கருச்சிதைவு—பிளவுபட்ட ஓர் உலகம்
உலக முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் எத்தனை கருச்சிதைவுகள்—சட்டமுறையாகவும் சட்டத்துக்கு விரோதமாகவும்—செய்யப்படுகின்றன? இந்த எண்ணிக்கை “குறைந்த பட்சம் பெரியவர்களுடைய மரண எண்ணிக்கைக்குச் சமமாக இருக்கிறது”—ஏறக்குறைய 4.5 கோடி என்று கருச்சிதைவு என்ற புத்தகம் குறிப்பிடுகிறது. ஆனால் திட்டமிட்ட பெற்றோரின் சர்வதேச கூட்டுக்கழகம் அந்த எண்ணிக்கையை 5.5 கோடியாகக் கணக்கிட்டுள்ளது.
இந்தப் பழக்கத்தை முதன் முதலில் சட்ட ரீதியாக அமலுக்குக் கொண்டுவந்த நாடு சோவியத் நாடாகும், இதை 1920-ல் சட்டமாக நிறைவேற்றியது. உறுதிபடுத்தப்படாத சமீபத்தில் வெளியான ஒரு அறிக்கை ஆண்டுக்கு ஐம்பது இலட்சம் கருச்சிதைவுகளைக் கணக்கிட்டது. சீனாவில் உடல் நலத்துறை அதிகாரிகளின்படி அங்கு கருச்சிதைவுகளின் எண்ணிக்கை தொன்னூறு இலட்சத்தை எட்டுகிறது—கருவுறுதலின் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்காக இருக்கிறது. ஜப்பானில் இருபது இலட்சத்துக்கும் அதிகம், ஐக்கிய மாகாணங்களில் 15 இலட்சத்துக்கும் அதிகம், பிரிட்டனில் ஏறக்குறைய இருபத்தைந்து இலட்சம்.
ரோமன் கத்தோலிக்க நாடுகளாகிய ஸ்பன் மற்றும் அயர்லாந்தில் கருச்சிதைவு சட்டப்பூர்வமாக்கப்படவில்லை. என்றாலும் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான பெண்கள் கருச்சிதைவு செய்துகொள்கிறார்கள். எப்படி? சட்ட முரணாக இயங்கும் மருத்துவமனைகள் உள்ளன. ஆனால் அநேக பெண்கள், கருச்சிதைவு சட்டமுறையானதாக உள்ள நாடுகளுக்குச்சென்று அங்கு கருச்சிதைவு செய்துகொள்ளும் ஒரு முறையைக் கையாளுகிறார்கள், பிரிட்டன் அவர்களுக்கு விருப்பமான ஓர் நாடு.
தெளிவாகவே, இந்தக் கருச்சிதைவுகள் அனைத்துமே குழந்தைகள் ஏதோ குறைபாடுடன் பிறக்கக்கூடும், உடல் நலம் அல்லது மனநலக்குறையுடன் பிறக்கக்கூடும் அல்லது கற்பழித்தல் அல்லது உறவினர்ப் புணர்ச்சியினால் கருவுருதல் ஆகிய காரணங்களுக்காகச் செய்யப்படுவதில்லை. பிரிட்டிஷ் எண்ணிக்கைகளின்படி இந்தக் காரணங்களுக்காகச் செய்யப்படும் கருச்சிதைவுகள் 2 சதவீதத்துக்கும் குறைவாகவே இருக்கிறது என்று காண்பிக்கிறது. அப்படியிருக்க, ஏன் இத்தனை அநேக கருச்சிதைவுகள்? இதற்கு இரண்டு அடிப்படைக் காரணங்கள் உண்டு.
அடிப்படை காரணங்கள்
பூர்வ காலங்களில் மக்கள்தொகை கட்டுப்பாடு என்பது ஒரு பிரச்னை அல்ல. பழங்குடியினரும் தேசங்களும் எண்ணிக்கையில் வளருவதை வரவேற்றனர், மற்றும் தங்களுடைய குடும்பங்களின் அளவைக் குறைத்துக்கொள்வதற்குப் பெண்கள் காரணம் காண்பது அரிதாயிருந்தது. எந்த ஒரு கருச்சிதைவும் சட்டமுரணானது, மற்றும் விபச்சாரம் அல்லது வேசித்தனத்தின் பலனாகவே இருந்தது.
மாறாக, கருச்சிதைவு கொள்கை இன்று அரசு முறை கொள்கையாக இருக்கக்கூடும். இந்த முறையில் மக்கள் தொக வெடிப்பின் அபாயம் இருக்கும் நாடுகளில் பிறப்பு எண்ணிக்கை கட்டுப்படுத்தப்படக்கூடும்.
இப்படிப்பட்ட ஒரு அபாயம் பல மேற்கத்திய நாடுகளில் இல்லை என்றாலும், கருச்சிதைவு எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. ஏன்? “நாம் பெண்கள் சுதந்தரத்தில் நம்பினால், ஒழுக்கநெறிபேரில் தங்களுடைய சொந்த தெரிவை செய்துகொள்வதற்குப் பெண்களுக்கு உரிமை உண்டு என்பதை நம்ப வேண்டும்,” என்று நியு யார்க் நகரில் கருச்சிதைவு உரிமைகளுக்கான மத கூட்டணியின் பிரதிநிதி கூறினார்.
ஆனால் ஒரு பெண் கருவுற்ற பிறகு, தாயின் பாகத்தை வகிக்க மறுக்கும் தெரிவை செய்வதற்கு, தன்னுடைய குழந்தையை சிதைத்திடுவதற்கு முழு உரிமை அவளுக்கு உண்டா? அப்படிப்பட்ட ஒரு செயல் ஏற்றுக்கொள்ளப்படத்தக்கதா? இன்று கருச்சிதைவு குறித்த வாதம், எதிர்வாதத்தின் மையம் இதுதான். விடை என்ன?
அதிகம் அவற்றுக்குக் கொடுக்கப்படும் விளக்கத்தின்பேரில் சார்ந்திருக்கிறது. உயிர் என்பது என்ன? அது எப்பொழுது ஆரம்பமாகிறது? பிறவா குழந்தைக்கு சட்டமுறையான உரிமைகள் உண்டா?
உயிர் எப்பொழுது ஆரம்பமாகிறது?
இருபத்திமூன்று குரோமொசோம்களுடன் ஆணின் வித்து பெண்ணின் கருவகத்திலுள்ள அதற்கொத்த எண்ணிக்கை குரோமொசோம்களுடன் இணையும்போது, ஒரு புதிய மனித உயிர் உண்டாகிறது. கருத்தரித்த இந்தச் சமயம் முதல், பால் மற்றும் தனிப்பட்ட மற்ற விவரங்கள் உறுதிபடுத்தப்படுகிறது. கர்ப்பமான அந்த ஒன்பது மாத காலப்பகுதியில் இருக்கும் வளர்ச்சி மட்டுமே ஒரே மாற்றமாக இருக்கும். “ஒரு சமயத்தில் நீங்கள் ஓர் உயிரணுவாக இருந்தீர்கள் என்று சொல்லுவது ஓர் உயிரியில் உண்மைக் கூற்றாகும்,” என்று டாக்டர் ஜான் C, வில்கே எழுதுகிறார். அப்படியென்றால் உயிர் கருத்தரிக்கும் அந்தச் சமயத்தில் ஆரம்பமாகிறதா? அநேகர் ஆம் என்று பதிலளிக்கிறார்கள். இந்தக் கருத்துடையவர்களுக்கு, எந்தச் சமயத்தில் செய்யப்படும் கருச்சிதைவும் கொலைக்கு சமமாக இருக்கிறது.
ஆரம்பக் கருத்தரிப்புக்குப் பின்பு 20 வாரங்கள் கழித்தே உயிர் ஆரம்பமாகிறது என்பது மற்றவர்களுடைய கருத்து. அவர்கள் காரியத்தை இந்த விதத்தில் நோக்குவதற்குக் காரணம் என்ன? ஏனென்றால் இந்தச் சமயத்தில்தானே கருவுற்றிருக்கும் சிசு அசைவதைத் தாய் உணர ஆரம்பிக்கிறாள். இந்தக் காலப் பகுதியைத்தான் “உயிர்ப்புறுதல்” என்று சில சமயங்களில் குறிப்பிடுகின்றனர். உயிருடன் பிறப்பது 20-வது வாரத்துக்குப் பின்பு எந்தச் சமயத்திலும் நிகழக்கூடும்; மற்றும் கருச்சிதைவு பொதுவாக கருவுற்று 20 முதல் 24 வாரங்களில் செய்யப்படுகின்றன, இந்தக் காலப்பகுதி பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. ஆக ஒரு குழந்தை சட்டப்பூர்வமாக உயிராயிருப்பதாகக் கருதப்படும் காலப்பகுதி இதுதானா?
பிரட்டனில் சட்டம், பிறவா குழந்தையை ஒரு மனிதனாக அங்கீகரிப்பதில்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில் கருச்சிதைவை சட்டரீதியாகக் கொலை என்று குறிப்பிடமுடியாது. ஆனால் குழந்தை தாயின் சரீரத்திலிருந்து பிரிக்கப்பட்டுவிட்டால், தொப்பூழ்க்கொடி அதன் நிலையிலிருந்தாலும், குழந்தையைக் கொல்லுவது ஒரு கொலைக் குற்றமாகும். அந்தச் சமயத்தில் அந்தக் குழந்தைக்கு சட்டப்பூர்வமான உரிமைகள் இருக்கிறது. அப்படியென்றால், சட்டப்பூர்வமாக உயிர் இந்த நிலையில்தான் பிறப்பில் ஆரம்பமாகிறது.
பிரிட்டனின் பிரதான ரபி வெளிப்படுத்திய யூதரின் கருத்து இதற்கு ஒத்திருக்கிறது. “பிறக்கும் அந்த நேரம் வரை” உயிர் ஆரம்பமாவதில்லை என்று அவர் குறிப்பிடுகிறார். மேலும் தொடர்ந்து சொல்லுகிறார்: “பிறவா குழந்தையை அழிப்பது கொலை என்று நாங்கள் கருதுவதில்லை.” அப்படியிருக்க கருவில் வளரும் சிசுவை அல்லது குழந்தையைப் பற்றியதென்ன? யூதரின் சட்டத்தில் விவாக உறவுகள் குடும்பக்கட்டுப்பாடு மற்றும் கருச்சிதைவு குறித்த காரியத்தில் நியு யார்க் நகரைச் சேர்ந்த ரபீ டேவிட் M. பெல்டுமென் குறிப்பிட்டதாவது: “முதிர் கரு ‘கடவுளுடைய இரகசியங்களின்’ அறியப்படாத, எதிர்கால, பலமான பகுதியாக இருக்கிறது.”
கருத்து முரண்பாடு
கருச்சிதைவு மத அடிப்படையில் ஏற்றுக்கொள்ளப்படுகிறது என்பதை இதிலிருந்து தெளிவாகத் தெரிகிறது. ஆனால் எல்லா மதங்களும் ஒரே விதமாக கருதுவதில்லை. அதிகாரப்பூர்வ ரோமன் கத்தோலிக்க மதத்தை எடுத்துக்கொள்ளுங்கள்.
1869-ல் போப் பயஸ் IX எந்த ஒரு வயதிலும் கருச்சிதைவு செய்துகொள்வதற்குக் கத்தோலிக்க மத சபையிலிருந்து விலக்கப்படுவதைத் தண்டனையாக ஆணையிட்டார். 1957-ல் பயஸ் XII அந்த நியமத்தை மீண்டும் வலியுறுத்தினார். அவர் சொன்னதாவது: “தாயின் கருவில் வளரும் குழந்தை உட்பட ஒவ்வொரு மனிதனும் உயிர் வாழ்வதற்கான உரிமையை நேரடியாகக் கடவுளிடமிருந்து பெருகின்றனர், பெற்றோரிடமிருந்து அல்ல.” 1985-ல் கென்யாவில் பேசும்போது ஜான் பால் II வெளிப்படையாக பின்வருமாறு அறிக்கையிட்டார்: “கருச்சிதைவு போன்ற செயல்கள் தவறு.”
என்றபோதிலும், அப்படிப்பட்ட கருத்து காலங்கடந்துவிட்ட ஒன்று, அது மாற்றப்பட வேண்டும் என்று இன்று அநேக கத்தோலிக்கர்கள் கூறுகின்றனர். இதனால் இந்தப் பிரச்னையின்பேரில் ரோமன் கத்தோலிக்கரில் பிரிவு காணப்படுகிறது. இதோ சில உண்மைகள்.
ரோமன் கத்தோலிக்க இரண்டக நிலை
உரிமைப் பெருக்கச் செயல்களுக்கு அமெரிக்க பிஷப் கமிட்டியின் அக்ராசினர் கார்டினல் பெர்னார்டின், கருச்சிதைவு ஒரு நெறிமுறைத் தவறு என்றும், சர்ச்சின் அதிகாரப் பூர்வ நிலைநிற்கை, அனைத்து ரோமன் கத்தோலிக்கரும் இதற்குக் கட்டுப்பட்டவர்கள் என்றும் வலியுறுத்துகிறார். மீண்டும் ஐக்கிய மாகாணங்களில் நோட்டர்டேம் பல்கலைக்கழகத்தில் நெறிமுறை மதக்கல்வியின் ரோமன் கத்தோலிக்கப் பேராசிரியர் ஜேம்ஸ் T. பர்ட்ஷேல் பின்வருமாறு எழுதினார்: “என்னுடைய விவாதம் நேரடியான ஒன்று. கருச்சிதைவு என்பது பிள்ளைக்கொலை: ஒரு குழந்தையைக் கொலை செய்வதாகும்.” என்றாலும், நான்கு வருடங்களுக்குப் பின்பு அதே பல்கலைக்கழகத்தின் இறைமையியல் துறையின் அக்கிராசினர் ரிச்சர்ட் P. மக்பிரியன் என்ற குரு, கருச்சிதைவு தன்னுடைய சர்ச்சின் தெளிவாக விளக்கப்பட்ட ஒரு போதனை அல்ல என்று விளக்கம் தர முயன்றார்.a இந்தக் கருத்துபடி, கருச்சிதைவு செய்துகொள்ளும் கத்தோலிக்கர்கள் உண்மையற்றவர்களாயிருப்பதாகக் கருதப்பட்டாலும் சர்ச்சிலிருந்து நீக்கப்பட முடியாது.
சர்ச் அதிகாரத்தின் இந்த இரண்டக நிலையின் காரணத்தால், பல பிரபல கத்தோலிக்கர்கள் கருச்சிதைவுக்கு சார்பாக இருக்கின்றனர். ஐக்கிய மாகாணங்களில் அவர்களைச் சேர்ர்ந்தவர்களில் சில குருமாரும் இருக்கின்றனர். இதில் பல கண்ணியாஸ்திரீகளும் அடங்குவர். இவர்களில் சிலர் கருச்சிதைவுக்கு ஆதரவான செய்தித்தாள் விளம்பரங்களுக்கும் தங்களை அறிமுகமாக்கினதால் தாங்கள் வகித்த ஸ்தனத்திலிருந்தும் விலக்கப்படும் அச்சுறுத்தலையும் எதிர்பட்டனர்.
கூடுதலாக இப்பொழுது கத்தோலிக்க சர்ச்சின் பாமரரும் கருச்சிதைவை ஆதரிக்கும் பிரிவினராக சுறுசுறுப்பாக செயல்பட ஆரம்பித்திருக்கின்றனர். “கத்தோலிக்க சர்ச்சின் பாமரருடைய கருத்துக்கொள்கையின் நேர் பாதையில் என்னைக் காண்கிறேன்,” என்றார் மகளிர் தேசிய சங்கத்தின் தலைவர் திருமதி. எலீனர் C. ஸ்மீல் அமெரிக்க ஐக்கிய மாகாணங்களில் உவாஷிங்டன் D.C.-யில் நடைபெற்ற ஒரு கருச்சிதைவு கருத்தரங்கில் இப்படியாகச் சொன்னார். அதே சமயத்தில், தி நியு யார்க் டைம்ஸ்-ன்படி, கருச்சிதைவு செய்துகொள்வதற்கான உரிமையை தான் ஆதரிப்பதால் ரோமன் கத்தோலிக்க சர்ச்சிலிருந்து விலக்கப்படுவாள் என்ற கூற்றை அவள் எள்ளி நகையாடினாள்.
தன்னுடைய மதமுறைமைகளில் ஏற்பட்டிருக்கும் இப்படிப்பட்ட முரண்பட்ட கருத்துக்களைத் தீர்த்து வைப்பதை ரோமன் கத்தோலிக்க சர்ச் அதிகக் கடினமாக இருப்பதாகக் காண்கிறது.
சட்டமுரணான கருச்சிதைவுகளின் ஆபத்துக்கள்
சட்டங்களையும் விதிமுறைகளையும் இயற்றுவது ஒன்று, ஆனால் அதிகாரிகள், நல்ல எண்ணத்துடனேயே, கருச்சிதைவின்பேரில் ஒரு சட்டத்தை வற்புறுத்துவது வேறு. மக்கள் உட்பட்டிருக்கின்றனர். நெருங்கிய விதத்திலும் தனிப்பட்ட விதத்திலும் உட்பட்டிருக்கின்றனர். அழுத்தத்தின் கீழ் மக்களின் பிரதிபலிப்பு என்னவாக இருக்கும் என்பதை நிதானிக்க முடியாது.
கருச்சிதைவை சட்டப்பூர்வமாக்குவதைத் தடை செய்வதில் அல்லது ஏற்கெனவே அமல்படுத்தப்பட்டிருக்கும் சட்டத்தை மாற்றிடுவதில் கருச்சிதைவுக்கு எதிர்கட்சியினர் வெற்றிகொள்வார்களானால் அப்பொழுது என்ன? அது எந்தப் பிரச்னைகளையாவது தீர்க்கிறதா? “[கருச்சிதைவு செய்துகொள்வதற்கு] ஒரு பெண் ஒரு வழியைக் கண்டுபிடிப்பாள், சில சமயங்களில் தன்னுடைய சொந்த உயிரை ஆபத்துக்குள்ளாக்கி அப்படிச் செய்வாள்,” என்றார் கருச்சிதைவுக்குப் பரிந்துரைக்கும் ஒரு நியுஸிலாந்து சட்ட மன்ற அங்கத்தினராகிய மேரிலின் வாரிங். “அரசியல்வாதிகளோ அல்லது சட்டங்களோ அவளுடைய செயலை நிறுத்த ஒன்றும் செய்யமுடியாது.” அங்குதான் பலமான ஒரு வாதம் இருக்கிறது. ‘எதைத் தெரிந்துகொள்வீர்கள்?’ என்று கருச்சிதைவை சிபாரிசு செய்கிறவர்கள் கேட்கிறார்கள்.
கருச்சிதைவு சட்டப்பூர்வமாக்கப்பட்ட இடங்களில், சில மரணங்கள் இருந்தபோதிலும், இந்தக் காரியம் கவனமாக மருத்துவ மேற்பார்வையின் கீழ் செய்யும் பழக்கம் இருக்கிறது. மறுபட்சத்தில், “கள்ளத்தனமாக” செய்யப்படும் கருச்சிதைவுகளால் மரண எண்ணிக்கை நம்பமுடியாத அளவுக்கு அதிகமாக இருக்கிறது, ஏனென்றால் ஆரோக்கியமற்ற சூழ்நிலைகளில் தகுதிபெறாத ஆட்களால் செய்யப்படுகிறது. உதாரணமாக, இப்படிப்பட்ட கருச்சிதைவுகளால் பங்ளாதேஷில் ஆண்டுதோறும் 12,000 பெண்கள் உயிரிழக்கின்றனர் என்று புள்ளிவிவரங்கள் காண்பிக்கின்றன.
ஆனால் இந்த எல்லா காரியத்திலும், சிந்திக்கப்படவேண்டிய மற்றொரு மானிட அம்சம் இருக்கிறது. ஒரு வரிசைமுறையின் அடிப்படையில் கருச்சிதைவுகளை நடத்தும் மருத்துவர்களும் செவிலியர்களும் எப்படி உணருகின்றனர்? ஒரு கருச்சிதைவை செய்வது, தாயும் தகப்பனுமாக இருக்கப்போகிறவர்களின் உடல், மனம் மற்றும் உணர்ச்சிகளின் மீது என்ன விதமான பாதிப்பை ஏற்படுத்துகிறது? இந்தக் கேள்விகளை நாம் அடுத்து கவனிப்போம். (g87 4/8)
[அடிக்குறிப்புகள்]
a “தெளிவாக விளக்கப்பட்ட ஒரு போதனை” போப்பின் அதிகாரத்தின்கீழ் ரோமன் கத்தோலிக்க சர்ச்சால் குற்றமற்றதாக பிரகடனம் செய்யப்பட்ட ஒன்று என்று கருதப்பட்டது.
[பக்கம் 5-ன் பெட்டி]
குறிப்பிடப்படும் பதில் பெயர்கள்
கருச்சிதைவை ஆதரிப்பவர்கள் தங்களைத் தெரிவு செய்யும் சார்பினர் என்று குறிப்பிடப்படுவதை விரும்புகின்றனர். இந்தப் பழக்கத்தை எதிர்ப்பவர்கள் தங்களை உயிர்ச் சார்புப் பணிமக்கள் என்று அழைத்துக்கொள்வது போன்று அப்படி அழைக்கப்படுவதை விரும்புகின்றனர். இந்தக் கட்டுரைகளில், தெளிவாகப் புரிந்துகொள்வதற்காக கருச்சிதைவு சார்பினர் என்றும் கருச்சிதைவுக்கு எதிரானவர்கள் என்றும் குறிப்பிடப்படுகின்றனர்.
[பக்கம் 5-ன் படம்]
“தங்களுடைய சொந்த தெரிவை செய்துகொள்வதற்குப் பெண்களுக்கு உரிமை உண்டு என்று நாம் நம்ப வேண்டும்,” என்று அநேகர் கூறுகின்றனர்
[படத்திற்கான நன்றி]
H. Armstrong Roberts
[பக்கம் 7-ன் படம்]
அநேக பெண்கள் கருச்சிதைவுக்கு எதிரானவர்கள் என்பதை வெளிப்படையாகக் காண்பிக்கிறார்கள்