இளைஞர் கேட்கின்றனர். . .
நான் எவ்விதமாக ‘என் தாயையும் என் தகப்பனையும் கனம் பண்ண’ முடியும்?
‘உன் பெற்றோரோடு உனக்கிருக்கும் உறவை சேதப்படுத்தும் வகையில் நீ செய்யும் ஒரு காரியத்தைக் குறிப்பிடு.’ 160 இளைஞர்களிடம் இந்தக் கேள்வி கேட்கப்பட்டது. சுமார் 43 சதவிகித பையன்கள், “[பெற்றோரை] மரியாதையுடன் நடத்தத் தவறுவது” என்பதாக குறிப்பிட்டிருந்தார்கள். பெண்களில் 42 சதவிகிதத்தினர் தங்கள் ‘தகப்பனை அசட்டை செய்வதாகவும்’ 63 சதவிகிதத்தினர் தங்கள் ‘தாயை எதிர்த்துப் பேசுவதாகவும்’ அல்லது மற்ற விதங்களில் கீழ்ப்படியாமலும் வாய் வார்த்தைகளால் திட்டுவதாகவும் குறிப்பிட்டிருந்தார்கள். என்றபோதிலும், இந்த இளைஞர்களில் பெரும்பாலானோர் தங்கள் பெற்றோருக்கு ‘மனமகிழ்ச்சியைத்’ தருவதும் அவர்களோடு ஒத்துழைப்பதும் தங்களின் ஒரு கடமையாக இருப்பதை ஒப்புக்கொண்டனர். ஆனால் நல்லெண்ணங்களின் மத்தியிலும், அவர்கள் அநேகமாக தவறிவிடுகின்றனர்.
பெற்றோரை கனம் பண்ணும்படியான பைபிள் கட்டளையை பின்பற்ற நீ உண்மையில் விரும்பினாலும்கூட, நீ அதைச் செய்யாத நேரங்கள் இருப்பதை நீ அறிவாய். படுகுழிகளை எவ்விதமாக நீ தவிர்க்கலாம்?—எபேசியர் 6:2.
சரியான மனநிலை
உன் பெற்றோரை நீ இரண்டு விதங்களில் பார்க்கலாம். நீதிமொழிகள் 30:17, “தகப்பனைப் பரியாசம் பண்ணி, தாயின் கட்டளையை அசட்டை பண்ணுகிற கண்ணைப்”பற்றி பேசுகிறது. மறுபட்சத்தில், “பிள்ளைகளின் பிள்ளைகள் முதியோருக்குக் கிரீடம்” என்று நீதிமொழிகள் 17:6 சொல்கிறது. ஆகவே உன் பெற்றோரை ஏளனஞ் செய்வதற்குரிய அல்லது இகழ்ச்சிக்குரிய ஒருவராக அல்லது நீ பெருமையடையக்கூடிய, உன் மகிமைக்குரியவராக கருதலாம். நீ தேர்ந்தெடுக்கும் கருத்து, அந்த நபருக்கு மரியாதை கொடுப்பாயா மாட்டாயா என்பதை தீர்மானிப்பதாக இருக்கும்.
“ஆனால் ஒருவருடைய பெற்றோர் மதிப்புக்குத் தகுதியுள்ளவர்களாக இல்லாதபோது எவ்விதமாக மரியாதை உணர்ச்சி ஏற்படமுடியும்” என்பதாக லூஸி என்ற பெயருள்ள ஓர் இளம் பெண் எழுதினாள். அவர்களிலுள்ள நல்ல குணாதிசயங்களைத் தேடி, அவைகளைப் போற்றி, அவற்றின் மீது கவனத்தை ஊன்ற வைக்க வேண்டும் என்பதே பதிலாக இருக்கிறது. குடும்ப அங்கத்தினர்களுக்குப் போற்றுதலை காண்பிப்பதே பலமான ஒரு குடும்பத்தின் முக்கிய குணாதிசயங்களில் ஒன்றாக இருப்பதை ஆய்வாளர்கள் நிக் ஸிடினெட்டும் ஜான் டிஃரேயினும் கண்டுபிடித்தார்கள். “போற்றுதலை வெளியிடுவதில் நமக்கிருக்கும் பிரச்னைக்குக் காரணம், நாம் நல்ல சுரங்க தொழிலாளிகளாக இருக்க இன்னும் கற்றுக் கொள்ளவில்லை” என்பதாக அவர்கள் பலமான குடும்பங்களின் இரகசியம் என்ற தங்கள் புத்தகத்தில் விளக்கியிருக்கிறார்கள். “தென் ஆப்பிரிக்க வைர சுரங்க தொழிலாளிகள் ஒரு சில வைர கற்களைத் தேடி ஆயிரக்கணக்கான டன்கள் கற்பாறைகளையும் புழுதியையும் சலித்தெடுப்பதில் தங்கள் வேலை நேரத்தைச் செலவிடுகிறார்கள். அநேக சமயங்களில் நாம் இதற்கு எதிர்மாறாகவே செய்கிறோம். நாம் வைரக் கற்களை சலித்து புழுதிக்காக ஆவலாகத் தேடுகிறோம். நம்முடைய பலமான குடும்பங்கள் வைர நிபுணர்களாக இருக்கிறார்கள்.”
ஒவ்வொரு நபரும் நல்ல குணங்களையும் சாதனைகளையுமுடையவராக இருக்கிறார். நீ நல்லதை தேடுவாயானால் அதை நீ காண்பாய். ‘வைரக்கற்களை கண்டுபிடிப்பதன்’ மூலம் உன் பெற்றோரை கனம் பண்ணுவதற்குக் காரணங்களை நீ காணக்கூடியவனாய் இருப்பாய்.
ஆனால் உன் பெற்றோரைப் பற்றிய சரியான நோக்குநிலை உன்னைப் பற்றிய சரியான நோக்குநிலையில் ஆரம்பமாகிறது. உன்னில் நீ விரும்பத்தக்கப் பண்புகளை காணாவிட்டால் வேறு ஒருவரைப் பற்றிய விரும்பத்தக்க பண்புகளை காண்பது கடினமாகும். முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களுக்கு அப்போஸ்தலனாகிய பவுலின் புத்திமதி வருமாறு: “உங்களில் எவனானாலும் தன் மெய்யான மதிப்பைக் குறித்து எண்ணவேண்டியதற்கு மிஞ்சி எண்ணாமல், தெளிந்த புத்தியோடே தன்னை மதிப்பிடக் கடவன்.”—ரோமர் 12:3, சார்லஸ் பி. வில்லியம்ஸ்.
நீ பெருமை கொள்ளக்கூடாது என்றாலும் உன் “மெய்யான மதிப்பை” கவனிக்கத் தவறுவதன் மூலம் அதற்கு நேர் எதிராகவும் சென்றுவிடுவதைத் தவிர்த்திட வேண்டும். உன் நடத்தைக்குப் பைபிளில் உறுதியான ஆதாரமிருக்குமென்றால், உன்னுடைய பகுத்துணர்வைக் குறித்து நீ நம்பிக்கையோடிருக்கலாம். ஏனென்றால் “யெகோவாவுடைய சாட்சி சத்தியமும் பேதையை ஞானியாக்குகிறதுமாயிருக்கிறது.” (சங்கீதம் 19:7) இப்படிப்பட்ட நம்பிக்கை, மற்றவர்கள் உன்னை மரியாதைக் குறைவாக நடந்துக் கொள்ளும்படிச் செய்வதை தடை செய்வதாக இருக்கும்.
மரியாதையான பேச்சு
உன் பெற்றோரிடம் என்ன சொல்கிறாய், அதை எப்படிச் சொல்கிறாய் என்பதன் மூலம் அவர்களுக்கு மரியாதை காண்பிக்கப்படுகிறது. எல்லாம் சுமுகமாக இருக்கையில் இது பொதுவாக ஒரு பிரச்னையாக இருப்பதில்லை. ஆனால், சில சமயங்களில், உன் பெற்றோர் உன் உணர்ச்சிகளை புண்படுத்தும் வகையில் எதையாவது சொல்லவோ அல்லது செய்யவோக்கூடும். மேலுமாக பருவ வயது வருடங்களின் போது மனதைக் குழப்புகின்ற பல உணர்ச்சிகள் உன் மீதே உன்னை கோபங்கொள்ளச் செய்யக்கூடும். ஏமாற்றங்களும் இழப்புணர்வுகளும் அல்லது காட்டிக் கொடுத்தலும், பயமும் மாபெரும் உணர்ச்சிப்பூர்வமான சுமையாகிவிடக்கூடும். இப்படிப்பட்ட பாரமான தொந்தரவுகளின் காரணமாக, யோபுவைப் போலவே நீ பிரதிபலிக்கக்கூடும்: “ஆகையால் என் சொந்த வார்த்தைகள் மூர்க்கமான பேச்சாக இருந்தது.”—யோபு 6:1–3.
ஆனால் “மூர்க்கமான பேச்சு” அவமதிப்பானதாக இருக்கக்கூடும். “சில சமயங்களில் ஒரு பிரச்னையைப் பற்றி நான் அம்மாவிடம் பேசும் போது, என் குறிப்பை அவள் புரிந்துக் கொள்ளாமல் இருந்தால் நான் எரிச்சலடைந்து அவளை புண்படுத்திவிடுவேன். அவளை பழிவாங்குவதற்கு நான் மேற்கொண்ட வழியாக இது இருந்தது” என்பதாக 22 வயது ரோஜர் ஒப்புக் கொண்டான். “ஆனால் நான் அவ்விடத்தைவிட்டு எட்டப் போகையில், எனக்கு வருத்தமாக இருக்கும். அவளுக்கும்கூட மனதுக்கு கஷ்டமாக இருக்கும் என்பதை நான் அறிந்திருக்கிறேன்.”
யோசனையில்லாமல் பேசிய வார்த்தைகள் ‘குத்தியதையும்’ ‘வருத்தத்தை உண்டு பண்ணியதையும்’ ரோஜர் கண்டான். ஆனாலும் அது எந்த பிரச்னையையும் தீர்க்கவில்லை. “ஞானமுள்ளவர்களுடைய நாவோ ஒளஷதம்” என்பதாக பைபிள் சொல்வதை அவன் அறிந்திருந்தான். (நீதிமொழிகள் 12:18; 15:1) “அது கடினமாக இருந்த போதிலும் நான் திரும்பப் போய் மன்னிப்புக் கேட்பேன்” என்பதாக ரோஜர் விளக்கினான். “யெகோவாவின் பார்வையில் செய்வதற்கு இதுவே மிகச் சிறந்தக் காரியம் என்பது எனக்கு தெரிந்திருந்தது. பிறகு அதிக அமைதியாக என் பிரச்னையை கலந்து பேசி அதை நாங்கள் தீர்த்துவிடுவோம்.” ஆம் பொருத்தமாக மன்னிப்புக் கேட்பது, நீ உன் பெற்றோரை கனம் பண்ண உண்மையில் விரும்புகிறாய் என்பதைக் காண்பிக்கிறது.
அவமதிப்பான பேச்சு பொதுவாக கோபத்தினால் கட்டுக்கடங்காமல் போய்விடுவதால், அழிவுண்டாக்கும் சாத்தியமான இந்த உணர்ச்சிகளை சரியாக கையாள நீ கற்றுக்கொள்வது இன்றியமையாததாகும். “மூடன் தன் கோபத்தையெல்லாம் வெளிப்படுத்துகிறான்; ஞானியோ அதை அடக்கிவைக்கிறான்” என்கிறது நீதிமொழிகள் 29:11. (புதிய சர்வ தேசீய மொழிபெயர்ப்பு) இதன் காரணமாக, நீ கோபமாயிருந்தால் உன் உணர்ச்சிகள் அடங்கும்வரை காத்திருந்து, பின்னர் அமைதியாக பேசுவதற்கு முயற்சி செய். ஆனால் மரியாதையாக பேச பழகிக் கொள்வது என்பது வெறுமென ‘பத்துவரை எண்ணுவதைக்’ காட்டிலும் அதிகத்தை அர்த்தப்படுத்துகிறது.
விவேகத்துக்கான தேவை
“மனுஷனுடைய விவேகம் அவன் கோபத்தை அடக்கும்; குற்றத்தை மன்னிப்பது அவனுக்கு மகிமை” என்கிறது நீதிமொழிகள் 19:11. “விவேகம்” என்பதற்குரிய மூல எபிரெய வார்த்தை ஏதாவது ஒரு காரியத்துக்கு “காரணத்தை அறிந்திருப்பது” என்பதற்கு கவனத்தை திருப்புகிறது. ஆகவே விவேகம், உடனடியாக எதிர்ப்படுகின்றவற்றிற்கு அப்பால் பார்க்க உனக்கு உதவி செய்யும்.
உதாரணமாக, ஏதாவது ஓர் இடத்துக்குச் செல்ல உன் பெற்றோர் உன்னை அனுமதிக்க மறுத்தால், ‘என் பெற்றோர் என்னுடைய மிகச் சிறந்த அக்கறைகளைப்பற்றி சிந்தித்துக் கொண்டிருக்கிறார்களா? நான் அங்கு செல்லாவிட்டால் உண்மையில் அது என்ன வித்தியாசத்தை உண்டுபண்ணப் போகிறது? முக்கியமாக புண்படுவது என்னுடைய பெருமை அல்லது “நான்” என்ற எண்ணமா? நிலைமை ஏமாற்றத்தை தருவதாக இருந்தாலும் உலகமே அஸ்தமித்துவிட்டதா?’ என்று உன்னை நீயே கேட்டுக் கொள். இதைக் குறித்து சிந்தித்துப் பார்த்த பிறகு, உன் வாயை அடக்கி வைப்பதற்கு நல்ல காரணமிருப்பதை உணர்ந்து, எதிர்த்து பேசுவதன் மூலம் மோசமான நிலைமையை இன்னும் அதிமோசமாக்காமல் இருப்பாய்.—நீதிமொழிகள் 10:19; 16:23.
விவேகம் புரிந்து கொள்தலை வளர்க்கிறது. ஏனென்றால், அது அடுத்தவருடைய சூழ்நிலைமைகளை அல்லது பின்னணியைப் பற்றிய அறிவை ஊகித்து உணர உனக்கு உதவி செய்கிறது. (நீதிமொழிகள் 21:11) உதாரணமாக ஒரு பெண் பின்வருமாறு விளக்கினாள்: “என் குடும்பத்தோடு நேரத்தைச் செலவழிப்பது என்றால் எனக்கு எரிச்சலாக இருக்கும். ஆனால் என் அப்பாவின் அம்மா மிகவும் நோய்வாய்பட்ட போது, அவளோடு நாங்கள் அதிகமான நேரத்தைச் செலவிட வேண்டியதாயிருந்தது. அவள் என் அப்பாவிடம் அவரை ஒரு பையனைப் போல பாவித்து பேசினாள். நான் ஒருபோதும் என் வயதில் அவரை நினைத்துப் பார்த்ததில்லை. ஆகவே அவர் கடினமான ஒரு வாழ்க்கையை அனுபவித்திருக்க வேண்டும் என்பதை உணர ஆரம்பித்தேன். அப்போது என்னுடைய சுயநலம் சற்று குறைந்தது. இப்போது வேலைகளைச் செய்யும்படியாக அவர் என்னைக் கேட்கும்போது நான் அவ்வளவு எரிச்சலடைவதில்லை.”
மேலுமாக விவேகம், “பாவங்களை மூடுவதனால்” வரும் அழகைக் காண உனக்கு உதவி செய்கிறது. ஆம், வருத்தத்தை வெளியிடுவதற்கு உனக்கு சரியான காரணம் இருப்பதாக நீ நினைத்தாலும்கூட மற்றவர்களை அனுசரித்துச் செல்லவும் அவர்களை தாராளமாக மன்னிக்கவும் மனமுள்ளவனாயிரு. (கொலோசெயர் 3:13) நீ புண்படுத்தப்படுகையில் பழிவாங்க நினைப்பது இயற்கையாகும். ஆனால் உண்மையில் மன்னிப்பதன் மூலம் பொதுவாக மரியாதைக் குறைவான பேச்சில் அல்லது செயல்களில் முடிவடையும் ஒரு நச்சுச் சூழலை நீ தடுத்து நிறுத்திவிடுகிறாய்.
விசேஷமாக உன் பெற்றோரால் நீ சிட்சிக்கப்படுகையில், உனக்கு விவேகம் அவசியமாக இருக்கிறது. இந்தப் பண்பு திருத்தத்தை ஏற்றுக் கொள்ளவும் அது உன் நன்மைக்காக இருப்பதை மதித்துணரவும் உனக்கு உதவி செய்யும். (சங்கீதம் 2:10-ஐ ஒப்பிடவும்.) வெளிப்படையாகச் சொன்னால், மூடன்தானே “தன் தகப்பன் புத்தியை அலட்சியம் பண்ணுகிறான்.” (நீதிமொழிகள் 15:5) ஆகவே திருத்தம் வழங்கப்படுகையில் கலகஞ்செய்வதற்கோ அல்லது முகத்தை தூக்கி வைத்துக் கொள்வதற்கோ பதிலாக அதைப் பொருத்திப் பிரயோகிக்க முயற்சிபண்ணுவதன் மூலம் உன் பெற்றோரை நீ கனம் பண்ணுவதை காண்பி.
விவேகமானது உன் பெற்றோரின் மனநிலையை உணர்ந்துக் கொண்டு அவர்களுக்கு உதவி செய்ய முயலவும் கூட உனக்குத் துணைபுரியும். ஜாஷ் என்ற பெயருள்ள ஓர் இளைஞன் அவனும் அவனுடைய சகோதரனும் எவ்விதமாக அவர்களுடைய தாயின் மனநிலையை மனதில் வைத்து செயல்பட்டார்கள் என்பதை விளக்குகிறான். “ஒரு நாள் என் அம்மா வேலையிலிருந்து மிகவும் கவலையாகவும் களைப்பாகவும் வீடு திரும்பினாள்” என்று ஜாஷ் விளக்கினான். “இது எங்களுக்குப் பழக்கப்பட்ட ஒன்றாக இருந்தது. ஆகவே நாங்கள்—என் சகோதரனும் நானும்—அவள் வீடு திரும்புவதற்கு முன் வீட்டைச் சுத்தம் செய்து விட்டோம். அவள் மிகவும் மகிழ்ச்சியடைந்தாள்.” நீ இப்படிப்பட்ட கனத்தை உன் பெற்றோருக்குக் காண்பிக்கிறாயா?
கனம் பண்ணுவது உன் பெற்றோரின் தனிமைக்கு மதிப்புக் கொடுப்பதையும்கூட அர்த்தப்படுத்துகிறது. உன் பெற்றோர் தனிமையில் இருப்பது அவசியமாயிருக்கும் சில சமயங்கள் இருக்கின்றன. சில முக்கியமான விஷயங்களை அவர்கள் கலந்து பேசுகையில் நீ கேட்பதை அவர்கள் விரும்பாதிருக்கலாம். அந்த உரிமையை அவர்களுக்குக் கொடு. முக்கியமான விஷயத்தைக் கலந்து பேசுவதில் உன் பெற்றோர் ஈடுபட்டிருப்பதை நீ கண்டால் உன் அறைக்கோ அல்லது ஒரு நண்பரைப் பார்க்கவோ ஏன் செல்லக்கூடாது? இது உன்னை விவேகமுள்ள ஒரு நபராக காண்பிக்கும்.
ஆகவே உன் பெற்றோரை கனம் பண்ணுவதற்குரிய வழிமுறைகளை ஆராய்ந்துப்பார். இப்படியாக கனம் பண்ணுவது பொதுவாக அவர்களோடு உன் உறவை மேம்படுத்துவதாக இருக்கும். அப்படி அது செய்யாவிட்டாலும்கூட நீ கடவுளைப் பிரியப்படுத்துகிறாய் என்பதை அறிந்துக் கொள்வதில் மனநிறைவைக் காண்பாய். இப்படியாக கனம் பண்ணுகையில் “நன்மை உண்டாயிருப்பதற்கும் பூமியிலே உன் வாழ்நாள் நீடித்திருப்பதற்கு” இது வகை செய்யும்—எபேசியர் 6:3. (g88 4⁄22)
[பக்கம் 19-ன் படம்]
உன் உணர்ச்சிகளை புண்படுத்தும் எதையாவது ஒரு பெற்றோர் சொல்கையில் அவமரியாதையான பேச்சைத் தவிர்க்க முயற்சி செய்