மதத்தின் கடந்தக்கால கண்ணோட்டத்தில் அதன் எதிர்காலம்
பகுதி 6: பொ.ச.மு. 1513 முதற்கொண்டு மிக அதிகமாக விற்பனையாகும் மத நூல்கள்
“நம்முடைய மதம் ஒரு புத்தகத்திலிருக்கிறது.” சாமுவேல் ஜான்சன், 18-வது நூற்றாண்டு ஆங்கில கட்டுரையாசிரியரும் கவியும்
ஒவ்வொரு பெரிய மதமும் அதன் புத்தகத்தை அல்லது புத்தகங்களைக் கொண்டிருக்கிறது. அவை “தோற்றத்திலும், அளவிலும், வயதிலும், புனிதத்தன்மையின் தரத்திலும் வித்தியாசப்படுவதாய் இருப்பினும், அவைகளிலுள்ள வார்த்தைகள் புனிதமானவையாக பக்தர்களால் பொதுவாகக் கருதப்படுகின்றன” என்பதாக தி நியு என்சைக்ளோப்பீடியா பிரிட்டானிக்கா குறிப்பிடுகிறது. இத்தனை அநேக பரிசுத்த புத்தகங்கள் இருப்பதுதானே, மனிதவர்க்கம் அமைப்பில் அடிப்படையாக மதப்பற்றுள்ளதாக இருப்பதை நிரூபிக்கிறது.
பைபிள் (கிறிஸ்தவம்), குரான் (முகமதிய), தால்முட் (யூதேய), வேதங்கள் (இந்து), டிரைப்பித்தக்கா, (புத்த) ஆகியவை முக்கிய மதங்களின் அதிகாரப்பூர்வமான பரிசுத்த எழுத்துக்களாகும்.a
மற்ற புக்கதங்கள், எந்த ஒழுங்கமைக்கப்பட்ட மதங்களாலும் தங்களுடைய அதிகாரப்பூர்வமான பரிசுத்தப் புத்தகங்கள் என்பதாக ஏற்றுக்கொள்ளப்படாவிடினும் அவை இயல்பில் மதம் சம்பந்தப்பட்டவையாக இருக்கின்றன. ஜப்பானியர்களின் வாழ்க்கையின் மீதும் ஷின்டோவின் மீதும் பேரளவான செல்வாக்கை செலுத்திவந்திருக்கும் கோஜிக்கி மற்றும் நிஹோங்கி புத்தகங்களின் விஷயத்தில் இது உண்மையாக இருக்கிறது. அதேவிதமாகவே சீனர்களுடைய வாழ்க்கையும் 13 கன்ஃபூசிய பண்டைய ஏடுகளால் பாதிக்கப்பட்டிருக்கின்றன. பின்னது, ஒரு சீன சாது கன்ஃபூசியஸின் போதகங்களின் அடிப்படையில் எழுதப்பட்டது. இவர், பொ.ச.மு. 539-ல் பாபிலோன், மேதிய-பெர்சியாவினால் வீழ்ச்சியடைந்தபோது பருவ வயதில் இருந்தவர். கன்ஃபூசிய மதத்தின் அடிப்படைப் பாடபுத்தகமாகிய இலக்கியத் தொகுப்பு (லுன் யு) 496 அதிகாரங்களில் கன்ஃபூசியரின் வார்த்தைகளையே கொண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.
அண்மைக் கால மத எழுத்துக்களும்கூட புனித அந்தஸ்தைப் பெற்றுக் கொண்டிருக்கின்றன. சிலவை ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கும் வேத எழுத்துக்களுக்கு அவசியமான சேர்க்கையாகக் கருதப்படுகிறது. பிற்கால புனிதர்களுடைய இயேசு கிறிஸ்து சர்ச் உறுப்பினர்கள், மார்மான் புத்தகம் மார்மான் என்ற பெயர்கொண்ட ஒரு தீர்க்கதரிசியால் பொன்தகடுகளில் எழுதுப்பட்டதாகவும் அது பின்னால் அவனுடைய மகன் மொரானியால் புதைக்கப்பட்டதாகவும் சுமார் 1,400 ஆண்டுகளுக்குப் பிறகு, 19-வது நூற்றாண்டின் முற்பாதியில் அது ஒரு தேவதூதனால் கண்டெடுக்கப்பட்டு ஜோஸப் ஸ்மித்திடமாக கொடுக்கப்பட்டதாகவும் அதை அவர் மொழிபெயர்த்ததாகவும் நம்புகிறார்கள்.
முதலில் 1875-ல் விஞ்ஞானமும் உடல்நலமும் என்ற பெயரில் மேரி பேக்கர் எடியினால் வெளியிடப்பட்ட விஞ்ஞானமும் உடல்நலமும் வேதாகமத்தின் திறவுகோலோடு என்ற புத்தகமும் அதேவிதமாகவே கருதப்படுகிறது. பல ஆண்டுகளாகத் தன்னுடைய புத்தகம் மொழிபெயர்க்கப்படுவதை இவள் எதிர்த்து வந்தாள். கடைசியாக பின்வரும் நிபந்தனையோடு இசைந்தாள்: “புதிய பதிப்பில் ஆங்கிலமும் ஜெர்மன் மொழியும் மாறி மாறி அச்சடிக்கப்பட வேண்டும், ஒரு பக்கத்தில் ஆவியால் ஏவப்பட்டெழுதப்பட்ட ஆங்கில கூற்று மாறாத தராதரமாகவும் மற்றது மொழிபெயர்ப்பாக இருக்கும் ஜெர்மன் வாசகமாகவும் இருக்கலாம்.”—தடித்த எழுத்துக்கள் எங்களுடையவை.
மதசம்பந்தமற்ற புத்தகங்களும்கூட பரிசுத்த எழுத்துக்களின் அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்டிருக்கின்றன. இந்த வகையில் சேர்ந்தவை, 19-வது மற்றும் 20-வது நூற்றாண்டைச் சேர்ந்த சார்லஸ் டார்வின், கார்ல் மார்க்ஸ் மற்றும் மேயோ டி சங் என்பவர்களுடைய எழுத்துக்களாகும். பரிணாமம் மற்றும் பொதுவுடைமைக் கொள்கையைப் பற்றிய இவர்களின் கருத்துக்கள் இலட்சக்கணக்கானோரால் மதப்பற்றுடன் ஆதரிக்கப்பட்டுவருகின்றன.
அதிகாரப்பூர்வமான ஏட்டுத் தொகுதியை உறுதிசெய்வது
பெரும்பாலான பரிசுத்த எழுத்துக்கள் ஆரம்பத்தில் வாய்வழியாக, சில சமயங்களில் பல நூற்றாண்டுகளுக்கு அவ்விதமாக ஒப்புவிக்கப்பட்டன. ஆனால் பொதுவாக, ஏதாவது ஒரு கட்டத்தில், சேகரிக்கப்பட்ட தகவலின்—வாய்மொழியாகவோ அல்லது எழுத்து மூலமாகவோ இருந்தாலும் சரி—பகுதிகள் குறிப்பிட்ட ஒரு மதத்தின் அதிகாரப்பூர்வமான ஏட்டுத் தொகுதியாக சேவிக்க வேண்டும் என்பதைத் தீர்மானிப்பது அவசியமாக இருந்திருக்கிறது. “அதிகாரப்பூர்வமான ஏட்டுத் தொகுதி” என்பது “பரிசுத்த வேத எழுத்துக்களாக ஏற்றுக்கொள்ளப்படும் புத்தகங்களின் ஒரு தொகுப்பு அல்லது அதிகாரப்பூர்வமான பட்டியல்” என்பதாக விளக்கப்படுகிறது.
ஒரே மாதிரியாக அதிகாரப்பூர்வமான ஏட்டுத் தொகுதிகளை உறுதிசெய்வது சுலபமாக இருக்கவில்லை. சில சமயங்களில் இது சாத்தியமற்றதாகவும் இருந்திருக்கிறது. உதாரணமாக மத என்சைக்ளோப்பீடியா அதிகாரப்பூர்வமான ஏட்டுத் தொகுதிகள் பல இருப்பதால், உலகிலுள்ள மதசம்பந்தமான வேத எழுத்துக்களின் மத்தியில் புத்தமத இலக்கியம் ஈடிணையற்றதாக இருப்பதாகக் குறிப்பிடுகிறது. அது சொல்வதாவது: “வேதாகமத் தொகுப்புகள் குறிப்பிடத்தக்க விதங்களில் ஒன்றிலிருந்து ஒன்று வித்தியாசப்பட்டதாயிருக்கிறது. ஒருசில வாக்கியங்களே ஒவ்வொரு பாரம்பரியத்திலும் காணப்படுகின்றது.” இந்தக் குழப்பத்துக்குக் காரணம் உட்பிரிவுகள் பல தோன்றியதிலும் புத்த கோட்பாட்டின் “பதினெட்டு பள்ளிகள்” என்பதாகச் சரித்திரம் அழைப்பதிலும் இருக்கிறது.
மறுபட்சத்தில் இந்து மதம், ஏற்றுக்கொள்ளப்பட்ட அதிகாரப்பூர்வமான ஏட்டுத் தொகுதிக்கும் பாதி புனித அந்தஸ்து வழங்கப்பட்டிருக்கும் மற்ற தகவலுக்குமிடையே வேறுபாட்டைக் காண்பிக்கிறது. இந்து மத பரிசுத்த எழுத்துக்களில் “கேள்வி அறிவு” என்று பொருள்படும் ஸ்ருதி என்ற வகை ஆரம்பகால வெளிப்படுத்துதலைக் குறிப்பிடுகிறது. இதில் வேதங்களும் உபநிடதங்களும் அடங்கும். “மறு தொகுப்பு” என்று பொருள்படும் ஸ்ம்ருதி, ஸ்ருதியின் குறையை நிரப்பி, அதை விளக்கி அதை விரிவுப்படுத்துகிறது. ஆகவே ஸ்ம்ருதி என்பது இரண்டாம் தரமானதாக, பாதி அதிகாரப்பூர்வமான ஏட்டுத் தொகுதியாக கருதப்படுகிறது. ஆனால் உண்மையில் இந்துக்கள் தங்கள் மதத்தைப் பற்றி அறிந்து வைத்திருப்பவற்றை இதிலிருந்தே பெற்றுக் கொண்டிருக்கிறார்கள்.
கிறிஸ்தவர்களென உரிமைப் பாராட்டுகிறவர்களும்கூட பைபிளுக்கு அதிகாரப்பூர்வமான ஏட்டுத் தொகுதியை உறுதி செய்வதில் பிரச்னையுடையவர்களாக இருந்திருக்கிறார்கள். ரோமன் கத்தோலிக்க சர்ச்சும், பெரும்பாலான கிழக்கத்திய மற்றும் கீழ்த்திசை ஆர்த்தடாக்ஸ் சர்ச்சுகளும் 13 கூடுதலான எழுத்துகளை “இரண்டாம் அல்லது (பிற்காலத்திய) அதிகாரப்பூர்வமான ஏட்டுத்தொகுதி” என்று கருதுகின்றனர். புராட்டஸ்டன்டுகள் இவைகளைக் “கவனமாக மூடிவைக்கப்பட்ட” என்று ஆரம்பத்தில் பொருள்பட்ட “ஐயத்திற்கிடமானது” என்பதாக அழைக்கின்றனர். ஏனென்றால் அவை பகிரங்கமாக வாசிக்கப்படவில்லை. ஆனால் அவற்றின் நம்பத்தகுந்த நிலை இன்று ஐயத்துக்குரியதாக இருக்கிறது. பிரின்ஸ்டன் இறையியல் கல்லூரியைச் சேர்ந்த ஜேம்ஸ் H. சார்லஸ்வொர்த் குறிப்பிடுகிறார்: “முதலாவது யூதர்களாலும் பின்னர் கிறிஸ்தவ அதிகாரக் குழுவினாலும் வேதாகமத்தின் அதிகாரப்பூர்வமான ஏட்டுத் தொகுதிகள் மூடப்பட்ட போது இந்த எழுத்துக்கள் சேர்க்கப்படவில்லை, அவை விரைவில் செல்வாக்கையும் முக்கியத்துவத்தையும் இழக்க ஆரம்பித்தன.” 1546-ல் ரிரென்ட் குழு அவைகளை பைபிளின் அதிகாரப்பூர்வமான ஏட்டுத் தொகுதியாக அறிவித்தது.
“வாட் ஸ்கிஃப்ட், பிளிஃப்ட்”
“எழுதப்பட்டது அழியாது” என்று பொருள்படும் இந்தக் கீழ் ஜெர்மன் நாட்டு பழமொழி வாய்வழியாகத் தகவலைக் கடத்துவதிலிருக்கும் படுகுழிகளைச் சுட்டிக் காண்பிக்கிறது. முக்கிய விவரங்கள் மறக்கப்படலாம்; சிறிய மாற்றங்கள் ஆரம்பத்தில் திட்டமிடப்படாத நுட்ப வேற்றுமைகளைச் சேர்க்கலாம். இதன் காரணமாக பரிசுத்த நூல்களில் எழுத்துருவிலாக்கப்பட்ட முதல் நூல் பைபிளாக இருப்பது குறிப்பிடத்தக்கதாகும். உண்மையில், மோச அதனுடைய முதல் பாகத்தை பொ.ச.மு. 1513-ல் எழுதி முடித்துவிட்டான்.
மாறாக, மத என்சைக்ளோப்பீடியாவின் பிரகாரம், பொ.ச.மு. எட்டு முதல் நான்காவது நூற்றாண்டு காலத்தைச் சேர்ந்த வேதங்களின் தொடர்பகுதியும், சமஸ்கிருதத்தில் தொகுக்கப்பட்டதுமான உபநிடதங்கள், முதல் முதலாக “பொ.ச. 1656-ல் எழுத்துருவில் ஆக்கப்பட்டது.” இது கவனக்குறைவினால் ஏற்படாமல் வேண்டுமென்றே செய்யப்பட்டதாகும். சரித்திராசிரியர் வில் டியுரான்ட் விளக்குகிறார்: “வேதங்களும் காப்பியங்களும், அவைகளை ஓதிய சந்ததிகளோடு சேர்ந்து வளர்ந்தன; அவை பார்வைக்காக அன்றி ஒலிக்காகவே திட்டமிடப்பட்டிருந்தன.”
வேதங்களை வாய்வழியாக ஓதுவதுதானே அதற்கு அதிகபட்ச அர்த்தத்தையும் முக்கியத்துவத்தையும் கொடுக்கிறது என்பதாக சில இந்துக்களும் புத்தமதத்தினரும் இன்னும் உரிமைப்பாராட்டுகிறார்கள். மந்திரங்கள், வார்த்தைகள் அல்லது வாய்ப்பாடுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து அவைகளுக்கு இரட்சிக்க இயல்பான சக்தியிருப்பதாகக் கருதுகிறார்கள். “மந்திரங்களை சரியான முறையில் உச்சரிப்பதன் மூலம், பக்தனுக்கு மற்றபடி கிடைக்கப்பெறாத மந்திர மற்றும் ஆன்மீக சக்திகளை வழங்க கடவுட்களை தூண்டவோ அல்லது வற்புறுத்தவோகூட முடியும் என்பதாக நம்பப்படுகிறது,” என்பதாக தி நியு என்சைக்ளோப்பீடியா பிரிட்டானிக்கா குறிப்பிடுகிறது.
யாருடைய வார்த்தை, எத்தனை பேருக்கு?
எல்லாப் பரிசுத்த எழுத்துக்களுமே கடவுளை ஆசிரியராகக் கொண்டிருப்பதாக உரிமைப்பாராட்டவோ அல்லது பரவலாக விநியோகிக்கப்பட்டு அனைத்து மக்களுக்கும் கிடைக்கப்பெறச் செய்யும்படியாக கேட்பதோ இல்லை. உதாரணமாக, இந்து உபநிடதம் (“அருகே அமர்ந்திருத்தல்” என்று பொருள்படும்) இப்படியாக அழைக்கப்பட்டதற்குக் காரணம் மதப் போதகர்கள், இரகசியமான கோட்பாடுகளை தங்களுடைய மிகச் சிறந்த மற்றும் விருப்பமான மாணாக்கர்களுக்கு, “அருகே அமர்ந்திருப்”பவர்களுக்கு, நம்பி ஒப்படைக்கும் பழக்கமுள்ளவர்களாக இருந்தனர். “இவ்விதமாக உபநிடதம் என்ற பதம், சிலருக்கு மட்டும் கற்றுக்கொடுக்கக்கூடிய என்ற பொருளுடையதாக இருக்கிறது” என்று மத என்சைக்ளோப்பீடியா விளக்கி மேலுமாகச் சொல்கிறது: “உண்மையில், இப்படிப்பட்ட பாடங்கள் மொத்தமாகப் பொது மக்களுக்காக இல்லாமல், . . . [ஆனால்] தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருசிலரால் மாத்திரமே கேட்கப்பட வேண்டும் என்பதை உபநிடதம் திட்டவட்டமாகக் குறிப்பிடுகிறது.”
அதேவிதமாகவே அராபிய குரான் அராபியர்களுக்காக மட்டுமே திட்டமிடப்பட்டதாக முகமதுவால் கருதப்பட்டது. இதில் எல்லா மனிதர்களின் சிருஷ்டிகராகிய கடவுள்தாமே பேசுவதாக பிரதிநிதித்துவம் செய்யப்பட்டிருந்தபோதிலும், இது இவ்விதமாக இருக்கிறது. குரானை மற்ற மொழிகளில் மொழிபெயர்ப்பது பொருத்தமற்றதாக கருதப்படுகிறது. ஆகவே அராபிய வாசகத்தை மாத்திரமே ஓதவும் சடங்குகளுக்குப் பயன்படுத்தவும் செய்யலாம். 1960-களில் இரண்டாவது வத்திக்கன் குழு கூடும்வரையாக, ரோமன் கத்தோலிக்க பொதுவழிபாட்டு முறையில் லத்தீன் மாத்திரமே பயன்படுத்தப்பட்டது சில கத்தோலிக்கரின் நினைவுக்கு வரலாம்.
மறுபட்சத்தில், பைபிள், அதனுடைய செய்தி எந்த ஒரு தொகுதிக்கும் மாத்திரமே கட்டுப்படுத்தப்பட்டதாக இருக்கக்கூடாது என்பதைத் தெளிவுபடுத்துகிறது. இது “மனுஷர் வசனமாக இல்லாமல், ஆனால் . . . தேவ வசனமாக” இருப்பதாக அது உரிமைப்பாராட்டும் காரியத்துக்கு இசைவாக இருக்கிறது. (1 தெசலோனிக்கேயர் 2:13) ஒவ்வொரு தனி நபருக்கும் தன்னுடைய சிருஷ்டிகரின் ஞானமான வார்த்தைகளிலிருந்து நன்மையடைய சம உரிமை இருக்கிறது என்று விவாதித்து, அதன் ஆதரவாளர்கள் அதைப் பரவலாக விநியோகிக்க முயற்சி செய்கிறார்கள். ஆகவே 1987 முடிவுக்குள் அது குறைந்தபட்சம் பகுதியாக 1,884 மொழிகளில் அல்லது கிளைமொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. 1977-ல் பட்டியல்களின் புத்தகம் பைபிளின் விற்பனைப் பரப்பு 24,580 இலட்சம் பிரதிகளாக மதிப்பிட்டு 30,000 இலட்சம் பிரதிகள் என்பது அதிக துல்லியமாக இருக்கும் என்பதாகச் சொல்லுகிறது.
மதங்கள்—அவைகளின் புத்தகங்களால் மதிப்பிடப்படுகின்றன
1933-ல் ஆங்கில தத்துவ ஞானி ஆல்ஃப்ரட் வைட்ஹெட் எழுதினார்: “எந்த ஒரு மதத்தையும் அதனைப் பின்பற்றுகிறவர்களிலிருந்து பிரித்தெடுத்து சிந்திக்கப்படமுடியாது.” ஆதலால் அது உண்டுபண்ணும் வகையான ஆட்களின் அடிப்படையில், ஒரு மதம் உண்மையா அல்லது பொய்யா, நல்லதா அல்லது கெட்டதா என்பது தீர்மானிக்கப்படலாம். மேலுமாக அது பின்பற்றுவதாக உரிமைப்பாராட்டும் பரிசுத்த எழுத்துக்கள்—அவைகளின் போதகங்கள் பின்பற்றப்படும் அளவு—அதன் விசுவாசிகள் அவர்கள் என்னவாக இருக்கிறார்களோ அதுவாக அவர்களை உருபடுத்தி அமைப்பதில் சம்பந்தமுடையதாக இருக்கிறது.
பரிசுத்த எழுத்துக்கள் சரியான வழிநடத்துதலை அளிக்க வேண்டும். அவை பைபிள் கூறுகிறபடி, “உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும், சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருந்து” மனிதனைத் “தேறினவனாகவும் எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும்” ஆகும்படியாக உதவி செய்ய வேண்டும்.—2 தீமோத்தேயு 3:16, 17.
மிக அதிகமாக விற்பனையாகும் மத நூல்கள் எவ்விதமாக தேவைகளை நிறைவு செய்கின்றன? உதாரணமாக, இந்து மற்றும் புத்த மத பரிசுத்த எழுத்துக்கள் எந்தளவுக்குத் தங்கள் வாசகர்களை, வாழ்க்கைப் பிரச்னைகளை சமாளிக்க உதவியிருக்கின்றன? கண்டுபிடிக்க, நாம் இந்தியாவிடமாகத் திரும்பவேண்டும். இதைக்குறித்து சரித்திராசிரியர் டியுரான்ட் சொல்வதாவது: “வேறு எந்தத் தேசத்திலும் மதம் இத்தனை சக்தி வாய்ந்ததாக அல்லது இத்தனை முக்கியத்துவமுள்ளதாக இல்லை.” எமது ஜுலை, ஆகஸ்ட் பிரதிகளில் இந்தக் கவர்ச்சியான பொருளின்பேரில் இரண்டு கட்டுரைகள் வர இருக்கின்றன. முதல் கட்டுரையின் தலைப்பு “இந்து மதம்—உன் பெயர் சகிப்புத்தன்மை.” (g89 3/22)
[அடிக்குறிப்புகள்]
a இந்தக் கட்டுரை புத்தகங்களை பற்றி மட்டுமே சிந்திக்கும்; பின்னால் வரும் கட்டுரைகள் அவற்றை உபயோகிக்கும் மதங்களைப் பற்றி மேலும் விவரமாக சிந்திக்கும்.
[பக்கம் 23-ன் பெட்டி]
அவைகளுடைய பெயர்களின் அர்த்தமென்ன
புத்த மதம்: டிரைப்பித்தக்கா, சமஸ்கிருதம், “மூன்று கூடைகள் [திரட்டு நூல்]”
கிறிஸ்தவ மதம்: பைபிள், கிரேக்கு, “சிறு புத்தகங்கள்”
கன்ஃபூசிய மதம்: லுன் யு, சீன மொழி, “சம்பாஷணைகள்”
இந்து மதம்: வேதம், சமஸ்கிருதம், “அறிவு”
முகம்மதிய மதம்: குரான், அராபிக், “வாசித்தல், ஓதுதல்”
யூதேய மதம்: தால்முட், எபிரெயு, “படிப்பு, கற்றல்”
ஷின்டோ மதம்: கோஜிக்கி மற்றும் நிஹோங்கி, ஜப்பானிய மொழி, “பூர்வீக விஷயங்களின் பதிவுகள்” மற்றும் “ஜப்பானின் தொடர்வரலாறு”
தாவ் மதம்: தாவோ டி சிங், சீனமொழி, “சக்தியின் வழிக்குப் புகழ்ச்சான்றேடு”
பார்சி மதம்: அவெஸ்டா, இதற்கு எழுதப்பட்ட மறைந்துபோன ஈரானி மொழியாகிய அவெஸ்டான் என்ற பெயர் சூட்டப்பட்டது
[பக்கம் 24-ன் பெட்டி]
அளவில் அவை எவ்விதமாக ஒப்பிடுகின்றன
மிக அதிகமாக விற்பனையாகும் மத நூல்களில் சில அளவுக்கு அதிகமாக மிக நீண்டவையாக இருக்கின்றன. பைபிளின் அளவில் நான்கில் ஒரு பங்கு அளவாக இருக்கும் குரான் விதிவிலக்காகும். சம்ஹித்தாஸ் என்றழைக்கப்படும் இந்து மத பரிசுத்த எழுத்துக்களின் ஒரு தொகுப்பு மாத்திரமே 10 இலட்சத்துக்கும் மேலான செய்யுட்களைக் கொண்டிருப்பதாக மதிப்பிடப்பட்டிருக்கிறது. இதோடு ஒப்பிட கிங் ஜேம்ஸ் மொழிபெயர்ப்பு 31,102 வசனங்களை மாத்திரமே கொண்டிருக்கிறது. கிங் ஜேம்ஸ் 7,73,746 வார்த்தைகளைக் கொண்டிருக்க பாபிலோனிய தால்முட் 25 இலட்சம் வர்த்தைகளைக் கொண்டிருக்கிறது. இன்னும் பல தொகுப்புகளைக் கொண்டிருப்பதாகச் சொல்லப்படும் சீன புத்த மத ஏடு சுமார் நூறாயிரம் அச்சடிக்கப்பட்ட பக்கங்கள் செல்வதாகச் சொல்லப்படுகிறது.
[பக்கம் 22-ன் படம்]
பைபிளும் குரானும் மிக அதிகமாக விற்பனையாகும் மத நூல்களில் இடம்பெறுகின்றன