பழம்பெரும் விவாக உறவினர்கள் பிரச்னை
“உங்களுடைய முகத்தைப் பார்க்கவே எனக்குப் பிடிக்கவில்லை!” என்று தன்னுடைய மாமியார் டொமிக்கோவைப் பார்த்து ஃபுஜிக்கோ சீறினாள். தன்னை அதிகாரம் செய்துகொண்டிருந்தது ஃபுஜிக்கோவுக்கு சலித்துவிட்டது. தான் மேலோட்டமாக அமைதியாக இருக்க முயன்றபோதிலும், கவலையில் வாழ்ந்துகொண்டிருந்தாள். “என் நெஞ்சில் வேதனைத் ததும்ப, நான் நானாக இருக்கவில்லை” என்கிறாள். “நான் இப்படியாக ஒவ்வொரு நாளையும் கழிப்பது எனக்குக் கடினமாயிருந்தது.”
ஜப்பானில் தனிமையில் வாழும் வயதான ஒரு பெண் இப்படியாகக் கூறுகிறாள்: “நான் என்னுடைய மகனாலும் அவனுடைய மனைவியாலும் கைவிடப்பட்டேன். இப்பொழுது நான் மற்றவர்களைப்பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. என் இஷ்டப்படி நான் வாழ்கிறேன், ஆனால் சூரியன் மறையும்போது நான் தனிமையை உணருகிறேன்.”
காலாகாலமாக இருந்துவரும் மாமியார் மருமகள் பிரச்னை ஓர் அகில உலகப் பிரச்னை. “வருத்தத்துக்குரிய காரியம்,” என்கிறாள் ஆஸ்திரேலியாவில் ஒரு பத்திரிகை ஆசிரியையாக இருந்துவரும் டல்சி போலிங், “சில பெண்கள் எப்பொழுதுமே தங்களுடைய மருமக்கள்மாரின் பேரில் பொறாமைப்படுகிறார்கள். . . . உங்கள் வேதனையை வெளிக்காட்டாது பொறுத்துக்கொள்வதைத் தவிர நீங்கள் அதிகம் செய்யமுடியாது.” கீழை நாடுகளில், மருமக்களின் தூண்டுதலால் வயதான பெண்கள் மலைகளிலே கைவிடப்பட்டது பற்றிய பழங்கதைகளும் இருக்கின்றன.
இன்று இந்தப் பிணக்கு இன்னும் அதிக சிக்கல் வாய்ந்ததாக இருக்கிறது. புள்ளிவிவரங்கள்படி, மனிதனின் ஆயுள் கூடிவருகிறது, குடும்பங்கள் சிறுத்துவருகின்றன, ஆண்கள் மற்றும் பெண்களின் இறப்பு விகிதத்தின் இடைவெளி அதிகமாகிறது. இதன் விளைவு என்ன? அதிகமான பெண்கள் தங்கள் 70 மற்றும் 80-களில் வாழ்வதால், தாய்மார்களுக்கும் மருமகள்களுக்கும் இடையிலான பிணக்கு, எப்பொழுதும்போல் 100-மீட்டர் ஓட்டப்பந்தயமாக இல்லை, ஆனால் கடுமையான மாரத்தான் போட்டியாக ஆகியிருக்கிறது.
வயதானவர்கள் விரும்புவது என்ன?
அப்படிப்பட்ட பிணக்குகளைத் தாங்கமுடியாதவர்களாய், வயதான பெற்றோர்கள், தங்களுக்கு முன் ஒரு தெரிவு இருக்குமானால், தாங்கள் எப்படிக் கவனிக்கப்படவேண்டும் என்று விரும்புகிறார்கள்? பிறப்பு-நோய் புள்ளி விவர ஆய்வாளர்கள் ஜேக்கப் S. சீகல் மற்றும் சின்தியா M. டாபர் கூறுவதாவது: “கடந்த இருபது ஆண்டுகளாக ஆண்களும் பெண்களும் விவாகத் துணைவர்களைக் கொண்டில்லை என்றால், மற்றவர்களோடு வாழ்வதற்கான விருப்பம் குறைந்து காணப்படுகிறது.” ஐக்கிய மாகாணங்களில் “ஒருவருடைய உறவினரைவிட்டு வாழ்வதையே வயோதிபர் விரும்புகின்றனர்” என்று மனித சேவையின் முன்னாள் இயக்குநர் இலேன் M. பிராடி கூறுகிறார். அநேக சமயங்களில் அவர்களுடைய பிள்ளைகள் அண்மையில் வாழ்பவர்களாயும், அவர்களைச் சந்தித்து கவனித்துவருகிறவர்களாயும் இருக்கிறார்கள்.
கீழை நாட்டவர் வேறு வழியை விரும்புகின்றனர். ஜப்பானிலுள்ள நிர்வாகம் மற்றும் ஒத்திசைவு நிறுவனத்தின் சர்வதேச சுற்றாய்வின்படி, ஜப்பானிலும் தாய்லாந்திலும் வாழும் வயோதிபரில் பெரும்பான்மையினர் தங்களுடைய பிள்ளைகளுடன் வாழ்வதையே விரும்புகின்றனர். தாய்லாந்திலுள்ள வயோதிபரில் 61 சதவீதத்தினரும் ஜப்பானில் 51 சதவீதத்தினரும் உண்மையில் அப்படித்தான் வாழ்கிறார்கள் என்று சுற்றாய்வு காண்கிறது.
உண்மைதான், இது மேற்கத்திய நாடுகளிலுங்கூட பொதுவாகக் காணப்படுகிறது. பொதுவாக அதிக வயதான அல்லது படுக்கையில் கிடக்கும் பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளுடன் வாழ்வதையே தெரிந்துகொள்கின்றனர். பொதுவாக ஃப்ரான்சில்கூட தங்களுடைய துணைவர்களை இழந்த 75 வயதுக்கும் மேற்பட்டவர்கள் தங்களுடைய பிள்ளைகளில் ஒருவருடன் வாழ்கிறார்கள்.
நல்லது, கெட்டதை ஏற்றுக்கொள்ளுதல்
இரண்டு அல்லது மூன்று தலைமுறைகள் ஒரே கூரையின்கீழ் வாழ தீர்மானிக்கும் போது, உண்மைதான், சில நன்மைகளும் உண்டு. வயதானவர்கள் அதிக பாதுகாப்பாகவும் தனிமையில் இல்லாதவர்களாகவும் உணருகிறார்கள். இளம் தலைமுறையினர் வயது முதிர்ந்தவர்களின் அனுபவத்திலிருந்து கற்றுக்கொள்ளலாம், மற்றும் பொருளாதார நன்மைகளும் உண்டு.
மறுபட்சத்தில், ஒன்றாக வாழ்வது, ஏற்கெனவே சிக்கலாயிருக்கும் விவாக உறவினர்களின் உறவுகளை இன்னும் அதிக சிக்கலாக்கிவிடும். உதாரணமாக ஜப்பானில், வயதானவர்கள் பாரம்பரியமாக முதல் மகன் வீட்டில் அவனுடைய குடும்பத்தோடு வாழ்ந்துவர, மாமியார்–மருமகள் பிணக்கு ஒரு சொல்வழக்காகவே ஆகிவிட்டது.
நீங்கள் அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையை எதிர்ப்படுகிறவர்களாயிருந்தால், நீங்கள் என்ன செய்யலாம்? அமெரிக்காவின் வயோதிபர் மக்கள்தொகை என்ற தன்னுடைய புத்தகத்தில் கில்ஃபோர்டு கல்லூரியில் சமூகவியல் பேராசிரியர் பால் E. ஜோஃப் இளையவர் கூறுகிறார்: “குடும்பம் பிணக்கையும் பிணக்கை நிர்வகிப்பதற்கான வாய்ப்பையும் உருவாக்குகிறது. பிணக்கைக் கட்டுப்படுத்தும் திறமையும், வயதான குடும்ப அங்கத்தினர்களுடன் பலன்தரத்தக்கவிதத்தில் செயல்தொடர்பு கொள்வதும் மற்ற உறவுகளிலும் பலன் காணும் ஒரு தனித் திறமையாக இருக்கிறது.”
எனவே காரியத்தின்பேரில் ஓர் உடன்பாடான நோக்குநிலையைக் கொள்ளுங்கள். குடும்ப சச்சரவுகளைக் கட்டுப்படுத்த நீங்கள் கற்றுக்கொள்வீர்களானால், முள்மயமான மற்ற சூழ்நிலைகளையுங்கூட திறமையாகக் கையாளுகிறவர்களாயிருக்கக்கூடும். அதை ஒரு சவாலாக ஏற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது அதைக் கையாளுவதற்கு பக்குவப்பட்ட நிலையிலிருப்பவர்களாக உங்களைக் காண்பீர்கள். விவாக உறவினர்களுடன் வாழ்வதன் பிரச்னைகளையும், அந்தப் பிரச்னைகளை எவ்விதம் வெற்றிகரமாகக் கையாளலாம் என்பதையும் நாம் ஆராய்ந்து பார்ப்போம். நீங்கள் ஒருவேளை அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் தற்போது இல்லாவிட்டாலும், உட்பட்டிருக்கும் நியமங்களைச் சிந்திப்பதிலிருந்து நன்மை பெறக்கூடும். (g90 2/22)
[பக்கம் 4-ன் பெட்டி]
பிள்ளைகளைவிட பெற்றோர் அதிகம்
இப்பொழுது, சரித்திரத்தில் முதல் முறையாக, மக்கள்தொகை புள்ளியியல் நிபுணர் சாமுவேல் பிரஸ்டன் குறிப்பிடுகிறபடி, விவாகமான தம்பதிகள் சராசரியாகப் பிள்ளைகளைவிட அதிகமான பெற்றோரைத்தான் கொண்டிருக்கின்றனர். இன்றைய விவாகத் தம்பதிகள் எதிர்ப்படும் பிரச்னை என்னவென்றால், இருவர் பெற்றோரையும் கவனிக்கும் உத்தரவாதத்தை எவ்விதம் சமநிலைப்படுத்துவது என்பதே.