யெகோவாவின் சாட்சிகளுக்கு இரத்தமின்றி அறுவை சிகிச்சையை முன்நின்று செய்வது
சமீப ஆண்டுகளில் யெகோவாவின் சாட்சிகள் இரத்தமேற்றுதல்களை மறுப்பதனால் செய்தித்தாள் தலையங்கங்களில் அடிக்கடி இடம்பெறுகின்றனர். அவர்கள் மறுப்பதற்குக் காரணம் வேதப்பூர்வமாயிருந்தாலுங்கூட, எல்லாரும் அறிந்த சரீரப்பிரகாரமான ஆபத்துகளும் இருக்கின்றன. (ஆதியாகமம் 9:3, 4; லேவியராகமம் 17:10-12; அப்போஸ்தலர் 15:28, 29) அவர்கள் எடுத்துள்ள நிலைநிற்கை மருத்துவர்களிடமிருந்தும், மருத்துவமனைகளிடமிருந்தும் வழக்குமன்றங்களிலிருந்தும் எதிர்ப்புகள் வருவதில் விளைவடைந்திருக்கிறது. உரிமை வயதடைந்த சாட்சிகளில் இரத்தமேற்றுதல்களை மறுத்ததனிமித்தம் அறுவை மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுவதிலிருந்து மறுக்கப்பட்டிருக்கின்றனர்; அவர்களுடைய பிள்ளைகளும் நீதிமன்ற உத்தரவால் அதற்குக் கட்டுப்பட கட்டாயப்படுத்தப்பட்டிருக்கின்றனர்.
இரத்தமேற்றுதல்கள் சம்பந்தப்பட்ட நிலைநிற்கையில் இப்போது சிறிது மாற்றங்கள் இருக்கின்றன. உடலில் ஏற்றப்படுவதற்கு கிடைக்கும் இரத்தம் அநேகமாக நோய் பரவச்செய்பவையாயிருக்கின்றன. ஒரு நபரைக் கொல்லுகிற சில நோய்களும் இரத்தமேற்றுதல்கள் மூலம் கடத்தப்படுகின்றன. இரத்தம் பெரிய வியாபாரமாகி, அது தொடர்ந்து பயன்படுத்தப்படுவதற்கு ஊக்கமளிக்கப்பட, பேராசையும் ஒரு காரணமாகியுள்ளது—அறுவை சிசிச்சைக்குக் கூடுதலான, அனாவசியமான ஆபத்தை மேலுமாக கூட்டுகிறது.a யெகோவாவின் சாட்சிகள் மட்டுமின்றி மற்ற அநேகர் இவற்றிற்கும் மற்ற காரணங்களினிமித்தமும் தொடர்ந்து இரத்தமேற்றுதல்களை ஏற்றுக்கொள்வதை மறுயோசனை செய்கின்றனர்.
இவ்வெல்லாவற்றிலும் யெகோவாவின் சாட்சிகள் பங்குவகித்திருக்கின்றனர். ஆயிரக்கணக்கானோர் அறுவை சிகிச்சைகளைச் செய்திருக்கின்றனர், அநேகருடைய காரியத்தில், இரத்தமேற்றுதல்களை ஏற்றுக்கொண்ட மக்களைவிட இவர்களே வெகு சீக்கிரமாக குணமடைந்திருக்கின்றனர். இரத்தம் அதிகமாக இழக்கப்படுவதும், மேலும் சிலருடைய விஷயத்தில் இரத்த அணுக்களின் எண்ணிக்கை ஒரு நிலைக்குக் குறைந்துபோவது பாதுகாப்பானதல்ல என்று முன்பு கருதப்பட்ட நிலைக்குக் குறைந்தாலும், அறுவை மருத்துவர்களால் அறுவை சிகிச்சைச் செய்ய முடியும் என்று சாட்சிகளின் அனுபவம் காட்டுகிறது. இவ்விதம், செலவைக் குறைத்து இரத்தமேற்றுதல்களின் ஆபத்தை நீக்கிடும் அநேக மாற்றுவகைச் சிகிச்சைமுறைகளும் இப்போது இருக்கின்றன என்பதை அவர்கள் பெற்ற சிகிச்சைகள் காட்டியிருக்கின்றன. நோயாளிகள் குறிப்பிட்ட சில மருத்துவ சிகிச்சைமுறைகளை ஏற்றுக்கொள்ளும் அல்லது மறுக்கும் அவர்கள் உரிமையை, நீதிமன்றத் தீர்ப்பில் கிடைத்த வெற்றிகள் திரும்பவும் பெற்றுத் தந்திருக்கின்றன.
மருத்துவர்களோடும் மருத்துவமனைகளோடும் ஒத்துழைப்பதன் மூலம் யெகோவாவின் சாட்சிகள் இவ்வளவு காரியத்தையும் சாதிக்க முடிந்திருக்கிறது. சமீப ஆண்டுகளில் தங்கள் உலக தலைமையகத்திலே மருத்துவமனை தகவல் பணிகள் (HIS) என்றழைக்கப்படும் துறையை அவர்கள் நிறுவியிருக்கின்றனர். இந்த துறையைச் சேர்ந்த பிரதிநிதிகள் உலகத்தின் அநேக பாகங்களுக்குச் சென்று, சில உவாட்ச் டவர் சங்கத்தின் கிளை அலுவலகங்களில் கருத்தரங்குகளை நடத்தி, தேவைப்படும்போது மருத்துவமனைகளோடும் மருத்துவர்களோடும் தொடர்புகொள்வதற்கு மருத்துவமனை தொடர்பு குழுக்களை உண்டுபண்ணியிருக்கின்றனர். பெரிய கிளை அலுவலகங்களைச் சந்திக்கையில், அவர்கள் சென்றுவிட்ட பின்பு தொடர்ந்து அந்த வேலை செய்யப்பட மருத்துவமனை தகவல் பணிகளின் பிரதிநிதிகள் மருத்துவமனை தகவல் பணிகள் பிரிவையும் நிறுவுகின்றனர்.
இந்தக் கருத்தரங்குகள் இரத்தமேற்றுதலுக்கு ஏற்ற மாற்றுவகை சிகிச்சைகளைக் கலந்துபேசி, மருத்துவர்களிடமும் நுட்பமான அறுவை மருத்துவ திறமைகள் வெகுவாக இரத்த இழப்பைக் குறைத்துவிடக்கூடும் என்பதை விளக்கிப் பேச இந்தக் குழுக்களைப் பயிற்றுவிக்கிறது. இறுதியாக, மருத்துவர்களிடமும் மருத்துவமனை நிர்வாகிகளிடமும் பேசுவதற்கு அவர்களை அழைத்துக்கொண்டு, விஜயம் செய்யக்கூடிய மருத்துவமனை தகவல் பணிகளின் அங்கத்தினர்கள் புதிய தொடர்பு குழுக்களுக்கு வேலை-பயிற்சி கொடுக்கின்றனர்.
ஆரம்பிக்கும்வண்ணம், ஐக்கிய மாகாணங்களில் 18 கருத்தரங்குகள் நடத்தப்பட்டன. இதற்குப் பின்னர், நான்கு நிகழ்ச்சிகள் பசிபிக் பகுதியில் நடத்தப்பட்டன, ஆஸ்திரேலியா, ஜப்பான், பிலிப்பைன்ஸ், ஹவாய் போன்ற இடங்களில் ஒவ்வொரு கருத்தரங்கு நடத்தப்பட்டு, அந்தப் பகுதிகளிலுள்ள எட்டு உவாட்ச் டவர் சங்கத்தின் கிளை அலுவலகங்களுக்கு உதவியது.b நவம்பர், டிசம்பர் 1990-ல் பத்துக் கூடுதலான கருத்தரங்கு நிகழ்ச்சிகளை ஐரோப்பாவிலும் லத்தீன் அமெரிக்காவிலும் கரிபியனிலும் மூன்று மருத்துவமனை தகவல் பணிகளின் அங்கத்தினர்கள் நடத்திவைத்தனர். பின்வருவது அந்தக் கருத்தரங்குகளின் பலன்களைக் குறித்த அறிக்கையாகும்.
ஐந்து ஐரோப்பாவில்—இங்கிலாந்து, ஸ்வீடன், ஃபிரான்ஸ், ஜெர்மனி, ஸ்பெய்ன் ஆகிய இடங்களில் ஒவ்வொரு நிகழ்ச்சி—நடைபெற்றன. இந்த ஐந்து கருத்தரங்கு நிகழ்ச்சிகள் 20 உவாட்ச் டவர் சங்கத்தின் கிளை அலுவலகங்களுக்கு உதவி, மருத்துவமனை தொடர்பு குழு வேலைக்கு 1,700-க்கும் மேற்பட்ட மூப்பர்களைப் பயிற்றுவித்தது.
யெகோவாவின் சாட்சிகள் இரத்தத்தின்பேரில் உறுதியான நிலைநிற்கையை எடுப்பதன்மூலம், இரத்தமின்றி அறுவை மருத்துவம் செய்யும் காரியத்தில் முன்னேற்றம் செய்ய மருத்துவத் துறைக்கு உதவியாயிருந்திருக்கின்றனர் என்று ஃபிரான்ஸ் நாட்டைச்சேர்ந்த அறுவை மருத்துவர் ஒருவர் ஒப்புக்கொண்டார். எந்த ஒரு மதமும் கடினமான பிரச்னைகளை மேற்கொள்ள இப்படிப்பட்ட முயற்சியெடுத்துத் தன் மக்களுக்கு உதவியதில்லை என்று அவர் சொன்னார்.
இந்தப் பிரச்னையின்பேரில் ஸ்பெய்னில் மாட்ரிடிலுள்ள அதிக வசதிகொண்ட மருத்துவமனையும் மிகுந்த எதிர்ப்புத் தெரிவித்திருந்தது. இரத்தமேற்றிக்கொள்ள அவள் மறுத்ததன் காரணமாக முதுகுத்தண்டு நரம்பு அறுவை மருத்துவம் தேவைப்பட்ட ஒரு சாட்சிக்குச் சிகிச்சையளிக்க மறுத்தனர். அவள் மருத்துவமனையை விட்டுப்போக மறுத்தபோது, அவர்கள் உண்பதற்கும் அருந்துவதற்கும் எதையும் கொடுக்காமல் அவளை வெளியேறும்படியாக வலுக்கட்டாயப்படுத்தினர். என்றாலும், மருத்துவ இயக்குநரோடும் தலைமை அறுவை மருத்துவரோடும் சந்திக்க மருத்துவமனை தகவல் பணிகளின் அங்கத்தினர்கள் ஏற்பாடுசெய்து, இரண்டு மணிநேரத்திற்கு அவர்களோடு பேசினர். விளைவு? அறுவை சிகிச்சை செய்ய அவர்கள் ஒப்புக்கொண்டு, வெளியேற்றிய அந்தச் சாட்சியுடன் தொலபேசி மூலம் தொடர்பு கொண்டு அவளைத் திரும்பி வந்து அறுவை சிகிச்சை செய்துகொள்ள அழைத்தனர்.
இத்தாலியிலுள்ள சாட்சிகள் கருத்தரங்கு முடிந்து திரும்பியவுடன் ஒரு குறைப்பிரசவ குழந்தைக்கு இரத்தமேற்றுதலைக் கட்டாயப்படுத்தும் சூழ்நிலையை எதிர்ப்பட்டனர். அவர்கள் சொல்கிறபிரகாரம்: “கருத்தரங்கில் கிடைத்த தகவலைக்கொண்டு சூழ்நிலையை எங்களால் அமைதிப்படுத்த முடிந்தது, அந்தக் குழந்தை வெற்றிகரமாக இரத்தமின்றி சிகிச்சையளிக்கப்பட்டது.”
லத்தீன் அமெரிக்காவுக்கும் கரிபியனுக்கும் தொடருதல்
அடுத்த ஐந்து கருத்தரங்கு நிகழ்ச்சிகளும் மெக்ஸிகோ, அர்ஜன்டினா, பிரேஸில், ஈக்வடார், பியூர்டோ ரிகோ போன்ற இடங்களில் நடைபெற்றன. இந்த ஐந்து கருத்தரங்கு நிகழ்ச்சிகள் உவாட்ச் டவர் சங்கத்தின் முப்பத்திரண்டு கிளை அலுவலகங்களுக்கு உதவியளித்தன.
யெகோவாவின் சாட்சிகள் இரத்தமின்றி அறுவை சிகிச்சையளிக்கப்படுவதை முன்நின்று செய்திருப்பதோடு, இப்போது அவர்கள் முன்னணியில் இருந்து செய்த முயற்சியினால் மற்றவர்கள் நன்மையடைவதற்கு அதைப் பற்றிய போதுமான சிறப்பறிவு இருக்கிறது என்று மெக்ஸிகோ நகர இரத்த வங்கியைச்சேர்ந்த இயக்குநர் சொன்னார். இரத்தக் கசிவுக்குச் சிகிச்சையளிக்க மாற்றுவகைச் சிகிச்சை முறைகளைப் பட்டியலிடும் மருத்துவமனை தகவல் பணிகள் தாளை அவர் பார்த்தார்.c பின்னர் அவர் சொன்னார்: ‘மெக்ஸிகோ நகரில் உள்ள ஒவ்வொரு மருத்துவமனையின் செய்தி அறிக்கை பலகைக்கும் இதன் நகல்களை எடுத்துவைக்க விரும்புகிறேன். மருத்துவர்களும் இதைப்பற்றி தெரிந்துவைத்துக்கொள்வதற்கு இதை அவர்கள் நகலெடுத்துவைக்க நான் சொல்கிறேன். பிற்காலத்தில், இரத்தம் கொடுக்க இந்த இரத்த வங்கியை அவர்கள் அழைத்தால், நாம் முதலில் இந்தத் தாளை எடுத்துவரும்படியாக அவர்களிடத்தில் சொல்லி, “அதை நீங்கள் உபயோகித்தீர்களா? இதை செய்து பார்த்தீர்களா?” என்று அவர்களைக் கேட்போம். இந்த மாற்றுவகை சிகிச்சை முறைகளை முதலில் அவர்கள் செய்து பார்க்கவில்லையென்றால், அதைச் செய்து பார்க்கும் வரை அவர்களுக்கு எங்களிடத்திலிருந்து இரத்தம் கிடைக்காது!’
வட அர்ஜன்டினாவிலுள்ள இரத்த வங்கியின் இயக்குநருங்கூட இதற்குச் சாதகமாக இருந்தார். அரசு மருத்துவமனைக்கு வருகிற எவரும், உறவினரோ நண்பரோ இரண்டு யூனிட் இரத்தமாவது தானம் செய்வதற்கு முன்னேற்பாடு செய்யவில்லையென்றால், சிகிச்சை அளிக்கப்படமாட்டார்கள் என்ற ஒரு கொள்கை அந்தப் பகுதியில் இருந்தது. இதற்குச் சாட்சிகள் இணங்கவில்லை. அறுவை மருத்துவம் செய்வது மறுக்கப்பட்டது. இரத்த உபயோகத்தைப் பற்றிய எங்களுடைய உண்மையான நம்பிக்கைகளை நாங்கள் விளக்கிய பின்னர், அடுத்த முறை எழுதும்போது, இந்தக் கொள்கையில் மாற்றம் செய்வதற்கு அந்த இயக்குநர் ஏற்பாடு செய்தார். இந்த மாற்றம் வரும்வரை, முன் மருத்துவ அறிவுரைகள் கொண்ட அட்டையைக் காட்டி, மருத்துவமனையில் சேர்க்கப்படும் சாட்சிகள் இரத்ததானம் செய்யும் தேவையிலிருந்து விலக்கப்பட்டனர்.
ஈக்வடாரில், இரத்தம் பயன்படுத்தாமலேயே சாட்சிகளுக்கும் சாட்சிகளாக இல்லாதவருக்கும் 2,500-க்கும் மேற்பட்ட அறுவை மருத்துவ சிகிச்சை அளித்துவரும் பெயர்பெற்ற, செல்வாக்குமிகுந்த அறுவை மருத்துவர் ஒருவர் இருக்கிறார். இரத்தம் கொடுப்பதிலிருந்து நோயாளிக்கு வரும் பல்வேறு ஆபத்துகளின் காரணமாக அந்த நாட்டில் இரத்தமின்றி அறுவை மருத்துவம் செய்வதை உற்சாகப்படுத்த ஒரு திட்டத்தைத் தொடங்குவதற்கு ஏற்பாடு செய்வதாக அவர் சொன்னார்.
ஈக்வடாரில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கு நிகழ்ச்சியைத் தொடர்ந்து, அந்தப் பிரசங்கத்தைக் கேட்க வந்திருந்த ஓர் அறுவை மருத்துவர் சொன்னார்: “மருத்துவரீதியில் இந்தளவுக்கு மேம்பட்ட ஓர் ஆராய்ச்சியைச் செய்வதற்கு இந்த மக்களால் முடியுமானால், அவர்கள் படிக்கும் பைபிளைப் பற்றி இது எதையோ சொல்லுகிறது, அவர்களின் மதத்தை ஆராய்வது நல்லது என்று என்னை உணரவைக்கிறது.”
பியூர்டோ ரிகோவில், மனப்பான்மையில் ஒரு வரவேற்கத்தகுந்த மாற்றம் காணப்பட்டது. கடந்த காலத்தில், சாட்சிகளில் பெரியவர்கள் சில சமயங்களில் வாரால் அடிக்கப்பட்டு இரத்தம் செலுத்த பலவந்தப்படுத்தப்பட்டார்கள்; அவர்களில் சிலர் பின்னர் மரித்தனர். பியூர்டோ ரிகோ மருத்துவமனை சங்கத்தின் துணைத் தலைவரையும் வழக்கறிஞரையும் மருத்துவமனை தகவல் பணிகளின் பிரதிநிதிகள் சந்தித்துப் பேசினர்; இந்த வழக்கறிஞர் மருத்துவமனையின் நிர்வாகியாகவுங்கூட இருந்தார். மருத்துவமனை தகவல் பணிகளின் ஆட்கள் பேச ஆரம்பிப்பதற்கு முன்பு, வழக்கமாக ஆட்கள் ஒருவரையொருவர் அறிமுகப்படுத்திக்கொண்டவுடன், அந்த வழக்கறிஞர் தான் ஏதோ சொல்லவிருப்பதாக கூறினார். சாட்சிகளுக்கு ஆச்சரியத்தைத் தருவதாய், அவர் இந்தத் தீவிலுள்ள மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகளின் உரிமைகளை முன்னேற்றுவிக்குமாறு இருக்கும் ஒரு திட்டத்தை விளக்கத் தொடங்கினார், இது அவர்கள் பேச இருந்த காரியங்களின் முக்கிய குறிப்புகளை உள்ளடக்கியது! அவரிடம் விட்டுச்சென்ற தகவலில் ஒருசிலவற்றை நகலெடுத்து வைத்துக்கொள்வதற்குங்கூட அவர் அனுமதி கேட்டார்; மருத்துவமனை சங்கத்தின் பத்திரிகைக்குத் தயார் செய்யப்பட்டுவந்த கட்டுரையில் அதைச் சேர்க்க அவர் விரும்பினார்.
ஐக்கிய மாகாணங்களில் கிடைத்த பலன்கள்
மருத்துவர் ஒருவர்—அவருடைய மருத்துவமனையில் அறுவை மருத்துவ பிரிவின் தலைவராக இருக்கும் ஜேம்ஸ் J. ரிலே—உள்ளூர் தொடர்பு ஆலோசனைக் குழுவிடம் குறிப்பிடத்தக்க ஒன்றை சொன்னார்: “எனக்குத் தெரிந்தவரை நீங்கள், இரத்த உபயோகம் பற்றிய மருத்துவ மற்றும் சட்டப்பூர்வமான தகவலைக் கொண்டிருப்பதில் முன்னணியிலிருக்கிறீர்கள்.”
மருத்துவமனைத் தொடர்பு குழு, உவாஷிங்டன், D.C., பகுதியிலுள்ள ஒரு பெரிய மருத்துவமனையில், நிர்வாக மற்றும் மருத்துவ ஆட்களடங்கிய தொகுதியைச் சந்தித்தது. இது அவர்களுக்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்து, “இதுபோன்று ஆதரவளிக்கும் ஏற்பாட்டைக் கொண்டு தேவையான நேரத்தில் தங்களுடைய சொந்த ஆட்களுக்கு உதவிசெய்ய உவாட்ச்டவர் எடுத்திருக்கும் பொறுப்பிற்கு” விசேஷமாக தங்கள் போற்றுதலைத் தெரிவித்தனர்.
யெகோவாவின் சாட்சிகளைப் பற்றி தான் எவ்வாறு தவறான தகவலைப் பெற்றிருந்தாள் என்று விஸ்கான்ஸினிலுள்ள ஒரு மருத்துவமனையில் நோயாளி-கவனிப்பு பிரிவின் தலைவராக இருந்த அம்மையார் சொன்னார். “சிகிச்சை அளிக்கும் எல்லாருக்கும் இந்தத் தகவலைச் சொல்லும்படியாக” அம்மையார் மருத்துவமனை தொடர்பு ஆலோசனைக் குழுவை உற்சாகப்படுத்தினார்.
மருத்துவ மற்றும் சட்டரீதியிலான விஷயங்களை நியமிக்கப்பட்ட மருத்துவர்களுக்கும் மருத்துவமனைகளுக்கும் மருத்துவமனை, மருத்துவ சங்கங்களுக்கும் அனுப்பிவைப்பது மருத்துவமனை தகவல் பணிகளின் ஆட்களுடைய வேலையின் ஓர் அம்சமாகும். மேரிலாந்தில் பால்டிமோரில் உள்ள ஒரு மருத்துவமனையில் சட்டப் பொறுப்பு இடையூறு காக்கும் நிர்வாகியாயிருப்பவரிடமிருந்து வரும் இதற்குப் பதிலாக அவர் இப்படி சொன்னார்: “இரத்தமேற்றுதல்களும் யெகோவாவின் சாட்சிகளும் சம்பந்தமாக என்னுடைய கவனத்துக்குக் கொண்டுவரப்பட்ட விளக்கமான விஷயங்களுக்காக உங்களுக்கு நன்றி. யெகோவாவின் சாட்சிகளுக்குச் சிகிச்சை கொடுப்பது சம்பந்தமாக எங்களுடைய கொள்கைகளை மாற்றிக்கொள்ள இந்தத் தகவல் எங்கள் மருத்துவமனைக்கு மிகவும் உதவியாயிருக்கும்.”
ஐக்கிய மாகாணங்களில் மட்டும், யெகோவாவின் சாட்சிகள்மீது இரத்தமின்றி அறுவை சிகிச்சைக் கொடுக்க விருப்பமுள்ள ஆட்களுடைய பட்டியலில் கிட்டத்தட்ட 10,000 மருத்துவர்கள் இருக்கின்றனர்.
இதுவரை, நடைபெற்ற 32 கருத்தரங்குகளின் மூலம், உலகத்தின் பல்வேறு பாகங்களிலுள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய தேவைகளைப் பூர்த்திசெய்வதற்கு 62 கிளை அலுவலகங்களில் தொடர்பு குழுக்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. இலட்சக்கணக்கான யெகோவாவின் சாட்சிகளைக் கவனித்துக்கொள்ள இவை இப்போது ஆயத்தமாயிருக்கின்றன. மருத்துவமனை தகவல் பணிகளின் பிரயாசைகளை உண்மையிலேயே ஆசீர்வதிக்கிறார் என்று விளைவுகள் காட்டுகின்றன. (g91 11⁄22)
[அடிக்குறிப்புகள்]
a விவரங்களுக்கு, விழித்தெழு!, அக்டோபர் 8, 1991, பக்கங்கள் 2-15-ஐ பார்க்கவும்.
b இந்த நாடுகளின் பேரில் ஓர் அறிக்கைக்கு, நவம்பர் 22, 1990 ஆங்கில விழித்தெழு!வில் “மருத்துவர்களிடையேயும் சாட்சி நோயாளிகளுக்குமிடையே உள்ள இடைவெளியை இணைத்தல்” என்ற தலைப்புள்ள கட்டுரையைப் பார்க்கவும்.
c இந்தப் பத்திரிகையின் 10-ம் பக்கத்தில் இந்த விவர தாளின் நகல் அச்சிடப்பட்டுள்ளது.
[பக்கம் 10-ன் பெட்டி]
இரத்தமேற்றாமல் இரத்த இழப்பைத் தடுப்பதும் கட்டுப்படுத்துவதும்
1. அறுவை மருத்துவ சாதனங்கள்:
எ. மின் தீய்ப்பான்
பி. லேசர் அறுவை மருத்துவம்
சி. ஆர்கான் ஒளிக்கற்றை இரத்த உறை இயந்திரம்
டி. காமா கத்தி ஊடுகதிர் அறுவை மருத்துவம்
2. உட்புற இரத்தக்கசிவைக் கண்டுபிடித்து நிறுத்துவதற்கு நுட்பமான முறைகளும் சாதனங்களும்:
எ. உட்புற இரத்தக்கசிவு ஏற்படும் இடத்தைக் கண்டுபிடிக்க குழாய்-பையுறுப்பு உள்நோக்கி
பி. எளிதில் உறிஞ்சும் இரத்த உறை மின்வாய் (பாப், J. P., JAMA, நவம்பர் 1, 1976, பக்கங்கள் 2076-9)
சி. தமனியின் இரத்த உரைக்கட்டி அடைப்பது (JAMA, நவம்பர் 18, 1974, பக்கங்கள் 952-3)
டி. கட்டுப்படுத்தப்பட்ட உச்ச இரத்த அழுத்தம் (இரத்தக் கசிவு நிற்கும் வரை)
இ. திசு பசைகள் (டாக்டர் S. E. சில்வஸ், MWN, செப்டம்பர் 5, 1977)
3. அறுவை மருத்துவம் மற்றும் மயக்க மருந்தளிப்பதில் நுட்பமுறைகள்:
எ. உச்ச அழுத்த மயக்கமருந்து கொடுத்தல் (இரத்த அழுத்தத்தைக் குறைப்பது)
பி. குறைவெப்பம் (உடற்வெப்பத்தைக் குறைப்பது)
சி. அறுவை மருத்துவத்தின்போது உண்டாகும் சிவப்பணுக்களின் செறிவைக் குறைத்தல்
டி. அறுவை மருத்துவத்தின்போது பயன்படுத்தப்படும் இரத்தச் சேமிப்பு இயந்திரங்கள், உதாரணமாக, “உயிரணு-சேமிப்பான்”
இ. நுண்ணளவில் இரத்தக் கசிவை நிறுத்தும் முறையும் அறுவை மருத்துவ நுட்பமும்
எஃப். அறுவை மருத்துவம் செய்யும் நேரத்தைக் குறைப்பதற்கு அறுவை மருத்துவ குழுவில் கூடுதல் அங்கத்தினர்
4. இடர் எச்சரிக்கைவிடுப்பிகள்:
எ. தோலுக்குள் உட்புகும் பிராணவாயு இடர் எச்சரிக்கைவிடுப்பி
பி. ஆக்ஸிமீட்டர்
5. இரத்தக் கன அளவு பெருக்கும் சாதனங்கள்:
எ. படிகக்கரைசல்கள்
(1) பால்சார்ந்த ரிங்ஙர்ஸ் கரைசல் (ஈச்னர், E. R., சர்ஜரி ஆனுவல், ஜனவரி 1982, பக்கங்கள் 85-99)
(2) பொதுவாகப் பயன்படுத்தப்படும் உப்புநீர்க் கரைசல்
பி. கூழ்மங்கள்
(1) டெக்ஸ்ட்ரான்
(2) ஜெலடின் (ஹாவெல், P. J., அனஸ்தீஷியா, ஜனவரி 1987, பக்கங்கள் 44-8)
(3) ஹிடஸ்டார்ச்
6. இரத்தக் கசிவு நிறுத்தும் இரசாயன பொருட்கள்:
எ. அவிட்டீன்
பி. ஜெல்ஃபோம்
சி. ஆக்ஸிசெல்
டி. சர்ஜிசெல்
இ. வேறுபல பொருட்கள்
7. ஹிமோகுளோபின் அளவு குறைவிற்கு மருத்துவமுறைகள்:
எ. பிராணவாயு
பி. உச்ச அளவில் பிராணவாயு கிடைக்கும் விசேஷ அறை (ஹார்ட், G. B., JAMA, மே 20, 1974, பக்கங்கள் 1028-9)
சி. இரும்புச் சத்து கலந்த டெக்ஸ்ட்ரான் (டட்ரிக், S. J., ஆர்கைவ்ஸ் ஆஃப் சர்ஜரி, ஜூன் 1985, பக்கங்கள் 721-7)
டி. ஃபோலிக் அமிலம்
இ. எரித்ரோபொய்டின்—எலும்பு மச்சை இரத்தத்தை உண்டுபண்ண தூண்டுவிக்கிறது
எஃப். வளர்வினை ஊக்க மருந்துகள், உதாரணம், டெக்கடியுரபொலின் அல்லது செயற்கையாக அதிகரிக்கும் இயக்கு நீர்
ஜி. தசைக்குள் செலுத்தப்படும் வைட்டமின் B-12 ஊசி
ஏச். வைட்டமின் C
ஐ. வைட்டமின் E (விசேஷமாக புதிதாக பிறந்தவரில்)
8. புற நடவடிக்கைகள்:
எ. இரத்தக் கசிவிற்கு:
(1) நேரடியான செயல்முறை அழுத்தம்
(2) ஐஸ் பொதிகள்
(3) உடல் இருக்கும் நிலை (உதாரணம், இரத்தக்கசிவைக் குறைக்க காயப்படுத்தப்பட்ட அங்கத்தை மேலே தூக்கி வைப்பது)
பி. அதிர்ச்சிக்கு:
(1) கால்களுக்குச் சுற்றுப்பட்டைகளைக் கட்டிக்கொள்வது
(2) காற்று நிரப்ப முடிந்த காற்சட்டைகள்
(3) இரத்த அழுத்தத்தைக் காத்துக்கொள்ள இரண்டு கால்களையும் மேலே தூக்கி வைப்பது
9. இரத்தப் பிரச்னைகளையுடைய நோயாளிகளுக்குரிய மருந்துகள்:
எ. DDAVP, டெஸ்மோபிரசின் (கொபிரின்ஸ்கீ, N. L., லான்செட், மே 26, 1984, பக்கங்கள் 1145-8)
பி. E-அமினோகெப்ராயிக் அமிலம் (ஷுவார்ட்ஸ், S. I., கன்டெம்பிரரி சர்ஜரி, மே 1977, பக்கங்கள் 37-40)
சி. வைட்டமின் K
டி. பையோஃப்லேவோநாய்டுஸ் (ஃபிசிஷியன்ஸ் டெஸ்க் ரெஃபரன்ஸ்)
இ. கார்பாஸோக்ரோம் சாலிகிலேட்
எஃப். டிரானெக்சாமிக் அமிலம் (டிரான்ஸ்ஃபுயூஷன் மெடிஸின் டாபிக் அப்டேட், மே 1989)
ஜி. டானசோல்
10. மற்ற குறிப்புகள்:
எ. இரத்த அழுத்தத்தில் Hg சுமார் 90-100 மி.மீ. வரை மிதமாக குறைவது, வெட்டப்பட்ட தமனியில் இரத்தம் தானாக உறைந்து இரத்தக்கசிவு நிறுத்தப்பட உதவியாயிருக்கும்
பி. அறுவை மருத்துவத்துக்கு குறைந்தது 10 கிராம் ஹிமோகுளோபினாவது இருக்கவேண்டும் என்ற நியமத்திற்கு சரியான விஞ்ஞானப்பூர்வ ஆதாரமில்லை
சி. அறுவை மருத்துவம் செய்யப்படுகிற நோயாளிகள் ஹிமோகுளோபின் அளவு 1.8-க்கு குறைந்தும் தப்பிப்பிழைத்திருக்கின்றனர் (அனஸ்தீஷியா, 1987, புத்தகம் 42, பக்கங்கள் 44-8)
டி. குறைந்த அளவு ஹிமோகுளோபின் குறைந்த இரத்தப் பாகுநிலையில் விளைவடைகிறது, முறையாக, இருதயத்திலுள்ள பளுவைக் குறைத்து திசு பரப்புவழியையும் பிராணவாயு செறிவையும் முன்னேற்றுவிக்கிறது