சுத்தம் என்ற சவாலைச் சந்தித்தல்
கென்யா விழித்தெழு! நிருபர் எழுதியது
“மம்மா, நக்கூஃபா!,” என்று பிள்ளை அழுகிறது. “அம்மா, நான் சாகிறேன்!” என்பது அதன் அர்த்தம். கொலை முயற்சியா? இல்லை, ஒரு சிறு பிள்ளை ஓர் அகன்ற பாத்திரத்தில் நின்றுகொண்டிருக்க, அவனுடைய தாய் அவனை அழுத்தி தேய்த்துக் குளிப்பாட்டுகிறாள். அவனுடைய விருப்பத்துக்கு எதிராகவும் தாய் தான் செய்ய வேண்டியதைச் செய்து முடிக்கிறாள்!
ஆப்பிரிக்காவில் அப்படிப்பட்ட காட்சிகள் வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ள மக்கள் வாழும் இடங்களில் சர்வசாதாரணமாகக் காணப்படுகிறது. என்றபோதிலும் சுகாதாரம் சம்பந்தப்பட்ட தராதரங்களைக் காத்துக்கொள்ளுதல் அவ்வளவு எளிதல்ல. ஆப்பிரிக்காவின் ஒடுக்கும் உஷ்ணமான சீதோஷணநிலை சுத்தம் செய்வதை இரட்டிப்பளவில் கடினமாக்குகிறது. மணல் காற்று வீட்டின் ஒவ்வொரு பிளவுகளையும் செந்நிற தூசியினால் மூடுகிறது. பொருளாதார நிலைமைகள் மோசமடைந்துகொண்டு போவதுதானே சுத்தம் செய்வதற்கு வேண்டிய பொருட்களின் விலையையும் பழுதுபார்ப்பதற்கான செலவையும்—தண்ணீர் விலையையுங்கூட—அதிகமாக்கி அநேகருக்குக் கிடைப்பதற்கரியதாக்கி விடுகிறது. பெண்கள் பல மைல்கள் நடந்து சென்று தண்ணீர் எடுத்துவரவேண்டிய இடங்களில் அந்த விலையுயர்ந்த பொருளை சுத்தம் செய்வதற்காகப் பயன்படுத்த தயங்குவார்கள் என்பது புரிந்துகொள்ளத்தக்கதே.
மாநகர்களிலும் புறநகர்ப் பகுதிகளிலும் வளரும் மக்கள்தொகையுங்கூட சுகாதாரக் கேடுகளை ஏற்படுத்துகிறது. திறந்தவெளி கழிவுக் கால்வாய்கள், அப்புறப்படுத்தப்படாத குப்பைக் குவியல்கள், அசுத்தமான பொதுக் கழிவு கூடங்கள், நோய்களைத் தாங்கிச்செல்லும் எலிகள், கரப்பான் பூச்சிகள், மற்றும் ஈக்கள் சர்வசாதாரணமாகக் காணப்படுகிறது.
மேலும், சரியான சுத்தம் சுகாதாரம் குறித்த அறிவும் வெகுவாகக் குறைந்திருக்கிறது. மக்கள் தண்ணீரை அசுத்தப்படுத்துகின்றனர், அதன் வினைமையான விளைவுகளை அவர்கள் உணருவதில்லை. எலிகளும் நோய்களைத் தாங்கிச்செல்லும் மற்ற ஏதுக்களும் அனுமதிக்கப்படுகிறது—அவற்றுடன் பிள்ளைகள் விளையாடவும் செய்கிறார்கள்.
சுத்தம்—நன்மைகள்
குடும்பங்கள் பொருட்களைச் சுத்தமாக வைப்பதில் உட்பட்டிருக்கும் சிரமத்தையும் செலவையும் ஏன் ஏற்றுக்கொள்ளவேண்டும்? ஏனென்றால் நுண்கிருமிகளும் ஒட்டுயிர்களும் அசுத்தமான சூழ்நிலையில்தான் செழிக்கின்றன. எனவே கழுவுதல் போன்ற சாதாரண காரியம் உங்களுடைய பிள்ளைக்கு உயிரை அல்லது மரணத்தைக் குறிக்கக்கூடும்! உண்மைதான், சுத்தம் என்பது வீட்டுச் செலவைக் கூட்டுகிறது. கழுவுவதற்கு அல்லது துவைப்பதற்குப் பயன்படுத்தப்படும் தண்ணீர் விலையுயர்ந்ததாக அல்லது கிடைப்பதற்கரியதாக இருக்கக்கூடும். ஆனால் அதைவிட மருந்துகள் அதிக விலை கொண்டவையாக இருக்கின்றன. சோப், கிருமிநாசினிகள், மெழுகு, எலிப்பொறி, குப்பைத் தொட்டி ஆகியவையுங்கூட செலவை உட்படுத்துகின்றன, ஆனால் மருத்துவத்துக்கான செலவைவிட குறைவாகவே இருக்கிறது.
அக்கறைக்குரிய காரியம் என்னவெனில், பைபிளில் “சுத்தம்,” “தூய்மை,” மற்றும் “கழுவுதல்” ஆகியவற்றிற்கு சம்பந்தப்பட்ட வார்த்தைகள் 400-க்கு மேலாகக் காணப்படுகின்றன. கடவுள் இஸ்ரவேலருக்குக் கொடுத்த நியாயப்பிரமாணம் சரீர சுத்தத்தையும் நல்ல சுகாதார பழக்கங்களையும் ஊக்குவிக்கும் விதிமுறைகளைக் கொண்டிருந்தது. (யாத்திராகமம் 30:18–21; உபாகமம் 23:11–14) “உன் அயலானை நேசி” என்ற கட்டளையுங்கூட தங்களையும் தங்களுடைய வீடுகளையும் சுத்தமாக வைத்துக்கொள்ள கிறிஸ்தவர்களை ஊக்குவிக்கிறது.—மத்தேயு 22:39.
பக்கம் 10-ல் காணப்படும் பெட்டி வீட்டில் செய்யப்படக்கூடிய காரியங்களின் ஒரு பட்டியலைக் கொடுக்கிறது. அந்த நியமங்கள் எந்தத் தேசத்துக்கும் பொருந்தக்கூடியவை. தரைக்கு மெருகூட்டவது (இப்படியாக சிறிய விரிசல்களை மூடிடும்) மற்றும் குப்பைகளை மூடியுள்ள ஒரு பெட்டியில் அல்லது கூடையில் கொண்டிருப்பது போன்ற பட்டியலிடப்பட்டிருக்கும் சில ஆலோசனைகள் பூச்சிகளுக்கும் நோய்களைக் கடத்தும் மற்ற ஏதுக்களுக்கும் உங்கள் வீடு வரவேற்பளிக்காது. கதவுகளிலும் சன்னல்களிலுமுள்ள துளைகளைப் பழுதுபார்ப்பது தூசியையும் மற்ற சிறிய விருந்தாளிகளையும் உங்கள் வீட்டுக்குள் அனுமதிக்க இடமளிக்காது. வேறு காரணம் இல்லாதிருந்தாலும், சுத்தம் உங்கள் வீட்டை வாழ்வதற்கு இன்னும் அதிக இன்பமான இடமாக ஆக்கிடும்!
குடும்ப ஒத்துழைப்பு
இந்தப் பட்டியலைப் படித்த பின்பு, ஒரு வீட்டுப்பெண் சுத்தம் செய்வதற்கு வேண்டிய ஒரு கிரமமான அட்டவணையை ஏற்படுத்தக்கூடும். எல்லாக் குடும்ப அங்கத்தினரும் ஒத்துழைத்தால் அந்த அட்டவணை ஒரு சுமையாக இருக்க வேண்டிய அவசியமில்லை.
உதாரணமாக ஜெசின்தா எட்டு பிள்ளைகளின் தாய். அவள் கிழக்கு ஆப்பிரிக்கா நகரில் ஒரு சிறிய வீட்டில் குடியிருக்கிறாள். தன்னுடைய வீட்டை அவள் எப்படி அவ்வளவு அருமையாக வைத்துக்கொள்ள முடிகிறது என்று அவளிடம் கேட்கப்பட்ட போது, அவள் சொன்னாள்: “எல்லாருமே தங்களுடைய பாகத்தை செய்ய கற்றுக்கொண்டார்கள். யாராவது ஒருவர் ஏதாவது ஒன்றைக் கொட்டிவிட்டால், அதை சுத்தம் செய்வதற்காக அந்த நபரிடம் ஒரு கந்தை துணியோ அல்லது வேறு எதாவது ஒரு பொருளோ கொடுக்கப்படுகிறது. சாப்பிடும்போது ஒழுங்காகச் சாப்பிடவும் கற்றுக்கொண்டிருக்கிறார்கள்.” ஒரு தந்தையுங்கூட தன்னுடைய மனைவியுடன் ஒத்துழைத்து அவளுடைய முயற்சிகளை ஆதரிக்கலாம். இளம் பிள்ளைகளை சிறு பிராயத்திலிருந்தே ஒழுங்காகவும் சுத்தமாகவும் இருக்க பயிற்றுவிப்பதில் தன் பாகத்தைச் செய்யலாம்.
தடுப்பு நடவடிக்கைகள்
சில சமயங்களில் ஒருவர் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் சுத்தம் செய்யும் வேலையை மிக எளிதாக்கிடலாம். உதாரணமாக, தூசியைக் குறைப்பதற்காக உங்களுடைய வீட்டிற்கு அண்மையில் புற்களையும் மரங்களையும் ஏன் நடக்கூடாது? அல்லது உங்களுடைய வீட்டிற்கு அண்மையில் ஒரு பகுதியை வேலியிட்டு, இப்படியாக உங்கள் பிள்ளைகள் விளையாடுவதற்குச் சுத்தமான இடத்தைக் கொண்டிருக்கக்கூடும். நீங்கள் வாழும் இடம் ஆபத்தை விளைவிக்கக்கூடிய அளவுக்கு மக்கள் நெருக்கம் கொண்டதாக இருக்குமானால், குறைந்த நெருக்கம் கொண்ட பகுதியில் உங்கள் வீட்டை மாற்றக்கூடுமா? அது சற்று தூரமாக நடந்து செல்வதை உட்படுத்தினாலும் அந்த முயற்சி சிறந்த பலனைக் கொண்டது.
மேலும், உங்களுக்கு உபயோகமற்ற பொருட்களை அப்புறப்படுத்தப் பாருங்கள். உங்கள் வீடு தேவையற்ற குப்பைக்கூளத்திலிருந்து விடுபட்டிருக்கும். உங்களுடைய வீட்டுக்கு முன் பாதை மழைக்குப் பின் சகதியாக இருக்குமானால், நுழைவாயில் பகுதியில் சரளைக்கல் கொண்ட மண்ணை ஏன் போடக்கூடாது? கழிவறை உங்களுடைய வீட்டுக்கு வெளியே இருக்குமானால், மற்றவர்கள் அதை அசுத்தப்படுத்தாதபடிக்கு அதில் ஏன் ஒரு பூட்டை மாட்டிவிடக்கூடாது?
சரியான மனநிலை
உங்கள் பார்வையில் இருக்கும் காரியங்களை மட்டுமே சுத்தம் செய்ய வேண்டும் என்று நினைத்துவிடாதீர்கள். தங்களுடைய வீட்டின் முன் பகுதி சுத்தமாக இருக்க வேண்டும், பின் பகுதி அலங்கோலமாக இருக்கலாம் என்று சிலர் நினைக்கிறார்கள்; முன் அறை பார்வையாக இருக்க வேண்டும், ஆனால் படுக்கை அறை ஒழுங்கீனமாக இருக்கலாம் அல்லது சமையலறையின் சுவர் கையடையாளங்களாலும் புகையாலும் கரி மிகுந்து காணப்படலாம் என்றும் நினைக்கிறார்கள். அப்படிப்பட்ட பொருத்தமற்ற காரியங்கள் பரிசேயர்களிடம் இயேசு சொன்ன வார்த்தைகளை நம் நினைவுக்குக் கொண்டுவருகிறது: “போஜனபானபாத்திரங்களின் வெளிப்புறத்தைச் சுத்தமாக்குகிறீர்கள்; உட்புறத்திலோ அவைகள் கொள்ளையினாலும் அநீதத்தினாலும் நிறைந்திருக்கிறது . . . போஜனபானபாத்திரங்களின் வெளிப்புறம் சுத்தமாகும்படி அவைகளின் உட்புறத்தை முதலாவது சுத்தமாக்கு.” (மத்தேயு 23:25, 26) வீட்டின் ஒவ்வொரு பகுதியையும் நாம் கறைதிரையின்றி வைத்துக்கொள்ளும் காரியம் எல்லாச் சமயத்திலும் சாத்தியமல்ல என்பது ஏற்றுக்கொள்ளத்தக்கதே. ஆனால் சுத்தம் வீட்டை ஆளவேண்டும்—அதன் சில பகுதிகளை மட்டுமல்ல—என்பது பயனுள்ள இலக்காக இருக்காதா?
சுத்தமற்ற நிலைமைகளுக்காக வீட்டுச் சொந்தக்காரரைக் குறை சொல்லுவதும் சரியாக இருக்காது. உண்மைதான், வீட்டுக்கு வண்ணம் பூசுவது தாமதிக்கப்படலாம், ஆனால் குறைந்தபட்சம் சுவர்களாவது கழுவப்படாமல் விடப்படவேண்டும் என்பதை இது குறிக்காது. மற்றும் வாடகைத் தொகையைக் குறைத்து வீடு சம்பந்தமாக நீங்கள் சில பழுதுபார்க்கும் வேலைகளைச் செய்துகொள்வதாக வீட்டுச் சொந்தக்காரருடன் ஓர் ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொள்ளலாம்.
சவாலை சந்திப்பீர்களா?
“அதை நான் முதலில் நம்பவில்லை,” என்று ஒப்புக்கொள்கிறார் ஓர் ஆப்பிரிக்கக் குடும்பத் தலைவன் ஜோசப். சுத்தம் என்ற பொருளின் பேரில் தான் கேட்ட ஒரு பொதுப்பேச்சைக் குறிப்பிட்டுச் சொல்லுகிறார். அவருடைய குடும்பம் ஒரு சிறிய பலகை வீட்டில் வாழ்கிறது. நெருக்கமான குடித்தனங்களைக் கொண்ட ஒரு பகுதியில் குடியிருக்கிறார். அந்த இடத்தில் ஒரு பொதுக் கழிவுக்கூடமும் ஒழுங்காக அமையாத ஒரு சாலையும் உண்டு. என்றபோதிலும் ஜோசப்பும் அவருடைய குடும்பமும் இந்த நியமங்களைத் தங்களுடைய வீட்டில் பொருத்திட முயன்றனர். “என்னுடைய பிள்ளைகள் இப்பொழுது செருப்பு அணிகிறார்கள், நாங்கள் எங்கள் பாதங்களைத் துடைக்கிறோம், கைகளை சோப் பயன்படுத்தி கழுவுகிறோம், சுத்தம் சார்ந்த மற்ற முன்னெச்சரிப்பு நடவடிக்கைகளையும் கையாளுகிறோம்,” என்கிறார் ஜோசப். பலன்? “எனக்கே ஆச்சரியமாக இருந்தது. பிள்ளைகள் அடிக்கடி நோய்ப்படுவதில்லை, இனிமேலும் எங்களுக்கு அந்த மருத்துவ செலவுகள் இல்லை.”
எனவே சிறிதளவு செலவிலும் முயற்சியிலும், வளரும் நாடுகளில் வாழும் பெற்றோர் தங்களுடைய வீடுகளைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளலாம், தங்களுக்கும் தங்களுடைய பிள்ளைகளுக்கும் சுத்தமான இடங்களாக அவற்றை அமைத்துக்கொள்ளலாம். என்றபோதிலும், வளரும் உலகின் ஆரோக்கிய பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு இன்னும் அதிகம் செய்யப்படும். பெரிய அளவில் மேற்கொள்ளப்படும் முயற்சிகள் வெற்றி காணும் என்பதை நம்புவதற்குக் காரணம் உண்டா? (g88 9⁄22)
[பக்கம் 9-ன் சிறு குறிப்பு]
சோப், கிருமிநாசினிகள், மெழுகு, எலிப்பொறி, குப்பைத் தொட்டி ஆகியவையுங்கூட செலவை உட்படுத்துகிறது, ஆனால் மருத்துவத்துக்கான செலவைவிட குறைவாகவே இருக்கிறது
[பக்கம் 10-ன் பெட்டி]
ஒரு சுத்தமான சுகாதார வீடு சரிபார்ப்பதற்கான ஒரு பட்டியல்
கழிவறை:
உபயோகத்திற்குப் பின் நன்றாக தண்ணீர் ஊற்றி கழுவவும்
‘நீள் குழாயுள்ள’ ஒரு கழிவறையில் பூச்சிகளுக்கு எதிராக மருந்துகளைப் பயன்படுத்துங்கள்
கழிவறையைப் பயன்படுத்திய பின்பு கைகளைச் சோப்பையும் தண்ணீரையும் கொண்டு கழுவுங்கள்
கழிவறையின் இருக்கை, நீர்த் தொட்டி மற்றும் கழிவறை சார்ந்த மற்ற பொருட்களையும் தொற்றுத் தடை மருந்து கொண்டு ஒழுங்காக கழுவுங்கள்
சமையலறை:
உணவைத் தயாரிப்பதற்கு முன்பும் பரிமாறுவதற்கு முன்பும் கைகளை சோப்பாலும் தண்ணீராலும் கழுவுங்கள்
குப்பையை மூடியுடைய ஒரு பெட்டியில் அல்லது கூடையில் வைக்கவேண்டும்; குப்பையைத் தவறாமல் அப்புறப்படுத்துங்கள்
பாத்திரங்களைக் கழுவாமல் இரவு முழுவதும் அழுக்காக வைத்துவிடாதீர்கள்
காய்கறிகளையும் பழங்களையும் உபயோகிப்பதற்கு முன்பாக நன்றாகக் கழுவி பயன்படுத்துங்கள்
உணவை வெளியே தயாரித்தால், தட்டுகளையும் பாத்திரங்களையும் தரையில் வைக்காதீர்கள். உணவில் தூசி படிய அனுமதிக்காதீர்கள்
வாரந்தோறும் தரையின் மற்றும் அலமாரியின் மூலைமுடுக்குகளை சுத்தப்படுத்துங்கள்
குழந்தைக்குப் பயன்படுத்தும் பால்புட்டிகளை வெந்நீரில் கழுவுங்கள்
கிடைக்கும் தண்ணீர் அசுத்தமாக இருக்குமானால் அதை நன்கு கொதிக்க வையுங்கள்
வீடு:
துவைப்பதற்குரிய அழுக்குத் துணிகளை ஒரு கூடையிலோ அல்லது ஓர் உறையிலோ போட்டு வையுங்கள்
உடைகளைத் தவறாமல் சுத்தமான நீரில் துவைத்திடுங்கள்
மரக் கதவுகளையும், தரைகளையும், மேசை, நாற்காலி போன்ற தட்டுமுட்டு சாமான்களையும் மெருகூட்டுங்கள்
சுவர்களையும், கதவுகளையும், விளக்கு சுவிட்சுகளையும் துடைத்திடுங்கள்
சன்னல்களைக் கழுவுங்கள்
எலிகளைப் பொறி வைத்துப் பிடித்து கொன்றுவிடுங்கள்; கரப்பான் பூச்சிகளையும் மற்ற பூச்சிகளையும் கொன்றுவிடுங்கள்
உங்களுடைய படுக்கைகளில் மூட்டைப் பூச்சிகளோ அல்லது மற்ற பூச்சிகளோ இல்லாதபடிப் பார்த்துக்கொள்ளுங்கள்
வாசற்படியில் கால் துடைப்பதற்கான நாற்பாயை அல்லது தண்ணீரை உறிஞ்சிடும் தரைவிரிப்பைக் கொண்டிருங்கள்
சுவர்களிலும் கதவுகளிலுமுள்ள துவாரங்களை மூடிவிடுங்கள், தரையில் வெடிப்புகளை பூசிவிடுங்கள்
உடைந்துபோன சன்னல்களை மாற்றிவிடுங்கள்
கிழிந்துபோன படுக்கைகளையும் பழுதான மேசை நாற்காலிகளையும் பழுதுபாருங்கள்
வெளிப்புறம்:
குப்பையைப் புதைத்திடுங்கள் அல்லது எரித்துவிடுங்கள்
மனிதரின் அல்லது விலங்குகளின் கழிவுகளை அப்புறப்படுத்துங்கள் அல்லது எரித்துவிடுங்கள்
திறந்த வெளி கழிவுக் கால்வாய்கள் தோட்டப்புறத்தில் வழிந்து செல்லாதபடி அதை ஒரு கால்வாய் வெட்டி திருப்பிவிடுங்கள்
[பக்கம் 11-ன் பெட்டி]
உங்களுடைய வீட்டாருக்குக் கற்றுக்கொடுங்கள் அக்கம்பக்கத்திலுள்ள பகுதியின் சுத்தத்துக்காக செய்ய வேண்டியதும் செய்யக்கூடாததுமான காரியங்கள்
ஒரு வீட்டுக்குள் அல்லது மற்ற கட்டடங்களுக்குள் பிரவேசிக்கும்போது பாதங்களைத் துடைத்திடுவது
காலணிகளை அணிந்துகொள்வது
கழிவறையைப் பயன்படுத்திய பின்பு நன்றாக தண்ணீர் ஊற்றி கழுவிவிடுவது
கழிவறையைப் பயன்படுத்திய பின்பும் உணவு அருந்துவதற்கு முன்பும் கைகளை சோப்பும் தண்ணீரும் கொண்டு கழுவுதல்
மூக்கு ஒழுகினால் துடைத்தல்
தரையில் உட்காரும்போது ஆடை அணிந்திருப்பது
தொடக்கூடாதது:
கழிவுகள்
எலிகள்
கரப்பான் பூச்சிகள்
குப்பை
தெரு நாய்கள்