அந்த இரும்புப் பெண்மணி புதுப்பொலிவு பெறுகிறாள்
ஃப்ரான்ஸ் தேசத்தின் விழித்தெழு! நிருபர்
அவளுக்கு வயதாகிவிட்டது, ஆனால் ஒரு சுருக்கமும் காணப்படவில்லை. அவள் எல்லாச் சமயத்திலும் நல்ல கவனிப்பைப் பெற்றுவந்தாள். ஏழு ஆண்டுகளுக்கு ஒரு முறை அவள் புதுப்பொலிவு பெறுகிறாள். அண்மையில்தானே அவள் மெலிவதற்கான ஓர் ஊட்டமுறைக்கு உட்படுத்தப்பட்டாள், இது அவளுடைய இளமையைப் பெற்றுத்தந்தது. அவளுக்கு உண்மையிலேயே அது தேவைப்பட்டது.
1889-ல் பிறந்ததுமுதல், இரும்புப் பெண்மணி என்று செல்லமாக அழைக்கப்பட்ட ஐஃபெல் கோபுரம் (Eiffel Tower) பல ஆபத்தான கட்டங்களை அனுபவித்திருக்கிறாள். கான்கிரீட் தரைகள் போடப்பட்டது, முதல் மாடியைப் பளுவாக்கியது, மற்றும் அதன் அடுக்குகளில் கடைகளும் கூடங்களும் நிறுவப்பட்டன. கூடுதல் பளுவின் காரணத்தால் இரும்புக் கம்பங்கள் வளைய ஆரம்பித்தன. முதல் இரண்டு மாடிகளில் அமைக்கப்பட்டிருக்கும் உணவகங்களுக்காகப் பொருத்தப்பட்டிருந்த எரிவாயு குழாய்களை நீக்கவேண்டியதாயிருந்தன. அது நவீன பாதுகாப்பு விதிகளுக்கு இசைவாக இருக்கவில்லை.
1980-களின் ஆரம்பப் பகுதியில், புதுப்பிக்கும் பழுதுபார்க்கும் வேலைகளைத் தொடங்குவதற்குப் பாரீஸ் நகரம் பச்சைக் கொடி காட்டியது. இதன் நோக்கம், வயதான அந்த இரும்புப் பெண்மணிக்கு உயிர்ப்பும் மதிப்பும் அளிப்பதும், அவளை ஆண்டுதோறும் பார்க்க வரும் இலட்சக்கணக்கான விருந்தினரை வரவேற்று சிறப்பிப்பதுமாகும்.a துருப்பிடித்த பகுதிகளை நீக்கியது அவளுடைய “எடையைக் குறைக்க” உதவியது—அதுவே பல்லாயிர டன்கள் எடையாக இருந்தது. என்றபோதிலும், புதுப்பிப்பு வேலை புதிய கடைகளும், ஓர் நவீன மாநாட்டு அறையும், ஒரு அஞ்சலகமும், அந்த இடத்துக்குத் தகுந்ததும், வித்தியாசமான ஆட்களுக்கு ஏற்ற உணவைத் தயாரித்தளிக்கக்கூடியதுமான உணவகங்களும் கட்டப்படுவதற்கு வழிவகுத்தது.
இரண்டாவது மற்றும் மூன்றாவது மாடிக்குச் செல்ல (சுற்றுலா பயணிகளைக் கோபுரத்தின் மத்தியிலிருந்து உச்சிக்குக் கொண்டுசெல்ல) அமைக்கப்பட்டிருந்த பழைய நீராற்றலால் இயங்கும் ஏற்றப் பொறி எடுக்கப்பட்டுவிட்டது. கடுமையான குளிர்ப்பருவத்தில் அதன் உபயோகிப்பை நிறுத்தவேண்டியதாயிருந்தது. இப்படியாக, குளிர்காலத்தில் பாரீஸ் வரும் சுற்றுலாப் பயணிகள் இரண்டாம் மேடைக்கு மேல் செல்ல முடியாதது குறித்து ஏமாற்றமடைந்தனர். இப்பொழுதோ, நான்கு அதிவேக மின் ஏற்றப்பொறிகள் எல்லாச் சீதோஷண நிலைகளிலும் இயங்கக்கூடியவையாக இருக்கின்றன. இது மேல் பகுதிக்குச் செல்ல காத்திருக்கும் மக்கள் வரிசையை வெகுவாகக் குறைக்கிறது.
அவளை அண்மையில் புதுப்பித்ததில் இரண்டாவது மூன்றாவது மாடிக்குச் செல்வதற்கு அமைக்கப்பட்டிருந்த சுருள் படிக்கட்டை அவள் இழந்துவிட்டாள் என்று சிலர் வருத்தம் தெரிவித்திருக்கின்றனர். ஆனால் அவளுக்குப் புதிய மின் விளக்கு ஜோடனை கொடுக்கப்பட்டது. திறம்பட அமைக்கப்பட்டிருக்கும் நூற்றுக்கணக்கான பேரொளி விளக்குகள் அவளுடைய அருந்திறம் வாய்ந்த அமைப்பின் அழகைப் பெருக்கி, இரவு நேரங்களில் முழு மகிமையில் காட்சியளிக்க அனுமதிக்கின்றன.
அந்த இரும்புப் பெண்மணி கடந்த ஆண்டு நூறு வயதை எட்டினாள். அவளுடைய பிறப்பின்போது அவள் வாதத்துக்குரியவளாயிருந்த போதிலும், பாரீஸ் அடிவானிலிருந்து அவள் மறைவதைக் காண எவருமே விரும்புவதில்லை. அவள் இன்னும் பாரீஸின் மிகப் பிரபலமான சின்னமாக இருக்கிறாள். (g89 1⁄8)
[அடிக்குறிப்புகள்]
a 1979-ல் 34 இலட்சம் பயணிகள் விஜயம் செய்தனர், 1987-ல் புதுப்பிக்கும் பணிக்குப் பின்பு 42 இலட்சம் பயணிகள் விஜயம் செய்தனர்.
[பக்கம் 10, 11-ன் படங்கள்]
இலட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் பாரீஸ் நகர் முழுவதையும் ஐஃபெல் கோபுரத்தின் உச்சியிலிருந்து பார்த்து மகிழும் அனுபவத்தைக் கொண்டிருக்கின்றனர்