அந்தப் படுகொலை ஆம், அது உண்மையிலேயே நடந்தது!
ஆச்சரியம் என்னவென்றால், நவீன சரித்திரத்தில் காணப்படுகிறபடி, அந்தப் படுகொலை நடக்கவில்லை என்பதாக ஒரு சிறுபான்மையினர் கருத்து தெரிவிக்கின்றனர். அறுபது இலட்சம் பேர் உண்மையிலேயே மாண்டனரா? கடைசியில் உண்மை வெளிப்படுகிறது (Did Six Million Really Die? The Truth at Last) என்ற தன்னுடைய புத்தகத்தில் ரிச்சர்டு ஹார்வுட் பின்வருமாறு குறிப்பிடுகிறார்: “முழுவதுமாய் அழிக்கப்பட வேண்டும் என்ற ஜெர்மானியரின் அதிகாரப்பூர்வமான கொள்கையின் விளைவாக இரண்டாம் உலக மகா யுத்தத்தில் அறுபது இலட்சம் பேர் மாண்டனர் என்ற குற்றச்சாட்டு முற்றிலும் ஆதாரமற்றது.”
எனவே பின்வரும் கேள்விகள் எழுப்பப்படுகின்றன: இரண்டாம் உலக மகா யுத்தத்தின் போது யூதர்கள் முழுவதுமாக அழிக்கப்படுவதற்கான உத்தரவை நாசியர் பிறப்பித்தனரா? கான்சன்ட்ரேஷன் முகாம்களில் நாற்பது முதல் அறுபது இலட்சம் யூதர்கள் உண்மையிலேயே மாண்டனரா? நச்சுப்புகை அறைகள் என்பவை இருந்தனவா? அல்லது இவை ஜெர்மானிய சரித்திரத்தின் பிசகுகளா?
இந்தச் சம்பவங்கள் நிகழவில்லை என்று புரட்சி மனங்கொண்ட சில சரித்திராசிரியர்கள் கூறுகின்றனர். அதிகப் பட்சமாக, ஒரு சில ஆயிர யூதர்கள்தான் மாண்டனர் என்றும், பெரும்பான்மையினர் மற்ற தேசங்களுக்கு நாடுகடத்தப்பட்டனர் என்றும் அவர்கள் வாதிடுகின்றனர்.
கானடா தேசத்தில் அண்மையில் கையாளப்பட்ட ஒரு வழக்கில் இந்த விவாதம் இடம்பெற்றது. அந்தப் படுகொலை நடக்கவில்லை என்று மறுப்பதன் மூலம் “சமுதாய அல்லது இன ஒற்றுமைக்கும் சகிப்புத்தன்மைக்கும் ஊறு விளைவிக்கக்கூடிய பொய்த் தகவல்களைத் தெரிந்து வெளியிட்டதாக கானடாவில் குடியேறிய ஒரு ஜெர்மானியர் மீது வழக்கு தொடரப்பட்டது என்று கானடாவின் டொராண்டோ பத்திரிகை தி குளோப் அண்டு மெய்ல் (The Globe and Mail) அறிக்கை செய்தது. அதன் முடிவு, அவருக்கு 15 மாத சிறை தண்டனையும் அந்தப் படுகொலை குறித்து அவருடைய புரட்சியான கருத்துகள் வெளியிடப்பட்ட அந்தப் புத்தகத்தின் பேரில் தடையும் விதிக்கப்பட்டது.
“‘தேசிய சோஷியலிசத்துக்கு அல்லது மற்ற வகையான கொடுங்கோலாட்சிக்குப் பலியானவர்களை’ அவதூறாய்ப் பேசுகிறவர்கள், பழிதூற்றுகிறவர்கள் அல்லது மதிப்புக் குறைவாகப் பேசுகிறவர்களுக்கு” எதிராக யூதர் அல்லாத மற்றவர்களுங்கூட வழக்குத் தொடருவதைக் கூடிய காரியமாக்கிட மேற்கு ஜெர்மனியில் எதிர் அவதூறு சட்டம் 1985-ல் திருத்தியமைக்கப்பட்டது. இந்தச் சட்டம் “நாசிய சர்வாதிகார ஆட்சியில் கான்சன்ட்ரேஷன் முகாம்களில் யூதர்கள் படுகொலை செய்யப்பட்டதை மறுப்பதைத் தண்டனைக்குரிய குற்றமாக ஆக்கியது,” என்று ஹாம்பர்கர் அபெண்டுபிளாட் (Hamburger Abendblatt) குறிப்பிட்டது.
அந்தப் படுகொலை நிகழ்வை மறுப்பது பொதுவாக “ஆஸ்ச்விட்ஸ் பொய்” என்பதாக அழைக்கப்பட்டது. நாசியர் மொத்தப் படுகொலைகளைச் செய்த போலந்திலிருக்கும் இழிபெயருக்குரிய முகாம்தான் அந்த ஆஸ்ச்விட்ஸ் (இப்பொழுது ஆஸ்வீஸிம்). மேற்கு ஜெர்மனியின் செய்திப் பிரிவின்படி, வலது சாரி தீவிரவாதிகள் இந்தச் சம்பவங்களை மூடி மறைக்க அல்லது மறுக்க முயன்றிருப்பதால் “ஆஸ்ச்விட்ஸ் பொய்” என்ற பதம் தோன்றியது.
வெளியேறுதலா அல்லது அடியோடு அழிக்கப்படுதலா?
ஐரோப்பிய பிறப்பு மூலத்துக்குரிய யூதர்களில் இலட்சக்கணக்கானோர் இன்று இருப்பதுதானே, ஐரோப்பிய யூதர்களை அடியோடு அழிப்பதில் நாசியர் வெற்றியடையவில்லை என்பதை நிரூபிக்கிறது. கான்சன்ட்ரேஷன் முகாம்களில் அவர்களை முற்றிலும் அழிப்பதற்காக செய்யப்பட்ட முயற்சிகளிலிருந்து அநேக யூதர்கள் தப்பியதை சரித்திராசிரியரான வில்லியம் L. ஷிரர் உறுதிசெய்கிறார். 20-வது நூற்றாண்டுப் பயணம்—1930–1940-ஆண்டுகளின் கொடுங்கனவு (20th Century Journey—The Nightmare years 1930–1940) என்ற புத்தகத்தில் பின்வருமாறு எழுதினார்: “நாசி முகாம்களிலும் சிறைகளிலும் ஆஸ்திரிய யூதர்கள் அனைவருமே அழிந்துபோகவில்லை. சிறையிருப்பிலிருந்து வெளி நாடுகளுக்குச் சென்றுவிடுவதை விலைகொடுத்து வாங்குவதற்கு அநேகர் அனுமதிக்கப்பட்டனர். பொதுவாக அது அவர்களுடைய வாழ்நாள் சம்பாத்தியத்தையே உட்படுத்தியது. . . . அநேகமாக வியன்னாவின் 1,80,000 யூதர்களில் பாதிபேர் அந்தப் படுகொலை ஆரம்பிப்பதற்கு முன்பாகவே தங்களுடைய சுதந்தரத்தை விலைகொடுத்து வாங்க முடிந்தது.” இந்தக் கொள்கை விசேஷமாக 1930-களில் அமலில் இருந்தது.
யூதர் அயல் நாடுகளில் குடியேறுவதற்கான அலுவலகம் ரீன்ஹார்டு ஹேட்ரிச் தலைமையில் நிறுவப்பட்ட போதிலும், “பின்னால் அது வெளியேறுதலுக்குரிய அலுவலகமாக இருப்பதற்கில்லை, மாறாக அடியோடு அழிக்கப்படுவதற்கான ஏதுவாகவும் நாற்பது இலட்சம் யூதர்களுக்கும் மேலாக ஒருவர் பின்னால் ஒருவர் படுகொலை செய்யப்படுவதை ஒழுங்கமைப்பதற்குரிய கருவியாகவும் இருந்தது” என்பதாக ஷிரர் விளக்குகிறார். இந்தக் “கடைசி தீர்வு” கார்ல் அடால்ஃப் ஈச்மென் தலைமையில் நிறைவேற்றப்பட்டது. அவன்தானே கடைசியில் போர்க் குற்றங்களுக்காக இஸ்ரேயலில் தூக்கிலிடப்பட்டான்.
கீழ்மட்ட மனிதர் என்றும் தாழ்ந்த ஜாதியினர் என்றும் நாசியரால் கருதப்பட்டவர்களை நிர்மூலமாக்குவதற்குக் கான்சன்ட்ரேஷன் முகாம்கள் மட்டுமே பயன்படுத்தப்படவில்லை. அதிகமாக அஞ்சப்பட்ட ஈன்சாட்ஸ்குரூப்பன் (Einsatzgruppen) (விசேஷ செயற் குழுக்கள்), அந்த இனத்தையே அடியோடு அழிப்பதில் ஈடுபட்ட குழுக்கள் இருந்தன, இவை படையெடுக்கும் இராணுவத்துக்குப் பின்னே சென்று “யூதர்களை ஒட்டுமொத்தமாக அழிப்பதையே ஒரே குறிக்கோளாகக் கொண்டிருந்தன. . . . முன்னேறிச் செல்லும் முன்னணிக்குப் பின்னால் மிக நெருங்கப் பின்தொடர்ந்து, ஒருவரும் தப்பாதிருக்குமளவில் அந்த ஈன்சாட்ஸ்குரூப்பன் தங்களுடைய விசேஷ செயல் திட்டத்தின் முதல் ஆறு மாதங்களில் ஏறக்குறைய ஐந்து இலட்சம் யூதர்களைக் கொடிதாய்ச் சுட்டுக் கொன்றனர், துப்பாக்கித் தண்டால் அடித்துக் கொன்றனர், எரித்தனர், வதைத்தனர், அடித்துக் கொன்றனர் அல்லது உயிரோடு புதைத்தனர்.”—புரூஸ் குவாரி எழுதிய ஹிட்லரின் சமுராய்—வேஃபன்-SS தீவிர நடவடிக்கை (Hitler’s Samurai—The Waffen–SS in Action).
அந்த எண்ணிக்கையை நம்ப முடியவில்லையா? அது 3,000 பேர் கொண்ட குழுவில் ஒருவன் ஒரு நாளைக்குச் செய்யும் ஒரு கொலைக்கும் சற்று குறைவு என்ற சராசரியாக இருக்கிறது. இந்த விசேஷ செயற் குழு சோவியத் பிராந்தியங்களுக்கு வந்த போது, மரித்தோரின் ஒரு பகுதி கணக்குப்படி, பலியான யூதர்களின் “மொத்த எண்ணிக்கையில் மூன்றில் இரண்டு பங்காக 9,00,000-ற்கும் அதிகமான எண்ணிக்கையை மட்டுமே கொடுக்கிறது.”—ரால் ஹில்பர்க் எழுதிய ஐரோப்பிய யூதரின் அழிவு (The Destruction of the European Jews).
படைத் தலைவர் அறிக்கையிடுகிறார்
கான்சன்ட்ரேஷன் முகாம்களில் அந்தப் படுகொலைகளை நிறைவேற்றுவதில் பங்குகொண்டவர்களிடமிருந்து என்ன வாக்குமூலங்கள் இருக்கின்றன? ஆஸ்ச்விட்ஸ் முகாமின் முன்னாள் படைத் தலைவராயிருந்த ருடால்ஃப் ஹாஸ் முறையிட்டதாவது: ‘என்னை நம்புங்கள், மலைக்குவியலாகக் கிடந்த அந்தச் செத்த உடல்களைப் பார்ப்பதும் அவை இடைவிடாமல் எரிந்துகொண்டிருப்பதன் வாடையும் எல்லாச் சமயத்திலும் இன்பமாயிருக்கவில்லை.’ யூதரின் சிறப்புப் பணிக்குரிய படைப் பிரிவுகள் (சான்டர்கமான்டாஸ்) “தங்களுடைய சொந்த வாழ்நாள் சற்றே நீடித்திட தங்களுடைய சொந்த இனத்தவரை விஷக் காற்று அறையில் கொல்லப்படுவதற்கு உதவின காரியத்தை அவர் ஏற்கமுடியாமல் அச்செயலில் ஆச்சரியத்தை” வெளிப்படுத்தினார். (ஜோயாக்கீம் C. ஃபெஸ்ட் எழுதிய நாசி ஆட்சிக்குரிய ஜெர்மன் குடியரசின் முகம், பக்கம் 285 (The Face of the Third Reich)) ஜெர்மன் ஆசிரியர் ஃபெஸ்ட் மேலும் கூறுகிறார்: “‘SS அரசு அதிகாரத்தின் [ஹீன்ரிச் ஹிம்லர்] சித்தம்படி, ஆஸ்ச்விட்ஸ் மனிதரை அழிப்பதில் எல்லாக் காலத்திற்குமான மிகப் பெரிய மையமாயிற்று,’ அல்லது தன்னுடைய சொந்த முகாமின் நச்சுக் காற்று அறைகள் ட்ரெப்லிங்காவிலிருந்ததைவிட பத்து மடங்கு பெரியதாக இருந்தது என்று அதை அமைத்ததில் வெற்றி கண்டவருக்குத் திருப்தியை ஏற்படுத்தும் வகையில் குறிப்பிட்டபோது சில ஒரு பக்க வாதிகள் பெருமைப்படுகின்றனர்,” என்பதை ஹாஸின் கூற்று தெளிவுபடுத்துகிறது.
தன்னுடைய சுயசரிதத்தில் ஹாஸ் பின்வருமாறு எழுதினார்: “நாசியர் ஆட்சிக்குரிய ஜெர்மன் குடியரசின் மிகப் பெரிய அழிக்கும் இயந்திரத்தின் பற்சக்கரத்தில் என்னை அறியாமல் ஒரு பல்லாக இருந்தேன்.” “SS அரசு அதிகாரி [ஹிம்லர்] யூதர்கள் எப்படி அழிக்கப்படுகிறார்கள் என்பதை அவர்கள் நேரடியாகப் பார்ப்பதற்காகக் கட்சியின் பல்வேறு உயர் அதிகாரிகளையும் SS அதிகாரிகளையும் ஆஸ்ச்விட்ஸ் அனுப்பி வைத்தார். அவர்கள் பார்த்ததில் திருப்தியைத் தெரிவித்தார்கள்.”a
என்றபோதிலும், “யூதர் பற்றிய கேள்விக்குக் கடைசி தீர்வு” என்ற கூற்றுக்கும் நச்சுக் காற்றறைகளில் நடந்த பயங்கரமான உண்மைக் காட்சிக்கும் இடையே இருந்த வித்தியாசத்தால் அவர்கள் பாதிக்கப்பட்டார்கள். தாம் அதை எவ்வாறு சகித்துக்கொள்ள முடிந்தது என்று கேட்கப்பட்ட போது, ஹாஸின் பதில்: “ஹிட்லரின் உத்தரவுகளை நாங்கள் இரும்பென உறுதியோடு நிறைவேற்றும் தன்மை மனித உணர்ச்சிகளைத் துச்சமெனக் கருதுவதால் மட்டுமே பெறப்படக்கூடும் என்பது என் மாறாத பதிலாக இருந்தது.”
இப்படியாக ஹாஸ், கொடுமையை விரும்புவோர் கையில் ஒரு பொம்மையாக, அந்தப் படுகொலை உண்மையில் நடந்தது என்றும் ஆஸ்ச்விட்ஸ் முகாம் படைத் தலைவராக தாமும் குற்றமிழைத்திருப்பவர்களில் ஒருவர் என்றும் ஒப்புக்கொண்டார்.
ஆஸ்ச்விட்ஸில் மதிப்பீடுகளும் வன்முறைகளும் (Values and Violence in Auschwitz) என்ற முதலாவது போலீஷ் மொழியில் பிரசுரிக்கப்பட்ட புத்தகத்தின் மொழிபெயர்ப்பாளர் கேத்தரின் லீச் குறிப்பிடுவதாவது, ஒட்டுமொத்தமான அழிவாலும், வாதனையாலும் கான்சன்ட்ரேஷன் முகாம்களில் அடிமைகளாகப் பணிபுரிவதாலும் 32,00,000 போலீஷ் யூதர்கள் தங்களுடைய உயிரை இழந்தனர். அவள் சொல்லுகிறாள்: “ஐரோப்பிய யூதர் படுகொலை செய்யப்பட்டது போலீஷ் பிராந்தியத்தில் நடந்தது.”
நீரில் அமிழ்த்திக் கொல்லுதல்
அந்த முகாம்களில் மரணம் பல வழிகளில் வரக்கூடும்—பட்டினி, பிணி, கழுத்தில் துப்பாக்கித் தோட்டா, நச்சுப்புகை அறை, அடி, தூக்கு, இயந்திரத்தில் தலை சீவப்படுதல் மற்றும் நீரில் அமிழ்த்திக் கொல்லுதல். நீரில் அமிழ்த்திக் கொல்லுதல் ஒரு விசேஷ முன்னேற்றமாயிருந்தது.
டெரன்ஸ் டெஸ் பிரஸ் என்ற எழுத்தாளர் விளக்குகிறார்: “உண்மை என்னவெனில், கைதிகள் ஒரே விதமாக அசுத்தத்தில் அமிழ்த்தப்பட்டனர். மலத்தின் தாக்குதலுக்கு அவர்கள் இறையானார்கள். . . . நாசி முகாம்களில் இருந்த கைதிகள் தங்களுடைய சொந்த மலஜலத்தில் அமிழ்த்தப்பட்டனர், உண்மை என்னவெனில், மலஜலத்தில் அமிழ்த்தி கொல்லுதல் சர்வ சாதாரண முறையாக இருந்தது. உதாரணமாக புஷன்வால்டில், கழிவிடங்கள் இருபத்தைந்து அடி நீளமும் பன்னிரண்டு அடி ஆழமும் பன்னிரண்டு அடி அகலமுமாக இருந்தன. . . . இந்தக் குழிகள் எப்பொழுதுமே நிரம்பிவழிந்தன. அந்தக் கைதிகள் இரவு நேரங்களில் சிறிய வாளிகளைக் கொண்டு காலி செய்தனர்.” இதை நேரில் பார்த்த ஒரு சாட்சியின் வார்த்தைகள்: “அந்த இடம் வழுவழுப்பாகவும், விளக்கில்லாமலும் இருந்தது. இந்தத் துப்புரவு வேலை கொடுக்கப்பட்ட முப்பது பேரில் ஒவ்வொரு இரவு வேலையின் போதும் சராசரியாக பத்து பேர் அந்தக் குழியில் வழுக்கி விழுந்தார்கள். விழுந்தவர்களைத் தூக்கி விட மற்றவர்கள் அனுமதிக்கப்படவில்லை. வேலை செய்யப்பட்டு அந்தக் குழி காலிசெய்யப்பட்ட பின்புதானே அந்தச் சடலங்கள் எடுக்கப்படுவதற்கு அனுமதிக்கப்பட்டது.”
அதிகமதிகமான ஐரோப்பிய நாடுகள் குடியேறப்படுகையில் முற்றிலும் அழிக்கப்படுதல் என்பது நாசிய கொள்கையின் ஒரு பாகமாயிருந்தது என்பதை நிரூபிக்க இன்னும் அதிகமான சாட்சியங்கள் மேற்கோள் காண்பிக்கப்படலாம். இந்தப் பொருளின் பேரிலிருக்கும் அட்டவணைக்கு முடிவில்லை. மற்றும் கண்கண்ட சாட்சிகளின் சாட்சியங்களுடன் கூடிய புகைப்பட அத்தாட்சிகளும் அதிர்ச்சியூட்டுவதாயிருக்கிறது. ஆனால் அந்தப் படுகொலை யூதரின் அனுபவமாக மட்டுமே இருந்ததா? நாசியர் போலந்து தேசத்தைத் தாக்கிய போது அவர்கள் யூதரை மாத்திரம்தான் நிர்மூலமாக்க நினைத்தனரா? (g89 4/8)
[அடிக்குறிப்புகள்]
a முகாம்களை அமைப்பதில் மேன்மையான மனச்சாட்சியுடன் பணிபுரிந்தவரும் குருட்டுத்தனமாக கீழ்ப்படிந்த அதிகார மனப்பான்மையுடையவருமான ருடால்ஃப் ஹாஸ், தன்னுடைய போர்க்கால குற்றங்களுக்காக ஆஸ்ச்விட்ஸில் ஏப்ரல் 1947-ல் தூக்கிலிடப்பட்டார்.
[பக்கம் 5-ன் சிறு குறிப்பு]
“கைதிகள் [கடுமையான வேலைகளை உட்படுத்தும் முகாம்களுக்கு மாற்றப்பட்டவர்கள்] நேரடியாக ஆஸ்ச்விட்ஸ் நச்சுப்புகை அறைகளுக்குள் அழைத்துச்செல்லப்பட்டிருப்பார்களானால் அவர்கள் எவ்வளவோ வேதனைகளுக்குத் தப்பியவர்களாய் இருந்திருப்பார்கள்.”—ருடால்ஃப் ஹாஸ், ஆஸ்ச்விட்ஸ் படைப்பிரிவின் தலைவர்
[பக்கம் 8-ன் சிறு குறிப்பு]
‘என்னை நம்புங்கள், மலைக்குவியலாகக் கிடந்த அந்தச் செத்த உடல்களைப் பார்ப்பதும் அவை இடைவிடாமல் எரிந்துகொண்டிருப்பதன் வாடையும் எல்லாச் சமயத்திலும் இன்பமாயிருக்கவில்லை.’—ருடால்ஃப் ஹாஸ்
[பக்கம் 6-ன் பெட்டி]
சாக்ஸன்ஹுசன்—“பாதுகாப்பான சிறைகாவல் முகாமா”?
சாக்ஸன்ஹுசன் உண்மையிலேயே மொத்தமாக அழித்திடும் ஒரு முகாமா? அல்லது அது வெறும் ஒரு “பாதுகாப்பான சிறைகாவல் முகாமா”?
அந்தப் படுகொலையைத் தப்பிய யூதன் மாக்ஸ் லீப்ஸ்டர் கூறும் பதில்:
“என்னுடைய கூற்று எனது சொந்த அனுபவத்தையும் இந்த முகாமில் நான் நேரடியாகப் பார்த்ததையும் அடிப்படையாகக் கொண்டது. சாக்ஸன்ஹுசன் எப்படி இருந்தது என்பதை அறிந்துகொள்ள வெளியில் வேறொருவரின் விளக்கம் எனக்குத் தேவையில்லை. உண்மைதான், நாசிய செய்திப் பிரிவும் அரசும் அது ஒரு ஷுட்ஷாஃப்ட்லாகர், ஒரு ‘பாதுகாப்பான சிறைகாவல் முகாம்’ என்று உரிமைபாராட்டியது. பின்வரும் அனுபவங்கள் நேரடியாகப் பேசுகின்றன:
“ஜனவரி 1940-ல் என்னை கெஸ்டப்போ (மாநில இரகசிய காவல்பிரிவினர்) ஃபார்ஷீமிலிருந்து கார்ல்ஷ்ருஹெ சிறைக்குக் கொண்டுவந்தபோது, கொல்லப்படும் ஒரு முகாமுக்குக் கொண்டுசெல்லப்படுகிறேன் என்று என்னிடம் கெஸ்டப்போ சொன்னார்கள். அந்தக் கெஸ்டப்போ என்னைக் கடுமையாகத் திட்டினான்: ‘துர்நாற்றங்கொண்ட யூதனே. நீ ஒரு மிருகத்தைப் போல சாவாய். நீ ஒருபோதும் திரும்பிவர மாட்டாய்!’ (‘Du Stinkjude wirst dort verecken, kommst nicht mehr zuruck!’)
“நாங்கள் சாக்ஸன்ஹுசனுக்கு வந்தபோது எங்களை நடத்திய விதம் மனிதரால் எண்ணிப்பார்க்க முடியாதளவுக்கு மோசமாக இருந்தது. யூதர்கள் எல்லாரும் பிரதான முகாமிலிருந்த ஒரு தனி முகாமுக்கு அனுப்பப்பட்டனர். மற்ற இடங்களைவிட அங்கு நிலைமை மிக மோசமாக இருந்தது. உதாரணமாக, யூதருக்குப் படுத்து உறங்க அடுக்குகள் கிடையாது, தரையில் வெறும் வைக்கோல் கோணிதான் இருந்தது. அந்த இடம் அவ்வளவு நெருக்கமாக இருந்ததால் மத்தி மீன்களைப் போல நெரித்து படுக்க வேண்டியதாயிருந்தது, ஒருவருடைய கால்கள் மற்றவருடைய தலைமாட்டில். காலை எழுந்து பார்த்தால், உயிரோடிருந்தவர்கள் மத்தியில் மரித்த மனித உடல்கள். யூதருக்கு எந்தவித மருத்துவ கவனிப்பும் கிடையாது.
“என்னுடைய தந்தை மூன்று படைக்குடியிருப்புத் தள்ளி இருப்பதாகக் கேள்விப்பட்டேன். அவர் வைக்கோல் கோணிகள் குவிக்கப்பட்டிருக்கும் இடத்திற்குப் பின்னால் படுத்துக்கொண்டிருப்பதை நான் பார்த்தேன். அவருடைய கால்களில் நீர் வீக்கம் காணப்பட்டது, அவருடைய கைகள் ஜில் என்று மரத்து காணப்பட்டது. அவர் மரித்த பின்னர், நான்தானே அவருடைய உடலைத் தகனிப்பதற்குத் தோளில் சுமந்து செல்லவேண்டியிருந்தது. அந்த இடத்தில் எரிக்க முடியாதளவுக்கு சடலங்கள் குவிக்கப்பட்டிருப்பதைப் பார்த்தேன்.
“மனிதத்தன்மையற்றவிதத்தில் நடத்தப்பட்டதால் சாக்ஸன்ஹுசனில் ஆயிரக்கணக்கானோர் மரித்தனர். அநேகருக்கு ஆஸ்ச்விட்ஸ் நச்சுப் புகை அறைகளில் போடப்பட்டு சாவதைவிட சாக்ஸன்ஹுசனில் சாவது மிக மோசமான அனுபவமாயிருந்தது.”
[பக்கம் 7-ன் பெட்டி]
“அவர்கள் அடையாளந்தெரியாமல் ஆகிவிடவேண்டும்”
“மொத்தமாகப் புதைக்கப்பட்ட கல்லறைகளில் அந்தக் கடைசி கல்லறை திறக்கப்பட்டபோது, என்னுடைய முழு குடும்பத்தையும் நான் அடையளம்காண முடிந்தது. என்னுடைய தாயும் சகோதரிகளும். தங்களுடைய சிறு பிள்ளைகளுடன் என் மூன்று சகோதரிகள். அவர்கள் எல்லாருமே அதிலிருந்தார்கள். அவர்கள் மண்ணில் நான்கு மாதங்களாக இருந்தார்கள். அது பனிகாலமாக இருந்தது.” “வில்னா கெஸ்டப்போ தலைவன் எங்களிடம் சொன்னான்: ‘அங்கு 90,000 மக்கள் கிடக்கிறார்கள், அவர்கள் அடையாளந்தெரியாமல் ஆகிவிடவேண்டும்.’”—அந்தப் படுகொலைக்குத் தப்பிய யூதர்களாகிய மாட்கே ஜெய்டில் மற்றும் இத்ஷாக் டகின்.
“நாங்கள் அந்தப் பக்கம் போன சமயம் அவர்கள் அந்த நச்சுப்புகை அறையின் கதவுகளைத் திறக்க, ஆட்கள் உருளைக்கிழங்குகள் போல் விழுந்தார்கள். . . . அந்தச் சடலங்களை மொத்தமாகப் புதைப்பதற்கான கல்லறைகளுக்கு எடுத்துச் செல்ல ஒவ்வொரு நாளும் நூறு யூதர்கள் பயன்படுத்தப்பட்டார்கள். மாலை வேளைகளில் யுக்ரேனியர்கள் அந்த யூதர்களை நச்சுப்புகை அறைகளுக்குள் பலவந்தமாய்த் தள்ளினர் அல்லது அவர்களைச் சுட்டுக் கொன்றனர். ஒவ்வொரு நாளும்! . . . அதிகமான ஆட்கள், அதிகமதிகமாக ஆட்கள் வந்துகொண்டிருந்தனர், அவர்களைக் கொல்லுவதற்கு எங்களிடம் வசதிகள் இல்லை. . . . நச்சுப்புகை அறைகள் அந்த எண்ணிக்கையைச் சமாளிக்க முடியவில்லை.”—ட்ரெப்ளிக்கா நிர்மூல முகாம் குறித்து தன்னுடைய முதல் அபிப்பிராயங்கள் பேரில் SS அதிகாரி (Unterscharfuhrer) ஃப்ரான்ஸ் சுஷோமல்.
(இந்த மேற்கோள்கள் ஷோவா (Shoah) என்ற மெய்விளக்கத் திரைப்படத்தில் வரும் பேட்டிகளிலிருந்து எடுக்கப்பட்டவை.)
“அதிகமான ஆட்கள், அதிகமதிகமாக ஆட்கள் வந்துகொண்டிருந்தனர், அவர்களைக் கொல்லுவதற்கு எங்களிடம் வசதிகள் இல்லை. நச்சுப்புகை அறைகள் அந்த எண்ணிக்கையைச் சமாளிக்க முடியவில்லை.”—ஃபிரான்ஸ் சுஷோமல், SS அதிகாரி
[பக்கம் 8-ன் பெட்டி]
அத்தாட்சிக்கு வெகுமானம்
“நாசியர் யூத பலியாட்களை கான்சன்ட்ரேஷன் முகாம்களில் நச்சுப்புகை கொண்டு படுகொலை செய்தார்கள் என்பதற்கு ‘அத்தாட்சிக்கு’ அளிக்கப்பட்ட $50,000 வெகுமானம் வழக்கு மன்றத்தின் நிபந்தனைகளின் கீழ் ஆஸ்ச்விட்ஸ் படுகொலைக்குத் தப்பிய நபருக்கு அளிக்கப்படவேண்டும் என்று அவருடைய வழக்கறிஞர் இன்று கூறினார்.
“[லாஸ் ஆஞ்சல்ஸ்] உச்ச நீதிமன்ற நீதிபதி ராபர்ட் வென்கெ அந்த ஈட்டுத் தொகைக்கு ஒப்புதல் கொடுத்தார். அது சரித்திர விமர்சன நிறுவனம் அந்த ஆஸ்ச்விட்ஸ் படுகொலைக்குத் தப்பிய மெல் மெர்மல்ஸ்டீன் என்பவருக்கு அந்தத் தொகையை வழங்கும்படிக் கோரியது. . . .
“அந்தப் படுகொலை ஒருபோதும் நடக்கவில்லை என்று உரிமைபாராட்டும் அந்த நிறுவனம்” திரு. மெர்மல்ஸ்டீனுக்கு அந்த வெகுமானத்தால் அவருக்கு ஏற்படுத்தப்படும் வேதனைக்கும் துன்பத்துக்கும் கூடுதலாக $1,00,000 கொடுக்க வேண்டும் என்று வழக்கறிஞர் கூறினார். . . .
“‘இந்த வழக்கில் திரு. மெர்மல்ஸ்டீனின் வெற்றி, உலகமுழுவதிலும் சரித்திரத்தை திரித்திட முயலுபவர்களும் யூதர்களுக்கு வேதனையையும் துன்பத்தையும் ஏற்படுத்துகிறவர்களுமாகிய எல்லாருக்கும் இது ஒரு தெளிவான செய்தியை அனுப்பும், அதாவது, அந்தப் படுகொலையில் உயிர்தப்பியவர்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ளவும், தங்களுடைய வாழ்க்கை சம்பந்தப்பட்ட இந்த உண்மையை நிலைபடுத்தவும் சட்டத்தின் மூலமாக எதிர்த்துப் போராடுவர் என்ற செய்தியை அனுப்பும்’ [என்றார் வழக்கறிஞர் குளோரியா ஆல்ரெட்].”—தி நியு யார்க் டைம்ஸ் (The New York Times), ஜூலை 25, 1985.