மரபுவழிக் கோட்பாட்டியல் புரட்சி வளர்ந்துவரும் அக்கறையுடன் மிகப்பெரிய வாக்குறுதி
மரபுவழிக் கோட்பாட்டியல் புரட்சியானது ஆய்வுக்கூடத்தை விட்டு வெளியேறி தின வாழ்க்கையினுள் நுழைகின்றது. அது ஏற்கெனவே உங்களைப் பாதித்துவிட்டதா? சிந்தித்துப்பாருங்கள்:
▲ மரபுவழிக் கோட்பாட்டியலின்படி மாற்றப்பட்ட பாக்டீரியாக்கள், இன்சுலின், மனித வளர்ச்சி ஹார்மோன்கள் மற்றும் ஹெபடைடிஸ் B என்பதற்கு தடுப்பு மருந்து போன்றவற்றை இப்பொழுது மிகுதியாகத் தயாரிக்க முடியும்.
▲ மரபுவழிக்கோட்பாட்டியலினால் உண்டாக்கப்பட்ட எய்ட்ஸ் நோய்க்கு எதிரான இரண்டு மறைவு சக்திக் கொண்ட தடுப்பு மருந்துகளின் மீது ஐக்கிய மாகாணங்களில் மருத்துவ பரிசோதனைகள் தொடங்கியுள்ளன.
▲ அநேக பரம்பரை வியாதிகளுக்கு, அந்த வியாதிகளின் “குறிகள்” மனித டி.என்.ஏ-வில் காணப்படுவதால் பிறப்புக்கு முன்பே அதற்கான சோதனை செய்வது இப்பொழுது கூடியகாரியமாகின்றது. ஸிக்கில்-செல் அனீமியாவிற்கான அதிக நுட்பமான, மிக வேகமான, பிறப்புக்கு முன்னான பரிசோதனை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
▲ சில பரம்பரை வியாதிகளை உண்டாக்கும் மரபுவழி அணுக்கள் சரியாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. மேலும் சில சமயங்களில் மரபுவழிக் கோட்பாட்டுப் பொறியியலின்படி நகலெடுக்கப்பட்டு மீண்டும் உண்டாக்கப்பட்டுள்ளன.
▲ மரபுவழி அணுக்களைக் கண்டுபிடித்து வெற்றியினால் பூரிக்கும் சில விஞ்ஞானிகள், மனித டி.என்.ஏ-வை உண்டாக்கும் 23 ஜோடி குரோமோசோம்களில் உள்ள சுமார் 1,00,000 மரபுவழி அணுக்களின் சரியான கோட்பாடுகளைக் கண்டுபிடிக்க மரபுவழிக் கோட்பாட்டின் “மான்ஹாட்டன் திட்டம்” என்ற கருத்தினை சிபாரிசு செய்கின்றனர். ஐக்கிய மாகாண ஃபெடரல் அரசாங்கம் அந்தத் திட்டத்தை ஆதரிக்க ஒத்துக்கொண்டுள்ளது. காங்கிரசினால் அங்கீகரிக்கப்பட்டால், அது 15 வருடங்களையும், அநேக நூறு கோடி டாலர்களையும் எடுத்துக்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
▲ 1987-ல் ஐக்கிய மாகாண அதிகார உரிமைப் பத்திர அலுவலகம், அது மரபுவழிக்கோட்பாட்டுப் பொறியியலின்படி மாற்றப்பட்ட மிருகங்களின் மீது அதிகார உரிமைப் பத்திரத்துக்கான விண்ணப்பங்களைப் பற்றி யோசிக்கத் தயாராக இருப்பதாகச் சொல்லி விஞ்ஞானிகள் மற்றும் நீதிநெறியாளர்களிடையே ஓர் உயிருள்ள விவாதத்தைத் தொடங்கியது. 1988 ஏப்ரலில் அத்தகைய அதிகார உரிமைப் பத்திரம் ஒரு சுண்டெலிக்கு வழங்கப்பட்டது.
பெரிய அளவில் மருந்து உற்பத்தி
மரபுவழி அணுக்களை இணைப்பதனால் உடனடியாக அதிக அளவு இலாபம் கிடைப்பது அநேகமாக மருந்து உற்பத்தி துறையில்தான். மரபுவழிக் கோட்பாட்டுப் பொறியியலினால் உண்டாகும் மருந்துகளின் விற்பனை சமீப எதிர்காலத்தில் வருடத்திற்கு நூறு கோடி டாலர்களை எட்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால் இந்த வெற்றி ஓரிரவுக்குள்ளாக வந்துவிடவில்லை.
உதாரணமாக இன்சுலினை எடுத்துக் கொள்ளுங்கள். மரபுவழி அணுக்களை மாற்றி அமைக்கும் டி.என்.ஏ. தொழில்நுட்பத்தின் நடைமுறையான விளைவுகளில் ஒன்று, மனித இன்சுலினுக்கான மரபுவழி அணுவை (குரோமோசோம் 11-ல் காணப்படும்) கண்டடைந்து அதன் நகல்களை சாதாரண E. கோலை நுண்ணுயிரில் இணைப்பது ஆகும். இந்த மாற்றி அமைக்கப்பட்ட நுண்ணுயிரிகள் சரியாக மனித இன்சுலின் மூலக்கூறின் அமைப்பைக் கொண்ட அதிக அளவான இன்சுலினை உற்பத்தி செய்யமுடியும். ஆச்சரியம்!
எனினும், இந்தத் தொழில்நுட்பம் சோதனைச் சாலையைவிட்டு வெளியே வந்து, மருத்துவப் பரிசோதனைகளினூடே ஐ.மா. F.D.A. மருந்து அங்கீகார முறையினைக் கடந்து, கடைசியாக முழு அளவிலான உற்பத்தியையும், தாராளமாகக் கிடைக்கக்கூடியதாகவும் ஆக அநேக ஆண்டுகள் ஆயின. இந்த இன்சுலின் கிடைப்பதானது, நீரழிவு வியாதிக்குச் சிகிச்சைக் கிடைத்துவிட்டதாக அர்த்தம் இல்லை, இதை எந்த நீரழிவு வியாதியஸ்தரும் உங்களுக்குச் சொல்வர். ஜான்ஸ் ஹாப்கின்ஸ் நீரழிவு மையத்தின் நிர்வாகியான டாக்டர் கிறிஸ்டோபர் D. செளடெக்கின்படி, உண்மையில் இந்தத் தயாரிப்பு, “புதிதாக இன்சுலின் சிகிச்சை பெறும் மக்களுக்கும் வழக்கமான மாடு மற்றும் பன்றி இன்சுலின் ஒத்துக்கொள்ளாதவர்களுக்கும் சிறிது நன்மையாக இருந்தாலும், வழக்கமான தயாரிப்புகளை எடுத்துக்கொள்ளும் பெரும்பான்மையான ஜனங்களுக்கு இது தேவையில்லை.”
மரபுவழிக் கோட்பாட்டுப் பொறியியல் மருந்துகளில் மற்ற அனலான எதிர்பார்ப்புகள் TPA (tissue plasminogen activator) மற்றும் IL–2 (interleukin-2) ஆகியவற்றையும் உட்படுத்துகின்றன. இரத்தக் கட்டிகளைக் கரைக்க TPA உதவுகிறது. மாரடைப்பு நோயாளிகளுக்கு அவசர சிகிச்சைக் கொடுப்பதற்கு FDA இதை அங்கீகரித்துள்ளது. IL–2, பிரதானமாக இரத்த வெள்ளை அணுக்களிடையே கிரியை செய்யும் பிரிவுகளின் ஒரு குடும்பத்தைச் சேர்ந்தது. இது T செல்களின் வளர்ச்சியையும் முன்னேற்றத்தையும் மேம்படுத்த அவைகள் மறுபட்சத்தில் வியாதியுடன் போரட உதவுகிறது. இந்தப் புதிய மருந்துகள் தங்கள் வாக்குறுதியை நிறைவேற்றுமாவென காலம் சொல்லும்.
வியாதிகளுக்காக மரபுவழிக் கோட்பாட்டியல் பரிசோதனை
1986-ல் ஆராய்ச்சியாளர்கள் மரபுவழிக் கோட்பாட்டியலுக்கும் புற்று நோய்க்குமுள்ள இணைப்பைக் கண்டுபிடித்தனர். அவர்கள் (குரோமோசோம் 13-ல்) ரெட்டினோபிளாஸ்டோமா என்ற பரம்பரை கண் புற்றுநோயைத் தடுக்கும் என்று அவர்கள் நம்பும் ஒரு மரபுவழி அணுவை நகலெடுத்து அதைத் தனிமைப்படுத்தியுள்ளனர். எலும்பு புற்றுநோய்க்கும், எலும்பிலுள்ள ஊனின் தொடர்பு கொண்ட நாள்பட்ட வெண்குஷ்டத்துக்கும் இருக்கக்கூடிய தொடர்புகளுக்காக சந்தேகப்படும் மரபுவழி அணுக்கள் புலனாய்வு செய்யப்படுகின்றன.
மரபுவழி அணுக்கள், புற்றுநோயை ஆதரிக்கவும் அடக்கவும் முடியும் என்பதற்கு ஆதாரங்கள் அதிகரிக்கின்றன. UCLA-வின் (லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில்) மருத்துவர்கள் ஒரு சாதாரண உயிரணு, (கட்டிகளை உண்டாக்கும்) ஒன்று அல்லது இரண்டு எடுத்துச்செல்லும் மரபுவழி அணுக்களை கொண்டிருக்கலாம். ஆனால் ஒரு புற்றுநோய் உயிரணு இதைப்போன்று பத்து மடங்கு கொண்டிருக்கும் என்று கண்டுபிடித்துள்ளனர். அதிகமான இந்த மரபுவழி அணுக்கள், அதிக ஆபத்தான கட்டிகளை அர்த்தப்படுத்துவதால் ஆராய்ச்சியாளர்கள் இப்பொழுது தங்கள் நோயாளிகளை எப்படி நன்றாக சிகிச்சை செய்யலாம் என்பதற்காக அவர்களிலுள்ள எடுத்துச்செல்லும் மரபுவழி அணுக்களை எண்ணுகின்றனர்.
இவைகள் எல்லாம் ஆசை காட்டுவதாக இருந்தாலும், புற்றுநோய் ஒன்று மட்டுமே மரபுவழிக் கோட்பாட்டியல் பகுதியைக் கொண்டுள்ள வியாதியாக இல்லை. சையன்ஸ் என்ற பத்திரிகையில் வந்த அறிக்கை, 21-க்குக் குறையாத நரம்பியல் கோளறுகளையும், இந்த வியாதிகளில் உட்பட்டிருப்பதாகத் தோன்றும் மரபுவழி அணுக்கள் அல்லது குரோமோசோம்களையும் வரிசைப்படுத்தியது. இந்தப் பட்டியல் ஆல்ஸ்ஹைமர் வியாதி, ஹன்டிங்டன் வியாதி மற்றும் டியூக்கன் தசை சம்பந்தப்பட்ட வியாதி ஆகியவற்றையும் உட்படுத்துகின்றது; அந்தப் பட்டியல் நரம்பியல் பிரச்னைகளுடன் நின்றுவிடவில்லை. சிஸ்டிக் ஃபைப்ரோஸிஸ், பாலிசிஸ்டிக் சிறுநீரக வியாதிகள் மற்றும் பல வியாதிகளுக்கும்கூட மரபுவழிக் கோட்பாட்டியல் குறிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
அறியப்பட்டிருக்கும் 3,000-க்கும் மேலான பரம்பரை வியாதிகளை நாமோ அல்லது நம் பிள்ளைகளோ பெறக்கூடிய அதிக அபாயத்தில் உள்ளோமா என்று நமக்குச் சொல்லக்கூடிய மரபுவழிக் கோட்பாட்டியல் பரிசோதனைகளின் ஆழ்ந்த எதிர்பார்ப்பை இவைகள் எல்லாம் அதிகரிக்கின்றன. ஆனால் அது அவ்வளவு எளிமையானதல்ல. அப்படிப்பட்ட எல்லா வியாதிகளும் ஒரு மரபுவழி அணுவால் விளையவில்லை. ஆல்ஸ்ஹைமர் வியாதியில் தோன்றுவது போன்று, எங்கே அதிகப்படியான மரபுவழி அணுக்களும் மற்ற காரணங்களும் உட்பட்டிருக்கின்றனவோ, அங்கு பரிசோதனை கடினமாக இருக்கும். மற்றவைகளின் விஷயத்தில், வியாதிக்குக் காரணமான மரபுவழி அணுக்கள் கண்டுபிடிக்கப்பட்டு, நகலெடுக்கப்பட்டாலும்கூட அநேக சமயங்களில் அவைகளின் பொதுவான இருப்பிடம்தான் தெரியும். சுட்டிக்காட்டப்பட்டது மரபுவழி அணு அல்ல, ஆனால் மரபுவழிக் கோட்பாட்டுக் குறி என்றழைக்கப்படும் அருகாமையிலுள்ள டி-ஆக்ஸிரிபோ நியுக்ளிக் அமிலத்தின் டி.என்.ஏ (DNA) பாகமாகும். டைம்ஸ் பிறப்புக் கோளறு ஆதார நடை என்ற புத்தகத்தின் விஞ்ஞான செய்திப் பதிப்பாசிரியர், ஜேன் ஹ்யூடிஸ், “மனித மரபுவழிக் கோட்பாட்டு வரைபடம், இன்று இருக்குமளவில், மிகவும் மேம்போக்காக இருக்கின்றது” என்று அறிவித்து, அவர் மேலும் சொல்வதாவது: “தாழ்ந்த மேகம் மிக உயர்ந்த மலைத்தொடர்களைத் தவிர மற்றெல்லாவற்றையும் மறைக்கும்போது, செயற்கைக் கோளிலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படத்திற்கு இதை ஒப்பிடலாம்.”
மரபுவழிக் கோட்பாட்டியல் பரிசோதனையின் இரண்டகநிலை
பரவலான மரபுவழிக் கோட்பாட்டியல் பரிசோதனையின் வாக்குறுதி பெரிதாக உள்ளது. “சில சமயங்களில், அந்தக் கண்டுபிடிப்புகள், வியாதியின் விசேஷ குணத்தைப் பிள்ளைகளுக்குக் கடத்தக்கூடிய ஆரோக்கியமான சுமந்துசெல்லுபவைகளை அடையாளப்படுத்தலையோ அல்லது நிலைமையை பிறப்புக்கு முன்பே நிர்ணயித்தலையோ கூடிய காரியமாக்கியுள்ளன” என்று தி நியு யார்க் டைம்ஸ் குறிப்பிடுகின்றது. இது நிச்சயமாகவே மதிப்பு வாய்ந்த விஷயமாகும், ஆனால் டைம்ஸ் தொடர்ந்து குறிப்பிடுவதைப் போலவே: “இவைகள் விஞ்ஞானத்தின் வெற்றிகள், ஆனால் இவைகள் வியாதிகளைத் துரிதமாக வெற்றிக் கொள்வதை அர்த்தப்படுத்தவில்லை.” மரபுவழிக் கோட்பாட்டியலின்படி விளைந்த ஒரு வியாதியை அடையாளம் காணுவது ஒரு காரியம், சுகப்படுத்துவதோ மற்றொரு காரியம்.
அதிகமான பரம்பரை வியாதிகளை விளைவிக்கும் மரபுவழி அணுக்கள், காலப்போக்கில் கண்டுபிடிக்கப்படும் என்ற நம்பிக்கை இங்கு மிஞ்சியுள்ளது. மரபுவழி அணுக்கள் என்ன செய்ய வேண்டும், மேலும் என்ன தவறாக இருக்கிறது என்று புரிந்துகொள்வது இன்னும் கற்பனை செய்யாத சிகிச்சைகளுக்கு வழிநடத்தக்கூடும்.
இதற்கிடையில், மரபுவழிக் கோட்பாட்டியல் பரிசோதனைகளுக்கு ஆளாகும் பெற்றோர்கள், ஒருவேளை அவர்களுடைய பிறவாத சந்ததியைக் கருக்கலைப்பு செய்ய வேண்டுமென்ற அழுத்தம் உட்பட கடினமான முடிவுகளை எதிர்ப்படுகின்றார்கள். அவர்களில் சிலருக்கு கருக்கலைப்பு என்ற கேள்விக்கே இடமின்றி போகலாம். ஆனால், மற்றவர்களுக்கு உண்மையான மரபுவழி அணுக்களை அல்லாமல், குறிகள் பரிசோதிக்கப்படுவதானது, அந்தத் தெரிவை சிக்கலாக்குகின்றது. குறிகள் காணப்படுவது மரபுவழி அணுக்கள் காணப்படுவதை எல்லாச் சமயத்திலும் அர்த்தப்படுத்துவதில்லை.
பயோடெக்னாலஜியை வாய்மொழியாகக் குறைகூறும் ஜெரிமி ரிஃப்கின், “ஒவ்வொரு வருடமும் ஒற்றை–மரபுவழி அணு வியாதிகளுக்கு அதிகம் அதிகமான மரபுவழி கோட்பாட்டுக் குறிகளை நாங்கள் கண்டுபிடிக்கிறோம்,” என்று குறிப்பிடுகின்றார். “நாம் வரம்புக் கோட்டை எங்கே வரைவது? பல ஆயிரக்கணக்கான இடைப்பட்ட குணவிசஷங்கள் உள்ளன. வெண்குஷ்டம் உங்கள் குழந்தையை மூன்று வயதில் கொல்லக்கூடும். இருதய வியாதி முப்பது வயதிலும், ஆல்ஸ்ஹைமர் வியாதி ஐம்பதிலும் கொல்லக்கூடும். எந்த இடத்தில் நீங்கள் வேண்டாமென்று சொல்வீர்கள்? அடையக்கூடிய ஆரோக்கிய நஷ்டத்தின் காரணமாக, சில விசேஷ குணங்களைக் கடத்தக்கூடாது என்று சமுதாயம் பெற்றோர்களை கட்டாயப்படுத்தவோ சட்டமுண்டாக்கவோகூடும்.” உயிர்களைக் காப்பதற்கும் துன்பங்களைக் குறைப்பதற்குமென எண்ணப்பட்ட தொழில்நுட்பம், பிறவாத குழந்தைகளின் தேவையற்ற மரணத்தை, அவைகளின் மரபுவழிக் கோட்பாட்டியல் விசேஷ குணங்கள் “விரும்பத்தகாதவை” என்று யாரோ ஒருவர் நினைத்ததால், ஏற்படுத்துமானால் அது உண்மையிலேயே ஒரு வருத்தமான புரியாப் புதிராக இருக்கும்.
அதைச் சட்ட நிபுணர்களிடம் விட்டுவிடுங்கள்
அக்கறையூட்டும் விதமாக, இந்தப் புதிய பயோடெக்னாலஜியின் வெற்றியே, ஒரு புதிய தொகுதிப் பிரச்னைகளை உண்டாக்கியிருக்கின்றது—பெறக்கூடிய பணத்தின் மீதான சண்டை. சயன்ஸ் நியூஸ் என்ற பத்திரிகை பெரிய மருந்து வியாபார ஸ்தபனங்கள் ஏற்கெனவே ஒன்றை ஒன்று வழக்குப் போடுவதையும், சிறிய மரபுவழி அணுக்கள்–நகலெடுக்கும் வியாபார ஸ்தபனங்கள் IL–2 என்ற மரபுவழிக்கோட்பாட்டுப் பொறியியலான மனித வளர்ச்சி ஹார்மோன்கள் மற்றும் விற்பனையாகக்கூடிய மற்ற மருந்துகள் மீதான உரிமைக்காக வழக்காடுவதையும் குறிப்பிட்டு, “இந்தப் பயோடெக்னாலஜிப் புரட்சியின் முதன்மையான தயாரிப்பு வழக்கிடுவதுதானா?” என்று வினவுகின்றது.
மருந்துகள் மேலான அதிகார உரிமைப் பத்திரத்திற்கான வாக்குவாதங்களே தேவையான அளவு சிக்கலானதாக இருக்கின்றது, ஆனால், கடந்த வருடம் ஐக்கிய மாகாண அதிகார உரிமைப் பத்திர அலுவலகத்தினால் அனுமதிக்கப்பட்டபடி, ஜனங்கள் மரபுவழிக் கோட்பாட்டியியலின்படி, மாற்றப்பட்ட மிருகங்களுக்கு அதிகார உரிமைப் பத்திரம் பெற முயலும்போது என்ன நடக்கும்? சான் டிகோவிலுள்ள ஆராய்ச்சியாளர்கள், மின்மினிப் பூச்சியின் மரபுவழி அணுக்களைப் புகையிலைச் செடியில் நகலெடுப்பதன் மூலம் இருட்டில் பளபளக்கும் செடியினை உண்டாக்குவதில் வெற்றி பெற்றுள்ளனர்! செடியை உண்ணும் கம்பளிப் பூச்சிகளுக்கு ஒரு புரதத்தை விஷமாக்கும் விதத்தில் மற்ற புகையிலைச் செடிகளுக்கு ஒரு நுண்ணுயிரிலிருந்து ஒரு மரபுவழி அணு கொடுக்கப்பட்டுள்ளது. மேரிலாண்டு விஞ்ஞானிகள் மரபுவழி அணுக்கள் மாற்றப்பட்ட ஒரு பன்றியைக் கொண்டுவந்துள்ளனர்—ஒரு பசுவின் வளர்ச்சிக்கான ஹார்மோன் மரபுவழி அணுவைக் கொண்ட ஒரு பன்றி.
போக்குகளின் மீது அக்கறை
சம்பந்தமில்லாத இனங்களின் மரபுவழி அணுக்களைக் கலக்கும் இந்தப் போக்கு அநேக ஜனங்களின் அக்கறையைக் கொண்டிருக்கிறது. சில விவசாயிகளின் குழுக்கள், “மரபுவழிக் கோட்பாட்டுப் பொறியியலை, சிறிய பண்ணைகளைவிட, பெரிய இணைக்கப்பட்ட பண்ணைகளுக்கு ஆதரவுக் காட்டும் தொழில்நுட்பங்களின் நீண்ட வரிசையில் மற்றொன்றாகக் காண்கின்றனர்.” மிருக–உரிமைகளின் குழுக்கள், “மிருகங்களின் மேன்மைக்கு ஒரு முடிவான அவமதிப்பாக இதைக் காண்கின்றனர்” என்று நியு யார்க் டைம்ஸ் கூறுகின்றது.
கொலம்பியா பல்கலைக்கழக மருத்துவப் பள்ளியினைச் சேர்ந்த பயோகெமிஸ்ட்ரி மாஜி பேராசிரியராகிய டாக்டர் எர்வின் சார்காப் எழுதுகிறார்: “உயிர் என்பது என்ன என்று நாம் அறியமாட்டோம், ஆனாலும் நாம் அதை ஓர் உலோக உப்பு கரைசல் போன்று கையாளுகின்றோம்.” டாக்டர் சார்காப் தொடர்ந்து சொல்கிறார்: “நான் வருவதாகக் காண்பது, என்னவெனில், ஒரு மிகப் பெரிய கொலைக்கூடத்தை, ஒரு மூலக்கூறுகளின் ஆஷ்விட்ஸ், அதில் தங்கப் பற்களுக்குப் பதிலாக மதிப்பு வாய்ந்த என்ஸைம்கள், ஹார்மோன்கள் மற்றும் பல பிரித்தெடுக்கப்படும்.”
மற்றவர்கள், மரபுவழிக் கோட்பாட்டியலின்படி மாற்றப்பட்ட உயிர்ப்பிராணிகள் சுற்றுப்புறச் சூழமைவில் விடுவிக்கப்படும் பொழுது உட்பட்டிருப்பதாக அவர்கள் கருதும் அறியப்படாத ஆபத்துகளினால் பயந்திருக்கின்றனர். 1985-ல் அனுமதியின்றி மாற்றப்பட்ட நுண்ணுயிரியை வெளியிட்டதற்காக ஒரு கலிஃபோர்னியா வியாபார ஸ்தபனத்திற்கு 13,000 டாலர்கள் அபராதம் விதிக்கப்பட்டது. 1987-ல் இதுபோன்ற வெளியீடுகளின் இரண்டு பரிசோதனை வயல்களை கலிஃபோர்னியா நீதிமன்றம் கடைசியில் அங்கீரித்தபோது, அழிக்கும் ஆட்கள் செடிகளை வேரோடு பிடுங்கினர். 1987-ல் ஒரு மோன்டானா செடிக்கு வரும் வியாதிகளையும் அதனால் ஏற்படும் மாற்றங்களையும் ஆராயும் நிபுணர் எல்ம் மரங்களுக்கு மரபுவழிக் கோட்பாட்டில் மாற்றப்பட்ட நுண்ணுயிரிகளினால் தடுப்பு ஊசிப் போட்டபொழுது, பொதுமக்களின் அக்கறை மறுபடியும் உயர்த்திக் காட்டப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஒரு சுற்றுப்புறச்சூழமைவுப் பாதுகாப்புக் கழகத்தின் விமர்சனத்திற்காக தன்னுடைய பரிசோதனையை தாமதம் செய்யத் தெரிவு செய்ததால் அந்த விஞ்ஞானி, கண்டனம் செய்யப்பட்டார்.
அந்தப் “பரிசுத்தப் பாத்திரம்”?
இதற்கிடையில், மரபுவழிக் கோட்பாட்டியல் ஆராய்ச்சி வேகம் கொண்டுள்ளது. ஐக்கிய மாகாண சக்தித் துறை ஏற்கெனவே மனித டி.என்.ஏ.-வின் (DNA) நூறுகோடி இரசாயன அடிப்படைகளின் சரியான வரிசைக் கிரமத்தைக் கண்டுபிடிக்கும் நோக்கத்துக்கான ஆரம்பக்கட்ட ஆராய்ச்சியை தொடங்கிவிட்டது. இந்தத் திட்டம் பிரமிக்க வைக்கும் அளவிலானது. மனித டி.என்.ஏ.-விலுள்ள (DNA) செய்திகளின் ஓர் அச்சுப் பிரதி 200 பெரிய தொலைபேசிப் புத்தகங்களை நிரப்பக்கூடியதாகும். இப்பொழுதுள்ள வேகத்தில் இந்தத் திட்டம் முடிவுறச் சொல்லமுடியாத கோடிக்கணக்கான ரூபாய்களையும் நூற்றாண்டுகளையும் தேவைப்படுத்தும், ஆனால், சமீப காலக் கணக்கின்படி, வரிசைப்படுத்தும் தொழில்நுட்பத்தில் ஏற்படும் வேகமான முன்னேற்றங்கள் காரியங்களைத் துரிதப்படுத்தி, காலத்தை 15 வருடங்களாகக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. சக்தித்துறை இத்திட்டத்திற்காக 40 இலட்சம் டாலர்களுக்காக விண்ணப்பித்துள்ளது. மேலும் அது இதற்கான நிதியுதவி வருடந்தோறும் 2 கோடி டாலர்கள் உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. காங்கிரசின் அங்கீகாரம் கொடுக்கப்பட வேண்டும்.
இந்தப் பணமெல்லாம் எதைச் சம்பாதிக்கப் போகின்றது? சில விஞ்ஞானிகள், மனித டி.என்.ஏ.-வின் (DNA) விவரமான அறிவை, மனித மரபுவழிக் கோட்பாட்டியலின் “பரிசுத்தப் பாத்திரத்திற்கு” (இயேசு இராப்போஜனத்திற்காக உபயோகித்ததாக நம்பப்படும் பாத்திரம்தான் பரிசுத்த பாத்திரம்) ஒப்பிடுகின்றனர். ஒவ்வொரு மனித இயக்கத்தையும் புரிந்து கொள்ள உதவும் விலைமதிப்பற்றக் கருவியாக அது இருக்குமென்று அவர்கள் உறுதியாக உள்ளனர். ஆனால் மற்றவர்கள் அவ்வளவு நிச்சயமாக இல்லை.
“அறியப்பட்ட அக்கறைக்குரிய ஒரு மரபுவழி அணுவை வரிசைக்கிரமப்படுத்துவதிலுள்ள நன்மைகளைக் குறித்து சில ஆராய்ச்சியாளர்கள் சந்தேகப்படும் பொழுது முழு ஜினோமின் சரியான நியுக்கிலியோடைட் வரிசைக் கிரமத்தை தெரிந்துகொள்வதின் உடனடியான மதிப்பைப் பற்றி ஓர் அபாயமான கேள்வி உள்ளது” என்று காண்கின்றார் ஜேன் ஹீயுடிஸ், மேலுமாக, இப்பொழுது “முழு ஜினோமின் ஒரு மிகச் சிறியப் பகுதியே உடனடியாக மருத்துவ மதிப்பு வாய்ந்த செய்தியை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.”
மருத்துவ ஆராய்ச்சிக்கு அவசரமாகத் தேவைப்படும் நிதி உதவியானது, பொய்யான மதிப்பு வாய்ந்த ஒரு மாபெரும் விஞ்ஞான திட்டத்தில் வீணாக வடிக்கப்பட்டால் அது ஒரு சோகமான முரண்பாடாக இருக்கும்.
“பரிபூரணமான குழந்தைகள் எங்களுக்கு வேண்டும்”
இந்த மரபுவழிக் கோட்பாட்டுப் புரட்சி எதை நோக்கிச் செல்கின்றது? கேள்வியேயின்றி, மேன்மையான மருந்துகள், மேன்மையான மருத்துவ கவனம் மற்றும் உயிர்வாழ்பவைகள் எப்படி இயங்குகின்றன என்பது பற்றிய புரிந்துகொள்ளுதலில் முன்னேற்றம் என்ற அளவில் இது நல்லதுக்கான அதிகமான மறைவு சக்தியைக் கொண்டுள்ளது. ஆனால் இந்தப் புரட்சிக்கு ஒரு மறுபக்கம் உண்டு.
“எங்களுக்குப் பரிபூரணமான குழந்தைகள் வேண்டும்” என்கிறார் ஜெரிமி ரிஃப்கின். “எங்களுக்கு பரிபூரணமான தாவரங்களும் விலங்குகளும் வேண்டும். எங்களுக்கு மேம்பட்ட பொருளாதாரம் வேண்டும். இதில் எந்தக் கெட்ட நோக்கமுமில்லை. தைரியமான புதிய உலகத்துக்கான பாதை நல்நோக்கங்களின் மீது போடப்பட்டுள்ளது.
“படிப்படியாக, உயிர்வாழ்பவைகளின் மரபுவழிக் கோட்பாட்டியல் சட்டத்தின் பாகங்களைப் பொறியியலினால் நிர்ணயிக்க நாங்கள் முடிவு செய்துள்ளோம். இரண்டு முக்கியமான கேள்விகள் எழும்புகின்றன: மரபுவழிக் கோட்பாட்டுச் சட்டத்தை நாம் பொறியியற்படுத்துகிறோமென்றால் நல்லது மற்றும் கெட்டது, உபயோகமானது மற்றும் உபயோகமற்றதுமான மரபுவழி அணுக்களென தீர்மானிக்க என்ன கொள்கை அளவை சமுதாயம் நிர்ணயிக்க வேண்டும்? மேலும், ஓர் உயிர் ஜந்துவின் மரபுவழிக் கோட்பாட்டியலின் அடிப்படை திட்டத்தை முடிவுசெய்ய முடிவான அதிகாரம் கொண்டதாக ஒருவர் நம்பி ஒப்படைக்கக்கூடியதாக, எந்த ஒரு ஸ்தபனமும் இருக்கின்றதா? என்று நான் அறியவிரும்புகிறேன்”
இந்தக் கேள்விகள் விடையைப் பெற தகுதிவாய்ந்தவைகள். நல்ல அல்லது கெட்ட மரபுவழி அணு என்ன என்று கண்டுபிடிக்க, டி.என்.ஏ.-வின் (DNA) சிருஷ்டிகரைவிட யார் ஆயத்தப்பட்டவராக இருக்கின்றார்? தாவீதினால் சங்கீதம் 139:13–16-ல் காட்டப்பட்டபடி அவர்தான் மரபுவழிக் கோட்பாட்டுச் சட்டங்களின் உள்ளார்ந்த வேலைகளை அறிந்திருக்கின்றார்: “என் தாயின் கர்ப்பத்தில் என்னைக் காப்பாற்றினீர். நான் பிரமிக்கத்தக்க அதிசயமாய் உண்டாக்கப்பட்டபடியால், உம்மைத் துதிப்பேன்; உமது கிரியைகள் அதிசயமானவைகள், அது என் ஆத்துமாவுக்கு நன்றாய்த் தெரியும். நான் ஒளிப்பிடத்திலே உண்டாக்கப்பட்டு, பூமியின் தாழ்விடங்களிலே விசித்திர விநோதமாய் உருவாக்கப்பட்டபோது, என் எலும்புகள் உமக்கு மறைவாயிருக்கவில்லை. என் கருவை உம்முடைய கண்கள் கண்டது; என் அவயவங்களில் ஒன்றாகிலும் இல்லாதபோதே அவைகள் அனைத்தும் உருவேற்படும் நாட்களும் உமது புஸ்தகத்தில் எழுதியிருந்தது.” எல்லா உயிர்வாழ்பவைகளின் மரபுவழிக் கோட்பாட்டு அடிப்படைத் திட்டத்தைத் தீர்மானிக்க முடிவான அதிகாரத்தை அவரிடம் ஒப்படைக்க நீங்கள் விரும்பமாட்டீர்களா? (g89 7/22)
[பக்கம் 13-ன் சிறு குறிப்பு]
ஜீன்களில் நல்லவை எவை, கெட்டவை எவை என்பதை யார் தீர்மானிப்பது?