உங்களுடைய வாழ்க்கையை என்ன மதிப்பீடுகள் கட்டுப்படுத்துகின்றன?
அந்தக் கேள்விக்குப் பதிலளிப்பதற்கு முன்பாக இதை நீங்கள் சிந்திப்பது அவசியமாயிருக்கலாம்: வாழ்க்கையிலிருந்து நீங்கள் எதைப் பெற்றுக் கொள்ள விரும்புகிறீர்கள்? ஐசுவரியம், புகழ், கிளர்ச்சி, பரபரப்பூட்டும் துணிச்சலான செயல், பாலுறவில் திருப்தி? அல்லது ஒருவேளை உங்கள் இலக்கு, நேர்மை, அறம், இரக்கம், பொதுச் சேவை, ஆன்மீகத் தன்மையில் நற்பெயரா? அது எதுவாக இருப்பினும் பைபிளின் விதி உண்மையாக இருக்கிறது: ‘நீங்கள் எதை விதைக்கிறீர்களோ அதையே அறுப்பீர்கள்.’—கலாத்தியர் 6:7.
மெய்யான மதிப்பீடுகளை நீங்கள் குப்பையில் எறிந்துவிட்டால், அதனால் ஏற்படும் விளைவுகளோடு வாழ நீங்கள் மனமுள்ளவர்களாய் இருக்கவேண்டும். மேல்நிலை நீதிமன்ற நீதிபதி பால் R. ஹுயோட் அவைகளில் சிலவற்றை மிக நுட்பமாகக் குறிப்பிடுகிறார். சட்டம், சமுதாய சீரொழுங்கு மற்றும் கட்டுப்பாட்டை மதிப்பதிலிருந்து விலகிச் செல்லும் போக்கை எடுத்துக்காட்டாக கூறுபவராய் அவர் சொன்னார்: “காரியங்கள் இனிமேலும் கறுப்பு, வெள்ளையாக இல்லை. எல்லாமே சாம்பல் நிறமாக இருக்கிறது. நாம் நல்நடத்தையை இழந்துவிட்டோம். நாம் மரியாதையை இழந்துவிட்டோம். நாம் நாகரீகத்தை (பண்பாடுகள்) இழந்துவிட்டோம். வெகு சிலரே சரியானதற்கும் தவறானதற்குமிடையேயுள்ள வித்தியாசத்தைக் காண்கிறார்கள். இப்பொழுது பாவம் மீறுதலில்லை, ஆனால் கண்டுபிடிக்கப்படுவதே ஆகும்.”
அறிவு வளர்ந்து வல்லமை அதிகமாகும்போது, இவைகளின் உபயோகத்தைக் கட்டுப்படுத்துவதற்கு ஒழுக்கத்திற்கான தேவை கூடுகிறது. (நீதிமொழிகள் 24:5) துரதிர்ஷ்டவசமாக, அறிவு மற்றும் வல்லமையின் அதிகரிப்போடுகூட, ஒழுக்கத்தில் வீழ்ச்சி ஏற்பட்டிருக்கிறது. சரித்திராசிரியர் ஆர்னால்ட் டாயன்பீ இதைக் குறித்து கருத்து தெரிவிக்கிறார்: “தொழில்நுட்பத் துறையில் நாம் இத்தனை வெற்றிகரமாக இருக்கையில் ஒழுக்க குறைபாட்டில் நம்முடைய பதிவு பெரும்பாலும் அளவிடப்படமுடியாததாக இருப்பதை எண்ணிப்பார்ப்பது வேதனையாக இருக்கிறது . . . ஒழுக்க இடைவெளி விரிவாகிக் கொண்டே போனால், குடிமக்கள் சட்டைப் பையில் அணுகுண்டுகளோடு நடமாடப்போகும் ஒரு காலத்தை என்னால் முன் காணமுடிகிறது.”
மெய்யான மதிப்பீடுகளின் மதிப்பைக் குறைத்து பாவத்தைக் குப்பைத் தொட்டிக்கு அனுப்பிவிடுவதே தற்போதைய போக்காக இருக்கிறது. நீதிமொழிகள் 30:20-லுள்ள விபச்சாரியான அந்தப் பெண்ணின் அதே மனநிலையே காணப்படுகிறது: “அப்படியே விபசார ஸ்திரீயினுடைய வழியும் இருக்கிறது; அவள் தின்று, தன் வாயைத் துடைத்து: ‘நான் ஒரு பாவமும் செய்யவில்லை’ என்பாள்.” ஆனால் பாவம் இன்னும் திடமாகவும், தீவிரமாகவும், ஆனால் ஒளிவுமறைவில்லாமை, விடுதலை, சூழ்நிலைக்கேற்ற மதிப்பீடுகள், மதிப்பீடுகளின் விளக்கம், குறைகூறாமைப் போன்ற மாற்றுப் பெயர்களின் கீழ்—சுருக்கமாக “புதிய ஒழுக்கம்” என்ற பெயரில் இயங்கிக்கொண்டிருக்கிறது.”
தவறை சரியானது போல் தோன்றச் செய்தல்
ஏசாயாவின் காலம் முதற்கொண்டு எதுவும் உண்மையில் மாறிவிடவில்லை. அவனுடைய வார்த்தைகள் இன்னும் மதிப்புள்ளதாகவே இருக்கின்றன: “தீமையை நன்மையென்றும், நன்மையைத் தீமையென்றும் சொல்லி, இருளை வெளிச்சமும், வெளிச்சத்தை இருளுமாகப் பாவித்து, கசப்பைத் தித்திப்பும், தித்திப்பைக் கசப்புமென்று சாதிக்கிறவர்களுக்கு ஐயோ!” (ஏசாயா 5:20) தவறானதைச் சரியானதாகச் தோன்றச் செய்வதற்காக, அவர்கள் ஜுரத்தை, உடலின் இயல்பான வெப்பநிலையாக்க வெப்பமானியில் குறியீடுகளை மாற்றிவிடுகிறார்கள்.
எந்த மதிப்பீடுகள் நற்பலன்களைத் தருகின்றன? எவைகள் உங்களை மகிழ்ச்சியுள்ளவராகச் செய்து, உண்மையுள்ள நண்பர்களைப் பெற்றுத் தந்து, உள்ளான சமாதானத்துக்கும் மனநிறைவுக்கும் வழிசெய்கின்றன? நேர்மை, வாய்மை, மற்றவர்கள் பேரில் கரிசனை இவைகளுக்காக நற்பெயரை நீங்கள் விரும்புகிறீர்களா? விரும்பப்பட, மதிக்கப்பட, நேசிக்கப்பட விரும்புகிறீர்களா? அல்லது அளவில்லாத உடைமைகளைக் கொண்டிருப்பதை, பெருஞ்செல்வத்தின் வல்லமையை ருசிப்பார்ப்பதை அதிகமாக மதிக்கிறீர்களா? மாம்ச இச்சைகளை திருப்தி செய்து கொள்வது தலையாய முக்கியத்துவமுள்ளதாக இருக்கிறதா? சுய–நிறைவின் பேரில் கவனத்தை ஒருமுகப்படுத்துவது உங்களுக்கு இன்றியமையாததாக இருக்கிறதா?
முறைகேடான பாலுறவு மிகப் பரவலாக இருந்து, செய்தித் தொடர்பு மற்றும் பொதுவாக சமுதாயத்தின் அங்கீகார ஆதரவை அனுபவித்தும் வருகிறது. ஆனால் இது விவாகத்துக்கும் குடும்பத்துக்கும் பிள்ளைகளின் நலனுக்கும் எத்தனை தீங்குவிளைவிக்கிறது! இந்தக் கட்டுப்பாடற்ற பாலுறவிலிருந்து தோன்றியிருக்கும் இயற்கைக்கு மாறான பாலுணர்ச்சியான ஓரினப்புணர்ச்சி இன்று கட்டுக்கடங்காமல் அதிகமாகியும் கிறிஸ்தவமண்டலத்தின் முக்கிய மதங்கள் சிலவற்றால் பொறுத்துக் கொள்ளப்பட்டும் ஆதரவளிக்கப்பட்டும் வருகிறது. இப்படிப்பட்ட பழக்கங்களின் சம்பந்தமாக, கடவுளுடைய வார்த்தை பின்வருமாறு கேட்டு பதிலளிக்கிறது: “அவர்கள் அருவருப்பானதைச் செய்ததினிமித்தம் வெட்கப்படுகிறார்களோ? பரிச்சேதம் வெட்கப்படார்கள், நாணவும் அறியார்கள்.”—எரேமியா 6:15.
இயேசு ஆவிக்குரிய தேவையின் முக்கியத்துவத்தை அழுத்திக் காண்பித்தார்: “ஆவிக்குரிய தேவையைக் குறித்து உணர்வுள்ளவர்கள் சந்தோஷமுள்ளவர்கள்; பரலோக ராஜ்யம் அவர்களுடையது.” (மத்தேயு 5:3, NW) ஆனால் அநேகர் இந்தத் தேவையை மதிப்பற்ற ஒன்றாக தள்ளிவிட்டு அதைப் பூர்த்தி செய்ய எதுவும் செய்வதில்லை; என்றபோதிலும் இது சிறிதும் இல்லாது மேற்போக்காகவே வாழ்கிறார்கள். அநேக உலகப்பிரகாரமான சாதனைகள் இருந்தபோதிலும்கூட இப்படிப்பட்டவர்களின் வாழ்க்கை மேற்போக்கானதாக இருந்து உண்மையான சந்தோஷத்திலும் ஆவியின் நிறைவிலும் குறைவுபட்டதாக இருக்கிறது. விசனகரமாக இந்தத் தேவையைக் குறித்து உணர்வுள்ளவர்களாயிருந்து, அதை கிறிஸ்தவமண்டல சர்ச்சுகளில் பூர்த்தி செய்ய நாடுகிறவர்கள் வெறுமையாக திரும்பி வருகிறார்கள். ஏனென்றால் ஆமோஸ் தீர்க்கதரிசி முன்னுரைத்த விதமாகவே, கிறிஸ்தவமண்டலத்தில் “ஆகாரக்குறைவினால் உண்டாகிய பஞ்சமல்ல, ஜலக்குறைவினால் உண்டாகிய தாகமுமல்ல, யெகோவாவுடைய வசனம் கேட்கக் கிடையாத பஞ்சம்” இருக்கிறது.—ஆமோஸ் 8:11, தி.மொ.
மேலுமாக, சர்ச்சுகளிலுள்ள பெரும்பாலானவர்கள் ஆரோக்கியமான ஆவிக்குரிய போதனையை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் இல்லை, ஆனால் ‘செவித்தினவுள்ளவர்களாய் தங்கள் சுயஇச்சைகளுக்கேற்ற போதகர்களைத் தங்களுக்குத் திரளாகச் சேர்த்துக் கொண்டு சத்தியத்துக்குச் செவியை விலக்கி, கட்டுக்கதைகளுக்குச் சாய்ந்து போகிறார்கள்.’ (2 தீமோத்தேயு 4:3, 4) குருமாரும் பாமர மக்களும் ஏசாயாவின் நாளிலிருந்தவர்கள் நினைத்தவிதமாகவே ஆவிக்குரிய தேவைகளைக் காண்கிறவர்களிடம் இவ்விதமாகச் சொல்கிறார்கள்: “இவர்கள் தரிசனக்காரரை நோக்கி: ‘தரிசனங் காணவேண்டாம்’ என்றும் ஞானதிருஷ்டிக்காரரை நோக்கி: ‘யதார்த்தமாய் எங்களுக்குத் தரிசனஞ் சொல்லாமல், எங்களுக்கு இதமான சொற்களை உரைத்து, மாயமானவைகளைத் திருஷ்டியுங்கள்’ என்றும் ‘நீங்கள் வழியை விட்டு, பாதையினின்று விலகி, இஸ்ரவேலின் பரிசுத்தரை எங்கள் முன்பாக இராமல் ஓயப்பண்ணுங்கள்’ என்றும் சொல்லுகிறார்கள்.”—ஏசாயா 30:10, 11.
தெய்வீக மதிப்பீடுகள் உங்கள் மனதின் ஆழத்தில் இருக்க வேண்டும். உங்கள் தீர்மானங்கள் கடவுளால் சிபாரிசு செய்யப்படும் மெய்யான மதிப்பீடுகளைப் பிரதிபலிக்க வேண்டுமானால், நீங்கள் பின்பற்ற வேண்டிய நினைவுக்குறிப்பு கடவுளுடைய வார்த்தையில் கொடுக்கப்பட்டிருக்கிறது: “பழைய மனுஷனையும் அவன் செய்கைகளையும் களைந்து போட்டு, தன்னைச் சிருஷ்டித்தவருடைய சாயலுக்கொப்பாய்ப் பூரண அறிவடையும்படி புதிதாக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக் கொள்”ளுங்கள்.—கொலோசெயர் 3:9, 10.
என்றபோதிலும் பைபிள் கடவுளுடைய வார்த்தை என்பதில் உங்களுக்கு நம்பிக்கை இல்லாமலிருக்கலாம். சாவாமையுள்ளதாயிருக்கும் ஆத்துமாக்கள் நரக அக்கினியில் நித்தியமாக வாதிக்கப்படுதல் அல்லது பைபிளை வெறுமென ஒரு கட்டுக்கதையாக ஒருபுறம் தள்ளிவிடும் வரலாற்று முறை ஆய்வு ஆராய்ச்சி, அதைப் பிரதிநிதித்துவம் செய்வதாகப் பொய்யாக உரிமைப் பாராட்டும் மாய்மாலமான பணம் பறிக்கும் பிரசங்கிமார்களின் தவறான நடத்தை ஆகியவற்றால் நீங்கள் எரிச்சலடைந்திருக்கக்கூடும்.
தனிப்பட்ட வகையில் ஆய்வு செய்வது, “பாவத்தின் சம்பளம் மரணம்,” அக்கினியில் வாதனை அல்ல என்பதைக் காண்பிக்கும். நவீன புதைப் பொருள் ஆராய்ச்சி பைபிளை துல்லிபமான சரித்திரம், கட்டுக்கதை அல்ல என்று உறுதி செய்கிறது; கிறிஸ்தவமண்டலத்தின் அநேக குருமார், பைபிள் காலங்களிலிருந்த பொய் மதக்குருக்களைப் போலிருக்கிறார்கள், அந்த நாட்களிலிருந்த உண்மையுள்ள தீர்க்கதரிசிகளையும் அப்போஸ்தலர்களையும் போல் இல்லை என்பதை காண்பீர்கள்.—ரோமர் 6:23; மத்தேயு அதிகாரங்கள் 5–7, 23.
பைபிள் மெய்யான மதிப்பீடுகளின் ஊற்றுமூலமாக இருக்கிறது. இவைகள் உங்கள் வாழ்க்கையைக் கட்டுப்படுத்த அனுமதிப்பது, கடவுளுடைய அங்கீகாரத்தை அர்த்தப்படுத்தும். இது நீதியுள்ள புதிய உலகில் நித்திய ஜீவனுக்கு வழிநடத்தும். இங்கே, “அவர்களுடைய [மனிதவர்க்கத்தின்] கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்து போயின.”—வெளிப்படுத்துதல் 21:4; யோவன் 17:3.
ஆகவே கடவுளுடைய வார்த்தையில் உயர்வாகப் பேசப்பட்டிருக்கும் மெய்யான மதிப்பீடுகள் உங்கள் வாழ்க்கையை கட்டுப்படுத்தட்டும். இதன் மூலமாக நீங்கள் நன்மையடைவீர்கள்: “பிரயோஜனமாயிருக்கிறதை உனக்குப் போதித்து, நீ நடக்க வேண்டிய வழியிலே உன்னை நடத்துகிற உன் தேவனாகிய யெகோவா நானே. ஆ, என் கற்பனைகளைக் கவனித்தாயானால் நலமாயிருக்கும்; அப்பொழுது உன் சமாதானம் நதியைப் போலும் உன் நீதி சமுத்திரத்தின் அலைகளைப் போலும் இருக்கும்.”—ஏசாயா 48:17, 18. (g89 3/22)
[பக்கம் 9-ன் படம்]
நதியைப் போல சமாதானம்