உலகத்தைக் கவனித்தல்
அதிர்ச்சியூட்டும் உறுப்பு மூலம்
1988-ன் முற்பகுதியில், கெளதமாலாவிலுள்ள சான்டா காட்டரீனா பினுலாவில் அவ்வளவாக விளம்பரம் செய்யப்படாத ஒரு கண்டுபிடிப்பு செய்யப்பட்டது. அங்கே, ஐரோப்பிய சட்டமன்ற தீர்மானம் ஒன்றின்படி, உள்ளூர் அதிகாரிகள், “உடல்பெருக்க மையத்தை” கண்டுபிடித்திருக்கிறார்கள். இங்கே புதிதாகப் பிறந்தக் குழந்தைகள் வெறுமென 340 ரூபாய்க்கு வாங்கப்பட்டு அமெரிக்க அல்லது இஸ்ரேல் நாட்டுக் குடும்பங்களுக்கு 12,75,000 ரூபாய்க்கு விற்கப்பட்டனர். காரணம்? அவர்களை விலைகொடுத்து வாங்கும் குடும்பங்கள், உறுப்பு மாற்ற தேவையிலிருக்கும் தங்கள் சொந்தக் குழதைகளுக்கு அவைகளைப் பயன்படுத்துவதற்காக என்பதாக தீர்மானம் சொன்னது. 1987-ல் இதேப் போன்ற ஓர் “உடல்பெருக்க மையம்” ஹாண்டுராஸில் கண்டுபிடிக்கப்பட்டது. “இதன் அருகே, அநேக பிள்ளைகளின் பிணங்களும், அவைகளில் சில புதிதாகப் பிறந்தப் பிள்ளைகளும் ஒன்று அல்லது அதிகமான உறுப்புகள் அவைகளிலிருந்து நீக்கப்பட்ட நிலையிலும் காணப்பட்டன.” கெளதமாலா நகரில் மற்றொன்று கண்டுபிடிக்கப்பட்டது. இதன் “பதிவேடு 170 குழந்தைகள் அயல்நாடுகளுக்கு விற்கப்பட்டதையும் . . . உறுப்பு நீக்கப்படுவதற்காக இவைகளில் பெரும்பாலானவை ஐக்கிய மாகாணங்களுக்கு அனுப்பப்பட்டிருப்பதையும் குறிப்பிடுகின்றன.” சட்ட மன்றத்தின் தீர்மானம் பல்வேறு ஏஜென்ஸிகளுக்கும் அரசாங்கங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. இந்தப் பயங்கரமான பழக்கத்துக்குப் பொறுப்புள்ளவர்களாக இருப்பவர்களுக்கு எதிராகப் பொருத்தமான நடவடிக்கை எடுக்குமாறு இது கேட்கிறது.
சிறுநீரகங்கள் விற்பனைக்கு
உங்களுடைய ஆரோக்கியமான ஒரு சிறுநீரகத்தை பணத்துக்காக நீங்கள் விற்றுவிடுவீர்களா? மாற்று உறுப்பு சிகிச்சைக்காக உறுப்புகளை விற்பனை செய்யும் ஒரு மேற்கு ஜெர்மன் கம்பெனி இப்படிப்பட்ட ஒரு தானத்தைச் செய்ய மனமுள்ளவர்களாக இருக்கும் எவருக்கும் 7,65,000 ரூபாய் கொடுக்க முன்வந்தது. இதன் விளைவாக, “தானம் செய்ய முன்வந்தவர்களைச் சமாளிக்க இயலாமல் திணறிப்”போனதாக கம்பெனி பிரதிநிதி தெரிவிக்கிறார். விரைவில் பணக்காரராகிவிடக் கிடைக்கும் சந்தர்ப்பமாகக் கருதும் மக்கள், மனித திசுக்களின் விற்பனையில் ஈடுபடும் கம்பெனிகளுக்கு ஏராளமான உறுப்பு மூலத்தை அளிக்கிறார்கள். வளர்ந்துவரும் உலகில் சட்டத்துக்கு விரோதமாக உறுப்பு வியாபாரத்தில் ஈடுபடுகிறவர்களைப் போலில்லாமல் “உறுப்பு தரகர்கள் பகிரங்கமாகவும் (சட்ட வரம்புக்கு உட்பட்டும்) மேற்கு ஜெர்மனியில் செயல்படுகிறார்கள்” என்பதாக நியூஸ் வீக் பத்திரிகையின் செய்தி குறிப்பு குறிப்பிடுகிறது. இப்படிப்பட்ட உறுப்புகளுக்குக் கம்பெனியின் விலை: 14,45,000 ரூபாய்.
மருத்துவமனைகள் புகைத்தலைத் தடை செய்கின்றன
கடந்த டிசம்பரில், ஆஸ்திரேலியாவிலுள்ள எல்லா பொது மருத்துவமனைகளிலும் புகைத்தலின் மீது தடையுத்தரவு விதிக்கப்பட்டிருந்தது. ஒரு மருத்துவமனைக் கட்டிடத்திலோ அல்லது மருத்துவமனைக்குச் சொந்தமான வாகனத்திலோ புகைக்கையில் பிடிபட்ட எவரும் சுமார் 50,000 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும். சமுதாய அடிப்படை பொதுப்பணிகளும் பிராந்திய உடல் நலப் பொதுப்பணிகளும்கூட சுகாதாரத் துறையின் தடையுத்தரவின் கீழ் இணைக்கப்பட்டிருப்பதாக ஆஸ்திரேலியாவில் வெளியாகும் தி சன் ஹெரால்டு அறிவிப்பு செய்கிறது. அண்மையில் செய்யப்பட்ட தீர்மானம், ஆண்டுதோறும் புகைத்தலோடு சம்பந்தப்பட்ட நோய்களினால் ஆஸ்திரேலிய மக்கள் சுமார் 16,500 பேர் உயிரிழப்பதனால் ஏற்படும் கவலையைப் பிரதிபலிக்கிறது. “சாலையில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையைவிட இது ஐந்து மடங்கு அதிகமான எண்ணிக்கையாக இருக்கிறது,” என்பதாக தி சன் ஹெரால்டு குறிப்பிடுகிறது. சுகாதார துறையின் பிரகாரம், புகைத்தலினால் ஆஸ்திரேலியாவுக்கு 84,50,000, வேலைநாட்களும் ஆண்டுதோறும் 2,760 இலட்சம் ரூபாயும் இழப்பாக இருக்கிறது.
குடியிருப்புக்குத் தகுதியற்றது
சோவியத் செய்தித்தாள் பிரவ்டா குறிப்பிடுகிறபடி, செர்நோபில் என்ற 800 வயதான யுக்ரேனியப் பட்டணத்தில் உலகின் மிக மோசமான அணுசக்தி தொழிற்சாலை விபத்து ஏற்பட்டு, இரண்டரை ஆண்டுகளானப்பின், இது தரைமட்டமாக்கப்படும்படியாக திட்டமிடப்பட்டிருந்தது. கதிரியக்கம் பல பத்தாண்டுகளுக்கு இந்த நகரைக் குடியிருப்புக்குத் தகுதியற்றதாக்கிவிட்டதன் காரணமாக, இந்த நடவடிக்கை அவசியமாகக் கருதப்பட்டது. செர்நோபில் விபத்து கதிரியக்கத்தை உலகம் முழுவதிலும் பரவச் செய்து நேரடியாக அதன் சுற்றுப்புறத்திலிருந்த 31 பேரை கொன்றதாகச் சொல்லப்படுகிறது.
அளவுக்கு அதிகமான விசுவாசமா?
அமெரிக்க ஐக்கிய மாகாணங்களிலுள்ள தென் கரோலினாவில், “சுகப்படுத்துதல் வெடிப்பு” என்றழைக்கப்பட்ட சுகப்படுத்துதல் கூட்டத் தொடர், டெக்ஸாசைச் சேர்ந்த இரண்டு விசுவாச சுகப்படுத்துகிறவர்களுக்கு எதிராக உரிமை கோரிக்கை வழக்குத் தொடருவதில் விளைவடைந்திருக்கிறது. வட கரோலினாவைச் சேர்ந்த ஒரு பெண், தன்னுடைய கழுத்திலும் முதுகிலும் ஏற்பட்ட தாறுமாறான எலும்பு முறிவுக்கு அவர்கள் பொறுப்புள்ளவர்களாக இருப்பதாக தெரிவிக்கிறாள். ஏன்? கிரீன்வில் நியூஸின் பிரகாரம், அவளுடைய உரிமைகோரிக்கை வழக்கு, “ஊழியர் ஒரு நபரின் மீது தன் கைகளை வைத்து ‘ஆவியில் அவரைக் கொல்ல’, இவர் ‘பிடித்துக் கொள்பவரின்’ கைகளுக்குள் பின்னால் சாய்ந்துவிடும்” ஒரு செயல்முறையை விவரிக்கிறது. அந்தப் பெண்ணின் குற்றச்சாட்டுப்படி, இந்த வழக்கின் பிரச்னை என்னவென்றால், பிடித்துக்கொள்பவர் எவரும் இல்லாததால் அவளுக்குக் காயம் ஏற்பட்டது என்பதே.
மேம்பட்ட செய்தி இணைப்புகள்
சுமார் 543 கோடி ரூபாய் செலவில் ஆறு மாத காலமாக நிறுவப்பட்டபின்பு, அட்லான்டிக்கைக் கடந்து செல்லும் முதல் நார்பொருள்-ஆப்டிக் தொலைப்பேசி கம்பிவடம் கடந்த டிசம்பரில் இயங்க ஆரம்பித்தது. செயற்கைக் கோள்களோடு இணைக்கப்பட்டிருக்கும் தற்போதுள்ள மூன்று செம்பு கம்பிவடங்களால் ஒரே சமயத்தில் அதிகபட்சமாகக் கடல் கடந்து 20,000 தொலைப்பேசி இணைப்புகளை எடுத்துச் செல்ல முடியும். என்றபோதிலும் நார்பொருள் ஆப்டிக்கின் கம்பிவடம் 40,000 இணைப்புகளை எடுத்துச் செல்லும் திறம்படைத்தவையாகும். ஒரு செம்பு தந்தி கம்பியால் 48 இணைப்புகளை மாத்திரமே எடுத்துச் செல்ல முடிகையில், தனியொரு ஆப்டிக்கல் நார்பொருளினால் லேசர் ஒளியின் மூலமாக 8,000 இணைப்புகளுக்குக் கம்ப்யூட்டர் செய்தி குறிப்புகளையும் கொண்டு செல்ல முடிகிறது. இந்தப் புதிய தொழில் நுணுக்கத்தின் விளைவாக, அனைத்து நாடுகளோடும் தொலைப்பேசியில் தொடர்பு கொள்வதும் செய்தி குறிப்புகள் அனுப்புவதும் விரைவாகவும் உண்மையில் ஒலிக்கோளாறு எதுவுமின்றி இதைச் செய்வதும் கூடியகாரியமாக இருக்கிறது. (g89 3/22)
“நச்சுத்தன்மையுள்ள” இரத்தம்
எய்ட்ஸ்–கறைப்பட்ட இரத்தம் ஒரு நச்சுப் பொருளாகும் என்பதாக நியு யார்க், புரூக்ளினிலுள்ள ஓர் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. முன்னொருபோதும் இல்லாத இந்தத் தீர்ப்பு, கவலையீனமாக எறியப்பட்டிருந்த ஒரு மருந்தூசியினால், எய்ட்ஸ் நோயாளியான ஒரு மருத்துவர் 29,750 இலட்சம் ரூபாய், உரிமைகோரிக்கை வழக்கைத் தொடர வழியைத் திறந்தது. அந்த 30 வயது பெண் மருத்துவர், இனிமேலும் வேலைசெய்வதற்கு மிகவும் நோயுற்றிருப்பதாகவும், இதன் காரணமாக “தாமதமின்றி வழக்குவிசாரணையை நாடுவார்” என்றும் அவளுடைய வழக்கறிஞர் நியு யார்க் டைம்ஸிடம் தெரிவித்தார்.
ஆட்டோலாகஸ் அண்டு டையரக்டட் பிளட் புரோகிராம்ஸ் என்ற தலைப்பில் அமெரிக்க இரத்த வங்கி சங்கங்களால் வெளியிடப்பட்ட ஓர் அறிக்கை, எய்ட்ஸ் கறைப்படிந்த இரத்தத்தைப் பற்றி இந்தக் குறிப்பைத் தருகிறது: “அனைத்து மருத்துவ வஞ்சப்புகழ்ச்சிகளிலும் இதுவே மிகக் கசப்பானதாகும், அதாவது விலைமதிப்புள்ள உயிரைக் கொடுக்கும் ஈவாகிய இந்த இரத்தம் மரணத்தைக் கொண்டுவரும் ஒரு கருவியாக மாறக்கூடும் என்பதே.”
வத்திக்கன் அறிந்திருந்ததா?
நாசியில் படுகொலை தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, வத்திக்கன் இதை அறிந்திருந்ததா என்ற கேள்வியை அண்மையில் இத்தாலிய தினசரி குரியர் டெல்லா செரா எழுப்பியது. யூதர்களும் மற்றவர்களும் அடியோடு அழிக்கப்படுவதைக்குறித்து நேரடியாக வத்திக்கனுக்கு தகவல் தெரிவித்த அநேக நம்பத்தகுந்த, நேரில் பார்த்த சாட்சிகளைக் கட்டுரைப் பட்டியல் போட்டு காட்டுகிறது. உதாரணமாக, இரயில் மருத்துவமனையிலிருந்த ஒரு தனிமதகுரு “போப்பிடம் கண்ணீருடன் சொன்னதாவது: ‘சிறுபான்மையினரும் யூதர்களும் தொடர்ந்து இரக்கமின்றி கொல்லப்படுகிறார்கள். ஏழை யூதர்களுக்கு உணவு வாங்க ரேஷன் அட்டைகள்கூட இல்லை. ஆகவே அவர்கள் பசியில் சாகிறார்கள்.’” படுகொலைப் பற்றி வத்திக்கனுக்கு தகவல் தெரிவித்தவர்கள் என்பதாக கட்டுரையின் பட்டியலில் இடம்பெறுகிறவர்கள்: பெர்லினிலிருந்துவரும் போப்பின் பிரதிநிதி முன்ஸ்டர் மற்றும் வியன்னாவின் பேராயர்கள், ஜெர்மன் ஆணைக்குப் போப்பின் தூதுவர், மாவட்ட சமயத் தலைவருக்கு ஜெர்மன் அரசின் தூதுவர். கட்டுரையின் முடிவு? “வத்திக்கன் அறிந்திருந்தது.”
மற்றொரு கோட்பாடு தோல்வியடைகிறது
பூமியில் உயிர், கடலடியில் வெப்பமூட்டப்பட்ட நிலஞ்சார்ந்த நீராற்றலின் (வெப்ப நீர்) போக்குவழியில் ஆரம்பமானது என்ற கோட்பாடு, அண்மையில் செய்யப்பட்ட சோதனையால் தவறென நிரூபிக்கப்பட்டுள்ளது. “இது ஒருவேளை உயிர் ஆரம்பமாவதற்கு மிகவும் சாத்தியமற்ற இடமாகும்,” என்கிறார் கலிஃபோர்னியா பல்கலைக்கழக வேதியல் வல்லுநர் ஜெஃப்ரி L. பாடா. வெப்பமூட்டப்பட்ட நிலஞ்சார்ந்த நீராற்றலின் போக்குவழியைச் சுற்றி மாபெரும் இரட்டையோட்டு சிப்பிகளையும் புழுக்கள் போன்ற வளமான நுண்ணுயிரிகளையும் மற்ற உயிரிகளையும் கண்டுபிடித்தப்பின்பு இந்தக் கோட்பாடு எடுத்துரைக்கப்பட்டது. போக்குவழியின் வெப்பத்தையும் அழுத்தங்களையும் விரைவுபடுத்துகையில், பாடாவும் அவருடைய கூட்டாளி ஸ்டன்லி L. மில்லரும், உயிரின் கட்டுமானப் பொருளாகிய அமினோ அமிலங்கள் இப்படிப்பட்ட நிலைமைகளின் கீழ் வேகமாகச் சிதைந்துவிட்டதைக் கண்டார்கள். “அமினோ அமிலங்கள் அளவில் பெரிய பெப்டைட் மூலக்கூறுகளாக இணையும், மீச்சேர்ம இணைவு எந்த ஒரு வெப்ப நிலையிலும் தண்ணீரில் சாத்தியமற்றது என்பது கண்டுபிடிக்கப்பட்டது,” என்கிறது தி நியு யார்க் டைம்ஸ். “மரபுவழிப் பண்பியலைத் தாங்கிச் செல்லும் உயிரிகளுக்குத் தேவையாக இருக்கும் அதிக சிக்கலான மூலக்கூறுகள் அளவுக்கு அதிகமான வெப்பத்தில் நீண்டநேரம் நிலைத்திருக்கவில்லை.” டைம்ஸின்படி, “தொடக்கக் காலக் கடலின் வெப்ப நீர், உயிர்ப்பொருள் ஆக்கக்கூறுகளை உருவாக்குவதற்குப் பதிலாக, தொடக்கக் காலக் கடலில் அது அவைகளை அழித்தே இருக்கும்” என்ற முடிவுக்கு ஆய்வாளர்கள் வந்தார்கள்.
நினைவுகள் கிளறிவிடப்படுகின்றன
ஜப்பான் ஆசிரியர்கள் சங்கம், ஜப்பானின் கல்வி அமைச்சரகத்தோடு ஒரு விவாதத்தை மேற்கொண்டிருக்கிறது. இந்தச் சங்கம், “வகுப்பறையில் தேசப்பற்றுக்கு அமைச்சரகத்தின் வளர்ந்துவரும் ஆதரவை விரும்பவில்லை” என்பதாகவும் “கொடியும் கீதமும் இன்னும் 1930-களின் நினைவுகளைத் தூண்டிவிடுகிறது” என்பதாகவும் பொருளியலர் குறிப்பிடுகிறது. 1930-களில் தங்களுடைய கிறிஸ்தவ நடுநிலைக்காக, சிறையிலடைக்கப்பட்ட ஜப்பானிய யெகோவாவின் சாட்சிகளுக்கு அந்த நாட்களின் தேசப்பற்றைப் பற்றிய நினைவுகள் தெளிவாக இன்னும் மனதைவிட்டகலாமலே இருக்கிறது.
சூறாவளியின் பெருஞ்செலவுபிடிக்கும் பின்விளைவு
தெற்கு இங்கிலாந்து, ஓராண்டுக்கு முன்பாக வன்மையாக அடித்தச் சூறாவளி விட்டுச் சென்ற குப்பைக்கூளத்தை இன்னும் துப்புரவு செய்து கொண்டிருக்கிறது. சூறாவளி நிலையாக விட்டுச் சென்ற செல்வம்: 150 இலட்சம் வீழ்த்தப்பட்ட மரங்கள், இவைகளில் பல இன்னும் நிலத்தின் மீது அழுகிக் கொண்டிருக்கின்றன. மான்செஸ்டர் கார்டியன் வீக்லி பிரகாரம், சூறாவளி “சுமார் 100 இலட்சம் கருவாலி மரங்களையும், 17 இலட்சம் புங்க மரங்களையும், 12 இலட்சம் அகலமான இலையுடைய மற்ற மரங்களையும் பலிவாங்கியிருக்கிறது” “மொத்தத்தில் 5,333 ‘பூர்வ பாதி இயற்கைக் கானகங்கள்’ மோசமாக சேதமடைந்துவிட்டன.” சூறாவளிக்கு ஓராண்டுக்குப்பின், வீழ்ந்துவிட்ட ஊசியிலைக் காட்டு மரக்கட்டைகளில் சுமார் பாதியும், வயிரம் பாய்ந்தக் கட்டையில் 20 சதவிகிதமும் மாத்திரமே நிலத்திலிருந்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளன. ஏன்? சிதைக் கூளங்களைத் துப்புரவு செய்வது, பெருஞ்செலவை உட்படுத்துவதாக உள்ளது. 50 இலட்சம் புதிய மரங்களை நடுவது நடந்துகொண்டிருந்தாலும், சேதமடைந்த சில கானகங்கள் பயிர்நிலங்களாக மாற்றப்படும். ஆறுதலளிக்கும் ஒரு காரியம்: அநேக நல்ல மரங்கள் சூறாவளியில் இழக்கப்பட்டாலும் அழுகிக் கெட்டுவரும் ஏராளமான மரங்களையும்கூட அது நீக்கிவிட்டிருக்கிறது. (g89 3/8)