ஏன் இத்தனை அநேகர் யெகோவாவின் சாட்சிகளாகி வருகிறார்கள்?
அநேக தேசங்களில் ஜனங்கள் அதைத் தான் செய்து கொண்டிருக்கிறார்கள். உதாரணமாக இத்தாலியிலுள்ள போலானாவில் சர்ச் அதிகாரிகள் போப்பின் சம்மதத்தோடு யெகோவாவின் சாட்சிகளுடைய வெற்றியைச் சமாளிப்பது எப்படி என்பதை ஆராய பேரவை ஒன்றைக் கூட்டினார்கள். லா ரிப்பப்ளிக்காவின் பிரகாரம், கத்தோலிக்க சர்ச் “அபாய கூக்குரலை” எழுப்பியது. ஏனென்றால் ஒவ்வொரு ஆண்டும் பத்தாயிரும் கத்தோலிக்கர்கள் யெகோவாவின் சாட்சிகளாகி வருகிறார்கள்.
“மத சம்பந்தமான நோக்குநிலையிருந்து பார்க்கையில் யெகோவாவின் சாட்சிகளே மிகவும் ஆபத்தானவர்கள். அவர்கள் முழுமையாக பயிற்சி பெற்றுக் கொண்டு வருகிறார்கள்; அவர்கள் எப்பொழுதும் தங்கள் கையில் பைபிளை வைத்திருக்கிறார்கள்” என்பதாக கத்தோலிக்க பாதிரி கியசெப்பி டி ரோஸா சொன்னார்.
1984 பிப்ரவரி 18-ன் லா சிவில்டா கட்டோலிக்கா என்ற கத்தோலிக்க பத்திரிக்கை, குறிப்பாக யெகோவாவின் சாட்சிகளைப் பற்றியே பேசிய ஒரு தலையங்கத்தில் பின்வருமாறு சொன்னது:
“இந்த இயக்கம் பரவுவதற்கு முக்கிய காரணம் பிரசார உத்தியாக [அதாவது பிரசங்க வேலை] இருக்கிறது. ஒரு பக்கம் வேலையானது கடுமையான பிரயாசத்தைத் தேவைப்படுத்தும் ஒன்றாக இருக்கிறது. இது நுட்பமாக பயிற்றுவிக்கப்பட்ட பலமான நம்பிக்கையுள்ள ஆட்களால் வீட்டுக்கு வீடு எடுத்துச் செல்லப்படுகிறது . . .
“யெகோவாவின் சாட்சிகளின் வெற்றிக்கு இரண்டாவது காரணம், நம்முடைய காலங்களின் தேவைகளையும் கோரிக்கைகளையும் எதிர்பார்ப்புகளையும் நிறைவு செய்வதற்கு அவர்களுடைய செய்தி கவர்ச்சிமிக்கதாக இருக்கிறது. முதலாவதாக, எல்லாரும் அநிச்சயமாகவும் நிலையற்றதாகவும் இருக்கும் ஒரு சமயத்தில், நிச்சயத்தின் தேவையைப் பூர்த்தி செய்யும் ஒன்று வெகுவாக போற்றப்படுகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, அது எதிர்காலத்தைப் பற்றிய முற்றிலும் நிச்சயமான ஒரு வெளிப்படுத்தலாக இருக்கிறது. ஆகவே அதை ஏற்றுக்கொள்ளும் அனைவரும் எல்லா பயத்திலிருந்தும் கவலையிலிருந்தும் விடுபட்டவர்களாய் எதிர்காலத்தை சந்தோஷத்தோடே எதிர்நோக்கியிருக்கலாம். பொல்லாத உலகிற்குக் கடவுள் நியாயத்தீர்ப்பு நாளில் கொண்டு வரும் அழிவை தப்பிப் பிழைத்து பூமியில் நித்திய மகிழ்ச்சியோடு வாழ்வதைக் குறித்து நிச்சயமாயிருக்கலாம். இரண்டாவதாக யெகோவாவின் சாட்சிகளுடைய செய்தி, உலகின் இன்னல்களின் மத்தியில் தனிப்பட்டவரின் கவலையை மேற்கொள்ள உதவி செய்கிறது. ஏனென்றால், இன்றைய தாங்கிக்கொள்ள முடியாத நிலைமைகள் முற்றிலுமாக மாற்றப்படுவது அருகாமையில் நிகழ இருக்கிறது, என்பதும் ஆகவே அங்கு ஒரு புதிய சகாப்தம், ஒரு புதிய உலகம் இருக்கும் என்பதும் அவர்களின் செய்தியாக இருக்கிறது. இந்தப் புதிய உலகில் இப்பொழுது வெற்றிக் களிப்புடன் இருக்கும் எல்லா பொல்லாதவர்களும் அழிக்கப்படுவார்கள் . . .
“யெகோவாவின் சாட்சிகளுடைய வெற்றிக்கு மூன்றாவது காரணம், இயக்கமானது அதன் உறுப்பினர்களுக்குத் துல்லியமான மற்றும் பலமான ஒரு தனித்துவத்துக்கு வகை செய்கிறது. அனலோடும், சகோதரத்துவ உணர்வோடும் ஒருமைப்பாட்டுடனும் வரவேற்கப்படும் ஓர் இடமாக இது அவர்களுக்கு இருக்கிறது.”
வத்திக்கன் அறிக்கை மக்களில் தற்காலத்திய தேவைகளை அலசி ஆராய்ந்தது. லா சிவில்டா கட்டோலிக்கா என்ற கத்தோலிக்க பத்திரிகையிலிருந்து மேலே காண்பிக்கப்பட்டிருக்கும் மேற்கோள், யெகோவாவின் சாட்சிகளுடைய செய்தியே அந்தத் தேவைகளைப் பூர்த்தி செய்வதைக் காண்பிக்கிறது. கத்தோலிக்க எழுத்தாளர் விட்டோரியோ சுலா மார்டி அண்மையில் எழுதிய மரணத்தின் பேரில் சவால் (A Bet on Death) என்ற தம்முடைய புத்தகத்தில் எழுதி இதை உறுதி செய்கிறார்.
“இந்தக் கடவுள் அருள் வெளிப்பாட்டு மதப் பிரிவுகளில் ஒன்றாகிய யெகோவாவின் சாட்சிகளே உலகிலேயே மிக வேகமாக வளர்ந்து வரும் சமயம் அல்லது மதம் என்பதை உணருகையில் அது உங்களைச் சிந்திக்க வைக்கிறது. அநேக தேசங்களில் அதிகமாக கடைபிடிக்கப்படும் மதங்களில் ஒன்றாக இருக்கிறது . . . உற்சாகம், வைராக்கியம், சுறுசுறுப்பு மதம் மாற்றுவதற்குத் திறமை என்பவை வருகையில், அதுவே முதலிடத்திலிருக்கிறது.
“அதிகமதிகமான அவர்களுடைய நடமாட்டம், பரம்பரை கிறிஸ்தவ தேசங்களுக்கு மட்டுமே கட்டுப்படுத்தப்பட்டதாக இல்லை. ஆனால் யெகோவாவின் பெயரில் அவர்கள் முழு உலகையும் எட்டிவிட்டிருக்கிறார்கள். கத்தோலிக்கர்களுக்கும் புராட்டஸ்டண்டினருக்கும் ஆத்தடாக்ஸ் மிஷனரிகளுக்கும், பல நூற்றாண்டு கால வேலையின் பலனாக கிடைத்திருப்பதைக் காட்டிலும் குறுகிய காலப் பகுதியில் அநேகமாக மிக மேன்மையான பலன்கள் இவர்களுக்குக் கிடைத்திருக்கின்றன.
“மற்ற இறைமை நூல்கள் நிறைவு செய்யத் தவறும் உண்மையான தேவைகளை, யெகோவாவின் சாட்சிகள் பைபிளைப் படிக்கும் முறை பூர்த்தி செய்வதை . . . ஒப்புக்கொள்ள விரும்பாதவர்களால் மாத்திரமே இந்த விஸ்தரிப்பின் கவர்ச்சியான சக்தியைப் புரிந்துகொள்ள முடியவில்லை.
“சாட்சிகள் பயத்தைச் சாதகமாக பயன்படுத்திக் கொள்வதால் வெற்றி பெறுகிறார்கள் என்பதாக குறை கூறுவதன் மூலம் பிரச்னையை ஒருவர் தவிர்த்துவிட முடியாது. நேர் எதிர்மாறானதே உண்மையாக இருக்கிறது: ‘அதிகாரப் பூர்வமான’ சர்ச்சுகளைப் போலில்லாமல் அவர்கள் நரகம் இருப்பதை மறுதலித்து, பொல்லாதவர்களும் அவிசுவாசிகளும் அழிக்கப்பட போவதையும், மரணத்துக்குப் பின்பு நிச்சயமாக மறைந்து விடுவதையும் பிரசங்கிக்கிறார்கள். விரும்பத்தகாத ஓர் எதிர்பார்ப்பாக இது இருக்கலாம்; ஆனால் நிச்சயமாகவே நித்திய காலமும் பயங்கரமாக வாதிக்கப்படும் அச்சுறுத்தலைக்காட்டிலும் இது குறைவாகவே அச்சமூட்டுவதாக இருக்கிறது.”
ஆம் யெகோவாவின் சாட்சிகளுடைய கடவுள் அன்புள்ள கடவுளாக இருக்கிறார். அவர் பயத்தினால் மக்களை வாதிப்பவர் அல்ல.
பின்வரும் மேற்கோள் மார்ச் 1986 கத்தோலிக்க பத்திரிக்கையான மாம்டோ எரி-யிலிருந்து எடுக்கப்பட்டது: “தாங்கள் பிரசங்கிக்கும் விசுவாசத்தின்படி வாழ்வதில் முதலாவதாக இருப்பது யெகோவாவின் சாட்சிகளே என்று சொல்ல வேண்டும். அவர்கள் கோபமடைவதில்லை, அவர்கள் புகைபிடிப்பதில்லை, அவர்கள் செல்வங்களைச் சேர்ப்பதில்லை, அரசியல் விஷயங்களைப் பேசுவதில்லை, . . . அவர்கள் வரிகளைச் செலுத்துகிறார்கள், அவர்கள் கற்புள்ள மற்றும் நேர்மையான வாழ்க்கையை நடத்துகிறார்கள். அவர்கள் மகிழ்ச்சியுள்ளவர்களாக, உதவி செய்ய மனமுள்ளவர்களாக இருக்கிறார்கள். இவை அனைத்தும் அவர்களை மிகவும் விரும்பும்படியாகச் செய்திருக்கிறது.”
முன்னாள் கத்தோலிக்கர்கள் பேட்டி காணப்படுகிறார்கள்
இரண்டு முன்னாள் கத்தோலிக்கர்கள், வேறு ஒரு மதத்தைத் தெரிந்து கொண்டதற்கான காரணத்தை நேரடியாக அவர்களிடமிருந்தே தெரிந்து கொள்வது அக்கறையூட்டுவதாக இருக்கிறது.
பார்மா (வடக்கு இத்தாலி) மாகாணத்தில் வாழ்ந்து வரும் ரோஸன்னா C. என்ற பெயருள்ள ஒரு பெண் சொல்கிறாள்:
“என் குழந்தைப் பருவம் அமைதியாக இருந்தது. என் பெற்றோர் மிகவும் பாசமுள்ளவர்களாயிருந்தார்கள். வழக்கமான கத்தோலிக்க கல்வியை நான் பெற்றேன். வளரிளமை பருவத்தின் போது பொதுவாக அநேக இளைஞர்களுக்கு ஏற்படும் ஆசை எனக்குமிருந்தது. நான் கடவுளுக்குப் பிரயோஜனமாக இருந்து அவரை சேவிக்க விரும்பினேன். ஒரு புத்தக விற்பனைச் சாவடியில் நான் வாங்கிய சுவிசேஷத்தின் ஒரு பிரதியை வாசித்தபோது என் ஆசை மிகவும் அதிகமானது. அதை நான் முன்னொருபோதும் வாசித்தது கிடையாது. நான் அதை வாசித்தபோது அது என்னை இயேசுவை நேசிக்கும்படியாகச் செய்தது. நான் அதன் உட்பொருளைக் கிரகித்துக் கொள்ளாவிட்டாலும் மனிதவர்க்கத்துக்கு நம்பிக்கையின் செய்தி அவரிடமிருந்ததை உணர்ந்தேன். அவருடைய சீஷர்கள் கடவுளிடமாகவும் உடன் மானிடரிடமாகவும் ஆழ்ந்த அன்பை காண்பிக்கிறவர்களாக இருக்க வேண்டும் என்பதையும் கூட நான் தெரிந்து கொண்டேன்.
விழித்தெழு!: நீங்கள் உங்கள் மதத்தைக் கடைபிடித்து வந்த முறையில் திருப்தியுள்ளவர்களாக இருந்தீர்களா?
ரோஸன்னா: உண்மையில் இல்லை. எனக்கு 17 வயதாக இருந்தபோது, 10-12 வயதிலுள்ள பிள்ளைகளுக்குக் கத்தோலிக்க மதப் போதனையை நான் கற்பித்து வந்தேன். கத்தோலிக்க இளைஞர் குழுவின் உறுப்பினராக நான் கூட்டங்களிலும் ஆன்மீக தியானத்திலும் பங்குகொண்டேன். ஆவிக்குரிய சம்பந்தமாக பேசுகையில் நான் மிகவும் சுறுசுறுப்பாக இருந்தேன். ஆனால் எனக்குப் பிடிக்காத இரண்டு காரியங்கள் இருந்தன. நான் வெகுவாக மதித்த புத்தகமாகிய பைபிள் ஒருபோதும் ஆராயப்படவில்லை. நான் கூட்டுறவுகொண்ட குழுவில் உண்மையான தன்னலமற்ற அன்போ ஐக்கியமோ இருக்கவில்லை. அது மட்டுமல்ல. ஓரின புணர்ச்சியில் ஈடுபாடு கொண்டிருந்த ஓர் ஆணும் பெண்ணும் இந்தக் குழுவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட, வெகுவாக மதிக்கப்பட்ட உறுப்பினர்களாக இருந்தார்கள். ஒரு நாள் மதிய வேளையில் நான் மிகவும் மனமொடிந்து அழுதே விட்டேன்.
விழித்தெழு!: யெகோவாவின் சாட்சிகளில் ஒருவராவது உங்களுக்கு எளிதாக இருந்ததா?
ரோஸன்னா: இல்லை. நிச்சயமாக இருக்கவில்லை! முதல் முதலாக என்னுடைய பெற்றோரை யெகோவாவின் சாட்சிகள் வந்து சந்தித்துக் கொண்டிருந்தபோது நான் அவர்களைச் சேர்ந்து கொள்ளவில்லை. ஆனால் பின்னர், சாட்சிகளுடைய நல்லொழுக்கங்களால் கவரப்பட்டு அவர்களோடு பழக தீர்மானித்து பைபிள் கலந்தாலோசிப்பில் கலந்து கொண்டேன் இது எனக்குத் தெளிவாக இருந்தது. நான் எழுப்பிய ஒவ்வொரு கேள்விக்கும் அவர்கள் பைபிளிலிருந்து தெளிவாக எனக்கு அளித்த பதில் என்னை வெகுவாக கவர்ந்தது.
விழித்தெழு!: இந்த மத மாற்றத்துக்குப் பின் ஆலோசனைக்காக பாதிரியார் எவரையாவது நீங்கள் கேட்டீர்களா?
ரோஸன்னா: ஆம், பல பேரையும் ஒரு கன்னியாஸ்திரீயையும் நான் கேட்டேன். ‘காணாமற் போன’ ஓர் ஆடுக்கு உதவி செய்வதைப் பற்றி அவர்கள் அவ்வளவு அக்கறையாக இருக்கவில்லை. திருத்தமாக பைபிளைப் படித்தப் பிறகு 1977-ல் யெகோவாவுக்கு நான் செய்த ஒப்புக்கொடுத்தலுக்கு அடையாளமாக தண்ணீர் முழுக்காட்டுதல் பெற்றேன்.
இஸிர்னியாவிலுள்ள (மத்திப இத்தாலி) 30 வயதான க்ளாடியோ C. இப்படியாகச் சொன்னார்:
“எனக்குப் பத்து வயதாக இருந்தபோது நானாகவே பிரியப்பட்டு கம்பூச்சின் ஃபிரியர்கள் நடத்திவந்த ஒரு கத்தோலிக்க பயிற்சிப் பள்ளியில் பிரவேசித்தேன். ஒரு மிஷனரியாக கடவுளைச் சேவிக்க வேண்டும் என்பது என் ஆசையாக இருந்தது. அங்கு நிலவி வந்த குறிப்பிட்ட சில நிலைமைகளின் காரணமாக அந்தப் பள்ளி வாழ்க்கையில் அதன் பிரச்னைகள் இருந்தன; ஆனால் உண்மையில் என் மன அமைதியைக் குலைத்தது என்னவென்றால், என் மேலதிகாரிகள் நான் வெகுவாக வாசிக்க பிரியப்பட்ட புத்தகமாகிய பைபிளை எனக்குக் கொடுக்க மறுத்ததே ஆகும். மனிதனின் தோற்றம் பரிணாமத்தின் மூலமே ஏற்பட்டது என்பதாக ஒரு பாதிரியார் எங்களுக்குச் சொன்னபோது, எனக்கு இன்னும் அதிக கவலையாக இருந்தது. கடவுளைச் சேவிக்க வேண்டும் என்ற என்னுடைய இலக்கை இந்தப் பயிற்சிப் பள்ளியில் நான் அடைந்திட முடியாது என்பதை உணர்ந்து 15 வயதில் நான் வெளியேறி விட்டேன்.
விழித்தெழு!: யெகோவாவின் சாட்சிகளோடு உங்களுக்கு எவ்விதமாக தொடர்பு ஏற்பட்டது?
க்ளாடியோ: அவர்கள் என் வீட்டுக்கு வந்தார்கள். அவர்களிடம் நேரடியாக கேள்வி கேட்டதும் அவர்கள் எனக்கு நேரடியாக சரியான பதில்களைக் கொடுத்ததும் எனக்கு நினைவிருக்கிறது. என்னிடம் அவர்கள் இங்கே மனிதன் வந்தது பரிணாமத்தினாலா அல்லது சிருஷ்டிப்பினாலா? மற்றும் பைபிள் உண்மையிலேயே கடவுளுடைய வார்த்தையா? என்ற இரண்டு புத்தகங்களையும் விட்டுச் சென்றார்கள். அவற்றை வாசித்தப் பின்பு பரிணாமக் கோட்பாடு ஆதாரமற்றது என்பதையும் வேத வாக்கியங்கள் தேவாவியால் ஏவப்பட்டு எழுதப்பட்டது என்பதையும் தெரிந்து கொண்டேன். சத்தியத்தைத் தேடும் முயற்சியில் என் சகோதரனும் என்னைச் சேர்ந்து கொண்டான். சாட்சிகள் உண்மையிலேயே மெய் கிறிஸ்தவத்தின் பிரதிநிதிகளாக இருந்தார்களா என்பதாக நாங்கள் யோசித்தோம் அவர்களுடைய கோட்பாடுகளை இன்னும் அதிகமாக ஆராய்வது அவசியமாக இருந்தது.
விழித்தெழு!: பிறகு நீங்கள் என்ன செய்தீர்கள்?
க்ளாடியோ: மூன்று பாதிரிமார்களோடும் பல்வேறு ப்ராட்டஸ்டாண்டு பிரிவுகளைச் சேர்ந்த ஊழியர்களோடும் நாங்கள் பேசினோம். தீர்க்கமாக ஆராய்ந்த பிறகு, பைபிளைப் புரிந்து கொள்வதற்கு உண்மையில் உதவி செய்தவர்கள் யெகோவாவின் சாட்சிகளே என்று நாங்கள் உறுதியாக நம்பினோம். நாங்கள் யெகோவாவின் சாட்சிகளாக முழுக்காட்டப்பட்டு நான் கடைசியாக கடவுளைச் சேவிக்க வேண்டும் என்ற என்னுடைய இளமைப் பருவ கால இலக்கை அடைந்தேன்.
உங்களுடைய மத சம்பந்தமான கருத்துக்களைக் கடவுளுடைய வார்த்தையாகிய பைபிளோடு ஒப்பிட்டுப் பார்க்க நீங்கள் மனமுள்ளவர்களாக இருக்கிறீர்களா? திறந்த மனதுடன் அதைச் செய்வதற்கு உங்களுக்குத் தைரியம் இருக்கிறதா? (g87 3/22)
[பக்கம் 5-ன் சிறு குறிப்பு]
“அவர்கள் எப்பொழுதும் தங்கள் கையில் பைபிளை வைத்திருக்கிறார்கள்”—கத்தோலிக்கரான கியசெப்பி டி ரோஸா
[பக்கம் 6-ன் சிறு குறிப்பு]
“தாங்கள் பிரசங்கிக்கும் விசுவாசத்தின்படி வாழ்வதில் முதலாவதாக இருப்பது யெகோவாவின் சாட்சிகளே”—கத்தோலிக்க பத்திரிக்கை மான்டோ எரி
[பக்கம் 6-ன் சிறு குறிப்பு]
“அவர்கள் தெளிவாக பைபிளிலிருந்து எனக்குப் பதிலளித்தார்கள்”
[பக்கம் 7-ன் படம்]
“நான் கடைசியாக கடவுளைச் சேவிக்க வேண்டும் என்ற என்னுடைய இளமைப் பருவ கால இலக்கை அடைந்தேன்”