இளைஞர் கேட்கின்றனர் . . .
இனவேற்றுமை உணர்வுகள் சார்ந்த தப்பெண்ணங்களை நான் எவ்விதம் மேற்கொள்ளலாம்?
ஆஸ்திரேலியாவில் சிட்னியைச் சேர்ந்த ஆய்வாளர்கள் வித்தியாசமான இனத்தவரைச் சேர்ந்த 9–13 வயது பிள்ளைகளுக்கு ஒரு கேள்வி பட்டியல் கொடுத்து, மற்ற இனத்தவர் பேரில் தங்களுடைய உணர்வுகளைத் தாராளமாகத் தெரிவிக்க அனுமதித்தனர். வெள்ளையின ஆஸ்திரேலிய பிள்ளைகள் சிலர் சிறுபான்மையினரிடம் இனவேற்றுமை சார்ந்த தப்பெண்ணம் கொண்டவர்களாயிருந்த போதிலும், “எல்லா இனத்து பிள்ளைகளுமே அந்த ஆஸ்திரேலிய பிள்ளைகளைப்போன்றே மற்ற இனத்தவர்பேரில் இனவேற்றுமை சார்ந்த தப்பெண்ணங்களை வெளிப்படுத்தினர்.”—“உளநூல் பத்திரிகை” (The Journal of Psychology.)
இளைஞர் இனவேற்றுமை உணர்வுகள் சார்ந்த தப்பெண்ணங்களுக்கு பிரதிபலிக்காதவர்கள் அல்ல. “என்னுடைய பள்ளியில் வெள்ளையர் பிள்ளைகளில் பெரும்பான்மையினர் ஓர் உணவறையிலும் கருப்பர்கள் மற்றொரு அறையிலும் உணவருந்துகின்றனர்,” என்கிறாள் 17 வயது லூசி.
மற்ற இனத்தவரிடமாக உன்னுடைய உணர்வுகள்தான் என்ன? வேற்றுமையுணர்வு சார்ந்த தப்பெண்ணங்கள் முட்டாள்தனமானது, நியாயமற்றது, அர்த்தமற்றது என்பதாக உன் இருதயத்தில் அறிந்திருக்க, நீ இன்னும் ஓரளவுக்குக் குழம்பிய உணர்வுகளைக் கொண்டிருக்கலாம். பேராசிரியர்கள் ஜேன் நார்மன் மற்றும் மைரான் W. ஹாரிஸ், Ph.D., இப்படியாகக் கூறினர்: “வெள்ளையரும் வெள்ளை இனத்தவரல்லாதவரும் இனவேற்றுமை உணர்வுடையவர்களாக இருக்க விரும்புவதில்லை என்று ஒப்புக்கொள்கின்றனர். அதே சமயத்தில் இந்த இனக்கோடுகளை மீறி நெருங்கிய தொடர்பு கொண்டால் தங்களுடைய நண்பர்களும் பெற்றோரும் வெறுப்பை வெளிப்படுத்தக்கூடும் என்பதையும் அவர்கள் அறிந்திருக்கிறார்கள்.” இதுபோன்ற இனவெறி அநேக நாடுகளில் இருக்கின்றன.
மற்ற இனத்தவரிடையே மனதார பழகாதிருக்கும் தன்மை சூழ்ந்திருக்க, அது, வேற்றுமை உணர்வுகள் சார்ந்த தப்பெண்ணங்கள் கொள்வது தவறு என்று கற்பிக்கப்பட்டிருக்கும் கிறிஸ்தவ இளைஞரையும் பாதிக்கக்கூடும். மற்ற இனத்தவருடன் பழகுவது கட்டுப்பட்டிருக்கும் அல்லது இனவெறி மிகுந்திருக்கும் இடங்களில் அவர்கள் வாழக்கூடும். அப்படியிருக்க, இனவேற்றுமை உணர்வுகள் சார்ந்த தப்பெண்ணங்கள் எங்கே ஆரம்பமாயின?
இனவேற்றுமை சார்ந்த தப்பெண்ணங்களின் செயல்விளைவுகள்
தப்பெண்ணம் கொள்ளுதல் என்பது முன்தீர்ப்பு செய்வதைக் குறிக்கிறது. இனம் சார்ந்த தப்பெண்ணம் உடையவர்கள் மற்றவர்களை விசாரணையின்றி நியாயந்தீர்ப்பவனாயிருக்கிறான். ஒரு குறிப்பிட்ட இனத்தைச் சேர்ந்த எவருமே ஒருசில விருப்பமற்ற பழக்கங்களை, தன்மைகளை, அல்லது மனநிலைகளை இயல்பாகவே கொண்டிருக்கின்றனர் என்ற முடிவுக்கு வரக்கூடும். உண்மைகளின் மத்தியிலும் இந்த முடிவு தன்னுடைய எண்ணத்திற்கு முரணாக இருந்தபோதிலும், இந்தத் தப்பெண்ணத்தை வளர்க்கிறான். உதாரணமாக, ஒரு குறிப்பிட்ட தொகுதியைச் சேர்ந்த எல்லாருமே ‘சோம்பேறிகள்’ அல்லது ‘அறிவுத்திறன் அற்றவர்கள்,’ என்று அவன் நம்பக்கூடும். அந்தத் தொகுதியைச் சேர்ந்த சுறுசுறுப்புள்ள ஒருவரை—அல்லது அதிக அறிவுடையவரை—சந்திக்க நேர்ந்தால், அப்படிப்பட்ட ஒருவர் ஒரு “விதிவிலக்கு” என்ற முடிவுக்கு வரக்கூடும். வருத்தத்துக்குரிய காரியம், அவன் தனிப்பட்டவரின் குணாதிசயங்களைக் காணத்தவறும் குருடனாயிருக்கிறான்.
என்றபோதிலும் தப்பெண்ணம் உடன்பிறந்த பண்பல்ல. மனிதனின் நடத்தைப்போக்குகளின் என்சைக்ளோபீடியா (The Encyclopedia of Human Behavior) பின்வருமாறு கூறுகிறது: “பிள்ளைகள் வேறு இனத்தைச் சேர்ந்த அங்கத்தினருடன் வேற்றுமையின்றி விளையாடுகின்றனர் என்பதும், வெளிப்படையாகத் தெரியும் உடல்சார்ந்த வேற்றுமைகளை அறியாதவர்களாக அல்லது அவற்றைப் பழக்கத்தில் ஏற்றுக்கொள்கிறவர்களாக இருக்கிறார்கள் என்பதும் உலகமுழுவதுமாகக் கவனிக்கப்பட்டிருக்கிறது.” அந்த என்சைக்ளோபீடியா தொடர்ந்து கூறுகிறதாவது: “தப்பெண்ண உணர்வுகள் . . . கற்றுக்கொள்வதாலேயே உண்டாகிறது, அடிப்படையில் மற்ற மக்களுடன் எதிர்விளைவுத் தொடர்புகளாலேயே பெறப்படுகிறது.” இனம்வேற்றுமை சார்ந்த தப்பெண்ணங்களைக் கடத்துவதில் பெற்றோரும், ஆசிரியரும், தோழர்களுமே கருவிகளாக இருப்பதாகத் தெரிகிறது. சில சமயங்களில் வேறு இனத்தைச் சேர்ந்த ஒருவருடன் ஏதாவது வருத்தத்துக்குரிய மோதல்கள் ஏற்படுமானால், அதுவும் தப்பெண்ணங்களைப் பலப்படுத்தும் வகையில் செயல்படுகிறது.
எனவே, நம்மில் அநேகர், நம்மை அறியாமலேயே தப்பெண்ணம் கொண்ட மனநிலைகளையும் கருத்துக்களையும் பற்றிக்கொண்டிருக்கிறோம். இந்தக் காரியத்தில் தன்னுடைய உணர்வுகளை நேர்மையுடன் எதிர்ப்பட தன்னைத்தானே உண்மையிலேயே ஆராய்ந்து பார்க்க வேண்டும். உதாரணமாக உனக்கு வேறு இனத்தைச் சேர்ந்த நண்பர்கள் இருக்கக்கூடும். ஆனால் அவர்களுக்குப் பின்னால் இனவேற்றுமைக்கடுத்த கருத்துக்களைக் கூறுபவனாய் நீ இருக்கிறாயா? இந்த நண்பர்களுடன் பேசும்போது, இனப்பிரச்னை முதலிடம் பெறுகிறதா? எந்தச் சமயத்திலும் இனவேற்றுமைகளைக் குறித்து பேசுகிறவனாக, அல்லது சுவையற்றதும் பிறரைத் தாழ்த்துகிறதுமான காரியங்களைத் தமாஷாகக் கூறுகிறாயா? தப்பெண்ணங்களின் இயல்பு (The Nature of Prejudice) என்ற புத்தகம் குறிப்பிடுவதாவது: “தமாஷான பேச்சுகள் ஒருவேளை நட்புக்குரியதாய்த் தென்பட்டாலும், அவை சில சமயங்களில் உண்மையான விரோதத்துக்கு முகமூடியாக அமையக்கூடும்.” மேலும், பொது இடங்களில் மற்ற இனத்தைச் சேர்ந்த நண்பர்களுடன் காணப்படுவதைக் கஷ்டமாக உணருகிறாயா? மற்ற இனத்தவர் குறிப்பிட்ட விசேஷத் திறமைகளை—அல்லது குறைகளைக் கொண்டிருக்கிறார்கள் என்று தன்னிச்சையாக முடிவுசெய்கிறாயா?
“அப்படிப்பட்ட உணர்வுகளைக் கொண்டிருப்பதற்காக நான் என் மீதே எரிச்சலடைகிறேன்,” என்று தன்னிடம் இருக்கும் தப்பெண்ணத்தை நேர்மையுடன் பார்த்த ஓர் இளைஞன் புலம்பினான், “என்றாலும் அவற்றின் தாகத்தைத் தணிக்க என்னால் முடியவில்லை.”
இனங்களின் பேரில் கடவுளுடைய நோக்குநிலை
அந்தப் பிரச்னையை நாம் ஏற்றுக்கொள்பவர்களாயிருந்தாலும், அதைக் கையாளுவது ஒரு பெரிய பிரச்னை. வித்தியாசமான இனங்களைக் கடவுள் எப்படி நோக்குகிறார் என்பதைப் புரிந்துகொள்ளவும் அது நமக்கு உதவுகிறது. உதாரணமாக, முதல் நூற்றாண்டில் உருவான ஒரு சூழ்நிலையைக் கவனி. யூதர்களுக்கும் புறஜாதியாருக்கும் இடையிலிருந்த இனவேறுபாட்டு உணர்வு கிறிஸ்தவ சபையைப் பாதித்தது. ஒரு சமயம் அப்போஸ்தலனாகிய பேதுரு தன்னுடைய தோழர்களைப் பிரியப்படுத்த இடங்கொடுத்து, புறஜாதியான கிறிஸ்தவர்களிலிருந்து “விலகிப் பிரிந்தான்”, அவர்களுடன் சாப்பிடவும் மறுத்தான்! பவுல் அப்போஸ்தலன் இதைக் குறித்துக் கேள்விப்பட்டபோது அவன் பேதுருவுக்கு இரங்கவில்லை. மாறாக, “அவன்மேல் குற்றஞ்சுமந்ததினால், நான் முகமுகமாய் அவனோடே எதிர்த்தேன்.” என்று சொல்கிறான். இனவேற்றுமை சார்ந்த தப்பெண்ணங்களைக் கொண்டிருத்தல் கிறிஸ்தவர்கள் மத்தியில் பொறுத்துக்கொள்வதற்கில்லை! பவுலின் வார்த்தைகளில், “கடவுள் ஆள்முகத்தைப் பார்க்கிறவரல்ல.”—கலாத்தியர் 2:6, 11–14, தி.மொ.
அப்போஸ்தலர் 10:34, 35 மேலும் கூறுவதாவது: “தேவன் பட்சபாதமுள்ளவரல்ல, . . . எந்த ஜனத்திலாயினும் அவருக்குப் பயந்திருந்து நீதியைச் செய்கிறவன் எவனோ, அவனே அவருக்கு உகந்தவன்.” உண்மைதான், ஒரு குறிப்பிட்ட இனத்தாருக்குத் தோல் நிறம், முகம் மற்றும் முடி உன்னுடையதிலிருந்து வித்தியாசமாக இருக்கக்கூடும். ஆனால் கடவுள் “சகல தேசத்து மக்களையும் ஒரே மனிதனிலிருந்து உண்டாக்கின”தால் இனங்களிடையே காணப்படும் ஆச்சரியமான வித்தியாசம் கடவுளுடைய செயலாம்! (அப்போஸ்தலர் 17:26) மேலும், இனத்துக்கு இனம் வித்தியாசப்படும் உணவு, இசை, உடை உடுத்தும் விதம், பேச்சு மற்றும் மரபமைதி ஆகியவற்றைக் கடவுள் கண்டனம் செய்வதில்லை. எனவே, அப்போஸ்தலனாகிய பவுல் யூதரல்லாதவர் மத்தியில் ஊழியம் செய்தபோது, அவர்களுடைய பழக்கவழக்கங்களில் பல யூதர்களுடைய வளர்ப்புக்கு முற்றிலும் வித்தியாசமாக இருந்தபோதிலும் அவற்றை வெறுப்புடன் நோக்கவில்லை. பவுல் இப்படியாகச் சொல்லுகிறான்: “நியாயப்பிரமாணமில்லாதவர்களை [யூதரல்லாதவர்களை] ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கு [அவர்களுடைய பழக்க வழக்கங்களுக்கு மதிப்பு கொடுப்பவனாய்] நியாயப்பிரமாணம் இல்லாதவனைப்போலவுமானேன்.”—1 கொரிந்தியர் 9:21.
எனவே வேறு இனத்தவர் பேரில் விரோதத்தை அல்லது எரிச்சலை வளர்க்கும் ஒருவர் கடவுளைப் பிரியப்படுத்த முடியாது!
அந்த உணர்வுகளை மேற்கொள்ளுதல்
என்றபோதிலும், நீண்ட காலமாக இருந்துவந்திருக்கும் வேற்றுமை உணர்வுகளை முற்றிலும் களைந்துபோடுவது அவ்வளவு சுலபமல்ல. ஒரு நெருங்கிய நண்பருடன் அல்லது பெற்றோருடன் காரியங்களைப் பேசுவது நல்லது. மற்றவர்களுடன் உன்னுடைய தொடர்புகளைப் “பெருக்கிக்கொள்ளும்படி” பைபிள் கொடுக்கும் ஆலோசனையைப் பின்பற்றுவது உதவியாயிருக்கும். (2 கொரிந்தியர் 6:12, 13, NW) கூடுமானவரை உன்னுடைய சொந்த இனமும் கலாச்சாரமும் சமூக அந்தஸ்தும் உடையவர்களுடன் மட்டும் உன் கூட்டுறவைக் கட்டுப்படுத்தாதே. மனிதனின் நடத்தைப்போக்குகளின் என்சைக்ளோபீடியா (The Encyclopedia of Human Behavior) கூறுவதாவது: “கூட்டுறவும் தொடர்பு கொள்ளுதலும் ஒருவரையொருவர் அறிந்துகொள்ளவும் போற்றவும் உதவுவதுடன், ஒருவர்பேரிலொருவருக்கு இருக்கும் மனநிலைகளையும் அடிக்கடி மாற்றுகிறது.”
வெள்ளையர் மிகுதியாக இருந்த ஒரு நகரில் வாழ்ந்த கிறிஸ் என்ற ஓர் இளம் மனிதன் இது உண்மையாக இருப்பதைக் கண்டான். “நான் இனவேற்றுமை உணர்வுடையவனாக வளர்க்கப்படவில்லை,” என்கிறான் கிறிஸ். “ஆனால் நான் இடைநிலைப் பள்ளியில் படிக்கும்போது, எல்லாச் சமயத்திலும் கருப்பு இனத்தைச் சேர்ந்த பிள்ளைகள் என்னை வம்புபண்ணினார்கள். அவர்கள் எல்லாருமே கலவரம் செய்பவர்கள் என்ற உணர்வு எனக்குள் வளர ஆரம்பித்தது. அவர்களுக்குப் பயப்பட ஆரம்பித்தேன். அவர்கள் குடியிருந்த பகுதி மிக மோசமான நிலையில் காணப்பட்டதால், அவர்கள் எல்லாருமே சோம்பேறிகளாக இருப்பார்கள் என்ற முடிவுக்கு வந்தேன்.”
என்றபோதிலும் கிறிஸ் யெகோவாவின் சாட்சிகளுடன் பைபிளைப் படிக்க ஆரம்பித்தான். இந்தக் காரியத்தின்பேரில் கடவுளுடைய நோக்குநிலையைக் கற்றுக்கொண்டபோது, கருப்பர்கள் பேரில் அவனுக்கிருந்த எண்ணம் மேம்பட ஆரம்பித்தது. பின்னால் அவன் நியு யார்க்கிலுள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய தலைமைக் காரியாலயத்தில் பணிபுரிய ஆரம்பித்தான். அப்பொழுது பல இனத்தவர் சேர்ந்த ஒரு சபைக்கு நியமிக்கப்பட்டான். “இப்பொழுது நான் பிரச்னையை நேருக்கு நேர் சந்தித்தேன். ஆனால் நான் அவர்களுடைய வீட்டுக்குச் செல்லவும் அவர்களுடன் உணவருந்தவும் ஆரம்பித்தேன்.” இந்த நிலைக்குள்ளானது ஆரோக்கியமான பலனைக் கொண்டிருந்தது. “மற்ற எல்லாரைப் போலவுமே அவர்களும் இருக்கிறார்கள் என்பதை உணர ஆரம்பித்தேன்.”
ஆம், கிறிஸ்தவ சபையில் “சகல ஜாதிகளிலும் கோத்திரங்களிலும் ஜனங்களிலும் பாஷைக்காரரிலு”மிருந்து வந்த ஆட்கள் இருக்கிறார்கள். (வெளிப்படுத்துதல் 7:9) அவர்களில் சிலரை அறிந்துகொள்ள முற்படுங்கள். வித்தியாசமான பின்னணியுடையவர்களாயிருந்தும், கடவுளைப் பிரியப்படுத்தும் வகையில் அவர்களால் ஐக்கியமாக வேலை செய்ய முடிகிறது. ஆட்களைக் குறிப்பிட்ட தொகுதியின் அங்கத்தினராக நோக்குவதை நிறுத்திவிடு. அவர்களைத் தனிப்பட்டவர்களாக அறிய முற்படு. ‘அவனவன் தன்தன் சுயகிரியையைச் சோதித்துப் பார்க்க’ அனுமதி. (கலாத்தியர் 6:4) நீ நீயாக இருந்து, பொன்விதியைப் பொருத்து: “மற்றவர்கள் உங்களை எந்தவிதத்தில் நடத்தவேண்டுமென்று நீங்கள் விரும்புகிறீர்களோ, அந்த விதமாகவே நீங்கள் அவர்களை நடத்துங்கள்.” (மத்தேயு 7:12, தி ஜெருசலேம் பைபிள்) உன்னை உயர்வாக எண்ணும் உணர்வுகள் உனக்குள் பொங்கியெழுந்தால், ‘ஒருவரையொருவர் தங்களிலும் மேன்மையானவர்களாக எண்ணக்கடவீர்கள்,’ என்ற பைபிள் ஆலோசனையை ஜெபத்தோடு பொருத்திட முயற்சி செய்.—பிலிப்பியர் 2:3.
உண்மைதான், எதிரிடையான எண்ணங்கள் ஒரே இரவில் உண்டாகவில்லை, எனவே ஒரே இரவில் மறைந்துவிடாது. ஆனால் காலப்போக்கில் கடுமையான முயற்சியுடன்கூடிய பொறுமையினால் வேற்றுமையின் தப்பெண்ண உணர்வுகள் மேற்கொள்ளப்படலாம். (g88 11⁄8)
[பக்கம் 28-ன் பெட்டி]
கருப்பு நிறம் சபிக்கப்பட்ட இனமா?
கடவுள் கருப்பு இனத்தவரைச் சபித்தார் என்று சொல்லி தங்களுடைய தப்பெண்ணத்துக்கடுத்த உணர்வுகளை சிலர் நியாயநிரூபணம் செய்யப் பார்க்கின்றனர். என்றபோதிலும், பைபிளில் அதுபோன்ற எந்தவிதமான சாபமும் பதிவு செய்யப்பட்டில்லை. உண்மைதான், ஆதியாகமம் 9:25 பின்வருமாறு கூறுகிறது: “கானான் சபிக்கப்பட்டவன்; தன் சகோதரரிடத்தில் அடிமைகளுக்கு அடிமையாயிருப்பான்.” என்றபோதிலும் அநேக சமயங்களில் மேற்கோள் காட்டப்படும் அந்த வசனம் தோலின் நிறம் குறித்து எதுவும் சொல்லவில்லை. அத்துடன்கூட, கருப்பு இனம் கானானின் சகோதரனாகிய கூஷ் வழி வந்தவர்கள். (ஆதியாகமம் 10:6, 7; “புதிய உலக மொழிபெயர்ப்பு ஒத்துவாக்கிய பைபிளில்” (New World Translation Reference Bible) ஏசாயா 43:3-க்குரிய அடிக் குறிப்பைப் பார்க்கவும், அதில் ஆப்பிரிக்க நாடாகிய எத்தியோப்பியாவைக் குறிப்பிட கூஷ் என்ற பெயர் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.) கானானின் வழி வந்தவர்கள் மங்கிய நிறத்தவராயிருந்தனர்—கருப்பு நிறத்தவர் அல்ல.