‘பிள்ளைகள் மிகுந்த மதிப்புள்ளவர்கள் ஆனால் மகன்கள் இன்றியமையாதவர்கள்’
மக்கள்தொகையை 85 கோடிக்கு அதிகமாகவும் பிறப்பு வீதத்தை 1,000-ற்கு 31 என்றும் கொண்டிருக்கும் இந்தியா, ஒவ்வொரு வருடமும் 2.6 கோடி குழந்தைகளின் பிறப்பைக் காண்கிறது; இது கானடாவின் மக்கள்தொகைக்குச் சமமாய் இருக்கிறது. அரசாங்கத்தின் மிக அவசரமான திட்டங்களில் ஒன்று அதனுடைய மக்கள்தொகையின் விரைவான விஸ்தரிப்பைக் கட்டுப்படுத்துவதாகும் என்பதில் ஆச்சரியமில்லை. அது எவ்வளவு வெற்றிகரமாய் உள்ளது? அது எதிர்ப்படும் சில இடையூறுகள் யாவை?
“இருபதுக்கு முன் வேண்டாம்! 30-க்குப் பின் வேண்டவே வேண்டாம்! இரண்டே குழந்தைகள் போதும்—நல்லது!” என்பது இந்தியாவில் பம்பாயிலுள்ள குடும்பநல தலைமை அலுவலகத்திற்குச் செல்லும் வழியில் வரிசையாகவிருக்கும் வர்ணச் சுவரொட்டிகள் ஒன்றால் கொடுக்கப்பட்ட ஆலோசனையாகும். மற்றொன்று ஐந்து குழந்தைகளால் சூழப்பட்ட ஒரு வதைக்கப்பட்ட தாயை வருணிக்கிறது. அது எச்சரிக்கிறது: “பின்னர் வருந்த வேண்டாம்!” செய்தி மிக அழுத்தமாகவும் தெளிவாகவும் வெளிவருகிறது: ஒரு குடும்பத்திற்கு இரண்டு குழந்தைகள் போதும். ஆனால், ஒரு குடும்பத்திற்கு இரண்டு குழந்தைகள் என்ற அரசின் சிபாரிசை ஏற்றுக் கொண்டு செயல்பட வைப்பது எளிதல்ல.
“இந்துக்கள், ஒரு மனிதனின் சந்தோஷம் அவன் பெற்றிருக்கும் குழந்தைகளின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு இருக்கிறது என்று கருதுகின்றனர். உண்மையில், அவர்கள் மத்தியில் குழந்தைகள் ஒரு வீட்டின் ஆசீர்வாதமென கருதப்படுகிறது. ஒரு மனிதனின் குடும்பம் எவ்வளவு பெரியதாக இருந்தாலும், அதனுடைய அதிகரிப்பிற்காக அவன் பிரார்த்தனைகள் செய்வதை நிறுத்துவதில்லை,” என்பதாக இந்து முறைகள், பழக்கவழக்கங்கள், சடங்குகள் என்ற ஆங்கில புத்தகம் சொல்கிறது. எனினும் ஒரு மதசார்பான நோக்குநிலையிலிருந்து, ஆண்பிள்ளைதான் ஒரு குடும்பத்தின் தலைவனுக்கு அதிக மதிப்புள்ளதாய் இருக்கிறது. “அவனுடைய ஈமச்சடங்குகளை நிறைவேற்றுவதற்கு ஒரு மகனை அல்லது ஒரு பேரனை விட்டுச்செல்லாதிருப்பதைப் போன்ற துரதிர்ஷ்டம் எதுவுமில்லை,” என்பதாக அந்தப் புத்தகம் விவரிக்கிறது. “அப்பேர்ப்பட்ட இழப்பு, இறப்பிற்குப் பின் சொர்க்கம் அடையும் எல்லா வாய்ப்புகளையும் தடுக்கக்கூடியதாக எண்ணப்படுகிறது.”
மூதாதையர் வழிபாடு அல்லது ஸ்ரதா சடங்கைச் செய்வதற்கும் மகன்கள் தேவைப்படுகின்றனர். இந்தியாவாக இருந்த அந்த அதிசயம் என்ற ஆங்கிலப் புத்தகத்தில், “குறைந்தபட்சம் ஒரு மகன் பெரும்பாலும் தேவையாயிருந்தது,” என்று A. L. பாஷன் எழுதுகிறார். “இந்து இந்தியாவின் ஆழ்ந்த குடும்ப உணர்ச்சி, மகன்கள் இல்லாவிடில் அந்த வம்சாவழி மறைந்துவிடுமாதலால் மகன்களைக் கொண்டிருப்பதற்கான ஆசையை அதிகரித்தது.”
மகன்களைக் கொண்டிருப்பதற்கான ஆசையைத் தூண்டுவதில், மதசார்பான நம்பிக்கைகளோடுகூட செல்வாக்கு செலுத்தும் ஒரு பண்பாட்டுக் காரணம், இந்தியாவின் பாரம்பரிய இணைப்பாகும் அல்லது மணமான மகன்களும் தங்கள் பெற்றோரோடு தொடர்ந்து வாழும் ஒரு விரிவான குடும்ப ஏற்பாடாகும். “மகள்கள் மணமாகி தங்களுடைய கணவரின் வீட்டாருடன் அவர்கள் வீட்டில் வாழச் சென்றுவிடுகின்றனர்; ஆனால் மகன்கள் தங்கள் பெற்றோருடன் வீட்டிலேயே தங்கிவிடுகின்றனர்; மேலும் தங்களுடைய வயதான காலத்தில் தங்கள் மகன்கள் தங்களைக் கவனித்துக்கொள்ளவேண்டும் என பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்,” என்று பம்பாய் மாநகராட்சி மன்றத்தின் சுகாதார மற்றும் குடும்பநலப் பிரிவைச் சேர்ந்த டாக்டர் லலிதா S. சோப்ரா விவரிக்கிறார். “இதுதான் அவர்களது பாதுகாப்பு. இரண்டு மகன்களைக் கொண்டிருந்தால் பெற்றோர் பாதுகாப்பாக உணருகின்றனர். அப்படியென்றால் நியாயமாகவே, சிபாரிசு செய்யப்பட்ட இரண்டு-குழந்தை வரம்பை அடைந்ததும், இரண்டும் பெண்களாயிருந்தால், அவர்கள் தொடர்ந்து ஒரு மகனுக்காக முயற்சி செய்வதற்கு நல்ல சாத்தியமிருக்கிறது.”
கொள்கையளவில் எல்லா பிள்ளைகளும் கடவுளால் கொடுக்கப்பட்டதாக கருதப்பட்டாலும், தினசரி வாழ்க்கையின் உண்மைகள் வேறுவிதமாகக் காட்டுகின்றன. “பெண்களின் மருத்துவ கவனிப்பின்மை தெளிவாக இருக்கிறது,” என்று இன்டியன் எக்ஸ்பிரஸ் அறிவிக்கிறது. “அவர்கள் பிழைத்து வாழ்வது குடும்பம் பிழைத்து வாழ்வதற்கு உண்மையில் முக்கியமானதாகக் கருதப்படுகிறதில்லை.” பம்பாயில் ஒரு கணக்கெடுப்பு, பால்-தீர்மானிக்கும் சோதனைகளுக்குப் பின் கருச்சிதைவு செய்யப்பட்ட 8,000 சிசுக்களில் 7,999 பெண்களே என்று தெரியப்படுத்துவதை அந்த அறிக்கைச் சுட்டிக்காட்டுகிறது.
ஒரு கடுமையான போரட்டம்
“பொதுவாக ஒரு குடும்பத்தில், எத்தனை குழந்தைகள் இருக்கவேண்டும், குடும்பம் எவ்வளவு பெரிதாக இருக்கவேண்டும் என்பதை தீர்மானிப்பது அந்த ஆணே,” என்பதாக பம்பாய் மாநகராட்சி உடல்நல செயலாண்மை அலுவலர் டாக்டர் S. S. ஸாப்னிஸ், ஒரு பேட்டியில் விவரிக்கிறார். ஒரு பெண் தன் குடும்பத்திற்கு சில குழந்தைகள் போதுமென விரும்பினாலும்கூட, அதற்கு எதிராகவிருக்கும் தன் கணவனால் அழுத்தத்திற்குள்ளாகிறாள். “இதனால்தான், ஆண் உடல்நல ஊழியர்கள் வீட்டுத் தந்தையோடு பேசவும், குடும்ப அளவை வரையறைப்படுத்த உற்சாகப்படுத்தவும், பிள்ளைகள் குறைவாக இருந்தால் மேம்பட்ட பராமரிப்பைக் கொடுக்க முடியும் என்பதைக் காண உதவலாம் என்னும் எதிர்பார்ப்போடு ஆண்-பெண் குழுக்களை சேரிகளில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் அனுப்புகிறோம்.” ஆனால் நாம் பார்த்திருக்கிறபடி, அநேக தடங்கல்கள் உள்ளன.
“ஏழ்மையான மக்களின் மத்தியில், அவர்களுடைய ஏழ்மையான வாழ்க்கைத் தராதரங்கள் காரணமாக, குழந்தை இறப்பு வீதம் அதிகமாக இருக்கிறது,” என்று டாக்டர் ஸாப்னிஸ் கூறுகிறார். “எனவே சில குழந்தைகள் இறந்துவிடும் என்று தெரிந்திருப்பதால் நிச்சயமாகவே நிறைய குழந்தைகளுக்கான ஆசை இருக்கிறது.” ஆனால் குழந்தைகளின் கவனிப்பிற்காக ஒன்றும் செய்யப்படுவதில்லை. அவர்கள் கவனிப்பாரில்லாது, பிச்சையெடுத்துக்கொண்டு அல்லது குப்பையிலிருந்து உணவைப் பொறுக்கிக்கொண்டு அலைந்து திரிகின்றனர். அவர்களுடைய பெற்றோர்? “அவர்களுக்குத் தங்கள் குழந்தைகள் எங்கிருக்கிறார்கள் என்றே தெரிவதில்லை,” என்பதாக டாக்டர் ஸாப்னிஸ் புலம்புகிறார்.
அடிக்கடி இந்தியாவில் விளம்பரங்கள், நன்கு பராமரிக்கப்பட்ட தங்களுடைய இரண்டு குழந்தைகள், பெரும்பாலும் ஒரு பையனும் ஒரு பிள்ளையும், இவர்களுடன் வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் அனுபவிக்கும் செழுமையான தோற்றமளிக்கும் தம்பதியை சித்தரிக்கிறது. சமுதாயத்தின் இந்தத் தொகுதியில்தான்—நடுத்தர வகுப்பில்—பொதுவாக இரு-குழந்தை கொள்கை நன்கு ஏற்றுக்கொள்ளப்படுகிறது. ஆனால் இது ஏழைகளின் மனதுக்கு வெகு தூரமாக விலக்கப்பட்டிருக்கிறது; ‘எங்கள் பெற்றோரும் அவர்கள் பெற்றோரும் 10 அல்லது 12 பிள்ளைகளைக் கொண்டிருந்தார்களேயானால் நாங்கள் ஏன் கூடாது? ஏன் இரண்டுக்கு வரையறுக்க வேண்டும்?’ என்று வாதாடுகின்றனர். இங்கு இந்தியாவின் பெரும்பகுதியராலான ஏழ்மையானோரின் மத்தியில் மக்கள்தொகை கட்டுப்பாட்டிற்கான யுத்தம் ஒரு கடுமையான போரட்டத்தை எதிர்ப்படுகிறது. “இப்போதைய மக்கள்தொகுதி இளமையாயும் குழந்தை பிறப்பிக்கும் வயதிலும் உள்ளது,” என்று டாக்டர் சோப்ரா சிந்திக்கிறார். “இது தோல்விக்கான போரட்டமாக தோன்றுகிறது. நமக்கு முன்னாக ஒரு மகத்தான வேலையைக் கொண்டிருக்கிறோம்.” (g91 11/8)