பார்க்கின்ஸன் நோயோடு வாழ்தல்
நீங்கள் என் அம்மாவை இன்று முதல் முறையாக சந்தித்தால் அவளுக்கு பார்க்கின்ஸன் நோய் இருப்பது உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஒரு சில சமயங்களில் நோய்க்குறிகள் வெளிப்படையாக தெரிந்தாலும் அவளால் இன்னும் கடைக்குப் போய் வரவும் வீட்டைச் சுத்தம் செய்யவும் பொதுவாக அன்றாட வாழ்க்கையின் வழக்கமான அலுவல்களை செய்து முடிக்கவும் முடிகிறது.
ஆனால் 12 ஆண்டுகளுக்கும் சற்று முன்பு இது வித்தியாசமான கதையாக இருந்தது. அம்மாவுக்கு இந்த நோய் இருப்பதாக உறுதியாக சொல்லப்பட்டது. எனக்கு அப்போதுதான் தெரியவந்தது. நான் அவளை போய் பார்க்க விரும்பினேன். ஆனால் விஷயம் தெரிந்துக் கொள்ளாமல் நான் அங்கு செல்ல விரும்பாததால் பிரயாணப்பட்டு போவதற்கு முன்பாக இந்த கோளாற்றைப் பற்றி விரிவாக வாசித்தேன். என்றபோதிலும் நான் கண்ட காட்சிக்கு இதுவும் கூட என்னை ஆயத்தம் செய்யவில்லை.
என் நினைவிலிருந்த உற்சாகமான அந்தப் பெண் இயந்திர மனுஷியைப் போல நடமாடினாள். அவளுடைய கைகள் விறைப்பாக, அவளுடைய விரல்கள் அசாதாரணமாக, நேராக தொங்கிக் கொண்டிருந்தன. எப்போதும் போல் அவள் நிமிர்ந்து நடந்தாலும் அவள் அடி மேல் அடி வைத்து தட்டி தடவிக் கொண்டு, எனக்கு தெரிந்திருந்த அவளுக்குள் இருந்த ஆற்றலை பொய்யாக்கி, வேதனைத் தரும் வகையில் மெதுவாக நடந்தாள். ஆனால் அவளுடைய முகமே என் இருதயத்தை நொறுங்கச் செய்தது. அது ஒரு முகமூடியைப் போல உயிரோட்டமும் உணர்ச்சியுமில்லாதிருந்தது. அவள் வெறுமனே வாயினால் சிரித்தாள். அவளுடைய கண்களில் எந்த பாதிப்புமிருக்கவில்லை.
நோயை சரியாக நிர்ணயம் செய்வதற்கு இரண்டு ஆண்டுகள் பல மருத்துவர்களிடம் செல்ல வேண்டியதாக இருந்ததாக அம்மா என்னிடம் சொன்னாள். அநேகருடைய விஷயத்தில் இருப்பது போலவே ஆரம்ப கால நோய்க்குறிகள் தெளிவாக இல்லை: மூட்டுகளிலும் தசைகளிலும் பயங்கரமான வலி, தலைமுடியை தேய்த்து கழுவுவதும் பல் தேய்ப்பதும் கடினமாக இருந்தது. நோய்க்குறிகள் உறுதியானப் பின்பு, அவளால் படுக்கையில் திரும்புவது கடினமாக இருந்ததால் என் அப்பா அவளுக்கு உதவி செய்ய வேண்டியதாக இருந்தது. நடப்பது அதிக கடினமாக ஆனது. கிறிஸ்தவ ஊழியத்தில் ஒரு சுறுசுறுப்பான வாழ்க்கையை அவள் நேசித்த போதிலும் அடிக்கடி அவளால் தெளிவாக பேச முடியாமல் போனதை அவள் கண்டாள். அவளுடைய நடவடிக்கைகளை அவள் குறைத்துக்கொள்ள வேண்டியதாயிற்று.
நான் பார்த்த காரியத்தால் அதிச்சியடைந்தவனாய் இதைச் சற்று ஆராய ஆரம்பித்தேன். இந்த வேதனையை உண்டுபண்ணுவது என்ன? இது குணமாக்கப்பட முடியுமா? என்றாவது ஒரு நாள் இது எனக்கு வரக்கூடுமா? இப்படிப்பட்ட நோயுள்ள ஒரு நபர் எத்தனை சுறுசுறுப்பான வாழ்க்கையை நடத்தமுடியும்?
வெகு சீக்கிரத்தில் அதிர்ச்சித் தரும் எண்ணிக்கையில் ஆட்கள்—ஒவ்வொரு 150-லிருந்து 200 ஆட்களுக்கு ஒரு நபர்—பார்க்கின்ஸன் நோயினால் பாதிக்கப்படுவதை நான் அறிந்துக் கொண்டேன்! அமெரிக்க பார்க்கின்ஸன் நோய் சங்கத்தின்படி, அமெரிக்காவில் மாத்திரமே இந்நோயுள்ளவர்கள் 10-லிருந்து 15 லட்சமாக இருக்கிறார்கள். அதிர்ஷ்டவசமா, சரியான பராமரிப்பின் மூலம், அவதிப்படுகிறவர்களில் பெரும்பாலானோரால் இதை நன்றாகவே சமாளிக்க முடிகிறது.
அது என்ன?
ஜேம்ஸ் பார்க்கின்ஸனின் பெயரைத் தாங்கிய இந்நோய் 1817-ல் அவரால் விளக்கப்பட்டது. அவருடைய விளக்கம் முழுமையாகவும் திருத்தமாகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது: “குறைந்த அளவு தடைகளின் ஆற்றலோடு இயற்கையாக ஏற்படுகின்ற நடுக்கமான அசைவு, இயங்கிக் கொண்டில்லாத பாகங்களாலும் அவை தாங்கி பிடிக்கப்பட்டிருந்த போதிலும் இது இவ்வாறு இருக்கிறது. உடலை முன்னால் வளைந்து கொண்டு நடப்பதிலிருந்து ஓடும் வேகத்துக்கு மாறும் போக்கு உணர்ச்சிகளும் அறிவாற்றலும் சேதமடைவதில்லை.”a
இதன் கடைசி பாகமே எனக்கு பெரும் நிம்மதியை அளித்தது: அம்மா அவளுடைய உணர்ச்சிகளையும் அறிவாற்றலையும் இழந்துவிட மாட்டாள்! சுவையான உணவை அனுபவிக்கும் திறமையை இழந்துவிடமாட்டாள். இசையில் மகிழவும், திறமையான ஆசிரியரின் எழுத்தால் மனம் கனிய அல்லது உள்ளம் உருக அல்லது அவள் வெகுவாக நேசிக்கும் இயற்கையில் அழகை அனுபவிக்கவும் அவளால் முடியும். நான் கவனித்த இயற்கையான அசைவு மற்றும் பிரதிபலிப்பின் குறைவு அவளுக்குள் வெகுவாக உயிருடனிருந்த கூர்மையான மனதோடு எவ்விதத்திலும் சம்பந்தப்பட்டில்லை.
பார்க்கின்ஸன் அவருடைய விளக்கத்தின் ஆரம்பத்தில் “இயற்கையாக ஏற்படுகின்ற நடுக்கமான இந்த அடைவைப்” பற்றி குறிப்பிட்டிருந்தார். தாமதமான சீரான நடுக்கம் விசேஷமாக கைகளின் நடுக்கம் பெரும்பாலான ஆட்கள் பார்க்கின்ஸன் நோயோடு சம்பந்தப்படுத்தும் நோய்க்குறிகளில் முதலாவதாக இருக்கிறது. ஏனென்றால் இது மிகவும் வெளிப்படையாக தெரிகின்றது. உண்மையில் பார்க்கின்ஸனுக்கு மருத்துவப் பெயர் ”பாரிசவாயு அஜிட்டன்ஸ்” (Paralysis agitans) என்பதாகும். ‘ஆஜிட்டன்ஸ்’ என்ற வார்த்தையின் பொருள் ஆட்டம் அல்லது நடுக்கம் என்பதாகும். என்றபோதிலும் அம்மாவுக்கு இதன் அறிகுறி எதுவுமில்லை. இன்றுவரையும் அது இல்லை. ‘ஏன் இல்லை’? என்று நான் யோசித்துப் பார்த்தேன். அறியப்படாத ஏதோ ஒரு காரணத்தினால் குறிப்பிடத்தக்க சதவிகிதத்தினருக்கு ஒருபோதும் இந்த நடுக்கம் ஏற்படுவதில்லை என்பதாக லாஸ் ஆன்ஜலீஸிலுள்ள கலி போர்னியா பல்கலைக்கழகத்தில் நரம்பாய்வு துணைப்பேராசிரியர் டாக்டர் லியோ டிரக்கியோக்காஸ் எனக்கு விளக்கினார். மற்றவர்களுக்கு இந்த நடுக்கமே முக்கிய நோய்க்குறியாக இருக்கின்றது.
நடுக்கம் ஏற்படுவதற்கு முன்பாக பார்க்கின்ஸனுள்ள ஒவ்வொருவரும் இரண்டு மற்ற நோய்க்குறிகளை காண்கிறார்கள்: தசைகளின் விறைப்பு அல்லது வளையாமையும் பாதிக்கப்பட்ட தசைகளை ஓரளவு கூட இயல்பாக தன்னையறியாமலும் பயன்படுத்த மனச்சாய்வில்லாமையும். இது அக்கினீஷியாவாகும் என்றழைக்கப்படுகிறது. இது நடமாட்டத்தில் தாமதத்தை ஏற்படுத்துகிறது. இது ப்ராடிகினீஷியா என்றழைக்கப்படுகிறது. நரம்பியல் நிபுணர்களில் சிலர் நடந்துச் செல்வதிலும் சம நிலையிலும் ஏற்படும் பிரச்சினையை இரண்டு தனித் தனியான ஆனால் முக்கிய நோய்க்குறிகளாக சேர்த்துக் கொள்கின்றனர்.
தசை நார்கள் ஒரே சீராக ஒன்றையொன்றை இழுப்பதன் விளைவாகவே இந்த விறைப்பு ஏற்படுகிறது. உடலை வளையச் செய்யும் தடைகள் அதை நேராக்கும் தசைகளைவிட அதிகமாக பாதிக்கப்படுகையில் பார்க்கின்ஸன் நோயுள்ள ஒரு நபர் படிப்படியாக கூனிவிடுகிறார். அவருடைய தசைநார்களிலும் மூட்டுகளிலும் அதிகமான வலிக்கு இது காரணமாக இருக்கிறது.
இந்த நோய்க்குறிகளுக்கு கரணம் அக்கீனீஷீயாவாகும். நல்ல ஆரோக்கியமுள்ள ஆட்களில் எழுந்திருத்தல், நடத்தல், திரும்புதல், நிற்பது மற்றும் சிரித்தல் போன்ற அடிப்படையான செயல்களோடு நரம்புக்கிளர்ச்சிக்கு இணங்க தன்னியல்பாக தூண்டப்படும் உள்ளுருப்பியக்கச் செயல்கள் நடை பெறுகின்றன. பார்க்கின்ஸன் நோயாளிகளில், இவைகள் நடைபெறுவதில்லை அல்லது அதற்கு விழிப்புடன் முயற்சி செய்வது தேவையாக இருக்கின்றது. (இதன் காரணமாகவே அம்மா உணர்ச்சிகள் இல்லாமல் இயந்திர மனுஷியைப் போல் தோற்றமளித்தாள். மேலுமாக பல் தேய்ப்பது போன்ற செயல்களில் மாறி மாறி செய்யப்பட வேண்டிய குறுகிய அடைவுகள் அவர்களுக்கு கடினமாக இருக்கிறது. அவர்களுடைய கையெழுத்து முதல் சில வார்த்தைகளுக்குப் பின்பு பொதுவாக சிறியதாகவும் இறுக்கமாகவும் மாறிவிடுகிறது. அவர்கள் உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருப்பார்கள். வேறு ஒரு இடத்தைக் காண தலையை அசைப்பதற்கு பதிலாக கண்களை அசைப்பார்கள். இருந்தாலும் அவர்கள் முட்டாள்களாகவோ சோம்பேறிகளாகவோ இருப்பதில்லை.
நடப்பதிலும் சமநிலையிலும் பிரச்சினை பொதுவாக தீவிரமாகிறது. மற்றவர்களைப் போலவே, ஒழுங்காக நடக்க ஆரம்பிப்பதற்கு முன்பாக என் அம்மாவும் அடிமேல் அடி வைத்து நடப்பது அவசியமாயிருந்தது. பெரும்பாலானவர்கள் எப்போதும் தட்டி தடவிச் செல்வார்கள். முன்னால் சாய்கையில் அவர்களுடைய குறுகிய நடை அவர்கள் ஏறக்குறைய ஓடும் அளவு வேகமாகி, அவர்களோ வேறு எவரோ தாங்கி பிடித்தாலொழிய விழுந்துவிடுவார்கள். கட்டுப்பாட்டுடன் நடந்து சென்றாலும்கூட சமநிலையில் ஒரு மாற்றத்தை உணர்த்தும் எதுவும்—பெரிதாக தோன்றும் இடையூறு, அசைகின்ற படிக்கட்டு மற்றும் தரையில் ஒரு கோடு—சமநிலை இழந்து விழுந்துவிடவோ செயலிழந்துவிடவோ செய்யக்கூடும்.
என்ன செய்யப்படக்கூடும்
மனம் மடியச் செய்யும் இந்த நோய்க்குறிகள் அண்மைக் காலம் வரை இருந்தது போல் இனிமேலும் அத்தனை மோசமாக ஒருவரை முடமாக்கி விடுவதில்லை. உண்மையில் 20 ஆண்டுகளுக்கும் குறைவாகவே மருத்துவ துறையில் ஏற்பட்டிருக்கும் முன்னேற்றத்தின் காரணமாக பார்க்கின்ஸன் நோயாளிகள் அவர்களுடைய வேதனையின் மத்தியிலும் மிகவும் பயனுள்ள ஒரு வாழ்க்கையை இப்பொழுது அனுபவித்துக் களிக்கமுடிகிறது.
டோப்பாமைன் மற்றும் அசிட்டைல்கோலைன் என்ற உடலின் இரண்டு வேதியற் பொருட்களிடையே மூளையில் சமநிலைக்குறைவுபடுவது நோய்க்குறிகளுக்கு காரணமாயிருப்பதால், (பக். 15-ல் உள்ள பெட்டி பார்க்கவும்.) மருத்துவர்கள் அந்த சமநிலையை புதுப்பிக்க பொதுவாக முயற்சி செய்வார்கள். எவ்விதமாக? இரத்தத்தின் வழியாக மூளைக்கு டோப்பாமைனை செலுத்துவதன் மூலம் இதைச் செய்வார்கள். ஆனால் டோப்பாமைன் தானே இரத்த-மூளை தடையினூடாக கடந்து செல்ல முடியாததால் இது உடலில் பயன்படுத்திக் கொள்ளப்படுகிறது. ஆனால் வேவோடோப்பா அல்லது எல்-டோப்பா என்றழைக்கப்படும் மற்றொரு பொருளால் அதைக் கடந்து செல்ல முடியும். இது இயற்கையான வளர் சிதை மாற்றத்தால் மூளைக்கு உள்ளேயும் வெளியேயும் டோப்பாமைனாக மாற்றப்படுகிறது.
மருத்துவ அளவுகளில் எல்-டோப்பா தனியாக எடுத்துக் கொள்ளப்படுகையில் அதனால் பக்கபாதிப்புகள் பல ஏற்படுகின்றன. ஏனென்றால் இது மூளையை அடைவதற்கு முன்பாகவே இதன் பெரும் பகுதி டோப்பாமைனாக மாற்றப்பட்டுவிடுகிறது. இந்த பக்கப் பாதிப்புகளைத் தவிர்க்க தடுப்பு மருந்துகள் சேர்த்துக் கொள்ளப்படுகின்றன.
சிகிச்சை முறை பலனளிக்கிறதா? ஆம். அநேக நோயாளிகளின் விஷயத்தில் பார்க்கின்ஸனின் செயலிழக்கச் செய்யும் முக்கிய நோய்க்குறிகள் (விறைப்பு, அக்கினீஷியா, நடப்பதிலும் சமநிலை காத்துக் கொள்வதிலும் சங்கடம், சில சமயங்களில் நடுக்கம் பொதுவாக குறைந்துவிடுகிறது. சில சமயங்களில் இது குறிப்பிடத்தக்கதாக இருக்கின்றது. உண்மையில் பார்க்கின்ஸன் நோயாளிகள் இப்பொழுது வேறு எவரையும் போலவே அதே வாழ்க்கை வாய்ப்பைக் கொண்டவர்களாக இருக்கிறார்கள். ஆனால் இந்த சிகிச்சை குறையில்லாமல் பயனளிக்கிறதா? துரதிஷ்டவசமாக இல்லை. டோப்போமைன் அந்த அளவில் தேவை என்பது உடலுக்கு மாத்திரமே சரியாக தெரிகிறது. அதனால் துல்லியமாக அந்த அளவு உற்பத்தி செய்துக் கொள்ள முடிகிறது. வாய்வழியாக இதனை கொடுப்பது மிகச் சிறந்த முறைக்கும் அடுத்ததாகவே வருகிறது.
எல்-டோப்பா சிலரில் எதிர்மறையான பாதிப்புகளை உடனடியாக உண்டுபண்ணுவதாலும் இதனால் நல்லவிதமாக குணமடைகிறவர்களின் விஷயத்திலும்கூட ஆண்டுகள் கடந்துச் செல்கையில் அதன் ஆற்றல் மறைந்துப் போவதாலும் மற்ற சிகிச்சை முறைகளும்கூட பயன்படுத்தப்படுகின்றன.
நோயாளிகள் என்ன செய்யக்கூடும்
ஆனால் செய்வதற்கு வேறு ஏதாவது இருக்கிறதா? ஆம், சில அதிமுக்கியமான காரியங்கள் உள்ளன. ஒழுங்கான உடற்பயிற்சி அவைகளில் ஒன்றாகும். நடமாடுவது சங்கடமாகவும் அநேகமாக வேதனைத்தருவதாயும் இருப்பதாலும் சமநிலையைக் காத்துக்கொள்வது பிரச்சினையாக இருப்பதாலும் பார்க்கின்ஸன் நோயாளி தன்னுடைய நடமாட்டத்தை வெகுவாக குறைத்துக் கொள்ளவே விரும்புவார். ஆனால் உடற்பயிற்சி இல்லாமல் அனைத்தும் மிக மோசமாகி விடுகின்றன. தசைகளும் மூட்டும் இன்னும் விறைப்பாகி மடங்காமல் ஆகிவிடக்கூடும். இரத்த ஓட்டம் பாதிக்கப்படுவது மற்ற நோய்களுக்கு வழிநடத்தக்கூடும். ஒதுங்கியே வாழவும் கடைசியாக மற்றவர்களையே முழுமையாக சார்ந்திருக்கும் நிலையும் இதனால் ஏற்படக்கூடும்.
இந்த காரணங்களுக்காக உடல் நலத்தையும் சுறுசுறுப்பையும் காத்துக்கொள்ள ஒழுங்கான உடற்பயிற்சி திட்டம் இன்றியமையாததாக இருக்கிறது என்று நரம்பியல் ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். நிச்சயமாகவே ஒவ்வொரு தனிப்பட்ட நபரும் மருத்துவரிடம் கலந்து பேசி முடிவு செய்ய வேண்டும். ஆனால் பொதுவாக மிதமான தூரம் நடப்பது, நீச்சலடிப்பது மற்றும் விசேஷமாக நீட்டுதல் பயிற்சியும் நேராக்கும் பயிற்சியும், தசைகளின் வளையும் ஆற்றலையும் பலத்தையும் காத்துக்கொள்ளவும் புதிய வேதியல் பொருட்களடங்கிய சூழ்நிலைமைக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்ளக்கூடிய மூளையின் திறனை காத்துக்கொள்ளவும் உதவி செய்கிறது.
நடக்கையிலும் பேசுகையிலும் எழுதுகையிலும் பார்க்கின்ஸன் நோய் ஏற்படுத்தும் ஓத்திசைவு பிரச்சினைகள் ஊக்கமான முயற்சியினால் மேற்கொள்ளப்படலாம். UCLA மருத்துவ பள்ளியும் அமெரிக்க பார்க்கின்ஸன் நோய் சங்கமும் இப்பொழுது இவை ஓவ்வொன்றுக்கும் படிப்படியான நிதானமான அசைவுகளை சிபாரிசு செய்கின்றன. இது இப்பொழுது காணப்படாத இயற்கையான தன்னியல்பு செய்கைகளை குறைந்தபட்சம் ஒரளவாவது ஈடு செய்ய கற்றுக்கொள்ள உயர் நரம்பு மையங்களுக்கு இடமளிப்பதாக இருக்கும்.
மற்றவர்கள் என்ன செய்யக்கூடும்
மற்றவர்களும்கூட உதவி செய்யலாம். பார்க்கின்ஸன் நோயுள்ள வியாதியஸ்தர்களுக்கு ஒரு கையேடு நடப்பதில் பிரச்னையுள்ள ஆட்களுக்கு பின்வரும் இந்த ஆலோசனையைத் தருகிறது: “நோயாளியை மீண்டும் நடமாடச் செய்வதற்கு மென்மையாக தூக்கிப் பிடிப்பதோ அல்லது பற்றிக்கொள்ள கைக்கொடுப்பதோ மாத்திரமே தேவைப்படலாம். நோயாளியின் கையை பிடித்து அழைத்துச் செல்வதை காட்டிலும் நோயாளி எப்பொழுதும் உதவியாளரின் கையை அல்லது தோளை பற்றிக் கொள்ள வேண்டும் ஏனென்றால் நோயாளியின் கையை அல்லது தோளை திடீரென்று பிடிக்கும்போது அவனோ அல்லது அவளோ சமநிலையை இழந்துவிடக்கூடும்.”
உற்சாகமூட்டுதல் விசேஷமாக உதவியாக இருக்கிறது. ஹாரிஸன் எழுதிய உட்புற மருத்துவத்தின் நியமங்கள் (1983) சொல்வதாவது: “நோய்க்குறிகளின் உக்கிரம் உணர்ச்சிகளின் நிலையினால் வெகுவாக பாதிக்கப்படுகிறது. இவை கவலையினாலும் அழுத்தத்தினாலும் வருத்தத்தினாலும் மேலுமதிகமாகிறது. நோயாளி நிம்மதியான மனநிலையிலிருக்கையில் இது மிகக் குறைவாக இருக்கின்றது . . . நோயின் அழுத்தத்தை சமாளிக்கவும் அதன் தன்மையை ADD கொள்ளவும் அதன் மத்தியில் தைரியமாக வாழவும் நோயாளிக்கு அநேகமாக உணர்ச்சிப்பூர்வமான ஆதரவு அதிகமாக தேவைப்படுகிறது.” இதன் காரணமாகவே அன்பான கரிசனையும் கவனிப்பும் நம்பிக்கையூட்டப்படுவதும் பார்க்கின்ஸன் நோயோடு வாழ ஒரு நபருக்கு உதவி செய்வதில் அதிகத்தைச் செய்யக்கூடும்.
மருத்துவ விஞ்ஞானம் இந்த நோய்க்கான காரணங்களை இன்னும் புரிந்துக் கொண்டில்லாததால் ஒரு பரிகாரத்தை அளிக்கமுடியாது. என்றபோதிலும் சிருஷ்டிகர் இதை அறிவார் என்பதாலும் கிறிஸ்து இயேசுவினால் ஆளப்படும் தம்முடைய ராஜ்யத்தின் கீழ் இப்படிப்பட்ட ஒரு பரிகாரத்தை அளித்திடுவார் என்பதை அறிந்திருப்பதாலும் என் அம்மா துன்பத்தை தாங்கிக் கொண்டிருக்கிறாள். (ஏசாயா 33:24; லூக்கா 9:11; வெளிப்படுத்துதல் 21: 1-4) அதுவரையாக அவளும் மற்ற அநேகரும் பார்க்கின்ஸன் நோயை திறமையோடு சமாளித்து வருகிறார்கள்.—அளிக்கப்பட்டது. (g88 1/80)
[அடிக்குறிப்புகள்]
a அண்மைக்கால ஆராய்ச்சிகளின்படி நன்றாக உறுதி செய்யப்பட்ட பார்க்கின்ஸன் நோயாளிகளில் மனதின் பிரகாரமாய் லேசான சிதைவு ஏற்படுவது தெரிகிறது. சிகிச்சையளிக்கப்பட்ட போதிலும் மனதளர்ச்சியினால் இந்த அறிவு சிதைவு ஏற்படலாம். மனதுக்கு சரியாக ஊக்கமளிப்பதையும் பேச்சு தொடர்பையும் அசட்டை செய்துவிட்டால் இவை அதிக வெளிப்படையாக தெரியவரலாம்.
[பக்கம் 14-ன் பெட்டி]
பார்க்கின்ஸன் நோயாளிகளுக்கு சரீர உதவிகள்b
◼ தாழ்வான, ஆழமான மிருதுவான நாற்காலிகளைவிட முன்னாக, சாய்ந்த நாற்காலிகளிலிருந்து எழுந்துக் கொள்வது சுலபமாகும்.
◼ படுக்கைக்கும் கழிப்பிடத்துக்கும் அருகே ஒரு கம்பி கைப்பிடி, எழுந்திருப்பதற்கு நோயாளிக்கு உதவுகிறது.
◼ படுக்கையின் மூலையில் ஒரு நூல் கயிறு இணைக்கப்பட்டிருந்தால் எழுந்து உட்கார்ந்து திரும்பி படுக்க நோயாளிக்கு உதவியாக இருக்கும்.
◼ தோள் உயரத்தில் தேவையான பொருட்கள் தாங்கிய ஒரு சிறு பெட்டியும் ஒரு கயிற்றில் சோப்பும் கைப்பிடியில் துடைப்பு பஞ்சும், குளிக்கும் போது உதவியாக இருக்கும்.
◼ உடைகளில், பொத்தான்களை அல்லது ஸிப்பர்களைவிட எளிதில் பிடித்து இழுக்கக்கூடிய தையல் அமைப்பு எளிதாக இருக்கும்.
[அடிக்குறிப்புகள்]
b அமெரிக்க பார்க்கின்ஸன் நோய் சங்கம் வெளியிட்ட பார்க்கின்ஸன் நோயுள்ள வியாதியஸ்தர்களுக்கு அன்றாட வாழ்க்கை அலுவல்களில் உதவ கருவிகள், சாதனங்கள் மற்றும் ஆலோசனைகள் என்ற சிறு புத்தகத்திலிருந்து குறிப்புகள்.
[பக்கம் 15-ன் பெட்டி/படம்]
பார்க்கின்ஸன் நோயை உண்டுபண்ணுவது என்ன?
1960 வரையாக, மருத்துவ துறை இதைத்தான் கண்டுபிடிக்க விரும்பியது. உண்மையில் மூலகாரணம் இன்னும் அறியப்படாமல் தானே இருக்கிறது. ஆனால் நோய்க்குறிகளுக்கான கரணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மூளையின் நடுத்தண்டில், உங்கள் காதுக்கு மேலிருக்கும் உயரத்தில் சப்ஸ்டான்ஷியா நைக்ரா அல்லது கருப்பு வஸ்து என்றழைக்கப்படும் கருமையான நரம்பு திசுவின் ஒரு தட்டு உள்ளது. சப்ஸ்டான்ஷியா நைக்ரா மூளையின் திரும்ப ஊட்டல் அமைப்பின் ஒரு பாகமாக இருந்து, டோப்பாமைன் என்றழைக்கப்படும் நரம்பு அனுப்பீட்டு முறையில் ஒரு வேதியல் தூதாக செயல்படுகிறது. இது உடலின் இயக்கங்களை ஒழுங்குபடுத்த அல்லது எளிதாக்க மூளையின் உள்ளே ஆழத்தில் பயன்படுகிறது.
பார்க்கின்ஸன் நோயாளிகள் இந்த நரம்பு மண்டல திசுக்களில் 80 அல்லது அதற்கும் அதிகமான சதவிகிதத்தை இழந்துவிடுகிறார்கள். டோப்பாமைன் குறைவுபடுவதன் காரணமாக மற்றொரு நரம்பு தூதான அசிட்டிகோலினுடனிருக்கும் மதிப்பு வாய்ந்த சமநிலையும் கூட இழக்கப்படுகிறது. இதுவே நோய்க்குறிகளுக்கு காரணமாகின்றது.
சப்ஸ்டான்ஷியா நைக்ரா ஏன் சிதைந்துவிடுகிறது என்பதும் அது மாத்திரமே அவ்விதமாக ஏன் சிதைகிறது என்பதும் இன்னும் ஒரு புதிராகவே இருந்து வருகிறது. இந்நோய் பரம்பரை நோயல்ல. ஆனால் ஓரளவு இதனால் எளிதில் பாதிக்கப்படும் நிலைமை இருப்பதற்கு இப்பொழுது ஓரளவு அத்தாட்சி இருக்கிறது. சிலருடைய விஷயத்தில் நோய்க்குறிகள் பார்க்கின்ஸனின் காரணமாக இல்லாமல், உயர் இரத்த கொதிப்பையும் மனதின் சமனத்தையும் கட்டுப்படுத்த சில சமயங்களில் பயன்படுத்தப்படும் ரெஸர்பைன் மற்றும் பினோதியாஸைன் போன்ற ஒரு சில மருந்துகளினால் ஏற்படுகின்றவையாக இருக்கின்றன. இந்த மருந்துகள் உட்கொள்வது நிறுத்தப்பட்டால் இயல்பான நிலை மீண்டும் வந்துவிடுகிறது. அண்மையில் பார்த்த சிலருடைய விஷயத்தில் இவை ஹீராய்ன் போன்றே தோற்றமளித்து அது மாதிரியே செயல்படும் புதிய “மருந்துகளின்” காரணமாக ஏற்பட்டிருக்கிறது. இவைகள் உட்கொள்ளப்பட்ட போது இவை மாற்ற முடியாத வகையில் சப்ஸ்டான்ஷியா நைக்ராவை அழித்து உண்மையான பார்க்கின்ஸன் நோயிலிருந்து வித்தியாசப்படுத்தி காண இயலாத நிலைமையை உண்டுபண்ணியிருக்கிறது.
[பக்கம் 15-ன் படம்]
சப்ஸ்டான்ஷியா நைக்ரா