நேப்பாளத்தின் பொக்கிஷங்களாகிய விலங்குகளைப் பார்வையிடுதல்
இந்தியாவின் விழித்தெழு! நிருபர் எழுதியது
நள்ளிரவு. எங்களைச் சூழ அமைந்த காடு கரு இருட்டாய் இருந்தது. எங்கள் தலைகளுக்கு மேல் உயர்ந்தோங்கி வளர்ந்திருந்த மரங்கள் நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தை எங்களுக்கு மறைத்தது. நாங்கள் போய்க்கொண்டிருந்த பாதையைப் பார்ப்பதற்கு எங்கள் டார்ச் விளங்குகளைப் பாதை நெடுக தாழ பிடித்துக் கொண்டிருந்தோம். ஒரு புலிக்காகத் தேடிக் கொண்டிருந்தோம்! ஆனால் நாங்கள் இருளில் இடறிக்கொண்டு நடந்துகொண்டிருக்க, என்னுடைய மனதில் ஓர் அச்ச உணர்வு அவ்வப்போது தலைதூக்கிக்கொண்டிருந்தது—புலி எங்களைத் தேடுகிறதோ?
நேப்பாளத்தின் பொக்கிஷங்களாகக் கருதப்படும் பாதுகாக்கப்பட வேண்டிய சில விலங்குகளைப் பார்ப்பதற்காக என்னுடைய மனைவியும் நானும் இந்தியாவில் இருக்கும் கல்கத்தாவிலிருந்து நேப்பாளத்தின் ராயல் சிட்வான் தேசீய சரணாலயமாகிய புலிகள் காணப்படும் டைகர் டாப்ஸுக்கு வந்தோம். இது மகா இமயத்தின் அடிவாரத்திலிருக்கும் மலைகளுக்கிடையே டேராய்-யின் வடப்பிரதேசத்தில் 360 சதுர மைல் பரப்பளவைக் கொண்ட புல் பிரதேசங்களும் எழில்கொண்ட காடுகளுமுடைய ஓர் இடம்.
புலிகளைப் பார்வையிட டைகர் டாப்ஸுக்குச் செல்லுதல்
அந்தப் பயணம்தானே ஒரு துணிச்சல் மிகுந்த பயணமாக இருந்தது. முதலில் நாங்கள் கல்கத்தாவிலிருந்து நேப்பாள் மலைப்பிரதேச ராஜ்யத்தின் தலைநகராகிய கத்மண்டுக்கு விமானம் மூலம் சென்றோம். அந்தப் பயணம் 29,028 அடி எவரஸ்டு மலை உட்பட இமயத்தின் உயர்ந்த உச்சிகளின் கண்கொள்ளாக் காட்சிகள் எங்களுக்கு விருந்தளித்தது.
கத்மண்டு—இந்தப் பெயர் பூர்வீகத்தின் உணர்வை எழுப்பிவிடுகிறது. எனவேதான் காலாகாலமாக இருந்துவந்திருக்கும் அதன் இடுக்கமான, வளைந்து வளைந்து செல்லும் தெருக்களின் ஓரங்களில் மேற்கத்திய பாணிகொண்ட கட்டடங்கள் நிற்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டோம். அவர்களுடைய கைவினைப் பொருட்களுடன்கூட வெளிநாட்டு வாசனைப் பொருட்களும், பக்குவப்படுத்தப்பட்ட டின் உணவுகளும், ஸ்டீரியோக்களும் விற்கப்படும் பூர்வீகக் கடைத் தெருக்கள் காணப்படுகின்றன. அது மாறுதல்கொண்ட, ஆனால் இன்னும் ஒரு வித்தையாக அமையும் ஒரு நகரமாகும்.
கத்மண்டு விமான நிலையத்தில் சிட்வான் பள்ளத்தாக்குக்குச் செல்லும் 19 இருக்கை கொண்ட ஒரு விமானத்தில் ஏறினோம். உயர்ந்த மலைகளும் படியமைப்பு கொண்ட மலைச் சரிவுகளும் ஆழ்ந்த பள்ளத்தாக்குகளும் கொண்ட வழியாய் 30 நிமிட பயணத்துக்குப் பின் நாங்கள் மெகாலியில் ஒரு புல்வெளியில் இறங்கினோம். இது உலகின் மிகச் சிறிய விமானத் தளங்களில் ஒன்று. ஆனால் எங்கள் பயணம் இன்னும் முற்றுப்பெறவில்லை.
இலக்குக் குறிகள் வழியாக நாங்கள் தோணிகளிலும் படகுகளிலும் மரங்கள் நீக்கப்பட்ட ஒரு சிறிய பகுதிக்கு வந்தோம். எங்களை வியப்பில் ஆழ்த்திடும் வகையில் உயர்ந்த புல்வெளியிலிருந்து ஆறு பெரிய யானைகள் எங்களைச் சந்திக்க வந்தன. அந்தக் காட்டு விடுதிக்குச் செல்ல மீதமுள்ள பயணத்துக்கு அவை எங்கள் வாகனங்களாகும். யானைகள் மீது அமைந்த தட்டை மேடைகளில் அமர்ந்திட, யானையின் கம்பீரமான, நிலையான நடை இதுவரை நாங்கள் பயன்படுத்திய எல்லாவிதமான வாகனங்களுக்கும் முற்றிலும் வித்தியாசமாக இருந்தது.
கடைசியில் நாங்கள் டைகர் டாப்ஸ் வந்தடைந்தோம். அது இரண்டடுக்கு பெரம்புக்கூடமாக, ஓலை வேயப்பட்டதுமாக 12 அடி கம்பங்களில் உயர்ந்து நின்று கொண்டிருந்த கூடமாக இருந்தது. எங்களுடைய அறைகள் நல்ல விதத்தில் வசதிகளுடன் அமைக்கப்பட்டிருந்தன. அந்த அறையில் ஓர் அறிவிப்பைப் பார்த்தோம்: “வேண்டாத விருந்தினருக்கு உணவு வைக்க வேண்டாம்.” அப்பொழுது வெளியில் ஏதோ குதிக்கும் சப்தம் கேட்டது. அந்த “விருந்தினர்” எங்களுடைய கூடத்தின் பிரகாரத்தில் கைகூலி கேட்க வந்திருந்த பல குரங்குகளாகும்.
யானைகளைச் சந்தித்தல்
அண்மையிலிருந்த ஒரு யானை முகாமில், எங்களுடைய இயற்பியல் அறிவுரையாளர் இந்தத் தங்கும் கூடத்தில் யானைகளின் பங்கைக் குறித்து விளக்கினார். போக்குவரத்துக்காக இந்த முகாம் 12 யானைகளைக் கொண்ட ஒரு யானைக் கூட்டத்தைப் பயன்படுத்துகிறது. அவற்றில் பத்து பெண் யானைகள், ஏனென்றால் இவை ஆண் யானைகளைவிட அதிக மென்மையாக நடந்துகொள்பவை. ஒவ்வொரு யானையும் நாளொன்றுக்கு 500 பவுண்டு எடை உணவு சாப்பிடுகின்றன, 50 காலன் தண்ணீர் குடிக்கின்றன. ஒரு யானையைப் பராமரிக்க ஆண்டுக்கு நேப்பாள பணத்தின்படி ரூ54,750 ($2,500, U.S.) செலவாகிறது. ஒவ்வொரு யானையும் சராசரியாக 65 வயது வரை உயிர்வாழ்கிறது. இதுதானே “வெள்ளை யானை” [“White elephant”] என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும் கூற்றின் உண்மையான பொருளை விளங்கச் செய்கிறது. வெள்ளை யானைகள் புனிதமாகக் கருதப்பட்டதால் அவை வேலைக்குப் பயன்படுத்தப்படக்கூடததாயிருந்தது, ஆனால் அவை கடனில் விழச்செய்யும் பொறுப்பாகக் கருதப்பட்டது. அப்படியாக, பூர்வகால ஓர் அரசன் தன்னுடைய பிரியத்துக்குட்படாத மந்திரிக்கு வெள்ளை யானை ஒன்றைக் கொடுப்பதன் மூலம் அவனை வாழவிடாதுச் செய்ய எளியதோர் முறையாக இருந்தது.
யானை அதன் பாகனால் அல்லது அதைப் பராமரிப்பவனால் பயிற்றுவிக்கப்படலாம், வாயின் சொற்களுக்கு அல்லது மற்ற சைகைகளுக்குக் கீழ்ப்படியச் செய்யப்படலாம் என்று எங்களுக்குச் சொல்லப்பட்டது. உதாரணமாக முன் செல்வதற்கு, அதன் மீது அமர்ந்திருக்கும் பாகன் யானையின் காதுகளுக்குப் பின்னால் தன் முன் பாதங்களைக் கொண்டு முன்னாகத் தள்ளும் செயலைச் செய்வான்; அதைப் பின்னே போகச் செய்ய தன் குதிங்காலைக் கொண்டு யானையின் தோள்பட்டைகளைக் குத்திடுவான். ஒரு யானையை முழுவதுமாகப் பயிற்றுவிக்க ஐந்து முதல் எட்டு ஆண்டுகள் எடுக்கின்றன; அப்பொழுதுதானே அது அப்படிப்பட்ட கட்டளைகளுக்கு அதிக உணர்வுள்ளதாகி, நான்கரை டன் எடையுடையதாயிருப்பினும் அவற்றிற்கு மிக வேகமாகப் பிரதிபலிக்கிறது.
காண்டானைத் தேடி
மிகப் பிரபலமான ஒற்றைக் கொம்பு இந்திய காண்டாமிருகம் உலகிலேயே ஒரே இடத்தில் தான் காணப்படுகின்றன—நேப்பாளத்துக்கும் இந்தியாவில் அஸ்ஸாம் பிரதேசத்துக்கும் இடைப்பட்ட பகுதியில் காணப்படுகின்றன. அந்த அசாதாரண விலங்கைச் சற்று பார்ப்பதற்கென நாங்கள் யானை சவாரியாக ஒரு யானை மீது இருவர் அல்லது மூவர் என்ற கணக்கில் புறப்பட்டோம். இந்த யானைக் குழு ஒரே வரிசையாக தனக்கு முன் சென்றவற்றின் அடிச்சுவட்டில் பெருமிதத்துடன் நடந்தது.
பல ஆண்டுகளாக டேராய்-யின் புல்வெளி விவசாயத்துக்குப் பயன்படுத்தப்பட ஆரம்பித்ததாலும், மலேரியா ஒழிப்புத் திட்டத்தை அரசு அமல்படுத்தியதாலும் காண்டா மிருகத்தின் உயிர்வாழ்வு அச்சுறுத்தப்பட்டது. கடந்த இருபது ஆண்டுகளாகத்தான் இந்த நிலையை சரிபடுத்துவதற்கு பாதுகாப்பு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அப்பொழுது இந்திய துணை கண்டத்தில் இருப்பதாகக் கணக்கிடப்படும் 1,000 ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்களில் ஏறக்குறைய 300 சிட்வான் பள்ளத்தாக்கின் சதுப்பு நிலங்களில் மேய்ச்சல் காண்கின்றன.
எங்கள் தொகுதியை வழிநடத்திய தலைமை யானை விரைவில் எங்கள் தலை உயரத்துக்கும் அதிகமாக உயர்ந்து வளரும் புற்களின் மதில்களினூடே நேராக நடந்து சென்றது. ஒன்றன் பின் ஒன்றாகச் செல்லுவதிலிருந்து கிளர்ச்சியை நாங்கள் உணர முடிந்தது. புற்களினூடே அந்த யானைப் பாகன்கள் உற்சாகத்தில் ஒருவரையொருவர் சப்தமாக அழைத்துக் கொண்டனர். திடீரென பக்கத்திலிருந்த யானை தன் துதிக்கையை தூக்கி பிளிறியது, எங்களுடைய யானை ஒரு பக்கமாக ஒதுங்கியது. அந்தக் குழப்பத்தின் மத்தியில் புற்புதருக்குள்ளிருந்து ஒரு காண்டா மிருகம் விரைந்து, எங்களைக் கடந்து மறைந்தது. அந்த விலங்கை நன்றாகப் பார்ப்பதற்காக நாங்கள் விரைந்தோம். புல்வழிவிட, ஒரு குட்டி காண்டாமிருகம் பயந்தோடும் அதன் தாய்க்குப் பின்னே குதித்து ஓடியது. இரண்டும் சேர்ந்து மரங்களுக்குள் மறைந்தன.
அந்தக் காண்டான் எங்களிடமிருந்து ஓடிவிட்டது குறித்து எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சிதான். யானை ஒரு புலியைக் கையாள முடியும் என்றாலும் அது உலகின் மூன்றாவது பெரிய மிருகத்தைக் குறித்து எச்சரிக்கையாகவே இருக்கிறது. எரிச்சலூட்டப்படுகையில் காண்டான் தன் ஓரடி நீள கொம்பினால், அல்லது அதன் நீண்ட கூர்மையான தந்தத்தால் மிகக் கொடூரமாக சண்டையிட்டு யானையின் கீழ்ப் பகுதியை அறுவைக் கத்தியைக்கொண்டு கிழிப்பதுபோல் இரண்டாக கிழித்துவிடக்கூடும். அதன் கால்கள் குட்டையாக இருப்பினும் குறைந்த தூரத்தைக் குதிரையின் வேகத்தில் செல்லக்கூடியது. இது அதன் எடையுடன் சேர்ந்து காண்டானை ஒரு பெரிய எதிரியாக்குகிறது.
புலி அழைப்பு
ஒரு மாலை பத்து முப்பதுக்குப் பின்பு, அநேகமாய் அனைவரும் படுக்கையிலிருக்கும் வேளை. திடீரென்று இரவு நேரத்தின் அமைதி விரையும் கால்களாலும் சப்தத்தாலும் கலைக்கப்பட்டது. ஒரு புலி காணப்பட்டது! இரண்டு குர்க்காக்களின் துணைகொண்டு நாங்கள் மூவரும் இருளில் பதுங்கினோம்.
நாங்கள் கால் மைல் தூரம் நடந்தோம். பின்பு காலணிகளைக் கழற்றிவிடும்படியாகச் சொல்லப்பட்டோம், ஏனென்றால் அவை அசைவை ஏற்படுத்திடும். அந்த அசைவுகளுக்கும் புலிகள் உணர்வுகொண்டவை. வெற்று கால்களில் நடந்து பழக்கமில்லாத எங்களுக்கு, பயணத்தின் அந்தக் கடைசி கட்டத்தின் நடை மெளன வேதனையாக இருந்து. நாங்கள் பேசவும், மென்மையாகப் பேசவும், இருமவும் அல்லது தும்மவும்கூட அனுமதிக்கப்படவில்லை. அந்தப் புலி உண்மையிலேயே எதிரில் இருக்கிறதா? அல்லது எங்களுக்குப் பின்னாலிருந்து பார்த்துக்கொண்டிருக்கிறதா? எங்களை எந்த நிலைக்குள்ளாக்கியிருக்கிறோம்?
எங்களுடைய வழிகாட்டி எங்களை நிற்கும்படிச் சொன்னான். நாங்கள் கவனித்துக் கேட்டோம். ஆனால் இன்னும் இரவாயிருந்ததால் அந்த இருளில் ஒன்றும் கேட்கவில்லை. எங்களுடைய டார்ச் விளக்கின் மங்கிய ஒளியில் நாங்கள் ஓர் ஏழு அடி ஓலைத் தடுப்புப் பக்கமாய் மெதுமெதுவாய்ச் சென்று கொண்டிருந்தோம். நாங்கள் வலது பக்கமாய்த் திரும்பியபோது நிற்கும்படியும் அந்த ஓலைத் தடுப்புகளில் சிறிதாய் வெட்டப்பட்டிருந்த பகுதிகளின் வழியாய்ப் பார்க்கும்படியும் எங்களுக்குச் சைகை காண்பிக்கப்பட்டது. கூடுமானவரை நாங்கள் அசையாமல் அமைதியாக நின்றோம். ஆம், புலி அதன் வேட்டையைப் புசித்துக்கொண்டிருக்கும் சப்தம் எங்களுக்குக் கேட்டது, அது மிகவும் அண்மையில் கேட்டது—மிக மிக அண்மையில்!
திடீரென்று பிரகாசமான விளக்குகளின் ஒளிவீச, அதோ, அந்த ராஜ வங்காளப் புலி! நாங்கள் இருந்த இடத்திலிருந்து 40 அடி தூரத்தில்தான் இருந்தது, எனக்குச் சிலிர்த்தது, அதன் பிரதேசத்தில் எங்களுடைய பிரவேசம் அதற்கு என்ன பிரதிபலிப்பை ஏற்படுத்துமோ என்பதை நாங்கள் அறியோம்; ஆனால் எனக்கு ஆச்சரியமாயிருந்த காரியம், அந்தப் புலியிடமிருந்து எந்தவித பிரதிபலிப்பும் இருக்கவில்லை. விளக்குகள் அவனைத் தொந்தரவு செய்யவில்லை. என்றபோதிலும் நாங்கள் புகைப்படம் பிடித்தால், அவன் சென்றுவிடுவான் என்று சொல்லப்பட்டோம்.
என்னே அழகு! தான் வேட்டையாடிய இளம் எருதுவின் பக்கத்தில் படுத்துக்கொண்டிருந்தான். வால்முனை மட்டும் ஒன்பது அடி நீளம் கொண்ட அவனுடைய வலிமையான உடல், முழுமையாகவும் கொழுத்தும் இருந்தது. அதன் எடை அநேகமாய் 450 பவுண்டுகள் இருக்கும். வெள்ளை, கருப்பு மற்றும் பொன் இளஞ்சிவப்பு வரிகள் தெளிவாகக் காணப்பட்டது. புலி சிங்கத்தைவிட அதிக வலிமை வாய்ந்தது என்று சிலர் கூறுவதற்கு அதன் பலம் சான்றளிக்கிறது. எங்களுடைய இரட்டைத் தொலைநோக்காடியை பயன்படுத்தி அதன் அழகிய தலையையும் உடலையும் அண்மையில் பார்க்க முடிந்தது. அது உண்மையிலேயே உலகின் மிக நேர்த்தியான விலங்குகளில் ஒன்று! புகழ்வாய்ந்த ராஜ வங்காள புலியைப் பார்ப்பதற்கான ஒவ்வொரு முயற்சியும் வீண்போகவில்லை.
புலி எப்பொழுதுமே கொடூரமான விலங்கு. மனிதனைக் கண்ட மாத்திரத்தில் அவனைத் தாக்கிடும் என்பது இதுவரை என் எண்ணமாக இருந்து வந்தது. ஆனால் நான் கண்டது அதற்கு எதிர்மாறாக இருந்தது. அது மனிதனைப் பார்க்க நேர்ந்தால், அந்த நிலையில் சற்று தாமதித்து ஒரு பார்வையளித்துப் பின்பு ஓடிவிடுகிறது. வனவாழ்வு புகைப்படம்பிடிக்கும் ஆட்கள் புலியை அதன் இயற்கை சூழ்நிலையில் 10 முதல் 15 அடி தூரத்தில் பார்த்திருப்பதாக அறிக்கை செய்துள்ளனர். அந்தத் தூரத்தில் அது உருமி ஆட்களை நிறுத்திவிடுகிறது. நாம் பின்சென்றுவிடுவதற்கும் இது முன் அறிவிப்பாக இருக்கிறது. அதன் பிரதேசத்தில் அத்து மீறி பிரவேசித்திருப்பவர் அதன் எல்லையைக் கடந்துசெல்லுமட்டும் புலி அவனைப் பின்தொடரக்கூடும்.
பிரியமான பழைய நினைவுகள்
அடுத்த நாள் காலை எங்களுக்கு ஓர் அவசர அழைப்பு வந்தது: “சீக்கிரமாகப் புறப்படுங்கள்!” ஒரு டாக்சியில் விமான நிலையத்திற்கு விரைவதுதான் என் மனக்கண் முன்னால் வந்தது. இந்த முறை யானைதான் எங்கள் டாக்சி.
சீக்கிரத்திலேயே எங்களுடைய அருமையான விடுதியும் எங்கள் பண்பு மிகுந்த யானைகளும், எங்கள் ‘பூனை’ இனத்தைச் சேர்ந்த நண்பனும், வளைந்துநெளிந்து சென்ற ஆறும் எங்களுக்குப் பின்னே இருந்துவிட்டன. ஆனால் நாங்களோ இந்த அற்புதமான வன விலங்குகளின் வாழ்வு சார்ந்த புகைப்படங்களை ஞாபகமாக எடுத்துவந்தோம். (g88 9⁄22)
[பக்கம் 27-ன் படங்கள்]
காட்டின் மையத்தில் அமைந்த டைகர் டாப்ஸ் தங்கும் விடுதி
[படத்திற்கான நன்றி]
Photo courtesy of Tiger Tops Jungle Lodge, Nepal
[படம்]
இமயத்தின் அடிவாரக் குன்றுகளின் பகுதியில் அமைந்த சிட்வான் பள்ளத்தாக்கு
[[பக்கம் 28-ன் படம்]
உயர்ந்த புற்புதர்களில் காண்டானைத் தேடுதல்