இளைஞர் கேட்கின்றனர் . . .
நான் ஏன் அவ்வளவு தகுதியற்றவனாக உணருகிறேன்?
“என்னுடைய அம்மா என் அப்பாவை விவாகரத்து செய்தபோது எனக்கு எட்டு வயதாக இருந்தது,” என் நினைவுகூருகிறார் ஆன். “அப்பாவோடு கட்டித்தழுவி விளையாடியதையும் பெலத்திற்காக அவரை நோக்கியிருந்ததையும் நான் ஞாபகப்படுத்தக்கூடும். நான் 15 வயதாக இருக்கும்போது அப்பா என்னுடைய மாற்றாந்தாயை விவாகரத்து செய்தார். இது குழப்பமூட்டுவதாக இருந்தது. என்னிடம் ஏதாவது தவறு இருந்திருக்குமோவென்று நான் வியந்தேன். ஒருவேளை நான் காரணமாக இருந்தேனோ? நான் தகுதியற்றவளாக உணர ஆரம்பித்தேன்.”
இத்தகைய உணர்வுகள் அநேக இளைஞர்களைக் கொள்ளை கொள்கின்றன. இவற்றை உண்டாக்குவதற்குப் பெற்றோரின் விவாகரத்து போன்ற பெரிய மனமுறிவை உண்டாக்கும் காரியங்கள் எப்போதும் தேவைப்படுவதில்லை. பள்ளிப் பரீட்சை ஒன்றில் குறைந்த மதிப்பெண் போன்ற முக்கியத்துவமில்லாத காரியங்களால் தகுதியற்ற தன்மையின் உணர்வுகள் வெளிப்படலாம். இத்தகைய உணர்வுகள் ஏன் உண்டாகின்றன? அவற்றை உதறித்தள்ள ஏதாவது வழி இருக்கிறதா?
நியாயமற்ற ஒப்புவமைகள்
அநேக இளைஞர்கள் தகுதியற்றவர்களாக உணருவதற்கு நாம் வாழ்ந்துவரும் உலகத்தின் செல்வாக்குதானே ஒரு பெரும் காரணமாக இருக்கிறது. அநேக சமுதாயங்களில் இளைஞர்கள் தாங்கள் செய்யும் ஒவ்வொரு காரியங்களிலும் அதாவது பள்ளி வேலைகள், விளையாட்டுகள், பொழுதுபோக்குச் செயல்கள் போன்றவற்றில்—மேம்பட்டு நிற்கும்படி வற்புறுத்தப்படுகிறார்கள். யார் சிறந்ததைச் செய்கிறார்களோ, யார் சிறந்ததை நடப்பிக்கிறார்களோ, யார் சிறந்த விதத்தில் தோன்றுகிறார்களோ, யார் சிறந்ததைக் கொண்டிருக்கிறார்களோ அதன் மூலமாக வெற்றி என்பது தீர்மானிக்கப்படுகிறது. தென் ஆப்பிரிக்காவின் ஆசிரியர் ஒருவர் சொன்னார்: “பள்ளி இறுதி தேர்வில் தேர்ச்சியடைவதற்கான மதிப்பெண்ணை பெறாதிருப்பதோடும் சிறந்ததாக கருதப்படும் ஓர் உத்தியோகத்தைப் பெறாதிருப்பதோடும் ஒரு பயங்கரமான நிந்தை சேர்ந்திருக்கிறது.” உளநூல் வல்லுநர் டாக்டர் டேவிட் எல்கிண்ட் இதேபோன்று விவரித்தார்: “வளரிளமைப் பருவத்தினர் இன்று தங்களுடைய ஒழுக்கத்திற்காகவோ அல்லது தங்களுடைய ஆள்தன்மைக்காகவோ மதிப்பிடப்படாமல், தங்களுடைய போட்டிப்போடும் திறனுக்காக அல்லது அவர்கள் பெறக்கூடிய மதிப்பெண்களுக்காக மதிப்பிடப்படுகிறார்கள்.” இந்தப் போட்டிக்குரிய ஆவி அநேக இளைஞர்களில் அவர்களுடைய சுய மதிப்பைக் கொள்ளையிடுகிறது.
நம்முடைய “கைக்கு நேரிடுகிறது எதுவோ” அதில் நம்மால் முடிந்த சிறந்ததைச் செய்யும்படி பைபிள் நம்மை ஊக்குவிக்கிறதேயல்லாமல், “மற்றவனை [ஒப்பிட்டுப்] பார்க்கும்போது அல்ல.” (பிரசங்கி 9:10; கலாத்தியர் 6:4) ஏன் அப்படிக் கூடாது? ஒரு காரியம், நாமெல்லாரும் வித்தியாசமான திறமைகளைக் கொண்டிருக்கிறோம் மற்றும் ஒவ்வொரு காரியத்திலும் மேம்பட்டு நிற்க முடியாது. (மத்தேயு 25:14, 15) உண்மையில், அபூரணத்தின் காரணமாக நாமெல்லோரும் ஒரு விதத்திலோ அல்லது மற்றொன்றிலோ குறைபாடுள்ளவர்களாக இருக்கிறோம். (ரோமர் 3:23) ஆகவே வாழ்க்கையில் வெற்றி என்பது தோல்விகளையும் ஏமாற்றங்களையும் கையாளக் கற்றுக்கொள்வதைத் தேவைப்படுத்துகிறது.
தவிரவும், மற்றவர்களைக் காட்டிலும் மேம்பட்டு நிற்கவேண்டும் என்ற ஆவல் சுய மதிப்பின் உணர்வுகளைக் கொண்டுவரக்கூடிய ஒத்துழைக்கும் தன்மை, பரிவு, சந்தோஷம், சமாதானம் மற்றும் பொறுமை போன்ற குணங்களுக்கு எதிராகக் கிரியை செய்கிறது. பைபிள் ஞானமான ஆலோசனை கொடுக்கிறது: “வீண் புகழ்ச்சியை விரும்பாமலும், ஒருவருக்கொருவர் போட்டி மனப்பான்மையை வளர்க்காமலும் ஒருவர் மேல் ஒருவர் பொறாமைகொள்ளாமலும் இருக்கக்கடவோம்.”—கலாத்தியர் 5:22, 23, 26, NW.
ஆகவே பள்ளியிலோ அல்லது கிறிஸ்தவ நடவடிக்கைகளிலோ உங்களுடைய சிறந்ததை நீங்கள் செய்துகொண்டிருக்கையில், உங்களுடைய சாதனைகளில் திருப்தி கொள்ளுங்கள். எதிலாவது நீங்கள் வெகுவாக குறைவுபடுவீர்களானால், எல்லா விதங்களிலும் உதவிக்காக கேளுங்கள். உண்மையிலேயே மதிப்புவாய்ந்த மற்றொரு குணமான மனத்தாழ்மையை நீங்கள் வளர்த்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பதற்கு இது ஓர் அடையாளமாக இருக்கும். (நீதிமொழிகள் 18:12) உங்களுடைய முன்னேற்றம் மெதுவாக இருக்குமேயானால், உற்சாகமிழந்துவிடாதீர்கள். உங்களுடைய வெற்றியை உங்களுடைய முந்திய பலன்களுக்கேற்ப அளவிடுங்கள்—மற்றொருவருடையதற்கேற்ப அல்ல.
வெறுமென மனச்சோர்வைக் காட்டிலும் பெரிய ஒன்றா?
எந்த ஒரு காரணமும் தெரியாமல் நிவாரணமின்றி வாரந்தோறும் தொடர்ந்திருக்கும் ஒரு மனச்சோர்வை நீங்கள் அனுபவித்துக் கொண்டிருப்பதைக் கற்பனை செய்து பாருங்கள். “நீங்கள் உள்ளே அனுபவிக்கும் துன்பத்தை வெளிக்காட்டாமல் இருப்பது ஓர் அபாய நிலை” என்று டீன் பத்திரிகை விவரிக்கிறது. உங்களுடைய பெற்றோரைப்போன்று உண்மையிலேயே உங்களிடம் அக்கறைகாட்டும் ஒருவரிடம் உங்களுடைய உணர்வுகளை ஊற்றிவிடுங்கள். பைபிள் சொல்லும்விதமாக: “ஒண்டியாயிருப்பதிலும் இருவர் கூடியிருப்பது நலம்; . . . ஒருவன் விழுந்தால் அவன் உடனாளி அவனைத் தூக்கிவிடுவான்; ஒண்டியாயிருந்தும் விழுகிறவனுக்கு ஐயோ, அவனைத் தூக்கிவிடத் துணையில்லையே.” (பிரசங்கி 4:9, 10) அநேக காரியங்களில், இரக்கத்தோடு செவிகொடுப்பவர் ஒருவர் உங்களுடைய சிந்தனையைச் சரிப்படுத்த உங்களுக்கு உதவக்கூடும்.a
ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்ட ஆன் என்பவளை கவனியுங்கள். அவளுடைய தகுதியற்றத் தன்மையின் உணர்வுகள் தவறான கருத்துக்களின் அடிப்படையில் அமைக்கப்பட்டிருந்ததேயல்லாமல், உண்மையான காரியங்களின் அடிப்படையில் அல்ல என்பதை உணர்ந்துகொள்ள அவளுடைய சிநேகிதிகள் அவளுக்கு உதவினார்கள். ஒரு சிறு குழந்தையாக மட்டுமே இருந்த அவள், எப்படி அவளுடைய பெற்றோரின் விவாக தோல்விக்குப் பொறுப்புள்ளவளாக இருந்திருக்க முடியும்? இதை உணருகையில், தகுதியற்றத்தன்மையின் உணர்வுகள் தணிய ஆரம்பித்தன.
உங்களுடைய சிந்தனை போக்குகளை மறுபடியும் சரிசெய்துகொள்ள முயற்சிகள் எடுக்கப்பட்டபோதிலும், இத்தகைய உணர்வுகள் நிலைத்திருந்தால் என்ன செய்யலாம்? “ஒருவேளை உங்களுடைய மனச்சோர்விற்கு காரணமாக இருக்கும் ஏதாவது சரீர வியாதியை நீக்குவதற்கு உடலைச் சோதிப்பதற்காக ஒரு மருத்துவரை அணுகுவதும்கூட ஒரு சிறந்த காரியமாகும்,” என்று டீன் பத்திரிகை மேலும் சொல்கிறது. ஏன்? ஏனென்றால் தகுதியற்றதன்மையின் தொடர்ந்திருக்கும் உணர்வுகள் மருத்துவ சம்பந்தமான உடல் நலமில்லாமையைக் குறிப்பிடலாம்: பெரிய மனச்சோர்வு.
பெரிய மனச்சோர்வுகளின் அநேக விஷயங்களில், மூளையின் இரசாயன கிரியைகள் ஒழுங்கற்று செயல்படுவது உட்பட்டிருப்பதாகத் தோன்றுகிறது. உதாரணமாக, சில சமயங்களில் மூளையின் முக்கிய நியூரான்கள், அல்லது மூளை உயிரணுக்கள் சரியான விதத்தில் செய்திகளைப் பெறவோ அல்லது கடத்தவோ தவறிவிடும். அதிஷ்டவசமாக, மனச்சோர்வினால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த நிலைமையைக் கையாள உதவும் வகையில் நியூரான் நடவடிக்கையைச் சீர்படுத்தும் சிகிச்சை முறைகள் இருக்கின்றன. வெறுமென மனச்சோர்வைக் காட்டிலும் அதிகமான ஒன்று சந்தேகத்திற்குக் காரணமாக இருக்கும்போது ஒரு மருத்துவரை அணுகுவது முறையானது.
உங்களுடைய மனச்சாட்சி உங்களைத் தொந்தரவு செய்யும்போது
தகுதியற்றத் தன்மையின் உணர்வுகளை உண்டாக்கக்கூடிய மற்றொரு அம்சம் ஒருவருடைய மனச்சாட்சி வேலை செய்யும் விதமாகும். (ரோமர் 2:14, 15) அதற்குச் சரியான விதத்தில் பிரதிபலியுங்கள்; அழிவிற்குரிய பாதையிலிருந்து நீங்கள் விலகியிருக்க உங்களுடைய மனச்சாட்சி உங்களுக்கு உதவக்கூடும். அதை அசட்டை செய்வது, வேதனையின் ஊற்றுமூலமாக நிரூபிக்கக்கூடும்.
ஒரு சமயம் தாவீது ராஜாவினுடைய மனச்சாட்சி அவனை அதிகளவாக தொல்லைப்படுத்தியது. அவன் எழுதினான்: “என் பாவத்தினால் என் எலும்புகளில் சவுக்கியமில்லை. என் அக்கிரமங்கள் என் தலைக்கு மேலாக பெருகிற்று; அவை பாரச் சுமையைப் போல என்னால் தாங்கக் கூடாத பாரமாயிற்று . . . நாள் முழுதும் துக்கப்பட்டுத் திரிகிறேன். . . . நான் பெலனற்றுப்போய் மிகவும் நொறுக்கப்பட்டேன்.” (சங்கீதம் 38:3-8) இன்னொருவருடைய மனைவியை தான் அபரித்துக்கொண்ட பிறகு தாவீது இந்த வார்த்தைகளை அநேகமாக எழுதியிருக்க வேண்டும். கடவுளுடைய தீர்க்கதரிசியாகிய நாத்தானின் விசாரணையில் தன்னுடைய வினைமையான பாவத்தை வெளிப்படையாக அறிக்கையிட்டபோது மட்டுமே அவனுக்கு நிவாரணம் கிடைத்தது. என்ன விளைவுகளோடு? “நான் என் அக்கிரமத்தை மறைக்காமல், என் பாவத்தை உமக்கு அறிவித்தேன் . . . தேவரீர் என் பாவத்தின் தோஷத்தை மன்னித்தீர்.”—சங்கீதம் 32:5; யாக்கோபு 5:16-ஐ ஒப்பிடுக.
இதேபோன்று அநேக இளைஞர்கள் பாவம் செய்ததன் காரணமாக குற்றமுள்ள மனதால் பாரமடைந்திருக்கிறார்கள்—சில பாவங்கள் சிறியவை, சில வினைமையானவை. ஆனால் தாவீதைப்போன்று, தங்களுடைய பாவங்களை வெளிப்படையாக அறிக்கையிடுவதனாலும் மெய்க் கிறிஸ்தவர்களிடமிருந்து உதவியை நாடுவதனாலும் அவர்கள் நிவாரணம் அடையக்கூடும். ஸ்டிஃபனஸ் என்பவனைக் கவனியுங்கள். இவன் பிறப்பதற்கு முன்பாகவே இவனுடைய தந்தை இவன் தாயை கைவிட்டுவிட்டார். “அவர் என்னை விரும்பாததும், தன்னுடைய பிதாத்துவத்தை எனக்கு மறுத்ததுமான உண்மைதானே என்னை மோசமாக புண்படுத்தியது. நான் வளருகையில், இது என்னைத் தகுதியற்றவனாக உணரச் செய்தது.” ஸ்டிஃபனஸ் ஓரினப் புணர்ச்சியின் பெரும் பாவத்தில் விழுந்தான். (ஆதியாகமம் 13:13; 1 கொரிந்தியர் 6:9) ஸ்டிஃபனஸ் சொல்கிறான்: “நான் ஏற்கெனவே கொண்டிருந்த மற்ற எல்லாப் பிரதிகூலங்களோடுகூட, நான் இப்போது சுயமதிப்பு மற்றும் ஒரு நல்ல மனச்சாட்சியின் இழப்பையும் அந்தப் பட்டியலில் சேர்த்திருக்கிறேன். நான் இன்னும் அதிகளவு தகுதியற்றவனாக உணர்ந்தேன்.”
மனமுறிவடைந்த ஸ்டிஃபனஸ் மெய் கிறிஸ்தவர்களிடமிருந்து உதவி நாடினான். மிக முக்கியமாக, அவன் தன்னுடைய பாவங்களைக் கடவுளுக்கு அறிக்கையிட்டான்; கடவுளுடைய உதவியோடு அவனுடைய பலவீனத்தை அவன் மேற்கொள்ளக்கூடியவனாக இருந்தான். “இயேசுவின் ஈடுபலியை ஏற்றுக்கொள்வதனாலும் அதனுடைய மதிப்பில் விசுவாசம் வைப்பதனாலும், நான் யெகோவாவிற்கு முன்னால் தகுதியுள்ளவனாக இருக்கக்கூடும் என்று நான் கற்றறிந்தேன்” என்று அவன் சொல்கிறான். (நீதிமொழிகள் 28:13; 1 யோவான் 1:9-2:2) கடந்த நான்கு ஆண்டுகளாக, இளம் ஸ்டிஃபனஸ் ஒரு முழுநேர ஊழியக்காரனாக சேவை செய்து கொண்டும், மற்றவர்கள் கடவுளுடைய இரக்கமான ஏற்பாடுகளைப் புரிந்துகொள்ள உதவிசெய்து கொண்டும் இருக்கிறான்.
சுயமதிப்பில் உணர்வைக் கொண்டிருத்தல்
சந்தேகமின்றி, ஒரு கிறிஸ்தவ ஊழியக்காரனாக ஸ்டிஃபனஸூடைய திருப்தியளிக்கும் வாழ்க்கைத் தொழில் அவனுடைய புதிதாக கண்டுபிடித்த சுயமதிப்பின் உணர்வை காத்துக்கொள்ள அவனுக்கு உதவியிருக்கிறது. வளர்ந்துவரும் வேதனைகள்—13-19 வயதுக்குட்பட்டவர்களின் மனச்சோர்வு குறித்த ஓர் ஆராய்ச்சி (Growing Pains—A Study of Teenage Distress): என்ற புத்தகத்தில் டாக்டர் எட்னா இர்வின் ஒப்புக்கொள்கிறார்: “தான் பின்பற்ற விரும்பும் வாழ்க்கைத் தொழில் ஓர் இலக்கைக் கொண்டிருந்து, அது சென்றெட்டக்கூடிய ஒன்று என்பதை அறிந்த ஒரு வளரிளமைப் பருவத்தான் . . . அது அடையக்கூடியதாக இருக்குமானால், அது வளரிளமைப் பருவத்தினரின் பாதுகாப்பிற்கும் சுயமரியாதைக்கும் மிகப் பெரிய அளவில் உதவும்.” ஸ்டிஃபனஸைப் போன்று, மற்றவர்களோடு பைபிள் செய்தியைப் பகிர்ந்துகொள்ளும் வேலை இத்தகைய ஓர் ‘அடையக்கூடிய வாழ்க்கைத் தொழிலாக’ இருக்கிறது என்பதை ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கண்டிருக்கிறார்கள். இது அவர்களுக்கு “பாதுகாப்பு மற்றும் சுயமதிப்பின்” உணர்வை அளிப்பதாக இருக்கிறது.
இருப்பினும், இத்தகைய வாழ்க்கைத் தொழில் சில இளைஞர்களுக்கு அநேக ஆண்டுகளுக்கு அப்பால் இருக்கலாம். ஆகவே இடைப்பட்ட காலத்தில், தகுதியற்ற தன்மையின் உணர்வுகள் உங்களுக்குப் பெரிய பாரமாக இருக்க அனுமதிக்காதீர்கள். நினைவில் வையுங்கள்: நீங்கள் உங்களுடைய சொந்தத்தில் பிரச்னைகளைக் கையாள வேண்டியதில்லை. மற்றவர்களில், விஷேசமாக உங்களுடைய பெற்றோரில் நம்பிக்கை வைக்க தயங்காதீர்கள். உடன் கிறிஸ்தவர்களின் ஆதரவையுங்கூட நீங்கள் கொண்டிருக்கிறீர்கள். அவர்கள் “திடனற்றவர்களைத் தேற்றுகிறவர்களாக” இருக்கும்படி துரித்தப்படுத்தப்படுகிறார்கள். (1 தெசலோனிக்கேயர் 5:14) எல்லாவற்றிற்கும் மேலாக, யெகோவா தேவனால் நீங்கள் நேசிக்கப்படுகிறீர்கள் மற்றும் போற்றப்படுகிறீர்கள் என்பதை அறிவதில் உங்களுக்கு ஆறுதல் உண்டு. ஏன், இயேசு சொன்ன விதமாக, கடவுள் “உங்கள் தலையிலுள்ள மயிரெல்லாவற்றையும் எண்ணியிருக்கிறார்”! (லூக்கா 12:7) தம்மை நேசிக்கிறவர்களைக் கடவுள் அதிக மதிப்புள்ளவர்களாக கருதுகிறார்கள் என்பதை அறிகையில், நீங்கள் ஒருபோதும் தகுதியற்றவர்களாக உணரத் தேவையில்லை. (g88 8⁄8)
[அடிக்குறிப்புகள்]
a விழித்தெழு! (ஆங்கிலம்) அக்டோபர் 22, 1987, பக்கங்கள் 12 மற்றும் 13-ல், “தாழ்ந்த மனப்பான்மைக்கான உணர்வுகளுக்கு எதிராக போராடுதல்” மற்றும் “ஒழுங்கற்ற சிந்தனா முறைகள்” என்ற தலைப்புகளின் கீழ் பார்க்கவும்.
[பக்கம் 22-ன் படம்]
இந்த உலகத்தின் போட்டிமனப்பான்மைக்குரிய ஆவி உங்களில் தகுதியற்றதன்மையின் உணர்வைக் கொண்டிருக்க அனுமதிப்பீர்களா?