இளைஞர் கேட்கின்றனர்
“உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக”—ஆனால் ஏன்?
“நான் உன்னை ஒன்றும் செய்யமுடியாதளவுக்கு உன் தலைகனம் கூடிவிட்டது,” என்றார் சலித்து நின்ற வேதாவின் தந்தை. “நீ என்னை மதிப்பது கிடையாது. தொந்தரவைத் தேடிக்கொள்கிறாய்.” போதை மருந்துகளையும் மதுபானத்தையும் துர்ப்பிரயோகம் செய்த ஒரு பையனை அவள் காதலித்தாள். அடிக்கடி டிஸ்கோ நிகழ்ச்சிகளில் அதிகாலை வரை கலந்துகொண்டாள். அதற்கு அவளுடைய தந்தை பலமாக எதிர்ப்பு தெரிவித்தபோதிலும் வேதா அக்கறை காண்பிக்கவில்லை.
“அவர் அளவுக்கு மிஞ்சி கண்டிப்பாக இருக்கிறார் என்பதாக உணர்ந்தேன்,” என்று விளக்கினாள் வேதா. “அந்தச் சமயத்தில் எனக்கு 18 வயது, நான் வளர்ந்துவிட்டேன், எனக்கு எல்லாமே தெரியும் என்று நினைத்தேன். என்னுடைய தந்தை குறுகிய நோக்குடையவர். நான் நல்ல சமயங்களைக் கொண்டிருக்க விரும்புவதில்லை என்று உணர்ந்ததால் நான் வெளியேறி என் விருப்பப்படி நடந்து கொண்டேன்.”
ஜினா என்னும் மற்றொரு இளம் பெண் எழுதினாள்: “என்னுடைய தந்தை அவ்வளவு அதிகமாகக் குடித்தார், எனவே என்னுடைய பெற்றோர் சத்தம்போட்டு சண்டை பண்ணினதால் நான் தூங்க முடியாமல் இருந்தது. நான் படுக்கையில் படுத்தவண்ணம் அழுதுகொண்டிருந்தேன். அதைக் குறித்து நான் எப்படி உணர்ந்தேன் என்பதை அவர்களிடம் சொல்லமுடியாத நிலை, ஏனென்றால் என்னுடைய தாய் ஒருவேளை என்னை அடிக்கக்கூடும். ‘உன்னுடைய தகப்பனை கனம்பண்ணுவாயாக,’ என்று பைபிள் சொல்லுகிறது. ஆனால் என்னால் அதைச் செய்ய முடியவில்லை.”
ஒரு வேளை, வேதா, ஜினாவைப் போல நீ உன்னுடைய பெற்றோரைக் கனம்பண்ணுவது கடினமாக இருப்பதைக் காணக்கூடும். ஒருவேளை நீ நியாயமற்றது என்று உணரும் காரியத்தை அவர்கள் உன்னிடம் எதிர்பார்க்கக்கூடும். அல்லது அவர்கள் நடத்தையில் கெட்ட மாதிரியாக இருக்கக்கூடும். என்றபோதிலும் பைபிளின் தெளிவான கட்டளை: “உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக.”(எபேசியர் 6:2) இது எதை உட்படுத்துகிறது? பெற்றோர் தங்களைக் கனம்பண்ணுவதைக் கடினமாக்கினாலும் அப்படிச் செய்வதற்கு நல்ல காரணங்கள் இருக்கின்றனவா?
“கனம் பண்ணுவது” எதை அர்த்தப்படுத்துகிறது?
“கனம் பண்ணுவது” உரிய வகையில் அமையும் அதிகாரத்தை அங்கீகரித்தலை உட்படுத்துகிறது. உதாரணமாக “ராஜாவைக் கனம்பண்ணுங்கள்,” என்று கிறிஸ்தவர்கள் கட்டளையிடப்படுகிறார்கள். (1 பேதுரு 2:17) நீங்கள் ஒருவேளை ஒரு தேசிய ஆட்சியாளருடைய கருத்துக்களை எல்லா சமயத்திலும் ஒப்புக்கொள்ளாத போதிலும், அவருடைய ஸ்தானம் அல்லது அவர் வகிக்கும் பதவிக்கு மதிப்பு கொடுக்க வேண்டும். குடும்ப வட்டாரத்தில், கடவுள் பெற்றோருக்குத் தம்முடைய பிரதிநிதிகளாக சில அதிகாரத்தை அளித்திருக்கிறார். எனவே, தேவபக்தியுடைய பிள்ளைகள் அந்த அதிகாரத்தைக் கனம்பண்ண வேண்டும். ஆனால் பிள்ளைகள் மேலோட்டமான மரியாதையைவிட அதிகத்தைக் காண்பிக்க வேண்டும்.
பைபிளில் “கனம்பண்ணுதல்” என்று பயன்படுத்தப்பட்டிருக்கும் கிரேக்க வினைச்சொல் அடிப்படையில் ஒருவரை அதிக மதிப்புடன் நோக்குவதை அர்த்தப்படுத்துகிறது.எனவே ஒரு பெற்றோர் விலையேறப்பெற்ற ஒருவராக, உயர்வாக மதிக்கப்பட்டவராக, உங்களுக்கு அதிகப் பிரியமானவராக நோக்கப்படவேண்டும். அவர்களிடம் அனல்கொண்ட, போற்றுதல் உணர்வுகளைக் காண்பிப்பதை உட்படுத்துகிறது. ‘ஆனால் அவர்கள் என்னிடம் அவ்வளவு கடுமையாக நடந்துகொள்ளும்போது, நான் எப்படி அவ்விதம் உணரமுடியும்?’ என்று கேட்கிறாய்.
உன்னுடைய பெற்றோரை நீ ஏன் கனம்பண்ணவேண்டும்?
ஒரு கரணம் நீதிமொழிகள் 23:22 சொல்லுகிறது: “உன்னைப் பெற்ற தகப்பனுக்குச் செவிகொடு; உன் தாய் வயது சென்றவளாகும்போது அவளை அசட்டைப்பண்ணாதே.” உலகமுழுவதும் ஆண்டுதோறும் ஏறக்குறைய 5.5 கோடி கருச்சிதைவுகள் செய்யப்படுகின்றன. உன்னுடைய பெற்றோர் உன்னைப் பிறக்க அனுமதித்தனர் என்ற உண்மைதானே அவர்களைக் கனம்பண்ணுவதற்கு ஒரு காரணமாகும். ஒரு சமயத்தில் அதிக மரியாதைக் கொடுக்காமல் நடந்துகொண்ட கிரெகரி இந்தக் காரியத்தை உணர ஆரம்பித்தான். “என்னுடைய தாய் எனக்குச் செய்த எல்லாவற்றையும் நான் புரிந்துகொள்ள ஆரம்பித்தேன்.” என்று அவன் ஒப்புக்கொள்கிறான். “அவள் என்னைக் கருவிலேயே அழித்துவிடவில்லை, அல்லது குழந்தையாக ஒரு குப்பைத்தொட்டியில் போட்டுவிடவில்லை என்பதற்காக நான் நன்றியுள்ளவனாயிருக்கிறேன். அவள் ஒற்றைப் பெற்றோராயிருந்தாள், நாங்கள் ஆறுபேர். அது அவளுக்கு அதிகக் கஷ்டமாக இருந்திருக்கும் என்பது எனக்குத் தெரிகிறது.”
பிள்ளைகளை வளர்ப்பது “கஷ்டம்” மட்டுமல்ல, ஆனால் அதிக செலவை உட்படுத்துவதாயும் இருக்கிறது. ஒரே பிள்ளைகளையுடைய பெற்றோரில் இருவரும் சேர்ந்து ஒரு பிள்ளையை 18 வயது வரை வளர்ப்பது குறைந்தபட்சம் $66,400 (ரூ. 9,65,000) செலவாகிறது என்று கானடா தேசத்து அறிக்கை ஒன்று காண்பிக்கிற! உனக்கு உணவையும் உடையையும் கொடுப்பதற்கு உன் பெற்றோரின் சுய தியாகத்தை எண்ணிப்பார். “ஒரு சமயத்தில் எங்களிடம் இருந்ததெல்லாம் ஒரு பை தானியமும் கொஞ்சம் கூலநொய்யுமே,” என்று விவரிக்கிறான் கிரெகரி. “என்னுடைய தாய் அதைப் பிள்ளைகளுக்காக வைத்துவிட்டாள், ஆனால் அவளோ சாப்பிடவில்லை. நான் வயிறு நிறைந்தவனாய்ப் படுக்கைக்குச் சென்றேன். ஆனால் அம்மா ஏன் சாப்பிடவில்லை என்று எனக்குள் யோசனைசெய்தேன். இப்பொழுது நான் ஒரு குடும்பஸ்தனாக இருப்பதால், அவள் எங்களுக்காகத் தன்னைத் தியாகம் செய்தாள் என்பதை உணருகிறேன். என்னுடைய பிள்ளைக்காக நான் என் உணவை விட்டுக்கொடுப்பேனோ என்று நான் யோசிக்கிறேன். அவள் எப்படிச் செய்தாள் என்பதை என்னால் ஊகிக்க முடியவில்லை.”
நீ வியாதியாயிருக்கும்போது உன்னுடைய பெற்றோருங்கூட உனக்காக இராப்பகலாக தூக்கமில்லாமல் இருந்தார்கள் என்பதில் சந்தேகமில்லை. துவைப்பதற்காக நீ ஈரம்பண்ணின துணிகளும் அழுக்குத் துணிகளும் நூற்றுக்கணக்கிலிருந்தன. தாங்கள் மறுபடியும் அவற்றைச் செய்ய முடிந்தால், தாங்கள் எத்தனைப் பிள்ளைகளைக் கொண்டிருக்க விரும்புவார்கள் என்று 2,00,000 அமெரிக்கரைக் கேட்டபோது, “அதே எண்ணிக்கையைக் கொண்டிருப்போம்,” என்று 54 சதவிகித பெற்றோர் கூறினார்கள்! 6 சதவிகிதத்தினர்தான், “ஒருவரும் அல்ல.” என்றனர்.
எனவே உன்னுடைய பெற்றோர் உனக்கு உயிர் கொடுத்து உன்னைக் கவனித்துவந்தனர். அவர்கள் நிச்சயமாகவே உன்னுடைய மரியாதைக்கும் கனத்துக்கும் பாத்திரர்.
பிரச்சினையான பெற்றோர்கள்
உன்னுடைய பெற்றோர் கெட்ட மாதிரியுள்ளவர்களாக இருப்பார்களானால், ஒருவேளை கடுங் கோபக்காரர்களாக இருப்பார்களானால், குடிகாரர்களாக, அல்லது ஒழுக்கங்கெட்டவர்களாக இருப்பார்களானால், அப்பொழுது என்ன? தனால் நீ கஷ்டப்படுவாய் என்பது புரிந்துகொள்ளத்தக்கது. அப்படிப்பட்ட பெற்றோரை நீ எவ்விதம் கனம்பண்ணலாம்?”
அபூரண ஆட்களாக, உன்னுடைய பெற்றோருக்குக் கவலைக்கிடமான பிரச்சினைகள் அல்லது ஆள்தன்மையில் குறைபாடுகள் இருக்கக்கூடும். (பிரசங்கி 7:20) என்றபோதிலும் அவர்களுடைய குறைபாடுகள் மத்தியிலும், உன்னுடைய வாழ்க்கை மீது கடவுள் அவர்களுக்கு ஓரளவு அதிகாரத்தைக் கொடுத்திருக்கிறார். நீ அவர்களுடைய அதிகாரத்தைக் கனம்பண்ண வேண்டும் என்பதை அவர் உன்னிடமிருந்து எதிர்பார்க்கிறார். ஆட்சியாளர்களுக்கும் கொடுக்க வேண்டிய கனத்தை கொடுக்க வேண்டும் என்று கடவுள் சொன்னதை நினைவில் வைத்துக்கொள். (ரோமர் 13:7) அவர்களுடைய நடத்தையைக் கடந்து நோக்குவதை, அவர்கள் வகிக்கும் பங்கை அல்லது அவர்களுடைய ஸ்தானத்தை நோக்குவதையே இது உன்னிடத்தில் தேவைப்படுத்துகிறது. எனவே பெற்றோர் தன்னுடைய அதிகாரத்தை துர்ப்பிரயோகம் செய்கிறார்கள் என்று நீ உணர்வதால் மரியாதையில்லாமல் நடந்துகொள்வதைப் பார்க்கிலும், பொறுமையாயிருக்க முயலவேண்டும். (பிரசங்கி 10:4-ஐ ஒப்பிடவும்.) காரியத்தைக் கடவுளுடைய கரத்தில் ஒப்படைத்துவிடு, ஏனென்றால் “அநியாயஞ்செய்கிறவன் தான் செய்த அநியாயதத்துக்கேற்ற பலனை அடைவான்; பட்சபாதமே இல்லை”—கொலோசெயர் 3:25.
உன்னுடைய பெற்றோர் உன்னுடைய தேவைகளைப் பூர்த்திசெய்துவரும்வரை அவர் குடும்பத்துக்குப் பொறுப்புள்ளவராகிறார் என்ற உண்மையை மறந்துவிடக்கூடாது. பிரசங்கி 8:3, 4 கூறுகிறது: “அவன் (அதிகாரமுடையவன்) தனக்கு இஷ்டமானதெல்லாம் செய்வான். ராஜாவின் வார்த்தை எங்கேயோ, அங்கே அதிகாரம் உண்டு.” அதை எதிர்ப்பது வெற்றி இல்லை என்ற நிலையில் உன்னை வைத்து விடும்.
என்றபோதிலும் நீ கசந்துகொள்ளும் தன்மையை வளர்ப்பதை எப்படித் தவிர்க்கிறாய்? உன்னுடைய பெற்றோர் ஏன் அப்படி நடந்துகொள்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள முயற்சி செய். உதாரணமாக உணர்ச்சியற்ற ஒரு தாயையும் குடிகார மாற்றாந் தந்தையையுமுடைய போடி பின்வருமாறு எழுதினாள்: “என்னுடைய தாய் ஒருவேளை எங்களிடம் அன்பு காண்பிக்காமலேயே இருந்ததற்குக் கரணம், கடுமையாக அடிக்கப்பட்டு வளர்ந்த பிள்ளையாக, அவள் எப்படி அன்புகாட்டவேண்டும் என்று கற்பிக்கப்படவில்லை. என்னுடைய மாற்றாந்தந்தை குடிக்காதிருக்கும்போது எங்களுடைய செயல்களில் அக்கறை காண்பித்தார், ஆனால் அநேக சமயங்களில் அந்த நிலை இல்லை. என்றபோதிலும் என்னுடைய தங்கைக்கும் எனக்கும் எல்லா சமயத்திலும் ஒரு கூரை இருந்தது. குளிர்சாதனப் பெட்டியில் உணவு இருந்தது.” இப்படியாக தன்னுடைய பெற்றோரைக் கனம்பண்ணுவதில் தன்னாலானதைச் செய்தாள் என்ற காரியத்தில் டோடியின் மனச்சாட்சி தெளிவாயிருந்தது.
ஒருவருக்கு மரியாதை காண்பிப்பது என்பது, அவருடன் நீ ஒத்துச்செல்ல வேண்டும் என்பதை அவசியமாக அர்த்தப்படுத்துவதில்லை. “ராஜாவின் கட்டளையைக் கைக்கொண்டு நட,” என்று பிரசங்கி 8:2 ஆலோசனைக் கூறுகிறது. பிறப்பிக்கப்படும் உத்தரவு கடவுளுடைய சட்டத்தை மீறாதிருக்கும் வரையில், அதைக் கனம்பண்ணுவதன் மூலம் கடவுளுக்கு உன்னுடைய அன்பைக் காண்பி. “உங்களைப் பெற்றாருக்கு எல்லாக் காரியத்திலேயும் கீழ்ப்படியுங்கள்; து கர்த்தருக்குப் பிரியமானது.”—கொலோசேயர் 3:20
மேலும், பெற்றோரின் மாதிரி கெட்டதாக இருந்தாலும், அவர்கள் சொல்லுவது எல்லாமே தவறானது என்ற முடிவுக்கு வந்துவிடாதே. இயேசு கிறிஸ்துவின் நாட்களில் போதிப்பதற்கான அதிகாரத்தைக் கொண்டிருந்த மதத் தலைவர்கள் அதிக மோசமாகிவிட்டார்கள். என்றாலும், இயேசு ஜனங்களிடம் இப்படியாகச் சொன்னார்: “நீங்கள் கைக்கொள்ளும்படி அவர்கள் உங்களுக்கு சொல்லுகிற யாவையும் கைக்கொண்டு செய்யுங்கள், அவர்களின் செய்கையின்படியோ செய்யாதிருங்கள்.” (மத்தேயு 23: 1-3, 25, 26) கடவுளுடைய வார்த்தையிலிருந்து கொடுக்கப்படும் ஆலோசனையை மதிப்பதன் மூலம், மக்கள் கடவுளால் ஆசீர்வதிக்கப்படுவார்கள் உன்னுடைய பெற்றோரின் தெய்வீக புத்திமதியைக் கனம்பண்ணுவதன் மூலம் இது உன்னுடைய விஷயத்திலும் உண்மையாக இருக்கலாம்.
‘என்னுடைய தந்தை சொன்னது சரியே’
கடைசியில் வேதா தன்னுடைய பெற்றோரிடமாகத் தன் மனப்பான்மையை மாற்றிக்கொண்டாள். ஆனால் அதை அவள் கடினமான வழியில் கற்றுக்கொண்டாள். மரிஹூவானாவும் பியரும் அருந்தி போதையின் உச்சியிலிருந்த தன்னுடைய காதலனுடன் காரில் செல்லும்போது அது கட்டுப்பாட்டை இழந்து ஓடியது. மணிக்கு 60 மைல் வேகத்தில் போய்க்கொண்டிருந்த அந்தக் கார் ஒரு மின் கம்பத்தில் மோதி, வேதாவுக்கு நெற்றியில் ஓர் ஆழமான காயத்தை ஏற்படுத்தியது. அவன் அந்த இடத்திலிருந்து ஓடிவிட்டான், அதற்குப் பின்பு அவளுக்கு உதவியளிக்க மருத்துவமனைக்குக்கூட வரவில்லை.
“என்னுடைய பெற்றோர் என்னைப் பார்ப்பதற்கு மருத்துவமனைக்கு வந்தபோது, என்னுடைய தந்தை சொன்னது எல்லாமே சரி, நான் வெகு காலத்துக்கு முன்பாகவே அவருக்குச் செவிகொடுத்திருக்க வேண்டும் என்று நான் அவர்களிடம் சொன்னேன்,” என்று அறிக்கையிட்டாள். அந்தச் சமயத்திலிருந்து வேதா தன்னுடைய பெற்றோரைக் கனம்பண்ண தீர்மானமாயிருந்தாள். “அது அவ்வளவு எளிதாக இருக்கவில்லை,” என்று ஒப்புக்கொண்டாள். “ஏனென்றால் நான் டிஸ்கோ களியாட்டங்களுக்குச் செல்ல விரும்பினேன், வீட்டில் இருப்பது எனக்குப் போரடித்தது. ஆனால் நான் கடவுளைப் பிரியப்படுத்த விரும்பினேன். நான் பெரியதோர் தவறைச் செய்தேன் அது என்னுடைய உயிரையே உட்படுத்தினது. எனவே என்னுடைய எண்ணத்தில் மாற்றம் செய்துகொள்ள எனக்கு உதவும்படியாக நான் யெகோவாவிடம் ஜெபித்தேன்.”
வேதா ஒரு முக்கியமான பாடத்தைக் கற்றுக்கொண்டாள்—தகுந்த அதிகாரத்தை மதிக்க வேண்டும். இந்தக் காரியத்தைக் கற்றுக்கொள்ள தவறினதுதானே அநேகரை பள்ளிப்பருவத்திலும், நல்ல வேலையைக் கொண்டிருப்பதிலும், அல்லது சந்தோஷமுள்ள விவாகத்தைக் கொண்டிருப்பதிலும் வெற்றிகாண்பதிலிருந்து தடைசெய்திருக்கிறது. “சுலபமாயிருந்த சமயங்களிலும் என்னுடைய தந்தையை மதிக்கக் கற்றுக்கொண்டது, என் கணவருக்குக் கீழ்ப்பட்டிருக்க நிச்சயமாகவே உதவியது,” என்று இப்பொழுது மகிழ்ச்சியான விவாக வாழ்க்கையைக் கொண்டிருக்கும் வேதா வெளிப்படுத்தினாள். ஆம், மற்றவர்களுடன் சந்தோஷமான உறவுகளும் கடவுளிடமாக நல்மனச்சாட்சியும் உன்னுடைய பெற்றோரை கனம்பண்ணக் கற்றுக்கொள்வதன் நற்பலன்களாகும் (g88 4/8)
[அடிக்குறிப்புகள்]
ஓர் இளைஞன் சரீரப்பிரகாரமாக அல்லது பாலுறவு சம்பந்தமாக துர்ப்பிரயோகம் செய்யப்படும் அந்த முழுவதுமாக பொறுக்க இயலாத நிலைமைகளுக்கு இந்தக் கட்டுரைப் பொருந்துவதில்லை. இப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில், ஒரு பிள்ளை வீட்டுக்கு வெளியே வல்லுநர்களின் உதவியை பெற வேண்டியதாக இருக்கலாம். எமது 1981, பிப்ரவரி 8 ஆங்கில வெளியீட்டில் “முறைத்தகாப் புணர்ச்சி-மறைவான குற்றச் செயல்” பார்க்கவும்.
[பக்கம் 23-ன் படம்]
கடந்த ஆண்டுகளினூடே உன்னுடைய பெற்றோர் உனக்குச் செய்த எல்லாவற்றையும் எண்ணிப்பார்ப்பது அவர்களைக் கனம்பண்ண உன்னைத் தூண்டிட வேண்டும்.