உங்கள் உணவு எந்தளவுக்குப் பாதுகாப்பாக உள்ளது?
ஜீன் குளிர்ச் சாதனப் பெட்டிக்குப் பின்னால் ஒரு கண்டம் கறி இருப்பதைப் பார்த்து மிகவும் கவலைப்பட்டாள். இதை அவள் கடந்த சனிக்கிழமை இரவு உணவுக்குச் சமைக்க வாங்கியிருந்தாள். எதிர்பாராதவிதத்தில் அந்த இரவு குடும்பம் உணவருந்த வெளியே சென்றுவிட்டபோது, அந்தக் கறியை குளிர்ச் சாதனப் பெட்டியில் வைக்க மறந்துவிட்டாள். இப்பொழுதோ நான்கு நாட்கள் கடந்துவிட்டன.
வேண்டா வெறுப்பாக அவள் அந்தக் கறி வைக்கப்பட்டிருந்த உறையை எடுத்து பிரித்து, முகர்ந்து பார்த்து தன் பயத்தைத் தீர்த்துக்கொண்டாள். என்றாலும் அவள் இப்படியாக யோசிக்க ஆரம்பித்தாள்: ‘இந்த வாடை ஒருவேளை கறி முழுவதும் வெந்துவிட்டால் மறைந்துவிடும்.’ என்றபோதிலும், காரியத்தைச் சீர்தூக்கிப் பார்க்கும்போது ‘சந்தேகமாயிருக்கும்போது அதை வெளியே எறிந்துவிடு,’ என்று தனக்குப் பழக்கப்பட்ட ஒரு செய்யுளை நினைவுபடுத்தினாள். அந்தக் கறியை அப்புறப்படுத்துவதன் மூலம், ஜீன் பாதுகாப்பற்ற உணவைச் சாப்பிடுவதால் ஏற்படும் உடல் நலக் கோளறுகளிலிருந்து தன் குடும்பத்தைப் பாதுகாப்பவளாய் இருந்தாள்.
ஆனால் பாதுகாப்பற்ற உணவில் இருக்கும் பிரச்னை அதைவிட அதிக கவலைக்குரிய நிலைகளை முன் வைக்கிறது. வளரும் நாடுகளில் நச்சுக்கலப்புற்ற உணவினால் வரும் நோய்கள் துன்பத்திற்கும் மரணத்திற்கும் பிரதான காரணமாக இருக்கிறது. செல்வச் செழிப்புள்ள நாடுகளிலுங்கூட இலட்சக்கணக்கானோர் இதனால் பாதிக்கப்படுகின்றனர். உதாரணமாக பிரிட்டிஷ் கூட்டரசில், உணவில் விஷம் கலந்துவிடுதல் சம்பந்தப்பட்ட சம்பவங்கள் ஆண்டுதோறும் பத்தாயிரத்துக்கும் அதிகமானவையாக அறிக்கை செய்யப்படுகிறது, ஒருவேளை உண்மையில் நடப்பவற்றில் அது நூறு மடங்காகவும் இருக்கக் கூடும். ஆனால் உணவைப் பாதுகாப்பற்றதாக்குவது எது?
ஏன் பாதுகாப்பற்றது?
தீங்கு விளைவிக்கும் நுண்கிருமிகளால் உணவு நச்சுக்குரியதாய் பாதுகாப்பற்றதாக ஆகக்கூடும். வீட்டில் தயாரிக்கப்பட்ட பதப்படுத்தப்பட்ட காய்கறி உணவு வகைகள் சரியாக மூடி வைக்கப்படாமல் இருந்தால், சல்லாதுக்குப் பயன்படுத்தப்படும் கீரை வகைகள் நன்கு கழுவப்படாவிட்டால், சமைக்கப்பட்ட கறியுணவு அறையின் வெப்பத்தில் அதிக நேரம் வைக்கப்பட்டால், அல்லது உணவைத் தயாரிப்பவர்கள் அதைச் சரியாகக் கையாளமல் இருந்தால் இது நேரிடக்கூடும். பூச்சி மருந்துகளாலும் அல்லது தீங்கு விளைவிக்கக்கூடிய அல்லது விஷ வஸ்துக்களுடன் கலக்க நேரிட்டாலும் உணவு நச்சுப்படக்கூடும்.
பாதுகாப்பற்ற ஏராளமான உணவுப்பொருட்கள் ஒவ்வொருநாளும் இறக்குமதியும் மற்றும் ஏற்றுமதியும் செய்யப்படுகிறது. வெறும் மூன்றுமாத காலப்பகுதியில் இறக்குமதிக்குப் பாதுகாப்பான உணவாக இல்லை என்று ஐக்கிய மாகாணங்கள் 104 கோடி ரூபாய்க்கும் அதிக மதிப்புடைய உணவு பொருட்களை நிராகரித்துவிட்டது. என்றபோதிலும் பாதுகாப்பற்ற உணவை நிராகரித்திடுவதில் இருக்கும் சொகுசான வாழ்க்கையில் அநேக தேசங்கள் மகிழ்ச்சி காண்பதில்லை. அது பெரும்பாலும் விற்பனை செய்யப்பட்டு பெற்றுக்கொள்ளப்படுகிறது.
“உணவு மூலம் கடத்தப்படும் நோய்கள் வறுமையில் வாடும் வீடுகளில் மட்டுமல்ல, உலகமுழுவதுமே கொள்ளை நோய்களாக இருந்துவருகின்றன,” என்று உலக உடல்நலம் (World Health) என்ற பத்திரிகை அறிக்கை செய்கிறது. அந்தப் பத்திரிகை மேலுமாகக் கூறுவதாவது: “நச்சுப்படுத்தப்பட்ட உணவின் காரணமாக ஏற்படும் பொருளாதார உற்பத்திக் குறைவுக்கு வழிநடத்தும் நோயும், உடல்நலக் குறைவும் இந்த உலகில் வெகுவாகப் பரவியிருக்கும் ஓர் உடல் நலப் பிரச்னையாக இருக்கிறது.”
ஐக்கிய மாகாணங்களில் ஆண்டுதோறும் 2 கோடி மக்களுக்குமேல் நச்சுப்படுத்தப்பட்ட உணவை வாங்குவதால் உடல் நலப் பிரச்னைகளில் அவதியுறுகிறார்கள் என்று கணக்கிடப்படுகிறது. ஐரோப்பாவில், உணவு மூலம் கடத்தப்படும் நோய்கள்தானே சுவாசக் குழாய் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு அடுத்தபடியாக ஏராளமான மரணத்தை ஏற்படுத்துவதாகக் கூறுப்படுகிறது. “தொழில்மயமாக்கப்பட்ட நாடுகள் உணவு மூலம் நோய்களைக் கடத்தும் தங்களுடைய சொந்த வழிகளையும் வழக்கங்களையும் கொண்டிருக்கின்றன,” என்கிறார் ஒரு விஞ்ஞானி. “மிகத் தெளிவாக இருக்கும் ஒரு பிரச்னை என்னவென்றால், பெரிய கறித் துண்டுகளுக்கான விருப்பமும், அவை பொதுவாக நன்றாக வேகாதவையாக இருப்பதுமே.”
வெளியே சாப்பிடுதல்
பொதுவாக வெளியே ஓர் உணவகத்தில் அல்லது விரைவு-உணவளிக்கும் நிறுவனங்களில் சிற்றுண்டி ஏற்று சாப்பிடுவதை எவரும் அதிகமாக யோசிப்பதில்லை. ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான சாப்பாடுகள் பரிமாறப்படுகின்றன, அதன் வாடிக்கையாளருக்கும் எந்தவித பாதிப்புகளும் ஏற்படுவதில்லை. என்றபோதிலும், முன்னேறிய நாடுகளிலுங்கூட இப்படிப்பட்ட உணவகங்களில் சாப்பிடுவதன் விளைவாக மக்கள் உணவு வழியாய்க் கடத்தப்படும் கடுமையான நோய்களால் பாதிக்கப்படுகின்றனர்.
உதாரணமாக, வட மேற்கு ஐரோப்பாவிலுள்ள ஓர் உணவகத்தில் கிறிஸ்மஸ் இரவு சாப்பாட்டுக்குப் பின்னர் 150-க்கும் அதிகமான ஆட்கள் நச்சுப்படுத்தப்பட்ட உணவால் பாதிக்கப்பட்டனர். உயிருள்ள கோழிகளை வெட்டுவதற்காகப் பயன்படுத்தப்பட்ட அதே மரப் பலகையில் சமைக்கப்பட்ட வான்கோழிகள் துண்டு போடப்பட்டன என்பது பின்னால் தெரியவந்தது. சால்மொனல்லா நுண்கிருமிகள் அந்த மரப் பலகையின் சந்துகளில் காணப்பட்டன.
ஓர் ஏழு நாள் கப்பற்பயணத்தின்போது, பயணிகளில் 20 சதவீதத்தினருக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. கப்பலின் உணவுப்பகுதி ஏராளமான பொருட்களால் அசுத்தமாக இருந்ததும் உணவைப் பாதுகாப்பாக வைப்பதற்குப் போதிய இடமில்லாமல் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. உணவு பரிமாறப்படும் மேசைகளில் பதப்படுத்தப்படாமல் அவை வெகு நேரத்துக்கு விடப்பட்டது, மற்றும் மீதிமிச்ச உணவு மறுநாள் பரிமாறப்பட்டது.
வளர்ந்த நாடுகளிலும் பாதுகாப்பற்ற உணவு ஒரு பிரச்னையாக இருப்பினும், அதன் பாதிப்புகள் வளரும் நாடுகளில் அதிக சேதத்தை உண்டாக்குவதாக இருக்கிறது.
தினசரி வாழ்க்கையின் ஒரு பாகம்
உலகின் பல பகுதிகளில் போஷக்குக் குறைவு என்பது வெறுமென உணவு பற்றாக்குறைவால் ஏற்படுவது அல்ல, “ஆனால் அசுத்தமான பாதுகாப்பற்ற உணவை அருந்துவதால் ஏற்படுகிறது,” என்று உலக உடல்நலம் என்ற பத்திரிகை அறிக்கை செய்கிறது. இது அடிக்கடி ஏற்படும் வயிற்றுப்போக்குக்கும் மற்ற தொற்று நோய்களுக்கும் வழிநடத்துகிறது.
“1980-களில் (சீனா உட்படாமல்) வளரும் நாடுகளில் ஐந்து வயதுக்கு உட்பட்ட பிள்ளைகளுக்குக் கடுமையான வயிற்றுப்போக்கு ஏற்பட்ட சம்பவங்கள் 75–100 கோடியாக இருந்தது,” என்று உலக உடல்நலம் பத்திரிகை அறிக்கைசெய்கிறது. ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் பத்து பிள்ளைகள் என்ற கணக்கில் ஏறக்குறைய 50 இலட்சம் பிள்ளைகள் வயிற்றுப்போக்கால் மரித்தனர்.” ஆனால் ஆபத்திலிருப்பது பிள்ளைகள் மட்டுமல்ல. “பயணிகளுக்கு ஏற்படும் வயிற்றுப்போக்குக் குறிப்பிடத்தக்க வகையில் பரவிவருகிறது, இது அனைத்து பயணிகளிலும் 20 முதல் 50 சதவீதத்தினரைப் பாதிக்கிறது,” என்று “உடல் நலத்திலும் முன்னேற்றத்திலும் உணவு பாதுகாப்பு வகிக்கும் பாகம்,” என்று 1984-ல் வெளிவந்த ஓர் அறிக்கை குறிப்பிட்டது.
உணவு மூலம் பரவும் பெரும்பாலான நோய்களுக்குக் காரணம் தகுந்த சுத்தம் பற்றி அறியாமையில் இருப்பதுதான் என்பதில் சந்தேகமில்லை. ஆரம்பத்தில் உணவு பாதுகாப்பாக இருக்கக்கூடும், ஆனால் அதை வாங்குகிறவரால், அல்லது இடையிலுள்ளவரால், அதாவது கடைக்காரர் அல்லது உணவைச் சமைப்பவரால் அது நச்சுப்படக்கூடும்.
அதுபோல, பல கலாச்சாரங்களில் இருக்கும் நம்பிக்கைகளும் உணவு நச்சுப்படுவதற்கு வழிவகுக்கக்கூடும். உதாரணமாக, தைப்பது, ஸ்திரி போடுவது, ரொட்டி சுடுவது போன்ற வேலைகளால் “சூடான” கைகள் உடனடியாகக் கழுவப்படக்கூடாது என்று மெக்ஸிகோ மக்கள் நம்புகின்றனர். உடனடியாகக் குளிர்ந்த தண்ணீர் படுவது மூட்டு நோய்களை, சளுக்கை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது. இப்படியாக, “சூடான” கைகள் கொண்ட ஒரு பெண்மணி கழிவறையைப் பயன்படுத்திய பின் தன் கைகளைக் கழுவாமலேயே குடும்ப உணவைச் சமைக்கக்கூடும். இதனால், தீங்கிழைக்கும் நுண்கிருமிகள் பரவுகின்றன.
மறுபட்சத்தில், சில கலாச்சாரங்களில் காணப்படும் வழக்கங்கள் பின்பற்றப்பட்டால், உணவு வழியாகப் பரவும் நோய்களைத் தடுக்கக்கூடும். இந்தியாவில் பல வீடுகளிலே தரை மட்டத்தில்தான் சமையல் செய்யப்படுகிறது. வீட்டிற்குள் பிரவேசிப்பதற்கு முன், விசேஷமாக சமையலறைக்குள் பிரவேசிப்பதற்கு முன் தெருக்களில் அணிந்து செல்லப்பட்ட காலணிகள் கழற்றிவைக்கப்படுகின்றன. மேலும் பழங்களைச் சாப்பிடுவதற்கு முன் அவற்றின் தோல் உரித்தெடுக்கப்படுகிறது. ஒரு விலங்கு உணவுக்காகக் கொல்லப்பட்டு ஒரு சில மணிநேரங்களுக்குள்ளாக அதன் கறி சாப்பிடப்படுகிறது. உணவு தட்டுகளில் வைத்து சாப்பிடப்படுவதற்குப் பதிலாக, கழுவப்பட்ட புது இலைகளில் வைத்து சாப்பிடப்படுகிறது.
பிரச்னையை மேற்கொள்ளுதல்
எல்லா மக்களுக்கும் பாதுகாப்பான உணவைப் போதியளவில் அளிக்கும் இலக்கை அடைந்திடுவதற்கு மனிதன் எவ்வளவு அண்மையில் இருக்கிறான்? இந்தப் பிரச்னையின் பேரில் குறிப்பிடுகையில் உணவு பாதுகாப்பின் பேரில் ஐக்கிய நாடுகள் சங்கத்தின் ஓர் அறிக்கை பின்வருமாறு சொன்னது: “கடந்த 40 ஆண்டுகளில், சர்வதேச அமைப்புகள் இந்தப் பிரச்னையைக் கையாளும் வகையில் அமைந்த ஏராளமான தொழில் நுட்ப அறிக்கைகளையும் திட்டங்களையும் உருவாக்கியிருக்கின்றன. என்றாலும் உணவு மூலம் கடத்தப்படும் நோய்கள் தொடர்ந்து அதிகரிக்கின்றன.”
இந்தப் பிரச்னையை மேற்கொள்வதற்கு தேவையான காரியம் என்னவென்றால், பொதுமக்களுக்கு, குறிப்பாக தாய்மார்களுக்குக் கல்வி. அப்பொழுது தனிப்பட்ட ஆட்கள் உணவை நச்சுப்படுவதிலிருந்து பாதுகாப்பான நடவடிக்கைகளை எடுக்க முடியும், மற்றும் தங்களுக்கும் தங்களுடைய குடும்பத்துக்கும் பாதுகாப்பான உணவருந்தும் பழக்கங்களைக் காத்துக்கொள்ளக்கூடும். பின்தொடரும் கட்டுரை சில ஆலோசனைகளை வழங்குகிறது. (g89 6/22)
[பக்கம் 21-ன் படம்]
இந்தியாவிலுள்ள இந்த வீட்டிலிருப்பது போல, உணவு தயாரிக்கும் பகுதி சுத்தமாக வைக்கப்பட்டால் உணவு பாதுகாப்பாக இருக்கக்கூடும்