இளைஞர் கேட்கின்றனர் . . .
அதை அவர்கள் எப்படி எனக்குச் செய்யக்கூடும்?
“என்னுடைய மூத்த சகோதரி கினாவை நான் சார்ந்திருந்தேன்.a அவள் என்னைத் திரைப்படங்களுக்குக் கூட்டிச் செல்வாள், என்னுடைய வீட்டுப் பாடங்களைச் செய்ய உதவுவாள். ஓர் இரவு, அவள் கிறிஸ்தவ சபையிலிருந்து சபை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறாள் என்ற அறிவிப்பு கொடுக்கப்பட்டது வரை, அவளுக்குப் பிரச்னைகள் இருந்தன என்பது எனக்குத் தெரியாது. நான் அதிர்ச்சியடைந்தேன். அதை என்னால் நம்ப முடியவில்லை. அவளுக்குப் பிரச்னைகள் இருந்தன என்பதை என்னிடம் சொல்லவே இல்லை.”—டெரி.
“பில் என்னுடைய அண்ணன். நான் அநேகக் காரியங்களுக்கு அவனை நோக்கியிருந்தேன். அவன் பிரியமானவன்—அழகாயும் சிரிக்க வைப்பவனாயும் இருந்தான். நாங்கள் குடும்பமாக உணவருந்தும்போது, அவன் எங்கள் எல்லாரையுமே சிரிப்பொலியில் ஆழ்த்திடுவான்! ஆனால் பில் எப்பொழுதுமே ஒரு கோபக்காரன். அவன் சீர்கெட்டுப்போன சில பணக்காரர் பையன்களுடன் ஊர் சுற்றவும் போதைப் பொருட்கள் எடுக்கவும் ஆரம்பித்தான். அது அவனைப் பைத்தியக்காரனாக்கியது. எங்களுடைய பெற்றோருடனும் சண்டைப்போட ஆரம்பித்தான். ஒரு முறை அம்மாவைத் தள்ளிவிட்டதை நான் பார்த்தேன்! ஒரு வாரம் நாங்கள் குடும்பமாக ஒன்று சேர்ந்து உல்லாசமாய்ச் செல்ல திட்டமிட்டிருந்தோம். அதற்காக நான் உண்மையிலேயே எதிர்நோக்கிக்கொண்டிருந்தேன்! அப்பொழுது பில் ஓடி விட்டான். தான் எங்கே போகிறான் என்பது குறித்து ஒன்றுமே சொல்லவில்லை. அவனுக்காக நான் பயந்தேன், கவலைப்பட்டேன். ஆனால் நானும் அவன் மீது கோபப்பட்டேன்; ஏனென்றால் அப்பா அந்த உல்லாசப் பயணத்தை ரத்து செய்ய வேண்டியிருந்தது, ஏனென்றால் பில் எப்பொழுதுமே எல்லாவற்றையும் தாறுமாறாக்கிவிடுவான்.”—டான்.
மூத்த சகோதரன் அல்லது சகோதரி கலகம் செய்வது, வீட்டைவிட்டு ஓடிவிடுவது, கைது செய்யப்படுவது, அல்லது ஏதாவது ஒரு வழியில் உங்கள் குடும்பத்தை அவமானத்துக்குட்படுத்துவது அதிக வேதனையை ஏற்படுத்துகிறது.
அந்த உடன்பிறந்த மூத்தவரை (சகோதரன் அல்லது சகோதரி) நீங்கள் பெரும்பாலும் உங்களுக்கு ஒரு மாதிரியாக நோக்கியிருப்பீர்கள். அந்த நபர் அப்பீடத்திலிருந்து விழுவதைப் பார்ப்பது ஒரு மோசமான அனுபவமாக இருக்கக்கூடும். ‘இது எனக்கு நேரிடுமா?’ என்று உங்களுக்குள்ளும் ஒரு பயத்தையும் ஏற்படுத்தக்கூடும்.
போராடி வெற்றிபெற வேண்டிய இன்னொரு பலமான உணர்ச்சி எரிச்சலாகும். உங்களுடைய கலக்கார உடன் பிறந்தான் உங்களுக்கும் உங்களுடைய குடும்பத்துக்கும் ஏற்படுத்தும் எல்லா வேதனைக்காக அவன் மீது எரிச்சலடைகிறீர்கள். “அப்பாவும் அம்மாவும் என்ன செய்வது என்பதை அறிய இயலாதவர்களாயிருந்தார்கள்,” என்று டான் நினைவிற்குக் கொண்டுவருகிறான். “அவர்கள் அந்தக் காரியத்தின்பேரில் சோர்ந்துவிட்டார்கள்.” வழிதவறிச் சென்றுவிட்ட உங்கள் சகோதரன் அல்லது சகோதரி—நீங்கள் ஒருவர் இல்லாததுபோல—உங்களுடைய பெற்றோரின் கவனத்துக்குரிய மையமாகியிருப்பதற்காக நீங்கள் எரிச்சல் கொள்ளக்கூடும்! உங்களுடைய பெற்றோரின் கவனத்தைப் பெறுவதற்காக நீங்களே செயல்பட சோதிக்கப்படக்கூடும்.
மறுபட்சத்தில், கலகத்தனம் பண்ணின அந்த நபர் மீது உங்கள் பெற்றோர் கடுமையான சிட்சிப்புக்கடுத்த நடவடிக்கைகளை எடுக்க ஆரம்பிப்பது குறித்தும்கூட நீங்கள் எரிச்சலடையக்கூடும். நீங்கள் இப்படியாக யோசிக்கக்கூடும்: ‘அவர்கள் அவன்மீது அவ்வளவு கடுமையாக நடந்துகொள்ள வேண்டுமா?’ உங்களுடைய பெற்றோர் அவனைக் கடிந்துகொள்ளுதலைக் கேட்டு நீங்கள் களைத்து விடலாம். இன்னும் சில இளைஞர் இரகசியமாகப் பொறாமைப்பட ஆரம்பிக்கின்றனர், தங்களுடைய சகோதரர் அல்லது சகோதரி இப்பொழுது அனுபவிக்கும் கட்டுப்பாடற்ற வாழ்க்கை முறையைத் தாங்கள் அனுபவிக்கக்கூடுமா என்றும் யோசிக்கின்றனர். அல்லது வேதனைக்குரிய இந்நிலையை உங்களுடைய நண்பர்களுக்கு விளக்குவதை நீங்கள் கஷ்டமாகக் காணக்கூடும்.
அப்படியென்றால், ஏன் மூத்த சகோதரர்கள் அல்லது சகோதரிகள் நமக்குச் சிலசமயங்களில் கைகொடுக்காமல் போய்விடுகின்றனர்? அது உங்களுடைய வாழ்க்கையை அனாவசியமாகப் பாதிப்பதை நீங்கள் எவ்வாறு தவிர்க்கலாம்?
உடன் பிறந்த மூத்தவர்கள் ஏன் சில சமயங்களில் தவறிவிடுகிறார்கள்
“எல்லாரும்”—அதிகமாக சார்ந்திருக்கும் சகோதரர்களும் சகோதரிகளுங்கூட—“பாவஞ்செய்து, தேவமகிமையற்றவர்களாக” இருக்கிறார்கள் என்று பைபிள் தெளிவாகக் காண்பிக்கிறது. (ரோமர் 3:23) விசேஷமாக இளைஞர்கள் தவறிழைக்கும் சாத்தியம் அதிகமாயிருக்கிறது, காரணம் அவர்கள் தங்களுடைய உணர்ச்சிகளையும் தூண்டுதல்களையும் பெரும்பாலும் கட்டுப்படுத்தக் கற்றுக்கொள்ளவில்லை. இப்படியாகப் “பிள்ளையின் [அல்லது இளைஞனின்] நெஞ்சில் மதியீனம் ஒட்டியிருக்கும்” என்று பைபிள் சொல்லுகிறது. (நீதிமொழிகள் 22:15) எனவே அவர்கள் தவறிவிடுவது உங்களைப் புண்படுத்துகிறது என்றாலும், உங்கள் உடன்பிறந்தாரின் தவறுகள் தனிப்பட்டவிதத்தில் உங்களுக்கு எதிராக செய்யப்பட்டது என்று நம்புவதற்கு அநேகமாக எந்தக் காரணமும் இருக்காது, அல்லது அந்தத் தவறு உங்களுடையது போல அனாவசியமாக சங்கடப்படுவதற்கு எந்தக் காரணமுமில்லை.
உங்களுடைய சகோதரன் அல்லது சகோதரியை வளர்ப்பதில் உங்கள் பெற்றோரின் பங்கில் ஏதோ தவறு இருக்கும் வாய்ப்புகள் உண்டு. ஒருவேளை அவர்கள் அதிகக் கண்டிப்பில்லாதவர்களாகவும் அவனைச் சரியாக சிட்சிக்கத் தவறியவர்களாவும் இருந்திருக்கக்கூடும். (நீதிமொழிகள் 13:24; 29:15, 17) ஒருவேளை ஏதாவது வழியில் ஒரு நல்ல முன்மாதிரியை வைக்கத் தவறியிருக்கக்கூடும். அப்படி இருந்தாலும், உங்களுடைய பெற்றோருடன் கடுமையாக வாதாடுவதால், உங்கள் உடன்பிறப்பின் பிரச்னைகளுக்கு அவர்களைக் குற்றப்படுத்த முற்படுவதால் ஒன்றும் சாதிக்க முடியாது.
அநேகமாக உங்களுடைய பெற்றோர் பயிற்றுவிப்பை அளிப்பதில் அவ்வளவாய்த் தவறியிருக்கமாட்டார்கள், ஆனால் பெற்றோர் கொடுக்கும் பயிற்றுவிப்புக்கு உங்கள் சகோதரன் அல்லது சகோதரி செவிகொடுக்கத் தவறியிருக்கும் சாத்தியம் அதிகமாகவே இருக்கிறது.
பெற்றோர் எவ்வாறு உணருகின்றனர்
உங்கள் உடன்பிறப்பு விலகிச்செல்லுதல் உங்களுடைய பெற்றோருக்கு ஏன் பேரிழப்பை ஏற்படுத்துவதாய் இருக்கக்கூடும் என்பதை நீங்கள் மதித்துணர இது உங்களுக்கு உதவக்கூடும். உங்களுடைய சகோதரன் அல்லது சகோதரியை வளர்ப்பதில் அவர்கள் அதிகப்படியான நேரத்தையும், முயற்சியையும் உணர்ச்சியையும் உட்படுத்தியிருக்கிறார்கள். அவன் தவறிழைப்பதைப் பார்க்கும்போது, அவனை அல்லது அவளைத் தாங்கள் வளர்த்த விதத்தைக்குறித்து சந்தேகங்களாலும் குற்ற உணர்வாலும் நிரப்பப்படுவதை அவர்கள் தவிர்க்க முடியாது.
பிரச்னை அதன் உச்சக்கட்டத்தில் இருக்கும்போது, உங்கள் பெற்றோர் உங்களை அசட்டை செய்வதாக உங்களுக்கு இருக்கக்கூடும். மிரான் பிரென்டன் எழுதிய உங்களுடைய பிள்ளையின் கலகப்போக்கான பருவவயதை எவ்விதம் கடந்துசெல்வது என்ற நூல் பின்வருமாறு விளக்குகிறது: “கலகத்தனமான பிள்ளை பெற்றோருடைய உலகின் மையமாக இருந்து, அவர்களுடைய உணர்ச்சி சார்ந்த சக்தியை அவ்வளவாக எடுப்பதன் காரணத்தால் மற்ற பிள்ளைகள் அசட்டை செய்யப்படுவதில் விளைவடைகிறது. ‘நான் அவ்வளவு குருடாய், இந்த ஒரு மூத்த மகளில் என் கவனத்தை அவ்வளவாய் ஒருமுகப்படுத்தியிருந்ததால், எனக்கு இன்னொரு மகள் இருக்கிறாள், ஒரு கணவர் இருக்கிறார் என்றுங்கூட நான் உணராதிருந்தேன்,’ என்கிறாள் போதப் பொருட்களுக்கு அடிமைப்பட்டிருந்த ஒரு பிள்ளையின் தாய்.”
பெற்றோர்கள் இந்தவிதத்தில் பிரதிபலிப்பது நேர்மையற்ற செயல் என்பது ஒப்புக்கொள்ளப்படவேண்டும். ஆனால், அதைப் புரிந்துகொள்ள முடிகிறது அல்லவா? தாவீது அரசன் தன் மகன் அப்சலோமின் கலகப்போக்கினாலும் அதைத் தொடர்ந்து அவனை மரணத்தில் இழந்ததாலும் அவ்வளவாய் மனக்கிலேசம் அடைந்தவனாயிருந்ததால் தற்காலிகமாகத் தன் சமநிலையை இழந்து, “என் மகனாகிய அப்சலோமே, அப்சலோமாகிய என் மகனே, என் மகனே” என்று அலறிக்கெண்டிருந்ததைவிட வேறு ஒன்றும் செய்யக்கூடாதவனாயிருந்தான் என்று பைபிள் நமக்குச் சொல்லுகிறது. (2 சாமுவேல் 19:4–6) காரியங்கள் நிதான நிலையை அடையும்போது—அவை காலப்போக்கில் அந்நிலைக்கு வரும்—உங்களுடைய பெற்றோர் மெதுமெதுவாகத் தங்களுடைய சமநிலைக்கு வந்து உங்களுடைய தேவைகளை நல்லவிதத்தில் கவனிக்கும் நிலையிலிருப்பார்கள் என்பதில் நிச்சயமாயிருங்கள்.
‘நானும் அதே காரியத்தைச் செய்வேனா?’
இந்தக் கேள்வி அநேக இளைஞரின் அக்கறைக்குரிய ஒன்று, விசேஷமாகத் தங்களுடைய மூத்த சகோதரன் அல்லது சகோதரி சுவைக்கும் “சுதந்தரத்தைக்” குறித்து தாங்கள் அறிந்துகொள்ளும் மனமுடையவர்களாயிருக்கும்போது அப்படி இருக்கிறது.
முதலாவதாக, உங்களுடைய மூத்த உடன்பிறப்பை நீங்கள் மாதிரியாக நோக்கியிருந்திருக்கக்கூடும் என்றாலும், சரியானதைச் செய்வதற்குக் கடவுளுக்கு முன்பாக நீங்கள் தாமே பொறுப்புள்ளவர்களாயிருக்கிறீர்கள். “ஆதலால் ஒருவன் நன்மை செய்ய அறிந்தவனாயிருந்தும், அதைச் செய்யாமற்போனால், அது அவனுக்குப் பாவமாயிருக்கும்,” என்று யாக்கோபு 4:17 சொல்லுகிறது. (கலாத்தியர் 6:5-ஐ ஒப்பிடவும்.) அவனோ அல்லது அவளோ அனுபவிப்பதாய்த் தென்படும் சுதந்திரத்தைக் கண்டு பொறாமைப்படுவது வெறுமென முட்டாள்தனம். சங்கீதக்காரனாகிய ஆசாப் அப்படிப்பட்ட ஒரு பொறாமையைக் கொஞ்சக் காலத்திற்குக் கொண்டிருந்தான். ஆனால் கலகத்தனமுள்ள பாவிகளுக்கு விளைவடையும் காரியங்களைக் கவனமாக ஆராய்ந்துபார்த்தப் பின்பு, அப்படிப்பட்டவர்கள் “சறுக்கலான இடங்களில்” நிறுத்தப்பட்டிருக்கிறார்கள்—அழிவின் விளிம்பில் இருக்கிறார்கள் என்ற முடிவுக்கு வந்தான்! (சங்கீதம் 73:18) தவறான செயல் மன வேதனைக்கு மட்டுமே வழிநடத்துகிறது என்பதை அறிவதற்கு நீங்கள் தனிப்பட்ட விதத்தில் தவறான செயலைச் செய்து பார்க்க அவசியமில்லை!—கலாத்தியர் 6:7, 8.
உங்களுடைய மூத்த சகோதரர் அல்லது சகோதரி நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள் என்பதை முன்னறிவிப்பதில்லை. டெரி (தொடக்கத்தில் குறிப்பிடப்பட்டவர்) சொன்னபடி: “என் சகோதரி செய்ததை நான் செய்யப்போவதில்லை. நான் எவ்விதத்திலும் அவளைப் போன்றவள் இல்லை. நாங்கள் வித்தியாசமான இருவர்.”
உதாரணமாக, யோசேப்பைப் பற்றிய பைபிள் பதிவைக் கவனியுங்கள். யோசப்பின் பத்து சகோதரர்களில் ஒருவர்கூட யோசப்பு பின்பற்றுவதற்கு ஒரு நல்ல முன்மாதிரியை வைக்கவில்லை. என்றபோதிலும் யோசப்பு அவர்களுடைய கெட்ட முன்மாதிரியின் செல்வாக்குக்கு இடமளிக்கவில்லை. இவன் நீதியான நியமங்களுக்கு பக்தியைக் காண்பித்து, அநேக சிலாக்கியங்களையும் ஆசீர்வாதங்களையும் பெற்றிடுவதற்காகத் “தன் சகோதரரில் விசேஷித்தவன்” ஆனான்.—உபாகமம் 33:16; ஆதியாகமம் 49:26.
அதுபோல உங்களுடைய மூத்த சகோதரர் அல்லது மூத்த சகோதரி எடுத்திருக்கும் வழி என்னவாயிருந்தாலும், நீங்கள் “வார்த்தையிலும், நடக்கையிலும், அன்பிலும், ஆவியிலும், விசுவாசத்திலும், கற்பிலும் விசுவாசிகளுக்கு மாதிரியாயிருக்க” முயற்சி செய்யலாம். (1 தீமோத்தேயு 4:12) உங்களுடைய உண்மையுள்ள முயற்சிகள், உங்கள் மூத்த சகோதரன் அல்லது சகோதரி தன்னுடைய சொந்த வாழ்க்கையை சீராக்கிட உந்துவிக்கக்கூடும்.
அவர்களுடைய தவறுகளிலிருந்து கற்றுக்கொள்ளுங்கள்
இந்தக் கடினமான சூழ்நிலையிலிருந்து நன்மையடைய முற்படுங்கள். உங்களுடைய சகோதரன் அல்லது சகோதரி “கெட்ட கூட்டுறவை”—கெட்ட வார்த்தைகளைப் பேசும், போதப் பொருட்கள் எடுக்கும், மதுபானத்தைத் துர்ப்பிரயோகம் செய்யும், அல்லது ஒழுக்கந்தவறிய நடத்தைகளில் ஈடுபடுகிறவர்களின் கூட்டுறவை—நாடிச் சென்றாரா? (1 கொரிந்தியர் 15:33) ஒருவேளை நீங்கள் கூட்டுறவு கொள்கிறவர்களை நெருங்கப் பார்க்க வேண்டியிருக்கலாம்.
மேலும் உங்களுடைய மூத்த உடன்பிறப்புகள் உங்களுடைய பெற்றோரின் புத்திமதிகளுக்குச் செவிகொடுத்த விதத்தையும் குறித்து எண்ணிப்பாருங்கள். அவன் வாதம் செய்கிறவனாக, முரண்டு பிடிப்பவனாக, கலகத்தனமாக இருந்தானா? அப்படியிருக்குமானால், எப்பொழுதாவது உங்களுடைய பெற்றோரிடம் நீங்கள் கூடகூட பேசுவதாகக் காண்கிறீர்களா? அல்லது உங்களைச் செய்யும்படி அவர்கள் சொல்லும் காரியங்களைச் செய்வதற்குத் தயங்குகிறீர்களா? ‘உங்களுடைய தகப்பனையும் தாயையும் கனம்பண்ணுவது’ குறித்து இன்னும் அதிக உணர்வுள்ளவர்களாக இருக்க முடியுமா?—எபேசியர் 6:2.
அது அவ்வளவு எளிதாயிருக்க முடியாது, ஆனால் நீங்களும் உங்களுடைய குடும்பமும் இந்தத் துயர்தரும் அனுபவத்தைக் கடந்து, அதிலிருந்து சில நன்மைகள் உண்டாவதைக் காணக்கூடும். அதற்கிடையில், உங்களுடைய மூத்த உடன்பிறப்பு தன்னுடைய தவறை உணர்ந்து மாறுவதற்குரிய படிகளை மேற்கொள்வான் என்ற நம்பிக்கையை ஒருபோதும் இழக்காதீர்கள். (லூக்கா 15:11–24 ஒப்பிடவும்.) குடும்ப அங்கத்தினர்கள் உங்களைக் கைவிட்டாலும், யெகோவா ஒருபோதும் “உன்னை விட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை,” என்பதை மறந்துவிடவேண்டாம். (எபிரெயர் 13:5) எனவே யெகோவாவுக்கு உண்மையாயிருப்பதுதான் முதலில் வரவேண்டும். அவரைப் பிரியப்படுத்திட வேண்டும் என்ற உங்களுடைய ஆசை—பிரியமான உங்கள் சகோதரன் அல்லது சகோதரி வேற்றுப் பாதையைத் தெரிந்துகொண்டாலுங்கூட—ஒரு சுத்தமான கற்புள்ள வாழ்க்கையை வாழ்ந்திட உங்களைத் தூண்டிடும். (g90 11/8)
[அடிக்குறிப்புகள்]
a சில பெயர்கள் மாற்றப்பட்டிருக்கின்றன.
[பக்கம் 16-ன் படம்]
எதிர்க்கிற ஒரு சகோதரன் அல்லது சகோதரி அநேக சமயங்களில் பெற்றோருடைய அக்கறையின் மையமாக ஆகின்றனர். இதன் விளைவாக குற்றத்தில் இல்லாத மற்ற பிள்ளை அசட்டை செய்யப்பட்டிருப்பதாக உணரக்கூடும்