பைபிளின் கருத்து
கிறிஸ்மஸ் பண்டிகை கடவுள் உங்களுக்குக் கொடுத்திருக்கும் வெகுமதியா?
கிறிஸ்மஸ் இல்லாத ஓர் ஆண்டை நீங்கள் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா? அல்லது வெகுமதிகள் இல்லாத டிசம்பர் 25-ஐ கற்பனை செய்ய முடிகிறதா? ஏன், கிறிஸ்மஸ் தினத்தன்று போர் வீரர்களுங்கூட போரை நிறுத்தி வெகுமதிகளைப் பகிர்ந்து கொண்டார்கள்! கிறிஸ்மஸ் பண்டிகையைக் கடவுள் நமக்குக் கொடுத்திருக்கும் வெகுமதி என்று பல இலட்சக்கணக்கான ஆட்கள் நம்புகின்றனர். ஆனால் அது அப்படி இருக்கிறதா?
உலகிலுள்ள ஆட்களில் நான்குபேருக்கு மூன்றுபேர் அப்படி இல்லை என்பதாக பதிலளிப்பார்கள் என்று அறிக்கை செய்யப்படுகிறது. நீங்கள் ஒரு இந்துவாக, புத்தமதத்தவராக, ஒரு முகமதியராக, ஒரு யூதராக, அறியொணாமைக் கொள்கையினராக அல்லது ஒரு நாத்திகராக இருந்தால் அது உங்களையும் உட்படுத்துகிறது. மற்றும், நீங்கள், கிறிஸ்து கடவுளுடைய குமாரன் என்று விசுவாசிப்பதில்லை. கிறிஸ்மஸ் பண்டிகையோ கிறிஸ்துவின் பிறப்பை அனுசரிப்பதாகக் கருதப்படுகிறது, இப்படியாக இது கிறிஸ்தவ ஆராதனையாகக் கருதப்படுகிறது. என்றபோதிலும்—கிறிஸ்தவர்களாயிருந்தாலுஞ்சரி, கிறிஸ்தவர்கள் அல்லாதவராயிருந்தாலுஞ்சரி, ஒவ்வொருவருடைய எதிர்காலமும் அவரை விசுவாசிப்பதைச் சார்ந்ததாயிருக்கிறது.
மனிதவர்க்கத்துக்குக் கடவுள் கொடுத்திருக்கும் உண்மையான வெகுமதி
நூறுகோடிக்கும் அதிகமான மக்கள் இயேசு கிறிஸ்துவை மனிதவர்க்கத்தின் இரட்சகராக ஏற்றுகொண்டிருப்பதாக உரிமைபாராட்டுகின்றனர். பைபிள் பின்வரும் காரியங்களை ஒப்புக்கொள்கிறது: இயேசு ஒரு பரிபூரண மனிதனாயிருந்தார். பாவமற்ற ஒரு வாழ்க்கையை வாழ்ந்தார். அவருடைய மரணத்துக்கு நியாயமான காரணமேதும் இல்லாதவராய் எந்தப் பழிக்கும் நீங்கலாயிருந்தார். எனவே அவர் என்றென்றும் வாழ்வதற்குரிய உரிமையும் தனக்கென்று ஒரு பரிபூரண மனித குலத்துக்குத் தகப்பனாக இருக்கும் உரிமையும் கொண்டவராயிருந்தார்.
ஆனால் அந்த உரிமையை அவர் தனக்காக எடுத்துக்கொள்ளவில்லை. மாறாக அவர் உயிருடனிருக்கும் மனிதவர்க்கத்தில் “அநேகரை மீட்கும் பொருளாக” மரித்தார். அவர்களுக்கு மனித பரிபூரணத்தையும் முடிவில்லா வாழ்க்கையையும் வாக்களித்தார். எனவே, கடவுள் மனிதவர்க்கத்துக்குக் கொடுத்திருக்கும் ஒரு வெகுமதி அல்லது ஈவாக இருப்பது இயேசு.—மத்தேயு 20:28; 1 பேதுரு 2:21, 22; எபிரெயர் 2:9, 10.
இந்த வெகுமதியை நீங்கள் ஏற்றுக் கொள்வது உங்களுக்கு நித்திய நன்மைகளைக் கொண்டுவரக்கூடும். “தேவன் தம்முடைய ஒரே பேரான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு அவரைத் தந்தருளி இவ்வளவாய் இவ்வுலகத்தில் அன்பு கூர்ந்தார்,” என்று பைபிள் சொல்கிறது. (யோவான் 3:16) எனவே கிறிஸ்துவில் விசுவாசமே முக்கியமான காரியம்; உங்கள் எதிர்கால ஜீவன் அதன்பேரில்தானே சார்ந்திருக்கிறது. கிறிஸ்மஸ் பண்டிகையின் மூலம் மனிதவர்க்கத்தில் கால் பங்கு மக்கள் அவருடைய பிறப்பைக் கொண்டாடுகின்றனர் என்பதில் ஆச்சரியமொன்றும் இல்லை. என்றாலும் அவர் உண்மையிலேயே கிறிஸ்மஸ் தினத்தன்று பிறந்தாரா?
இயேசு எப்பொழுது பிறந்தார்?
இயேசு பெத்லகேமில் பிறந்தபோது “அந்த நாட்டிலே மேய்ப்பர்கள் வயல்வெளியில் தங்கி, இராத்திரியிலே தங்கள் மந்தையைக் காத்துக்கொண்டிருந்தார்கள்.” (லூக்கா 2:8-11) ஆனால் அந்தப் பலஸ்தீனா பிரதேசத்தில் டிசம்பர் மாதத்தில் இரவு வெப்பநிலை சராசரியாக 45°F (7°C) ஆக இருக்கிறது. சில நாட்களில் மழையும் பெய்கிறது. அந்த மேய்ப்பர்கள் தங்களுடைய மந்தையுடன் வயல்வெளியில் இராத்திரியிலே தங்கியிருக்கமாட்டார்கள். சுற்றிலும் அடைப்புள்ள இடங்களில் அவற்றை அடைத்து வைப்பது அவர்களுடைய பழக்கம்.
மேலும் அகுஸ்துராயன், தன்னுடைய சாம்ராஜ்யம் முழுவதும் குடிமதிப்பு எழுதப்பட வேண்டுமென்று கட்டளைபிறப்பித்திருத்தனால் இயேசுவின் பெற்றோர் பெத்லகேமுக்குச் சென்றிருந்தார்கள், “எல்லாரும் தங்கள் தங்கள் ஊர்களுக்குப் போனார்கள்.” (லூக்கா 2:1, 3) அந்த ரோம அரசனோ அடிக்கடி கலகம் பண்ணின பிரஜைகள் கடினமான தூர பயணத்தை மேற்கொள்ளுவதற்கு குளிரும் மழையும் இணைந்த ஒரு மாதத்தைத் தேர்ந்தெடுத்திருப்பானா? அப்படிச் செய்திருக்க மாட்டான்!
அப்படியென்றால், இயேசு எப்பொழுது பிறந்தார்? அக்டோபர் மாதத்தின் ஆரம்பத்தில் என்பதற்கு பலமான அத்தாட்சி இருக்கிறது. மேசியா (கிறிஸ்து) ஏழு வருட “வாரத்தின்” ஆரம்பத்தில் தோன்றுவார் என்றும் அந்த “வாரத்தின்” மத்தியில் அல்லது 3 1/2 வருடங்களுக்குப் பின்பு அவர் “சங்கரிக்கப்படுவார்”, பலிக்குரிய மரணத்தையடைவார் என்றும் தானியேல் தீர்க்கதரிசி முன்னறிவித்திருந்தார். (தானியேல் 9:24-27) கிறிஸ்துவாகத் தம்முடைய ஊழியத்தை ஆரம்பித்தபோது இயேசு “ஏறக்குறைய முப்பது வயதுள்ளவரானார்.” எனவே ஏப்ரல் மாத துவக்கத்தில் பஸ்கா நாளன்று அவர் மரித்தபோது அவர் ஏறக்குறைய 33 1/2 வயதாக இருந்தார். (லூக்கா 3:21-33; மத்தேயு 26:2) ஆறு மாதங்களுக்குப் பின் அக்டோபரில் அவர் 34 வயதுள்ளவராக இருந்திருப்பார். தெளிவாகவே அவர் டிசம்பர் மாதத்தில் பிறக்கவில்லை.
அது கிறிஸ்துவைக் கனம்பண்ணுவதாயிருக்கிறதா?
ஆனால் கிறிஸ்து கனம்பண்ணப்படுவதாலும் கிறிஸ்மஸ் ஆவி காணப்படுவதாலும் ஏன் தேதியைக் குறித்து கவலைப்பட்டுக் கொண்டிருக்க வேண்டும்? சொல்லப்போனால், பக்திபூண்டிருக்கும் வணக்கத்தாருக்குத்தானே அது புனிதமான ஒரு பண்டிகை. அது கிறிஸ்மஸ் கீதங்களும் பாடல்களும் பாடுவதற்கான ஒரு சமயம், வெகுமதிகள் கொடுப்பதற்கும் குடும்பங்கள் ஒன்று கூடுவதற்குமான ஒரு சமயம். அது நினைவுகூரவேண்டிய ஒரு சமயம். என்றபோதிலும் அதுதானே பிரச்னையாக இருக்கக்கூடும்.
அநேகமாக நினைவுகள் தங்களுடைய சொந்த இன்பங்களைப் பற்றியதாக இருக்கிறதே தவிர, கிறிஸ்துவைப் பற்றியதாக இருப்பதில்லை. வெகுமதிகள் எல்லா சமயத்திலும், கொடுப்பதன் சந்தோஷத்தைப் பிரதிபலிப்பதாயிருப்பதில்லை. மாறாக பெற்றுக் கொள்வதன் சந்தோஷத்தையே பிரதிபலிப்பதாயிருக்கிறது. மேலும் அளவுக்கு மிஞ்சிய களியாட்டும் வியாபாரப்போக்கும் அந்தச் சமயத்திற்குரிய காரியங்களாகிவிடுகின்றன. இந்த ஆவிதான் கிறிஸ்மஸ் பண்டிகையைப் பிரபலமாக்குகிறது. ஆனால் இது கிறிஸ்துவை கனம்பண்ணுவதாயில்லை.
எனவே எழும்பக்கூடிய கேள்வி: கிறிஸ்மஸ் பண்டிகை கிறிஸ்தவ மதத்துக்குரியதா?
கிறிஸ்மஸ் பண்டிகையின் ஆரம்பம்
பல தெய்வங்களையுடைய சூரிய வணக்கத்தாரால் இதற்கு ஒத்த ஒரு பண்டிகை கொண்டாடப்பட்டது. என்ஸைக்ளோபீடியா அமெரிக்கானா பிரகாரம், வடக்கு ஐரோப்பாவிலுள்ள மக்கள் சூரியனின் மறு பிறப்பை ஆசரிக்கும் வகையில் குளிர்காலக் கதிர்த்திருப்பத்தின்போது தங்களுடைய பிரதான பண்டிகையாகிய யூல் பண்டிகையைக் கொண்டாடினர். ரோமரின் சனி பண்டிகையும் . . . அதே சமயத்தில் கொண்டாடப்பட்டது, மற்றும் சில கிறிஸ்மஸ் பண்டிகைக்கால பழக்கவழக்கங்கள் இந்தப் பூர்வீக புறமத கொண்டாட்டத்தில் வேரூன்றியதாக இருக்கவேண்டும் என்று கருதப்படுகிறது. ‘உலகத்திற்கு ஒளியாக’ கிறிஸ்துவின் பிறப்பு சூரியனின் மறுபிறப்புக்கு ஒத்திருக்கச் செய்யப்பட்டது என்றும், இப்படிப்பட்ட கொண்டாட்டங்கள் மூலம் தங்களுடைய சொந்த கற்பனை கடவுட்களை முன்பு கனப்படுத்தி வந்த கிறிஸ்தவ மதத்திற்கு மதமாறியவர்களுக்கு கிறிஸ்தவத்தை அதிக அர்த்தமுள்ளதாக்குவதற்காக அப்படிச் செய்யப்பட்டது” என்றும் சில அறிஞர்கள் கருதுகின்றனர்.
என்றபோதிலும். இயேசுவின் சீஷர்கள் அவருடைய பிறந்த நாளை ஆசரிக்கவில்லை—டிசம்பர் 25-ம் தேதியிலும் ஆசரிக்கவில்லை. அக்டோபர் மாதத்திலும் ஆசரிக்கவில்லை. இது நான்காவது நூற்றாண்டின் இடைக்காலம் மட்டும் உண்மையாயிருந்தது. மூன்றாவது நூற்றாண்டு சரித்திராசிரியனான ஓரிகன் எழுதினதாவது: “வேத வசனங்களில் காணப்படும் பரிசுத்தமான ஆட்களில் எவருமே ஒரு பிறந்த நாளைக் கொண்டாடியதாகப் பதிவு இல்லை. (பார்வோன் மற்றும் ஏரோது போன்ற) பாவிகள் மட்டுமே அவர்கள் பிறந்த தினத்தையொட்டி மகா களிப்பில் ஈடுபடுகிறார்கள்.” (ஆதியாகமம் 40:20-23; மாற்கு 6:21-28) மக்ளின்டாக் மற்றும் ஸ்ட்ராங் என்பவர்களின் ஸைக்ளோபீடியா பிரகாரம் பைபிள் காலங்களில் வாழ்ந்த யூதர்கள் “பிறந்த நாள் கொண்டாட்டங்களை விக்கிரகாரதனையின் பாகமாகக் கருதினார்கள்.”
ஆரம்பத்தில் புராணக் கடவுட்களுக்காக ஏற்படுத்தப்பட்ட கொண்டாட்டங்களாலும், விக்கிரகாராதனையாலும் கிறிஸ்து கனம்பண்ணப்படலாமா? பைபிள் பின்வருமாறு பதிலளிக்கிறது: “அந்நிய நுகத்திலே அவிசுவாசியுடன் பிணைக்கப்படாதிருங்கள் . . . தேவனுடைய ஆலயத்துக்கும் விக்கிரகங்களுக்கும் சம்பந்தமேது?” (2 கொரிந்தியர் 6:14-16) விக்கிரகாராதனைக்குரிய பண்டிகைகளைக் கிறிஸ்தவ பெயரால் அலங்கரிப்பதுதானே அவற்றைக் கிறிஸ்துவுக்கு இசைவாக இருக்கச் செய்துவிடாது.
கடவுளுடைய வெகுமதியை உண்மையிலேயே மதித்துணருதல்
இயேசு தம்முடைய பிறப்பை ஆசரிக்கும்படி கட்டளை கொடுக்கவில்லை என்பது ஆச்சரியத்திற்குரியதல்ல! ஆனால் தம்முடைய மரணத்தை நினைவுகூரும் ஓர் ஆசரிப்பை ஆரம்பித்து வைத்தார். (1 கொரிந்தியர் 11:23-26) நீங்கள் ஜீவனடைய அவர் ஜீவனை விட்டார். அவருடைய போதனைகளை மீறி விடாததன் மூலம் இதற்காக உங்களுடைய மதித்துணருதலை அல்லது போற்றுதலைக் காண்பித்து அவரைக் கனம் பண்ணலாம். அவர் சொன்ன பிரகாரம்: “என் கற்பனைகளைப் பெற்றுக் கொண்டு அவைகளைக் கைக் கொள்ளுகிறவனே என்னிடத்தில் அன்பாயிருக்கிறான், என்னிடத்தில் அன்பாயிருக்கிறவன் என் பிதாவுக்கு அன்பாயிருப்பான்.”—யோவான் 14:21.
அப்படிப்பட்ட கீழ்ப்படிதல் அதிகம் முக்கியம், ஏனென்றால் இயேசு இப்பொழுது ஒரு குழந்தையாகவோ அல்லது இறந்து கிடக்கும் இரட்சகராகவோ இல்லை. அவர் மரித்து பின்பு மூன்றாம் நாள் அழியாத வாழ்க்கைக்கு உயிர்த்தெழுப்பப்பட்டு “வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும்” அவருக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. மனிதவர்க்கத்தின் உரிமையுள்ள அரசராக இன்னும் சீக்கிரத்தில் துயரத்திற்குக் காரணமான சகல காரியங்களையும் நீக்கிவிடுவார். இப்படியாக அவரை உண்மையிலேயே நேசிக்கிறவர்கள் பரதீசான பூமியில் நித்திய ஜீவன் என்ற வெகுமதியைப் பெறக் கூடும்.—மத்தேயு 28:18-20; அப்போஸ்தலர் 2:22-36; ரோமர் 6:23; வெளிப்படுத்துதல் 21:1-5.
ஆம், கிறிஸ்மஸ் அல்ல, ஆனால் கிறிஸ்துவே கடவுளுடைய வெகுமதி. (g86 12/8)
[பக்கம் 28-ன் பெட்டி]
புராணக் கதைகளில் வேரூன்றியது
◻ பிறந்தநாள் கொண்டாட்டம் பல தெய்வங்களை வணங்கும் கலாச்சாரத்தில் தானே பொதுவாகக் காணப்படுகிறது. ஒவ்வொரு குறிப்பிட்ட குல தெய்வங்களைக் கனம்பண்ணும் வகையில் விக்கிரகாராதனை சம்பந்தப்பட்ட சடங்குகள் மேற்கொள்ளப்பட்டன. மற்றும் சனி, அப்பொல்லோ போன்ற புராண தெய்வங்களின் பிறந்த நாள் விழாக்களும் கொண்டாடப்பட்டது. ஏன் என்ற கிறிஸ்தவ நூல் (The Christian Book of Why) என்ற தனது ஆங்கில புத்தகத்தில் டாக்டர் ஜான் சி. மக்காலிஸ்டர் கூறுவதாவது: “முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள், இயேசுவின் பிறப்பைக் கனம்பண்ணும் பண்டிகையைக் கொண்டாடவில்லை—வேறு எந்தப் பிறந்தநாள் நிறைவு விழாவையும் அவர்கள் கனம்பண்ணாத அதே காரணத்துக்காகவே அப்படிச் செய்தனர். எல்லா பிறந்த நாள் விழாக்களும் (கர்த்தருடையதும்) புறமதத்தாரின் ஒரு பழக்கம் என்று அந்தச் சமயத்தில் வாழ்ந்த கிறிஸ்தவர்கள் உணர்ந்தார்கள்.”
◻ புல்லுருவி மற்றும் ஹாலி என்ற முள் இலைகளையும் பசிய சிறு மலர்களையும் சிவப்பு பழங்களையும் உடைய சில இலையுதிரா செடிகள் மாய சக்தி கொண்டவை என்று பூர்வீக மக்கள் கருதினர். பொல்லாத ஆவிகளும் சூனியக்காரிகளும் தங்களைக் கிட்டாதிருக்க தங்களுடைய வீட்டை இப்படிப்பட்ட இலைகளால் ஜோடனை செய்தனர். இந்தப் பழக்கம் கிறிஸ்மஸ் ஜோடனைகளாக வளர்ந்தது.
◻ பல தெய்வ வணக்கத்தையுடைய கலாச்சாரத்தில் மரங்களும் பூஜிக்கப்பட்டன. புனிதத் தோப்புகளில் முன்னோர்களில் ஆவி குடிகொண்டிருப்பதாக நம்பப்பட்டு, தாங்கள் பெறும் நன்மைகளுக்கு நன்றி கடனாக அவற்றிற்கு வெகுமதிகள் அளிக்கப்பட்டன. இது இன்றும் மேற்கு ஆப்ரிக்காவில் செய்யப்பட்டுவருகிறது.
◻ தீ மூட்டும் இடத்தில் ஒரு பெரிய கட்டையை எரிக்கும் ஐரோப்பியரின் கிறிஸ்மஸ் பழக்கம் ஸ்காண்டினேவிய மக்களிடையே இருந்த பழக்கமாகும். இவர்கள் தார் என்ற இடி தெய்வத்தைக் கனம்பண்ணுகிறவர்களாய் பெரிய அளவில் தீ மூட்டினார்கள்.
◻ வெகுமதிகளைக் கொடுப்பது, ஞானிகள் அல்லது வான சாஸ்திரிகள் என்று அழைக்கப்பட்டவர்களுடைய முறைமையைப் பின்பற்றுவதாயிருப்பதைப் பார்க்கிலும், உண்மையில் அது சனி தெய்வத்தைக் கனம்பண்ணும் வகையில் கொண்டாடப்படும் பண்டிகை மற்றும் புத்தாண்டு பண்டிகைகள் சம்பந்தமாகக் கொடுக்கப்படும் புறமத ரோமரின் வெகுமதி கொடுக்கும் பழக்கத்தைச் சார்ந்ததாயிருக்கிறது.
[பக்கம் 27-ன் படம்]
இந்தக் கிறிஸ்மஸ் பழக்கங்களின் ஆரம்பத்தை நீங்கள் அறிந்திருக்கிறீர்களா?