விழித்தெழு! பேச்சு நல ஆய்வு வல்லுநரை விசாரிக்கிறது
டாக்டர் ஆலிவர் பிளட்ஸ்டீன் தெற்றுவாய் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் பேரில் ஒரு பிரபல வல்லுநர். இவரை விழித்தெழு! நிருபர் பேட்டி கண்டார். இந்தப் பேட்டியின்போது கலந்துரையாடப்பட்ட சில கேள்விகள் இங்கு கீழே கொடுக்கப்பட்டிருக்கின்றன.
இந்தத் துறையில் நீங்கள் எவ்வளவு காலமாக பணியாற்றுகிறீர்கள் டாக்டர் பிளட்ஸ்டீன்?
முப்பத்தேழு ஆண்டுகள்.
தெற்றிப்பேசும் ஆட்களுடன் பழகுவதனால் பழகுபவனும்கூட தெற்றுவாயனாக ஆகிவிடக்கூடுமா?
இது ஒரு முக்கியமான கேள்வி, ஏனெனில் இது உண்மை என்று அநேக ஆட்கள் நம்புகிறார்கள். நாங்கள் அறிந்திருக்கிறபடி அபாயம் ஏதுமில்லை. தெற்றுவாயரின் பேச்சைப் பின்பற்றுவதன் மூலம் அது கற்றுக்கொள்ளப்படும் ஒன்றல்ல.
தெற்றுவாயர் உணர்ச்சி சம்பந்தமாய் மற்றவர்களோடு ஒத்திணங்கிப்போக முடியாதவர்களா?
தெற்றுவாயரைப்பற்றி—அவர்கள் ஒதுங்கி வாழ்பவர்கள், தனிமையுணர்வுள்ளவர்கள், மற்றவர்களுடன் தோழமைக்கொள்ள விரும்பாதவர்கள், கூச்சப்படுகிறவர்கள், விரைப்பானவர்கள்—என்ற ஒரே விதமான ஒரு பொதுக்கருத்து இருக்கிறது. ஆனால் தெற்றுவாய் உள்ளவர்களுடைய தனி சுபாவங்களின்பேரில் செய்யப்பட்ட ஆராய்ச்சியின்படி உண்மையில் அது அவ்வாறு இல்லை.
தெற்றுவாயர் நரம்புக்கோளாறுடையவர்கள் என்பது ஒரு காலத்தில் பரவலாக நம்பப்பட்டு வந்தது. ஆனால் பேச்சு சார்ந்த நோய்க்குறி ஆய்வு, அந்தக் கருத்தை இப்பொழுது கைவிட்டுவிட்டது. இதற்கான காரணம் ‘1930’-ம் ‘40’-ம் மற்றும் ‘50’-ம் ஆண்டுகளில் தெற்றுவாயர்களுடைய தனி சுபாவங்களின் பேரில் மிகத்திரளான ஆய்வுகள் நடத்தப்பட்டன. உணர்ச்சி சம்பந்தமாய் ஒத்திணங்கிபோகிறவர்களா என்ற சோதனைகளில் பெரும்பாலான தெற்றுவாயர் இயல்பான வட்டத்திற்குள்ளாகவே இருந்தனர் என்பதை அது காண்பித்தது. இந்தத் தெற்றுவாயோடு எந்த ஒரு குறிப்பிட்ட வகையான தனிச்சுபாவமும் இணைந்தில்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
தெற்றுவாயர் பேச்சுத்திறன் உள்ளவர்களைப் போன்றே அறிவுத்திறனுள்ளவர்களா?
ஆம், நிச்சயமாகவே! உண்மையில் கல்லூரிகளில் திக்கிப்பேசாதவர்களைக் காட்டிலும், தெற்றுவாயர்கள் அதிகப்படியான அறிவுக்குறி எண்களைக் கொண்டிருந்ததாக அநேக ஆராய்ச்சிகள் கண்டறிந்திருக்கின்றன.
தெற்று வாயிலிருந்து யாராகிலும் குணம் அடைகிறார்களா?
துவக்ககால பிள்ளைப் பருவத்திற்கும், முதிர்ந்த பருவத்திற்கும் இடையே சில சமயங்களில் தெற்றுவாய் மறைந்து போவதற்குரிய திட்டவட்டமான சார்பு இருக்கிறது. இதற்கான சிறந்த சான்று ஒரு வேளை 80 சதவிகிதத்திற்கும் அதிகமான பிள்ளைகள் முதிர்ந்த பருவத்துக்கு முன்னே தெற்றிப்பேசுவதை நிறுத்திவிடுகின்றனர்.
அப்படியானால் ஒரு பிள்ளைக்குத் தெற்றும் பிரச்னை இருக்கிறதென்றால் அதைக் குறித்து பெற்றோர் கவலைப்படவேண்டிய அவசியமில்லை என்பதை இது குறிக்குமா?
துவக்ககால பிள்ளைப் பருவத்தில் நியாயமான ஒரு குறுகிய காலத்திற்குப் பிற்பாடு பிள்ளை சுகமடைவதற்கான வாய்ப்புகள் மிக நன்றாய் இருக்கிறது என்றே நாங்கள் வழக்கமாய் சொல்லுகிறோம். ஆனால் எந்தப் பிள்ளை சுகமடையும் எந்தப் பிள்ளை சுகமடையாது என்பதை நாங்கள் முன்னறிவிக்க முடியாது. எனவே எங்கள் கொள்கை என்னவெனில்: பெற்றோர் யாராகிலும் கவலையுள்ளவர்களாக இருந்தால் பிள்ளையை மருத்துவரிடம் கொண்டுவாருங்கள்; பிள்ளையை பரிசோதித்துப் பார்த்து அதற்கு உதவியளிக்கக்கூடுமா என்று தெரிந்துகொள்ளுங்கள். நாங்கள் இதுவரையில் அறிந்திருக்கும்படி தெற்றும் பிள்ளை எவ்வளவு சிறியதாக இருக்கிறதோ அவ்வளவு அதிகமாய் அது குணமடைவதற்கான வாய்ப்பும் இருக்கிறது. தெற்றுதல் நீடிக்குமானால், உதவியில்லாமல் பிள்ளை சரியாகிவிடும் என்ற வாய்ப்புகளும் படிப்படியாக குறைந்து கொண்டே போகிறது.
இன்று உபயோகத்திலிருக்கும் குணப்படுத்தும் முறைகள் என்ன?
இரண்டு குணப்படுத்தும் முறைகள் இருக்கின்றன. ஒன்று தெற்றுபவர்களுக்குப் பயத்தைக் குறைக்க கற்றுக்கொடுப்பது, தங்கள் பிரச்னையைக் குறித்த சீரான நோக்குநிலை கொண்டிருக்கும்படி செய்தல், மற்றொன்று திக்குதலின் பேரில் நேரிடையாக செயற்படுவது.
தெற்றிப்பேசும் முறையின் பேரில் நேரிடையாக செயல்படுவதற்கு இப்பொழுது இரண்டு மிக பொதுப்படையான வெவ்வேறு வழிகள் இருக்கின்றன. ஒரு வழியானது 19-ம் நூற்றாண்டு முதற்கொண்டு இருந்துவரக்கூடிய மிகச் சாதாரணமான ஒரு வழியாக இருக்கிறது. அது தெற்றுபவர்கள் வித்தியாசமான முறையில் பேசுவதற்குக் கற்றுக்கொடுப்பதாகும். தெற்றுவாயர் தாங்கள் பழக்கப்படாத—இழுத்திசைத்துப்பேசுவது, குரலோசையில் மாறுதலில்லாமல் பேசுவது, மெதுவாக பேசுவது, அல்லது தங்கள் சுவாசித்தலை மாற்றியமைத்துக்கொள்வது போன்ற—ஏதாவதொரு வகையான பேச்சு முறையை எவ்வளவு சீக்கிரமாக பயன்படுத்துகிறார்களோ அந்தளவுக்கு அது வழக்கமாய் உடனடியாக தட்டுத்தடங்கலின்றி பேசுவதற்கு வழிநடத்துகிறது. எனவே குணப்படுத்தும் சிகிச்சை முறைகளில் இதைப் பயன்படுத்துவது அதிக கவர்ச்சியூட்டுவதாயிருக்கிறது. மேலும் இது உண்மையில் இன்று சர்வசாதாரணமாய் பயன்படுத்தும் முறையாகவும் இருந்துவருகிறது. எனினும் இதற்கு சில குறைபாடுகளும் இருக்கிறது. அதிக வினைமையான குறைபாடு ஒன்று என்னவெனில் ஒரு சில மாதங்களுக்குப் பிற்பாடு மிகக்கடுமையான விதத்தில் பழைய நிலைக்கே திரும்பிவிடுவதாகும். ஒரு சில தெற்றுவாயர்கள் நிரந்தரமாக உதவப்படுகிறார்கள். ஆனால் பெரும்பாலான ஆட்களுக்கு இது பழைய நிலைக்கே திரும்பிவிடுவதில் விளைவடைகிறது. மேலும் இது தெற்றுபவர், தன்னுடைய பேச்சை தொடர்ந்து திருத்தி வழிநடத்துவதற்கு வற்புறுத்துகிறது. இது பெரும்பாலும் இயல்புக்கு மாறிய வகையான பேச்சில் விளைவடையும்.
தெற்றிப் பேசும் முறையின் பேரில் நேரிடையாக செயல்படுவதற்கு இரண்டு வழிகள் இருப்பதாக சொன்னீர்களே, அந்த மற்றொரு வழி என்ன?
அந்த மற்றொரு தத்துவம் தெற்றுபவர்களுக்கு வேறு விதமாய் பேச கற்றுக்கொடுப்பது அல்ல, மாறாக அவர்கள் வேறுவிதமாய் தெற்றிப்பேசுவதற்கு கற்றுக்கொடுப்பதாகும். இது ஒருவேளை விநோதமாய் தொனிக்கக்கூடும், ஆனால் 1930-ம் ஆண்டுகளில் துவங்கிய ஒரு இயக்கம் இருக்கிறது. அது இன்னமும் செல்வாக்கு மிகுந்ததாக இருக்கிறது. அது தெற்றும் ஆட்களுக்குப் பின்வருமாறு சொல்லிற்று: இழுத்திசைத்துப் பேசுவது, ஒத்து ஊதல் போன்று பேசுவது போன்ற விநோதமான முறைகளில் பேசுவதன் மூலம் தெற்றுவதை தவிர்க்க தந்திரங்களைப் பயன்படுத்தாதீர்கள். ஆனால் மாறாக, தெற்றும் எதிர்விளைவை ஓரளவுக்கு இயல்பான முறையில் அதிக தளர்ச்சியான ஒரு முறையில், இயல்பான பேச்சு தடங்கலே என்று தோன்றக்கூடிய ஒரு முறையில் சிறிது மாற்றியமைத்திடுங்கள். பேசும்போது நம்மெல்லாருக்குமே சிறிது தடங்கல் ஏற்படுகிறதல்லவா?
இது அதிக படிப்படியாக செயற்படும் ஒரு முறையாகும். ஆனால் அதிலும்கூட சில குறைபாடுகள் இருக்கின்றன. அந்த மிகப்பெரிய ஒரு குறைபாடானது தெற்றுபவர் முழுமையாக தடங்கலின்றிப் பேசும் நிலையை அடைவது, அரிதான காரியமாகிவிடுகிறது. இந்த முறையைப் பயன்படுத்துவதானது பெரும்பாலும் தெற்றுபவருடைய தெற்றும் தன்மையின் கடுமையை குறைப்பதற்கு உதவுகிறதே தவிர அதை அறவே ஒழித்துவிட அல்ல.
நான் உண்மையில், உங்களிடம் சொல்லிக்கொண்டிருப்பது என்னவெனில், இன்று உயர்தரமான ஒரு முறையில் தெற்றுவாய்க்கு சிகிச்சை அளிப்பதற்கு எந்த ஒரு வழியும் இல்லை என்பதே. ஆனால் அநேக தெற்றுவாயர்களுக்குப் பெருமளவில் உதவி கொடுக்கப்படலாம்.
மெதுவாக அல்லது ஆழமாக சுவாசித்துவிட்டு பேசு என்று தெற்றுபவருக்குச் சொல்வது உதவி செய்யுமா?
இப்படிப்பட்ட ஒரு கேள்விக்கு நேரிடையாக விடையளிப்பது கடினம். ஏனெனில் ஆளுக்கு ஆள் மக்கள் மிகவும் வேறுபடுகின்றனர். இப்படிப்பட்ட காரியங்கள் பிள்ளைக்குச் சொல்லும்படி பெற்றோருக்கு அறிவுரை கொடுப்பது மிக மோசமான ஒரு காரியம் என்று நான் நம்பும்படி கற்பிக்கப்பட்டேன். மேலும் என்னுடைய சொந்த அனுபவத்திலிருந்து நான் நம்புவதென்னவெனில், இப்படிப்பட்ட காரியங்களைச் சொல்லுவதன் மூலம் பெற்றோர் பிரச்னையை எளிதில் மிக மோசமானதாக ஆக்கிவிடக்கூடும். ஆழமாக சுவாசித்துவிட்டு பேசும்படியான அறிவுரையை பெற்ற அநேக பிள்ளைகளுடைய காரியத்தை நாங்கள் பார்த்திருக்கிறோம். மறுநாளே பிள்ளை தெற்றிப்பேசுவது மட்டுமல்லாமல் கஷ்டப்பட்டு சுவாசிக்கவும் ஆரம்பித்துவிட்டது. மேலும், அது அவ்வளவு எளிய காரியமல்ல. ஏனெனில் பிள்ளைக்கு உதவி செய்யவேண்டும் என்ற முயற்சியில் பெற்றோர் அவர்களுக்குச் சொன்ன காரியங்களால் தெற்றுவாயை மேற்கொண்ட பிள்ளைகள் அநேகர் இல்லை என்று நான் நிச்சயமாயிருக்கிறேன். எனவே இது ஒரு தனிப்பட்ட விவகாரம். ஆனால் ஒரு தந்தையாக நான் பிள்ளையிடம் நீ மெதுவாக பேசு, ஆழமாக சுவாசித்துவிட்டு பேசு, பேசுவதற்கு முன்பு யோசி அல்லது, இதைப் போன்ற சில காரியங்களைச் செய் என்று நான் தொடர்ந்து சொல்ல மாட்டேன். அதைக் குறித்து நான் அதிக கவனமாக இருப்பேன்.
சுயமாக தனக்குத்தானே உதவி செய்துகொள்ள தெற்றுபவர் ஏதாவது செய்யக்கூடுமா?
தெற்றிப் பேசும் பிரச்னையுள்ள ஒரு நபராக கூடுமானவரையில் பேசும் சூழ்நிலைமைகளை எவ்வாறு கையாளுவதென்பதைக் கற்றுக்கொள்வது மிக முக்கியமான ஓர் காரியமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். இதன் மூலம் நான் அர்த்தப்படுத்துவது என்னவெனில், தெற்றுபவர் தான் தெற்றுகிறார் என்பதை மறைக்கக்கூடாது. தன்னுடைய தெற்றும் கோளாறைக் குறித்து மற்றவர்களிடம் ஏதாவது ஒரு சாதாரண குறிப்பை சொல்ல கற்றுக்கொள்ள வேண்டும். இக்காரியம் வழக்கமாக தன் மீது கடும் அழுத்தங்களை ஏற்படுத்துவதால் அவன் தன்னை இயல்பாக பேசும் ஒருவனைப் போல் காட்டிக்கொள்ளக்கூடாது. தான் தெற்றுபவன் என்றும் அது உறையாடலின் ஒரு பாகமாக இருக்கலாம் என்றும் மேலும் அது ஏற்படும்போது அவர்கள் சங்கடமடைய வேண்டிய அவசியமில்லை என்றும் தன்னோடு பழகக்கூடிய அனைவரும் அறிந்துகொள்ளும்படி செய்ய வேண்டும்.
கூடுமானால் தெற்றுவதைக் குறித்து தமாஷ் பண்ணவும்கூட கற்றுக்கொள்ளலாம். தெற்றுவதில் என்ன நகைச்சுவை இருக்கக்கூடும் என்று தெற்றுபவர்கள் நினைக்கக்கூடும். ஆனால் எனக்குத் தெரிந்த ஒரு தெற்றும் குறையுள்ள ஒருவர் தனக்கு வார்த்தை வெளிவராமல் சிக்கும்போது பின்வருமாறு சொல்லிவிடுவார்: “வார்த்தைகளின் இடையில் கொஞ்சம் இடைவேளைகள் இருக்கும்” இப்படிச் சொல்வது அவருடைய இறுக்கநிலையை தளர்த்தியது அல்லது வேறு சில சந்தர்ப்பங்களில் அவர் பின்வருமாறு சொல்லுவார்: “இயந்தர கோளாறு காரணமாக செய்தி ஒலிப்பரப்புவதில் சிறிது தாமதம் ஏற்படும்.”
தெற்றும் பிரச்னையுள்ள ஒருவருக்கு உதவி செய்ய செவிகொடுப்பவர் என்ன செய்யலாம்?
தெற்றும் பிரச்னையுள்ள ஒருவர் தெற்றத்தொடங்கும்போது செவிகொடுத்து கொண்டிருப்பவர்கள் அவர்களிடமிருந்து சடாரென்று தங்கள் முகத்தை திருப்பிக்கொள்வதை பெரும்பாலான தெற்றுபவர்கள் வெறுக்கிறார்கள். அதோடு தெற்றக்கூடியவர் எவ்வாறு அதைச் சொல்லுகிறார் என்பதைக் கவனிப்பதற்குப் பதிலாக என்ன சொல்லுகிறார் என்பதைக் கவனிப்பதன் மூலம் செவி கொடுப்பவர்கள் உதவி செய்யலாம். அப்படியானால், கேட்டுக்கொண்டிருப்பவர்கள் தெற்றுபவருக்கு வார்த்தைகளைச் சொல்லி கொடுப்பதன் மூலம் உதவி செய்வதையோ அல்லது “பரவாயில்லை கவலைப்படாதீர்கள்” என்று சொல்லுவதையோ தவிர்க்க வேண்டும். (g86 4/8)