இளைஞர் கேட்கின்றனர் . . .
அந்த வீட்டு வேலைகளையெல்லாம் நான் ஏன் செய்ய வேண்டும்?
“என்னுடைய அறையைச் சுத்தம் செய்வதா? ஏன்? அதைப் பற்றி நான் கவலைப்பட்டுக்கொண்டிருக்க முடியாது. என்னதான் செய்தாலும், இன்னும் இரண்டு நாட்களில் இதே நிலைமைதான்.”—ஸ்டெஃபானி, வயது 15.
“அம்மா எனக்குச் செய்வதற்குக் கொடுக்கும் வீட்டு வேலைகள் பிற்பகல் முழுவதையும் எடுத்துவிடும்போது, நான் அதிகக் கடினமாக வேலை செய்துவிட்டதாக உணருகிறேன். பின்பு நான் சற்று நின்று யோசிக்கிறேன். அம்மா இடைவிடாமல் நாள் முழுவதும் வேலை செய்கிறார்கள். அது செய்வதற்குச் சுலபமாயிருப்பதில்லை என்பதை உணருகிறேன்.
வீட்டு வேலைகளைச் செய்வதன் பேரில் பருவ வயதினரின் உணர்வுகள் மனமுவந்து செய்ய வருவதிலிருந்து நேரடியாக மறுப்பது வரை செல்கிறது. நீ வேலையாக இல்லாத நேரத்தில் சுத்தம் செய்வது, சாமான்களைக் கழுவுவது போன்ற “சலிப்படையச்செய்யும்” வேலைகளைச் செய்யும்படி கேட்டுக்கொள்ளப்பட்டால், நீயும் ஓரளவுக்குத் தயக்கத்தை வெளிப்படுத்தக்கூடும். என்றபோதிலும், வீட்டு வேலைகளைச் செய்வதை நீ இன்பமான ஒரு மாற்றமாக நோக்கினாலுஞ்சரி அல்லது உன்னைத் தொந்தரவு செய்யும் எரிச்சலான ஒன்றாய் நோக்கினாலுஞ்சரி, ஒரு குடும்பம் பிரச்னையின்றி செயல்படுவதற்கு அவை மிகவும் அவசியம். அப்படிப்பட்ட காரியங்களில் குடும்ப அங்கத்தினர்கள் மனமுவந்து ஒத்துழைக்காவிட்டால், பிரச்னைகளும் அழுத்தங்களும் ஏற்படுகின்றன.
உன்னுடைய உதவி ஏன் முக்கியமானது
குப்பையை அப்புறப்படுத்துவது போன்ற கஷ்டமான வேலைகள்தான் அதிக முக்கியமானது என்பதாக நீ உணரக்கூடும். என்றபோதிலும், வீட்டில் எப்பொழுதும் செய்யப்படும் வேலைகளும் முக்கியமானவை, ஏனென்றால் அவை இன்பமான ஒரு வீட்டை அமைப்பதோடு, மதிப்புள்ள பொருட்களை நல்ல நிலையில் வைக்க உதவுகிறது. மாய், டா மெரே (நான், உன் அம்மா) என்ற தன்னுடைய நூலில் ஃபிரெஞ்சு எழுத்தாசிரியர் கிறிஸ்டியன் காலங் இந்தக் குறிப்பை நகைச்சுவையுடன் அறிவுறுத்துகிறார்: “பொருட்களை அதற்குரிய இடங்களில் வைத்து அவற்றைப் பராமரிப்பது என்பது களைப்பை ஏற்படுத்தும் ஒரு காரியம். ஆனால் நீங்கள் அவற்றை அசட்டை செய்வீர்களானால், அவை அழுக்குப் படிந்து, உடைந்து அல்லது காணாமற்போவதன் மூலம் உங்களைப் பழிவாங்குகின்றன.”
உன்னுடைய அன்பான ஒத்துழைப்பு பெற்றோருக்கு இருக்கும் அழுத்தத்தைத் தணிக்க உதவக்கூடும், அவர்கள் பொதுவாக முழு-நேரமாக அல்லது பகுதி-நேரமாக வேலை செய்கிறவர்களாக இருக்கிறார்கள். வீட்டிலுள்ள வேலைகளில் உதவுவதன் மூலம், நீ உன் பெற்றோரை இன்னும் நல்ல விதத்தில் அறியவருகிறாய். எப்படி? பாரீஸ் நகரத்துக்கு அண்மையில் வசிக்கும் பதினாறு வயது டாமினிக் விளக்கினான்: “உங்களுடைய பெற்றோருக்கு உதவி செய்யும் போதுதானே, அவர்கள் ஏன் அவ்வளவு களைப்பாக இருக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள ஆரம்பிக்கிறீர்கள். ஒரு வேலையில் பல மணிநேரங்களைச் செலவழித்த பின்பு, அவர்களுடைய இடத்தில் உங்களை வைத்துப் பார்த்து, அவர்கள் உண்மையிலேயே களைப்பாக இருக்கிறார்கள் என்பதை உணரவருவீர்கள்.” உன்னுடைய ஆதரவைப் பெற்றோர் மதித்துணருகிறார்கள் என்பது குறித்து நிச்சயமாயிரு!
ஆள்தன்மையைப் பலப்படுத்துதல்
வீட்டு வேலைகளை ஒரு வாழ்க்கைப் பாடமாகவும் நோக்கக்கூடும், மனஉறுதிக்கு ஓர் அன்றாடகப் பயிற்சி. உண்மைதான், அதன் நற்பலன்கள் எல்லாச் சமயத்திலும் உடனடியாகக் கிடைப்பதாயிருக்காது. ஆனால் பொறுப்புகளை ஏற்றுக்கொள்வதனிடமான உன் முயற்சிகள் வாழ்க்கையில் பின்னால் நற்பலன்களைக் கொடுக்கும் என்பதை நினைவிற்கொள். பைபிள் இப்படியாகச் சொல்கிறது: “தன் இளம் பிராயத்தில் நுகத்தைச் சுமக்கிறது மனுஷனுக்கு நல்லது.”—புலம்பல் 3:27.
ஆம், உன் ஆள்தன்மையை, பெரியவனாகும்போது உனக்கு அமையும் வாழ்க்கையின் அழுத்தங்களை எதிர்த்து நிற்கும் ஆள்தன்மையை நீ படிப்படியாகப் பலப்படுத்திக்கொள்ள வேண்டும். எனவே உன்னுடைய சொந்த கால்களில் நிற்பதற்கு உனக்கு உதவியாயிருக்கும் நல்ல வேலைப் பழக்கங்களைப் பயிற்றுவித்துக்கொள்ளும் காரியத்தை உன் வாழ்க்கையின் இளம் பிராயத்திலேயே ஆரம்பித்துவிடவேண்டும்—இது ஓய்வாக இருப்பதற்கான நேரத்தைக் குறைத்துக்கொள்வதாக இருந்தாலும் செய்யப்படவேண்டும்.
ஸ்டெஃபானி ஒப்புக்கொள்வதாவது: “வீட்டு வேலை செய்வது எனக்குப் பிடிக்காது. எனக்குள் இப்படியாகச் சொல்லிக்கொள்வதுண்டு: ‘உனக்குப் பிடிக்கவில்லையென்றால் அதைச் செய்யாதே.’ ஆனால் என்னுடைய நோக்கு நிலை மாறிவிட்டது. வீட்டு வேலைகளில் நான் உதவி செய்வது, என்னைப் பொறுப்புள்ளவனாயிருக்க கற்பிக்கும், அது எனக்குப் பின்னால் நல்ல உதவியாக இருக்கும்.”
நீ ஒரு பையனாக இருந்தால், சாதாரணமாகப் பெண் பிள்ளைகளால் செய்யப்படும் வேலைகளைச் செய்யும்படியாக, அல்லது நீ பெண்பிள்ளையாக இருந்து ஆண்பிள்ளைகளால் செய்யப்படும் வேலைகளைச் செய்யும்படியாக உன் பெற்றோர் உன்னைக் கேட்டுக்கொண்டால் நீ சோர்ந்து எரிச்சலடையாதே. பின்னால், நீ பெரியவனாகி, உன்னுடைய சொந்த கால்களில் நிற்க வேண்டிய சமயம் வரும்போது, வித்தியாசமான வீட்டு வேலைகளில் கைதேர்ந்தவனாயிருப்பது கண்டு மகிழ்வாய். மற்றும், ஒரு பையன் பட்டன் தைப்பது எப்படி என்பதை அறிந்துகொள்வதும், அல்லது ஒரு பெண் சுவற்றில் ஆணியடிப்பது எப்படி என்பதைத் தெரிந்து கொள்வதும் மதிப்புக் குறைவான காரியங்களல்ல! அக்கறைக்குரியவிதத்தில் யோவன் 21:9–12-லுள்ள பைபிள் பதிவு, இயேசு தம்முடைய சீஷர்களுக்காக ஒரு வேளை உணவைத் தயாரித்தார் என்று குறிப்பிடுகிறது; பூர்வ காலங்களில் இந்த வேலை பெண்களுக்கென ஒதுக்கப்பட்டிருந்தது.—நீதிமொழிகள் 31:15-ஐ ஒப்பிடவும்.
ஒரே அலைவரிசைக்கு அமைத்துக்கொள்ளுதல்
“நான் எவ்வளவுதான் முயற்சி செய்தாலும், என்னுடைய பெற்றோர் திருப்தியடைவதே இல்லை,” என்று சில இளைஞர் சலித்துக்கொள்கின்றனர். என்றபோதிலும், பிரச்னை என்னவாக இருக்குமென்றால், பெற்றோரும் பிள்ளைகளும் ஒரே மொழியைப் பேசுகிறவர்களாயில்லாதது. L’autorite des parents dans la famille (பெற்றோர் அதிகாரம்!) என்ற தன்னுடைய புத்தகத்தில் ஜான் ரோஸ்மாண்டு சம்பந்தமுடைய பின்வரும் கருத்தைத் தெரிவித்தார்: “ஓர் அறையைச் ‘சுத்தம் செய்வது’ எதை அர்த்தப்படுத்துகிறது? பிள்ளைகளுக்குத் தெரியும் என்பதாகப் பெற்றோர் நினைத்துக்கொள்கின்றனர், ஆனால் ‘சுத்தம்’ என்பது குறித்த எண்ணம் பெற்றோருடைய அதே எண்ணமாக ஒருபோதும் இருப்பதில்லை . . . ஒரு சில வேலைகள் தினந்தோறும் செய்யப்படவேண்டுமென்றால், அதில் என்னென்ன காரியங்கள் உட்படுத்தப்படவேண்டும் என்ற ஒரு பட்டியல் தேவையற்ற பல விவாதங்களுக்கு இடமளிக்காது. தெளிவாக விளக்கமாகக் குறிப்பிடப்படும் ஒரு விதிக்குக் கீழ்ப்படிவது எல்லாச் சமயத்திலும் எளிதாயிருக்கிறது.”
உன்னுடைய பெற்றோருக்குத் தேவைப்படும் உதவி பொதுவாக இரண்டு வகைப்படும். (1) பொதுவாகக் குடும்பத்துக்குச் செய்யப்படும் வேலைகள், உதாரணமாக, உணவருந்துவதற்காக மேசையை ஆயத்தப்படுத்துதல் அல்லது உணவருந்திய பின்னர் சுத்தம் செய்தல், பாத்திரங்களைக் கழுவுதல், வீட்டைச் சுத்தம் செய்தல், சமையல் செய்தல், கடைக்குச் சென்றுவருதல், குப்பைப் பையைக் காலி செய்தல், தோட்டத்தைக் கவனித்தல் போன்றவை; (2) உனக்காகச் செய்யப்படும் வேலைகள், உதாரணமாக உன்னுடைய படுக்கையை ஆயத்தப்படுத்துதல், உன்னுடைய அறையைச் சீராக வைத்துக்கொள்ளுதல், உன்னுடைய அழுக்கு உடைகளை ஒதுக்குதல் மற்றும் காலணிகளைப் பராமரித்தல். மேற்குறிப்பிடப்பட்டக் காரியங்களில் உன்னுடைய பெற்றோர் உன்னிடம் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பது குறித்து நீ நிச்சயமாயில்லாவிட்டால், அவசியப்பட்டால், குறிப்பான ஆலோசனைகளை அல்லது செய்யவேண்டிய காரியங்களின் ஒரு பட்டியலை வாங்கிக்கொள். பெரும்பாலும், செய்யவேண்டிய வீட்டு வேலைகளை செய்வதற்கு எடுக்கும் நேரத்தைவிட அவற்றின்பேரில் வாதாடுவதில்தானே அதிகமான நேரம் செலவழிக்கப்படுகிறது! ஃபிரெஞ்சு நாட்டு இளைஞரில் இருவர், கம் மற்றும் டாமினிக் இப்படியாகத் தெரிவிக்கிறார்கள்: “நாம் குறைந்த வேலை செய்யும் போது, குறைவாக செய்யவே விரும்புகிறோம், அதைச் செய்வதற்கு அதிக சாக்குபோக்குகள் சொல்கிறோம்.” எனவே உன் வீட்டு வேலைகளை எவ்வளவு வேகமாகச் செய்கிறாயோ, அனைவரும் அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்க முடியும்.
உன்னுடைய பெற்றோர் உன்னால் செய்ய இயலாத காரியத்தை எதிர்பார்க்கிறார்கள் என்றும் உன்னுடைய சகோதர சகோதரிகளிடமிருந்து ஒரு வேலையும் எதிர்பார்ப்பதில்லை என்றும் நீ உணருவாயானால், அப்பொழுது என்ன செய்வது? நீதியின் உணர்வு உனக்கு அதிகமாக இருக்கிறது, நீ சோர்ந்துவிடுகிறாய். எனவே உன்னுடைய பெற்றோரிடம் மனம்விட்டு பேசுவதற்காக ஒரு சரியான சமயத்தை ஏன் தெரிந்துகொள்ளக்கூடாது? உன்னைவிட உன்னுடைய சகோதர சகோதரிகளுக்கு அதிகமான வீட்டுப் பாடங்கள், பள்ளி நேரம் நீண்டிருப்பது, ஆகியவற்றின் காரணமாக நேரம் குறைவாக இருப்பதை நீ காணக்கூடும். அல்லது பிள்ளைகளிலேயே நீ தானே அதிக ஆரோக்கியமானவனும் பலமுள்ளவனாகவும் இருக்கக்கூடும். அதைக் குறித்து நீ விசனப்படவேண்டுமா?
வீட்டில் வேலைகள் உன்னுடைய நேரத்தை அதிகமாக எடுத்துக்கொள்கிறது என்பதாக நீ நினைப்பாயானால், என்ன செய்வது? தொலைக்காட்சி பார்ப்பதில், உனக்கு விருப்பமான இசையைக் கேட்பதில், அல்லது வாசிப்பதில் நீ செலவழிக்கும் நேரத்தைக் கணக்கிட்டுப் பார்! ஒருவேளை உன் நேரத்தை செலவழிக்கும் விதத்தை கவனிக்க வேண்டியதாயிருக்கலாம்.
“அது எப்படி ஆரம்பித்தது என்றால்,” என்று சொல்லத் தொடங்குகிறான் ஸ்டீவன், “என்னுடைய பெற்றோர் என்னுடைய அறையைக் கவனித்துக் கொள்ளவும் பாத்திரங்களைக் கழுவவும் சொன்னார்கள்.” இது ஸ்டீவனுக்கு அதிக பாரமாகத் தோன்றியது. ஆனால், தன்னுடைய நேரத்தைச் சரியாக ஒழுங்குபடுத்திக்கொள்வதன் மூலம், தன்னுடைய வீட்டு வேலைகளை மிக எளிதாகச் செய்ய முடியும் என்பதை அவன் கற்றுக்கொண்டான்.
உன்னுடைய வேலையால் கடவுளைப் பிரியப்படுத்துதல்
வீட்டு வேலைகளில் உதவுவதன் மூலம், பைபிள் காலங்களில் வாழ்ந்த இஸ்ரவேலரின் பிள்ளைகளைப்போன்றும் இளைஞரைப் போன்றும் உன் பெற்றோரை நீ கனப்படுத்துகிறாய். உதாரணமாக லாபானின் மகள் ராகேல், தன்னுடைய தந்தையின் மந்தையைக் காத்துவந்தாள். அதுபோல, ரெகுவேல், அல்லது எத்ரோவின் பெண் பிள்ளைகள் மந்தைக்குக் கிணற்றிலிருந்து தண்ணீர் மொண்டெடுக்கும் பொறுப்பையுடையவர்களாய் இருந்தனர்—களைப்படையச் செய்யும் கடினமான வேலை. (ஆதியாகமம் 29:9; யாத்திராகமம் 2:16) பையன்களுங்கூட நடைமுறையான பயிற்றுவிப்பைப் பெற்றார்கள், இயேசு தம்முடைய வளர்ப்புத் தந்தையிடமிருந்து தச்சு வேலையைக் கற்றார் என்பதில் சந்தேகம் இல்லை.—மத்தேயு 13:55; மாற்கு 6:3.
பூர்வ காலங்களில் இருந்தது போல, உன்னுடைய பெற்றோருக்குச் சந்தோஷமாக ஆதரவு கொடுப்பது ஆசீர்வாதத்தில் விளையும். ரெபெக்காளைப் பற்றிய பைபிள் பதிவைக் கவனி. ஆபிரகாமின் ஊழியக்காரன் தாகத்துக்குத் தண்ணீர் கேட்டபோது, அவனுக்குத் தண்ணீர் கொடுத்ததுமட்டுமின்றி, அவனுடைய ஒட்டகங்களுக்கும் தண்ணீர் மொண்டு கொடுப்பதற்கு மனமுள்ளவளாயிருந்தாள். அவள் “இன்னும் மொண்டுவரத் துரவண்டையில் ஓடி, அவனுடைய ஒட்டகங்களுக்கெல்லாம் மொண்டு வார்த்தாள்,” என்று பைபிள் அறிக்கை செய்தது. (ஆதியாகமம் 24:15–21) அது பத்து ஒட்டகங்கள் அடங்கிய ஒரு கூட்டமாக இருந்தது. ஓர் ஒட்டகம் நாள் ஒன்றுக்கு 25 முதல் 35 லிட்டர் தண்ணீர் குடிக்கக்கூடும் என்பதை ஒருவர் எண்ணிப் பார்க்கும் போது, எல்லா ஒட்டகங்களுக்கும் தண்ணீர் கொடுக்க ரெபெக்காள் ஏராளமான தண்ணீர் மொண்டெடுத்திருக்க வேண்டும் என்பது தெளிவாகிறது. என்றபோதிலும் வேலை செய்வதற்கு மனமுள்ளவளாக இருந்தது அவளுக்கு ஆசீர்வாதங்களைக் கொண்டுவந்தது. ஈசாக்கின் மனைவியாக இருப்பதற்குத் தெரிந்துகொள்ளப்பட்டாள், மற்றும் மனிதவர்க்கத்தை ஆசீர்வதிக்கும் வித்தைக் கொண்டுவருவதற்கான கடவுளுடைய நோக்கம் செயல்படுத்தப்படுவதில் ஒரு பங்கையுடையவளாய் இருந்தாள்!—ஆதியாகமம் 22:18.
அதுபோல நீ வீட்டு வேலைகளைச் செய்வதில் பங்குகொள்ளும்போது, ‘உன்னுடைய பெற்றோரைக் கனம்பண்ணுவதற்கான’ உன் ஊக்கமான முயற்சிகளில் யெகோவா பிரியம்கொள்கிறார்.—எபேசியர் 6:1, 2. (g89 1/8)
[பக்கம் 21-ன் படம்]
பெரும்பாலும், செய்யவேண்டிய வீட்டு வேலைகளை செய்வதற்கு எடுக்கும் நேரத்தைவிட அவற்றின்பேரில் வாதாடுவதில்தானே அதிகமான நேரம் செலவழிக்கப்படுகிறது!