முழு வளர்ச்சியுறாமல் பிறக்கும் குழந்தைகளுக்குக் கனிவான, அன்பான கவனிப்பு தேவை
ஞாயிறு காலை மூன்று மணி. அந்தச் சீக்கிரமான பிரசவத்தைத் தூண்டியது எது என்பது எனக்குத் தெரியவில்லை. ஒரு வேளை நான் பொழுதுபோக்குகளில் அளவுக்கதிகமாக ஈடுபட்டிருக்கக்கூடும் என்று நினைக்கிறேன். காரணம் என்னவாக இருந்தபோதிலும், என்னுடைய மகன் ஒரு மாதத்துக்கு முன்னதாகவே அதிக சீக்கிரமாக வருகிறவனாயிருந்தான்.
பிரசவ வேதனை நீடிக்கக்கூடியதாகவும் கடுமையாகவும் இருந்தது. ஞாயிறு முழுவதும், ஞாயிறு இரவு முழுவதும் நான் பிரசவிக்காமல் பிரசவ வேதனையில் இருந்தேன். வேதனை இருந்தது, ஆனால் பிரசவிக்கவில்லை. அநேக சமயங்களில் வேதனைகளின்போது பேறுகாலம் பார்ப்பவள் குழந்தையின் தலையைப் பார்ப்பாள், ஆனால் அடுத்த நிமிடம் அது இருக்கும் இடம் தெரியாது போய்விடும். திங்கட்கிழமை காலை நான்கு மணிக்கு, பிரசவ வேதனை ஆரம்பித்து 25 மணிநேரங்களுக்குப் பின்னர், மருத்துவச்சி குழந்தையின் இருதயத்துடிப்பைக் கவனித்து, அது ஆபத்தில் இருப்பதாக உணர்ந்தாள். அவள் எனக்கு ஆக்ஸிஜன் கொடுத்து, உடனே மருத்துவமனையில் சேர்த்தாள். மூன்று மணிநேரம் கழித்து டேனி பிறந்தான்.
அவன் சுவாசிப்பதற்குக் கஷ்டப்படுவதை என்னுடைய கணவன் பில்லும் நானும் காணமுடிந்தது. அவனுடைய நுரையீரல் நன்கு செயல்படவில்லை. அவனை ஒருசில வினாடிகளுக்குத் தூக்கிவைத்திருக்க அனுமதித்தார்கள். அந்தச் சமயத்தில், நாங்கள் அவனைத் தூக்கிவைத்திருக்கும்போதும், அவனோடு பேசும்போதும் அவனுக்குச் சுவாசிப்பது எளிதாயிருப்பதைக் கவனித்தோம். அவனை இன்குபேட்டரில் வைக்க வேண்டும் என்று அந்த மருத்துவமனை ஊழியர் சொன்னபோது, நீடித்த, குழம்பச்செய்த அப்படிப்பட்ட பிரசவவேதனைக்குப் பின்பு அவர்களிடம் வாதாடும் நிலையில் நான் இல்லை.
காலை 9.30 மணியளவில் குழந்தை நோய் மருத்துவர் என்னைப் பார்க்க வந்தார். தான் குழந்தையைப் பரிசோதித்ததாகவும், அவன் நன்றாக இருப்பதாகவும் தெரிகிறது என்றார். அவனுக்குத் தாய்ப்பால் கொடுப்பதற்காக குழந்தையை என்னிடம் கொண்டுவருவார்கள் என்றும் அவர் சொன்னார். ஆனால் குழந்தையோ வரவில்லை. 10 மணி, 11 மணி, 12 மணியாகியும் டேனியைக் காணோம். கடைசியாக, பிற்பகல் கடந்து ஒரு செவிலியர் வந்து, “உங்களுடைய குழந்தை பின்னிழுப்பும் புடைப்புமாய் இருக்கிறான், எனவே அவனைப் புறத்தொடர்பில்லா நிலையில் வைக்க வேண்டும்!” என்று அறிவித்துவிட்டு, வேறு எந்த விளக்கமும் கொடுக்காமல் சென்றுவிட்டாள்.
ஏற்கெனவே ஆட்டங்கொடுத்துவிட்ட என்னுடைய உணர்ச்சி நிலைக்கு அது என்ன செய்திருக்கும் என்பதை நீங்கள் கற்பனைசெய்து பாருங்கள். “பின்னிழுப்பும் புடைப்புமாய் இருக்கிறான்” என்பதன் அர்த்தத்தை நான் அறியாததால், மருத்துவச்சியைக் கூப்பிட்டு, அது கவலைக்குரிய நிலையிலிருப்பதைக் குறிக்கிறதா என்று கேட்டேன். “ஆம்,” என்றாள், “அதன் நிலை அதிக கவலைக்குரியதாயிருக்கிறது,” என்றாள். “அதுதான் இயல்பாக முழு வளர்ச்சியுறாமல் பிறக்கும் குழந்தைகளைக்குறித்த கவலையாகும்.”
“நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள்?” என்று கேட்டேன். “அவன் மரிக்கக்கூடுமா?”
“அது கூடியகாரியம்,” என்றாள். அவனைப் பார்க்க வேண்டும் என்று நான் வற்புறுத்த வேண்டும் என்றாள்.
மருத்துவர்கள் அனுமதி வழங்கும் வரை நான் அவனை பார்க்க முடியாது என்று செவிலியர்கள் சொன்னார்கள். அந்தச் சமயத்தில் தான் நான் பித்துப்பிடித்தவள் போன்று கதற ஆரம்பித்தேன், ஒரு குழப்பத்தையே ஏற்படுத்திவிட்டேன். “அவன் என்னுடைய குழந்தை. அவன் மரிக்கப்போகிறான், அவனைத் தூக்கவும் முடியவில்லையே!” அவர்கள் உடனடியாக என்னை அவனிடம் கொண்டுபோனார்கள். அவனை நான் தூக்க முடியவில்லை என்றாலும், அந்த இன்குபேட்டரின் ஒரு பக்கம் ஒரு சிறிய திறப்பு இருந்தது, அதன் வழியாக என் கையை நீட்டி அவனைத் தொட முடிந்தது.
டேனியைப் பார்ப்பதற்கு பரிதாபமாக இருந்தது. தவறான முறையில் சுவாசிக்க முற்படுகிறவனாய் அவனுடைய வயிற்று தசைகள் பெரு மூச்சில் அவதிப்பட்டுக்கொண்டிருந்தன. அவனுடைய மூக்கு துவாரங்கள் விரிந்திருந்தன, ஏனென்றால் அவனுக்குப் போதுமான ஆக்ஸிஜன் கிடைக்கவில்லை. (எனவேதான் மார்பு நடுவரை எலும்பின் பின்னிழுப்பும் மூக்கின் புடைப்பும் என்று குறிப்பிடப்பட்டது.) ஆக்ஸிஜன் குறைவால் அவனுடைய கைகளும் பாதங்களும் கருத்திருந்தன.
என்னுடைய கைகளை உள்ளே விட்டு அவனை மென்மையாகத் தலை முதல் பாதங்கள் வரை வருடிக்கொடுத்தேன். நான் அவனை எவ்வளவாக நேசிக்கிறேன் என்று சொன்னேன். அவனுடைய தந்தையைப் பற்றியும் அவனுடைய அண்ணன் டிம்மியைப் பற்றியும், அவனுடைய முழு குடும்பத்தைப் பற்றியும் சொல்லி, அவனை நாங்கள் எல்லாருமே எவ்வளவாய் நேசிக்கிறோம் என்றும் அவன் வீட்டுக்குவர வேண்டும் என்றும் சொல்ல ஆம்பித்தேன். என்னுடைய குரலை மிகவும் கூர்ந்து கவனித்தான். என்னுடைய செய்தி அவனை அமைதிப்படுத்த உதவியது. அன்பு அற்புதமாய்ச் செயல்படுகிறது என்பதை எவரும் எனக்குச் சொல்ல வேண்டிய அவசியம் இருக்கவில்லை. அதை நான் அந்த நாளில் என் சொந்த கண்ணால் காணக்கூடியவளாயிருந்தேன். அரை மணி நேரத்துக்குள் அவனுடைய சுவாசிப்பு முற்றிலும் சாதாரண நிலைக்கு வந்துவிட்டது. அவனுடைய கைகளும் பாதங்களும் அழகிய சென்னிறம் கண்டது.
அப்பொழுது பணியிலிருந்த நர்ஸ் என்னிடம் சொன்னாள்: “என்னால் நம்பவே முடியவில்லை! அவனைப் பாருங்கள்! அவன் அவ்வளவு நன்றாக சுவாசிக்கிறான். அவனுடைய கைகளையும் பாதங்களையும் பாருங்கள்!” மருத்துவரின் அனுமதிக்குக் காத்திராமலேயே அவள் அவனைத் தூக்கி என்னிடம் கொடுத்தாள்.
அந்த நெருக்கடியான கட்டம் முடிவுக்கு வந்தது. டேனிக்கு ஆபத்து இல்லை. அது ஏழு வருடங்களுக்கு முன்பு. தன்னுடைய அனுபவத்தின் கதையைக் கேட்பதென்றால் டேனிக்கு இந்நாள் மட்டும் அவ்வளவு பிரியம். அதை நான் மற்றவர்களிடம் சொல்வதும் அவனுக்கு அவ்வளவு பிரியம்.—மேரி ஜேன் ட்ரிக்ஸ் கூறியது.
[பக்கம் 9-ன் படம்]