இன்றைய இளைஞர் அவர்கள் எதிர்ப்படும் சவால்கள்
“சந்தேகமின்றி பருவ ஆண்டுகளே, வாழ்க்கையில் மிகவும் குழப்பமானதும் அழுத்தங்கள் நிறைந்ததுமான ஒரு காலமாக இருப்பதை ஆராய்ச்சி காட்டுகிறது.” இவ்விதமாக டாக்டர் பெட்டி B. யங்ஸ், அழுத்தத்தைச் சமாளிக்க உங்கள் பருவ வயதினருக்கு உதவுதல் என்ற தன்னுடைய புத்தகத்தில் எழுதினார். கடந்த காலங்களில், இளைஞர் வெறுமென இளமையாக இருப்பதன் காரணமாக அதிக வேலையுள்ளவர்களாக இருந்தார்கள். என்றபோதிலும் இப்பொழுதெல்லாம் அவர்கள் வளரிளமைப் பருவத்தின் வேதனைகளையும், 1990-களில் வாழ்க்கையில் வயது வந்த பெரியவர்களின் கடினமான அழுத்தங்களையும் கையாள வேண்டும்.
உலக சுகாதாரம் பத்திரிகையில் டாக்டர் ஹெர்பர்ட் ஃபைரட்மேன் இவ்விதமாக எழுதினார்: “உலகில் மக்கள் தொகயின் அசாதாரணமான அதிகரிப்பு, இதனோடு சேர்ந்து வந்திருக்கும் முடுக்கிவிடப்பட்ட நகரமயமாக்கல், ஒரே இரவில் முன்னொருபோதுமில்லாத நிலைமைகளை செய்தித் தொடர்பிலும் பிரயாணத்திலும் உருவாக்கியிருக்கும் தொழில் நுணுக்கப் புரட்சி ஆகிய இவற்றில் எது காரணமாக இருந்தாலும், பிள்ளை பருவத்திலிருந்து பெரியவர்களாவதற்கு முன் இருக்கும் இடைநிலைக் காலம், இத்தனை கிளர்ச்சி மிகுந்த மாற்றமுள்ள ஒரு காலப் பகுதியில் ஒருபோதும் இருந்தது கிடையாது.”
கேத்தி என்ற பெயர் கொண்ட ஒரு பருவ வயது பெண் இவ்விதமாகச் சொல்கிறாள்: “எங்களுடையது போன்ற ஒரு காலத்தில் வளர்ந்து வருவது மிகவும் கடினமாகும்.” போத வஸ்துக்களுக்கு அடிமையாதல், தற்கொலை, மதுபான துர்ப்பிரயோகம்—‘கையாளுவதற்கு கடினமாக இருக்கும் காலத்தின்’ அழுத்தங்கள் மற்றும் நெருக்கடிகளுக்கு இவையே சில இளைஞரின் பிரதிபலிப்பாக இருக்கிறது.—2 தீமோத்தேயு 3:1.
குடும்பத்தில் புரட்சி
டாக்டர் யங்ஸ் நினைவுபடுத்தி சொல்கிறார்: “எங்களுடைய பெற்றோர் எங்களுக்காக நேரத்தையுடையவர்களாக இருந்தனர். நம்மில் அநேகருக்கு குழந்தை வளர்ப்பை முழுநேர வாழ்க்கைப் பணியாகக் கொண்டிருந்த தாய்மார்கள் இருந்தார்கள்.” ஆனால் இன்று, “அநேக பெண்கள் முழுநேரமாக வீட்டிலிருந்து தங்கள் பிள்ளைகளை வளர்க்கமுடிவதோ அல்லது அதை தெரிந்து கொள்ளவோ முடிவதில்லை. அவர்கள் வேலை செய்கிறார்கள், வாழ்க்கைப் பணியையும் குடும்பத்தையும் திறமையாக சமாளிக்க வேண்டும். நாளில், போதிய மணிநேரங்கள் இருப்பதில்லை; எதையாவது தியாகம் செய்ய வேண்டும். அநேகமாக தியாகம் செய்யப்படுவது ஒரு பெற்றோர் தன் பிள்ளைக்கு கொடுக்கக்கூடிய நேரமும் ஆதரவுமே. வாழ்க்கையில் மிக எளிதில் பாதிக்கப்படும் ஒரு காலத்தில், பருவ வயதினர், சரீரப்பிரகாரமான, மனதின் பிரகாரமான மற்றும் உணர்ச்சி சம்பந்தமான மாற்றங்களோடு சமாளிக்க தனிமையில் விடப்படுகின்றனர்.”—அழுத்தத்தைச் சமாளிக்க உங்கள் பருவவயதினருக்கு உதவுதல்.
விவாகரத்து (ஐக்கிய மாகாணங்களில் 50 சதவீத விவாகங்கள் விவாகரத்தில் முடிவடைகிறது), சட்டவிரோதமான பிறப்புகள், விவாகம் செய்து கொள்ளாவிட்டாலும் தம்பதிகள் சேர்ந்து வாழும் மனச்சாய்வு அதிகரித்து வருவது ஆகியவற்றினால் குடும்ப அமைப்புகள் குறிப்பிடத்தக்க வகையில் மாறுதலடைவது 1990-களில் தொடர்ந்து காணப்படும். ஏற்கெனவே ஐக்கிய மாகாணங்களில் 4 குடும்பங்களில் ஒன்று ஒற்றைப் பெற்றோரால் நடத்தப்படுகிறது. அதிகரித்துவரும் எண்ணிக்கையான குடும்பங்கள் மறுவிவாகத்தினால் உருவாக்கப்படும் மாற்றாங் குடும்பங்களாக இருக்கின்றன.
இப்படிப்பட்ட குடும்ப அமைப்புகளிலுள்ள பிள்ளைகள் உணர்ச்சிபூர்வமாக அல்லது மனோயியல்பில் சேதமடையும் அபாயம் இருக்கிறதா? உதாரணமாக, ஒற்றை–பெற்றோர் குடும்பங்களிலுள்ள பிள்ளைகள் கூட்டுக் குடும்பங்களில் வளர்க்கப்படும் பிள்ளைகளைக் காட்டிலும் தனிமை, துயரம் மற்றும் பாதுகாப்பின்மைக்கு ஆளாகக்கூடும் என்பதாக சிலர் உரிமைப் பாராட்டுகின்றனர். உண்மைதான், அநேக ஒற்றை–பெற்றோர் குடும்பங்களும் மாற்றாங் குடும்பங்களும் பிள்ளைகளுக்கு தீங்கிழைக்காதபடி செயல்படுவதில்லை. பிள்ளைகள் இரண்டு பெற்றோரால் வளர்க்கப்படவே கடவுள் நோக்கங் கொண்டிருந்தார் என்பதை வேதாகமம் தெளிவாக்குகிறது. (எபேசியர் 6:1, 2) இந்த இலட்சிய நிலை மாறுபடுகையில், அது கூடுதலான அழுத்தங்களையும் நெருக்கடிகளையும் கொண்டுவருவது நிச்சயம்.
வளர்ந்துவரும் அநேக தேசங்களில், குடும்ப வாழ்க்கையில் ஒரு புரட்சியும்கூட நிகழ்ந்து வருகிறது. அங்கே பரம்பரையான அமைப்பு, கூட்டு குடும்பமாக இருந்தது, குடும்பத்திலுள்ள பெரியவர்கள் அனைவரும், பிள்ளைகளை வளர்ப்பதில் ஒரு பங்கைக் கொண்டிருந்தனர். நகரமயமாக்கலும், தொழில் மயமாக்கலும் கூட்டு குடும்பத்தின் பிணைப்புகளையும்—இளைஞருக்கு தேவைப்படும் ஆதரவையும் வேகமாக துண்டித்துக் கொண்டு வருகின்றன.
ஓர் இளம் ஆப்பிரிக்க பெண்மணி எழுதுகிறாள்: “வளர்ந்துவருவது எதை அர்த்தப்படுத்துகிறது என்பதன் பேரில் புத்திமதி கூற எனக்கு அத்தைமார்களோ அல்லது வேறு ஓர் உறவினரோ இல்லை. பெற்றோர் இந்த விஷயம் பள்ளியில் கற்றுக்கொடுக்கப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்—பள்ளி இதைப் பெற்றோரிடம் விட்டுவிடுகிறது. பிள்ளைகள் சமுதாயத்தில் இணைந்த பகுதியாக இருக்கும் உணர்வு இனிமேலும் இல்லை.”a
பொருளாதார கவலைகள்
உலகின் மோசமாகி வரும் பொருளாதாரத்தைக் குறித்துக்கூட இளைஞர் அதிக கவலையுள்ளவர்களாக இருக்கின்றனர். உண்மையில், 5 இளைஞரில் 4 பேர், வளர்ந்து வரும் தேசங்களில் வாழ்ந்து வருபவர்களாக, வாழ்நாள் முழுவதும் வறுமையையும் வேலைகிடைக்கப்பெறாமல் போகும் சாத்தியத்தையும் எதிர்ப்படுகிறவர்களாக இருக்கிறார்கள். இந்தியாவில் வாழும் 17 வயது லுவ் சொல்கிறாள்: “எங்கள் தேசத்திலுள்ள இளைஞர் மத்தியில், தற்போது அதிகமாக வேலையில்லா திண்டாட்டம் இருந்து வருகிறது, ஆகவே இளைஞர் நோயுற்றும் மகிழ்ச்சியற்றவராகவும் ஆகி, தீய பழக்கங்களுக்கு பலியாகி, வீட்டைவிட்டு ஓடி அல்லது தற்கொலையும்கூட செய்து கொள்வது குறித்து ஆச்சரியப்படுவதற்கு ஏதாவது இருக்கிறதா?”
செல்வம் மிகுந்துள்ள மேற்கிலுள்ள இளைஞருக்கு அவர்களுக்குச் சொந்தமான பண கவலைகள் இருக்கின்றன. உதாரணமாக, பிள்ளைகள் இன்று பத்திரிகையில் அறிவிக்கப்பட்டிருந்த ஐ. மா. பருவ வயதினரின் சுற்றாய்வை சிந்தித்துப் பாருங்கள்: “அவர்களின் அக்கறையாயிருந்த திட்டவட்டமான பேச்சுப் பொருளைக் குறித்து கேட்கப்பட்டபோது, பருவ வயதினர் பணம் மற்றும் எதிர்காலம் சம்பந்தப்பட்ட விஷயங்களை விவரித்தார்கள்.” பருவ வயதினரின் முதல் பத்து கவலைகளில், “கல்லூரிக்கு பணம் செலுத்துவது,” “தேசம் [பொருளாதார] மந்தத்திற்குள் போய் கொண்டிருப்பது,” மற்றும் “போதிய அளவு சம்பாதிக்காமல் இருப்பது” இடம் பெற்றிருந்தது.
என்றபோதிலும் பணம் சம்பந்தமாக அனுகூலமான நிலையிலுள்ள இளைஞரும்கூட முடிவில் அவதிப்படுவர் என்று சில நிபுணர்கள் நம்புவது வேடிக்கையாக இருக்கிறது. நியூஸ்வீக் பத்திரிகை சொன்னது: “80-களுக்குள், [ஐ.மா.] உயர்நிலைப் பள்ளி மாணவர்களில் நான்கு பேரில் மூவர் வாரத்துக்கு சராசரி 18 மணிநேரங்கள் வேலைசெய்பவர்களாக, மாதத்துக்கு 5,200 ரூபாய்க்கு மேல் வீட்டுக்கு எடுத்துச் செல்பவர்களாக இருந்தனர்”—ஒருவேளை அவர்களுடைய பெற்றோருக்கு இருந்ததைவிட அதிகமாக கைச்செலவுக்குப் பணம்! இந்தச் “சம்பாத்தியங்கள் உடனடியாக கார்கள், உடைகள், ஸ்டீரியோக்கள் மற்றும் சுவாரசியமான வளரிளமைப் பருவத்தின் வாழ்க்கைக்குரிய மற்ற கலைப்பொருட்களுக்காக செலவழிக்கப்பட்டுவிடுகின்றன.”
இப்படிப்பட்ட இளைஞர் “தனிப்பட்ட பொறுப்புணர்ச்சியையும் சாதனை குறிக்கோள்களையும் வளர்த்துக்கொண்டாலும் கொள்ளாவிட்டாலும், வளமான வாழ்க்கை தங்கள் விருப்பப்படி எப்பொழுதும் கிடைக்கக்கூடியதாக இருக்கும் என்ற எதிர்பார்ப்போடு வளர்ந்து வருகிறார்கள்” என்பதாக எழுத்தாளர் ப்ரூஸ் பால்ட்வின் குறிப்பிடுகிறார். ஆனால், “வீட்டை விட்டு வெளியேறுகையில், அதிர்ச்சியூட்டும் விழிப்புணர்வை அவர்கள் அனுபவிக்கிறார்கள். செயற்கையான வீட்டின் சூழ்நிலையானது சந்தைகூடத்தின் மெய்யான எதிர்பார்ப்புகளிலிருந்தும் பெரியவர்களாக முதிர்ச்சியாக செயல்படுவதன் தேவைகளிலிருந்தும் மிகவும் தொலைவிலிருக்கக்கூடும், அவர்கள் கலாச்சார அதிர்ச்சிக்கு ஒத்த எதையோ ஒன்றை அனுபவிக்கக்கூடும்.”
மாறிவிட்ட ஒழுக்கநெறிகளும் மதிப்பீடுகளும்
ஒழுக்கங்களிலும் மற்ற மதிப்பீடுகளிலும் ஏற்பட்டிருக்கும் கிளர்ச்சியூட்டும் மாற்றமும்கூட இளைஞர் மத்தியில் குழப்பத்துக்கு காரணமாயிருக்கிறது. “பாலுறவு . . . என் பாட்டியின் இளமைப் பருவத்தில் கேட்கப்படாத வார்த்தையாக இருந்தது” என்பதாக இலங்கையிலுள்ள ரமனி என்ற இளம்பெண் சொல்கிறாள். “விவாகத்தில் பாலுறவு பற்றி குடும்பத்தில் அல்லது மருத்துவரோடுகூட கலந்துபேசப்படவில்லை. விவாகத்துக்குப் புறம்பான பாலுறவு இருக்கவே இல்லை.” என்றபோதிலும், பழைய சமூக கட்டுகள் அனைத்தும் மறைந்துவிட்டிருக்கின்றன. “பருவ வயது பாலுறவு பெரும்பாலும் வாழ்க்கை முறையாகவே ஆகிவிட்டிருக்கிறது” என்று அவள் தெரிவிக்கிறாள்.
ஐக்கிய மாகாணங்களில், 510 உயர்நிலைப் பள்ளி பிள்ளைகளை வைத்து சுற்றாய்வு ஒன்று நடத்திய போது, அவர்களுடைய இரண்டாவது கவலை, “எய்ட்ஸ் நோய் தங்களுக்கு வரக்கூடும்” என்பதாக இருந்தது குறித்து ஆச்சரிப்படுவதற்கில்லை! ஆனால் இப்பொழுது “புதிய ஒழுக்க” கதவு விரிவாக திறக்கப்பட்டிருக்க, ஒரு துணையோடு மட்டும் பாலுறவுகொள்ள பழகிக் கொள்வதன் மூலம் அதை மூடுவது பற்றிய எந்தப் பேச்சு வார்த்தையையும் பொறுப்புணர்ச்சியோடு எடுத்துக்கொள்ள வெகுசிலரே மனமுள்ளவர்களாக இருக்கிறார்கள்—விவாகம் வரை காத்திருப்பதன் மூலம் அதைச் செய்வதைக் குறித்து கேட்கவே வேண்டியதில்லை. ஒரு ஃபிரெஞ்சு இளைஞன் கேட்டான்: “எங்களுடைய வயதில், எங்கள் வாழ்க்கை முழுவதும் உண்மையாக இருப்பதற்கு உறுதிக்கொள்ள முடியுமா?” ஆக, எய்ட்ஸ்-ம் பாலுறவினால் கடத்தப்படும் மற்ற நோய்களும் தொடர்ந்து அநேக இளைஞரின் வாழ்க்கைக்கும் உடல் ஆரோக்கியத்துக்கும் அச்சுறுத்தலாகவே இருந்து கொண்டிருக்கும்.
என்ன விதமான எதிர்காலம்?
இளைஞரை ஓயாது தொல்லைப்படுத்தும் மற்றொரு கவலை இருக்கிறது. ஓசோன் குறைந்த வளிமண்டலம், உலகளாவிய கண்ணாடி வீடு விளைவின் கீழ் அதிகமான உஷ்ணமுள்ள, வளமை ததும்பும் காடுகள் இழக்கப்பட்ட, சுவாசிக்கவும் குடிக்கவும் தகுதியற்ற காற்றையும் தண்ணீரையும் கொண்ட பாழாக்கப்பட்ட பூமியை சுதந்தரிக்கும் எதிர்பார்ப்பு அநேக இளைஞரை கவலைக்கொள்ள செய்கிறது. தற்போது குறைந்து வந்தாலும், அணுயுத்த அச்சுறுத்தலானது மனிதவர்க்கத்துக்கு எதிர்காலம் ஒன்று இருக்குமா என்பதாக அநேகரை யோசிக்கச் செய்கிறது!
அப்படியென்றால் இன்று இளைஞர் மிகப்பெரிய சவால்களை எதிர்ப்படுகிறார்கள் என்பது தெளிவாக இருக்கிறது. உதவியும் அறிவுரையும் வழிநடத்துதலும் இல்லாவிட்டால் அவர்களுடைய தற்கால மற்றும் எதிர்கால மகிழ்ச்சி கவலைக்குரிய விதத்தில் ஆபத்திலிருக்கிறது. எதிர்காலத்துக்கு எந்த நம்பிக்கையுமின்றி, எந்தப் பாதுகாப்புணர்வையும் பெறமுடியாது. அதிர்ஷ்டவசமாக இன்றைய இளைஞருக்கு உதவி உடனடியாக கிடைக்கக்கூடியதாக இருக்கிறது. (g90 9/8)
[அடிக்குறிப்புகள்]
a வளர்ந்துவரும் தேசங்களிலுள்ள இளைஞரின் இந்தக் குறிப்பும் மற்றவையும் உலக சுகாதாரம் பத்திரிகையின் மார்ச் 1989 இதழிலிருந்து எடுக்கப்பட்டிருக்கின்றன.
[பக்கம் 6-ன் படம்]
விவாகரத்து மற்றும் பிரிந்து வாழ்தல் மூலமாக குடும்பங்களில் ஏற்பட்டிருக்கும் முறிவு அநேக இளைஞரை தேவையான பெற்றோரின் ஆதரவை இழக்கச் செய்திருக்கிறது