இளைஞர் கேட்கின்றனர் . . .
மனமுறிவை நான் எப்படி தவிர்க்கலாம்?
உளநிலை ஆய்வாளர் எரிக் ஃப்ராம் பின்வருமாறு சொன்னதாகச் சொல்லப்படுகிறது: “பலமான நம்பிக்கைகளுடனும் எதிர்பார்ப்புகளுடனும் துவக்கப்பட்டு, ஆனால் காதல் போன்று தோல்வியுறும் செயல் திட்டங்கள் பெரும்பாலும் வேறொன்றும் இல்லை.”
காதல் தோல்வியுறும்போது, அதன் பலன் மனவேதனையும் மனமுறிவுமாகும். வாழ்க்கையில் வருத்தத்திற்குரிய உண்மையாக இருப்பது என்னவென்றால், மனமுறிவை தவிர்ப்பதற்கு ஒரே வழி, முதலிடத்தில் காதல் விவகாரங்களில் உட்பட்டுவிடுவதைத் தவிர்ப்பதே ஆகும். உண்மைதான், கிறிஸ்தவர்களைக் குறித்ததில், காதல் சந்திப்புகள் மிகக் கவனமாகக் கையாளவேண்டிய ஒரு விஷயமாக, பொருத்தமான ஒரு விவாக துணையைத் தெரிந்துகொள்வதற்கு ஒரு வழியாக இருக்கிறது. என்றபோதிலும், காதல் சந்திப்புகளின் இயல்புதானே, அதை பரிசோதனைக்கு உட்படுத்தித் தீர்மானிக்க வேண்டிய ஒரு முறையாக ஆக்குகிறது. எனவே மிகச் சிறந்த எண்ணங்களுடன் இருவர் காதல் சந்திப்புகளில் ஈடுபட ஆரம்பித்து—விவாகத் துணைவர்களாக இருக்கத் தாங்கள் ஒருவருக்கொருவர் பொருத்தமானவர்களல்ல என்பதைக் காணவருவது அசாதாரணமான ஒரு காரியமல்ல.
இளமைக் காதலின் படுகுழிகள்
கடுமையான காதல் சிக்கல்கள் ஏற்படுவதற்குக் காரணம் ஒருவேளை உங்கள் இளமைப் பருவத்தில் காதல் சந்திப்புகளைக் கொண்டிருப்பதாகும். இதுதான் “இளமையின் மலரும் பருவம்,” இந்தப் பருவத்தில் காம உணர்ச்சிகள் உச்சக்கட்டத்தை அடைகின்றன. (1 கொரிந்தியர் 7:36, NW) டாக்டர் ஆரி கீவ் பின்வருமாறு கூறுகிறார்: “எதிர்பாலருடன் தொடர்பு கொள்வது அநேக இளைஞருக்குப் பெரும்பாலும் குழம்பிய மோகத்தின் மிகுதியால் தூண்டப்படுகிறது.” எனவே, இளைஞர்கள் மிக எளிதில் ‘காதல்’ கொள்ள ஆரம்பித்து விடுவது குறித்து ஆச்சரியப்படுவதற்கில்லை. “இவனை நான் சந்தித்தேன்,” என்று பழையவற்றை நினைத்துப் பார்க்கிறாள் பார்பரா என்ற இளம் பெண். “நாங்கள் ஏறக்குறைய ஒரு வருடத்துக்குக் கடிதம் மூலம் தொடர்பு கொண்டோம். அவன் என்னை நேசிப்பதாக ஒரு கடிதத்தில் எழுதியிருந்தான். ‘அவனை நான் ஒருமுறைதான் பார்த்திருக்கிறேன். அவன் அதை எப்படிச் சொல்லமுடியும்?’ என்று எனக்குள் சொல்லிக்கொண்டேன்.”
இளம் ஜோடிகள் தங்களுடைய காம உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தி, இசைவுப் பொருத்தத்தின் அடிப்படையில் தொடர்பைக் காத்துக்கொள்ள நினைத்தாலும், அவர்கள் அந்த இசைவுப் பொருத்தத்தில் நிலைத்திருக்கும் வாய்ப்புகள் மிக அரிது! ஏன்? ஏனென்றால் இளமைத் தன்மை இடைவிடாது மாறும் நிலையில் இருக்கிறது. நீங்கள் யார், உங்களுடைய உண்மையான விருப்பம் என்ன, உங்களுடைய வாழ்க்கையை நீங்கள் எவ்வாறு பயன்படுத்தப் போகிறீர்கள் என்பவற்றை நீங்கள் கண்டுபிடித்துக்கொண்டிருக்கிறீர்கள். இன்று முக்கியமானவை என்று நீங்கள் கருதும் காரியங்கள் உங்களுக்கு நாளை அர்த்தமற்றதாகிவிடும். இப்படியாக இளமைக் காதல் விவாகத்தில் முடிவடையாத, பெரும்பாலும் நாசமடையும் உறவாக இருக்கிறது.
அப்படியிருக்க, பைபிள் ஞானமாகவே விவாகத்தை “இளமையின் மலரும் பருவம் கடந்த” நிலையிலிருப்பவர்களுக்கே சிபாரிசு செய்கிறது. (1 கொரிந்தியர் 7:36, NW) எனவே ஒரு நபர் அதிக இளமையாக இருக்கும்போது காதல் சந்திப்புகள் கொண்டிருப்பதைப் பொருத்தமற்றதென தள்ளுபடி செய்துவிடுகிறது. இந்த ஆலோசனையைப் பின்பற்றுவது அவ்வளவு எளிதாயிருக்காது, ஆனால் விவாக வயதை அடையும் வரையாக நீ காதல் சந்திப்புகளைக் கொண்டிராமல் இருந்தால் அது நிச்சயமாகவே “உன் இருதயத்திலிருந்து சஞ்சலத்தையும், உன் மாம்சத்திலிருந்து தீங்கையும் நீக்கிப்போடும்.”—பிரசங்கி 11:10.
ஆழமறியாமல் காலைவிடாதே
வயதில் பெரியவர்களாக இருப்பதுதானே ஒருவரை மனமுறிவுக்கு நீங்கியவராக்கிவிடுவதில்லை. விவாக வயதுவந்த பெரியவர்களுங்கூட சில சமயங்களில் எப்படி காதல் படுகுழிகளில் விழுந்துவிடுகிறார்கள் என்பதைக் கேரல் பாட்வின் காதல் வாழ்கிறது (Love Lives) என்ற தன்னுடைய புத்தகத்தில் குறிப்பாய்க் காண்பிக்கிறாள்: “அவர்கள் உறவுக்குள் மிக வேகமாகக் குதித்துவிடுகிறார்கள். . . . அவர்கள் உடன்பாடுகளை வேகமாக விரும்புகிறார்கள்.” நீ அறிந்திராத ஒருவருக்கு உன் இருதயத்தைப் பறிகொடுப்பது அதை முறிப்பதற்கு ஒரு நிச்சய வழியாக இருக்கும்.
“வெளித்தோற்றத்தின்படி பார்க்கிறீர்கள்,” என்று பவுல் அப்போஸ்தலன் கொரிந்து கிறிஸ்தவர்களிடம் சொன்னான். (2 கொரிந்தியர் 10:7) அதைப் போலவே, உடல் தோற்றத்தின் அடிப்படையில் மட்டுமே காதலீடுபாடுகளில் உட்பட்டுவிடும் தவற்றைச் செய்துவிடாதே. அவனோ அல்லது அவளோ எப்படிப்பட்ட நபர் என்பதை முதலில் கண்டுபிடி. பாதுகாப்பான தூரத்திலிருந்து அவனுடன் அல்லது அவளுடன் பழக சந்தர்ப்பசூழ்நிலை இடங்கொடுக்காவிட்டால், நீ மனதில் கொண்டிருக்கும் அந்த நபர் மற்றவர்களால் நல்லவிதமாகப் பேசப்படுகிறாரா என்பதை விவேகத்துடன் தீர்மானிக்கலாம்.
திறமைசாலியான ஒரு மனைவியின் செயல்கள் “வாசல்களில் அவளைப் புகழும்” என்று பைபிள் சொல்லுகிறது. (நீதிமொழிகள் 31:31) அதுபோல ஒரு அருமையான கிறிஸ்தவ ஆண் அல்லது பெண் நற்பெயர் பெற்ற நபராக இருப்பான் அல்லது இருப்பாள் என்று நீ எதிர்பார்க்கலாம். அவனோ அல்லது அவளோ சந்தேகத்துக்குரிய நடத்தைப் பதிவைக் கொண்டிருந்தால்—ஒருவேளை தொடர்புகளை ஒன்றன்பின் ஒன்றாக ஏற்படுத்தி, காரியம் முற்றிவிடும்போது அவற்றை அறுத்துக்கொள்ளும் பழக்கத்திற்குப் பேர்பெற்றிருந்தால்—ஜாக்கிரதை! அடுத்து மிதிக்கப்படுவது உன்னுடைய உணர்ச்சிகளாக இருக்கக்கூடும்.
உண்மைப் பேசுதல்
ஒருவர் நற்பெயர் பெற்றவராகக் காணப்பட்டாலும், பரஸ்பர அக்கறை காணப்பட்டாலும், உன்னுடைய விவாகத்தைத் திட்டமிட ஆரம்பிப்பது அவசரப்பட்ட நடவடிக்கையாகவே இருக்கும். இந்த நபரை நெருங்க பார்க்கும்போது, ஆள்தன்மையில் பலமான குறைகள் அல்லது ஆவிக்குரிய பலவீனங்கள் காணப்படலாம். அப்படியிருக்க, இந்த நபர் உண்மையிலேயே எப்படிப்பட்டவர் என்பதை நீ எப்படி அறிந்துகொள்ளலாம்? பொழுதுபோக்குக் காரியங்களில் ஒன்றாக ஈடுபடுவது தவறாக இருக்காது என்றாலும், சில முக்கியமான இரகசிய பேச்சுகள் இருக்கும்போதுதான் காதல் சந்திப்புகள் அதன் நோக்கத்தைச் சிறப்பாக நிறைவேற்றுகிறது.—நீதிமொழிகள் 15:22-ஐ ஒப்பிடவும்.
உங்களுடைய இலக்குகள் என்ன? அக்கறைகள் என்ன? பிள்ளைகளைக் கொண்டிருப்பது குறித்து உங்கள் கருத்து என்ன? வரவுசெலவு திட்டம் குறித்து உங்கள் அபிப்பிராயம் என்ன? ‘ஒருவருக்கொருவர் மெய்யைப் பேசுவது’ மிகவும் முக்கியம், இந்த நபரை இழந்துவிடும் பயத்தில் உண்மையை வளைத்திடக்கூடது. (எபேசியர் 4:25) எப்படியும் என்றைக்காவது ஒரு நாள், உண்மையில் நீ யார் என்பது வெளிப்படும். ஏமாற்றத்தில்—அல்லது பரிதபிக்கவேண்டிய ஒரு விவாக வாழ்க்கையில்— முடிவடையக்கூடிய ஓர் உறவை ஆரம்பிப்பதற்குப் பதிலாக நீ யார் என்பதையும், வாழ்க்கையில் நீ விரும்புவது என்ன என்பதையும் அந்த நபர் அறிந்திருக்கும்படிச்செய்வது நல்லது.
ஆனால் உறவைக் காத்துக்கொள்கிறவராக அந்த நபர் நடிக்கிறார் என்றால், அப்பொழுது என்ன? பைபிள் பின்வருமாறு எச்சரிக்கிறது: “பேதையானவன் எந்த வார்த்தையையும் நம்புவான்; விவேகியோ தன் நடையின்மேல் கவனமாயிருப்பான்.” (நீதிமொழிகள் 14:15) நீங்கள் அளவுக்குமிஞ்சி சந்தேகிக்கிறவர்களாக இருக்க வேண்டும் என்பதல்ல, ஆனால் அந்த நபரின் செயல்கள் அவனுடைய அல்லது அவளுடைய சொற்களைவிட பலமாகப் பேசுகின்றனவா என்பதை நீ தனிப்பட்டவிதத்தில் உறுதிசெய்துகொள்வது நியாயமானது.
முக்கிய காரியங்களில் அல்லது விவாதத்துக்குரிய காரியங்களில் அவனுடைய அல்லது அவளுடைய நிலை என்ன என்பதை ஆரம்பத்திலேயே தெரிந்துகொள்ளவேண்டும்—பின்னால் இருவரும் அதிக உணர்ச்சிவசப்பட்டுவிடும்போதல்ல. உதாரணமாக, ஸ்டீவ், கிறிஸ்தவ ஊழியத்தில் தன்னைப் போல பக்திவைராக்கியமுள்ள ஒரு விவாக துணைக்காகத் தேடிக்கொண்டிருந்தான். விரைவில் தனக்கு அதிக கவர்ச்சியாக இருந்த ஒரு பெண்ணை விரும்ப ஆரம்பித்தான். “ஆனால் அவளுக்கென்று எந்தவிதமான இலக்குகளும் இல்லை மற்றும் ஒரு கிறிஸ்தவளாக அவள் அதிக சுறுசுறுப்பாக இல்லை என்பதையும் உணர ஆரம்பித்தேன்” என்கிறான் ஸ்டீவ். ஞானமாகவே அந்தத் தொடர்பை அவன் அறுத்துக்கொண்டான்.
தொடர்பைத் துண்டித்துக்கொள்ள முடியாத அளவுக்கு நெருக்கம்
மனமுறிவைத் தவிர்ப்பதற்கான மற்றொரு அம்சத்தை இது குறிப்பிட்டுக் காண்பிக்கிறது. ஜூடி அதை இப்படியாகக் கூறுகிறாள்: “உணர்ச்சிவசப்பட்டு உட்படுவது அவ்வளவு சாதாரணம் என்பதை என் கடந்தகால அனுபவங்களிலிருந்து தெரிந்துகொண்டேன். சில சமயங்களில் அந்த நபர் அதிகமாக நெருங்க அனுமதித்துவிடுகிறீர்கள், நீங்கள் ஒருவரையொருவர் நேசிக்கவில்லை என்பதைக் காணும்போதுங்கூட, நீங்கள் அவ்வளவாக உணர்ச்சி சம்பந்தமாக உட்பட்டுவிடுகிறீர்கள், அந்த நபரை புண்படுத்திவிடுவீர்களோ என்று பயப்படுகிறீர்கள்.”
பைபிள் காலத்தில் வாழ்ந்த சூலமித்திய பெண் கட்டுப்படுத்தப்படாத காதல் உணர்ச்சிகளின் வல்லமையை நன்கு அறிந்திருந்தாள். எனவே, வல்லமை வாய்ந்த சாலொமோன் அரசன் நயந்து நாடிய போது, தன்னுடைய தோழிகளைப் பார்த்து, ‘தனக்கு மனதாகுமட்டும் தன் அன்பை விழிக்கப்பண்ணாமலும் எழுப்பாமலுமிருக்கும்படிக்’ கேட்டுக்கொண்டாள். (சாலொமோனின் உன்னதப்பாட்டு 2:7) எனவே ஒருவரை நீ முதலாவது அறிய வரும்போது உன்னுடைய உணர்ச்சிகளை உன் கட்டுக்குள் வைத்துக்கெள்வது ஞானமான காரியம்.
இது அவசரப்பட்டு பொருத்தமற்ற வார்த்தைகளைத் தவிர்ப்பதை உட்படுத்தும். பின்வரும் நியமம் பொருந்துகிறது: “தன் வஸ்திரம் வேகாமல் மடியிலே எவனாவது நெருப்பை வைத்துக்கொள்ளக் கூடுமோ?” (நீதிமொழிகள் 6:27) ஆரம்பக் கட்டத்தில் முத்தமிடுவதும் அல்லது கைகளைப் பிடிப்பதும் எதிர்விளைவை ஏற்படுத்தக்கூடியது. அப்படிப்பட்ட செயல்கள் ஒழுக்கங்கெட்ட பாலுறவு ஆசைகளைத் தூண்டிவிடுவதுமட்டுமல்லாமல் சரியான நிதானிப்பையும் நல் நோக்கத்தையும் ஒடுக்கிவிடும். உன்னுடைய காம உணர்ச்சிகள் தூண்டப்படுகையில் ஒருவரைப் பற்றி நன்றாக நிதானிப்பது கடினம். மற்றும், காதல் உணர்ச்சிகள் அதிகமாகக் காண்பிக்கப்படுகையில், ஓர் உறவு நிலைக்காமற்போனால் அந்த முறிவின் வேதனை மிக மோசமாயிருக்கும்.
ஜூடி கடைசியாக ஓர் இளம் மனிதனைக் காதலிக்க ஆரம்பித்தபோது, அந்த உறவு படிப்படியாக வளர அனுமதித்தாள், தான் விவாகம் செய்துகொள்ளப் போகும் மனிதன் அவன்தான் என்பதை நிச்சயப்படுத்திக்கொள்ளும்வரை ஒரு பாதுகாப்பான தூரத்தில் தன்னை வைத்துக்கொண்டாள். “அப்பொழுதுதான் அவன்பேரில் என்னுடைய உணர்வுகளை வளர விடுவது சரியானது என்று உணர்ந்தேன்,” என்று சொல்லுகிறாள்.
காதல் சந்திப்புகள் இன்பத்துக்கும் துன்பத்துக்கும் வழிநடத்தும் சக்திபடைத்தது. காதல் சந்திப்புகளை நீங்கள் எவ்விதம் கையாளுகிறீர்கள் என்பது அதிகமாய் அவற்றின் விளைவுகளுடன் சம்பந்தப்பட்டிருக்கிறது. உண்மைதான், ஒரு உறவு நல்ல பலனையுடையதாயிருக்கும் என்பதற்கு உத்தரவாதமளிக்க எந்த வழியுமில்லை. முன்னெச்சரிப்புடன் இருக்குமிடத்திலும் மனமுறிவு ஏற்படக்கூடும். என்றபோதிலும். நீங்கள் விவாகத்துக்கு ஆயத்தமாயிருக்கும்போது மட்டுமே காதல் சந்திப்புகளைக் கொண்டிருப்பதன் மூலமும், உங்களுடைய உணர்ச்சிகளைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பதன் மூலமும், தகுந்த முன்னெச்சரிப்புடனிருப்பதன் மூலமும் மட்டுமே மனமுறிவைக் குறைத்து, மகிழ்ச்சியுள்ள விவாகத்தில் விளைவடையும் காதல் சந்திப்புகளைக் கொண்டிருக்க அதிகத்தைச் செய்கிறவர்களாயிருப்பீர்கள். (g88 2⁄8)
[பக்கம் 18-ன் படம்]
இளவயது காதல்கள் விவாகத்துக்கு வழிநடத்துவது அரிது, ஆனால் பெரும்பாலும் மனவேதனைக்கு வழிநடத்துகின்றன
[பக்கம் 20-ன் படம்]
காதல் விவகாரங்களில் உட்படுவதற்கு முன்பு ஒருவரை நன்றாக அறிந்துகொள்ளுங்கள்