இளைஞர் கேட்கின்றனர் . . .
கடவுளுடைய சிநேகிதனாக இருப்பது முக்கியத்துவமுடையதாக இருக்கிறதா?
ஒரு சிநேகிதர் என்பவர் விசேஷமான நபராக இருக்கிறார். பைபிள் உண்மையான ஒரு சிநேகிதரை, சகோதரனை விடவும் அதிக நெருக்கமாக பற்றிக் கொண்டிருப்பவராக, பற்றிலும் நட்பிலும் மாறாதவராக, ஆபத்து காலத்தில் தன் தோழனின் உதவிக்கு வருபவராக, அவருக்கு உண்மையுடன் ஆலோசனைக் கொடுப்பவராக இருக்கிறார் என்பதாக வருணிக்கிறது. (நீதிமொழிகள் 17:17: 18:24: 27:6, 9) இதை விடவும் மேம்பட்ட ஒரு உறவு இருக்கக்கூடுமா?
கடவுளுடைய சிநேகிதராக இருப்பது இன்னும் அதிகத்தை அளிக்கிறது என்பதாக அநேக இளைஞர்கள் உண்மையாக நம்புகிறார்கள். என்றாலும், ஒருவேளை கடவுளோடு இப்படிப்பட்ட ஓர் உறவுகூடத காரியம் அல்லது நடைமுறையில் சாத்தியமற்றது என்பதாக நினைக்கும் மற்றவர்களைப் போல நீங்கள் இருக்கலாம். ‘கடவுளை விசுவாசிப்பதாக அநேக ஆட்கள் சொல்கிறார்கள், ஆனாலும் விசுவாசிகளுங்கூட துன்பமனுபவிக்கிறார்கள். மேலும் அவரை விசுவாசியாத மற்றவர்களுடையதைப் போலவே இவர்களுடைய வாழ்க்கையும் இருக்கிறது’ என்பதாக அவர்கள் சொல்லக்கூடும்.
ஆகவே என்ன வித்தியாசமிருக்கிறது? கடவுளோடு நெருங்கி வருவது உண்மையில் முக்கியத்துவமுடையதாக இருக்கிறதா? கடவுளுடைய சிநேகிதராக இருப்பது எவ்விதத்திலும் உங்களுக்கு உதவக்கூடுமா? கடவுளோடு நெருங்கியிருத்தலால் ஏற்படும் நன்மைகள் ஈடிணையற்றதாகவும் வேறு எந்த ஒரு நபரோடும் நீங்கள் ஏற்படுத்திக் கொள்ளக்கூடிய நெருக்கத்தையும் மிஞ்சிவிடுவதாகவும் இருக்கிறது என்பதை இன்று பருவ வயதிலுள்ள சில இளைஞர்களின் அனுபவங்கள் காண்பித்திருக்கின்றன. எவ்விதமாக?
அழுத்தத்தைக் கையாளுதல்
கடவுளோடு ஒரு ஆழமான உறவை இப்பொழுது நாடிக் கொண்டிருக்கும் சில இளைஞர்கள், கடவுளுடைய சிநேகிதராயிருப்பது பகைமை உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவதற்கு தங்களுக்கு உதவியிருப்பதாகச் சொல்கிறார்கள். பெற்றோர் பிரிந்துபோனதால் வெகுவாக பாதிக்கப்பட்டுப் போன பதினெட்டு வயது வெர்ஜீனியா பின்வருமாறு சொல்கிறாள்: “என் அப்பாவை நான் மனமார வெறுத்தேன். நான் எப்பொழுதும் கோபமாக இருந்தேன். இதன் விளைவாக நான் மற்றவர்களை வெறுக்க ஆரம்பித்தேன். என் நண்பர்களை துன்பத்துக்குள்ளாக்க நான் முயற்சி செய்ததுண்டு. நான் அனுபவித்த துன்பத்தை மற்றவர்கள் அனுபவிக்க வேண்டும் என்று நான் விரும்பினேன்!”
இப்பொழுது கடவுளுடைய வார்த்தையை படித்தப் பின்பு வெர்ஜீனியா மகிழ்ச்சியோடு சொல்வதாவது: “என்னே ஒரு மாற்றம் என்னில் ஏற்பட்டிருக்கிறது! நான் என் அப்பாவை இனிமேலும் வெறுப்பதில்லை. பிசாசாகிய சாத்தானை தன் பின்னால் கொண்ட ஒரு சீரழிந்த அமைப்பின் பலியாளாக மட்டுமே அவர் இருப்பதை இப்பொழுது நான் தெரிந்துகொண்டேன். இப்பொழுது நான் அவருக்கு மரியாதை கொடுக்கிறேன். மேலும் எல்லோரையும் என்னால் அனுசரித்துச் செல்ல முடிகிறது.” ஆம், பைபிள் அறிவு இன்றைய கவலைகளுக்கான காரணத்தை புரிந்துகொள்ளவும் அவைகளை எவ்விதமாக சமாளிக்கலாம் என்பதை கற்றறியவும் வெர்ஜீனியா போன்ற இளைஞர்களுக்கு உதவியிருக்கிறது.
கடவுளிடம் நெருங்கியிருத்தல், சமாளிக்க முடியாததாக தோன்றும் அழுத்தங்களைக் கையாள உங்களுக்கு உதவக்கூடும். ஜூவானா குடிப்பழக்கத்துக்கு அடிமையான ஒரு தகப்பனையுடைய 19 வயது பெண். “சில சமயங்களில் அப்பா குடித்து விட்டு வீட்டுக்கு வந்து எங்களை அடிப்பார்,” என்று அவள் சொல்கிறாள். இந்த நிலைமையை அவள் எவ்வாறு சகித்துக் கொண்டிருக்கிறாள்? “நான் சோர்வாக இருக்கையில், யெகோவா தேவனை ஜெபத்தில் அணுகி பலப்படுத்தப்பட்டவளாக உணரமுடியும் என்பது எனக்குத் தெரியும்.” கடவுளை அறிந்துகொள்வதும், சாந்தம் மற்றும் நீடிய பொறுமை போன்ற அவருடைய சிறந்த பண்புகளை பின்பற்றுவதுங்கூட, அவளுடைய தகப்பனை எவ்விதமாக கையாளுவது என்பதைக் கற்றுக்கொள்ள ஜூவனாவுக்கு உதவியிருக்கிறது.—கலாத்தியர் 5:22, 23.
உங்கள் பெற்றோருக்கு மரியாதைக் காண்பித்து அவர்களுக்கு கொடுக்க வேண்டிய கனத்தைக் கொடுப்பது உங்களுக்கு எப்பொழுதும் எளிதாயிராது. ஆனால் கடவுளுடைய வார்த்தையாகிய பைபிளின் வல்லமையைக் குறித்து உறுதியாக நம்புவது உங்களுக்கு உதவி செய்யும். அப்போஸ்தலனாகிய யோவான் ஒரு சபைக்கு எழுதிய கடிதமொன்றில் அதிலிருந்த ஆவிக்குரிய பலமுள்ள “வாலிபரில்” தேவ வசனம் நிலைத்திருந்தபடியால் அவர்கள் “பொல்லாங்கனை ஜெயித்தார்கள்” என்பதாகச் சொல்லுகிறான். (1 யோவான் 2:14) ஆகவே பின்வருவது போன்ற பைபிளின் அறிவுரை ஜூவானா மற்றும் வெர்ஜீனியா போன்ற இளைஞர்களுக்கு உதவியிருக்கிறது: “வையப்பட்டு ஆசீர்வதிக்கிறோம்: துன்பப்பட்டு சகிக்கிறோம். தூஷிக்கப்பட்டு வேண்டிக் கொள்ளுகிறோம்.”—1 கொரிந்தியர் 4:12, 13.
மேலுமாக, ஒரு சிறந்த முன்மாதிரியால்—“பயபக்தியோடுகூடிய கற்புள்ள நடக்கையால்”—முதலிடத்தில் உங்களுக்கு தொல்லைகளை உண்டுபண்ணுகிறவர்களை ஆதாயப்படுத்திக்காள்ள முடியும் என்று அப்போஸ்தலனாகிய பேதுருவும் சொல்கிறான். (1 பேதுரு 3:1, 2) கிறிஸ்தவ மனைவிகளைக் கருத்தில் கொண்டு இந்த வார்த்தைகளைப் பேதுரு எழுதிய போதிலும் நீங்களுங்கூட இந்த அறிவுரையிலிருந்து நன்மையடையலாம்.
நிச்சயமாகவே தொல்லைகளைத் தாங்கிக்கொள்வது எப்பொழுதும் எளிதாக இருப்பதில்லை. சரியான உள்நோக்கத்தோடு ஜெபத்தில் யெகோவாவிடம் உங்கள் இருதயத்தை ஊற்றி விடுவது, தொல்லைகளை நீக்கிவிடக்கூடும். யெகோவா உதவி செய்ய விரும்புகிறார் என்பதையும் “நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியைச் செய்கிற” வல்லமை படைத்தவராய் இருக்கிறார் என்பதையும் தெரிந்துகொள்வது எத்தனை புத்துயிரளிப்பதாய் இருக்கிறது! (எபேசியர் 3:20, இன்றைய ஆங்கில மொழிபெயர்ப்பு; எரேமியா 9:24) மேலுமாக, கடவுள் “நம்மில் ஒருவருக்கும் தூரமானவரல்ல” என்பதாக பைபிள் நமக்கு உறுதியளிக்கிறது. (அப்போஸ்தலர் 17:27) ஆம், சென்றெட்டக்கூடிய தூரத்தில் எப்பொழுதுமிருக்கும் ஒரு சிநேகிதரை நீங்கள் கொண்டிருக்கலாம்.
உயர்வான ஒழுக்க தராதரங்கள்
கடவுளுடைய சிநேகிதராயிருப்பது, மனநிறைவையும் மன சமாதானத்தையும் கொண்டுவரும் உயர்வான ஒழுக்க தராதரங்களை வளர்த்துக் கொள்ளவுங்கூட இளைஞர்களுக்கு உதவியிருக்கிறது. (மத்தேயு 6:13: சங்கீதம் 141:3, 4) 16 வயது சோபியா, 14 வயதினளாக இருந்த போது ஒரு பையனோடு பாலுறவுக் கொண்டதாகச் சொல்கிறாள். பின்னோக்கிப் பார்த்து சோபியா சொல்வதாவது: “பைபிளைப் படிக்க ஆரம்பித்த பின்னரே, அவனை சந்திப்பதை நிறுத்திக் கொள்ள தீர்மானித்தேன்.” அது முதற்கொண்டு அவள் ஒழுக்கங் கெட்ட நடத்தையை எதிர்த்து வந்திருக்கிறாள். பைபிள் அறிவு, யெகோவாவோடு அவளுடைய உறவை பலப்படுத்தியிருக்கிறது என்று அவள் சொல்கிறாள்.
திருமணத்துக்கு முன் பாலுறவுக் கொள்வது உலகின் பல பகுதிகளில் சாதாரணமாக இருக்கிறது. மெக்ஸிக்கோவில் இளைஞர்களில் 90 சதவிகிதத்தினர் திருமணத்துக்கு முன் பாலுறவில் ஈடுபட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது! இதன் விளைவாக, அநேக பருவ வயதினர், அவசரமான திருமணம் அல்லது முறைகேடான பிள்ளை பிறப்பு போன்ற பின்விளைவுகளினால் அவதியுற்றிருக்கின்றனர். ஒரே ஒரு ஆண்டின் போது மெக்ஸிக்கோவில் பருவ வயது பெண் பிள்ளைகளுக்கு 10 லட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் பிறந்திருக்கின்றன!
இன்று இளம் வயதிலேயே பாலுறவில் ஈடுபடச் செய்வதற்கு கொண்டுவரப்படும் அழுத்தம் மிக அதிகமாகும். ஆனால் அப்படியே ஒழுக்கயீனமானச் செயலை நடப்பிக்க அதில் துணிந்து இறங்கிவிடுவற்கு பதிலாக, முதலாவதாக அதன் பின்விளைவுகளைக் குறித்து ஏன் ஆராய்ந்துப் பார்க்கக்கூடது? உடனடியாக ஏற்படும் சரீர சம்பந்தமான விளைவுகளைத் தவிர, நாம் கடவுளுடைய சட்டத்தை மீறினால் அவர் எவ்விதமாக பாதிக்கப்படுகிறார் என்பதை சிந்தித்துப் பாருங்கள். சோதனையின் கீழ் மனிதர்கள் கடவுளுக்கு உண்மையுள்ளவர்களாக இருக்க மாட்டார்கள் என்பதாக சாத்தான் சவாலிட்டிருக்கிறான். ஆகவே யெகோவா பின்வருமாறு துரிதப்படுத்துகிறார்: “என் மகனே, என்னை நிந்திக்கிறவனுக்கு நான் உத்தரவு கொடுக்கத்தக்கதாக, நீ ஞானவானாகி, என் இருதயத்தைச் சந்தோஷப்படுத்தது.” (நீதிமொழிகள் 27:11) இதைக் குறித்து சிந்தித்துப் பாருங்கள்: நீங்கள் கடவுளுடைய சட்டத்தை மீறி சாத்தானை சந்தோஷப்படுத்தி கடவுளை விசனப்படுத்துவீர்களா?—சங்கீதம் 78:38-41-ஐ ஒப்பிடவும்.
தனிப்பட்ட ஒரு நெருக்கமான உறவை நீங்கள் யெகோவாவோடு ஏற்படுத்திக் கொள்வதே ஒழுக்கக் கேட்டுக்கு எதிராக உங்களுக்கு மிகப் பெரிய பாதுகாப்பாக இருக்கும்.
மனித சக்திக்கு அப்பாற்பட்ட சோதனை எதுவுமில்லை
மறுபட்சத்தில், சில இளைஞர்கள் கடவுளோடு ஈடுபாட்டை ஏற்படுத்திக் கொள்வது குறித்து தயங்குகிறார்கள். “நான் கடவுளை ஏற்றுக் கொண்டுவிட்டால் அவர் முழுவதுமாக என்னை மேற்கொண்டு விடுவாரோ என்று நான் மிகவும் பயப்படுகிறேன். நான் எப்பொழுதும் நானாகவே இருக்கிறேன், ஆனால் என் இருதயத்தை திறந்து காட்ட நான் விரும்புகிறேன். நான் உண்மையில் அலைக்கழிக்கப்பட்டும் குழம்பியும் போயிருக்கிறேன். நான் கற்றுக் கொள்ளவும் படிப்படியாக அதை ஆரம்பிக்கவும் விரும்புகிறேன். என்னை அவசரப்படுத்தினால் நான் பயந்து விட்டு விடுவேனோ என்று நினைக்கிறேன்,” என்பதாக 14 வயது பெண் ஒருத்தி சொல்கிறாள். நீங்கள் இவ்விதமாக உணருகிறீர்களா?
அப்படியானால், வாழ்க்கையில் எந்த ஒரு பிரச்னையிலும் கடவுளால் உங்களுக்கு உதவ முடியும் என்ற உண்மையினால் நீங்கள் ஆறுதலடையக்கூடும். “மனித சக்திக்கு அப்பாற்பட்ட சோதனை எதுவும் உங்களுக்கு நேரிடவில்லை,” என்பதாக பைபிள் சொல்லுகிறது. “உங்கள் திராணிக்கு மேலாக நீங்கள் சோதிக்கப்படுவதற்கு இடங்கொடாமலும், ஆனால் சோதனை வரும் போது, அதை நீங்கள் எதிர்த்து நிற்க அதிலிருந்து தப்பிக்கொள்ள உங்களுக்கு ஒரு வழியைச் செய்யவும் அவரை நம்பியிருக்கலாம்.” (1 கொரிந்தியர் 10:13, ஒரு அமெரிக்க மொழிபெயர்ப்பு) இதைவிட வேறு எதை நீங்கள் கேட்க முடியும்?
ஆனால் நீங்கள் உதவிக்காக ஜெபித்துவிட்டு பின்னர், ஒழுக்க கேடான திரைப்படங்களுக்குச் சென்று அல்லது எதிர்பாலாரைப் பற்றி கனா கண்டுக் கொண்டு அல்லது காதல் விளையாட்டில் ஈடுபட்டுக் கொண்டிருக்கக்கூடது. எந்த ஒரு தனிப்பட்ட உறவிலும் பேச்சுத் தொடர்பு இன்றியமையாததாக இருப்பது போலவே, ஜெபத்துக்கு முதலிடம் இருந்தாலும்—ஜெபத்தில் நீங்கள் வேண்டிக் கொள்ளும் காரியத்துக்காக நீங்கள் உழைக்க வேண்டும்!—லூக்கா 11:9, 13.
ஒளிமயமான ஓர் எதிர்காலம்!
என்றபோதிலும் கடவுளோடு உங்கள் நட்பை காத்துக் கொள்வதில் உட்பட்டிருக்கும் முயற்சி—நீங்கள் செலுத்த வேண்டிய விலை—கடவுள் வாக்களித்திருக்கும் அநேக எதிர்கால ஆசீர்வாதங்களோடு ஒப்பிட மிகச் சிறியதாக இருக்கிறது. 17 வயது நாயி சொல்வதாவது: “யெகோவா ஒளிமயமான ஓர் எதிர்காலத்தை நமக்கு அளிக்கிறார்: பரதீஸிய பூமியின் மீது நித்திய மகிழ்ச்சியில் வாழ்க்கை! இது எந்த மனிதனும் அளித்திட முடியாத காரியமாகும்.”
கடவுளுடைய வார்த்தை, “இன்னுங் கொஞ்ச நேரந்தான், அப்போது துன்மார்க்கன் இரான். . . . நீதிமான்கள் பூமியைச் சுதந்தரித்துக் கொண்டு என்றைக்கும் அதிலே வாசமாயிருப்பார்கள்,” என்பதாக வாக்களிக்கிறது. (சங்கீதம் 37:10, 29) “நன்மையான எந்த ஈவையும் பூரணமான எந்த வரத்தையும்” தாராளமாக கொடுக்கிறவராக, யெகோவா தம்முடைய உண்மையுள்ள இளம் சாட்சிகளுக்கு ஆசீர்வாதங்களைக் கொடுத்து பலனளிப்பதில் மகிழ்ச்சியைக் காண்கிறார்.—யாக்கோபு 1:5, 17: சங்கீதம் 35:27: 84:11, 12: 149:4.
ஆகவே கடவுளுடைய சிநேகிதராயிருப்பது முக்கியத்துவமுடையதாக இருக்கிறது. கடவுள் உங்களில் அக்கறையுள்ளவராக இருக்கிறார். உங்களுக்கு ஒரு பிரச்னை இருக்கும்போது அவர் உதவி செய்ய விரும்புகிறார். அவர் எப்பொழுதும் அணுகப்படக்கூடியவராக இருக்கிறார். வாழ்க்கையில் எந்த பிரச்னையிலும் உதவி செய்வதற்கு அவர் வல்லமையுடையவராக இருக்கிறார். கடவுளுடைய சிநேகிதர்களின் பிரத்தியேக உடைமையாகிய நித்திய ஜீவனை யெகோவா மாத்திரமே உங்களுக்குக் கொடுக்கமுடியும்.—வெளிப்படுத்துதல் 21:3, 4: மத்தேயு 25:46. (g88 11⁄8)
[பக்கம் 25-ன் படம்]
“ஆபிரகாம் ‘யெகோவாவின் சிநேகிதன்’ என்றழைக்கப்பட்டான். இயேசு தம்மைப் பின்பற்றியவர்களை ‘என் சிநேகிதர்கள்’ என்றழைத்தார். . . . ஆகவே நானும்கூட அவர்களுடைய சிநேகிதனாகமுடியும்.”