உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g88 4/8 பக். 26-28
  • வாதாங்கொட்டைகள்—அந்தக் கொட்டைப்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • வாதாங்கொட்டைகள்—அந்தக் கொட்டைப்
  • விழித்தெழு!—1988
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • வரலாற்றில் வாதுமைகள்
  • புகை மண்டிய நெருப்புப் பானைகளின் உபயோகம்
  • கல்மழைச் சத்தம்போல் விழுகின்ற வாதாங்கொட்டை
  • பைபிளில் வாதுமைகள்?
  • ஆரோனுடைய கோல் பூ பூக்கிறது
    என்னுடைய பைபிள் கதை புத்தகம்
  • “நாம் ஒரு ஹோஷதா டி ஷுஃபஸை அருந்துவோம்!”
    விழித்தெழு!—1992
  • ‘யெகோவாவின் மரங்கள் திருப்தியடைகின்றன’
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2004
  • எரேமியாவைப் போல் விழித்திருங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2011
மேலும் பார்க்க
விழித்தெழு!—1988
g88 4/8 பக். 26-28

வாதாங்கொட்டைகள்—அந்தக் கொட்டைப் பழம்

மலை உச்சியின் மீதுள்ள என்னுடைய சாதகமான இடத்திலிருந்து கீழே பசுமைகலந்த நீல வண்ணப்பள்ளத்தாக்கு முழுவதிலும் தொடர்ச்சியாகச் சிதறியிருக்கும் வெண்ணிறத் தீவுகளை நான் பார்க்கிறேன். தொலைவிலிருந்து பார்க்கும்போது வெண்ணிற மக்காச்சோளத் தோட்டங்கள் போல் காட்சியளித்தாலும், கூர்ந்து கவனிக்கையில், உண்மையில், அவை ஆயிரக்கணக்கான தனி மரங்கள் என்பது வெளிப்படுகிறது. ஒவ்வொன்றிலும் நேர்த்தியான இளஞ்சிவப்பு மையப் பகுதிகளைக் கொண்ட வெண்மலர்கள் நிறைந்துள்ளன. அவைக் காற்றைத் தன்னுடைய போதயூட்டும் நறுமணத்தால் நிரப்புகின்றன. வசந்த காலத்தின் ஆரம்பத்தில் முழுமலர்ச்சியடைந்த வாதுமைத் தோட்டத்தை என்னுடைய புலன்களைச் சிலிர்க்க வைக்கிற இந்த இன்பமூட்டும் காரியங்கள் சிறந்த முறையில் விவரிக்கின்றன.

கலிஃபோர்னியாவிலுள்ள ஒரு சிறிய பட்டணத்தில் ஒரு வாதுமைப்பழத் தோட்டப் பகுதியில் வளர்க்கப்பட்டதால் குழந்தைப் பருவம் முதற்கொண்டு நான் இந்தத் திகைப்பூட்டும் காட்சியை அனுபவித்திருக்கிறேன். இப்படிப்பட்ட சுவைமிக்க பழங்களைப் பயிரிடுவதன் மூலமும், அறுவடை செய்வதன் மூலமும் என்னுடைய குடும்பம் வாழ்க்கை நடத்தி வந்தது.

“பழங்களா? வாதுமை ஒரு கொட்டை அல்லவா?” என்று நீங்கள் கேட்கிறீர்கள். இரண்டும் சரிதான். பொதுவாக ஒரு கொட்டையாகக் கருதப்பட்டாலும் ஆவலைத்தூண்டும் வகையில் ஒரு பழமாகத்தான் இருக்கிறது. மற்றக் கொட்டைப் பழங்கள் தங்கள் ஆரம்பத்தைக் கொண்டிருக்கிற, குறிப்பாக, ரோஜா இனத்தின் பாகமாக இது இருக்கிறது. கொட்டைப் பழங்களில் ‘பீச்’ மரக்கனிகள், இலந்தை வர்க்கக் கனிகள், மற்றும் ப்ளம்ஸ் போன்றவை அடங்கியுள்ளன. அடுத்தமுறை ஒரு ‘பீச்’ கொட்டையை நீங்கள் கையில் வைத்திருக்கும்போது அது எவ்வளவு நெருக்கமாக, அளவிலும் தோற்றத்திலும் ஒரு வாதுமைக் கொட்டையின் மேலோட்டிற்கு ஒத்திருக்கிறது என்பதைக் கவனியுங்கள். இரண்டையும் பிளந்தால் அவைகளுடைய பருப்புகளும்கூட ஒத்ததாக இருப்பதை நீங்கள் காண்பீர்கள். இருப்பினும், வாதுமைப் பருப்புகள் மட்டும் உண்ணப்படலாம். ‘பீச்’ மரக்கனி போன்ற கனிகளின் பருப்பை உண்பதானது உங்களை வியாதிக்குள்ளாக்கிவிடக்கூடும்.

வரலாற்றில் வாதுமைகள்

வாதுமையின் வரலாறு மூலங்கள் ஆசியா மைனர் சிறிய ஆசியமற்றும் மத்தியதரைக்கடல் பகுதிக்குப் பின்னோக்கிச் செல்கிறது. உண்மையில், கிறிஸ்துவின் காலத்திற்கு வெகு முன்பாகவே, மத்திய கிழக்கிலிருந்தவர்கள் வாதுமைகளை தங்கள் உணவின் அன்றாட பாகமாக உபயோகித்து வந்தனர். அதற்கு நல்ல காரணமுண்டு.

ஒரு பிடி அளவான வாதாங்கொட்டைகள் சுவையான சிற்றுண்டியாகத் திகழ்வது மட்டுமல்லாமல் நல்ல ஆரோக்கியத்தையும் அளிக்கிறது. வாதாங்கொட்டைகள் முக்கியமான சத்துள்ள பொருட்களையும் மற்றும் குறிப்பிடத்தக்க அளவில் தேவையான உயிர்ச் சத்துக்களையும் தாதுப் பொருட்களையும் கொண்டிருக்கின்றன. இது மத்திய கிழக்கிலிருந்தவர்களுடைய அன்றாட உணவில் வாதுமைப்பழங்கள் ஏன் உயர்வாக மதிப்பிடப்பட்டன என்பதையும், மத்திய காலங்களில் இஸ்லாம் தன்னுடைய எல்லைகளை விரிவாக்கும்போது ஏன் வாதாங்கொட்டைகள் தொடர்ந்து பயிரிடப்பட்டன என்பதையும் விளக்கக்கூடும்.

முஸ்லீம்களின் பயிரிடும் பாகங்கள் ஸ்பயினிலும் பிறகு கலிஃபோர்னியாவின் ஸ்பனிய மத ஸ்தபனங்களின் காலனி விரிவாக்கத்தின் மூலம் ‘புதிய உலகத்திலும்’ (வடக்கு மற்றும் தென் அமெரிக்க நாடுகள்) அபிவிருத்தியடைந்தது. இப்பொழுது, 200 ஆண்டுகளுக்குப் பிறகு, வாதாங்கொட்டைகள் கலிஃபோர்னியாவின் மிகப்பெரிய மர விளைச்சலாக இருக்கின்றன. மேலுமாக, அந்த மாகாணமே உலகின் பிரதான வாதாங்கொட்டை பயிரிடும் இடங்களில் ஒன்றாக இருக்கிறது.

புகை மண்டிய நெருப்புப் பானைகளின் உபயோகம்

பூப்பூக்கும் காலத்தின்போது வாதுமை மலர் மொட்டுகள் நீண்ட நேரத்திற்கு உறைநிலை வெப்பத்திற்குக் கீழ் வெளிக்காட்டப்படுமேயானால் அவை கெட்டுவிடுவதற்கான ஆபத்து இருக்கிறது. கடந்த காலத்தில், இந்த மிருதுவான மொட்டுகளைக் கெட்டுப்போவதிலிருந்து தடுக்க புகைமண்டிய நெருப்புப் பானைகள் உறைபனிக்கு எதிரான பாதுகாப்பாக உபயோகப்படுத்தப்பட்டன. இந்த எண்ணை-எரிப்புப் பானைகள் மர வரிசைகளினூடே ஒழுங்கான இடைவெளிகளில் வைக்கப்பட்டன. மிகச் சிறிய வாதுமை மொட்டுகள் இந்த மேலே படியும் கருமையான புகைப் போர்வையிலிருந்து அதிகமான பலனை அடைந்தாலும் உள்ளூரில் வசிப்பவர்கள் நன்மையடையவில்லை!

படுக்கைக்குச் சுத்தமாகச் சென்று காலையில் எழுந்திருக்கையில் உங்கள் முகம் கரிப்புகையால் மூடப்பட்டிருப்பதையும், அது உங்கள் நாசிகளில் ஊடுருவிச் சென்றிருப்பதையும், உங்கள் நகங்களின் அடியிலும்கூட நுழைந்திருப்பதையும் கற்பனை செய்து பாருங்கள்! மூடப்பட்ட ஜன்னல்களோ மற்றும் கதவுகளோ அல்லது அதிகளவான சோப்போ தண்ணீரோ இந்தப் புகைமண்டிய நெருப்புப் பானைகளுக்கும் உறைபனிக்கும் இடையேயான போரட்டத்தின்போது நம்மைச் சுத்தமாக வைத்துக்கொள்ள முடியாது.

இருப்பினும், மகிழ்ச்சிகரமாக, காரியங்கள் மாறிவிட்டன. சில பழத்தோட்டங்களில் இன்னும் புகைமண்டிய நெருப்புப் பானைகளை உபயோகித்தாலும், வேறு முறைகள் வெற்றிகரமாக உபயோகப்படுத்தப்பட்டு வருகின்றன. இது வாதுமைப்பழ வளர்ப்போர் பிரிவில் வசிப்பவர்களில் மகிழ்ச்சியைக் கொண்டு வந்திருக்கிறது.

கல்மழைச் சத்தம்போல் விழுகின்ற வாதாங்கொட்டை

அநேக ஆண்டுகளினூடே வாதாங்கொட்டைகளின் அறுப்பு முறைகளும் மாறியிருக்கின்றன. கூலிக்காக வேலை செய்பவர்கள் பெரிய ரப்பர் சம்மட்டிகளை எடுத்துக் கொண்டு மரத்தின்மேல் சுறுசுறுப்பாக ஏறி கிளைகளை அடிப்பதனால் வாதாங்கொட்டைகள் கீழே விரிக்கப்பட்டுள்ள கித்தான் (கேன்வாஸ்) விரிப்பின்மேல் கல் மழை போன்ற சத்தத்துடன் விழுகின்றன. அந்த விரிப்புகள் பிற்பாடு ஒரு குதிரையின் மூலமாக அல்லது உழு இயந்திரத்தின் (டிராக்டர்) மூலமாக அடுத்த மரத்திற்குக் கீழே இழுத்துச் செல்லப்பட்டு அந்தச் செயல்முறை மறுபடியும் செயல்படுத்தப்படுகிறது. விரிப்புகள் இழுப்பதற்கு மிகவும் கனமாக இருக்கும்போது வாதாங்கொட்டைகள் கோணி சாக்குகளில் நிரப்பப்பட்டு சுத்தம் செய்வதற்காக உமிநீக்கும் இயந்திரத்திற்கு இழுத்துச் செல்லப்படுகின்றன.

இன்றைக்கு மரங்களைக் குலுக்கவும், வாதாங்கொட்டைகளைச் சேகரிக்கவும் பழங்களிலிருந்து அழுக்கு, உமி ஆகியவற்றின் குப்பைகளைப் பிரிக்கவும்கூட இயந்திரங்கள் உபயோகப்படுத்தப்படுகின்றன. வாதுமைப்பழங்களிலிருந்து பெரும்பான்மையான குப்பைகளைப் பிரித்தெடுக்க அதிகவேகக் காற்றை உபயோகிக்கும் ஒரு இயந்திரத்தின் ஆரம்பகால வடிவமைப்பாளர்களில் என் தந்தையும் ஒருவர்.

பின்பு, வாதாங்கொட்டைகள், பதனிடும் இயந்திரத்தினூடே தானாகவே பாய்ந்து செல்கின்றன. அங்கே அவைகள் உடைக்கப்பட்டு, சுத்தம் செய்யப்பட்டு, பருமனுக்கேற்றவாறு பிரிக்கப்பட்டு, மின்சாரக் கண் மூலமாக இனவாரியாகப் பிரிக்கப்பட்டு ஒரு முடிவான ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றன.

அடுத்து, சில வாதாங்கொட்டைகளுக்கு நேரிடுவது அதிகம் கிளர்ச்சியூட்டுவதாயும், பசியார்வமூட்டுவதாயும் இருக்கிறது. ஒரு சாதாரண பருப்பு திடீரென கொட்டை மரப் புகை, பூண்டு அல்லது வெங்காயம் ஆகியவற்றால் சுவையேற்றப்பட்டதாகவும், அல்லது சர்க்கரை தடவப்பெற்றதாகவும், உப்பேற்றப்பட்டதாகவும், வறுக்கப்பட்டதாகவும், அல்லது பாலாடை கலந்த வாதாங்கொட்டை வெண்ணெயாய் மாறுவதாகவும் கற்பனை செய்து பாருங்கள்.—உங்கள் நாவின் சுவைபார்க்கும் பகுதிகளை வசீகரிக்கும் வகையில் வடிவமைக்கப்பெற்ற அநேக சுவையான மாற்றங்களில் இவைகள் ஒரு சில. மேலும், முழு அளவிலான அல்லது நொறுக்கப்பட்ட வாதாங்கொட்டைகளால் சுவையூட்டப்பட்ட எல்லா விதமான மிட்டாய் பானங்களையும் ரொட்டிக் கிடங்குப் பொருட்களையும், உறைந்த பாலாடைகளையும் (ice cream) நாம் மறந்துவிடலாகாது!

வாதாங்கொட்டை தோட்டங்களின் நடுவே வளர்ந்து வந்தது எனக்கு மிக அதிகமான அளவில் இன்பகரமானதும், மறக்க முடியாததுமாக நிரூபித்திருக்கிறது. இந்தக் கொட்டைப் பழத்தைப் பற்றி எதுவெல்லாம் தெரிய வேண்டுமோ அதையெல்லாம் அறிந்து தேறிவிட்டேன் என்று நீங்கள் நினைக்கக்கூடும். அப்படியல்ல. நான் பைபிளைப் படிக்க ஆரம்பித்தபோது, வாதாங்கொட்டைக்கான என்னுடைய போற்றுதல் வியக்கத்தகும் வகையில் அதிகரித்தது. “பைபிளா?” என்று நீங்கள் கேட்கிறீர்கள். ஆம், என்னுடைய படிப்புகள் முலமாக, வாதுமை மரம் கடவுள் தன்னுடைய ஜனங்களோடு கொண்டிருந்த செயல் தொடர்புகளில் ஒரு முக்கிய பாகத்தை வகித்தது என்பதைக் கண்டுபிடித்தேன்.

பைபிளில் வாதுமைகள்?

வாதுமை மரத்திற்கான எபிரேய வார்த்தை சொல்லர்த்தமாக “விழித்திருக்கும் ஒன்று” அல்லது “விழிப்பூட்டுகிற ஒன்று” என்று அர்த்தங்கொள்கிறது என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்களா? பாலஸ்தீனா பகுதியில் வாதுமை மரம் எல்லா கனிதரும் மரங்களிலும் முதலாவதாக, ஜனவரி அல்லது பிப்ரவரியின் ஆரம்பத்திலேயே, பூக்கிறது என்பதை நினைவுகூரும்போது இது பொருத்தமாக இருக்கிறது. “வாதுமை மரத்தின் கிளை” என்று கடவுள் குறிப்பிட்டபோது அவர் எதை அர்த்தப்படுத்தினார் என்பதை விவரிக்கவும் இது உதவுகிறது. (எரேமியா 1:11, 12) வேறு வார்த்தைகளில் குறிப்பிடுவோமேயானால், யெகோவா தேவன் தம்முடைய வாக்குத்தத்தங்கள் சம்பந்தப்பட்டதில் அவற்றை நிறைவேற்ற “தொடர்ந்து விழிப்புடன்” இருக்கிறார் என்று சொல்லலாம்.

பைபிளில் வாதுமை மரத்தின் உபயோகத்தைப் பற்றிய மற்றுமொரு உதாரணம், அபிஷேகம் பண்ணப்பட்ட பிரதான ஆசாரியனாக ஆரோனின் அதிகாரம் சம்பந்தமாக இஸ்ரவேலருடைய சவாலின் கிளர்ச்சியூட்டும் பதிவு. அந்தப் பிரச்னையைத் தீர்க்க இஸ்ரவேலின் 12 கோத்திரங்களின் வம்ச தலைவர்கள் ஒவ்வொருவரும் தங்களுடைய பிரபுவின் கோலைக் கொண்டுவந்து புனிதமான உடன்படிக்கை பெட்டிக்கு முன்னே வைக்கும்படி யெகோவா கட்டளையிட்டார். வாதுமை கிளையால் செய்யப்பட்ட ஆரோனின் கோல் மற்ற 12 கோல்களுடனே வைக்கப்பட்டது. மறுநாள் முடிவுகளைக் கொண்டுவந்தது—ஆரோன் மீதான கடவுளுடைய அங்கீகாரத்தின் முத்திரை. அவருடைய கோல் ஓரிரவிற்குள்ளாக தளிர்த்தது; அது “துளிர்விட்டு, பூப்பூத்து, வாதுமைப்பழங்களைக் கொடுத்தது.” மொட்டாகி, மலராகி, பின்பு கனியாகும் படிப்படியான இயற்கை நிலைகளுக்குப் பதிலாக எல்லா மூன்று பருவங்களும் ஒரே சமயத்தில் சம்பவித்தது உண்மையிலேயே ஓர் அற்புதம்!—எண்ணாகமம் 17:1-11.

வாதாங்கொட்டை இஸ்ரவேலரிடையே ஒரு புகழ்பெற்ற தின்பண்டமாகவும் இருந்தது. உதாரணமாக, பூர்வ கோத்திரத் தலைவனாகிய யாக்கோபு, எகிப்து அரசனின் தயவைப் பெற நாடியபோது, வெகுமதிகள் அனுப்பினான். அவற்றில் “தேசத்தின் உச்சிதமான வஸ்துக்களின்” ஒன்றான வாதாங்கொட்டைகளும் அடங்கியிருந்தன. (ஆதியாகமம் 43:11) மேலுமாக, மணமுள்ள வாதுமைப் பூக்கொத்தானது பரிசுத்தக் கூடாரக் குத்துவிளக்கின் கிளைகளின் மொக்குகளுக்கு வேலைப்பாடாகப் பயன்படுத்தப்பட்டது.—யாத்திராகமம் 25:33, 34.

சந்தேகமின்றி, வாதுமைக் கொட்டைக்கான இந்த வேதாகமக் குறிப்புரைகள் மனிதனின் முடிவில்லா மகிழ்ச்சிக்காக கடவுள் படைத்துள்ள அநேக அதிசயமான படைப்புகளில் மேலும் ஒன்றிற்கு அதிக முழுமையான போற்றுதலளிப்பதை எனக்குக் கூடிய காரியமாக்கியிருக்கின்றன.

அடிக்கடி, முழு மலர்ச்சியடைந்த வாதுமைப் பழத்தோட்டங்களின் அழகிய, பரந்த காட்சியை இந்தப் பள்ளத்தாக்கில் நான் உற்றுப் பார்க்கும்போது அநேக நூற்றாண்டுகளுக்கு முன்பாக எழுதப்பட்ட இந்த வார்த்தைகள் என் நினைவில் வருகின்றன: “பூமியிலுள்ளவைகளே, யெகோவாவைத் துதியுங்கள், . . . மலைகளே, சகல மேடுகளே, கனி மரங்களே, சகல கேதுருக்களே.”—சங்கீதம் 148:7-9.—அளிக்கப்பட்டது. (g87 4/22)

[பக்கம் 27-ன் பெட்டி]

வாதாங்கொட்டைகள்—சக்திவீரியம் உள்ள சிறிய கட்டுகள்

வாதாங்கொட்டைகள் அதிகமான சத்துள்ள உணவை சிறிய, தூக்கிச் செல்லக்கூடிய கட்டுகளில் திணித்து வைத்திருக்கின்றன. புரதம், கனிகள் மற்றும் காய்கறிகள், பால் பொருட்கள் மற்றும் தானியங்கள் அகிய நான்கு அடிப்படை உணவுத் தொகுதிகளிலும் காணப்படுகிற முக்கியமான உணவுச் சத்துக்களை அவை தங்களில் கொண்டிருக்கின்றன. அவைகளின் உணவுச் சத்து உள்ளமைப்பை நாம் கூர்ந்து கவனிப்போம்.a

◻ மாவுச்சத்து: வாதாங்கொட்டைகள் மிக நுணுக்கமான மாவுச்சத்துக்களின் ஓர் உபயோகமுள்ள ஊற்றுமூலம். மாவுச்சத்துக்கள் உங்கள் உடலின் சக்திக்கான பிரதான ஊற்றுமூலம் ஓர் அவுன்சு வாதாங்கொட்டைகள், சுமார் 20-25 பருப்புகள், 170 கலோரிகளுக்குச்b சமம்.

◻ கொழுப்பு: உணவுக்காக உபயோகப்படும் தாவர வகைகளில் வாதாங்கொட்டைகள் கொழுப்புச் சத்து நிறைந்துள்ள ஊற்றுமூலங்களில் ஒன்று. மற்றும் வாதாங்கொட்டைகள் இரத்தம் மற்றும் பித்தநீரில் காணப்படும் கொழுப்புப் போன்ற பொருளைக் (cholesterol) கொண்டில்லை. கொழுப்பு ஒரு முக்கிய, சக்திக்கான ஊற்றுமூலம்; இது உங்கள் உடலின் மிகப் பயனுறு வகையில் சேர்த்து வைக்கப்பட்ட எரிபொருள். வாதாங்கொட்டையின் சுமார் பாதியளவான எடை தாவர எண்ணெய்—ஒரு பேரளவில் பூரிதமாக்கப்படாத கொழுப்பு.

◻ இழைச்சத்து: ஓர் அவுன்சு வாதாங்கொட்டைகள் உங்களுடைய உடலுக்கு, தினசரி இழைச்சத்துத் தேவையில் 10 விழுக்காடு கொடுக்கிறது. அது இரண்டு கோதுமை ரொட்டித் துண்டுகளில் இருக்கும் இழைச்சத்தைக் காட்டிலும் அதிகம்.

◻ தாதுப்பொருட்கள்: வாதாங்கொட்டைகள் முக்கிய தாதுப்பொருட்களான பாஸ்வரம், செம்பு, மற்றும் மக்னீசியம் ஆகியவற்றை அதிக அளவில் அளிக்கின்றன. வளர்ச்சிக்கும், சரியான பராமரிப்புக்கும் உங்கள் உடலுக்குத் தாதுப் பொருட்கள் தேவைப்படுகின்றன. ஓர் அவுன்சு வாதாங்கொட்டைகள் 2.3 அவுன்சுகள் பாலில் உள்ள அதே அளவு சுண்ணாம்புச்சத்தையும், 1.3 அவுன்சுகள் சதையுள்ள மாட்டிறைச்சி அல்லது கொழுப்பில்லா பன்றி இறைச்சியில் உள்ள அதே அளவு இரும்புச் சத்தையும் கொண்டிருக்கிறது.

◻ புரதம்: வாதாங்கொட்டைகள் தாவரப் புரதத்திற்கான ஒரு நல்ல ஊற்றுமூலம். உங்கள் உடலின் வளர்ச்சிக்கும் பராமரிப்புக்கும் புரதச் சத்துக்கள் தேவை. ஓர் அவுன்சு வாதாங் கொட்டைகள் ஐக்கிய மாகாணங்களின் R.D.A.-ல் (பரிந்துரைக்கப்பட்ட தினசரி தேவை) 10 விழுக்காட்டை அளிக்கிறது.

◻ உயிர்ச்சத்துக்கள்: வாதாங்கொட்டைகள் ரீபோஃபிலாவின் (உயிர்ச்சத்து B2) மற்றும் உயிர்ச்சத்து E ஆகியவற்றின் மிகச் சிறந்த ஊற்றுமூலம். நம்முடைய உடல் நலத்திற்கு உயிர்ச்சத்துக்கள் அவசியம். ஓர் அவுன்சு வாதாங்கொட்டைகள் 7 அவுன்சு கோதுமைவிதைக் கருவில் அல்லது 18 முதல் 20 அவுன்சுகள் வரையான ஈரலில் காணப்படும் உயிர்ச்சத்து E-ஐ (ஐக்கிய மாகாணங்களின் R.D.A.-ல் 35 விழுக்காடு) கொண்டிருக்கிறது.

[அடிக்குறிப்புகள்]

a “வாதாங்கொட்டைகள்—ஓர் ஆரோக்கியமளிக்கும் கொட்டை,” என்ற கலிஃபோர்னியாவின் வாதாங்கொட்டை வாரியத்தினால் பிரசுரிக்கப்பட்ட ஆங்கில சிற்றேட்டிலிருந்து குறிப்புகள் எடுக்கப்பட்டுள்ளன.

b ஓர் அவுன்சு=31 கிராம்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்