மதத்தின் கடந்தகால கண்ணோட்டத்தில் அதன் எதிர்காலம்
பகுதி 16: பொ.ச. 9–16வது நூற்றாண்டு மிகுதியாக சீர்திருத்தம் தேவைப்படும் ஒரு மதம்
“ஒவ்வொரு துர்ப்பிரயோகமும் சீர்திருத்தப்படவேண்டும்.” வால்டேர், 18-வது நூற்றாண்டு ஃபிரெஞ்சு கட்டுரை ஆசிரியரும் வரலாற்றாசிரியரும்
பண்டைய கிறிஸ்தவர்கள் உத்தரிக்கும் ஸ்தலத்தைக் கற்பிக்கவில்லை, விக்கிரகங்களை வழிபடவில்லை, எந்தப் “புனிதர்”களையும் கனப்படுத்தவில்லை, எந்தச் சின்னங்களையும் வணங்கவில்லை. அவர்கள் அரசியலில் ஈடுபடவில்லை, மாம்சப்பிரகாரமான சண்டைகளை மேற்கொள்ளவுமில்லை. ஆனால் 15-வது நூற்றாண்டிற்குள், இவர்களை பின்பற்றுவதாக உரிமைப்பாராட்டிய அநேகருடைய விஷயத்தில் இதில் எதுவுமே இனிமேலும் உண்மையாக இருக்கவில்லை.
சீர்திருத்தத்திற்காக “முரண் சமய கோட்பாட்டாளர்களின்” அழைப்பு
“[ரோமன் கத்தோலிக்க மதத்துக்கு எதிரான] முரண் சமய கருத்துகளின் ஆரம்பகால விதைகள், சுமார் 1000-வது ஆண்டு போல் ஃபிரான்சிலும் வடக்கு இத்தாலியிலும் தோன்றின” என்பதாக உலக வரலாற்றின் காலின்ஸ் நிலப்படம் சொல்லுகிறது. ஆரம்பகாலத்தில் முரண் சமயக் கோட்பாட்டாளர்கள் என்பதாக அழைக்கப்பட்ட ஒரு சிலர் சர்ச்சின் பார்வையில் மாத்திரமே முரண் சமயக் கோட்பாட்டாளர்களாக இருந்தனர். தனிப்பட்ட முரண் சமயக் கோட்பாட்டாளர் எந்த அளவுக்கு பூர்வ கிறிஸ்தவத்தைக் கடைப்பிடித்தார்கள் என்பதை திருத்தமாக முடிவு செய்வது இன்று கடினமாகும். என்றபோதிலும் குறைந்தபட்சம் அவர்களில் சிலராவது அவ்விதமாகச் செய்ய முயற்சி செய்துகொண்டிந்தார்கள் என்பது தெளிவாக இருக்கிறது.
ஒன்பதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் லையான்சின் அதிமேற்றிராணியார் அகோபார்ட், உருவ வழிபாட்டினையும், “புனிதர்களிடம்”* வரம்வேண்டுவதையும் கண்டனம் செய்தார். 11-ம் நூற்றாண்டு மேற்றிராணியார், டூர்ஸை சேர்ந்த பெரிங்கர், கத்தோலிக்க பூசையில் பயன்படுத்தப்படும் அப்பமும் திராட்சரசமும் உண்மையாகவே கிறிஸ்துவின் உடலாகவும் இரத்தமாகவும் மாறுகிறது என்ற உரிமைப்பாராட்டலைக் குறித்து சந்தேகித்ததற்காக திருச்சபையிலிருந்து விலக்கப்பட்டார்.* ஒரு நூற்றாண்டுக்குப் பின்னர், பீட்டர் டி ப்ரூஸ்-ம் லூசேனியின் ஹென்றியும் குழந்தை ஞானஸ்நானத்தையும் சிலுவை வழிபாட்டினையும் ஏற்க மறுத்தனர்.* இவ்விதமாகச் செய்ததற்காக ஹென்றி அவருடைய சுதந்திரத்தை இழந்தார்; பீட்டர் அவர் உயிரை இழந்தார்.
“பன்னிரண்டாம் நூற்றாண்டின் மத்திபத்திற்குள், மேற்கத்திய ஐரோப்பாவின் நகரங்களில் முரண் சமய பிரிவுகள் எங்கும் பரவியிருந்தன” என்பதாக வரலாற்றாசிரியர் வில் டூரன்ட் அறிவிப்பு செய்கிறார். இந்தத் தொகுதிகளில் மிகவும் குறிப்பிடத்தக்கது வால்டென்ஸஸ் ஆகும். அவர்கள் ஃபிரெஞ்சு வியாபாரி பயரி வால்டீஸ் (பீட்டர் வால்டோ) தலைமையின் கீழ் 12-ம் நூற்றாண்டின் முடிவில் பிரபலமாயினர். மற்ற காரியங்களோடு, அவர்கள் மரியாள் வழிபாடு, பாதிரிகளிடம் பாவமன்னிப்பு அறிக்கை, மரித்தோருக்கு பூசைகள், போப்பாண்டவருக்கு தனிச்சிறப்புரிமை, பாதிரிகளின் மணத்துறவு, மாம்சப்பிரகாரமான போரயுதங்களை பயன்படுத்துதல் ஆகியவற்றின் பேரில் சர்ச்சோடு கருத்து வேற்றுமைகளைக் கொண்டிருந்தனர்.* இந்த இயக்கம் வேகமாக ஃபிரான்சு மற்றும் வடக்கு இத்தாலி முழுவதிலுமாகவும் ஃப்ளான்டர்ஸ், ஜெர்மனி, ஆஸ்திரியா மற்றும் பொகிமியாவுக்கும் (செக்கோஸ்லாவாக்கியா) பரவியது.
இதற்கிடையில் இங்கிலாந்தில், “ஆங்கிலேய நாட்டு சீர்திருத்தத்தின் விடிவெள்ளி” என்பதாகப் பின்னால் அறியப்பட்ட ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக ஆதரவு பயிற்சியாளர் ஜான் வைகிளிஃப் 14-ம் நூற்றாண்டில் “அதிகாரத்தை பேராவலுடன் பற்றிக்கொண்டிருந்த பாதிரிகளின் சர்ச் அரசாங்கத்தைக்” கண்டனம் செய்துகொண்டிருந்தார். முழு பைபிளையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பதன் மூலம், அவரும் அவருடைய கூட்டாளிகளும் இதை முதல்முறையாக சாதாரண குடிமக்களுக்கு பொதுவாகக் கிடைக்கும்படிச் செய்தனர். வைகிளிஃபை பின்பற்றியவர்கள் லோலார்ட்ஸ் என்ற பெயரால் அழைக்கப்பட்டனர். லோலார்ட்டுகள், வெளியரங்கமாக பிரசங்கித்து, துண்டுப்பிரதிகளையும் பைபிளின் ஒருசில பகுதிகளையும் விநியோகம் செய்தனர். இப்படிப்பட்ட “முரண் சமய” நடத்தை சர்ச்சுக்கு சாதகமாயில்லை.
வைகிளிஃபின் கருத்துக்கள் வெளிநாடுகளில் பரவியது. பொகிமியாவில், அவை ப்ரேக் பல்கலைக்கழக முகவர் ஜேன் ஹஸின் (ஜான் ஹஸ்) கவனத்தை கவர்ந்தது. ஹஸ் போப்பாதிக்கத்தின் சட்டப்படியான நிலையைக் குறித்து சந்தேகமெழுப்பி சர்ச் பேதுருவின் மீது கட்டப்பட்டது என்பதை மறுதலித்தார்.a தண்டனைக்குறைப்பை விற்பதன் பேரில் எழுந்த கருத்துவேறுபாட்டைத் தொடர்ந்து ஹஸ் முரண் சமய கருத்துக்காக விசாரணைக்குட்படுத்தப்பட்டு 1415-ல் கழுமரத்தில் எரிக்கப்பட்டார். கத்தோலிக்கப் போதகத்தின்படி தண்டனைக் குறைப்பு என்பது பாவங்களுக்கான தண்டனையை ஓரளவோ அல்லது முழுமையாகவோ குறையச் செய்வதற்குரிய ஓர் ஏற்பாடாகும். இவ்விதமாக பரலோகத்துக்குச் செல்வதற்கு முன்பாக, ஒரு நபர் தற்காலிகமான தண்டனையையும் தூய்மையடைதலையும் அனுபவிக்கும் காலப்பகுதியை குறைத்துவிடவோ அல்லது நீக்கிவிடவோ முடியும்.
சீர்திருத்தத்திற்கான அழைப்பு தொடர்ந்தது. டாமினிக் என்பாரின் துறவியர் குழுவைச் சேர்ந்த கிரோலாமோ சாவரைலோ, 15-வது நூற்றாண்டு இத்தாலிய பிரசங்கியார் பின்வருமாறு வருத்தத்துடன் கூறினார்: ‘போப்புகளும் திருமடத்தலைவர்களும் பெருமைக்கும் பேராசைக்கும் எதிராகப் பேசுகிறார்கள், அவர்கள் அதில் தங்கள் காதுவரை மூழ்கியிருக்கிறார்கள். அவர்கள் கற்பைப் பற்றி பிரசங்கிக்கிறார்கள், காதல் கிழத்திகளை வைத்திருக்கிறார்கள். அவர்கள் உலகத்தையும் உலகப் பிரகாரமானக் காரியங்களையும் பற்றி மாத்திரமே யோசித்துக்கொண்டிருக்கிறார்கள்; ஆத்துமாக்களுக்காக அவர்கள் கவலைப்படுவது கிடையாது.’ கத்தோலிக்க போப்பாண்டவர் மன்ற உறுப்பினர்களும்கூட, பிரச்னையை ஒப்புக்கொண்டனர். 1538-ல் மூன்றாம் போப் பாலுக்கு, அனுப்பிவைக்கப்பட்ட கையொப்பமிடப்படாத பொதுநிலை அறிக்கையில், அவர்கள் திருச்சபை ஆட்சி வட்டாரஞ் சார்ந்த, நிதி சார்ந்த, நீதிவிசாரணை சார்ந்த மற்றும் ஒழுக்கஞ் சார்ந்த துர்ப்பிரயோகங்களுக்கு அவருடைய கவனத்தைத் திருப்பினர். ஆனால் போப்பாதிக்கம் தேவைப்பட்ட சீர்திருத்தங்களைச் செய்ய தவறியது. இது புராட்டஸ்டன்டு சீர்திருத்தத்தை தூண்டியது. தொடக்க கால தலைவர்களில் மார்டின் லூதர், ஹுல்ரிச் ஸ்விங்லி மற்றும் ஜான் கால்வின் அடங்குவர்.
லூதரும் ‘16-வது நூற்றாண்டு சூதாட்டமும்’
1517, அக்டோபர் 31-ம் தேதி, லூதர் 95 கண்டன அறிவிப்பு குறிப்புகளின் ஒரு பட்டியலை விட்டன்பர்க்கில் சர்ச் கதவின் மீது ஆணியடித்து மாட்டுவதன் மூலம் தண்டனைக் குறைப்பு விற்கப்படுவதை தாக்கியபோது, மத உலகு கொழுந்துவிட்டெறிய செய்தான்.
தண்டனைகுறைப்பு விற்பனை சிலுவைப் போர்களின் போது ஆரம்பமானது. “பரிசுத்த” யுத்தத்தில் தங்கள் உயிர்களை ஆபத்திற்குள்ளாக்க மனமுள்ளவர்களாயிருந்த விசுவாசிகளுக்கு அவை வழங்கப்பட்டன. பின்னால் அவை சர்ச்சுக்கு நிதியுதவியளிக்கும் ஆட்களுக்கு வழங்கப்பட்டது. விரைவில், தண்டனைக் குறைப்பு சர்ச்சுகளையும், மடங்களையும் அல்லது மருத்துவமனைகளையும் கட்டுவதற்கு நிதி திரட்ட வசதியான ஒரு முறையாக ஆனது. “வரலாற்றின் இடைநிலைக் காலத்தின் வண்ணப்பகட்டான தோற்றமுள்ள நினைவுமண்டபங்கள் இவ்வகையில்தானே பண உதவி பெற்றன” என்பதாக மதவரலாற்று பேராசிரியர் ரோலாண்ட் பேய்ன்டன் சொல்லுகிறார். தண்டனைக் குறைப்பை “பதினாறாவது நூற்றாண்டு சூதாட்டம்” என்பதாக பெயரிட்டு அழைத்தார்.
குத்தலான பேச்சுக்கு பெயர்பெற்றவரான லூதர் பின்வருமாறு கேட்டார்: “[தண்டனைக் குறைப்பின் அடிப்படையில்] எவரையாவது உத்தரிக்கும் ஸ்தலத்திலிருந்து விடுவிப்பதற்கு போப்புக்கு வல்லமை இருக்கிறதென்றால், அன்பின் பெயரில் அனைவரையும் அதிலிருந்து வெளியே அனுப்பிவிடுவதன் மூலம் உத்தரிக்கும் ஸ்தலத்தை ஏன் ஒழித்துக்கட்டிவிடக் கூடாது?” ரோமன் கட்டிடத் திட்டத்துக்கு நன்கொடையளிக்க கேட்கப்பட்டபோது, போப் “செயின்ட் பீட்டர்ஸை விற்று, தண்டனைக் குறைப்பு வியாபாரிகளால் கொள்ளையடிக்கப்பட்டு வரும் ஏழை மக்களுக்கு பணத்தைக் கொடுப்பது மேலாக இருக்கும்” என்பதாக லூதர் சுடச்சுட பதில் கொடுத்தார்.
செமிட்டிக் இனஞ் சார்ந்தவர்களை எதிர்க்கும் கத்தோலிக்க கொள்கையையும்கூட லூதர் தாக்கினார். அவர் ஆலோசனை கூறியதாவது: “யூதர்களிடமாக, போப்பினுடையதை அல்ல, ஆனால் கிறிஸ்துவின் அன்பின் சட்டத்தை நாம் பயன்படுத்த வேண்டும்.” நினைவுச்சின்னங்களை வணங்குவதைக் குறித்து அவர் ஏளனமாகக் குறிப்பிட்டதாவது: “காபிரியேல் தூதனின் செட்டையிலிருந்து ஓர் இறகை கொண்டிருப்பதாக ஒருவர் உரிமைப்பாராட்டுகிறார், மேய்ன்ஸ் மேற்றிராணியார் மோசயின் எரிகிற முட்புதரிலிருந்து ஓர் அனற்கொழுந்தைக் கொண்டிருக்கிறார். கிறிஸ்துவுக்கு 12 அப்போஸ்தலர்கள் மாத்திரமே இருக்க, ஜெர்மனியில் பதினெட்டு அப்போஸ்தலர்கள் புதைக்கப்பட்டிருப்பது எப்படி நேரிட்டது?”
லூதரின் தாக்குதலுக்கு, திருச்சபையிலிருந்து அவரை நீக்கிவிடுவதன் மூலம் சர்ச் பதிலடி கொடுத்தது. போப்பின் அழுத்தத்துக்கு தலைவணங்கி, பரிசுத்த ரோம பேரரசர் சார்லஸ் V, லூதரை திருச்சபையிலிருந்து விலக்கி வைத்தார். இது அத்தனை கருத்து மாறுபாடுகளை உருவாக்கியதால், 1530-ல் ரோம பேரரசின் ஆக்ஸ்பர்க் பேரவை இந்த விஷயத்தை கலந்துபேச அழைக்கப்பட்டது. சமரச உடன்பாட்டை அடைய செய்யப்பட்ட முயற்சிகள் தோல்வியடைய, லூதரின் கோட்பாடு நம்பிக்கையின் அடிப்படையான விவர வாசகம் வெளியிடப்பட்டது. ஆகஸ்பர்க் சமய நம்பிக்கைக்குரிய கோட்பாடு தொகுப்பு என்றழைக்கப்பட்ட இது, முதல் புராட்டஸ்டன்டு சர்ச்சின் பிறப்பை அறிவிப்பு செய்வதற்கு சமயமாக இருந்தது.b
ஸ்விங்லியும் லூதரும் கருத்தில் மாறுபடுகின்றனர்
ஸ்விங்லி, சர்ச்சுக்கு பைபிள் இறுதியானதும் தனியொரு அதிகாரத்துவமுடையதுமாக இருப்பதாக வலியுறுத்தினார். லூதரின் முன்மாதிரியால் ஊக்குவிக்கப்பட்டாலும், லூதரன் என்பதாக அழைக்கப்படுவதை அவர் ஆட்சேபித்து, தான் கிறிஸ்துவின் போதகங்களை லூதரிடமிருந்து அல்ல ஆனால் கடவுளுடைய வார்த்தையிலிருந்தே கற்றுக்கொண்டதாக தெரிவித்தார். உண்மையில், கர்த்தருடைய இராபோஜனத்தின் ஒரு சில அம்சங்கள், உள்நாட்டு அதிகாரிகளிடம் ஒரு கிறிஸ்தவனின் சரியான உறவு பற்றிய விஷயங்களில் லூதரும் அவரும் கருத்தில் மாறுபட்டனர்.
இரண்டு சீர்திருத்தவாதிகளும் 1529-ல் ஒரே ஒரு முறையே சந்தித்துக் கொண்டனர். இதை சீர்திருத்த நெருக்கடி என்ற புத்தகம் “ஒருவகையான உச்சி மாநாடு” என்பதாக அழைக்கிறது. புத்தகம் சொல்வதாவது: “இரண்டு மனிதர்களும் நண்பர்களாக பிரிந்து செல்லவில்லை, ஆனால் . . . மாநாட்டின் முடிவில் வெளியிடப்பட்டு அதில் கலந்துகொண்ட அனைவராலும் கையொப்பமிடப்பட்ட ஒரு பணித்துறை அறிவிப்பு, பிளவின் அளவை திறமையாக மறைத்துவிட்டிருந்தது.”
ஸ்விங்லி, அவரை பின்பற்றியவர்களிடமிருந்தும்கூட பிரச்னைகளைக் கொண்டிருந்தார். 1525-ல் சர்ச்சின் மீது அரசாங்கத்தைப் பற்றிய விஷயத்தில் அவர் அதை உறுதி செய்ய அவர்களோ அதை மறுதலித்து அவரோடு கருத்துவேறுபாடு கொண்டு ஒரு தொகுதி பிரிந்துசென்றது. மறுஞானஸ்நானக் கோட்பாட்டாளர் என அழைக்கப்பட்ட இவர்கள், குழந்தை ஞானஸ்நானம் பிரயோஜனமற்ற சடங்கு என்றும் விசுவாசிகளான வயது வந்தவர்களுக்கு மாத்திரமே என்றும் சொன்னார்கள். நீதிப் போர்கள் என்பதாக அழைக்கப்படுவதில் உட்பட மாம்சப்பிரகாரமான போரயுதங்களை பயன்படுத்துவதையும்கூட அவர்கள் எதிர்த்தனர். இவர்களில் ஆயிரக்கணக்கானோர், அவர்களுடைய நம்பிக்கைகளுக்காக மரணத்துக்குட்படுத்தப்பட்டனர்.
சீர்திருத்தத்தில் கால்வினின் பங்கு
கால்வின் என்பவரே மிகப் பெரிய சீர்திருத்தவாதி என்பதாக அநேக பண்டிதர்கள் கருதுகிறார்கள். கிறிஸ்தவத்தின் ஆரம்பகால நியமங்களுக்கு சர்ச் திரும்பவேண்டும் என்பதாக அவர் வற்புறுத்தினார். என்றபோதிலும் அவருடைய முக்கிய போதனைகளில் ஒன்றான விதியின் முன்னறிப்பாடு பூர்வ கிரேக்குவிலிருந்த போதனைகளை நினைப்பூட்டுகிறது. அங்கே யூப்பித்தர் எல்லாக் காரியங்களையும் தீர்மானித்ததாகவும் மனிதர்கள் தவிர்க்கமுடியாது நிகழவிருப்பதற்கு தங்களை ஒப்படைத்துவிட வேண்டும் என்றும் ஸ்தாயிக்கர்கள் சொன்னார்கள். இந்தக் கோட்பாடு கிறிஸ்தவ கோட்பாடு அல்ல என்பது தெளிவாக இருக்கிறது.
கால்வினின் நாளில், ஃபிரெஞ்சு புராட்டஸ்டன்டுகள், ஃபிரெஞ்சு சீர்திருத்தவாதிகள் என்பதாக அறியப்படலானார்கள், இவர்கள் கடுமையாகத் துன்புறுத்தப்பட்டனர். ஃபிரான்சில் 1572, ஆகஸ்ட் 24 முதல், செயின்ட் பார்த்தலோமேயுவின் நாளில் படுகொலையில், கத்தோலிக்கப் படைகள் இவர்களில் ஆயிரக்கணக்கானோரை முதலில் பாரிஸிலும் பின்னர் தேசம் முழுவதிலும் வெட்டி வீழ்த்தினார்கள். ஆனால் ஃபிரெஞ்சு சீர்திருத்தவாதிகளும்கூட பட்டயத்தை எடுத்தனர், 16-வது நூற்றாண்டின் பிற்பகுதியின் போது நடைபெற்ற குருதி பெருக்கெடுத்து ஓடிய சமயப் போர்களில் அநேகர் கொல்லப்பட்டதற்கு பொறுப்பாக இருந்தார்கள். இவ்விதமாக இயேசுவால் கொடுக்கப்பட்ட அறிவுரையை அசட்டை செய்வதை அவர்கள் தெரிந்துகொண்டார்கள்: “உங்கள் சத்துருக்களை சிநேகியுங்கள்; . . . உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம்பண்ணுங்கள்.”—மத்தேயு 5:44.
கால்வின் தன் மதநம்பிக்கையின் வளர்ச்சியை ஊக்குவிப்பதற்காக முன்னாள் புராட்டஸ்டன்டு மதகுரு, ஹேரி எமர்சன் ஃபாஸ்டிக், இரக்கமற்றதும் அதிர்ச்சியூட்டுவதும் என்பதாக விவரிக்கும் முறைகளை பயன்படுத்தி ஒரு முன்மாதிரியை வைத்திருந்தான். கால்வின் ஜெனீவாவுக்கு அறிமுகப்படுத்திய சர்ச் சட்டத்தின் கீழ், 58 பேர் தூக்கிலிடப்பட்டனர்; 76 பேர் நான்கு ஆண்டுகளுக்குள் நாடுகடத்தப்பட்டனர்; 16-ம் நூற்றாண்டு முடிவதற்குள் 150 பேர் கழுமரத்தில் எரிக்கப்பட்டதாக மதிப்பிடப்பட்டது. இவர்களில் ஒருவர் ஸ்பனிய மருத்துவரும் இறையியல் பயின்றவருமான மைக்கல் செர்வட்டஸ் ஆவார். இவர் திரித்துவக் கோட்பாட்டை ஏற்க மறுத்து, இவ்விதமாக எல்லா மனிதருக்கும் “சமய முரண்பாடு கோட்பாட்டாளரானார்.” கத்தோலிக்க அதிகாரிகள் அவன் உருவப்படத்தைக் கொழுத்தினர், புராட்டஸ்டன்டுகள் அவரை கழுமரத்தில் எரிப்பதன் மூலம் ஒரு குறிப்பிடத்தக்க படி மேலே சென்றனர்.
கடைசியாக, “பயங்கரமான நிஜம்”
கொள்கையளவில் லூதரோடு கருத்து ஒருமித்திருக்கையில், எதிர்கால சீர்திருத்தவாதிகள் சிலர் பின்வாங்கினர். இவர்களில் டெஸிடீரியஸ் எராஸ்மஸ் என்ற ஆலந்து நாட்டு பண்டிதர் ஒருவர். 1516-ல் அவர் “புதிய ஏற்பாட்டை” மூல கிரேக்குவில் வெளியிட்ட முதல் மனிதனாக இருந்தார். “சீர்திருத்தம் பயங்கரமான நிஜமாக மாறும்வரை” அவர் “ஒரு சீர்திருத்தவாதியாக இருந்தார்” என்பதாக எடின்பர்க் ரிவ்யூ பிரசுரம் சொல்லுகிறது.
என்றபோதிலும் மற்றவர்கள் சீர்திருத்தத்தோடு முன்னோக்கிச் சென்றனர். ஜெர்மனியிலும், ஸ்கன்டிநேவியாவிலும் லூதரின் கொள்கைகள் வேகமாக பரவின. 1534-ல் இங்கிலாந்து போப்பின் கட்டுப்பாட்டிலிருந்து பிரிந்துசென்றது. சீர்திருத்த தலைவர் ஜான் நாக்ஸின் கீழ், ஸ்கட்லாந்து பின்தொடர்ந்தது. ஃபிரான்சிலும் போலந்திலும் 16-வது நூற்றாண்டு முடிவுக்கு முன் புராட்டஸ்டன்டு மதம் சட்டப்படி அங்கீகாரம் பெற்றுக்கொண்டது.
ஆம், வால்டேர் அத்தனை பொருத்தமாகவே குறிப்பிட்டது போல, “ஒவ்வொரு துர்ப்பிரயோகமும் சீர்திருத்தப்பட வேண்டும்.” ஆனால் “சீர்திருத்தம் துர்ப்பிரயோகத்தைவிட அதிக ஆபத்தானதாக இருந்தாலொழிய,” என்று வால்டேர் மேலும் தகுதியான வார்த்தைகளை அதோடு கூட்டினார். அந்த வார்த்தைகளின் உண்மைத்தன்மையை மேம்பட்ட வகையில் போற்றுவதற்கு எமது அடுத்த பிரதியில் “புராட்டஸ்டன்டு மதம்—உண்மையில் ஒரு சீர்திருத்தமா?” படிக்க நிச்சயமாயிருங்கள். (g89 8/22)
[அடிக்குறிப்புகள்]
a இந்தக் கோட்பாடுகளும் பழக்கவழக்கங்களும் ஆரம்ப கால கிறிஸ்தவர்களுக்கு அறியப்படாதவையாக இருந்தன என்பதற்கான அத்தாட்சிக்கு, உவாட்ச் டவர் பைபிள் அண்டு டிராக்ட் சோஸையிட்டியினால் பிரசுரிக்கப்பட்ட வேதவாக்கியங்களின் நியாயங்கள் புத்தகத்தில் “அப்போஸ்தல திரு மரபுரிமை,” “முழுக்காட்டுதல்,” “பாவ அறிக்கை,” “சிலுவை,” “விதி,” “உருவங்கள்,” “மரியாள்,” “பூசை,” “நடுநிலைமை,” மற்றும் “புனிதர்கள்” என்ற தலைப்புகளைப் பார்க்கவும்.
b “புராட்டஸ்டன்டு” என்ற பதம், தங்களைவிட கத்தோலிக்கர்களுக்கு அதிகமான மதசுயாதீனத்துக்கு வகைசெய்த நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக கிளர்ச்சிசெய்த லூதரின் ஆதரவாளர்களுக்கு ஸ்பேயரில் 1529-ல் நடைபெற்ற மாநாட்டில் முதல் முதலாக பயன்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.
[பக்கம் 28-ன் படங்கள்]
மார்டின் லூதர், 1483-ல் ஜெர்மனியில் பிறந்தார், 23-வது வயதில் மதகுருநிலைக்கு நியமனம் பெற்றார், விட்டன்பர்க் பல்கலைக்கழகத்தில் இறையியல் பயின்றார், 1512-ல் விட்டன்பர்க்கில் பரிசுத்த வேதாகம பேராசிரியரானார், 62-வது வயதில் மரித்தார்
ஹுல்ரிச் ஸ்விங்லி, லூதர் பிறந்து சுமார் இரண்டு மாதங்களுக்குப் பிறகு ஸ்விட்சர்லாந்தில் பிறந்தார், 1506-ல் மதகுருநிலைக்கு நியமனம் பெற்றார், ஒரு புராட்டஸ்டன்டு மதகுருவாக யுத்தத்தில் 47-வது வயதில் மரித்தார்
[படத்திற்கான நன்றி]
Kunstmuseum, Winterthur
ஜான் கால்வின், லூதருக்கும் ஸ்விங்லிக்கும் 25 ஆண்டுகளுக்குப் பிறகு பிறந்தார், ஓர் இளம் மனிதனாக ஃபிரான்சிலிருந்து ஸ்விட்சர்லாந்துக்கு இடம்மாறிவந்தார், ஜெனிவாவில் உண்மையில் சர்ச்–அரசு ஒன்றை ஏற்பாடுத்தினார். 54 வயதில் மரித்தார்