அந்த நூலகம் உங்கள் எழுதுமேசையில் அடக்கமாயிருக்கும் ஒன்று அந்த நூலகம்
உலகின் மிகப் பெரிய நூலகங்கள் சிலவற்றோடு போட்டிப்போடுமளவுக்கு இலக்கியங்களின் ஒரு தொகுப்பை உங்கள் விரல்நுனியில் கொண்டிருப்பதைக் கற்பனை செய்துபாருங்கள். உங்கள் எழுதுமேசையில் அடங்கிவிடும் ஆயிரக்கணக்கான புத்தகங்கள், பத்திரிகைகள், செய்திதாள்கள் மற்றும் பல ஏடுகளிலிருந்து எடுக்கப்பட்ட இலட்சக்கணக்கான கட்டுரைகளையும் இதுபோன்ற செய்தி குறிப்புகளையும் கற்பனை செய்துபாருங்கள்.
‘இது எவ்விதமாக இருக்கமுடியும்?’ என்பதாக நீங்கள் யோசிக்கலாம். இதற்கான பதில், நவீன தொழில் நுட்பத்தின் மூன்று உருப்படிகளின் வடிவில் கிடைக்கிறது: தனிநபருக்குரிய கம்ப்யூட்டர், தொலைபேசி கம்பிகளின் மூலமாக கம்ப்யூட்டர் தகவலை அனுப்பும் அல்லது பெற்றுக்கொள்ளும் ஒரு கருவி மோடம் (Modem) மற்றும் ஒரு தொலைபேசி இணைப்பு. இந்த மூன்றும் உங்கள் எழுதுமேசையை உண்மையில் ஒரு நூலகமாக மாற்றிவிடமுடியும்.
பழங்காலத்திய நூலகம் ஒன்றில் எண்ணற்ற புத்தகங்களும் பத்திரிகைகளும் அதிக கவனத்தோடு வரிசையாக ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தாலும், அச்சடிக்கப்பட்ட நூல்களின் பெயர் பட்டியல் வரிசையைப் பார்க்க இன்னும் நேரம் அவசியமாயிருக்கிறது. ஆனால் நூல்களின் பெயர் பட்டியல் வரிசையை ஆராய்ந்த பின்னும்கூட, நீங்கள் தேடிக்கொண்டிருக்கும் நூல் புத்தக நிலையடுக்குத் தட்டில் இருக்கிறது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.
புதிய சகாப்தம்
எழுதுமேசையின் மீது ஒரு கம்ப்யூட்டரும் தொலைபேசி கம்பிகளின் மூலமாக கம்ப்யூட்டர் தகவலை அனுப்பும் அல்லது பெற்றுக்கொள்ளும் ஒரு கருவியும் (Modem) இருந்தால், ஒரு நபரால் உண்மையில் புத்தகங்கள், பத்திரிகைகள், செய்திப்பணிகள், இன்னும் மற்ற மூல ஆதார ஏடுகளிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட இலட்சக்கணக்கான செய்திக்குறிப்புகளைக் கொண்ட மிகப்பெரிய கம்ப்யூட்டர் அமைப்போடு தொடர்புகொள்ள முடிகிறது. இவை அனைத்தும் குறிப்பிட்ட கம்ப்யூட்டர் “கோப்புகளில்” (செய்திவிவர ஆதாரம்) பட்டியலாகத் தொகுக்கப்பட்டிருக்கின்றன. இவைகளை எளிய செயல் கட்டளைகள் மூலம் அடைந்திடலாம்.
உதாரணமாக, ஒரு வியாபாரி வாங்குவதற்கு கூடுதலான வாய்ப்புகளைப்பற்றிய தகவலை பத்திரிகைகளிலிருந்து பெற்றுக் கொள்ள விரும்பினால், பணியை ஏற்பு செய்வதற்கு அடையாளச் சொல்லை பயன்படுத்திய பிறகு, “பத்திரிகைகள்” பகுதியில் தகவல் கோரலாம். பிரசுரங்களின் அந்தப் பிரிவோடு இணைக்கப்பட்டபின்பு, “வாங்குவதற்கு கூடுதலான வாய்ப்புகளைக் கண்டுபிடி” என்பதாக தட்டச்சு செய்வதன் மூலம் ஆராய்ச்சியைத் தொடரலாம். உடனடியாக, 16 ஆண்டுகளுக்கு முன்பிருந்து இப்போது வரையில் வெளியான 14 இலட்சம் பத்திரிகைகளிலிருந்தும் செய்திக்குறிப்புகள் ஒருசில நொடிகளில் பிரித்தெடுக்கப்படுகிறது!
“வாங்குவதற்கு கூடுதலான வாய்ப்புகள்” என்ற வார்த்தைகளைக் கொண்ட ஒவ்வொரு கட்டுரையும் அழைக்கப்படுகிறது, கட்டுரைகளின் மொத்த எண்ணிக்கை திரையில் தோன்றுகிறது. அடுத்ததாக “காட்சி வரிசை” கட்டளை பயன்படுத்தப்படுகிறது. அண்மையில் வெளியான கட்டுரையில் ஆரம்பித்து, ஒவ்வொரு கட்டுரையின் தலைப்பு, தேதி மற்றும் ஆசிரியர் பெயர், மற்றும் சுருக்கமான ஒரு தொகுப்பு கூடுதலான தகவலோடுகூட நொடிகளில் காணப்படுகின்றது. அவருக்கு எவ்வளவு செலவானது? சுமார் 40 ரூபாய்—ஒருவேளை.
இந்த அமைப்பின் துணையினால், ஒரு குடும்பத்தலைவி உலகம்முழுவதிலுமுள்ள பல்வேறு தேசங்களில் பயன்படுத்தப்படும் செய்முறைகளைப் பார்ப்பதன் மூலம், சமைப்பதற்கு புதிய யோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம். அலங்கரிப்பதற்கு யோசனைகள், புதிய பாணிகள் மற்றும் புது தினுசுகளைப் பற்றிய செய்திகளும்கூட கிடைக்கின்றன. மருத்துவத்துறையிலுள்ளவர்கள், நுண்ணுயிர் அறிவியலின் அண்மைக்கால ஆராய்ச்சியைக் கண்காணித்து, மருந்து வழங்கீடு விற்பனைச் சார்ந்த தொழிலைப் பாதிக்கும் சமீபகாலத்திய விதிமுறைகளின் முழு விவரத்தையும் தெரிந்து வைத்துக்கொள்ளலாம். வழக்கறிஞர்கள் தற்போதைய கட்சிக்காரர்களுடையதை ஒத்திருக்கும் வழக்குகளை கண்டுபிடித்து நீதிமன்றங்களில் குறிப்பிட்ட எந்த ஒரு வழக்கும் சான்றாகக் காட்டப்பட்ட விதங்களை ஆராயலாம்.
மாணவன் ஒருவன் பள்ளியில் கற்பிக்கப்படும் எந்த ஒரு பாடத்தையும் அங்கு காணலாம். வியாபாரி “வாங்குவதற்கு கூடுதலான வாய்ப்புகளுக்குச்” செய்ததுபோலவே மாணவன் “இருட்டறை” என்ற பொருளின்பேரிலும் அதையேச் செய்யலாம். இந்த ஆராய்ச்சிக் கருவி, கல்வித்துறையிலுள்ளவர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும், ஆய்வாளர்களுக்கும், கூட்டுரிமையுடைய அலுவலகப் பணியாளர்களுக்கும்கூட அக்கறைக்குரியதாக இருக்கும்.
கூடுதல் விலை
இது ஒப்பிடுகையில் அவ்வளவாக பெருஞ்செலவு பிடிக்கிறதாக இல்லாதபோது, செலவு, பெரும்பாலும் எந்தக் கம்ப்யூட்டர் கோப்பு பயன்படுத்தப்படுகிறது என்பதைப் பொருத்திருக்கிறது. நிச்சயமாகவே, மற்றத் தொழில்களிலிருப்பது போலவே, செலவு கம்பெனிக்குக் கம்பெனி வித்தியாசப்படுகிறது.
ஆனால், பொதுவாகச் சொல்கையில், கம்ப்யூட்டரோடு நீங்கள் இணைக்கப்படும் நேரத்துக்கும் உங்கள் ஆய்வின் முடிவுகளுக்கும் ஆகும்நேரத்துக்கு மாத்திரமே நீங்கள் பணம் செலுத்துகிறீர்கள். தகவல் பணி ஒன்று சராசரியாக நிமிடத்துக்கு 16 ரூபாய் கட்டணம் விதிக்கையில், சராசரியாக தேடுவதற்குத்தானே பத்து நிமிடங்கள் மட்டுமே ஆகிறது. செலவுகளை நோக்குமிடத்து, நாளின் நேரம் முக்கிய பங்கை வகிக்கிறது. சாதாரணமாக வியாபார நேரத்துக்கு வெளியே ஆராய்ச்சி செய்யப்படுமேயானால், கட்டணம் 50 சதவீதம் குறைவாக இருக்கக்கூடும்.
செலவுகளை இன்னும் குறைப்பதற்கு, இப்படிப்பட்ட பொதுப்பணிகள் பொதுவாக வாடிக்கையாளர் பிரதிநிதிகள் அல்லது பாட நிபுணர்களின் உருவில் உதவியை அளிக்கின்றன. இந்த உயர்-நுட்ப நூலகர்கள், உண்மையில் தேடுவதை ஆரம்பிக்கும்முன் அதற்குரிய சூழ்ச்சிமுறைகளைத் தீர்மானிப்பதில் உதவிசெய்கிறார்கள். இது நேரத்தை, இதன் மூலமாக பணத்தை மிச்சப்படுத்துகிறது. தொழில்வர்க்கத்திலுள்ள சமுதாயத்தை, குறிப்பாக வழக்கறிஞர்களுக்கு சேவை செய்யும் சில தகவல்–பணி கம்பெனிகள் மாதாந்தர கட்டணத்தைப் பெற்றுக்கொள்ளக்கூடும். ஒருசில சிறிய நீதித்துறை நிலையங்கள், பொதுப்பணிக்கு சந்தா செய்யும் பெரிய நீதித்துறை நிலையங்களிலிருந்து நேரத்தை வாங்கிக்கொண்டு, வழக்கமாக ஆய்வுகளைச் செய்யும் முழு-நேர பணியாட்களைக் கொண்டிருப்பதன் மூலம் கூடுதல் செலவுகளை தவிர்த்துவிடுவது அக்கறைக்குரியதாக இருக்கிறது.
ஆனால் அநேகரைப் போல கம்ப்யூட்டர்களைப் பார்த்து நீங்களும் மிரண்டுவிடுவீர்களானால் அப்போது என்ன? மேசைமீது வைக்கப்படக்கூடிய ஒரு கம்ப்யூட்டர், தொலைபேசி கம்பிகளின் மூலமாக கம்ப்யூட்டர் தகவலை அனுப்பும் அல்லது பெற்றுக்கொள்ளும் ஒரு கருவி (Modem), மற்றும் கூடுதலான ஒரு தொலைபேசி இணைப்பை உங்கள் வீட்டில் கொண்டிருப்பதற்கு உங்களுக்கு வசதி இல்லாவிட்டால் அப்போது என்ன? இவைகளைக் கொண்டிருக்க உங்களுக்கு வசதி இருந்தாலும் சொந்தமாக ஆராய்ச்சியை மேற்கொள்வதற்கு உங்களுக்கு நேரமில்லாவிட்டால் அப்போது என்ன?
இப்பணி ஆரம்பிக்கப்பட்டது முதற்கொண்டு, நூலகங்களும் கல்லூரிகளும் இவைகளில் அக்கறை எடுத்துக்கொண்டிருக்கின்றன. இவைகளைப் பற்றிய கூடுதலான தகவலை நாடுகையில் கவர்ச்சி பரஸ்பரமாக இருப்பதை அவர்கள் கண்டார்கள். பொதுப்பணி அமைப்புகள் நகர மற்றும் கல்லூரி வளாகத்திலுள்ள நூலகங்களைத் தங்கள் பணிக்குப் பொதுமக்களுக்கு பயன்படும் வடிகாலாகக் கருதியபோது, நூலகங்கள் அவைகளின் பணியைக் கவர்ச்சியான மற்றும் ஆற்றல்மிக்க ஒரு கருவியாக ஒப்புக்கொண்டன. சாத்தியங்களை ஆய்வுசெய்த பின்பு, ஓர் உறவு மலர்ந்தது.
சேவை அமைப்புகள், இந்த நிறுவனங்களுக்கு தங்கள் சேவையை முகப்பு விலைக்கு குறைவாக அளித்தபோது, இவையோ, சேமிப்புத் தொகயை தங்கள் சிறப்பு வாடிக்கையாளர்களுக்கு வழங்கின. இப்பொழுது நீங்கள், ஒரு சிறப்பு வாடிக்கையாளராக அல்லது ஒரு மாணவனாக, கம்ப்யூட்டர் கருவிகளைக் சொந்தமாகக் கொண்டிராமலே உங்களுக்குத் தேவையான ஆய்வுகளை செய்துகொள்ளலாம்.
மைக்ரோ அலை சூட்டடுப்பு, எண்ணிலக்கக் கடிகாரங்கள் போன்ற அநேக நவீன தொழில்நுட்ப பொருட்களின் விலைகளைப் போன்றே ஆய்வுக்கான விலையும் சரிந்துகொண்டே போகிறது. இது எழுதுமேசையின் மீது அடக்கமாயிருக்கும் நூலகத்தை அநேக ஆட்கள் கொண்டிருக்கும் வாய்ப்பை அளித்துவருகிறது. (g89 8/8)
[பக்கம் 17-ன் பெட்டி]
புதிய நூலகர்
நகரத்தில் ஒரு புதிய நூலகர் இருக்கிறார், அவரைப் போய் பார்க்க நீங்கள் உங்கள் எழுதுமேசையைவிட்டு எழுந்திருக்க வேண்டியதில்லை. மாறாக, வெறுமென உங்கள் தொலைபேசியிடம் கையைக் கொண்டுசெல்லுங்கள். அவர் தகவல் தரகர் என்றழைக்கப்படுகிறார். ஆனால் அவரை உங்கள் உள்ளூர் நூலகத்தில் நீங்கள் காணமுடியாது. அவர் ஓர் அலுவலகத்தில் ஒரு மேசையின் அருகே உட்கார்ந்திருக்கிறார், இந்தப் பக்கங்களில் விவரிக்கப்பட்டிருக்கும் ஒரு விசேஷ தொலைபேசி தொடர்பின் மூலமாக ஒரு தொகைக்கு உங்களுக்கு அவர் ஆராய்ச்சியை செய்திடுவார்.
அவருடைய வேலை மேலீடாகத் தோன்றுவது போல் அத்தனை சுலபமானதில்லை. 3,000-க்கும் மேற்பட்ட கம்ப்யூட்டர் கோப்புகளில் (செய்தி குறிப்பு ஆதாரம்) எதில் தேடவேண்டும் என்பதை அவர் அறிந்திருக்க வேண்டியது மட்டுமல்லாமல், எவ்விதமாகக் குறிப்பிட்ட ஒரு செய்திக் குறிப்பு ஆதாரத்தினூடே செல்வது மற்றும் தேடுவதற்கு என்ன முக்கிய வார்த்தைகளைப் பயன்படுத்துவது என்பதையும் அறிந்தவராக இருக்க வேண்டும்.