போதை மருந்துகள் ஆபத்தானவை, மரணத்துக்கேதுவானவை
போதை மருந்துகள்—உணர்ச்சிகளைப் பாதிக்கும் பொருட்கள்—மனிதவர்க்கத்தின் ஆரம்ப நாட்களுக்குச் செல்லும் ஒரு சரித்திரத்தையுடையதாக இருக்கிறது. நரம்பு மண்டலத்தில் செயல்படும் இயற்கை வஸ்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டன: சோர்ந்துபோன மனதைத் தளர்த்திடும் சாராயம். அபினி வேதனையை நீக்கி தூக்கத்தைத் தரும். கொக்கோ இலைகள் உணர்ச்சிகளை மந்தப்படுத்தி சகிப்புத்தன்மையைக் கூட்டுகிறது.
சாராயச்சத்து வெகு காலமாக பயன்படுத்தப்பட்டுவந்திருக்கிறது. பைபிளில் ஆதியாகமம் 9:20, 21-ல் இப்படியாக நாம் சொல்லப்படுகிறோம்: “நோவா பயிரிடுகிறவனாகி, திராட்சத்தோட்டத்தை நாட்டினான். அவன் திராட்சரசத்தைக் குடித்து, வெறிகொண்டு” இருந்தான். அபினி பூர்வீக மொசொப்பத்தேமியாவில் அறியப்பட்டிருந்தது. பூர்வீக கிரீஸில் பரவலாக பயன்படுத்தப்பட்டதாகத் தெரிகிறது. பெயோட்டே, புகையிலை, கொக்கோ, சோமா—எல்லாமே சரித்திரம் முழுவதிலும் ஒரு பங்கை வகித்திருக்கின்றன.
கதைக் காவியங்களிலும் போதை மருந்துகள் இடம் பெற்றுள்ளன. தாமரை புசிப்பவர்கள் வாழும் தேசத்தில் ஒடிசஸின் ஆட்களுக்கு ஏற்பட்ட மறதி குறித்து ஹோமர் கூறினான். புகழ் பெற்ற துப்பறியும் கதாபாத்திரம் ஷெர்லாக் ஹோம்ஸ் 7 சதவிகித கொக்கேன் கலந்த மருந்தை ஊசி மூலம் ஏற்றினான், அது “மன அமைதியை ஊக்குவிப்பதாயும் மனதைத் தெளிவுபடுத்துவதாயும் இருப்பதைக் கண்டான்—இந்தக் கருத்து கற்பனைசாராத விக்டோரிய காலப்பகுதியைச் சேர்ந்த சிக்மண்டு ஃப்ரூட் பரப்பிய கருத்துக்கு ஒப்பாக இருந்தது.
மருத்துவத்தில் போதை மருந்துகளின் மதிப்பு கணிக்கப்பட்டது, ஆனால் அவற்றின் உபயோகம் வெறுமனே மருந்துக்குக் கட்டுப்பட்டதாக இல்லை. அவை மத சடங்காச்சாரங்களில் அதிகமாகப் பயன்படுத்தப்பட ஆரம்பித்தது. சுய உணர்வை வளர்ப்பதற்கும், உணர்ச்சிகளை அதிகரிக்கவும், போற்றுதலைக் கூட்டவும், ஒரு குறிப்பிட்ட சிந்தையை மாற்றவும், அன்புக்கான திறமையை வளர்க்கவும் அவை பயன்படுத்தப்பட்டன. ஆனால் அவற்றின் அழிக்கும் திறமைக்கும் சமூக பிரச்னைகளுக்கும் வரம்பில்லை.
இன்று சட்டப்பூர்வமாக விலக்கப்பட்டிருக்கும் போதை மருந்துகள் உடலுக்குக் கேடு விளைவிப்பவை என்று எல்லாச் சமயத்திலும் கருதப்படவில்லை என்பதை கவனிப்பது அக்கறையூட்டுவதாக உள்ளது. உதாரணமாக, ஐக்கிய மாகாணங்களின் 19-வது நூற்றாண்டின் பிற்பகுதியில் கொக்கேன், அபினி, ஹெராய்ன் ஆகியவை சட்டப்பூர்வமற்றதாயில்லை. அவை எந்த ஒரு மருந்து கடையிலிருந்தும் மருத்துவரின் சீட்டு இல்லாமலேயே கிடைக்கக்கூடியதாயிருந்தது. சில காப்புரிமை பெற்ற மருந்துகளிலும் பயன்படுத்தப்பட்டது. கொக்கோ–கோலாவில் 1903-ல் காபீன் பயன்படுத்தப்பட ஆரம்பிக்கப்பட்டது முதல் 17 ஆண்டுகளாகக் கொக்கேன் பயன்படுத்தப்பட்டது.
இன்று போதை மருந்து வியாபாரத்தை ஒடுக்கிட செயல்படும் தேசங்கள் ஒரு காலத்தில் அதை எங்கும் பரப்பிட போர் செய்தது. அபினிப் போர்கள்—தன்னுடைய தேசத்தில் கள்ளத்தனமாக அபினி விற்பனையை நிறுத்திட சீனா முயன்ற போது 19-வது நூற்றாண்டு மத்தியில் இரண்டு வியாபாரம் சார்ந்த போர்கள் நடந்தன. இது சீனாவின் தோல்வியில் முடிவுற்றது, அபினி சட்டப்பூர்வமாக இறக்குமதி செய்யப்படுவது அமலுக்கு வந்தது.
பாதிப்பற்ற ஒரு குற்றச்செயலா?
போதை மருந்துகள் சட்டப்பூர்வமாக்கப்படுவதை சிலர் ஆதரிக்கின்றனர். கள்ளத்தனமாக போதை மருந்துகள் விற்பனையைக் கையாளுவதில் காணப்படும் சிக்கலைத் தீர்ப்பதற்கு இதை அவர்கள் பரிகாரமாகக் காண்கின்றனர். போதை மருந்துகளைப் “பொழுதுபோக்குக்காக” எடுப்பது ஒரு தனிப்பட்ட விஷயம் என்றும், அது கேடில்லாத ஒரு மாற்றமே என்றும் மற்றவர்கள் கருதுகின்றனர். ஆனால் சிலர் கருதுவதுபோல, கள்ளத்தனமாக போதை மருந்துகளை உபயோகிப்பது “பாதிப்பை ஏற்படுத்தாத குற்றச்செயலா”குமா? பின்வரும் காரியத்தைக் கவனியுங்கள்.
● இருபத்தாறு வயது நெட்டாஷா ஆஷ்லி, எட்டரை மாத கர்ப்பிணி சின்ன இத்தாலி என்று அழைக்கப்படும் நியு யார்க் பட்டணத்தில் ஒரு பகுதியிலுள்ள நடைபாதையில் ஒரு சிநேகிதியிடம் பேசிக்கொண்டிருக்கிறாள். திடீரென்று ஒரு கார் இரண்டு பெண்களையும் மோதி ஆஷ்லியின் இடது காலை ஒரு சாலை விளக்குக் கம்பத்தில் நசுக்கி முட்டிக்குக் கீழே கடுமையாக பாதிக்கச் செய்தது. சிநேகிதியின் காலும் முறிந்தது. வாகன ஓட்டி தன்னுடைய காரில் போதை மருந்தருந்திய நிலையில், போதை மருந்து ஊசியைத் தன்னுடைய கையில் வைத்தபடி இருப்பதைப் போலீஸ் காண்கின்றனர். “ஓட்டும்போது போதை மருந்தை அதிகமாக உட்செலுத்தியிருப்பதாகத் தெரிகிறது,” என்று பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிகிச்சையளித்த மருத்துவ துணைப்பிரிவினர் கூறினர்.
● பன்னிரண்டு வயது மட்டுமே இருக்கும் மைக்கெல் பெர்க்கின்ஸ் மரித்துவிட்டான்—அவன் வசித்த வீட்டை தீக்கிறையாக்கிய தீ விபத்தில் கொல்லப்பட்டான். அந்த வீட்டில் போதை மருந்துகள் சம்பந்தப்பட்ட நடவடிக்கைகளைக் குறித்து அவனுடைய தந்தை முறையிட்டதால் அந்தப் போதை மருந்து வியாபாரத்தில் ஈடுபட்டவர்களால் வேண்டுமென்றே தீ வைக்கப்பட்டிருக்கிறது என்று காவல் துறை கூறுகிறது.
● ரோசா யுரேனா இந்த ஆண்டு கல்லூரிக்குச் செல்ல மாட்டாள் அல்லது திட்டமிட்டபடி அடுத்த ஆண்டு விவாகம் செய்துகொள்ள மாட்டாள். அவள் தன்னுடைய படுக்கையில் நித்திரையில் இருக்கும் போது காயமுற்றாள், திசை மாறி வந்த ஒரு துப்பாக்கிக் குண்டு அவளுடைய அறையின் சன்னலையும் கட்டிலின் தலைப்பகுதியையும் துளைத்துவந்து தலையைத் தாக்கியது. போதை மருந்து வியாபாரிகள் தங்களுடைய பிராந்தியமாக உரிமைப்பாராட்டி அவளுடைய கட்டடத்தை துப்பாக்கிக் குண்டுகளால் துளைத்தனர்.
● போதை மருந்துக்கு அடிமையான 17 வயது இளைஞன் தன்னுடைய போதைப் பழக்கத்தை ஆதரிக்க திருடச் செல்கிறான். எட்டு நாட்களுக்குப் பின்னர் கைதுசெய்யப்படுவதற்கு முன்பு அவன் ஐந்து பேரைக் கொன்று வேறு ஆறு பேரைக் காயப்படுத்தினான். “பாதிக்கப்பட்டவர்கள் அனைவருமே வேலைசெய்யும் அப்பாவி மக்கள்,” என்று துப்பறியும் பிரிவினரின் தலைமைப் பொறியாளர் குறிப்பிட்டார்.
மேற்காணும் போதை மருந்து சார்ந்த சம்பவங்கள் இந்த ஆண்டு ஒரே நகரில் நடந்தவற்றில் ஒரு சில மட்டுமே. அவை அச்சுருத்தும் வேகத்தில் வளருகின்றன.
நெடுஞ்சாலைகளில் வாகனம் ஓட்டுகிறவர்களில் ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்தினர் அவர்களுடைய நிதானத்தையும் செயல்களையும் பாதிக்கும் போதை மருந்து அருந்தியவர்கள் என்பதை அறிந்திருக்கும் நீங்கள் சாலையில் எவ்வளவு பாதுகாப்பாய் உணருவீர்கள்? ஒரு பேருந்தில், விமானத்தில் அல்லது இரயிலில் ஏறும் போது, உங்களுடைய பாதுகாப்புக்குப் பொறுப்புள்ளவர்களாக இருக்க வேண்டியவர்கள் போதை மருந்தின் செல்வாக்கில் இருக்கக்கூடும் என்பதை அறிந்துகொள்ளும் நீங்கள் நிம்மதியாக இருப்பீர்களா? ஏற்கெனவே “போதை மருந்துகளுக்கு அடிமைப்பட்டிருந்த விமான ஓட்டிகள், இரயில் ஓட்டுனர்கள், பேருந்து அல்லது லாரி ஓட்டுனர்கள், தொழிற்சாலை மேலாளர்கள், மருத்துவர்கள், ஆசிரியர்கள் மற்றும் அதிகாரத்தில் உள்ள மற்றவர்கள் பணியில் இருக்கும் போது [போதை மருந்தருந்திய போதையில்] ‘ஒரு பயணத்தில் செல்லும்’ ஆபத்தான நிலைகளை ஏற்படுத்தியிருக்கின்றனர்,” என்று மான்சஸ்டர் கார்டியன் வீக்லி குறிப்பிடுகிறது.
நியு யார்க்கில் மவுன்ட் வெர்னான் என்ற இடத்தில் நடந்த இரயில் விபத்தில், அந்த இரயில் ஓட்டுவதில் உட்பட்டிருந்த அந்த ஐந்து பேருமே போதை மருந்து அருந்தியிருந்ததாக பரிசோதனை காண்பித்தது. குடியரசின் இருப்புப்பாதை நிர்வாகி ஜான் H. ரிலே கூறினார்: “கடந்த 16 மாதங்களில் சராசரியாக ஒவ்வொரு 10 நாட்களில் ஒரு பெரிய இரயில் விபத்தைக் கொண்டிருக்கிறோம், அதில் 375 பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர் அல்லது காயமுற்றிருக்கின்றனர், இவற்றில் மதுபானம் அல்லது போதை மருந்துகள் பயன்படுத்தப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. கடந்த இரண்டு வருடங்களில் ஒவ்வொரு ஐந்து இரயில் விபத்துகளிலும் ஒன்றில் போதை மருந்து உட்பட்டிருப்பதை பரிசோதனைகள் காண்பித்திருக்கின்றன. 65 சதவிகித மரணங்களை உட்படுத்திய விபத்துகளில் ஒருவருக்கு மேற்பட்ட பணியாளர் மதுபானம் அல்லது போதை மருந்துகள் அருந்தியிருந்ததாக பரிசோதனைகள் காண்பித்தன.”
போதை மருந்துகளும் குற்றச்செயலும்
போதை மருந்தினால் ஏற்படும் உயிருக்கு ஆபத்தான சம்பவங்களில் உட்பட ஒருவர் பயணத்தில் இருக்க வேண்டியதில்லை. பாதிக்கப்பட்டிருப்பவர்கள் அநேக சமயங்களில் தங்களுடைய சொந்த வீடுகளிலும் தெருக்களிலும் இருப்பவர்கள். போதை மருந்துக்கு அடிமைப்பட்டிருக்கும் அநேகர் தங்களுடைய விலையுயர்ந்த பழக்கத்தைத் தொடருவதற்குக் குற்றச்செயலில் ஈடுபடுகின்றனர்—திருடுதல், குடித்தல், கொள்ளையடித்தல் ஆகியவற்றில் ஈடுபடுகின்றனர். “சில பட்டணங்களில் குற்றச்செயல் குற்றத்துக்குள்ளானவர்களின் சதவிகிதம் அண்மையில் 79-ஆக உயர்ந்திருக்கிறது என்று நீதித் துறையின் ஆய்வு கணித்தது,” என்று ஐ. மா. செய்திகளும் உலக அறிக்கையும் கூறுகிறது.
மற்றும் போதை மருந்துகள் அருந்தும் எதிர் பிரிவினருக்கும் அவர்களுக்குப் பணம் கொடுக்காத ஆட்களுக்கும் இடையே அடிக்கடி துப்பாக்கிச் சூடுகள் நடைபெறுகின்றன. இந்த மோதல்களில் அப்பாவி மக்கள்தான் சிக்கிக்கொள்கிறார்கள். “நான்கு அல்லது ஐந்து பேர் கொண்ட ஒரு தொகுதியில் பிரச்னை என்றால், மற்ற நான்கு அல்லது ஐந்து பேருக்கு அதிக ஆபத்தைக் குறிக்கும்,” என்று அதிகாரி ஒருவர் கூறுகிறார்.
ஐக்கிய மாகாணங்களின் தலைநகர் உவாஷிங்டன் டி. சி.யில் 1987-ல் 228 கொலைகள் நடந்தன—57 சதவிகிதத்தினர் போதை பொருட்களைப் பயன்படுத்தியவர்கள். நியு யார்க் நகரின் கொலைகள் 1,691, சராசரியாக ஒரு நாளில் 4 கொலைகள். அவற்றில் 38 சதவிகிதம் போதை மருந்துகளால் தூண்டப்பட்டது. “ஓக்லண்டு (கலிஃபோர்னியா) தீ அணைப்புத் துறை குறிப்பிடுகிறபடி, போதை மருந்துகள் கூட்டத்துக்கும் மெதுவாகப் பணம் கொடுக்கும் வாடிக்கையாளருக்கும் அல்லது கொக்கேய்னின் ஒரு வகை வெளிப்படையாக விற்பனை செய்யப்படுகிறது என்பதை முறையிட்ட குடிமக்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல்களில் தீ விபத்துக்கள் சார்ந்த சம்பவங்கள் 180-க்கும் அதிகமாகும்,” என்று நியு யார்க் டைம்ஸ் அறிக்கை செய்கிறது.
மொத்தத்தில் போதை மருந்துகளின் பாதிப்பை சமுதாயம் உணர ஆரம்பித்திருக்கிறது—குற்றச்செயலும் வன்முறையும் அதிகரிப்பு, பொருளாதார நெருக்கடி ஏற்படுவதால் விளையும் பொருளாதார சுமை, விபத்துக்கள்—அவை விளைவித்திருக்கும் உயர்ந்த செலவு. ஆனால் அதற்கான அதிக செலவை போதை மருந்து அருந்துபவர்கள்தாமே கொடுக்க வேண்டியதாயிருக்கிறது. அது எப்படி?
உபயோகிப்பவர்களுக்கு நேரிடும் ஆபத்துக்கள்
“போதை மருந்தின் துர்ப்பிரயோகம் தீயது. அது மனதை அழித்து உடலைக் கொல்லக்கூடும். ஒரு வார்த்தையில் சொன்னால், அது முட்டாள்தனம்,” என்பதாக மால்காம் லாரன்ஸ், சர்வதேச போதைமருந்துக் கட்டுப்பாட்டுக்கான ஐ. மா. மாநில காரியதரிசிக்கு விசேஷ உதவியாளர் கூறினார். ஆனால் தாங்கள் அதற்கு அடிமையாகவில்லை, தாங்கள் நிறுத்த விரும்பும் சமயத்தில் அதை நிறுத்திக்கொள்ள முடியும் என்று உரிமைப் பாராட்டும் ஆட்களைப் பற்றியது என்ன? “கிராக் என்ற போதை மருந்தைப் பல முறை எடுத்திருக்கும் ஆட்கள் மறுபடியும் அதற்குத் திரும்பாதிருந்த பலரை எனக்குத் தெரியும்,” என்றான் ஓர் உயர்நிலைப்பள்ளி மாணவன்.
“போதை மருந்து எடுக்கும் அல்லது புட்டியைக் காலி செய்யும் ஒவ்வொருவனும் நிச்சயமாகவே என்னுடைய முடிவை மேற்கொள்வதில்லை,” என்கிறான் முன்னாள் போதை மருந்து அடிமை கென் பாரன். இவன் தன்னுடைய 16-வது வயதில் மரியுவானா எடுக்க ஆரம்பித்தான். அதற்குப் பின் போதை மாத்திரைகளும், மயக்க மாத்திரைகளும், ஹெராய்ன் மற்றும் கொக்கேனும் எடுக்க ஆரம்பித்தான்—தன்னுடைய 25-வது பிறந்தநாளைக் காண எதிர்பார்க்கவில்லை. ஆனால் அநேகர் போதை மருந்துகளைச் சார்ந்திருக்கும் நிலையை அடைகிறார்கள், ஆனால் அது யாராக இருக்கக்கூடும் என்பது காலம் கடந்துதான் தெரியவரும். ஒரு பிரச்னை, போதை மருந்துகள் தற்காப்புத் திறனை அழித்துப்போடும் தன்மை வாய்ந்தது. உதாரணமாக கொக்கேன், இப்பொழுது அதிகமாகத் துர்ப்பிரயோகிக்கப்படும் போதை மருந்துகளில் ஒன்று. முதலில் அது உங்களை அதிக பலமுள்ளவராக அதிக விழிப்புள்ளவராக, அதிக உறுதியுள்ளவராக உணரச் செய்கிறது. அந்த உணர்வு அவ்வளவு நன்றாக இருப்பதால் அது உங்களை அடிக்கடி உபயோகப்படுத்தத் தூண்டுகிறது. ஆனால் நீங்கள் அப்படிச் செய்யும் போது, அந்தப் போதை மருந்து இல்லாமல் இருப்பது உங்களுக்குக் கஷ்டமாக இருப்பதைக் காண்கிறீர்கள்—எரிச்சலடைகிறவர்களாக, குழம்பியவர்களாக, கவலைப்படுகிறவர்களாக, மனச்சோர்வு கொண்டவர்களாக உணரச் செய்கிறது. உங்களுக்கு அதிகம் தேவையாயிருக்கிறது. ஆனால் அதை அடிக்கடி எடுத்துக்கொள்வது உங்களை அதற்கு அடிமையாக்கி, மனதால் துன்புறுவது போன்ற உணர்வு, மாயக்காட்சிகள் காண்பது, மற்றும் மனக்கோளாறுகளை உட்படுத்தும் ஏராளமான பிரச்னைகளை ஏற்படுத்தக்கூடும்.
கொக்கேன் நிரந்திரமாக இருதயத்தைப் பாதிக்கக்கூடும், இருதய நோய்களையும் வாத நோய்களையும் ஏற்படுத்தக்கூடும். ஐக்கிய மாகாணங்களில் பிரபல கூடை பந்தாட்ட வீரனாகிய 22 வயது லென் பையஸ் கொக்கேன் ஏற்படுத்திய மாரடைப்பால் மரித்தான், அவன் ஒருமுறைதான் அந்தப் போதை மருந்தைப் பயன்படுத்தியதாகச் சொல்லப்படுகிறது.
கொக்கேய்னிலிருந்து பெறப்படும் கிரேக் அதைவிட மோசமானது. “கிரேக் என்ற போதை மருந்து கொடிதாய்க் கேடுள்ளதாயிருப்பதற்குக் காரணம் அதன் மிக அதிக அளவில் அடிமையாக்கும் தன்மையும் மோசமான மருத்துவ மற்றும் மனக்கோளாறு பிரச்னைகளை ஏற்படுத்தும் தன்மையுமாகும்,” என்கிறது மனித பாலுறவின் மருத்துவ அம்சங்கள் (Medical Aspects of Human Sexuality). அது விலை மலிவானதாலும் தாராளமாகக் கிடைப்பதாயிருப்பதாலும், இளைஞர் மத்தியில் விசேஷ கவர்ச்சியைக் கொண்டிருக்கிறது. கிரேக் பயன்படுத்துபவர்கள் தங்களுடைய பெற்றோரைக் கொலை செய்பவர்களாகவும், தங்களுடைய சொந்த உயிரை மாய்த்துக்கொள்கிறவர்களாகவும் இருப்பது அறியப்பட்டிருக்கிறது.
“அறிக்கை செய்யப்பட்ட கொக்கேன் சம்பந்தப்பட்ட மரணங்களும் மருத்துவமனையில் அவசர சிகிச்சையளிக்கப்படுதலும் 1983 முதல் 1986 வரை மிக அதிகமாக உயர்ந்துவிட்டது,” என்று ஐக்கிய மாகாணங்களிலிருந்து வந்த ஒரு விசேஷ அறிக்கை கூறுகிறது. டான் (DAWN) என்ற போதை மருந்து துர்ப்பிரயோக எச்சரிக்கை இணையம் மருத்துவமனைகளையும் மருத்துவ ஆய்வாளர்களையும் உட்படுத்தி சேகரித்த புள்ளிவிவரங்கள் மருத்துவமனையில் சேர்க்கப்படவேண்டிய அவசர சிகிச்சைக்குள்ளாகும் ஆட்களின் எண்ணிக்கை 167 சதவிகிதமாகவும் அந்தக் காலப்பகுதியில் போதை மருந்து பயன்படுத்தியதால் ஏற்பட்ட மரணம் 124 சதவிகிதமாகவும் உயர்ந்தது என்று காண்பித்தது.
இளைஞர்மீது கொடிய பாதிப்பு
போதை மருந்துகளின் துர்ப்பிரயோகத்தின் மிகக் கொடிய விளைவுகளில் ஒன்று பிள்ளைகளின் மீது அதன் பாதிப்பு. “நியு யார்க் நகரத்தில் 1987.-ன் போது பிள்ளைகளைக் கொடுமைப்படுத்துதல் மற்றும் அசட்டை செய்தலின் கதை போதை மருந்து துர்ப்பிரயோக வெடிப்பின் கதையாகும்,” என்று மனித வள நிர்வாகத்தின் உள் உயிர்ச்சேத பரிசீலனைக் குழுவின் அறிக்கை கூறுகிறது. அங்கு பிள்ளைகளைக் கொடுமைப்படுத்துதலும் அசட்டை செய்தலும் சம்பந்தமாக 46,713 புகார்களும், இவற்றால் பிள்ளைகளின் உயிரிழப்புப் புகார்கள் 103-ஆகவும் பதிவுசெய்யப்பட்டிருந்தன. அத்துடன்கூட 1987-ம் ஆண்டில் 2,500-க்கும் அதிகமான பிள்ளைகள் போதை மருந்தின் பாதிப்பு அறிகுறிகளுடன் பிறந்தன. கொக்கேன் காரணமாக அநேக குழந்தைகள் உரிய காலத்துக்கு முன்னதாகவே முழு வளர்ச்சியடையாமல் பிறந்தவிடுகிறது. அநேக குழந்தைகள் குறைந்த எடை கொண்டவையாய் பிறக்கின்றன, ஏனென்றால் போதை மருந்து ப்ளெசன்டாவுக்கு இரத்தம் செல்லுவதைக் கட்டுப்படுத்திவிடுகிறது, முதிர்கருவுக்குச் செல்லும் ஆக்ஸிஜனையும் ஊட்டச்சத்துக்களையும் மட்டுப்படுத்திவிடுகிறது.
குழந்தைகள் கொடிய எய்ட்ஸ் நோய்க் கிருமிகளுடன் பிறக்கின்றன. ஊசி மூலம் போதை மருந்து அருந்தும் போது கடத்தப்பட்டு, அது அடுத்த நிலையாக தாயிலிருந்து அவளில் வளரும் முதிர்கருவுக்குக் கடத்தப்படுகிறது. இந்த ஆண்டின் இறுதிக்குள், நியு யார்க் நகரில் மட்டும் ஏறக்குறைய ஆயிரம் குழந்தைகள் எய்ட்ஸ் நோயுடன் பிறந்திருக்கும். “அதன் பெரும் பாதிப்பை இப்பொழுதுதானே பார்க்க ஆரம்பித்திருக்கிறோம்,” என்கிறார் கிங்ஸ் கெளன்ட்டி மருத்துவ மையத்தின் இயக்குனர் டாக்டர் லியோனார்டு கிளாஸ். இந்தப் புரூக்ளின் மருத்துவமனையில் ஒவ்வொரு மாதமும் மூன்று முதல் நான்கு குழந்தைகள் எய்ட்ஸ் நோயால் மரிக்கின்றனர்.
போதை மருந்துகளின் விளைவுகள் இப்படியாக ஆபத்தானவையாகவும் மரணத்துக்கேதுவானவையாகவும் இருப்பதைப் பார்க்கும்போது, உலகம் போதை மருந்துகளுக்கு எதிராக ஒரு பெரும் போரைத் தொடுக்கும், அது முற்றிலுமாக ஒழிக்கப்படும் என்பதாக நீங்கள் நினைக்கக்கூடும். அப்படியிருக்க அது ஏன் அதிகரித்துக்கொண்டிருக்கிறது? நமக்கு முன்பாக நம்பிக்கை ஏதும் உண்டா? (g88 12⁄8)
[பக்கம் 20-ன் பெட்டி]
இந்த பெட்டி தமிழில் இல்லை
[பக்கம் 22-ன் படம்]
பெற்றோர் போதை மருந்துகளைத் துர்ப்பிரயோகிப்பதால் உதவியற்ற நிலையில் பாதிக்கப்படுவது பிறவா குழந்தைகள்