காடுகள் இல்லாத ஒரு பூமி—எதிர்காலத்திலிருப்பது இதுதானா?
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக செழிப்பான வெப்ப மண்டல மழைக் காடுகள் மூடியிருந்த பெரிய நிலப் பரப்புகள் இன்று தரிசு நிலமாகி வருகின்றன. லட்சக்கணக்கான தாவரங்களும் 200 அடி உயரமும் கூட வானில் உயர்ந்து காணப்பட்ட வளமிக்க மர வகைகள் குடையாக அமைய அதன் கீழ் தஞ்சம் புகுந்திருந்த விநோதமான அழகுள்ள பறவைகளின் மற்றும் மிருக ஜீவன்களின் இயற்கையான இருப்பிடங்களாக இருந்த பூமியின் இந்த அழகான பசுமையான உயிர்த்துடிப்புடனிருந்த இடங்கள் வேகமாக பயனில்லாத இடங்களாக மாறிவருகின்றன.a
அழிப்பதில் திறம் படைத்தவனாக, மனிதன் கோடரி, இரம்பம், நிலத்தைச் சமன் செய்யும் பொறி போன்றவற்றைக் கொண்டு மலைகளைப் பாழ்ப்படுத்தி வருகிறான். அவைகளை அவன் கைவிடப்பட்ட வனாந்தரத்தைப் போன்ற ஜீவராசிகள் இல்லாத இடமாகவும் வடுப்படுத்தப்பட்ட மற்றும் தீயிலிட்டு கருக்கிய இடமாகவும் மாற்றிக்கொண்டு வருகிறான். இரக்கமில்லாமல் அவன் இவ்விதமாக பூமியின் வெப்ப மண்டல மழை காடுகளை அழிப்பதை நிமிடத்துக்கு 50 ஏக்கர்கள், அல்லது ஒரு ஆண்டில் 1,00,000 சதுர கிலோமீட்டர் என்ற அதிர்ச்சி தரும் வேகத்தில் செய்து வருகிறான். இது ஆஸ்டிரியாவுக்கு சமமான ஒரு நிலப்பரப்பாக இருக்கிறது.b
2000 ஆண்டுக்குள் 1980-லிருந்த வெப்ப மண்டல மழைக் காடுகளில் சுமார் 12 சதவிகிதம் இல்லாமற் போய்விடும் என்பது சில நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது—அழிப்பதில் சிறந்து விளங்குபவனாக இருக்கும் மனிதனுக்கு இது ஒரு சிறிய சாதனையாக இல்லை. அதோடுகூட பூமியில் வேறு எந்த சீதோஷண பகுதிகளிலும் காணப்படமுடியாத விநோதமான அழகுள்ள பறவைகளும், காட்டு மிருக ஜீவன்களும் பல் வகை தாவரங்களுங்கூட மறைந்துவிடும். தன்னுடைய உயிருக்கு மிகவும் இன்றியமையாததாக, தனக்கு மதிப்பிடமுடியாத நன்மைகளை அளித்து வரும் மிகவும் சிக்கலான உயிரின வாழ்க்கை சூழல் அமைப்பின் ஒரு பகுதியை மனிதன் அழித்துக் கொண்டு வருகிறான்.
மனிதன் மருந்துகளுக்குப் பயன்படுத்தும் மூலிகைகளைப் பாதிக்கு மேல் தாவரங்களிலிருந்தே பெற்றுக் கொள்கிறான். இதில் பல வெப்ப மண்டல தாவரங்களிலிருந்தே கிடைக்கின்றன. வெப்ப மண்டல காடுகளிலிருந்து கிடைக்கும் ரப்பரும், கற்பூரமும், பிரம்புப்பனையும் மூங்கிலும்—ஏராளமான நார் பொருட்கள், மரப்பிசின்கள் மற்றும் நறுமணப் பொருட்களும் இல்லாவிட்டால் தொழிற்சாலை என்ன செய்யும்? கண்மூடித்தனமாகவும் பாகுபாடில்லாமலும் மனிதன் அளவிட முடியாத மதிப்புள்ள ஒரு செல்வத்தை அழித்துக் கொண்டு வருகிறான்.
இந்த பெரும் காடுகளிலிருந்தே, உயிர் கொடுக்கும் பிராணவாயு ஏராளமாக உற்பத்தி செய்யப்படுகிறது. பிராணவாயுவை உற்பத்தி செய்யும் காடுகள் பெரிய அளவில் குறைந்து வருமேயானால், பசுமை குறைந்து, இதனால் சமுத்திர மட்டம் அழிவுண்டாக்கும் உயரத்தை எட்டிவிடக்கூடும் என்பதாக சில விஞ்ஞானிகள் எச்சரிக்கிறார்கள்.
காட்டை அழித்தல் ஏற்கெனவே உலகில் பெரும்பகுதியின் மீது கடுமையான, நேரடியான பாதிப்பைக் கொண்டிருக்க ஆரம்பித்து விட்டது. பிரேஸில், இந்தோனேசியா மற்றும் பிலிப்பீன்ஸ் போன்ற தேசங்களில் ஏற்கெனவே ஒரு சமயம் அடர்த்தியான காடுகளாக இருந்த இடங்கள் உண்மையில் பயனற்ற தரிசு நிலமாக மாறி விட்டிருக்கின்றன. “தென்கிழக்கு ஆசியாவில் ஒரு சமயம் காடுகளாக இருந்த பகுதிகளில் 25 மில்லியன் ஏக்கர்களில், உணவுக்கோ எரிபொருளுக்கோ கால்நடை தீவனங்களுக்கோ உதவாத பசைப் பற்றுள்ள புல் வகைகளையே இப்பொழுது காணமுடிகிறது,” என்பதாக உலக வள ஆதாரங்கள் நிறுவனம் அறிக்கை செய்கிறது.
ஏராளமான மரங்களை வெட்டுவதாலும் விற்பதாலும் 20 ஆண்டுக்குள் ஃபிஜியின் காடுகள் அழிக்கப்படும் என்பதும் நூற்றாண்டு முடிவுக்குள் தாய்லாந்தும், 1990-க்குள் பிலிப்பீன்ஸ் தாழ்வான நிலப் பகுதிகளிலுள்ள மழைக் காடுகளை முழுவதுமாக இழந்துவிடும் என்பதும் உறுதியாக இருக்கிறது என்பதாக சையன்ஸ் டைஜஸ்ட் அறிக்கை செய்கிறது. ஆஸ்திரேலியாவில் அதன் காடுகள் சூறையாடப்படுவது மிகப் பரவலாக உள்ளது—அதன் மழைக் காடுகளில் மூன்றில் இரண்டு பங்கு ஏற்கெனவே மறைந்து விட்டன! இந்தியா ஆண்டுதோறும் 32 லட்சம் ஏக்கர் காடுகளைக் கோடரிக்கு இழந்து வருகிறது.
“1980-களின் மத்திப ஆண்டுகளிலிருந்தது போலவே, ஆப்பிரிக்காவிலுள்ள ஒவ்வொரு தேசமும் மரங்கள் மறைப்பை இழந்து வருகிறது. ஆம், காடுகளின் பற்றாக்குறை இப்பொழுது ஆப்பிரிக்காவிலும் ஆசியாவிலும் பொதுவான நிலையாக இருக்கிறது,” என்கிறது 1986 ஏப்ரல் மாத நேச்சுரல் ஹிஸ்டரி பத்திரிகை. 63 தேசங்களில் 15 கோடி ஆட்கள் மீண்டும் அது வளரக்கூடியதைவிட வேகமாக மரங்களை வெட்டி வீழ்த்தி ஒரு பற்றாக்குறையை உருவாக்கி வருகிறார்கள். இது காடுகளும் எரிபொருள் கட்டைகளும் நொடித்துப் போகவே வகைச் செய்வதாக இருக்கும். 2000 ஆண்டுக்குள் பற்றாக்குறை இரண்டு மடங்காகி விடும் என்பதாக நிபுணர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
காடுகளை அழிப்பது மனிதன் உயிர் வாழ்வதற்குரிய திறமையையே—வேளாண்மையையே ஆட்டங் கொள்ளச் செய்கிறது. முதலிடத்தில், மனிதன் விதைப்பதற்காக மலைகளிலும் குன்றுகளிலுமுள்ள மரங்களை வெட்டுகையில், மண்ணை தாங்கிப் பிடிக்க தாவரங்கள் இல்லாமல் போவதால், மண் எளிதில் அடித்துச் செல்லப்படுகிறது. மேலுமாக எரிபொருள் விறகு தட்டுப்பாடக இருக்கும் தேசங்களில், “40 கோடி டன் சாணம் ஆண்டுதோறும் எரிக்கப்படுவதாக மதிப்பிடப்படுகிறது . . . உரமாகக் கூடிய இந்தச் சாணம் எரிக்கப்படுவது 1.4 கோடி டன்னுக்கும் மேலாக தானியங்களின் அறுவடையைக் குறைத்து விடுவதாக மதிப்பிடப்படுகிறது.”
மாற்ற முடியாத சக்திகளால் பூமியின் மாபெரும் காடுகள் உண்மையில் அழிவுக்கே வைக்கப்பட்டிருக்கின்றனவா? அல்லது இந்தச் சந்ததி பூமியின் வள ஆதாரங்களிலும் அழகிலும் பெரும்பகுதியை அவர்களுடைய பிள்ளைகளுக்கு விட்டுச் செல்வார்களா? இந்தச் சந்ததி ஏராளமாகப் பேசுகிறது, பக்கம் பக்கமாக இதைப் பற்றி எழுதுகிறது, ஆனால் செய்வதோ கொஞ்சம். ஆகவே அது தன் பிள்ளைகளுக்கு என்ன எதிர்காலத்தை விட்டுச் செல்லும்? காலமே பதில் சொல்லும், எஞ்சியிருப்பதோ கொஞ்ச காலம். (g87 7⁄22)
[அடிக்குறிப்புகள்]
a 1 அடி=0.3 மீட்டர்.
b 1 ஏக்.=0.4 ஹெக்.
[பக்கம் 7-ன் சிறு குறிப்பு]
டர்த்தியான காடுகளை தேசங்கள் பயனற்ற தரிசு நிலங்களாக மாற்றிக் கொண்டு வருகின்றன
[பக்கம் 7-ன் சிறு குறிப்பு]
63 தேசங்களில் 15 கோடி ஆட்கள், மரங்கள் மீண்டும் வளரக்கூடியதைவிட வேகமாக அவற்றை வெட்டிக் கொண்டிருக்கிறார்கள்