குடும்பக் கட்டுப்பாடு ஓர் உலகளாவிய பிரச்னையாகிறது
“தற்போது இருக்கும் மற்ற எந்த ஒரு தனி ‘தொழில்நுட்பத்தையும்விட,’ குடும்பக் கட்டுப்பாடு மனித இனத்திற்குக் குறைந்த செலவில் அதிக பலனைக் கொண்டுவரக்கூடும். . . . மக்கள்தொகை பிரச்னை என்று ஒன்று இல்லாதிருந்தாலும்கூட இது உண்மையாகவே இருக்கும்.”—தி ஸ்டேட் ஆஃப் தி உவோர்ல்ட்ஸ் சில்ரன் 1992.
கடந்த காலத்தில் அநேக குழந்தைகளைக் கொண்டிருப்பது விரும்பத்தக்கதாய்க் கருதப்பட்டது. கிட்டத்தட்ட நாலாயிரம் வருடங்களுக்குமுன், ஈசாக்கை மணந்துகொள்வதற்காக ரெபெக்காள் மெசொப்பொத்தாமியாவிலிருந்து புறப்படத் தயாராயிருந்தபோது, அவளுடைய தாயும் அவளுடைய சகோதரனும், “எங்கள் சகோதரியே, நீ கோடாகோடியாய்ப் பெருகுவாயாக,” என்று சொல்லி ஆசீர்வதித்தனர். (ஆதியாகமம் 24:60) காலங்கள் மாறிவிட்டன. இன்று, அதிகமதிகமான பெண்கள் சில குழந்தைகளையே விரும்புவதாகக் கூறுகின்றனர்.
“ஏழு பிள்ளைகளில் நான் மூன்றாவது,” என்றார் ஒரு மகளுக்குத் தாயாகிய 22 வயது இந்தோநேஷிய பெண், பூ. “என் தகப்பன் மத்திய ஜாவாவில் உள்ள க்ளாட்டனில் ஒரு பதநீர் வியாபாரியாயிருந்தார். என் பெற்றோர் அத்தனையநேக சிறிய குழந்தைகளை வளர்க்க முயற்சித்துப் பெருங்கஷ்டத்தை அனுபவித்தனர். . . . நீங்கள் குறைந்த எண்ணிக்கையில் பிள்ளைகளைக் கொண்டிருந்தால் மட்டும்தான் ஒரு குடும்பத்தைப் பேணுதல் எளிதாக இருக்கும்.”
பூவின் மனநிலை உலகமுழுவதுமுள்ள பெற்றோரின் மனநிலையை ஒத்திருக்கிறது. எப்போது குழந்தைகளைப் பெறத் தொடங்குவது, எத்தனை பிள்ளைகளைப் பெற்றுக்கொள்வது, பிள்ளைகளை எவ்வளவு இடைவெளியில் பெறுவது, பிள்ளை பெறுவதை எப்போது நிறுத்துவது என்றெல்லாம் தம்பதிகள் அதிகளவு திட்டமிட விரும்புகின்றனர். இது வளரும் நாடுகளில் தாங்களாகவே சொந்தமாகக் கருத்தடை பொருட்களை உபயோகிப்பது, 1960-களில் 10 சதவீதத்திலிருந்து தற்போதைய 51 சதவீதத் தம்பதிகளாகத் திடீரென அதிகரித்துள்ளது என்று சுட்டிக்காட்டும் ஐ.நா.-வின் புள்ளிவிவரங்களில் பிரதிபலிக்கப்பட்டிருக்கிறது.
அரசாங்கங்களும்கூட குடும்பக் கட்டுப்பாட்டை ஆதரிப்பதில் ஆழ்ந்த அக்கறையைக் காட்டிவருகின்றன. வளரும் நாடுகள் பாதிக்குமேல் மக்கள்தொகைப் பெருக்கத்தைக் குறைப்பதற்கான திட்டங்களை மேற்கொள்கின்றன. மக்கள்தொகைக் கட்டுப்பாட்டுத் திட்டங்களில் தற்போது செய்யப்படும் மொத்த செலவு சுமார் 450,00,00,000 டாலர் என்பதாக ஐ.நா. மக்கள்தொகை நிதி நிறுவனம் கணக்கிடுகிறது. வருங்கால தேவைகளைச் சமாளிக்க, இந்தத் தொகை 2000 வருடத்தில் இரட்டிப்பாகும் என நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர்.
தேசங்களும் தனிப்பட்ட ஆட்களும் பிறப்புவீதத்தைக் கட்டுப்படுத்துவதில் ஏன் இவ்வளவு அக்கறை காட்டுகின்றனர்? இந்த முக்கியமான விஷயத்தைப்பற்றிய கிறிஸ்தவ நோக்குநிலை என்ன? பின்வரும் இரண்டு கட்டுரைகளும் இக்கேள்விகளை ஆய்வுசெய்யும்.