பைபிளின் கருத்து
முன்னோர் வழிபாடு கிறிஸ்தவர்களுக்குரியதா?
முன்னோர் வழிபாடு இலட்சக்கணக்கான மக்களுடைய வாழ்க்கையில், விசேஷமாக கன்பூசிய மதத்தைப் பின்பற்றுகிறவர்கள், புத்தர்கள் மற்றும் ஷின்டோ மதத்தினர் வாழ்க்கையில் பிரதான பங்கை வகிக்கிறது என்பதைப் பெரும்பாலோர் அறிவர். ஆனால் முன்னோர் வழிபாடு ஆப்பிரிக்கர் வாழ்க்கையிலும் பின்னியிருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? உண்மை என்னவெனில், முன்னோர் வழிபாட்டின் இழைகள் அநேகமாய் எல்லா மதங்களிலுமே காணப்படுகிறது, உங்களுடைய மதத்திலும் காணப்படக்கூடும். இது ஒரு “சர்வலோகத்திலும் காணப்படும் காரியம்,” என்கிறார் மத ஆய்வுகளின் நைஜீரிய பேராசிரியர்.
முன்னோர் வழிபாடு என்பது என்ன? நீங்கள் விளங்கியிருக்கும் காரியம் பின்வரும் விளக்கத்துக்கு ஒத்திருக்கக்கூடும்: “[மரித்தோரின்] ஆவிகள் உயிரோடிருப்பவர்களின் விதியில் செல்வாக்குடையவை என்ற நம்பிக்கையின் அடிப்படையிலான நிவாரணச் சடங்குகளும் மரித்த உறவினரை அழைப்பதுமாகும்.”—தி கன்சைஸ் கொலம்பியா என்சைக்ளோபீடியா.
எனவே முன்னோர் வழிபாட்டு பக்தனின் வீட்டில்—உதாரணமாக, தென் கிழக்கு ஆசியாவில் வாழும் ஒரு புத்தனின் வீட்டில் ஒரு சிறிய பூசைப் பீடத்தையும், அதில் இறந்துபோன ஒருவருடைய படம் பிரதானமாக வைக்கப்பட்டிருப்பதையும் நீங்கள் காணக்கூடும். இங்கும் கூட தூபம் காட்டப்படுதலின் மணத்தை முகரக்கூடும் அல்லது ஜெபங்கள் ஓதப்படுவதையும் கைத்தட்டுதல்களையும் கேட்கக்கூடும். அநேக சமயங்களில் பக்தர் தங்களுடைய மரித்த உறவினரின் நன்மைக்காக பீடத்தில் உணவையும் மலர்களையும் படைக்கிறார்.
இன்னொரு கண்டத்துக்குச் செல்லுங்கள், அநேக ஆப்பிரிக்க மக்கள் “மரித்தோருடன் வாழ்கிறார்கள்.” சஹாரா பாலைவனத்தைக் கொண்டிருக்கும் ஆப்பிரிக்காவில், பொதுவாக நிலவும் நம்பிக்கை என்னவென்றால், உயிரோடிருப்பவர்களுக்கும் மரித்தோருக்கும் இடையே உறவும் தொடர்பும் கூடிய காரியம் என்பதாகும். “எங்களுடைய மரித்த பெற்றோரும் மற்ற முன்னோரும் எங்களுக்கு அண்மையில் இருக்கிறார்கள் என்று ஆப்பிரிக்கராகிய நாங்கள் அனைவருமே நம்புகிறோம்,” என்று புராட்டஸ்டன்ட் மதப்பிரிவின் ஒரு பிரபல ஆப்பிரிக்க இறைமையியலர் கூறுகிறார்.
ஆப்பிரிக்காவின் பெரும்பாலான இடங்களில் மரித்த முன்னோர்கள் தாங்கள் உயிரோடிருக்கும்போது சேர்ந்த குடும்பத்திற்கு அல்லது சமுதாயத்திற்கு இன்றும் தலைவர்களாக இருப்பதாய் நோக்கப்படுகின்றனர். அவர்கள் “குடும்ப விவகாரங்களின் ஆவிக்குரிய கண்காணிப்பாளர்களாக,” இருக்கின்றனர் என்று பேராசிரியர் E. பொலஜி இல்டோவா ஆப்பிரிக்க பாரம்பரிய மதம்—ஒரு விளக்கம் என்ற தன்னுடைய புத்தகத்தில் கூறுகிறார். எனவே ஒரு முன்னோரின் ஆவி காரியங்களைச் செய்ய அல்லது விலக்க அழைக்கப்படாமல் இருக்கும் காரியங்கள் எதுவுமே இல்லை. இப்படியாக, முன்னோர்கள் “ஆப்பிரிக்க சமுதாயத்தில் ஒன்றியிருக்கும் அம்சங்களாக,” மதிக்கப்பட்டனர். தி நியு என்சைக்ளோபீடியா பிரிட்டானிக்கா பிரகாரம், அவர்களை வழிபடுவது “குடும்ப ஒருமைப்பாட்டை,” விருத்திசெய்கிறது.
மேற்கத்திய நாடுகளில்—ஃபிரான்ஸ் அல்லது கானடா போன்ற நாடுகளில் வீர முன்னோர்கள் என்றழைக்கப்படக்கூடிய புனிதருக்கு சர்ச்சுகளும், ஆலயங்களும் அல்லது புனித ஸ்தலங்களும் அற்பணிக்கப்பட்டிருக்கின்றன. பக்தர்களின் உதடுகளில் மொழியப்படும் ஜெபங்கள் பேசாத விக்கிரகங்களுக்கு முன்னால் சொல்லப்படுகின்றன. அல்லது முட்டிப்போட்டு கைகளை விரித்து பளபளப்பான விக்கிரகங்களுக்கு வெகுமதிகள் அளிக்கின்றனர். முன்னோர் வழிபாடு தங்களுடைய பக்தியின் வெளிக்காட்டு என்ற கருத்தை கிறிஸ்தவ மண்டல மதங்களைச் சேர்ந்தவர்கள் அறவே ஏற்றுக் கொள்ள முடியாது என்பதாகத் தள்ளிவிடுவர்; ஆனால் புத்த மதத்தினன், ஷின்டோ மதத்தினன் அல்லது ஆப்பிரிக்க பக்தன் புன்னகை செய்கிறான். இந்தக் “கிறிஸ்தவர்களால்” காண்பிக்கப்படும் பக்தி அவனுடைய சொந்த மத வணக்கத்திலிருந்து அவ்வளவாய் வித்தியாசமாய் இல்லை என்பதை அவன் அறிந்திருக்கிறான்.
முன்னோர் வழிபாடு எதன் பேரில் சார்ந்தது?
மனிதன் மரித்த பின்பும் அவனில் ஒன்று உயிர்பிழப்பதால் மரித்தோர் தொடர்ந்து உயிருடனிருக்கின்றனர் என்ற நம்பிக்கைதான் முன்னோர் வழிபாட்டின் அடிப்படை. டாமியன் ல்வாசா என்ற உகாண்டாவின் கத்தோலிக்க எழுத்தாளர் பிரகாரம் அது “ஆத்துமா அழியாமை என்பதில் விசுவாசமாகும்.” அப்படிப்பட்ட விசுவாசத்துக்குரிய ஆதாரம் எவ்வளவு பலமாக இருக்கிறது? சியாரா லியோனியனைச் சேர்ந்த இறைமையியலர் ஹாரி சாயர் ஒப்புக்கொள்வதாவது, “தங்களுடைய முன்னோர் ஆவியில் உயிரோடே இருக்கிறார்கள்,” என்று உரிமைப்பாராட்டும் ஆப்பிரிக்கர் “எந்தவித பலமான அத்தாட்சியுமின்றி அப்படிச் செய்கின்றனர்.”
மிகத் திருத்தமாக, பைபிள் பிரகாரம், ஒருவருடைய ஆவிதன்மையுள்ள பாகம் எதுவுமே உடலின் மரணத்தைத் தப்பிப்பிழைப்பதில்லை. சிருஷ்டிகர் தாமே இப்படியாகச் சொல்கிறார்: “இதோ, எல்லா ஆத்துமாக்களும் என்னுடையவைகள்; தகப்பனின் ஆத்துமா எப்படியோ, அப்படியே மகனின் ஆத்துமாவும் என்னுடையது; பாவஞ்செய்கிற ஆத்துமா சாகும்.” (எசேக்கியேல் 18:4) உடல் மரித்தபின்பு மனிதரின் எந்த ஓர் உணர்வுள்ள பகுதியும் உயிர்பிழைத்திருப்பதற்கான அத்தாட்சியை விஞ்ஞானிகளும் மருத்துவ துறையினரும் கண்டதில்லை.
கன்பூசியஸ் அல்லது புத்தர் வாழ்ந்த காலத்துக்கு முன்பாகவே கிறிஸ்தவ சகாப்தத்துக்கு முன்பு ஒரு ஞானி இப்படியாக எழுதினான்: “உயிரோடிருக்கிறவர்கள் தாங்கள் மரிப்பதை அறிவார்களே, மரித்தவர்கள் ஒன்றும் அறியார்கள்.” (பிரசங்கி 9:5) அதற்கு முன்பாக யோபு சொன்னான்: “மனுபுத்திரன் ஜீவித்துப்போனபின் அவன் எங்கே? அவன் பிள்ளைகள் கனமடைந்தாலும் அவன் உணரான்.” (யோபு 14:10, 21) எனவே மரித்தோர் ‘குடும்ப விவகாரங்களின் ஆவிக்குரிய கண்காணிப்பாளர்களாக,’ சேவிக்க முடியாது. மரணத்தில் ஒருவர் “மரிக்கும்போது ஒன்றும் கொண்டுபோவதில்லை.”—சங்கீதம் 49:10, 17–19.
இதைக் குறித்து எண்ணிப்பாருங்கள்: மரித்த முன்னோர் அவர்களுக்காகப் படைக்கப்படும் நல்ல ஆகாரத்தைப் புசிக்கிறார்களா? உணவு தொடப்படுவதில்லை என்ற உண்மைதானே மரித்தோர் சக்தியற்றவர்கள் என்பதைக் குறிப்பிடுகிறது அல்லவா? மேலும், உயிரோடிருக்கும் அவர்களுடைய சந்ததியினரின் வழிபாடு மற்றும் படைப்புகளைப் பற்றி மரித்த முன்னோருக்கு ஒன்றும் தெரியாது. அவர்கள் இல்லையாதலால், தங்களுடைய முன்னாள் குடும்பத்தில் அக்கறைக் கொள்ளவோ அல்லது அதன் விவகாரங்களில் தலையிடுவதோ முடியாது. பைபிள் பின்வருமாறு சொல்லுகிறது: “சூரியனுக்குக் கீழே செய்யப்படுகிறதொன்றிலும் அவர்களுக்கு இனி என்றைக்கும் பங்கில்லை.”—பிரசங்கி 9:6.
மரித்த முன்னோருக்கு என்ன நம்பிக்கை?
மரித்த நம்முடைய அன்புக்குரிய ஒருவருடன் நாம் மீண்டும் ஒன்றாக வாழும் எந்தவித நம்பிக்கையும் இல்லை என்று இது பொருள்படுமா? இல்லவே இல்லை! வெகுகாலத்துக்கு முன்பு மரணத்தில் பிரிந்த ஆட்கள் உயிர்த்தெழுதல் மூலம் உயிரடையும்போது, மீண்டும் ஐக்கியப்படுவார்கள். “பிரேதக் குழிகளிலுள்ள [ஞாபகார்த்த கல்லறைகளிலுள்ள, NW] அனைவரும் அவருடைய சத்தத்தைக் கேட்கும் காலம் வரும். அப்பொழுது . . . எழுந்திருக்கிறவர்களாக புறப்படுவார்கள்,” என்று பைபிளில் இயேசு உறுதியளிக்கிறார்.—யோவான் 5:28, 29.
உயிர்த்தெழுதல் குறித்த இந்த நம்பிக்கை, தன்னுடைய முன்னோர்களை வழிபட்டுவந்த ஒக்கினாவான் பெண்ணின் வாழ்க்கையை மாற்றியமைக்க உதவியது. அவள் பின்வருமாறு விளக்குகிறாள்: ‘வாழ்க்கையைப் பற்றிய என்னுடைய நோக்குநிலை மாறியது. இயேசு கிறிஸ்துவை பின்பற்றுபவளாக ஆனது உயிரோடிருக்கும் என்னுடைய உறவினர்களிடமாகவும் மற்றவர்களிடமாகவும் அதிக அன்பாக நடந்துகொள்ள எனக்கு உதவியிருக்கிறது.’ மரித்த முன்னோர்களை வழிபடுவதைவிட உயிரோடிருக்கும் பெற்றோரிடம் அன்பாயிருப்பது அதிக நியாயமானதல்லவா? (எபேசியார் 6:2, 3) அவள் தொடர்ந்து கூறுகிறாள்: ‘இன்று முதுமையடைந்துகொண்டிருக்கும் பெற்றோர் மற்றும் தாத்தா பாட்டிமார்களைக் கவனிக்கும்போது, அவர்கள் உயிரோடிருக்கும்போதே அவர்களுக்கு உண்மையான அன்பையும் மரியாதையையும் காண்பிக்கக் கற்றுக்கொண்டதற்காக நான் நன்றியுள்ளவளாயிருக்கிறேன்.’
அதோடுகூட, கிறிஸ்தவர்கள் முன்னோர் வழிபாட்டுக்கு எதிர்ப்பைத் தெரிவிப்பதற்கு முக்கிய காரணம், கடவுள் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கும் சட்டத்திற்கு எதிராக ஒரு கலகப்போக்கைக் குறிக்கிறது என்பதே. “என்னையன்றி வேறே தேவர்கள் உனக்கு இருக்கவேண்டாம். உன் கடவுளாகிய யெகோவா என்கிற நான் எரிச்சலுள்ள [தனிப்பட்ட பக்தியை விரும்புகிற, NW] கடவுள்.” (யாத்திராகமம் 20:3, 5, தி.மொ.) எனவே மரித்த உறவினரை வணங்குவதற்கு மாறாக, யெகோவாவை வணங்குவதற்கான அந்தப் பைபிள் புத்திமதிக்குச் செவிகொடுங்கள், மரித்த உறவினருடன் மறுபடியும் சேர்ந்து வாழும் மகிழ்ச்சியை அவர் ஒருவரே கூடிய காரியமாக்க முடியும்.—வெளிப்படுத்துதல் 20:12, 13. (g89 3/8)
[பக்கம் 26-ன் சிறு குறிப்பு]
“மரித்தவர்கள் ஒன்றும் அறியார்கள்.”—பிரசங்கி 9:5