மனித அரசாட்சி தராசுகளில் நிறுக்கப்பட்டுள்ளது
பகுதி 6 கறுப்பு சட்டைகளும் ஸ்வஸ்திக்காக்களும்
ஃபாசிசம்: சர்வாதிகார அரசாங்கம். பொருளாதாரம், சமூக ஆட்சிமுறை ஆகியவற்றை அரசு கட்டுப்பாடு செய்கிறது. சண்டை வெறி கொண்ட தேசப்பற்றை வலியுறுத்தும் கொள்கை; நாசிசம்: ஹிட்லரின் தலைமையின் கீழ் தேசிய சோஷியலிஸ்ட் ஜெர்மன் தொழிலாளர் கட்சி கடைப்பிடித்து வந்த ஃபாசிசம்.
“ஃபாசிசம் என்ற வார்த்தை பொதுவாக கறுப்பு-சட்டை அணிந்திருந்த இத்தாலிய இராணுவ படைவீரர் கூட்டத்தையும், ஸ்வஸ்திக்கா-சின்னமும், பழுப்பு நிற சீருடையும் அணிந்திருந்த வன்முறையான ஜெர்மன் இராணுவ படைவீரர்களையும் மனக்கண் முன் கொண்டுவருகிறது. ஆனால் மற்ற தேசங்களும் கூட ஃபாசிசத்தோடு தங்கள் அனுபவங்களைக் கொண்டிருந்தன.
ஹங்கேரி, ரோமேனியா, ஜப்பான் ஆகிய இடங்களில் 1930-களின்போது ஃபாசிசம் முக்கியத்துவம் பெற்றது. ஃபிரான்கோவின் சர்வாதிகார அரசாங்கம் (1939-75) உண்மையிலேயே ஃபாசிச தன்மை வாய்ந்ததாக இருந்தது என்று பெரும்பாலான சரித்திர ஆசிரியர்கள் கருதுவதில்லை. என்றாலும் ஸ்பானிய உள்நாட்டுப் போரின்போது, ஃபாசிச ஆதரவு ஸ்பெய்ன் தேசத்தை அடக்கி ஆட்சி செய்வதற்கு ஃபிரான்சிஸ்கோ ஃபிரான்கோவுக்கு உதவி செய்தது. மறுபட்சத்தில், ஜூஅன் டி பெரன் என்பவரால் நிறுவப்பட்ட அர்ஜன்டினா சர்வாதிகார அரசாங்கம் (1943-55) அவ்வாறு ஃபாசிச தன்மையுள்ளதாக இருந்தது.
அரசை வணங்குதல்
ஃபாசியோ என்ற இத்தாலிய வார்த்தையிலிருந்து “ஃபாசிசம்” வருகிறது. அது பண்டைய ரோம அதிகாரத்தின் அடையாளச் சின்னத்தைக் குறிப்பிடுகிறது. லத்தீன் மொழியில் ஃபாசஸ் என்று அழைக்கப்படுகிறது. அது கோல்கள் அடங்கிய குவியலாக இருந்தது. அதிலிருந்து கோடரியின் முனை நீட்டிக்கொண்டிருந்தது. அரசின் உயர்வான அதிகாரத்தின் கீழ் மக்களின் ஒற்றுமையை குறிக்கும் பொருத்தமான அடையாளமாக அது இருந்தது.
ஃபாசிசத்தின் சில வேர்கள் நிக்கோலோ மக்கியவெல்லி என்பவருடைய காலத்துக்குச் சென்றாலும், அவர் பிறந்து 450 வருடங்களுக்குப் பின்பு 1919-ல் பெனிட்டோ முசோலினி முதல் முறையாக அந்த வார்த்தையை உபயோகித்தார். ஆட்சியாதிக்கக் கொள்கையுடைய ஆட்சியாளரால் மட்டுமே, அறிவுத்திறனோடு கொடுமையாக அதிகாரத்தை பயன்படுத்தும் நபரால் மட்டுமே, அவருடைய நாளில் இருந்த அரசியல் ஊழலை அடக்க முடியும் என்று மக்கியவெல்லி சொன்னார்.
ஒரு ஃபாசிச அரசாங்கம் திறம்பட்டதாக இருக்க வேண்டுமென்றால், அதற்கு அப்படிப்பட்ட ஒரு பலமான, சந்தர்ப்பவாத, வியக்கத்தக்க ஆற்றலை உடைய தலைவர் தேவையாயிருக்கிறது. பொருத்தமாகவே, முசோலினியும் ஹிட்லரும் வெறுமென “தலைவர்” என அறியப்பட்டிருந்தனர்—இல் தூசே மற்றும் டெர் ஃபூரர்.
ஃபாசிசம் மற்ற எல்லா அதிகாரத்துக்கும் மேலாக அரசை உயர்த்துகிறது. மதம் மற்றும் சமுதாயம் ஆகிய இரண்டிற்கும் மேலாக அரசை உயர்த்துகிறது. 16-ம் நூற்றாண்டு ஃபிரெஞ்சு சட்ட வல்லுநர் ஜீன் பாடின், 17-ம் நூற்றாண்டு ஆங்கில தத்துவஞானி தாமஸ் ஹாப்ஸ், 18-ம், 19-ம் நூற்றாண்டு ஜெர்மன் தத்துவ ஞானிகளான ஜோஹன் காட்லியப் ஃபிக்ட், ஜார்ஜ் வில்ஹெம் ஃபிரட்ரிக் ஹெகல், ஹீன்ரிச் வான் ட்ரீட்ஷெக் ஆகிய அனைவரும் அரசை பெருமைப்படுத்தினார்கள். அரசு முதன்மை வாய்ந்த ஸ்தானத்தை வகிக்கிறது என்றும், அதனுடைய உண்மையான ஆதரவாளராக இருப்பதுதான் தனிப்பட்ட நபரின் உயர்வான கடமை என்றும் ஹெகல் கற்பித்தார்.
எல்லா அரசாங்கங்களும் இயல்பாகவே அதிகாரத்தை பயன்படுத்த வேண்டும். ஆனால் ஃபாசிச அரசுகள் அதை உச்ச அளவு வரை பயன்படுத்த அமைக்கப்பட்டிருக்கின்றன. குருட்டுத்தனமான கீழ்ப்படிதலை வற்புறுத்திக் கேட்கின்றன. அரசு அடிமைகளைப் போல் மனிதர்களை கருதிய ட்ரீட்ஷெக் இவ்வாறு சொன்னார்: “நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதைப் பற்றி கவலையில்லை. நீங்கள் கீழ்ப்படிவதே முக்கியமானது.” ஃபிரெஞ்சு புரட்சியின்போது கேட்கப்பட்ட “விடுதலை, சமத்துவம், தோழமை” என்ற முழக்கத்துக்கு பதிலாக “நம்புவது, கீழ்ப்படிவது, சண்டை போடுவது” என்ற இத்தாலிய கோஷத்தை ஃபாசிசம் மாற்றி வைத்தது.
ஃபாசிசம் போரை மேன்மைப்படுத்துகிறது
சண்டை போடுவதற்கா? ஆம்! “எல்லா மனித சக்திகளையும் உச்ச அளவு விறைப்பு நிலைக்கு போர் மட்டுமே கொண்டு செல்கிறது. அதை எதிர்ப்பட தைரியமுள்ள மக்களின் மீது உயர்குடி மக்கள் என்ற முத்திரையை வைக்கிறது” என்று முசோலினி ஒரு சமயம் சொன்னார். “மகப்பேறு ஒரு பெண்ணுக்கு எப்படியோ அப்படியே யுத்தம் மனிதனுக்கு இருக்கிறது” என்றும் அவர் சொன்னார். நிரந்தரமான சமாதானம் “சோர்வூட்டுவதாகவும் மனிதனின் எல்லா அடிப்படையான நற்பண்புகளின் மறுப்புரையாகவும் இருக்கிறது” என்று அவர் கூறினார். இப்படிப்பட்ட வார்த்தைகளை சொல்வதன் மூலம் முசோலினி ட்ரீட்ஷெக்கின் கருத்துக்களை வெறுமென எடுத்துக் காட்டினார். போர் தேவையான ஒன்று என்றும், உலகத்திலிருந்து அதை நீக்குவது அதிக ஒழுக்கங்கெட்டதாக மட்டும் இல்லாமல் “மனித ஆத்துமாவின் சிறப்பு வாய்ந்த, இன்றியமையாத அநேக சக்திகள் சத்தின்றித் தேய்ந்து போவதை உட்படுத்தும்” என்று அவர் வாதிட்டார்.
போர் மற்றும் சர்வாதிகார பின்னணி, நவீனகால ஃபாசிசம் ஃபிரான்சு தேசத்து முதலாம் நெப்போலியன் காலத்தில் ஆரம்பமானது என்று அநேக சரித்திர ஆசிரியர்கள் கண்டுபிடித்திருக்கின்றனர் என்பதை அறிந்துகொள்வது நமக்கு ஆச்சரியமாய் இருக்க வேண்டியதில்லை. ஆரம்ப 1800-களின் போது சர்வாதிகாரியாக இருந்த அவர் ஃபாசிசவாதியாக இல்லை. என்றாலும், இரகசிய-போலீஸ் அமைப்பு, திறமையுடன் பிரசாரத்தை உபயோகித்தல், செய்தித் துறையை கட்டுப்படுத்துவதற்கு தடுப்புக்கள் போன்ற அவருடைய அநேக கொள்கைகள் ஃபாசிசத்தை கடைப்பிடித்தவர்களால் பின்னர் ஏற்றுக்கொள்ளப்பட்டன. ஃபிரான்சின் மகிமையை மீண்டும் நிலைநாட்டுவதற்கு அவருக்கு இருந்த உறுதி, தேசிய மேன்மையின் பேரில் ஃபாசிச தலைவர்களுக்கு இருந்த ஈடுபாட்டுக்கு ஒப்பானதாக இருந்தது.
இத்தாலியில் இருந்த ஃபாசிசவாதிகள் 1922-க்குள் முசோலினியை பிரதமராக பதவியில் அமர்த்தும் அளவுக்கு வல்லமையுள்ளவர்களாய் இருந்தனர். அந்த ஸ்தானத்தை அவர் உடனடியாக சர்வாதிகாரியாக ஆவதற்கு வழியாக உபயோகித்தார். சம்பளங்கள், மணிநேரங்கள், உற்பத்தி இலக்குகள் ஆகியவற்றைக் குறித்ததில் தனியாருக்கு சொந்தமான தொழிற்சாலைகள் அரசாங்கத்தின் கண்டிப்பான கட்டுப்பாட்டுக்கு கீழ்ப்படுத்தப்பட்டன. உண்மையில், தனியார் நிறுவனம் அரசாங்க அக்கறைகளை சேவிக்கும் அளவுக்குதான் உற்சாகப்படுத்தப்பட்டது. ஃபாசிச கட்சியைத் தவிர மற்ற அரசியல் கட்சிகள் தடை செய்யப்பட்டன. தொழிற்சங்கங்கள் தடை செய்யப்பட்டன. அரசாங்கம் செய்தித் துறையை திறமையோடு கட்டுப்படுத்தியது. தடைகள் விதிப்பதன் மூலம் எதிராளிகளை அடக்கியது. இளைஞர் கொள்கையை முற்றிலும் ஏற்றுக் கோட்பாட்டைத் தனதாக ஆக்கிக்கொள்வதற்கு விசேஷ கவனம் செலுத்தப்பட்டது. மக்களின் தனியுரிமை வெகுவாக கட்டுப்படுத்தப்பட்டது.
ஃபாசிசம், ஜெர்மன் பாணியில்
“இத்தாலிய ஃபாசிசமும் ஜெர்மன் நாசிசமும் அதிகாரத்தை பெறுவதற்கு கடைப்பிடித்த வழிகளில் தற்செயல் பொருத்தம் இருப்பினும், அவை உணர்ச்சி இயல்புகளிலும், எதிர்காலத்தைப் பற்றிய காட்சியிலும் குறிப்பிடத்தக்க வகையில் மாறுபட்டதாக இருந்தன என்று A. கேசல்ஸ் எழுதிய ஃபாசிசம் என்ற புத்தகம் கூறுகிறது.
முன்குறிப்பிட்ட ஃபாசிச கோட்பாட்டு முன்னோடிகளாக சேவித்த ஜெர்மன் தத்துவஞானிகள் மட்டுமல்லாமல், 19-ம் நூற்றாண்டு ஜெர்மன் தத்துவஞானி ஃபிரட்ரிக் நீட்ஷெக் போன்றவர்கள் முற்றிலும் ஜெர்மன் பாணியிலான ஃபாசிச வகையை உருவாக்க உதவினர். நீட்ஷெக் ஒரு ஃபாசிசவாதியாக இல்லையென்றாலும், ஆட்சி செய்வதற்கென ஓர் உயர்மட்டக் குழுவை, மிக மேன்மையான இனத்தவரை அவர் அழைத்தார். என்றபோதிலும், அவ்வாறு செய்வதில் ஒரு குறிப்பிட்ட இனத்தவரையோ அல்லது தேசத்தவரையோ அவர் மனதில் கொண்டில்லை. மற்ற எல்லாரைக் காட்டிலும் ஜெர்மானியரை கடைசியாக அவர் மனதில் கொண்டிருந்தார். ஏனென்றால் அவர்கள் மீது அவருக்கு தனிப்பட்ட விருப்பம் இல்லை. ஆனால் முற்றிலும் ஜெர்மன் பாணியிலானவை என்று தேசிய சோஷியலிஸ்ட் கருத்தியல் கொள்கையாளர்கள் கருதியவற்றிற்கு மிக இணக்கமாக அவருடைய கருத்துக்களில் சில இருந்தன. ஆகையால் இப்படிப்பட்ட கருத்துக்கள் சரியென ஏற்றுக்கொள்ளப்பட்டன. ஆனால் நாசிச கோட்பாட்டோடு இணங்கிப் போகாத மற்றவைகள் நீக்கப்பட்டன.
ரிச்சர்டு வாக்னர் என்ற ஜெர்மன் இசை இயற்றுபவர் மூலம் ஹிட்லர் அதிக பலமாக உந்துவிக்கப்பட்டார். உலகில் பெரும் பணி ஒன்றை ஜெர்மனி செய்ய இருப்பதாக தேசாபிமானமும் நாட்டுப்பற்றும் மிக்கவராக இருந்த வாக்னர் எண்ணினார். “ஹிட்லருக்கும், நாசிச கருத்தியல் கொள்கையாளர்களுக்கும் வாக்னர் பரிபூரண தலைவராக இருந்தார்” என்று என்ஸைக்ளோபீடியா ஆஃப் தி தர்டு ரைச்சு (Encyclopedia of the Third Reich) சொல்கிறது. “ஜெர்மனியின் மேன்மையை இசை அமைப்பாளர் சுருக்கமாக கூறினார். ஜெர்மன் நாட்டுப்பற்றை வாக்னரின் இசை சரியெனக் காட்டியது என்பது ஹிட்லரின் எண்ணம்.”
ஆசிரியர் வில்லியம் L. ஷிரர் இவ்வாறு கூடுதலாக சொல்கிறார்: “அவருடைய [வாக்னருடைய] அரசியல் எழுத்துக்கள் அல்ல, ஆனால் அவருடைய மேம்பட்ட இசை நாடகங்கள், பழங்கால ஜெர்மன் உலகோடு மிகத் தெளிவாக நினைவுக்கு கொண்டு வரும் அதன் வீர புராணக்கதைகள், அந்நிய தெய்வங்களோடும் வீரர்களோடும் அதன் சண்டை, அதனுடைய பேய்கள், வேதாளங்கள், அதன் இரத்த பகைகள், பழம் குல மரபு விதிகள், விதியைப் பற்றி அதனுடைய உணர்வு, அன்பு, வாழ்க்கை ஆகியவற்றின் நேர்த்தி, மரணத்தின் மேன்மை ஆகியவை நவீன ஜெர்மனியின் புராணக்கதையை ஏவியது. அதற்கு அது ஜெர்மானிய உலக நோக்குநிலையை (Weltanschauung) கொடுத்தது. அதை ஹிட்லரும், நாசிசவாதிகளும் ஏதோவொரு காரணங்கூறி தங்களுடையதாக ஆக்கிக்கொண்டனர்.
நீட்ஷெக், வாக்னர் என்பவர்களுடைய சிந்தனைகள், ஃபிரெஞ்சு தேச தூதுவரும், மனித பண்பாட்டாளருமான காம்டி ஜோசஃப் ஆர்த்தர் டி கோபினோ என்பவரால் உருவாக்கப்பட்டது. மனித இனங்களின் உயர்வு தாழ்வு நிலையை பற்றி அவர் 1853-லிருந்து 1855-க்கு இடையே இருந்த ஆண்டுகளில் கட்டுரை எழுதினார். நாகரீகங்களின் விதியை பலவகை இனங்கள் நிர்ணயிக்கின்றன என்று அவர் விவாதித்தார். ஆரிய சமுதாயங்களுடைய இனத்தின் தன்மையை கலப்படம் செய்வது இறுதியில் அவர்களுடைய வீழ்ச்சிக்கே வழிநடத்தும் என்று அவர் எச்சரித்தார்.
இப்படிப்பட்ட கருத்துக்களிலிருந்து உருவாகிய இனக் கோட்பாடும், செமிட்டிக் இனத்துக்கு எதிரான கோட்பாடும் ஜெர்மன் பாணியிலான ஃபாசிசத்தின் மேலோங்கிய அம்சங்களாயின. இரண்டு கொள்கைகளும் இத்தாலியில் குறைந்த முக்கியத்துவமுடையதாய் இருந்தன. உண்மையில், இத்தாலியில் செமிட்டிக் இனத்துக்கு எதிராக இருந்த அத்தாட்சிகள், ஃபாசிசத்துக்குப் பின்னால் ஆதிக்கம் செலுத்தும் சக்தியாக முசோலினிக்குப் பதிலாக ஹிட்லர் இருந்தார் என்பதைக் குறிப்பிடுவதாக அநேக இத்தாலியர்கள் கருதினார்கள். உண்மையிலேயே, காலம் கடந்தபோது இத்தாலிய ஃபாசிச கொள்கைகளின் மீது இருந்த ஹிட்லரின் செல்வாக்கு வளர்ந்தது.
தேசிய முன்னேற்றத்தை முயற்சி செய்து அடைவதில் இத்தாலிய ஃபாசிசமும், ஜெர்மன் ஃபாசிசமும் நேர் எதிரான திசைகளில் பார்த்துக் கொண்டிருந்தன. “பண்டைய ரோமர்களின் செயல்களை முன்மாதிரியாகக் கொள்ளும்படி முசோலினி தன் நாட்டு மக்களை தூண்டினாலும், நெடுங்காலங் கடந்த டியூட்டானிக் இராட்சதர்கள் செய்தது போல் செய்யும்படி மட்டுமல்லாமல், இருபதாம் நூற்றாண்டில் மறுரூபமாகவந்த அதே கோத்திர வீரர்களாகவும் இருக்கும்படி நாசி புரட்சியின் ஆவி ஜெர்மானியர்களை தூண்டியது” என்று நூலாசிரியர் A. கேசல்ஸ் விளக்குகிறார். வேறு வார்த்தைகளில் சொன்னால், இத்தாலிய ஃபாசிசம் தொழில் துறையில் வளர்ச்சி நிறையாத நாடாக இருந்த இத்தாலியை இருபதாம் நூற்றாண்டுக்குள் இழுப்பதன் மூலம் கடந்த கால மகிமையை மீண்டும் அடைய நாடியது. மறுபட்சத்தில், ஜெர்மனி பழங்காலத்துக்கு பின்வாங்கிச் செல்வதன் மூலம் முந்தைய மகிமையை மீண்டும் அடைய நாடியது.
எது அதை சாத்தியமாக்கிற்று
பெரும்பாலான தேசங்களில், ஒரு தேசிய சேதம், பொருளாதார வீழ்ச்சி, அல்லது இராணுவ தோல்வி போன்றவற்றிற்கு பிறகு ஃபாசிசவாதிகள் அதிகாரத்துக்கு வந்திருக்கின்றனர். இது இத்தாலியிலும் ஜெர்மனியிலும் உண்மையாக இருந்தது. முதல் உலக யுத்தத்தின் போது ஒன்றையொன்று எதிர்க்கும் பக்கங்களில் இருந்தபோதிலும், அந்தப் போராட்டத்திலிருந்து அவைகள் இரண்டும் அதிக பெலவீனமாக வெளி வந்தன. தேசியவாதிகளின் அதிருப்தி, பொருளாதார சீர்க்குலைவு, இனவகுப்புகளின் போராட்டம் தீவிரமாகுதல் போன்றவை இரண்டு தேசங்களையும் தொல்லைப்படுத்தியது. கட்டுப்படுத்த முடியாத பணவீக்கமும், வேலையின்மை அதிகரித்தலும் ஜெர்மனியை பாதித்தது. ஜனநாயக நியமமும் பெலவீனமாக இருந்தது. பிரஷ்ஷியாவின் ஆட்சி ஆதிக்கக் கொள்கையின் பாரம்பரியத்தாலும், இராணுவத்தாலும் தொடர்ந்து இடையூறுக்குள் இருந்தது. சோவியத் போல்ஷ்விக் கொள்கையைப் பற்றிய கோர பயம் எல்லா இடங்களிலும் தோன்றியது.
சார்ல்ஸ் டார்வினின் பரிணாமக் கருத்தும், இயற்கையின் இயல்தேர்வு முறையும் ஃபாசிசம் வளருவதற்கு மற்றொரு குறிப்பிடத்தக்க காரணமாய் இருந்தது. “முசோலினியாலும் ஹிட்லராலும் தெரிவிக்கப்பட்டிருக்கும் ஃபாசிசவாதிகளின் கருத்துப்பாங்குகளில் சமூக டார்வினிஸத்தின் மறு எழுச்சியைப்” பற்றி தி கொலம்பியா ஹிஸ்ட்ரி ஆஃப் தி உவோர்ல்ட் (The Columbia History of the World) என்ற புத்தகம் பேசுகிறது.
இந்த மதிப்பிடுதலை என்ஸைக்ளோபீடியா ஆஃப் தி தர்டு ரைச் (Encyclopedia of the Third Reich) ஒத்துக்கொள்கிறது. “இன அழிவு என்ற ஹிட்லரின் கொள்கைக்குப் பின்னால் இருப்பது” சமூக டார்வினிஸம் என்று அது விளக்குகிறது. டார்வினின் பரிணாம போதகங்களுக்கு இசைவாக, “பலவீனமானதை பாதுகாப்பதற்கு தங்கள் சக்திகளை உபயோகிப்பதற்கு பதிலாக, பலமான ஆரோக்கியமுள்ளவைகளின் சார்பாக தாழ்ந்த நிலையில் உள்ளோரை நவீன அரசு ஒதுக்கி வைத்து விட வேண்டும் என்று ஜெர்மன் கருத்தியல் கொள்கையாளர்கள் வாதாடினர்.” வல்லனவற்றின் வாழ்வுவள போராட்டத்தில் போர் இயல்பானதே என்று அவர்கள் வாதாடினர். “வெற்றி பலமுள்ளவர்களுக்கு செல்கிறது, பலவீனர் நீக்கப்பட வேண்டும்.”
பாடம் கற்றுக்கொள்ளப்பட்டுவிட்டதா?
கறுப்பு-சட்டைகள் அணிந்திருந்த இத்தாலிய இராணுவ படைவீரர்களின் காலமும், ஸ்வஸ்திக்கா-சின்னமும் பழுப்பு நிற சீருடையும் அணிந்திருந்த ஜெர்மன் இராணுவ படைவீரர்களின் காலமும் முடிந்துவிட்டன. என்றபோதிலும், 1990-ம் ஆண்டிலும் கூட ஃபாசிசத்தின் தடங்கள் தொடர்ந்து நீடித்திருக்கின்றன. ஒவ்வொரு மேற்கு ஐரோப்பிய தேசத்திலும் “மறைவான இன உணர்ச்சி மனப்பான்மையும், தேசிய மற்றும் ஆட்சியாதிக்க மதிப்பீடுகளுக்கான வேண்டுகோளும் ஆச்சரியமளிக்கும் ஆதரவை இன்னும் திரட்ட முடியும் என்று வலதுசாரிகளின் சக்திகள் மறுபடியும் நிரூபிக்கின்றன.” ஃபிரான்சில் இருக்கும் ஜீன்-மாரி லி பென் தேசிய முன்னணி என்பது இப்படிப்பட்ட இயக்கங்களில் அதிக ஆற்றல் வாய்ந்த ஓர் இயக்கமாகும். “தேசிய சோஷியலிசத்தின் செய்தியே” அதனுடைய அடிப்படை செய்தியாக இருக்கிறது.
ஃபாசிச மறுமலர்ச்சி இயக்கங்களில் நம்பிக்கை வைப்பது நியாயமானதா? ஃபாசிசத்தின் வேர்கள்—டார்வினின் பரிணாமம், இன உணர்ச்சி மனப்பான்மை, போர் மனப்பான்மை, தேசிய பற்று—நல்ல அரசாங்கத்தை அமைப்பதற்கு ஒரு பூரணமான அஸ்திபாரமாக இருக்குமா? அல்லது மற்ற எல்லா விதமான மனித ஆட்சிகளைப் போன்று ஃபாசிசம் தராசுகளில் நிறுக்கப்பட்டு தகுதியில் குறைவுபடுவதாய் இருக்கிறது என்று நீங்கள் ஒப்புக் கொள்வீர்களா? (g90 10⁄22)
[பக்கம் 26-ன் பெட்டி]
ஃபாசிசம் அதன் அஸ்திபாரம் பிழையில்லாததாய் இருக்கிறதா?
டார்வீனிய பரிணாமம்: “அநேக விஞ்ஞானிகள், குறிப்பாக எண்ணிக்கையில் அதிகரித்து வரும் பரிணாமக் கோட்பாட்டாளர்கள் . . . டார்வினின் பரிணாமக் கோட்பாடு உண்மையான, விஞ்ஞானப்பூர்வமான கோட்பாடே இல்லை என்று விவாதிக்கின்றனர்.”—நியு ஸைன்டிஸ்ட் (New Scientist), ஜூன் 25, 1981, மைக்கல் ரூஸ்.
இனக் கோட்பாடு: “மனித இனங்களுக்கும் ஜனங்களுக்கும் இடையே உள்ள பெரும் பிளவு மனநிலை சார்ந்ததாகவும், மனித சமுதாயத்தைச் சார்ந்ததாகவும் இருக்கிறது; அது பரம்பரை பண்பியல்பின் காரணமாக அல்ல!”—ஜீன்ஸ் அன்டு தி மேன் (Genes and the Man), பென்ட்லே கிலாஸ், பேராசிரியர்.
“எல்லா இனங்களையும் சேர்ந்த மனிதர்கள் . . . ஒரே முதல் மனிதனிலிருந்து தோன்றியவர்கள்.”—ஹெரிடிட்டி அன்டு ஹூமன்ஸ் (Heredity and Humans), அம்ராம் ஷீன்ஃபடு, விஞ்ஞான எழுத்தாளர்.
போர்க் கோட்பாடு: “இந்த மடமையான செயலின் மீது ஏராளமாக செலவிடப்பட்டிருக்கும் கூர்மதி, உழைப்பு, செல்வம் ஆகியவை உண்மையிலேயே மனதுக்கு அதிர்ச்சியூட்டுகிறது. இனிமேலும் தேசங்கள் போரை கற்காவிட்டால், மனிதவர்க்கம் செய்ய முடியாது என்ற எதுவும் இருக்காது.”—அமெரிக்க நூலாசிரியரும் புலிட்ஸர் பரிசைப் பெற்றவருமான ஹெர்மன் வாக்.
நாட்டுப்பற்று: “நாட்டுப்பற்று மனிதவர்க்கத்தை பரஸ்பர சகிப்புத்தன்மையற்ற தொகுதிகளாக பிரிக்கிறது. இதன் விளைவாக ஜனங்கள் அமெரிக்கர், ரஷ்யர், சீனர், எகிப்தியர் அல்லது பெருவியர் தான் முதலில் இருப்பதாக நினைக்கின்றனர்—மானிடரைப் பற்றி நினைத்தார்களேயானால்—அவர்களை இரண்டாந்தர ஆட்களாகத் தான் நினைக்கின்றனர்.”—கான்ஃப்லிக்ட் அன்டு கொஆபரேஷன் அமங் நேஷன்ஸ் (Conflict and Cooperation Among Nations), இவோ டுச்சாசெக்.
“இன்று நாம் எதிர்ப்படும் பிரச்னைகளில் பெரும்பாலானவை தவறான மனநிலைகளின் காரணமாக அல்லது விளைவாக இருக்கின்றன—அவற்றில் சில உணர்வின்றி ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. குறுகிய நாட்டுப்பற்று என்ற பொதுக்கருத்து—‘சரியோ அல்லது தவறோ, என்னுடைய தேசம்’—என்பது இவைகளில் ஒன்று.”—ஐ.நா.-வின் முன்னாள் தலைமை செயலாளர், யு தான்ட்.
[பக்கம் 25-ன் படங்கள்]
ஸ்வஸ்திக்கா, “கடவுள் எங்களோடு இருக்கிறார்” என்ற வாசகம் போன்ற பண்டைய மத அடையாளச் சின்னங்கள் ஹிட்லரின் ஆட்சியை பாதுகாக்கவில்லை
ஃபாசிசத்துக்கான முசோலினியின் அடையாளச் சின்னமான ஃபாசஸ் சில ஐ.மா. நாணயங்களில் காணப்படுகிறது