பொருட்கள் வாங்குவதில் சிறந்து விளங்குவது எப்படி
விலையுயர்வும் பணவீக்கமும் காணப்படும் இந்நாட்களில் கடைக்குச்சென்று பொருட்கள் வாங்கும் கலை இதுவரை இருந்திராதளவுக்கு மிகவும் முக்கியமானதாய் இருக்கிறது. தேசத்துக்குத் தேசம் பொருட்களின் விலை அச்சுறுத்துமளவுக்கு உயர்ந்துவிட்டிருக்கிறது, எதிர்காலத்தில் விலைகளில் சரிவு ஏற்படும் என்று எள்ளளவும் எதிர்பார்ப்பதற்கில்லை. அநேக குடும்பங்களில் செலவை சமாளிப்பதற்கு பெற்றோரில் இருவருமே வேலை செய்யவேண்டியதாயிருக்கிறது. எனவே பொருட்களை எப்படி, எங்கே, எப்பொழுது வாங்க வேண்டும், உங்கள் பணத்தை அதிக விவேகத்துடன் செலவு செய்வது எப்படி என்பதைத் தெரிந்திருப்பது எவ்வளவு முக்கியம்!
பொருட்களின் மதிப்பை அறிந்திருங்கள்
பொருட்களை வாங்குவதில் சிறந்திருப்பதற்குத் தேவையான முக்கியமான காரியங்களில் ஒன்று பொருட்களின் மதிப்பைத் தெரிந்திருப்பது. விற்பனைக்காக வைக்கப்பட்டிருக்கும் ஒரு பொருள்—அது உடையாக இருந்தாலும், ஒரு பொருளாக இருந்தாலும், அல்லது உணவுப்பொருளாக இருந்தாலும்—அது தரக்குறைவானதாக, அதிக மாற்றங்கள் செய்யவேண்டியதாய் அல்லது பழுதுபார்க்கவேண்டிதாய் இருந்தால் அல்லது பயன்படுத்தாத ஒன்றாக இருந்தால் சிக்கனத்தைக் குறிக்காது.
உதாரணமாக, துணிமணி வாங்கும்போது உங்களையே நீங்கள் பின்வருமாறு கேட்டுக்கொள்ளுங்கள்: இது நல்ல தரமான ஒன்றா? இது நன்றாக செய்யப்பட்டிருக்கிறதா? இதை மாற்றியமைக்க வேண்டியதாயிருக்குமா? இதை நான் எந்தளவுக்கு பயன்படுத்துவேன்? நிலைத்திருக்கும் ஒரு பாணியில் அமைந்திருக்கிறதா? இதை சுத்தமாக வைத்துக்கொள்வது சிரமமற்றதாக இருக்குமா? உலர்சலவை செய்யப்படவேண்டிய ஒரு துணி, ஆரம்பத்தில் அதிக விலையுள்ளதாகக் காணப்படும் துவைத்து அணியக்கூடிய ஒன்றைவிட காலப்போக்கில் விலைமிகுந்ததாக இருக்கக்கூடும். எனவே பராமரிப்பும் கவனிக்கப்படவேண்டிய ஓர் அம்சம். உண்மையான பேரம் என்பது உங்களுக்கு நன்கு பொருந்தக்கூடியதும், உங்கள் முகத்தையும் சாயலையும் எடுப்பாகக் காட்டக்கூடியதும், பல வருடங்களுக்கு அணிந்து அனுபவிக்கக்கூடியதுமான ஆடைகளை வாங்குவதாகும்.
மேசை, நாற்காலி போன்ற தட்டுமுட்டு சாமான்களையும் மற்ற சாமான்களையும் பொருத்ததில்கூட, அவை புதியவையாயிருந்தாலும் பழையவையாயிருந்தாலும், இதே நியமங்கள் பொருந்துகின்றன. இந்தப் பொருள் நல்ல தரமான ஒன்றா? இது சரியாக இயங்குகிறதா? இதைப் பழுதுபார்க்க வேண்டுமா? அப்படியென்றால், அதை நீங்களே செய்துவிட முடியுமா? எல்லாம் சேர்த்து என்ன செலவாகும்? விசேஷமாகப் பழுதுபார்க்கும் இடங்களிலும், பழையது உட்பட பற்பல சாமான்கள் கிடைக்கும் திடீர் விற்பனைகளிலும் பொருள்களை வாங்கும்போது இந்தக் கேள்விகளைக் கேட்டுக்கொள்வது, உணர்ச்சிவசப்பட்டு வாங்குவதைத் தடுத்து, வீண் செலவைக் குறைக்கும்.
துணைச் சாதனங்களின் முழு பயனையும் பெற்றிட, அவற்றை இயக்கிட என்ன செலவாகும் என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். பெரியளவான பராமரிப்புச் செலவும் பொருளைப் பயன்படுத்துவதால் ஏற்படும் செலவும் ஒரு பொருளின் விலையைக் கூட்டுவதாயிருக்கக்கூடும். அந்தப் பொருள் எந்த இடத்தில் பயன்படுத்தப்படும் என்பது குறித்தும் சிந்தனை செய்யுங்கள். உதாரணமாக, அறையைக் குளிர்படுத்த சூரிய வெளிச்சம் நேரடியாகப் படும் ஒரு சன்னலில் பொருத்தப்படும் குளிர்பத சாதனம் சூரிய வெளிச்சம் படாத ஒரு சன்னலில் பொருத்தப்படும் ஒன்றைவிட அதிக மின்சக்தியைத் தேவைப்படுத்தும். அந்தச் சாதனம் எவ்வளவு நேரத்துக்கு இயங்கும், அதன் அளவு, வயது, செயல் திறம் ஆகிய காரியங்கள் அது எவ்வளவு மின்சக்தியைப் பயன்படுத்தும் என்பதைத் தீர்மானிக்கும், இப்படியாக அதன் மொத்த விலையைத் தீர்மானிப்பதாயிருக்கும்.
எப்பொழுது வாங்கவேண்டும் என்பதை அறிந்திருங்கள்
எப்பொழுது வாங்க வேண்டும் என்பது சில சமயங்களில் எங்கே வாங்குவது என்பதைவிட முக்கிமானதாயிருக்கக்கூடும். பொதுவாக, கோடை ஆடைகளைக் கோடையின் முடிவில்தான் அதிக மலிவாக வாங்கலாம். கடந்துபோகும் பாணியில் அமைந்த ஆடைகளின் அல்லது துணிகளின் விற்பனைக்கு இடங்கொடுக்கப் பெரும்பாலான ஜவுளிக் கடைகள் விசேஷ தள்ளுபடி விற்பனையைக் கொண்டிருக்கின்றன. அது குளிர்காலத்தின் கடைசியிலும் உண்மையாக இருக்கிறது. வசந்த கால வியாபாரம் துவங்குவதற்கு முன்பு, குளிர் காலத்தின் கடைசியிலேயே வாங்கிவிடுவது நல்லது. தேர்ந்தெடுப்பதற்கு அதிகம் இருக்காது என்பது உண்மைதான், ஆனால் அவை பொதுவாகப் போதுமானவையாக இருக்கும்.
பெரும்பாலான வாகனங்களின் மாதிரி அமைப்பு ஆண்டுதோறும் அவ்வளவாய் மாற்றங்காண்பதில்லை, எனவே விற்பனையாளர்கள் அடுத்த ஆண்டு வரும் புதிதாய் அமைந்த வாகனங்களுக்காகத் தங்களிடமிருக்கும் பழைய அமைப்பு வாகனங்களை விற்றுவிடுவர். ஆண்டு கடைசியில் புதிய வாகனம் வாங்குவதன் மூலம் நீங்கள் அதிகம் மிச்சப்படுத்தலாம். நீங்கள் வாங்கும் பொருளுக்கு என்ன உத்தரவாதமும் பராமரிப்பு சேவையும் உண்டு என்பதைக் கேட்டுத் தெரிந்துகொள்ள தயங்காதீர்கள். காலப்போக்கில் வாகனத்தின் சில அம்சங்களைவிட இந்தக் காரியங்கள் உங்களுக்கு அதிக மதிப்பு வாய்ந்ததாக நிரூபிக்கக்கூடும்.
உங்களுக்கு அவசியமானதை மட்டும் வாங்குங்கள்
யோசிக்காமல் அவசரப்பட்டு வாங்குவதைத் தடுத்திட அதிகமான கட்டுப்பாடு அவசியம். உணவு பொருட்கள் வாங்குவதற்காகச் செல்லும்போதுதானே இது அதிக உண்மையாக இருக்கிறது. ஒரு குடும்பத்தின் வரவு செலவு கணக்கில் இதுதானே அதிக செலவை உட்படுத்தும் ஒன்றாக இருக்கிறது.
அதே சமயத்தில், நீங்கள் உணவுக்காக செலவு செய்வதைக் கவனமாகத் திட்டமிடுவதால் வெகுவாகக் குறைத்திடலாம். இதை மனதில் கொண்டவர்களாக, தலைசிறந்த ஒரு விதிமுறையைக் கவனியுங்கள்: நீங்கள் பசியாக இருக்கும் போது உணவு பொருட்கள் வாங்குவதற்காகக் கடைக்குச் செல்ல வேண்டாம். வேண்டாம். நீங்கள் சாதாரணமாக வாங்காத காரியங்களை (அநேகமாய் மிட்டாய்களை) வாங்குகிறவர்களாக இருப்பீர்கள். அது உண்மையாக இருப்பதை நீங்கள் கவனித்ததில்லையா?
இன்னொரு முக்கியமான காரியம், உங்கள் வரவு செலவுத் திட்டத்திற்குள் உங்களை வைத்துக்கொள்ள, கடையில் வாங்கவேண்டிய சாமான்களின் ஒரு பட்டியலைத் தயாரிப்பதும் அதற்குள் கட்டுப்பட்டவர்களாக இருப்பதுமாகும். அப்படிச் செய்யாவிட்டால், ஒவ்வொரு முறையும் கடையில் ஏறி இறங்கும் போது நீங்கள் திட்டமிட்டதைவிட அதிகமாக வாங்கிவருவீர்கள். ஒரு புள்ளிவிவரத்தின்படி, வாங்கவேண்டிய பொருள் பட்டியலின்றி 3 சாமான்கள் மட்டுமே வாங்குவதற்காகப் பல்பொருள் அங்காடிக்குச் செல்லும் ஒரு பெண் முடிவில் 8 முதல் 10 சாமான்கள் வாங்கியிருப்பாள்; ஒரு ஆண் ஏறக்குறைய 20 சாமான்கள் வாங்கியிருப்பான்! உண்மைதான், இதற்கு அந்தக் கடையும் காரணமாக இருக்கிறது. எப்படி?
அத்தியாவசிய பொருட்களாகிய பால் பண்ணைப் பொருட்கள், இறைச்சி, காய்கறிகள் போன்றவை கடைக்கு முன்னால் வைக்கப்படாமல் தூரமாக வைக்கப்படுகின்றன. எனவே இந்தப் பொருட்களை நீங்கள் வாங்குவதற்குப் பல பொருட்களைக் கடந்து செல்ல வேண்டியதாயிருக்கும். நீங்கள் என்ன வாங்க வேண்டும் என்று வந்தீர்களோ, அதை வாங்குவதற்கு முன்னால் உங்கள் பை பாதி நிறைந்துவிட்டிருக்கும். தெளிவாகவே, அவசியமில்லாத சாமான்களை வாங்குவதைக் குறைத்துக்கொள்ள கையில் ஒரு பட்டியல் அவசியம்.
கடைக்குச் செல்வதற்கு முன்னால், கடையில் மலிவாக விற்கப்படும் பொருட்களைப் பார்க்கலாம். உங்களுடைய வரவு செலவு அதற்கு இடங்கொடுக்குமானால், அவற்றை நீங்கள் முன்னதாகவே வாங்கிவைத்து மறுவாரத்தின் பதார்த்தத்தை அவற்றிற்கேற்ப மாற்றியமைத்துக் கொள்ளலாம். பொருட்களையும் அவற்றின் அன்றாட விலையையும் தெரிந்திருப்பது உங்களுக்கு உதவியாயிருக்கும், எப்படியெனில் விளம்பரப்படுத்தப்படும் சமயத்தில் உண்மையிலேயே மலிவாக இல்லாத ஒரு பொருளை வாங்குவதிலிருந்து உங்களைத் தடுத்திடும். வாரத்தின் அல்லது மாதத்தின் இடையில் வாங்குவதும் உதவியாயிருக்கும். கடையில் அதிக கூட்டம் இராது, நீங்கள் அவசரப்படாமல் வாங்கலாம், அதே சமயத்தில் விற்பனையிலிருந்தும் நன்மையடையலாம். பழங்கள், காய்க்கறிகள் ஆகியவற்றை அவற்றின் காலத்தில் வாங்க முற்படுங்கள். அந்தச் சமயத்தில் அவை மிகவும் சகாயமாகக் கிடைக்கும், வரப்போகும் நாட்களுக்காக அவற்றைப் பக்குவப்படுத்தி வைக்கலாம். முன்னதாகவே கவனமாகத் திட்டமிடுவது அவசியம் என்பது தெளிவாகத் தெரிகிறது.
உங்களோடு பிள்ளைகளைக் கூட்டிச் செல்லாமலிருப்பது ஞானமான காரியம் என்பதை நீங்கள் காணக்கூடும். ஏன்? அவர்கள் உங்கள் கவனத்தைத் திருப்பிவிடுகிறவர்களாக இருப்பதோடு, தொலைக்காட்சியில் தாங்கள் பார்த்ததை வாங்குவதற்கு அவர்கள் பக்குவப்படுத்தப்பட்டவர்களாக இருக்கிறார்கள். கடை வாசலில் பிள்ளைகளே கைநீட்டி எடுத்துக்கொள்வதற்கு வசதியாக வைக்கப்பட்டிருக்கும் அவசியமில்லாத விளையாட்டு பொருட்களையும் வேண்டாத உணவுவகைகளையும் வாங்கித்தரும்படியாக அநேக தாய்மார்கள் தங்கள் பிள்ளைகளால் வற்புறுத்தப்படுகிறார்கள். மத்திய மேற்கு ஐக்கிய மாகாணங்களில் வாழும் ஒரு தாய் கடைக்குச் சென்ற சமயமெல்லாம் தன் சிறிய மகனுக்கு ஒரு புதிய விளையாட்டு கார் அல்லது லாரி “வாங்கிக் கொடுக்க வேண்டியதாய்” இராத நாள் இருந்ததில்லை என்று ஒப்புக்கொண்டாள். இந்த விஷயத்தில் நீங்கள் பலவீனமாயிருந்தால், உங்கள் பிள்ளைகள் உங்களுடன் கடைக்குச் செல்ல நேர்ந்தால், அன்பாகவும் ஆனால் உறுதியாகவும் இருக்க நீங்கள் கடுமையாக முயற்சி எடுக்க வேண்டும்.
உங்களுக்குத் தேவையானவற்றை மட்டும் வாங்குவது என்ற விதிமுறை, உங்கள் வரவு செலவு இறுக்கமாக இருக்கும்போது துணிமணி விஷயத்திற்கும் அதிகமாகப் பொருந்துகிறது. நல்லவேளையாக, இந்தக் காரியத்திற்கான செலவைக் கட்டுப்படுத்தவும், குறைத்திடவும், ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பட்டியலிலிருந்து நீக்கிடவும் முடியும். எப்படி? முதலாவதாக, குடும்பத்திலுள்ள மற்ற அங்கத்தினருக்குத் தங்களுடைய உடையைக் கொடுப்பதாகும். இப்படியாகப் பகிர்ந்துகொள்ளப்படும் உடையின் பேரில் சில பிள்ளைகள் விருப்பமற்றவர்களாக இருக்கக்கூடும். என்றாலும், அவர்களுடைய ஒத்துழைப்பு குடும்ப செலவைக் குறைத்திடுகிறது என்பதை அவர்கள் மதித்துணர உற்சாகப்படுத்தப்பட்டால், அவர்களுடைய மறுப்பு மறைந்துவிடும். இப்படியாக சேமிக்கப்படும் பணம் உல்லாசமாகச் சென்றுவருவதற்கும் விடுமுறை கழிப்பதற்கும் மற்ற குடும்பநல திட்டங்களுக்கும் பயன்படுத்தப்படுவதை அவர்கள் காணும்போது, இது உண்மையாக இருக்கிறது.
இரண்டாவதாக, நண்பர்களும் உறவினர்களும் தங்கள் உடைகளையும் மற்ற சில பொருட்களையும் ஒருவருக்கொருவர் மாற்றிக்கொள்வதற்காக ஒன்றுகூடும் சமயங்களை ஏற்படுத்திக் கொள்ளலாம். ஒரு குறிப்பிட்ட ஆடையின் நிறம் ஒரு பெண்ணுக்கு அமையாமலிருக்கலாம், ஆனால் இன்னொருத்திக்குச் சரியாக அமையலாம். இப்பொழுது அதிக சிறியதாக அல்லது பெரியதாக இருக்கும் காலணிகளை பயன்படுத்தமுடிகிறது. ஒருவருடைய வீட்டில் உபயோகிக்கப்படாத, ஆனால் இன்னொருவர் வீட்டில் அதிகமாகத் தேவைப்படும் ஒரு பொருள் மாற்றிக்கொள்ளப்படலாம். இதன் சிறந்த அம்சம் என்னவென்றால், தேவையான இந்தப் பொருட்கள் வரவு செலவு திட்டத்தில் எவ்வித பண ஒதுக்கீடும் இல்லாமலேயே பெற்றுக்கொள்ளப்படுகிறது—கடைக்குச் செல்லும் ஒருவரின் கனவு.
விலைகளை ஒப்பிட்டுப்பார்த்து வாங்குவது
கடைக்குக் கடை விலைகளை ஒப்பிட்டுப்பார்த்து பொருள்களை வாங்குவது செலவைக் கணிசமாகக் குறைத்திடும். நிறைய வாங்கும்பொழுது, எந்தக் கடை அதிக தள்ளுபடி கொடுக்கிறது என்பதைக் கவனியுங்கள். உதாரணமாக, சில பெயின்ட் கடைகள், ஒரே வர்ணம் பெயின்ட் இருபது லிட்டருக்கும் அதிகமாக வாங்கினால் 10 சதவிகித தள்ளுபடி கொடுக்கின்றன. அநேக சமயங்களில் நீங்கள் மற்றவர்களுடன் கூட்டு சேர்ந்து வாங்கும் பொருள்களையும் அதில் கிடைக்கும் இலாபத்தையும் பகிர்ந்துகொள்ளலாம்.
உணவு பொருட்களை வாங்கும்போதும், இதே முறையைக் கையாளலாம். உள்ளூர் செய்தித்தாளைப் பார்த்து, ஒவ்வொரு கடையும் தங்களுடைய தள்ளுபடி விற்பனையை எப்பொழுது கொண்டிருக்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ளுங்கள். பெயர்களுக்கு அடிமையாகிவிடாதீர்கள். பிரபலமாகிவிட்ட ஒரு பெயர் கொண்ட உணவு பொருள் அதிக விற்பனையில் முன்னணியிலிருக்கக்கூடும், ஆனால் அது ஊட்டச்சத்து அம்சத்தில் அப்படி இருக்கும் என்பதல்ல. பொதுவாக, பிரபல பெயர் கொண்ட பொருட்களின் விளம்பரம், பயன்படுத்தப்படும் உறைகள் ஆகியவற்றுக்கான செலவை ஈடுகட்டும் வகையில் கூடுதல் விலை கொண்டவையாயிருக்கின்றன. சாதாரண கடை சரக்குகள்கூட அதுபோல நன்றாக இருக்கலாம்.
எந்த ஒரு வரவு செலவு திட்டத்துக்கும் ஊக்கமளிப்பது “கவர்ச்சி இல்லாத” பொருட்கள். அவை பொதுவாக சாதாரண கருப்பு வெள்ளை உறைகளில் இருக்கின்றன (எனவேதான் அந்தப் பெயர்). ஆனால் அவற்றை உபயோகித்துப் பார்க்காமல் நியாயந்தீர்த்துவிடாதீர்கள். அவற்றின் தரம் பிரபலமாகிவிட்ட பெயர்களைக் கொண்ட சரக்குகளுக்கு ஈடாக இருக்கின்றன, விலையும் மலிவு. இது மருத்துவரால் எழுதிகொடுக்கப்படும் மருந்துகளைக் குறித்ததிலும் உண்மையாயிருக்கிறது. ஒரு மருந்து அதன் பதிவுப் பெயரால் கணிக்கப்படுவதற்குப் பதிலாக வேதியல் பெயரால் கணிக்கப்படுகிறது. அதன் அடிப்படைக்கூறுகள் ஒன்றுதான், ஆனால் விலை அதிக மலிவாக இருக்கிறது.
பொருட்களின் விலைகளை ஒப்பிட்டுப்பார்த்து அவற்றை வாங்குவதில் கவனமாக இருக்க வேண்டும் என்பது உண்மைதான். விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கும் ஓரிரு பொருளுக்காக நகர் முழுவதும் சுற்றி வருவந்தால், மிச்சப்படுத்தப்பட்ட அந்தப் பணம் போக்குவரத்துக்கே செலவாகிவிடும். எனவே, யோசனையுடன் நடந்துகொள்ளுங்கள். எப்பொழுதும் ஒரே கடையில் பொருட்களை வாங்குவதன் மூலமும் நீங்கள் செலவைக் குறைக்கலாம். விசேஷ விற்பனைகள் எப்பொழுது என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். பொருட்கள் எங்கே கிடைக்கின்றன என்பதையும் தெரிந்துகொள்ளுங்கள், இப்படியாக உங்களுக்கு நேரம் மிச்சம். அதிக வேலைகளைக் கொண்ட ஒரு அட்டவணையையுடைய ஒருவருக்கு அது பணத்தை மிச்சப்படுத்தும் அளவுக்கு முக்கியமானதாயிருக்கக்கூடும்.
வியாபாரக் கண்ணிகளுக்கு இடங்கொடுக்காதீர்கள்
பல்பொருள் அங்காடிகள் பல வாடிக்கையாளர்களை உணர்ச்சிவசப்படுத்தி பொருட்களை வாங்கச்செய்கின்றன. அவர்களுடைய வியாபாரத் தூண்டுதல்கள் அநேகமாய்ப் புலப்படாததாயிருக்குமாதலால், அவர்களுடைய தூண்டுதல்களை நீங்கள் அறிவோடும், ஊக்கத்தோடும், கட்டுப்பாடோடும் மேற்கொள்ள வேண்டியது அவசியம்.
பொருட்களை உறைகளில், புட்டிகளில் அல்லது பெட்டிகளில் வைக்கும் விதத்தில் அவர்களுடைய புத்திச்சாலித்தனம் விளங்குகிறது. எத்தனைப் பொருட்களின் உறைகள் மேல் கண்கவரும் பலவண்ணப் படங்கள் இருக்கின்றன என்பதை நீங்கள் கவனித்திருக்கிறீர்களா? அவற்றில் பல சிவப்பு வண்ணத்தில் அல்லது சிவப்பு எழுத்துக்களில் இருக்கின்றன. இதனால்தான் “கவர்ச்சிகள் இல்லாத” பொருட்கள் பார்வைக்கு மங்கலாக இருக்கின்றன—பசி தூண்டப்படுவதில்லை!
பொருட்களுக்கு எவ்விதம் விலை கொடுக்கப்பட்டிருக்கிறது என்பது குறித்தும் கவனமாயிருங்கள். ரூ.9.95, ரூ.19.95, ரூ.29.95 போன்ற விலைகள் பலரை ஏமாற்றிவிடுகிறது. மேலும் ரூ9.95-க்கு மூன்று பொருட்கள் என்று விளம்பரப்படுத்தப்பட்டிருப்பதால் உங்களுக்கு அவசியமாயிராத பொருட்களை கட்டாயமாக வாங்கவேண்டும் என்று நினைக்காதீர்கள்.
கடையில் பொருட்கள் எப்படி வைக்கப்பட்டிருக்கிறது என்பதுங்கூட வாடிக்கையாளர்கள் மீது செல்வாக்கு செலுத்தக்கூடும். கடைக்குள் செல்பவர்கள் மெதுவாகச் செல்ல வேண்டிய வழிபாதையோரமாக அடுக்கப்பட்டிருக்கும் பொருட்கள் பொதுவாக அதிக விலையுள்ள பொட்களும் உடல் நலத்துக்கு உதவாத உணவுபண்டங்களுமாகவே இருக்கும். மிக அதிக விலையுள்ள பொருட்கள் பொதுவாகப் பார்வை மட்டத்தில் காணப்படுகின்றன. அவற்றை அதற்கு மேல் வரிசையிலும் கீழ் வரிசையிலும் வைக்கப்பட்டிருக்கும் பொருட்களின் விலையோடு ஒப்பிட்டுப்பாருங்கள்.
கூப்பன்கள் பணத்தை மிச்சப்படுத்துகின்றன, ஆனால் அவை வியாபாரத்தையும் பெருக்குகின்றன. ஐக்கிய மாகாணங்களில் 1980-ல் மட்டும் 9,000 கோடி கூப்பன்கள் வழங்கப்பட்டிருந்தன. அநேகர் தங்களிடம் கூப்பன்கள் இருக்கின்றன என்பதற்காகப் பொருட்களை வாங்குகின்றனர். எனவே இது நினைவிலிருக்கட்டும்: அந்தக் கூப்பன்களை உங்களுக்கு அவசியமானதும் ஒழுங்காக உபயோகப்படக்கூடியதுமான பொருட்களுக்காக பயன்படுத்தினால் மட்டுமே அவை பணத்தை மிச்சப்படுத்துவதாயிருக்கும். உங்களுக்கு அவசியமாயிராத எந்தப் பொருளுமே—விலை என்னவாக இருந்தாலும்—மலிவு அல்ல.
கடையில் பணம் செலுத்தும் இடம் கடந்து வெளியே வரும்போது, உங்கள் கவனத்தைச் சிதறவிடாதீர்கள். நீங்கள் பல கண்ணிகளைக் கடந்து வந்திருக்கக்கூடும், ஆனால் இப்பொழுது நீங்கள் வகையாக மாட்டிக்கொண்டீர்கள்—வரிசையில் காத்திருக்க வேண்டும். உங்களைக் கவர்ந்திழுக்கக்கூடிய என்ன காரியம் அங்கு இருக்கிறது? ஏன், இனிப்புகளும், பத்திரிகைகளும், பிள்ளைகள் கைநீட்டி எடுத்துக்கொள்ளும் தூரத்தில் வைக்கப்பட்டிருக்கும் விளையாட்டுச் சாமான்களும் இருக்கின்றன. ஒன்றை உங்களுடைய பையில் திணித்துவிட நீங்கள் பார்க்கிறீர்கள், ஆனால் தாமதமாகிவிட்டது. அவற்றிற்கு ஏற்கெனவே பணத்தை செலுத்தியிருப்பீர்கள், அல்லது அடம்பிடிக்கும் உங்கள் பிள்ளையைச் சமாளிக்க வேண்டியதாயிருக்கும். கடைக்கு வெற்றி!
ஆனால் நீங்கள் வெற்றிபெறலாம். கடையில் பொருட்களை வாங்கி வருவதில் திறமைசாலிகள் தங்களுடைய வரவுசெலவு திட்டத்தின் கட்டுக்குள் தங்களை வைத்துக்கொள்வதுமட்டுமல்லாமல், பொருட்களை வாங்கும் போது பணத்தை மிச்சப்படுத்துகிறவர்களாயும் இருப்பார்கள். பொருட்களை வாங்குவதில் உங்களுடைய திறமையை முன்னேற்றுவிக்கக்கூடுமா? பொருட்களை வாங்கும் காரியத்தில் ஒவ்வொரு வாரமும் புதிய வழிகளைக் கண்டுபிடிப்பவர்களாயும் பணத்தை மிச்சப்படுத்துகிறவர்களாயும் இருப்பதை ஏன் உங்கள் குறிக்கோளாக வைத்துக்கொள்ளக் கூடாது? உங்களுடைய குடும்பமும் நீங்களும் பலன் பெறுவீர்கள். (g88 2⁄22)
[பக்கம் 29-ன் பெட்டி/படம்]
உங்களுக்குத் தெரியுமா?
அவசியமான பொருட்கள் பொதுவாக பணம் செலுத்தும் இடத்திற்குத் தூரமாக வைக்கப்பட்டிருப்பதற்குக் காரணம் என்ன?
பிள்ளைகளுக்குப் பெற்றோர் பொருட்களை வாங்கிக்கொடுக்கும்படிச் செய்திட கடைகள் பிள்ளைகளுக்கு எப்படி உதவுகின்றன?
மருத்துவர் எழுதும் மருந்துகளை வாங்குவதில் நீங்கள் எவ்விதம் பணத்தை மிச்சப்படுத்தலாம்?
[பக்கம் 30-ன் படம்]
மிக அதிக விலையுள்ள பொருட்கள் பொதுவாகப் பார்வை மட்டத்தில் காணப்படுகின்றன, எனவே மேல் வரிசையிலும் கீழ் வரிசையிலும் வைக்கப்பட்டிருக்கும் பொருட்களின் விலையோடு ஒப்பிட்டுப்பாருங்கள்