பைபிளின் கருத்து
பல பாஷைகள் பேசுவது—கடவுளிடமிருந்து தோன்றுகிறதா?
“நேரடியாக என் கைகளுக்குள் ஒரு விநோதமான உணர்ச்சி வந்தது, அது . . . பொங்கிப் பரவத் தொடங்கியது! அது ஆயிரம்—பத்தாயிரம்—பின்பு பத்து இலட்சம் அளவான மின்சார வோல்டுகளைப்போல் இருந்தது. . . . எனக்கு விளங்காத ஒரு மொழியில் ஏறக்குறைய இரண்டு மணிநேரங்கள் நான் பேசினேன்.”
இன்று கிறிஸ்தவ வணக்கத்தோடு பலர் இணைக்கும் மிக அதிகம் தர்கிக்கப்படுகிற பழக்கங்களில் ஒன்றை இந்த அனுபவம் மாதிரியாகக் காட்டுகிறது, அதாவது: பல பாஷைகள் பேசுதல் ஆகும். இந்தக் காரியம் பெந்தெகொஸ்தே தொகுதிகளுக்கும் மற்றச் சர்ச்சுகளில் காரிஸ்மா இயக்கங்களுக்கும் முக்கிய அக்கறைக்குரியதாய் இருந்து வருகிறது.
பல பாஷைகள் பேசும் பாகத்தை வகிப்பதைக் குறித்து உள்ளப்பூர்வமான வணக்கத்தார் எதிர்ப்படும் இரண்டக நிலையை, பெந்தெகொஸ்தே பரிசுத்த சபையைச் சேர்ந்த டாக்டர் வின்சன் சைனன் வற்புறுத்திக் கூறினார். அவர் சொன்னதாவது: “பல பாஷைகள் பேசுவது நமக்கு மன சங்கடத்தை உண்டாக்குகிறது.” ஏன்? இன்று பல பாஷைகள் நமக்கு ஒன்றும் விளங்காதிருக்கலாம் என்று டாக்டர் சைனன் குறிப்பிட்டார். “அது ஒருவேளை சங்கடமாயிருந்தாலும், க்ளோஷோலேவியா [பல பாஷைகள் பேசுவது] சர்ச்சை விரிவாக்கவும் புதுப்பிக்கவும் சரித்திரத்தில் அனுகூல முக்கியத்துவம் வாய்ந்த நிலைகளில் கடவுள் தெரிந்துகொண்ட வரம்,” என்று அவர் மேலும் தொடர்ந்து கூறினார்.—தடித்த எழுத்துக்கள் எங்களுடையது.
இத்தகைய “அனுகூல முக்கியத்துவம் வாய்ந்த நிலை” ஒன்று ஏறக்குறைய 1,900 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த மிக அசாதாரண ஒரு சம்பவமாகும்.
ஏன் பல பாஷைகள்?
அது பொ.ச.33-ம் ஆண்டின் பெந்தெகொஸ்தே நாள். ஒரு மாறுதல் ஏற்படவிருந்தது. பூர்வ யூத நியாயப்பிரமாண உடன்படிக்கையை விலக்கி அதனிடத்தை ஒரு புதிய உடன்படிக்கை ஏற்கவிருந்தது. என்ன காரணத்துக்காக? யெகோவா தேவனை வணங்குவதற்கு ஒரு மேம்பட்ட வழியைத் திறப்பதற்கே. வணக்கத்தில் இந்த மாற்றத்தின் பேரில் கடவுளுடைய ஆசீர்வாதம் இருந்ததை, ஜனங்கள் எவ்வாறு காணமுடியும்? நீதியில் மனச்சாய்வு கொண்டுள்ள ஆட்களின் இருதயத்தைத் தூண்டி இயக்க, அவர் பல பாஷைகள் பேசுதல் உட்பட, திடீரென வெளிப்படும் அற்புத சம்பவங்களைப் பயன்படுத்துவார். இவர்கள், தங்கள் முற்பிதாக்களின் சர்வவல்லமையுள்ள கடவுள் இயேசுவின் சீஷர்களின்மேல் நிச்சயமாகவே இப்பொழுது தம்முடைய அங்கீகாரத்தை அளித்துக்கொண்டிருக்கிறாரென காண்பார்கள்.
பெந்தெகொஸ்தே நாளன்று பல பாஷைகள் பேசின, வரம் மற்றொரு நோக்கத்தையும் சேவித்தது. இயேசுவின் நாளில் அச்சடித்தலும் வானொலியும் இல்லை, மேலும் எழுதப்பட்ட பதிவுகள் சாதாரண மக்களுக்குள் பொதுவாய்க் கிடைக்கக் கூடியவையாயில்லை. ஆகவே, கடவுளுடைய சித்தத்தையும் நோக்கத்தையும் பற்றிய நற்செய்தி விசுவாசிகளின் மொழிகளில் கொண்டு செல்லப்பட வேண்டியிருந்தது. யெகோவாவை வணங்கினவர்கள் ஆப்பிரிக்காவிலும், ஆசியாவிலும் ஐரோப்பாவிலுமிருந்து பன்னிரண்டுக்கு மேற்பட்ட நாடுகளிலிருந்து எருசலேமில் பெந்தெகொஸ்தே பண்டிகைக்கு வந்திருந்தார்கள், மேலும் இவர்கள் வெவ்வேறுபட்ட பல மொழிகளைப் பேசினார்கள். இயேசுவின் சீஷர்கள் ஏறக்குறைய 120 பேரும் எருசலேமில் கூடியிருந்தார்கள். கடவுளுடைய பரிசுத்த ஆவியைப் பெற்று, சிஷர்கள் வெவ்வேறுபட்ட மொழிகளில் பேசத் தொடங்கினார்கள். திரள் கூட்டமான வணக்கத்தாருக்கு எத்தகைய நற்செய்தியின் விருந்து பரிமாறப்பட்டது! இவர்கள், ‘தேவனுடைய மகத்துவங்களைப் பற்றி அவர்கள் இவர்களுடைய சொந்த பாஷைகளில் பேசுவதைக் கேட்க’ முடிந்தது.—அப்போஸ்தலர் 2:5-11.
இந்த அற்புதம் எந்த அளவில் பலன் தந்தது? செவிகொடுத்துக் கேட்டவர்களில் மூவாயிரம் பேர் அதே நாளில் விசுவாசிகளானார்கள்! (அப்போஸ்தலர் 2:41) தங்கள் தொலைதூர வீடுகளுக்குத் திரும்பிச் சென்றபோது புதிதாய் மதம் மாறிய இவர்கள் உண்மையான வணக்கத்தைப் பற்றி “பூமியின் மிகத் தொலைதூர பாகம் வரையில்” சாட்சி பகர்ந்தார்கள்.—அப்போஸ்தலர் 1:8, NW.
பெந்தெகொஸ்தேக்குப் பின் இருபதுக்குச் சற்று மேற்பட்ட ஆண்டுகளுக்குள்ளேயே பவுல், பல பாஷைகள் பேசும் வரம் முடிவில் நின்றுபோகுமென அறிவிப்பு செய்தான். (1 கொரிந்தியர் 13:8) இது ஏன் நியாயமானது? ஏனென்றால், தொடக்கக் கிறிஸ்தவத்தை மெய்ப்பிக்கக் கொடுக்கப்பட்ட பெந்தெகொஸ்தே அற்புதங்கள், அவற்றின் நோக்கத்தை நன்றாய்ச் சேவித்துவிட்டன, இனிமேலும் தேவைப்படவில்லை.
இதற்கு 1,500-க்கு மேற்பட்ட ஆண்டுகளுக்கு முன்னால் சீனாய் மலையில் நிகழ்ந்ததை நாம் இதற்கொப்பாய்க் கருதலாம். அங்கே, நியாயப்பிரமாண உடன்படிக்கை தெய்வீகத் தோற்றத்தைக் கொண்டதென அங்கே கூடியிருந்த ஜனங்களுக்கு அறிவுறுத்தும்படி கடவுள் இயற்கைக்கு அப்பாற்பட்ட அதிசயிக்கத்தக்க அடையாளங்கள் உண்டாகச் செய்தார். இந்தப் புதிய ஏற்பாட்டை ஜனங்கள் உறுதியாக ஏற்றப்பின், இந்தக் குறிப்பிட்ட அற்புத அடையாளங்கள் காணப்படுவது நின்றுபோயிற்று.—யாத்திராகமம் 19:16-19.
இன்று பலபாஷைகள்?
பல பாஷைகள் பேசுவதற்குக் கடவுளுடைய பரிசுத்த ஆவி தங்களுக்கு உதவிசெய்கிறதென இன்று பலர் உணருகின்றனர். பல பாஷைகள் பேசும் வரம் கடந்துபோய்விட்டதென்ற வேதப்பூர்வ அத்தாட்சியோடு இதை நாம் எவ்வாறு பொருத்துவிக்க முடியும்?
பல பாஷைகள் பேசுவதாகச் சொல்லப்படுவது பொதுவாய் உச்ச அளவான உணர்ச்சிவேக திடீர் ஒலி வெடிப்புகளாகவே பொதுவாய் இருக்கிறது, ஒருவருக்கும் அது விளங்குகிறதில்லை. ஆகவே அது கடவுளிடமிருந்து தோன்றியிருக்க முடியாது. மத பாசாங்குக்காரர்கள் இத்தகைய “வல்ல செயல்களை” இயேசுவின் பெயரோடு இணைக்க முயற்சி செய்வார்கள், ஆனால் இந்த “அக்கிரமச் செய்கைக்காரர்”களைத் தாம் ஏற்க மறுத்துவிடுவாரென இயேசு கூறினார். (மத்தேயு 7:21-23, தி.மொ.) ஏமாற்றும் அற்புதங்கள், அல்லது ‘பொய்யான அடையாளங்களும் அற்புதங்களும்’ இருக்கப்போகும் ஓர் எதிர்காலத்தைக் குறித்து பவுல் தீர்க்கதரிசனமாய் எச்சரித்தான். இவ்வாறு “அநீதத்தினால் உண்டாகும் சகலவித வஞ்சகம்” பிரதான வஞ்சகனாகிய பிசாசான சாத்தானின் தனிச் சிறப்புச் செயலாகும்.
பல பாஷைகள் பேசுவது பவுலின் நாளில் கிரேக்கப் புறமதங்கள் சிலவற்றின் ஒரு பாகமாயிருந்ததென்பது உங்களுக்குத் தெரியுமா? அவர்களுடைய மத வழிபாட்டு முறைகள் பல பாஷைகள் பேசுவது, உடலைக் கீறிக்கொள்வது, வெறிகொண்டு நிர்வாண நடனமாடுவது ஆகியவற்றைப் போன்ற பழக்கங்களுடன் கலந்தன. பல பாஷைகள் பேசுவது மிக அதிக அசுத்தமாயுள்ள செல்வாக்குகளின்கீழ், நடைபெறலாமென இத்தகைய சரித்திரப் பூர்வ உதாரணங்கள் தெளிவாய்க் காட்டுகின்றன.
பகுத்தறிவு தெளிவாய்த் தெரிவிக்கிறது
இன்று மெய் மறந்த நிலையில் பல பாஷைகளில் பேசுவதன் தொடக்கத்தைப் பற்றி உங்களுக்கு இன்னும் சந்தேகம் இருந்தால் 1 யோவன் 4:1-ஐ ஆழ்ந்து சிந்தித்துப் பாருங்கள், அதில் சொல்லியிருப்பதாவது: “பிரியமானவர்களே, . . . அந்த ஆவிகள் தேவனால் உண்டானவைகளோ என்று சோதித்தறியுங்கள்.” ஆம், உதவிக்காக ஜெபசிந்தையுள்ள வேண்டுதலுடன், மனமூன்றி அமைதியாய்க் கடவுளுடைய வார்த்தையைப் படிப்பதன்மூலம் சோதித்தறியுங்கள். (அப்போஸ்தலர் 17:11) இன்று பல பாஷைகள் பேசும் அந்த மதங்கள் “சகல சத்தியத்திற்குள்ளும்” உண்மையில் வழிநடத்தப்படுகின்றனவாவென்று பாருங்கள்.—யோவான் 16:13.
முதல் நூற்றாண்டில், கிறிஸ்தவர்கள் பல பாஷைகளில் பேசினபோது, செவிகொடுத்துக் கேட்டவர்களை அது அறிவுறுத்தியது. தேவாவியால் ஏவப்பட்ட அந்தச் செய்தி தெளிவாகவும் புரியக்கூடியதாகவும் இருக்க வேண்டியிருந்தது.—1 கொரிந்தியர் 14:26-28.
பைபிள் சத்தியத்தை இப்பொழுது உயர்வாக மதிக்கிறவர்கள், வெகு காலத்துக்கு முன்னால் அந்தப் பெந்தெகொஸ்தே நாளில் தேவாவியால் ஏவப்பட்ட பல பாஷைகளிலிருந்து வெளிவந்த பேச்சையும் மேம்படும் கூற்றுகளை வெளியிட்டுத் தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். இது எப்படி? எப்படியென்றால், கீழ்ப்படிதலுள்ள மனிதவர்க்கம் முழுவதற்குமுரிய கிறிஸ்துவால் ஆளப்படும் கடவுளுடைய ராஜ்ய ஆட்சியை மேலும் பேரளவான ஆட்களுக்கும் நிலையான முறையிலும் அறிவிக்கிறார்கள். அவர்களுடைய செய்தி பைபிளின் எழுதப்பட்ட செய்தியின் பாகமாயிருக்கிறது, மேலும் முதல்-நூற்றாண்டு கிறிஸ்தவர்களின் பல பாஷைகள் பேசுதல் போலிராமல், பைபிள், முழுமையில் அல்லது பகுதியில், 1,800 மொழிகளில் கிடைக்கக்கூடியதாயிருக்கிறது. (g87 4/8)
[பக்கம் 25-ன் படம்]
அந்நிய மொழிகளில் சாட்சி கொடுப்பதற்கான வரம் முதற் நூற்றாண்டு கிறிஸ்தவர்களுக்குக் கொடுக்கப்பட்டது