என்னவாக இருந்தாலும், பெரியவையோ அல்லது சிறியவையோ, அவற்றைக் கவனித்துக்கொள்வதற்கு இயந்திர முறைகள் இடம் பெற்றிருக்கின்றன.”—பெடரல் டெப்பாஸிட் இன்ஷுரன்ஸ் கார்ப்பரேஷன் [FDIC] நிறுவனத்தின் முன்னாள் தலைவர் வில்லியம் ஐசக் என்பவரின் கூற்று யு.எஸ். நியூஸ் அண்டு உவர்ல்ட் ரிப்போர்ட்-ல் மேற்கோள் காட்டப்பட்டது.
படுக்கையின் கீழ் பணத்தைச் சேர்த்து வைப்பவர்கள் வெகு சிலராகிக் கொண்டிருக்கிறார்கள். தீ, திருட்டு ஆகியவற்றின் ஆபத்து ஒருபக்கமிருக்க, சேர்த்து வைக்கப்படும் பணம் அப்படியே தங்கிவிடுகிறது. அது தொகையளவில் கூடுவதுமில்லை, மாறாக பணவீக்கம், பணத்தின் மதிப்பு குறைக்கப்படுதல் ஆகிய காரணங்களினிமித்தம் அந்தப் பணத்தின் மதிப்பில் சரிவு ஏற்படுகிறது.
ஒருவருடைய சேமிப்பு வளர, அந்தப் பணம் பயன்படுத்தப்பட வேண்டும். பணம் பாதுகாப்பாக வைக்கப்படுவதற்கும், இலாபம் பெறுவதற்கும், அதிகமாக அங்கீகரிக்கப்பட்டிருப்பதும் பயன்படுத்தப்பட்டு வருவதும் வங்கிகள்தான். ஆனால் அவை எந்தளவுக்குப் பாதுகாப்பானவை? ஆரம்பத்தில் கொடுக்கப்பட்ட மேற்கோள்களில் காண்பிக்கப்பட்டிருப்பதுபோல், இதன்பேரில் பரவலான கருத்து வேறுபாடுகள் காணப்படுகிறது.
எச்சரிக்கையாயிருப்பதற்குக் காரணம் இருக்கிறதா?
“உலகமுழுவதும் வங்கிகளின் சேமிப்புமுறை முழுவதுமே ஒன்றுக்கொன்று சம்பந்தப்பட்டதாயிருக்கிறது,” என்று குறிப்பிடுகிறார். டேவிட் ராக்ஃபெல்லர், சேஸ் மான்ஹாட்டன் வங்கியின் ஓய்வுபெற்ற தலைவர். “வங்கிகள் ஒன்றோடொன்று ஏராளமான வியாபாரம் செய்கிறது, எனவே அதிகமாக ஒன்றோடொன்று சார்ந்த நிலையிலிருக்கின்றன.” இதன் விளைவு, எந்த ஒரு வங்கியோ அல்லது தேசமோ உண்மையில் தனியாக அல்லது சுயமாக நிற்பதில்லை. எனவே எப்பொழுதெல்லாம் ஒரு வங்கி தோல்வியுறுகிறதோ, அது தன்னோடு சேர்த்து மற்ற வங்கிகளையும் கீழே தள்ளிவிடுமோ, அல்லது வங்கித் தொழிலுக்கு அவசியமான மக்கள் நம்பிக்கையை குறைத்துவிடுமோ என்ற அச்சம் இருக்கிறது. அப்படியென்றால், மற்ற இடங்களிலுள்ள மக்கள், அதாவது பணத்தை வங்கிகளில் சேமித்து வைக்கும் மக்கள் தங்களுடைய பணத்தை வங்கியிலிருந்து எடுத்துக்கொள்வதற்காக விரைவார்கள். இந்தச் செயல் கட்டுப்படுத்த முடியாத வகையில் மற்ற வங்கிகளின் வீழ்ச்சிக்கு வழிநடத்துகிறது.
ஏதோ ஒரு இடத்தில் ஒரு வங்கி தோல்வியுறுவதால் சர்வதேச வங்கி முறையை வீழ்ச்சியுறச் செய்யும் வாய்ப்பு இருக்கிறதா? “தவிர்க்க முடியாததாகக் காணப்படும் எந்த ஒரு பெரிய வீழ்ச்சியையும் தடுப்பதற்குப் பலமான படிகளை மேற்கொள்ள ஐக்கிய மாகாணத்தையும் மற்ற நாடுகளையும் சேர்ந்த நிபுணர்கள் தயாராக இருக்கிறார்கள்,” என்கிறார் ராக்ஃபெல்லர். “அது ஏற்படுவது அரிது என்று நான் நினைக்கிறேன்.”
சமீப ஆண்டுகளில் உலகமுழுவதும் கடுமையான சில பிரச்னைகளும் வீழ்ச்சிகளும் இருந்தாலும், நிதிநிலையில் இக்கட்டான நிலையிலிருக்கும் நிறுவனங்களை மீண்டும் தூக்கிவிடுவதற்கு அரசுகள் பல படிகளை மேற்கொண்டிருக்கின்றன. “நிதி மந்திரிகளும் வங்கி நிறுவனத்தினரும் 1929-ன் கோரச் சம்பவத்தின் ஆவியால் இதுவரை இருந்திராதளவுக்கு அதிகமாக அச்சுறுத்தப்பட்டு வருகின்றனர், மற்றும் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் நிகழ்ந்த இந்த நிதி சம்பந்தப்பட்ட பெருவீழ்ச்சி மீண்டும் நிகழாதவாறு தவிர்ப்பதற்கு அவர்கள் அனைத்து முயற்சியும் எடுப்பார்கள்.—தவிர்க்கமுடியாத அதன் விளைவாகிய உலக மகா யுத்தம் ஒன்றைத் தவிர்க்கும் நம்பிக்கையுணர்வுடனாவது அப்படிப்பட்ட முயற்சியை மேற்கொள்வார்கள்,” என்று பிரான்ஸ் தேசத்தின் வார இதழ் எல்’ எக்ஸ்பிரஸ் விவரிக்கிறது. என்றபோதிலும் கவலை கொள்வதற்கான காரணம் இருக்கிறது.
கடன் பிரச்னை
வங்கிகள் ஆபத்தான ஒரு தொழில் முறை. அவை அநேகமாய்த் தங்களுக்குச் சொந்தமில்லாத ஏராளமான பணத்தைக் கையாளுகின்றன. கூடுதலாக, அவை பணத்தை உருவாக்குகின்றன, மற்றும் தங்களுடைய மொத்த மதிப்பீட்டைவிட அதிகமாக கடன் வழங்குகின்றன. ஓரளவுக்கு முன் எச்சரிப்புடன் செயல்பட்டாலும் வழங்கப்பட்ட சில கடன்கள் திரும்பி வராமற்போய்விடும் என்பதை அவை அறிந்திருக்கின்றன. எனவே இப்படிப்பட்ட கடன் தொகைகளை ஈடுகட்ட ஒரு குறிப்பிட்ட தொகை ஒதுக்கீடு செய்யப்படுகிறது. ஆனால் எதிர்பாராதளவுக்குக் கடன்கள் கெட்டுப்போகிறதென்றால், ஒதுக்கீடு செய்யப்பட்ட அந்தத் தொகை இக்கடன் இழப்பை அல்லது மக்கள் நம்பிக்கையிழந்து தங்கள் சேமிப்புப் பணத்தை ஒரே சமயத்தில் எடுக்கக் குவிந்து வருவதை ஈடு செய்ய முடியாது. “திரும்பிவராத கடன்களால் ஏற்படும் பங்கீட்டுத் தொகைக்கு ஆபத்து அதிகரிக்கும்போது வங்கியின் நிதி நிலையும் அதிக மோசமடைகிறது,” என்று நியு யார்க் பத்திரிகை குறிப்பிடுகிறது. “வங்கியின் முதலீட்டுப் பங்குத் தொகை முழுவதும் பயன்படுத்தப்படுவதால் வங்கிகள் வீழ்ச்சியடைகின்றன, அல்லது தோல்வியுறுகின்றன.”
இன்றைய வங்கிகளில் பல அந்த நிலையைத்தான் எட்டியிருக்கின்றன—அதிகமதிகமான கடன் தொகைகள் கெட்டுப்போகின்றன, அவற்றை ஈடுசெய்வதற்குப் போதுமான முதலீடு இருப்பதில்லை. இதற்குக் கொடுக்கப்படும் காரணங்களுக்குக் கணக்கில்லை. எண்ணை நெருக்கடி நிலை, வர்த்தகக் கட்டுப்பாடுகளும் நஷ்டங்களும், பொருளாதாரத்தில் சரிவு, நிலையற்ற வட்டி விகிதம், பணவீக்கம், பணத்தின் மதிப்பில் வீழ்ச்சி, அளவுக்கு மிஞ்சி கடன் வழங்கும் திட்டங்கள், கூட்டு நிறுவனங்களின் வீழ்ச்சி, கடுமையான போட்டி, விதிகளை மாற்றிக்கொள்ளுதல்—அறியாமையும் மூடத்தனமுங்கூட.
ஆனால் உயிருடனிருப்பதற்கு வழிகள் உண்டு—தாளில். கடன்களைப் புதுப்பித்தல், வழங்கப்பட்ட கடன்களின்பேரில் கால அவகாசத்தைக் கூட்டுதல், ஒரு வழியாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. மற்றொரு வழி, கடன்களை முழு மதிப்பில் பட்டியலிடுதல். என்றபோதிலும் முதலீட்டுத் தொகை முழுமையாகத் திருப்பிக் கொடுக்கப்படுவதற்கான எதிர்பார்ப்பு இல்லாமலிருக்கக்கூடும். பொதுவாக பயன்படுத்தப்படும் ஒரு முறை, கடன் பெற்றவர்களுக்குக் கூடுதல் கடன் வழங்கி அதன் மூலம் அவர்கள் தங்களுடைய வட்டியை செலுத்துவதாகும்.
இந்த முறைகள் அனைத்தும் முன்னேற்றமடையாத நாடுகளின் கடன்கள் சம்பந்தமாக வங்கிகளால் கையாளப்பட்டு வருகிறது. இதுதானே சர்வ தேச வங்கி முறையின் நிலையான தன்மையை ஆபத்துக்குள்ளாக்குவதாகப் பலரால் அஞ்சப்படுகிறது. ஓர் உலக வங்கி மேற்கொண்ட சுற்றாய்வின்படி, முன்னேறும் நாடுகளில் நூற்றுக்கும் அதிகமான நாடுகளுக்கு வழங்கப்பட்டிருக்கும் வெளிக்கடன்கள் மட்டும் 1985-ன் கடைசியில் மொத்தம் 95 ஆயிரம் கோடி டாலர்களாகும், கடந்த ஆண்டைவிட 4.6 சதவிகிதம் அதிகமாகும். ஏற்கெனவே அதிகமாக இருந்தபோதிலும் 1986-ன் கடைசியில் 1.01 இலட்சம் கோடி டாலர்களாக அதிகமாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஏன்? ஏனென்றால், அந்தத் தேசங்களில் பல, தாங்கள் கடனாகப் பெற்றுக்கொண்ட தொகையைத் திருப்பிக்கொடுக்க முடியாத நிலையிலிருக்கின்றன, எனவே கூடுதல் அவகாசத்தையும் பணத்தையும் வற்புறுத்துகின்றன. வழங்கப்பட்டிருக்கும் தொகை பெரியது என்ற காரணத்தால் வங்கிகள் அதற்கு சம்மதித்திருக்கின்றன. ஒருவர் இப்படியாகச் சொன்னார்: “நான் உனக்கு ஒரு ரூபாய்க் கடன்பட்டிருந்தால் நான் உன்னுடைய அதிகாரத்திலிருக்கிறேன், ஆனால் நான் உனக்கு ஒரு லட்சம் கடன்பட்டிருந்தால் நீ என்னுடைய அதிகாரத்திலிருக்கிறாய்.”
ஆழ்ந்த கடனில் விழுந்திருக்கும் சில தேசங்கள் வறுமைப்போக்கும் திட்டங்களால் சோர்ந்து போய் பெற்றுக்கொண்ட கடனை திருப்பிக்கொடுக்காமலிருக்கத் தீர்மானிக்கக்கூடும். கடன்களைத் திருப்பிக் கொடுக்கும்படி வங்கிகள் வல்லாட்சிகளை வற்புறுத்த முடியாது. “வங்கிகளுக்கு உலக கடன் நெருக்கடி அர்த்தமற்றதாக இருக்கிறது,” என்று சேவீ பத்திரிகை கூறுகிறது.” அவை கடன்களை வழங்குவதிலிருந்துதான் பெரும்பகுதியான இலாபத்தைப் பெறுகின்றன. பெற்றுக்கொண்ட பெரிய கடன்களை நாடுகள் திருப்பிக்கொடுக்க இயலாமலிருக்கும்போது வங்கிகளின் இலாபங்கள், முதலீடுகள் மற்றும் பங்கீட்டின் விலைகள் வெகுவாகக் குறைந்துவிடும் . . . கடனைத் திருப்தித் தராத முன்னேற்றமடையாத நாடுகளின் நிலை நிதி முறையை முறித்து, பெரிய வங்கிகளின் வீழ்ச்சிக்கு அல்லது தோல்விக்கு வழிநடத்தக்கூடும்.
வெறுமனே நான்கு நாடுகள்—மெக்ஸிக்கோ, பிரேஸில், ஆர்ஜன்டீனா, மற்றும் வெனீஸூலா—தங்கள் கடனைத் திருப்பிக்கொடுக்காமலிருப்பது ஐக்கிய மாகாணங்களின் ஒன்பது பெரிய வங்கிகளை விழச்செய்துவிடும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். ‘கடனைத் திருப்பிக்கொடுக்கத் தவறும் அந்த உண்மையான நிலை ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது,” என்று தி நியு யார்க் டைம்ஸ் பத்திரிகை குறிப்பிடுகிறது. “அதற்கான போற்றுதல் சொற்பொருள் ஆய்வுக்குரியது. இப்பொழுதெல்லாம் போர்கள் அதிகாரப்பூர்வமாக ‘அறிவிக்கப்படுவது’ இல்லை. அதுபோல் கடன்களைத் திருப்பிக் கொடுக்கத் தவறியவர் என்று எவரும் சட்டப்பூர்வமாக அறிவிக்கப்படுகிறதில்லை.”
என்னுடைய வங்கி பாதுகாப்பானதா?
ஒரு வங்கி பலமாக, நொடிந்துவிடாத நிலையிலிருக்கிறது என்று ஒருவர் சொல்லக்கூடுமா? “ஒரு வங்கி என்ன நிலையிலிருக்கிறது என்பதை அதன் வாடிக்கையாளரில் பெரும்பான்மையினர் சொல்ல முடியாது,” என்று மாறும் காலங்கள் என்ற ஆங்கில பத்திரிகை குறிப்பிடுகிறது. தி நியு யார்க் டைம்ஸ் குறிப்பிடுவதாவது: “ஒரு வங்கியின் ஆரோக்கிய நிலைகுறித்து வெளி நபர் ஒருவர் நிதானிப்பது கூடாத காரியமாயிருக்கிறது என்று அனுபவம் காண்பிக்கிறது. சமீப ஆண்டுகளில் வீழ்ச்சியுற்ற அல்லது தோல்வியுறும் நிலையிலுள்ள ஒவ்வொரு பெரிய வங்கியும் வங்கி முதலீட்டு ஆய்வாளர்களின் ஆழ்ந்த கவனிப்பின் கீழ் இருந்து வருகிறது. . . . வங்கிகளின் இயக்கத்தை நிலைபடுத்துபவர்களும் தணிக்கையாளர்களுங்கூட கவலைக்கிடமான பிரச்னைகளைக் கடைசி கட்டம் வரையில் கணிக்க முடியாதவர்களாயிருந்திருக்கின்றனர்.
சாதாரணமாக வாடிக்கையாளர்கள் வங்கியின் நிலையை மேலோட்டமாகத்தான் கவனிக்கிறார்கள்: அளிக்கப்படும் சேவைகளின் வகைகள், தான் நட்பான முறையில் நடத்தப்படுதல் மற்றும் வேகமாகப் பணியை நிறைவேற்றுதல் ஆகியவற்றைத்தான் கவனிக்கின்றனர். உண்மையில், வங்கிகள் விளம்பரம் செய்யும் இடங்களில் தங்கள் வங்கி ஒரு நண்பன், உடனடியாக கடன் உதவி, விசேஷ சேமிப்புத் திட்டங்கள் மற்றும் பணிகள், வசதிகள் ஆகியவற்றைத்தான் அழுத்திக் காட்டுகின்றனர். சில சமயங்களில் புதிய கணக்குகளைத் துவங்குகிறவர்களைப் பெருக்கிட பரிசுத் திட்டங்களும் வழங்கப்படுகிறது. ஆனால் வங்கியின் நிதி நிலைமை குறித்து ஒன்றும் சொல்லப்படுவதில்லை. வங்கியின் சேவைகள் முக்கியமானவை என்பது உண்மைதான். கொடுக்கப்படும் வட்டி விகிதம், அது எப்படி கணக்கிடப்படுகிறது என்பதும் கவனிக்கப்பட வேண்டும், ஏனென்றால் பலன்கள் வித்தியாசப்படும் சேமிப்பு செய்கிறவர்களுக்கு முக்கியமான காரியம், அவர்களுடைய பணத்தின் பாதுகாப்பு.
இந்த இடத்தில், சேமிப்பு ஈட்டுறுதிதான் முக்கியமானது: “சேமிப்பு ஈட்டுறுதியால், வங்கி முறைக்கு முழு வீழ்ச்சி ஏற்பட்டாலொழிய, இவை வங்கிகள் மற்றும் வங்கி முதலீட்டுத் தொகையை வழங்கியவர்களின் பிரச்னையாகும்., பணம் சேமித்து வைப்பவர்களின் பிரச்னை அல்ல,” என்று தி அட்லாண்டிக் மன்த்லி கூறுகிறது. “தனிப்பட்டவர்களின் வாழ்க்கைச் சேமிப்பு முழுவதையும் இழந்துபோகச் செய்த முப்பதுகளில் ஏற்பட்டதுபோன்ற வங்கிகளின் வீழ்ச்சி இன்று ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை.
எனவே, சேமிப்புக் கணக்குகள் ஈட்டுறுதி உடையனவா என்பதை நிச்சயப்படுத்திக்கொள்வது நல்லது. அரசு அளிக்கும் ஈட்டுறுதி முறை சிறந்தது. இதற்கு ஓர் உதாரணமாக இருப்பதுதான் ஐக்கிய மாகாணங்களின் பெடரல் டெப்பாஸிட் இன்ஷுரன்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனம். தங்களுடைய சேமிப்புக் கணக்கு ஈட்டுறுதி செய்யப்பட்டிருக்கிறது என்று சொல்லப்பட்ட சிலர், தங்கள் சேமிப்புக் கணக்கு தனியார் நிறுவனத்தாரிடம் ஈட்டுறுதி செய்யப்பட்டிருப்பதைக் கண்டனர்; வங்கிகள் தோல்வியுற்றபோது, சேமிப்புக் கணக்கைக் கொண்டிருந்தவர்கள் எல்லோருக்கும் பணத்தைத் திருப்பிக் கொடுப்பதற்கு அந்தத் தனியார் நிறுவனத்தினரிடம் போதுமான பணம் இல்லை. அதே சமயத்தில் ஈட்டுறுதி செய்யப்பட்டிருக்கும் தொகையையும் பார்த்துக்கொள்ளுங்கள். உங்கள் கணக்கில் சேமிப்புத் தொகை வரம்பை மீறினால், மற்ற வங்கிகளில் சேமிப்புக் கணக்கைத் துவக்கிக்கொள்ளுங்கள், அப்பொழுது உங்கள் எல்லா பணமும் ஈட்டுறுதிக்கான வரம்பிற்குள் இருக்கும்.
எதிர்காலம் என்னவாயிருக்கும்?
தனிப்பட்ட வங்கிகள் வீழ்ச்சியுறுவது தொடரும், அவற்றின் எண்ணிக்கையும் உயரக்கூடும். என்றபோதிலும், வங்கி தொழில் முறைக்கு மிக முக்கியமான காரியம், அதில் நம்பிக்கை காக்கப்பட வேண்டும் என்பதே. “பாதிக்கப்பட்ட வங்கிகளிலிருந்து தங்களுடைய சேமிப்பை எடுத்துக்கொள்வதற்காக இவற்றைக் காரணமாக விளக்கும்போதுதான் இதில் நெருக்கடி நிலை ஏற்படும்,” என்று அதிர்ஷ்டம் பத்திரிகை கூறுகிறது. எனவே, இந்த வங்கித் தொழில் முறையைப் பலப்படுத்துவதற்காகவும் நம்பிக்கையை உறுதிபடுத்துவதற்காகவும் எல்லா முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகிறது.
முன்னேற்றமடையாத நாடுகளின் கடன்களைச் சமாளிக்கும் அளவுக்குக் குறைப்பதற்கான திட்டங்களும் அவர்களுடைய கடமைகளைப் பூர்த்தி செய்வதற்காக உதவிகளும் செயல்படுத்தப்படுகிறது. “கடைசியாக, இந்தப் பெரிய நிதிநிலை நஷ்டம் உலகமுழுவதுமுள்ள வரிகட்டும் ஆட்களால் ஏற்றுக்கொள்ளப்படும்,” என்கிறார் முன்னாள் பிரஞ்சு தொழில் திட்ட மந்திரி ஆல்பின் சாலன்டன்.
அப்படியென்றால், வங்கிகள் எந்தளவுக்குப் பாதுகாப்பானவை? வங்கி அதிகாரி ஒருவர் இப்படியாகச் சொன்னார்: “வங்கிகளை ஆதரிக்கும் அரசாங்கங்கள் எந்தளவுக்குப் பாதுகாப்பானவையோ அந்தளவுக்கு வங்கிகளும் பாதுகாப்பானவை.” இப்போதைக்கு அது உறுதியளிப்பதாக இருந்தாலும், சிந்திக்கும் ஆட்கள் சற்று தாமதிப்பதற்குக் காரணமிருக்கிறது. ஏன்? ஏனென்றால், கடவுளுடைய நித்திய ராஜ்யத்தால் எல்லா பூமிக்குரிய அரசாங்கங்கள் முழுமையாக அழிக்கப்பட்டு மாற்றப்படும் என்று பைபிள் முன்னறிவிக்கிறது. (தானியேல் 2:44) மற்றும் தற்போதைய ஒழுங்குமுறையின் முடிவைச் சுட்டிக்காட்டும் இந்த 20-ம் நூற்றாண்டு சம்பவங்களை அது குறிப்பிட்டுக் காட்டுகிறது.—மத்தேயு 24:3, 6, 7, 21, 22.
அந்தச் சமயத்தில் தங்களைப் பாதுகாத்துக்கொள்வதற்காக மக்கள் பொன்னையும் வெள்ளியையும் தெருவில் எறிவார்கள் என்று பைபிள் சொல்லுகிறது. (எசேக்கியேல் 7:19; செப்பனியா 1:18) இந்த விலையுயர்ந்த பொருட்களின் விஷயத்தில் அது உண்மையாக இருந்தால், அவற்றை சார்ந்த தேசிய பணத்தையும், நிதி நிறுவனங்களையும் எந்தளவுக்கு நம்பியிருக்கலாம். அவற்றை ஆதரிக்கும் அரசுகள் அழிந்துவிட்டிருக்கும்!
எனவேதான் இயேசு பொருத்தமாக இந்த எச்சரிப்பைக் கொடுத்தார்: “பூமியிலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்துவைக்க வேண்டாம்; இங்கே பூச்சியும் துருவும் அவைகளைக் கெடுக்கும்; இங்கே திருடரும் கன்னமிட்டுத் திருடுவார்கள். பரலோகத்திலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்து வையுங்கள்; அங்கே பூச்சியாவது துருவாவது கெடுக்கிறதுமில்லை; அங்கே திருடர் கன்னமிட்டுத் திருடுகிறதும் இல்லை. உங்கள் பொக்கிஷம் எங்கேயிருக்கிறதோ அங்கே உங்கள் இருதயமும் இருக்கும். . . . இரண்டு எஜமான்களுக்கு ஊழியஞ்செய்ய ஒருவனாலும் கூடாது.”—மத்தேயு 6:19-21, 24. (g86 10/22)
[பக்கம் 9-ன் பெட்டி]
வங்கி சேமிப்பு நிலை—மற்றவர்கள் என்ன சொல்லுகிறார்கள்
● “கடன்பட்ட தேசங்களின் அரசுகளும் சர்வதேச நிதி நிறுவனமும், பெடரல் சேம வாரியமும், நூற்றுக்கணக்கான அமெரிக்க வங்கிகளும் அயல்நாட்டு வங்கிகளும் ஒட்டுமொத்தமாக 1930-கள் முதல் மிக மோசமான பெரிய நிதி நெருக்கடியை எதிர்ப்படுகிறது என்று கூறுவது மிகையாகாது.”—நியு யார்க் பத்திரிகை.
● “தற்போதைய கொள்கைகள் மிகவும் நிலையற்ற ஒரு பாதுகாப்பைத்தான் அளிக்கிறது. உலகின் நிதி நிலைப் பாதுகாப்பு ஒரு கத்தி முனையில் நிறுத்தப்படுகிறது. கடன் நெருக்கடி, முன்னேறும் நாடுகளின் முன்னேற்றத்தைப் பாதிப்பது மட்டுமல்லாமல், தொழில்துறையில் முன்னேறிய நாடுகளின் வங்கித் தொழிலின் நிலையான தன்மையையும் அச்சுறுத்துகிறது.”—பொதுவுரிமை நாடுகளின் ஒரு நிபுணர்க் குழுவின் அறிக்கை, தி கார்டியன், இலண்டன்.
● “ஐக்கிய மாகாணங்களின் வங்கிகளுக்குக் கடன்பட்டிருக்கும் முன்னேற்றமடையாத நாடுகளின் பெருங் கடன்தொகை அமெரிக்க வங்கித் தொழில் முறைக்கு மேல் நிறுத்தப்படும் ஒரு பனிப்பாறைபோன்று இருக்கிறது.”—தி நியு யார்க் டைம்ஸ் பத்திரிகை.
● சர்வதேச வங்கித் தொழில் முறையில், முதல் ரக கடன் நெருக்கடி நிலைக்கு அஸ்திவாரம் போடப்பட்டிருக்குமளவுக்கு உலகின் மொத்தக் கடன்தொகை பெருகிவிட்டிருக்கிறது.” “உலக கடன் நெருக்கடியின் புகழ்ச்சி என்னவென்றால், வங்கிகள் இந்த நெருக்கடியிலிருந்து வெளிவர முடியாதளவுக்கு ஆழமாகப் போய்விட்டன.”—சேவீ பத்திரிகை.
● 1930-களில் இருந்த நிலைமையைவிட இன்றைய நிலை அதிக மோசமாயிருக்கிறது.”—மேற்கு ஜெர்மனியைச் சேர்ந்த பொருளியலர் கர்ட் சீச்பேக்கர், யு.எஸ். நியுஸ் அண்ட் உவர்ல்ட் ரிப்போர்ட்.
[பக்கம் 10-ன் வரைப்படம்]
கடுமையாகக் கடன்பட்டிருக்கும் பதினேழு வளரும் நாடுகள்
நாடு அயல் நாட்டுக் கடன் கடன் சதவிகிதம்
(யு.எஸ் $.கோடிகள்) தனியார் நிறுவனங்கள்a
ஆர்ஜன்டீனா 5,080 86.8
பொலிவியா 400 39.3
பிரேஸில் 10,730 84.2
சில்லி 2,100 87.2
கொலம்பியா 1,130 57.5
கோஸ்டா ரிக்கா 420 59.7
ஈகுவேடார் 850 73.8
ஐவரி கோஸ்ட் 800 64.1
ஜமேக்கா 340 24.0
மெக்ஸிக்கோ 9,900 89.1
மொராக்கோ 1,400 39.1
நைஜீரியா 1,930 88.2
பெரூ 1,340 60.7
பிலிப்பீன்ஸ் 2,480 67.8
உரகுவே 360 82.1
வெனீஸுலா 3,360 99.5
யுகோஸ்லேவியா 1,960 64.0
மொத்தம் 44,590 80.8
[அடிக்குறிப்புகள்]
a பெரும்பாலும் வர்த்தக வங்கிகள்
ஆதாரம்: உலக வங்கி, பட்டியல், 1985-86 பதிப்பு, பிரசுரிப்பு: உலக வங்கி, உவாஷிங்டன் D.C.
[பக்கம் 8-ன் படம்]
பெரிய வங்கிகள் பல வீழ்ச்சியுற்றால், அதன் தொடர் பாதிப்பு வங்கித் தொழில்முறை முழுவதையும் அழித்திடக்கூடும்