இளைஞர் கேட்கின்றனர் . . .
பள்ளியில் வீம்புக்காரர்களைக்குறித்து நான் என்ன செய்யக்கூடும்?
ரயன் வன்முறை என்பதைக் கேட்டறியாத கிராமப்புறப் பள்ளியில் படித்துவந்தான். ஆனால் அவன் ஒரு பெரிய, முரட்டுப்பிள்ளைகள் படிக்கும் பள்ளிக்கு மாற்றப்பட்டான். விரைவில் பள்ளியில் வீம்புக்காரர்களின் குறியிலக்கானான். ரயன் சொல்லுகிறான்: ‘எனக்குத் தொல்லைக்கொடுத்து வந்தவர்கள் வாய்வார்த்தையால் திட்டுவதிலிருந்து சரீரப்பிரகாரமாக என்னை மோசமாக நடத்துவது வரையாகச் சென்றபோது 15 நிமிட பேருந்து பயணம் பல மணிநேரங்கள் நீடித்த ஒரு சித்திரவதையாக எனக்குத் தோன்றியது. அவர்கள் பேப்பர் பிடிப்பு ஊக்கை சுவஸ்திகை வடிவத்தில் முறுக்கி, சிகரெட்டைப் பற்றவைக்கும் கருவியால் அதை சூடாக்கிப் பதுங்கி வந்து என் கையில் எனக்கு சூடுபோட்டார்கள். நான் நிலைகுலைந்துபோய் அழுதேவிட்டேன்.’
எலிசபெத் பல வருடங்களுக்கு முன்பாகப் பள்ளி படிப்பை முடித்துவிட்டாள். ஆனால் தன்னுடைய பள்ளிநாட்களை நினைவுபடுத்துகையில், இன்னும் அவள் கண்களில் நீர் பெருக்கெடுத்துவருகிறது. “மற்ற பிள்ளைகளிலிருந்து நான் பார்ப்பதற்கு வித்தியாசமாக இருந்தேன்” என்று அவள் விளக்குகிறாள். “ஏனென்றால் என் அம்மா வேறொரு இனத்தைச் சேர்ந்தவள். ஆகவே இரண்டாம் வகுப்பு முதல் உயர்நிலைப் பள்ளி வரையாக, நான் இடைவிடாது கேலி செய்யப்பட்டும் ஒதுக்கவும் பட்டேன். ‘நான் எலிசபெத்தை வெறுக்கிறேன்’ என்ற ஒரு மன்றம் இருப்பது போல இருந்தது. பிற்பட்ட ஆண்டுகளிலும்கூட ஒருசில பெண்கள் தங்கள் விரோதிகளின் தலையைக் கழிவறைக்குள் போடுவதாக சொல்லிக்கொண்டிருந்த மிரட்டலுக்கு இலக்காகிவிடாதபடிக்குப் பள்ளி ஓய்வறைக்குச் செல்வதையும்கூட தவிர்த்தேன். நான் ஒரு முக்கிய வேட்பாளராக இருப்பதாக உணர்ந்தேன்.”
பள்ளியைப் பற்றிய திகில் அச்சுறுத்தும் பெருமளவில் பள்ளி வயது இளைஞர்களின் அன்றாட அனுபவமாக உள்ளது. அவர்கள் பள்ளியில் வீம்புக்காரர்களால் வழக்கமாக வாய்மொழியாக அல்லது எழுத்துருவில் மிரட்டல்களைப் பெற்றுக்கொள்கிறார்கள். நிலைப்பெட்டி வைக்கப்படும் அறைகளில் நச்சரிக்கப்படுகிறார்கள். மதிய உணவுக்காகக் கொண்டுவரும் பணத்தைக் கொடுத்துவிடும்படியாக மிரட்டப்படுகிறார்கள்—பாலுறவுக் கொள்ளவும்கூட அழுத்தத்திற்குள் வீம்புக்காரர்களால் கொண்டுவரப்படுகிறார்கள்.a பலியாட்களில் நீங்கள் ஒருவராக இருந்தால், இது உங்கள் வாழ்க்கையில் அத்தனை பெரிய ஒரு பிரச்னையாக இருப்பதால் வேறு எதிலும் உங்களால் கவனம் செலுத்த முடியாது! இதைக்குறித்து எதையாவது செய்ய முடிவது மகிழ்ச்சியைத் தருகிறது! ஆனால் முதலாவதாக நீங்கள் பிரச்னையை புரிந்துகொள்ள வேண்டும்.
வீம்புக்காரனை உண்டுபண்ணுவது என்ன?
எவருமே வீம்புக்காரனாக பிறப்பதில்லை என்பதை ஆய்வாளர்கள் பொதுவாக ஒத்துக்கொள்கிறார்கள். “பள்ளியில் வீம்பு செய்கிறவன் வீட்டில் அதன் பலியாளாக இருக்கிறான்” என்கிறார் மனோதத்துவர் நாத்தானியேல் ஃப்ளாயிட். வீம்புக்காரன் வீட்டில் அவன் தவறாக நடத்தப்படுவதை இவ்விதமாகக் கடத்திக்கொண்டிருக்கலாம்.—பிரசங்கி 7:7.
“டெலிவிஷனில் அளவுக்கு அதிகமாக வன்முறையைப் பார்த்துக்கொண்டிருப்பதும்” “குழந்தைப் பருவத்தில் அன்பு பாராட்டப்படாமலும் கவனியாமலும் விடப்பட்டு அளவுக்கு அதிகமான சுதந்தரம் கொடுக்கப்படுவதும்” மற்றக் காரணங்களாக வேறு வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள். இயல்பாக வலிய வம்பு சண்டைச் செய்யும் மனசாய்வற்ற இளைஞர்களும்கூட, கோஷ்டியில் ஒரு பாகமாக இருக்க வேண்டும் என்ற காரணத்தினாலும் தங்களிலிருந்து கவனம் திசைதிருப்பப்படும்படியும் வீம்புசெய்யத் தூண்டப்படுகிறார்கள்.
பலியாளின் தோற்றம்
விசித்திரமான ஒரு சரீரத் தோற்றம் அல்லது குறைபாடு, அல்லது வெறுமென பள்ளிக்குப் புதிதாக இருப்பதுதானே, வீம்புக்காரனின் தாக்குதலைத் தூண்டிவிடக்கூடும். ஆனால் வீம்புக்காரனின் இலக்குக்கு பலியாகும் அநேகரில் குறிப்பாக ஒரு குணம் காணப்படுகிறது. முன்னால் குறிப்பிடப்பட்ட எலிசபெத் அதைக் குறிப்பிடுகிறாள்: “நான் எப்போதும் மிக எளிதாக அழுதுவிடுவேன், ஆகவே நான் புண்பட்டுவிட்டேன் அல்லது பயந்துபோனேன் என்பதை மற்றவர்கள் உடனடியாகவே சொல்லிவிடக்கூடும்.”
வீம்புக்காரர்களின் இலக்குக்கு ஆளாகிறவர்களுக்கு பொதுவாக இருக்கும் குணநலன்களைப் பெற்றோர் பத்திரிகை பின்வருமாறு வரிசையாகக் கூறியது: “கவலை, வெட்கம், ஜாக்கிரதையாக இருத்தல், எளிதில் உணர்ச்சி வயப்படுதல், குறைவான தன்மானம்” மற்றும் “தாக்கப்படுகையில் அழுதுவிடும் அல்லது ஓடிவிடும் மனச்சாய்வு”! (தடித்த எழுத்துக்கள் எங்களுடையவை.) இல்லை, பலியாட்களை அவர்களுடைய துன்பங்களுக்கு குறைகூற இயலாது. என்றபோதிலும் உதவியற்ற நிலையில் இருப்பதாக உணருகிறவர்களிடமாக வீம்புக்காரர்கள் கவர்ந்திழுக்கப்படுகிறார்கள் என்பதை அறிவதுதானே அவர்களைக் கையாள உங்களுக்கு உதவக்கூடும்.
உறுதியாக ஆனால் வலிய சண்டைக்குச் செல்பவராக இல்லாமல்
முதலாவதாக, வீம்புக்காரனை திரும்பத் தாக்கவேண்டும் என்ற சோதனைக்கு இடங்கொடுக்காதீர்கள். ‘தீமைக்கு தீமைச் செய்தல்’ தவறானது மட்டுமின்றி, உங்களுக்கு தகுதியில்லாத தொந்தரவுக்குள் அது உங்களைக் கொண்டுச் செல்லவும் பிரச்னையை தீவிரமாக்கிவிடவும் கூடும். (ரோமர் 12:17) ஆனால் வலிய சண்டைக்குச் செல்பவராக இருத்தல் ஞானமற்றதாக இருக்கையில், உறுதியாக இருத்தல் பயனுள்ளதாக இருக்கக்கூடும். “வீம்புக்காரன் செய்வது தனக்குப் பிரியமில்லை என்பதை விளக்கி அதை நிறுத்திவிடும்படியாக வெறுமென அவரிடம் சொல்லிவிட்டு பின்னர் அவ்விடத்தைவிட்டு சென்றுவிடுவதன் மூலம், பலியாள் எதிர்காலத்தில் வீம்பு செய்யப்படுவதன் வாய்ப்பைக் கணிசமாக குறைத்துக்கொள்கிறார்” என்பதாகப் பெற்றோர் (Parents) பத்திரிகை சிபாரிசு செய்தது. அல்லது மனோதத்துவர் ஒருவர் குறிப்பிட்டவிதமாக, ‘ஒரு நிலைநிற்கையை எடுத்துப் பின்னர் கண்ணியமாக அவ்விடத்தைவிட்டுப் புறப்பட்டுவிடுங்கள்.’
வீம்புக்காரனோடு (பொருத்தமான சமயத்திலும் இடத்திலும்) அமைதியாக விவாதிக்க முயற்சி செய்வது மற்றொரு அணுகுமுறையாக இருக்கிறது. ‘விவாதிப்பது—அவனோடா?’ என்பதாக நீங்கள் ஒருவேளைக் கேட்கக்கூடும். ஆம், உங்கள் மீது அவருடைய வெறுப்பைத் தூண்டும்வகையில் அறியாமல் நீங்கள் ஏதோவொன்றைச் செய்திருக்க, அவருடைய பங்கில் ஏதோ தவறாகப் புரிந்துகொள்ளப்படுதல் இருந்திருப்பது சாத்தியமாகும். குறைந்தபட்சம் வீம்புக்காரனை அமைதியாகவும் தைரியத்தோடும் அணுகுவதுதானே உதவியற்ற பலியாளாக இருக்க நீங்கள் மறுக்கிறீர்கள் என்ற செய்தியை தெரிவித்துவிடும். டாக்டர் கென்னத் டாட்ஜ் இவ்விதமாக விளக்குகிறார்: “வீம்புக்காரர்கள், துன்பத்தை ஏற்றுக்கொள்பவர்களுக்காக, கண்ணீருக்காகப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். விரும்பப்படுகிறபடி பிரதிபலிக்காத ஒரு பிள்ளை மீண்டும் குறியிலக்காகத் தெரிந்து கொள்ளப்படுவதற்கு வாய்ப்பில்லை.” நீதிமொழிகள் சரியாகவே பின்வருமாறு சொல்லுகிறது: “மனுஷனுக்குப் பயப்படும் பயம் கண்ணியை வருவிக்கும்.”—நீதிமொழிகள் 29:25.
உங்கள் பெற்றோரிடம் சொல்லுங்கள்!
வீம்புச் செய்யப்படுவது நிறுத்தப்படாவிட்டால் அப்போது என்ன? கல்வித்துறையிலிருப்பவர்களும் ஆய்வாளர்களும் பிரச்னையைக் குறித்து உங்கள் பெற்றோரிடம் நீங்கள் சொல்வது அவசியம் என்பதை வெகுவாக ஒப்புக்கொள்கிறார்கள். உண்மைதான், உங்கள் பெற்றோர் இதைப் புரிந்துகொள்ளமாட்டார்கள் என்பதாக நீங்கள் நினைக்கக்கூடும். வீம்புக்காரனைக் காட்டிக்கொடுத்தால் நீங்கள் இன்னும் அதிக மோசமாக நடத்தப்படுவீர்கள் என்று நீங்கள் மிரட்டப்பட்டிருக்கவும்கூடும். ஆனால் பள்ளியில் உங்களுக்கு என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள உங்கள் பெற்றோருக்கு உரிமை இருக்கிறதல்லவா?
உங்கள் பெற்றோர் கட்டாயமாகவே வீம்புக்காரனோடு நேரடியாகப் பேசவேண்டும் என்பதை இது அர்த்தப்படுத்துவதில்லை. அவர்கள் உங்களை உற்சாகப்படுத்தி பைபிள் நியமங்களின்படி வாழ்வதற்கு, இவ்விதமாகக் குறைந்துகொண்டிருக்கும் தன்னுறுதியையும் நம்பிக்கையையும் கட்டியெழுப்பக்கூடும். நடைமுறைக்குப் பிரயோஜனமாயிருக்கும் ஆலோசனையையும்கூட அவர்கள் உங்களுக்குத் தரக்கூடும். உதாரணமாக வீம்புச் செய்யப்படுவதைப்பற்றி பள்ளி அதிகாரிகளிடம் நீங்கள் பேசவேண்டும் என்று அவர்கள் யோசனை தெரிவிக்கக்கூடும். பள்ளி ஆசிரியர் ஜெரால்ட் ஹுஃப் இவ்விதமாக ஆலோசனைத் தருகிறார்: “முதலாவது, ஆலோசனைக் கொடுப்பவரிடம், விசேஷமாக உங்கள் பெற்றோரின் ஆதரவு உங்களுக்கிருக்கையில் சென்று முயன்று பாருங்கள். ஆனால், அவ்விதமாக நீங்கள் செய்வதை கூடுமானால் மற்ற மாணவர்களிடம் சொல்ல வேண்டாம். வீம்புகாரர்களிடம் எவ்விதம் நயமாகப் பேசுவது என்பதை அறிந்துகொள்ள ஆலோசனை கொடுப்பவர் பயிற்சி அளிக்கப்பட்டிருக்கிறார். ஆனால் விஷயம் மோசமாகிவிடுமானால், பள்ளி முதல்வரிடம் தெரிவிப்பது அவருடைய கடமையாகும்.”
சிலசமயங்களில் உங்கள் சார்பாக பள்ளி அதிகாரிகளிடம் பேச பெற்றோர் தீர்மானிக்கிறார்கள். இவ்விதமாக அவர்கள் தலையிடுவது குறித்து நீங்கள் ஒருவேளை தயக்கமுள்ளவர்களாக இருப்பது புரிந்துகொள்ளத்தக்கதே. ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்ட ரயன் நினைவுபடுத்திப் பின்வருமாறு சொல்கிறான்: “கோஷ்டி சேர்ந்துகொண்டு எனக்கு எதிராக அவர்கள் நடவடிக்கை எடுப்பார்கள் என்று நான் பயந்ததன் காரணமாக இதில் தலையிட வேண்டாம் என்று நான் என் அப்பாவிடமும் அம்மாவிடமும் கெஞ்சினேன். காரியங்கள் சரியாகிவிடும் என்று ஒவ்வொரு நாளும் நான் நம்பிக்கையோடிருந்தேன்.” ஆனால் சூடுபோட்ட அந்தச் சம்பவத்துக்குப்பின் அவனுடைய அப்பா பள்ளி அதிகாரிகளோடு தொடர்புகொள்வதை வற்புறுத்தினார். விளைவு? அவனுக்காக விவேகமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. “தேவைக்கு மேல் அதிகமாக என்னை உட்படுத்தாமல், குறிப்பிட்ட இடங்களில் உட்காருவது கட்டாயமாக்கப்பட்டது. தவறு செய்த மாணவர்கள் கவனமாகக் கண்காணிக்கப்பட்டார்கள்.”
இன்னலுக்கு விடுதலை இன்னும் வராவிட்டால், தவறு செய்தவனுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவது அவசியமா என்பதை உங்கள் பெற்றோர் தீர்மானிக்கலாம்.
தடுப்பு நடவடிக்கைகள்
ஆனால் முதலிடத்தில் அலைக்கழிக்கப்படுவதைத் தவிர்ப்பதே மிகச்சிறந்ததாகும். எவ்விதமாக? ஒரு காரியமானது, வகுப்புக்கு உள்ளேயும் வெளியேயும் மற்றவர்களோடு தாராளமாகப் பேச்சு வழக்கம் வைத்துக்கொள்வது, வீம்புக்காரர்கள் கவர்ந்திழுக்கப்படும் தனிமையானத் தோற்றத்தை மறையச் செய்யவும் உதவக்கூடும். ஆசிரியர்களோடும் பேருந்து ஓட்டுநர்களோடும் நட்பு வைத்துக்கொண்டு அவர்களைப் பார்த்து வெறுமென ஒரு புன்சிரிப்போ அல்லது முகமலர்ச்சியோடு ஒரு வணக்கமோகூட உங்கள் மீது அதிக சாதகமான கவனிப்பையும் ஓரளவு பாதுகாப்பையும் அளிக்கக்கூடும். தொந்தரவுகள் ஏற்படக்கூடிய சமயங்களை அல்லது இடங்களையும்கூட நீங்கள் தவிர்க்கப் பார்க்கலாம்.—நீதிமொழிகள் 22:3.
அதிக தளர்ந்த மற்றும் சமநிலையான தோற்றத்தைக் காண்பிக்க உழையுங்கள். இதுவும்கூட வீம்புக்காரர்களின் குறியிலக்காவதை குறைக்கக்கூடும். பைபிள் சொல்லுகிறது: “தேவன் நமக்குப் பயமுள்ள ஆவியைக் கொடமல், பலமும் அன்பும் தெளிந்த புத்தியுள்ள ஆவியையே கொடுத்திருக்கிறார்.” (2 தீமோத்தேயு 1:7) இந்த உண்மையின் மீது தியானம் செய்வதன் மூலம் அந்த நம்பிக்கையான ஆவியை நீங்கள் பலப்படுத்தக்கூடும்: “தேவனில் அன்புகூருகிறவனெவனோ, அவன் தேவனால் அறியப்பட்டிருக்கிறான்.” (1 கொரிந்தியர் 8:3) கடவுள் உங்கள் பிரச்னையை அறிந்திருக்கிறார் என்றும் உண்மையில் அக்கறையுள்ளவராக இருக்கிறார் என்றும் அறிந்திருப்பது அதை சமாளிப்பதற்கு உங்களுக்கு உதவி செய்ய அதிகத்தைச் செய்யக்கூடும்.
ரயன் நினைவுபடுத்தி சொல்கிறான்: “இந்த எல்லாச் சமயத்தின் போதும் நான் அதிகமதிகமாக ஜெபம் செய்தேன், இதன் விளைவாக அவரிடம் நெருங்கியவனாக நான் உணர்ந்தேன். நான் அதிகமாக தன்னடக்கத்தைப் பெற்றுக்கொண்டிருக்கிறேன். வேறு எதைக்காட்டிலும் அவர் “உங்கள் திராணிக்கு மேலாக நீங்கள் சோதிக்கப்படுவதற்கு இடங்கொடுக்க”மாட்டார் என்று சொல்லும்போது யெகோவாவில் அதிகமாக நம்பிக்கையைப் பெற்றுக்கொண்டிருக்கிறேன்.” (1 கொரிந்தியர் 10:13) உங்கள் பிரச்னையைக் கையாளுவதற்கு உங்களுக்கும்கூட கடவுள் உதவி செய்யக்கூடும்—கோழைத்தனமான வீம்புக்காரன் போல அத்தனை அலைக்கழிக்கும் ஒருவனாக இருந்தாலும்கூட. (g89 8/8)
[அடிக்குறிப்புகள்]
a 25 சதவிகித ஐ.மா. ஜூனியர் உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் ஆய்வு ஒன்றில், “வீம்புக்காரர்களையும் பிரிவினை உண்டாக்கும் நடத்தையையும்” தங்களுடைய முக்கிய கவலையாக பட்டியலில் பதிவு செய்திருந்தார்கள். பிரிட்டனிலும் மேற்கு ஜெர்மனியிலும், வீம்புக்காரர்களின் செயல் அளவிலும் தீவிரத்திலும் அதிகரித்திருப்பது குறித்து அதேவிதமாகவே கல்வித்துறையிலுள்ளவர்களும் கவலைத் தெரிவித்திருக்கிறார்கள்.
[பக்கம் 18-ன் படம்]
வீம்புக்காரர்கள் தாழ்வுணர்ச்சியுள்ள பலவீனமான எதிரிகளைத் தெரிந்துகொள்வதில் மகிழ்ச்சியடைகிறார்கள்
[பக்கம் 19-ன் படம்]
நிலைமை கையாளுவதற்கு மிகப் பெரியதாக இருக்குமானால், உங்கள் பெற்றோரிடம் இதைக்குறித்துப் பேசுங்கள்