நிரந்தரமாக சுகமடைதல் அருகாமையில் இருக்கிறது
திகைப்படையச் செய்யும் நவீன வளர்ச்சியோடுகூட, மருத்துவ விஞ்ஞானம் போரில் வெற்றி பெறக்கூடும். ஆனால் இன்னும் யுத்தத்தில் அது தோல்வியே அடைகிறது. நாம் சில தனித்திறமைகளையும் அனுபவத்தையும் அடைந்துவிட்டதாக உணரும்போது, நமக்குப் பலவீனம் ஏற்பட்டு மரணம் விரைவில் வந்துவிடுகிறது. என்றாலும் இது எப்பொழுதும் அவ்விதமாக இருக்காது என்பதாகக் கடவுள் வாக்களிக்கிறார். தம்முடையத் தீர்க்கதரிசியாகிய ஏசாயாவின் மூலம் கடவுள், ‘மரணத்தை ஜெயமாக விழுங்குவார்; எல்லா முகங்களிலுமிருந்து கண்ணீரைத் துடைப்பார்’ என்று அவர் சொல்லியிருக்கிறார்.—ஏசாயா 25:8.
இது நம்புவதற்குக் கடினமாக இருக்கிறதா? 80 வருடங்கள் கொண்ட ஒரு வாழ்க்கை நீண்ட காலம் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? ஆயிரக்கணக்கான ஆண்டுகள் வாழக்கூடிய மரங்கள் இருக்கின்றன. நீங்கள் ஏன் அவ்வளவு காலம் வாழக்கூடாது? அதன் ஒரு கை முறிந்து போனால், முழுமையாக ஒரு புதிய கை வளருவதற்குரிய திறமையை உடுமீனுக்குக் கடவுள் தந்திருக்கிறார். உங்களுடைய உடலுக்கு பரிபூரண ஆரோக்கியத்தையும் முழுமையையும் அவரால் கொடுக்க முடியாதா?
சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பு, இயேசு கிறிஸ்து பூமியில் அதிசயமான அற்புதங்களை நடப்பித்தார். அவர் வெறுமென குஷ்டரோகத்தை மாத்திரமல்லாமல் “ஜனங்களுக்கு உண்டாயிருந்த சகல வியாதிகளையும் சகல நோய்களையும் நீக்கிச் சொஸ்தமாக்கினார்.” ஆவியால் ஏவப்பட்ட பதிவு சொல்வதாவது: “சப்பாணிகள், குருடர், ஊமையர், ஊனர்களை . . . அவர் சொஸ்தப்படுத்தினார். ஊமையர் பேசுகிறதையும் சப்பாணிகள் நடக்கிறதையும் குருடர் பார்க்கிறதையும் ஜனங்கள் கண்டு ஆச்சரியப்பட்டார்கள்.” இயேசு மிருகங்களிலிருந்து உறுப்புக்களைத் தானமாக பெறவில்லை அல்லது அவர் உறுப்புக்களை மாற்றி பொருத்த அவசியமிருக்கவில்லை. பாதிக்கப்பட்டிருந்த உறுப்புக்களையே அல்லது உடல் பாகங்களையே அவர் குணமாக்கினார். அவர் உடனடியாகவும் சில சமயங்களில் தூரத்திலிருந்தேயும்கூட குணப்படுத்தினார்.a
சுகப்படுத்துவதற்கு இயேசுவுக்கு வல்லமை இருந்தது மட்டுமல்லாமல், அவ்விதமாகச் செய்ய அவர் விருப்பமுள்ளவராகவும் இருந்தார். ஒரு சந்தர்ப்பத்தில் ஒரு குஷ்டரோகி அவரிடமாக, “உமக்குச் சித்தமானால் என்னைச் சுத்தமாக்க உம்மால் ஆகும்” என்று சென்னான். இயேசு அவன் மேல் மனதுருகி உருக்கமாக, “எனக்குச் சித்தமுண்டு, சுத்தமாகு,” என்று பதிலளித்தார். அவர் மரித்தோரையும்கூட உயிர்த்தெழுப்பினார். ஒரு சமயம் சரீரம் அழுக ஆரம்பித்தப் பின்னும்கூட அவர் அவ்விதமாகச் செய்தார்.—மாற்கு 1:40-42; யோவான் 11:38-44.
வியப்புக்கேதுவான இந்த உதாரணங்கள் என்ன காண்பிக்கின்றன? இப்பொழுது பரலோக ராஜாவாக சிங்காசனத்திலேற்றப்பட்டிருக்கும் அந்த இயேசுவுக்கு வல்லமை இருப்பது மட்டுமல்லாமல், உண்மையான மற்றும் நிரந்தரமான சுகப்படுத்துதலைக் கொண்டு வர விருப்பமுள்ளவராகவும்கூட இருக்கிறார். பைபிள் வாக்களிக்கும் காரியத்தை அவர் செய்வார்.
வெகு விரைவில் மனித சம்பவங்களில் ஏற்படப்போகும் வியக்கத்தக்க மாற்றத்தை அந்தப் புத்தகமாகிய பைபிள் விவரிக்கிறது. உலக விவகாரங்களில் கடவுள் தாமே தலையிட்டு, தூய்மைக்கேடு, நோய், குற்றச்செயல், பகைமை மற்றும் போர்களிலிருந்து விடுபட்ட ஒரு பரதீஸைத் திரும்ப நிலைநாட்டப்போகிறார். அது ஆவிக்குரிய மற்றும் சரீரப் பிரகாரமான உண்மையான மற்றும் நிலையான சுகப்படுத்தலைப்பற்றி சொல்லுகிறது. மேலுமாக உலகளாவிய இந்த மாற்றம் ஏற்படுகையில் முதல் உலகப்போரின் சமயத்தில் வாழ்ந்த மக்கள் இன்னும் உயிரோடிருப்பார்கள் என்பதாக பைபிள் தீர்க்கதரிசனம் குறிப்பிடுகிறது.—மத்தேயு 24:3, 14, 34.
மெய்யான உடல் ஆரோக்கியம்
பைபிளின் முடிவான அதிகாரங்கள், “தேவனிடத்தினின்று பரலோகத்தைவிட்டு இறங்கி” இங்கே பூமியின் மீது மனிதவர்க்கத்திடமாக வரும் ஒரு நீதியுள்ள ஆட்சியைப் பற்றிப் பேசுகின்றன. பின்பு தேவன், “அவர்களுடைய கண்ணீர் யாவையும் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை, முந்தினவைகள் ஒழிந்துபோயின.” (வெளிப்படுத்தின விசேஷம் 21:2-4) சொல்லர்த்தமாகவும் ஆவிக்குரிய கருத்திலும் “குருடரின் கண்கள் திறக்கப்பட்டு, செவிடரின் செவிகள் திறவுண்டுபோம். முடவன் மானைப்போல் குதிப்பான்; ஊமையன் நாவும் கெம்பீரிக்கும்.” “வியாதிப்பட்டிருக்கிறேன் என்று நகரவாசிகள் சொல்வதில்லை.”—ஏசாயா 35:5, 6; 33:24.
ஆகவே இந்தப் பூமியின் மீது கடவுளுடைய ராஜ்யத்தில் வாழ்பவர்களுக்கு வெறுமென மருத்துவ உதவி அல்லது கொஞ்சக் காலத்துக்கு சுகம் அல்ல, ஆனால் அனைவருக்கும் உண்மையான உடல் ஆரோக்கியம் வாக்களிக்கப்பட்டிருக்கிறது. நிச்சயமாகவே அதை அடைய முயற்சி செய்வதற்கு அது தகுதியுள்ள இலக்காகவே இருக்கிறது! (g87 5⁄8)
[அடிக்குறிப்புகள்]
a இந்தச் சம்பவங்களின் நம்பத்தக்க பதிவுகளைப் பின்வரும் பைபிள் பகுதிகளில் நீங்கள் வாசிக்கலாம்: மத்தேயு 4:23; 15:21-31; மாற்கு 5:25-34; 7:31-37; லூக்கா 7:1-10; 13:11-13; யோவான் 9:1-32.