உயிர் உறுதியில்லை
ஸ்பேய்ன் “விழித்தெழு!” நிருபர்
நாங்கள் திட்டமிட்டபடி எங்களுக்குப் பழக்கமுள்ள இடத்தில் இறங்குவதற்குச் சுற்றி சுற்றி வந்தும் அந்த இடம் எங்கள் கண்களுக்குத் தென்படவில்லை. நாங்கள் ஏற இறங்க அமைந்த ஓடுபாதை நம்பமுடியாதளவுக்குப் பழுதுபட்டிருந்தது, மற்றும் பயணிகளுக்கான வசதிகளும் எடுக்கப்பட்டுவிட்டது. ஓர் அசுத்தமான, வரவேற்பில்லாத பகுதியை நெருங்குகிறோம். எங்களுடைய உயிர் பிழைப்பது உறுதியில்லை!
தங்களுடைய குளிர்கால மையங்களுக்குத் திரும்பிவரும் இடம்பெயர்ந்து செல்லும் அநேக நீர்க்கோழிகளின் கவலைக்கிடமான சூழ்நிலை இதுதான். பல நூற்றாண்டுகளாக அவைகளின் பரம்பரைப் புகலிடமாக இருந்துவந்திருக்கும் அந்தச் சதுப்பு நிலங்கள் புறநகர் வளர்ச்சித் திட்டங்களுக்காகவும் விவசாய விருத்திப் பணிகளுக்காகவும் அழிக்கப்பட்டுவருகின்றன. அநேகமாய் பயனற்றதாகக் கருதப்படும் இந்தத் தரிசு நிலங்கள், ஆயிரக்கணக்கான உயிரினங்களுக்கு அவசியமான இப்பகுதிகள் பூமியின் பரப்பிலிருந்து வேகமாக மறைந்துவருகின்றன.
கோட்டோ டோநானா சரணாலயம் அச்சுறுத்தப்படுகிறது
தென் ஐரோப்பிய சதுப்பு நிலங்களிலேயே மிகப் பரந்த பகுதியாக இருந்துவரும் நிலப்பரப்புகளில் ஒன்று அண்மையில் அவ்விதத்தில் அச்சுறுத்தப்பட்டது. ஆயிரக்கணக்கான நீர்வாழ் பறவைகளின் உயிர்பிழைப்பு உறுதியற்றிருந்தது. இதைக் குறித்து அதிகமாகக் கவலைப்பட்ட இயற்கை உயிரின ஆராய்ச்சியாளர்கள் இந்த விலைமதிக்க முடியா வனவிலங்கு சரணாலயத்தைப் பாதுகாப்பதற்காக நிதி திரட்டியதுடன், டென்மார்க் வேட்டைப் பொழுதுபோக்குக் கழகத்தை இப்படியாக எச்சரித்தது: “மாண்புமிக்க பெரியோர்களே, [ஸ்பேய்னிலுள்ள] கோட்டோ ஏரிகள் மறைந்துவிட அனுமதிக்கப்பட்டால், டென்மார்க்கில் ஐந்து ஆண்டுகளுக்குள் ஒரு வாத்து கூட இல்லாத நிலை ஏற்பட்டுவிடும்.”
இங்கு குறிப்பிடப்பட்ட கோட்டோ, கோட்டோ டோநானா வனவிலங்கு சரணாலயமாகும். இது ஸ்பய்ன் தேசத்தில் தென் மேற்கு முனையில் அமைந்திருக்கிறது. அதன் எல்லையாக அமைந்த குவாடல்குவிவரின் பரந்த சதுப்பு நிலத்துடன் சேர்ந்து இந்தச் சரணாலயம் இடம் பெயர்ந்துச் செல்லும் பறவைகள் வந்து தங்குவதற்காக ஐரோப்பாவில் இருக்கும் மூன்று அல்லது நான்கு முக்கிய இடங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இது 125 வித்தியாசமான வகை பறவை இனங்களுக்கும் ஏராளமான பாலூட்டிகளுக்கும் ஊரும் பிராணிகளுக்கும் புகலிடமாக அமைந்திருக்கிறது.
நியு யார்க்கில் 1962-ல் நடந்த உலக பறவையியலர் மாநாட்டில் பின்வரும் காரியம் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது: “குவாடல்குவிவரின் சதுப்பு நிலப்பகுதிகள் ஐரோப்பாவில் செந்நாரக்கும் கொக்கு இனங்களில் சிலவற்றிற்கும் அடைக்கலம் தரும் கடைசி இடமாக இருக்கிறது என்பது நிச்சயம்; . . . வெள்ளைத் தலை வாத்து, உச்சியில் வெண்சூட்டு கொண்ட வாத்து இனம், கருஞ்சிவப்புக் கெளதாரி இனம், இன்னும் மற்ற எண்ணிலடங்கா அழகிய பறவை இனங்கள் தாபரித்துப் பெருகும் ஓர் இடம் இது.”
அரசர்களுக்கும் பிரதானிகளுக்கும் தனிச்சிறப்புவாய்ந்த வேட்டையாடும் இடமாக இருந்ததாலும், இது மக்கள் செல்ல வசதியாயில்லாத இடமாயிருந்ததாலும், இது வளமற்ற மண்ணை உடையதாயிருந்ததாலும் இந்த 270 சதுர மைல்கள் பல நூற்றாண்டுகளாக மக்களின் ஆக்கிரமிப்புக்கு விலகியிருந்தது. என்றபோதிலும், சுற்றுச்சூழல் நச்சுப்படுதல், நிலச் சீர்திருத்தங்கள் மற்றும் புறநகர் வளர்ச்சித் திட்டங்கள் இந்தச் சரணாலயத்துக்கு ஆபத்தை விளைவிப்பதாயிருந்தது.
கோட்டோ டோநானாவைக் கிரயத்துக்குக் கொள்வதற்காக சர்வதேச அளவில் நிதி திரட்ட வேண்டிய அவசியம் ஏற்பட்டதால் 1961-ல் உலக வனவாழ்வு நிதி ஆரம்பிக்கப்பட்டது. இந்தச் சர்வதேச குழுவின் முதல் திட்டம் ஸ்பய்ன் அரசு ஒத்துழைப்பில் கோட்டோ டோநானாவின் ஒரு பகுதியை வாங்குவதாகும். இந்தச் சரணாலயத்துக்கு மீட்பு கிட்டியது.
‘உயிரின வாழ்க்கைச்சூழல் சார்ந்த குற்றம்’
அச்சதுப்பு நிலப்பகுதி இன்னும் தனிப்பட்டவர்கள் கைகளில்தான் இருந்தது. அண்மையிலிருந்த பண்ணைப்பகுதியிலிருந்து சுற்றுப்புறச்சூழல் நச்சுப்படும் வாய்ப்பு இருந்துகொண்டேயிருந்தது. 1973-ல் இந்தப் பகுதிக்கு அண்மையிலிருந்த நெல் வயல்களில் நச்சுத்தன்மை கொண்ட ஒரு பூச்சிக்கொல்லி பயன்படுத்தப்பட்டபோது, ஏறக்குறைய 40,000 நீர்வாழ் பறவைகள் மாண்டன. இயற்கை உயிரின ஆராய்ச்சியாளர் ஒருவர் இதை “மனிதவர்க்கத்தின் இயற்கைச்சூழல் சமநிலை சார்ந்த குற்றமுடைய வரலாறு காணாத” ஒரு பேரழிவு என்று விளக்கினார். மக்களால் அதிகமாக பயன்படுத்தப்படாத கடற்கரைப் பகுதிகள் நிலச் சொத்துக்களைப் பெருக்கும் ஆட்களின் கவர்ச்சியாக இருந்தது. எனவே கடற்கரை ஓரமாக ஒரு நெடுஞ்சாலை அமைப்பதற்கான ஒரு திட்டம் வகுக்கப்பட்டது. இதற்கிடையில் அந்தச் சதுப்புநிலத்தின் நீர் விவசாயத்துக்காக வடிக்கப்படலாயிற்று.
கடைசியாக 1978-ல் ஸ்பய்ன் அரசு அந்த முழு பகுதியையும் ஒரு தேசிய சரணாலயமாக்கியது. சுற்றுப்புறச்சூழல் நச்சுப்படுவது கடுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டது, நெடுஞ்சாலைத் திட்டம் கைவிடப்பட்டது, அந்நிலப் பகுதியின் சதுப்புத் தன்மையைக் காத்துக்கொள்வதற்காக குழாய்கள் வழியாய் நீர் வழங்கப்பட்டது. அந்தச் சரணாலயம் மீண்டும் செழிக்கக்கூடும்.
இவற்றின் நன்மைகள் ஏற்கெனவே தெளிவாகப் புலப்படுகின்றன: செந்நாரகள் போன்ற அயல்நாட்டுப் பறவைகள் அதிகரிக்கின்றன, மற்ற உயிரினங்களும் சீரழிவதிலிருந்து பாதுகாக்கப்படுகிறது. இந்தச் சரணாலயத்துக்கு வருகிறவர்கள், வனவிலங்குகளுக்குத் தொல்லைத் தராமல் பார்வைக்கூடங்களிலிருந்தபடி அவற்றை இயற்கைச் சூழலிலேயே கண்டுகளிக்கலாம். அதே இடத்தில் மான் கூட்டங்களும் காட்டுப் பன்றிக் கூட்டங்களும் மேய்வதை சுற்றுலா பயணிகள் நேரடியாகக் காணலாம். ஆனால் இந்தச் சரணாலயத்தின் சில தனிச்சிறப்புகளை நெருங்க பார்க்கலாம்.
பறவைகளின் இடப் பெயர்ச்சியில் இந்தச் சரணாலயத்தின் பங்கு
சோவியத் யூனியனிலிருந்தும் ஸ்கண்டிநேவியாவிலிருந்தும் 40,000 பெரிய வாத்துக்களும் 2,00,000 சாதாரண வாத்துக்களும் இங்கு வருகின்றன. வடதுருவப் பிரதேசத்திலிருந்து ஏராளமான பறவைகள் இந்த அமைதலான கடற்கரைகளுக்கும் ஊருக்குள் அமைந்த ஆழமற்ற நீர்த்தேக்கங்களுக்கும் குளிர்காலத்தைக் கழிப்பதற்காகவும் உணவு தேடியும் வருகின்றன. இவை இளவேனிற் பருவத்தில் சென்றுவிடுகின்றன. ஆப்பிரிக்காவிலிருந்து மண்வெட்டி வாயன் அல்லது கரண்டி மூக்கன் என்றழைக்கப்படும் பறவைகளும், கழுகுகளும், மற்றுமநேக பறவைகளும் இங்கு வசந்தகாலத்தில் முட்டையிட்டு குஞ்சு பொறிக்கின்றன.
மற்ற அநேக பறவைகள் தூர தேச பயணத்தில் இருக்கும்போது இடையில் ஓய்வெடுக்க இங்கு இறங்கி உணவருந்திவிட்டு பயணத்தைத் தொடருகின்றன. ஆகஸ்ட் மாதத்தில் நூற்றுக்கணக்கான நாரைகள் ஆப்பிரிக்காவுக்குச் செல்லும் வழியில் ஜிப்ரால்டர் கடற்காலைக் கடப்பதற்கு முன்னால் இங்கு கூடுகின்றன. அதிகமாக அலட்டிக்கொள்ளாமலேயே உயரத்தில் அதிக நேரம் பறக்க உதவும் வெப்பமும் வெப்பக் காற்று அலைகளும் குறைவுபடுவதால் வெகு தூரம் கடலைக் கடந்து செல்ல முடியாத உணவு தேடிச் செல்லும் மாம்சப் பட்சினிகளைக் குறித்ததிலும் இது உண்மையாக இருக்கிறது.
என்றபோதிலும், இந்தச் சரணாலயத்துக்கு வருகை தருபவர்களின் அக்கறையைத் தூண்டிடும் நிரந்தரவாசி ஒன்று இருக்கிறது—ராஜ கழுகு.
ராஜ கழுகு
இந்த நூற்றாண்டில் ராஜ கழுகுகளின் எண்ணிக்கை இவற்றின் கட்டுப்பாட்டுப் பகுதி முழுவதிலுமே வெகுவாகக் குறைந்துவிட்டிருக்கிறது. பறவைகளின் முட்டைகளைச் சேகரிப்பவர்கள் இரக்கமற்றவிதத்தில் அவற்றின் கூடுகளைக் கொள்ளையடித்தனர், அருங்காட்சியகங்களில் வைப்பதற்காகவும், தங்களுடைய வேட்டைப்பணியை இவைக் கெடுக்கின்றன என்ற தவறான நம்பிக்கையாலும் வேட்டைக்காரர்கள் பெரிய பறவைகளை வேட்டையாடினர். கிழக்கத்திய ராஜ கழுகுகளிலிருந்து பல அம்சங்களில் வித்தியாசப்பட்டிருக்கும் ஸ்பனிய கழுகு அழிக்கப்பட்டது. 1970-களில் ஸ்பய்ன் தேசத்தில் 30 ஜோடிகள்தான் உயிருடனிருந்தன. மனிதனின் உணர்ச்சியற்றத் தன்மையால் பறவைகளின் பட்டியலிலிருந்து இன்னொரு இனம் இல்லாமற்போய்விடும் என்பது தெளிவாயிருந்தது.
என்றபோதிலும் அந்தக் கழுகுகளின் சார்பாக சரணாலயத்தின் இயற்பியல் நிபுணர்கள் மேற்கொண்ட இடைவிடா முயற்சி நல்ல பலன்களைக் காண்பித்திருக்கிறது. இப்பொழுது அந்தப் பூங்காவில் ஏறக்குறைய 14 ஜோடி கழுகுகள் இருக்கின்றன. அந்தச் சரணாலயம் அதிகப்படியாக அத்தனைக் கழுகுகளைத்தான் காத்திட முடியும், ஏனென்றால் ஒவ்வொரு ஜோடிக்கும் 19 சதுர மைல் பரப்பு தேவைப்படுகிறது. ஒவ்வொரு கூடும் கவனமாகக் கண்காணிக்கப்பட்டுவருகிறது. ஒரு கூட்டில் மூன்று முட்டைகள் இருந்து, மற்றொன்றில் ஒரு முட்டை மட்டுமே இருக்குமானால், அவற்றில் ஒரு முட்டை அதிகக் கவனத்தோடு மாற்றப்படுகிறது, இதனால் ஒவ்வொரு கூடும் இரண்டிரண்டு முட்டைகளைக் கொண்டிருக்கச் செய்யப்படுகிறது. ராஜ கழுகுகள் ஒரு சமயத்தில் இரண்டு குஞ்சுகளுக்கு மேல் வெற்றிகரமாக வளர்க்க முடியாது.
கழுகுகளும் பருந்துகளும் விண்ணில் உயர்வதைக் காண்பதும், டோநானா ஏரிகளின் நீலவண்ண நீரில் ஆயிரக்கணக்கான நாரைப் பறவையினங்கள் அழகாக அசையாது நீந்திச்செல்வதைப் பார்ப்பதும், காட்டுப் பன்றிகள் ஊசிலை மரங்களின் கீழ் முரட்டுத்தனமாகப் பாய்வதைப் பார்ப்பதும் யெகோவாவின் சிருஷ்டிப்பில் காணப்படும் அழகையும் பல வகைகளையும் புரிந்துகொள்ள உதவுகிறது. மக்கள்தொகை மிகுந்திருக்கும் ஐரோப்பாவில் இப்படிப்பட்ட இடங்களைக் காண்பது அரிது, அவை காக்கப்படுவதற்காக மேற்கொள்ளப்படும் பலமான கண்காணிப்பு வெகுவாகப் போற்றப்பட வேண்டும்.
இப்பொழுது, பெரிய வாத்துக்களும் சாதாரண வாத்துக்களும் இலையுதிர் காலத்தில் இங்கு வருகின்றன, ஜனவரி மாதத்தில் நாரையினங்கள் வருகின்றன, கரண்டி மூக்கன்களும் கொக்குகளும் பருந்துகளும் இளவேனிற் காலத்தில் வருகின்றன. இவை சற்று ஓய்வெடுத்துக்கொள்ளவும், குளிர் காலத்தைச் செலவழிக்கவும், அல்லது முட்டையிட்டுக் குஞ்சு பொறிக்கவும் இடமாக அமைந்து இவற்றிற்காக அடைக்கலம் அளித்திடும் இந்தப் பாதுகாக்கப்பட்ட சரணாலயங்கள் இவற்றின் வருகைக்காகக் காத்துக்கொண்டிருக்கின்றன. இந்த இடத்தில் உயிர்வாழ்வு அதன் ஏராளமான வித்தியாசங்களுடன் நிரம்பிவழிகின்றன. இந்த இயற்கையான பரதீஸில் உயிர்பிழைப்பு ஒரு காலத்தில் உறுதியற்றிருக்க, இப்பொழுதாவது செழித்தோங்கிட அனுமதிக்கப்பட்டிருப்பதற்காக ஆண்டுதோறும் வரும் 3,00,000 பார்வையாளர்கள் நன்றியுள்ளவர்களாயிருப்பது குறித்து சந்தேகமில்லை. (g88 7⁄8)
[பக்கம் 16-ன் படம்]
செஞ்சூட்டு ஆண்வாத்து
[படத்திற்கான நன்றி]
J. L. González/INCAFO, S. A.
[பக்கம் 17-ன் படங்கள்]
கருஞ்சிவப்புக் கெளதாரி
[படத்திற்கான நன்றி]
A. Camoyán/INCAFO, S. A.
கரண்டி மூக்கர்
[படத்திற்கான நன்றி]
A. Camoyán/INCAFO, S. A.
[பக்கம் 18-ன் படம்]
ராஜ கழுகு அதன் குஞ்சை சூரிய வெப்பதிலிருந்து பாதுகாக்கிறது